Advertisement

அத்தியாயம் -2
 
      அன்று சில நிமிடங்கள் தான் பார்த்தாலும் இன்னும் அவளை நினைவிருப்பதே ராம்குமாருக்கு ஆச்சரியமாக இருந்தது.
      கல்லூரியில் இவளை விட எத்தனையோ அழகிகளை அவன் பார்த்திருக்கிறான். சிலரை ரசித்தும் இருக்கிறான்.
      கல்யாணம் மட்டும் அம்மா அப்பா சொல்படி தான் என்ற முடிவில் இருந்ததால் இதெல்லாம் காலேஜ் லைப்ல சகஜமப்பா என்று தாண்டிப் போய்க் கொண்டே இருப்பவன் அவன்.
            அவ்வளவு ஏன்? அவனுக்கு அடுத்த பேச்சில் இருந்த பெண்களே இந்த கம்பெனியில் சேர்ந்த போது அடையாளம் தெரியாமல் அவர்களே வந்து அறிமுகப்படுத்தி கொண்ட போது அசடு வழிந்திருக்கிறான்.
      இவளை மட்டும் எப்படி நினைவு இருக்கு?
      அது ஏன் என்று புரியாமல் யோசனையோடு அவளை மீண்டும் உற்றுப் பார்க்க அவள் அடிக்கடி கண்களைத் துடைத்துக் கொண்டு இருப்பது புரிந்தது.
தனிமையில் அழுது கொண்டிருப்பவளை அணுகுவது சரியா என்று யோசித்தான் ராம்குமார்.
வேலையில் சேர்ந்த முதல் நாளே என்ன பிரச்சனை?
என்ன இது? எப்போதும் இவளை அழுதபடி தான் பார்க்கிறோம் என்று தோன்ற யோசனையில் அவன் புருவம் நெறிந்தது.
அவளிடமே கேட்கலாமா என்று நினைத்தாலும் அவளுக்கு தன்னை அடையாளம் தெரியுமா என்று சந்தேகமும் அந்த நேரம் ராம்குமாருக்கு வந்தது.
சாதாரணமாக அவள் இருந்தால் அது வேறு.
இந்த மாதிரியான தர்மசங்கடமான சூழலில் அவளை அணுகுவது சரியல்ல என்று தோன்றியது.
பேசாமல் கவனியாதது போல போய் இந்த சங்கடமான சூழலை தவிர்த்து விட வேண்டும் என்று நினைத்தான்.
      ஆனால் அவளை கடந்து தான் ரஞ்சித் இருக்கும் பில்டிங் போக முடியும் என்பதால் சில நிமிடங்கள் நின்று பார்த்தவன் வேறு வழியில்லாமல் மெதுவாக அவளை நோக்கி நடக்க அவன் வருவதே தெரியாமல் அழுது கொண்டிருந்தாள் வஞ்சுளவல்லி..
      அவளை சந்தித்த அந்த சில நிமிடங்களில் அவள் மனதில் தான் ஏற்படுத்திய தாக்கத்தை அறியாத ராம்குமார் இப்படி நினைக்க வஞ்சுளவல்லி அவன் வருவதை அறியாமல் இன்னும் தன் சோகத்திலேயே மூழ்கி இருந்தாள்.
      வஞ்சுளவல்லிக்கு வேலைக்கு ஆர்டர் கிடைத்த அன்று இருந்த சந்தோசம் இப்போது துளியும் இல்லை.
வஞ்சுளவல்லி பிறந்தது பள்ளிப்படிப்பு எல்லாம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள கருங்குழி என்ற நடுத்தர டவுனில்.
அப்பா அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர். அம்மா இல்லத்தரசி. தம்பி கான்வென்ட் பள்ளியில் ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான்.
கொஞ்சம் கஷ்டப்படும் குடும்பம் தான்.
வஞ்சு பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்தாலும் படிப்பில் படு கெட்டி.
பனிரெண்டாம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் மாணவியாக வந்தவளை வீடு மட்டும் அல்ல ஊரே கொண்டாடியது.
எடுத்தது கம்ப்யூட்டர் பிரிவு என்பதால் சென்னையில் புகழ் பெற்ற கல்லூரியில் இன்பர்மேஷன் டெக்னாலஜி பட்டப்படிப்பில் சேர்ந்தாள்.
ஊரில் எல்லோரும் வாழ்த்தி வழியனுப்ப ஆர்வமாக கல்லூரியில் சேர்ந்தவளுக்கு முதல் நாளில் இருந்தே சந்தோசம் பறி போனது.
தங்கள் ஊரில் இருந்தது போலவே ரிப்பன் வைத்து இரட்டை ஜடை பின்னி புதிதாக எடுத்த நல்ல மஞ்சளில் சிவப்பு பூ போட்ட சுடிதாரை அணிந்து கிளம்பியிருந்தாள்.
முதல் முறையாக சென்னைக்கு போகும் சந்தோஷத்தோடு தமிழ்நாட்டில் பெயர் பெற்ற கல்லூரியில் சேரும் பெருமையும் சேர்ந்து கொள்ள அப்பாவோடு சந்தோஷமாக வந்தவளுக்கு  எல்லாமே அதிசயமாக தெரிந்தது.
பிரமிப்போடு கல்லூரியின் உள்ளே நுழைந்தவளை அங்கு பட்டாம்பூச்சியாய் திரிந்த மாணவ மாணவிகளின் நவநாகரீகமான தோற்றமும் நுனி நாக்கு ஆங்கிலமும் மிரட்டியது.
அதுவரை சினிமா கதாநாயகிகளே அணிந்து பார்த்த உடைகளை அந்த கல்லூரியில் பலரும் அணிந்திருக்க வித விதமான முடி அலங்காரங்கள், உதட்டு சாயம் என வெகு அழகாக ஹை ஹீல்ஸ் செருப்பு அணிந்து அலட்சியமாக நடந்தவர்களை மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளைப் போல சுடிதாரில் சிலர் வந்திருந்தாலும் அவளுக்கேன்னவோ இரட்டை சடையோடு பட்டிக்காடு போல வந்தது அவள் மட்டும் தான் என்று தோன்றியது.
இதற்கே அவள் அம்மா முதலில் அவளை போன தீபாவளிக்கு வாங்கிய டிஸ்கோ பாவாடை தாவணி செட்டை அணிந்து கொண்டு போக சொன்னதை மறுத்து விட்டு வந்திருந்தாள்.
வந்த போது இருந்த உற்சாகம் புஸ்சென்று போய் விட முதல் நாளை ஒருவாறு கடந்தவளுக்கு அப்பாவும் ஹாஸ்டலில் விட்டு விட்டு கிளம்பி விட சோகத்திலும் பயத்திலும் அழுதே விட்டாள்.
போகப்போக எல்லாம் சரியாகும் என்று தந்தை சமாதானம் சொல்லி விட்டுப் போக அப்படி எதுவும் நடக்கவே இல்லை.
மறுநாளில் இருந்து வகுப்பு துவங்கியது.
பஞ்சு மிட்டாய் கலரில் சுடிதார் அணிந்து இரண்டு பக்கமும் துப்பட்டாவோடு இரட்டை ஜடை போட்டு தயங்கி தயங்கி வகுப்பறையில் நுழைந்தவளை அங்கிருந்த பெண்கள் எல்லாம் விநோதமாக பார்த்து விட்டு தங்கள் பள்ளித் தோழிகளோடு அரட்டையில் ஈடுபட யாருமே அவளை கண்டு கொள்ளவில்லை.
மற்றொரு புறம் அமர்ந்திருந்த மாணவர்கள் எல்லோரும் ஏளனமான நகைப்போடு பார்ப்பது போல தோன்ற அவர்களை நிமிர்ந்து பார்க்கவே துணிவில்லாமல் தலை குனிந்தபடி போய் கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டாள் வஞ்சுளவல்லி.
 அன்று மட்டும் அல்ல முதல் செமெஸ்டர் முழுவதுமே வஞ்சுவின் கல்லூரி வாழ்க்கை அப்படி தான் இருந்தது.
வஞ்சுவின் பட்டிக்காடு தோற்றமும் (அவர்கள் பார்வையில்) தமிழ் பேச்சும் பார்த்து மற்றவர்கள் ஏளனமாக ஒதுக்கி வைக்க அவர்களின் அல்ட்ரா மாடர்ன் உடையும் தமிழ் தெரிந்தாலும் பேசும் ஆங்கிலமும் அவளுக்கு மிரட்சியை தர அவளும் அவர்களோடு நட்பு கொள்ள முயலவில்லை.
சொந்த ஊரில் எல்லோரும் கொண்டாட சந்தோஷமாய் வளைய வந்தவளை இங்கே யாரும் சீந்தாதது அவளுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்த வஞ்சு தானாக போய் யாரோடும் பேசாமல் ஒதுங்க ஆரம்பித்தாள்.
அந்த சோதனையான நேரத்தில் அவளைப் போலவே அனகாபுத்தூரரில் இருந்து வந்த லாவண்யா தான் அவளுக்கிருந்த ஒரே ஆதரவு.
ஒருவருக்கொருவர் ஆதரவாய் பழகிக் கொள்ள ஆரம்பித்தவர்களின் நட்பு மற்ற யாரும் கண்டு கொள்ளாமல் போகவே இறுகி இணைபிரியா தோழிகள் ஆயினர்.
அவர்களின் அலட்சிய பார்வையை அதிசயப் பார்வையாக மாற்றியது முதல் செமஸ்டர் தேர்வின் முடிவு.
வகுப்பில் முதல் மாணவியாக வஞ்சுளவல்லி வந்திருக்க லாவண்யா எட்டாவது ரேங்க் வாங்கியிருந்தாள்.
அதுவரை ஒதுக்கி வைத்திருந்த மற்ற மாணவர்கள் எல்லாம் இப்போது வஞ்சுளவல்லியிடம் பேச ஆரம்பித்தனர்.
ஆனால் அதுவும் தேவைக்கு தான். ஏதாவது அசைன்மென்ட் அல்லது  தேர்வு வரும் போது மட்டும் அவள் நினைவு வரும்.
 மற்றபடி சினிமா போகும் போதோ பர்த்டே பார்ட்டி கொண்டாடும் போதோ யாரும் அவளை அழைத்ததில்லை.
அவளே துணிவை வரவழைத்துக் கொண்டு அவர்களோடு சேரப் போனாலும் வேண்டுமென்றே ஆங்கில படங்கள், கிரிக்கெட் என்று அவளுக்கு முற்றிலும் தெரியாத விஷயங்களைப் பற்றி பேசி அவளே எழுந்து போகும்படி செய்து விடுவார்கள்.
மாணவிகளே இப்படி இருக்க மாணவர்களை பார்த்தாலே வஞ்சுளவல்லிக்கு வேர்த்துக் கொட்ட அவள் அவர்கள் பக்கம் திரும்புவது கூட இல்லை.
அவளிடம் பாடத்தில் சந்தேகம் கேட்க அவள் வகுப்பு மாணவன் யாரேனும் அணுகினாலும் நோட்டை கொடுத்து விடுவாளே தவிர அதற்கு மேல் பேச்சே இல்லை.
அப்போது தான் அவர்கள் துறையின் மாணவர் சிம்போசியம் வர நம்மை யார் கூப்பிடப் போகிறார்கள் என்று அவளும் லாவண்யாவும் ஒதுங்கிக் கொண்டனர்.
சீனியர்கள் அவர்கள் வகுப்பில் இந்த சிம்போசியம் பற்றி அறிவிக்க வந்த போது வாலண்டியராக இருக்க அவர்களின் விருப்பம் கேட்டனர்.
மற்ற போட்டிகளுக்கு விருப்பத்தோடு பெயர் கொடுத்த அவள் சக மாணவர்கள் பேப்பர் ப்ரசண்டேஷன்க்கு மட்டும் இது போர் என்று யாரும் பெயர் கொடுக்கவில்லை.
 சீனியரே யார் இங்க ஓவர் படிப்ஸ்? போன செம்ல பர்ஸ்ட் வந்தது யாரு? என்று அடிமைக்கு தூண்டில் போட எல்லோரும் வஞ்சுவை கை காட்டினர்.
அப்படி சிக்கியவள் தான் வஞ்சு. அவளை ஈவென்ட் நடத்தும் பாலாஜியும் ஸ்ருதியும் ரொம்பவே மிரட்டி வைத்தனர்.
லாவண்யாவும் வேறு டீமில் சேர்ந்து விட அழ மாட்டாத குறையாக இருந்தாள் வஞ்சு.
சிம்போசியம் வேலை முதல் வாரத்தில் இருந்தே ஆரம்பிக்க அதை சாக்காக வைத்து மாணவர்கள் எல்லாம் கிளாஸ் கட் அடித்து விட்டு சந்தோஷமாக சுற்றிக் கொண்டிருந்தனர்.
அதில் சோகமாக இருந்தது வஞ்சு மட்டுமாக தான் இருக்கும்.
லாவண்யா கூட அவள் டீமோடு செட் ஆகிவிட அந்த இரண்டு நாட்களை எப்படி கடக்கப் போகிறோம் என்று தவித்து போகும் அளவுக்கு இருவரும் அவ்வளவு வேலை கொடுத்தனர்.
அவர்கள் தட்டிக் கொடுத்து வேலை வாங்கியிருந்தால் கூட அவள் சந்தோஷமாக எவ்வளவு வேண்டுமானாலும் வேலை செய்திருப்பாள்.
ஆனால் செய்ததற்கெல்லாம் நக்கலும் குத்தலும் அதோடு என்னவோ அவளுக்கு ஆங்கிலமே புரியாது என்பது போல ஆங்கிலத்தில் இருவரும் அவளை கிண்டல் செய்து சிரித்துக் கொண்டனர்.

Advertisement