Advertisement

அதோடு தன்னை மதிக்காத அவர்களிடம் போவதையும் நிறுத்திக் கொண்டாள். மகளை கவனிப்பதும் அம்மாவுக்கு வேண்டிய உதவிகளை செய்வதும் என்று ஒதுங்கிக் கொண்டாள்.

ஷ்யாம் மனைவியை கண்டித்தானே தவிர அவனுக்கும் அவள் எதிர்பார்ப்பும் வருத்தமும் புரிந்து தான் இருந்தது.

ஆனாலும் நீரடித்து நீர் விலகுமா?

இன்று ஏதாவது அவள் சொல்லி அதனால் அவளுக்கும் அவள் தம்பிக்கும் விரிசல் வந்தால் அதையும் அவள் தாங்க மாட்டாள் என்று அறிந்தே இருந்தான்.

அதனால் மண்டபத்தில் தங்கள் அறையில் உம்மென்று இருந்தவளை பார்த்தவன் தீபு நன்றாக அயர்ந்து உறங்குவதைப் பார்த்து கதவைத் தாழிட்டவன் கட்டிலில் அமர்ந்து கீழே வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளிடம் பின்னால்  நெருங்கி அமர்ந்தான்.

“புவிமா! உன் கோபம் ஆதங்கம் எல்லாம் எனக்கும் புரியுது. ஆனா உங்க அம்மா அப்பா கூட அமைதியா ஏன் இருக்காங்க என்று யோசிச்சியா? ஒரு வார்த்தை தவறா பேசிட்டா உறவே விரிஞ்சு போகும் டா….

இன்னிக்கு உன் தம்பியோட வாழ்க்கையில முக்கியமான நாள் இல்லையா? இன்னிக்கு அவன் சந்தோஷமா இருக்கறத பாத்து சந்தோஷப்படாம ஏண்டா சோகமா இருக்கே?

அவன் உனக்கு தனியா எதுவும் செய்யல! தீபுவ கவனிக்கல! எனக்கு மரியாதை குடுக்கல என்று ஏன் யோசிக்கிறே?

அவன் செய்யாட்டி என்ன? நாம செஞ்சிட்டு போவோமே? அவனுக்கும் நம்ம அருமை தெரியும். எதோ தம்பி கல்யாணம் ஆகப்போற சந்தோஷத்துல தலைகால் தெரியாம இருக்கான்? சம்சார சாகரத்தில் முழுகி மூச்சு திணறும் போது தானே அறிவு வரும்! சொந்த பந்தங்கள் அருமை தெரியும் .விடுடா!”

அதட்டாமல் இதமாகவே ஷ்யாம் கேட்க புவனாவால் அப்போதும் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

முதல் நாள் வஞ்சு ஆடிக்கொண்டு வந்ததைப் பார்த்து புவனாவின் மாமியார் கேட்டது வேறு ஒரு பக்கம் எரிச்சல் அவளுக்கு.

“என்ன கூத்தாடி குடும்பத்துல உன் தம்பி பொண்ணு எடுத்திருக்கான்…? கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு அடக்க ஒடுக்கமா குனிஞ்ச தலை நிமிராம மேடை ஏறணும். அதை விட்டுட்டு லங்கிணி ஆட்டம் டிங்கு டிங்குனு ஆடிட்டு போறது நல்லாவா இருக்கு? உங்க அம்மா இதெல்லாம் கேக்கறதில்லையா?

எல்லாத்துக்கும் வாயை மூடிட்டு போனா அந்த பொண்ணுக்கும் ரொம்ப துளுத்துக்கும்…என் தம்பி மகன் சொன்னான்…எதோ பேஸ்புக்காம்ல?

அதுல ரெண்டு பேரும் அரையும்குறையுமா டிரஸ் போட்டுட்டு பாட்டுக்கு ஆடிட்டு வராங்கன்னு? அத கொண்டு வந்து எனக்கு காட்ட வேற செஞ்சான்…இதெல்லாம் குடும்ப பொண்ணுங்க செய்யற வேலையா? அவ என்ன சினிமா நடிகையா? பாக்கறவங்க கண்ணு எல்லாம் ஒரே மாதிரி இருக்காது! எதாச்சும் மோசமா பேசிட்டா அப்புறம் ஒண்ணும செய்ய முடியாது! பாத்துக்க!

இதெல்லாம் ஆரம்பத்துலயே தட்டி வெக்கணும்…இல்லனா பிற்காலத்தில திண்டாட்டம் தான்…உன் தம்பி வேற அவளை ஒண்ணும சொல்றதில்ல…அவ என்ன செஞ்சாலும் இப்பவே அவ முந்தானைய பிடிச்சிக்கிட்டு போறாப்ல… ஒண்ணும சரியாப்படல…”

புவனாவை பிடிபிடியென்று பிடிக்க அவளால் வாயே திறக்க முடியவில்லை. அவள் ஆயிரம் குறை சொல்லலாம் அவள் வீட்டை பற்றி! ஆனால் அவள் மாமியார் அவள் வீட்டை குத்திக் காட்டி பேசியதை அவளால் தாங்கவே முடியவில்லை.

அம்மா அப்பாவின் முகமும் சரியாக இல்லை என்பதிலேயே அவர்களிடமும் யாராவது சொல்லி இருப்பார்கள் என்று புரிந்தது.

ஆனாலும் பிள்ளைப்பாசத்தில் அவர்கள் எதையும் காட்டிக்கொள்ளாமல் இருக்கிறார்கள் என்று அதுவும் தெரிந்தது.

இதில் நள்ளிரவு வரை திருமண ஜோடியை மட்டும் வைத்து விதவிதமாக புகைப்படங்கள் எடுக்க ஸ்பெஷலாக ராம்குமார் ஏற்பாடு செய்திருக்க இளைஞர் பட்டாளம் அதை கிண்டலும் கேலியுமாக ரசித்துக் கொண்டிருந்தனர்.

அது வேறு பெரியவர்கள் பலரை முகம் சுளிக்க வைத்தது.

அவர்களின் சொந்தங்கள் பலர் கிராமங்களில் இருந்து வந்தவர்கள். அவர்களுக்கு இதெல்லாம் அதிசயமாக அதே நேரத்தில் பிடிக்காமலும் போனது.

பொறுத்து பொறுத்து பார்த்த மூர்த்தி தான் கடைசியில்

“போதும் ராம்குமார்! எல்லாரும் போய் படுங்க…விடிகாலை முஹூர்த்தம்…எல்லாரும் சீக்கிரமா எந்திரிக்கணும்….“

என்று கண்டிப்பான குரலில் சொன்ன பிறகே கூட்டம் கலைந்தது.

புவனா ஷ்யாம் சொன்னதற்கு எப்படி பதில் சொன்னாலும் அவன் அம்மாவைப் பற்றி குறை சொன்னது போல இருக்கும்; அல்லது அவர் சொன்னது சரியென்பது போல ஆமோதிக்க வேண்டி வரும் என்பதால் வாயே திறக்கவில்லை.

வஞ்சு அதற்கு முகம் சுளித்தாலும் எதுவும் பேசவில்லை. அவளுக்கு குருவின் மேல் இருந்த அளவுக்கு அவன் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் மேல் பிடித்தம் இல்லை.

ஒவ்வொரு முறையும் அவள் ஆசைகளுக்கு ராம்குமார் “இது அப்பாக்கு பிடிக்காதுமா…இது அம்மாக்கு தெரிஞ்சா கோவப்படுவாங்க…இது புவி ஒத்துக்க மாட்டா…” என்று அவர்களை காரணம் காட்டி தடை போட அவளுக்கு உள்ளூர அவர்கள் மேல் லேசான வெறுப்பு ஏற்பட்டது.

அதிலும் புவனா அவளை ஆராய்ச்சி பார்வையுடனேயே பார்த்தது அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. எப்படியும் தாங்கள் இருவரும் பெங்களூரில் வேலை செய்யப்போவதால் அவர்களை எப்போதாவது சந்தித்தால் போதும் என்று ஆறுதல் அடைந்தாள்.

இப்படி ஒவ்வொருவரும் அவரவர் எண்ணங்களில் இருக்க திருமண நாள் அழகாக விடிந்தது. வஞ்சுவின் ஆசைப்படி ராம்குமார் ஏற்பாடு செய்திருந்த மேக் ஓவர் (make over) கலைஞர் ஆயிரங்களில் கட்டணம் வாங்கிக் கொண்டு வஞ்சுவை பேரழகு வஞ்சியாக மாற்றியிருந்தார்.

சில ஆயிரங்களை விழுங்கி தைத்த வெளிர் பச்சை ரவிக்கை மெரூன் வண்ண பட்டுப்புடவையில் வஞ்சு ஜொலித்தாள்.

முஹூர்த்த நேரம் நெருங்க ராம்குமார் மேடையில் உட்கார்ந்து அய்யர் சொன்ன சடங்குகளை பானுவின் மேற்ப்பார்வையில் செய்து கொண்டிருக்க புவனா வந்தவர்களை வரவேற்பதும் நடுநடுவே மேடையில் அம்மாவுக்கு உதவியாக இருப்பதுமாக இருந்தாள்.

கதிர், சாந்தி இருவரும் மேடையில் ஒரு ஓரமாக நிற்க பானு அவர்களையும் அவர்கள் செய்ய வேண்டிய சடங்குகளில் இடுபடுத்தி இலகுவாக உணரும்படி நடந்து கொண்டார்.

மேடையில் வந்து அமர்ந்த உடனே வஞ்சு தாழ்ந்த குரலில் லாவண்யாவிடம் தங்களை எப்படி புகைப்படம் எடுக்க வேண்டும் என்று சொல்ல லாவண்யா எடுத்துக் கொடுத்தாள்.

 அதை சுடச்சுட முகநூலில் “இன்று ஏன் வாழ்வில் மிக மிக முக்கியமான நாள்! லவ் யூ லோட்ஸ் மை குரு” என்று ராம்குமார் மந்திரம் சொல்ல அவள் அதை பயபக்தியுடன் கவனிப்பது போல எடுத்த புகைப்படத்தை வ(ஞ்சு)ரா(ம்) என்ற ஹாஷ் டேக் உடன் போட்ட பிறகே அவளால் திருமண சடங்கில் ஈடுபட முடிந்தது.

பானு இதை எல்லாம் பார்த்தாலும் எதுவும் சொல்லவில்லை. ஏற்கனவே வஞ்சு அவளிடம் முகம் கொடுத்து சரியாக பேசவில்லை என்று அவர் கணவரிடம் புலம்பி அதற்கும் காது கிழிய ரத்தம் வடிய பேச்சு கேட்டதில் இன்னும் ஒதுங்கி நடக்க ஆரம்பித்திருந்தார்.

புவனாவுக்கு தான் இதை ஏற்கவும் முடியாமல் ஒதுங்கவும் முடியாமல் மிகுந்த எரிச்சல். ராம்குமாருமே சடங்குகளை செய்தபடியே அவளை கவனித்தாலும் “இவளை….” என்று செல்லமாக அலுத்துக் கொண்டானே தவிர கோபிக்கவில்லை.

ஏற்கனவே அவள் மேல் இளகிய மனநிலையில் இருந்தவனை அவளின் கல்யாண கோலம் இன்னும் மயக்கியது. அதோடு இன்று அவர்கள் இருவருக்கும் முக்கியமான நாள் என்பதால் எதுவும் சொல்ல மனம் வரவில்லை.

வஞ்சுவின் மனநிலையோ கேட்கவே வேண்டாம்! அவள் உயிருக்கு உயிராக நேசித்த குருவை அவள் ஆசைப்பட்டபடியெல்லாம் கல்யாணம் செய்வது அவளுக்கு சொர்க்கத்தில் இருப்பது போல இருந்தது.

அவள் உலகத்தில் சந்தோஷமாக லயித்திருந்தவளை அய்யரின் “தாலி கட்டற நேரம் வந்தாச்சு! சொந்தக்காரங்க எல்லாம் மேடைக்கு வாங்க!” என்ற அழைப்பு பூமிக்கு கொண்டு வர எல்லோரிடமும் காட்டி கொண்டு வரப்பட்ட தாலியை ராம்குமார் கையில் எடுத்தான்.

அய்யர் மந்திரம் சொல்ல நெருங்கிய சொந்தங்கள் சூழ கெட்டி மேளம் ஒலிக்க மலர்களும் அட்சதையும் மழைச்சாரலாய் மேலே விழ பக்கத்தில் அமர்ந்திருந்த  வஞ்சுவின் கழுத்தில் மிகுந்த மகிழ்ச்சியோடு கட்டினான்.

முகம் மலர  அவனை ஆசையோடும் எதிர்பார்ப்போடும் பார்த்தவளின் மனம் மகிழ அவளின் கன்னத்தில் முத்தமிட அவர்களின் உலகத்தில் அப்போது அவர்களைத் தவிர யாரும் இல்லை.

அதனால் சுற்றி இருந்தோரின் மனநிலையை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை.

இதுவும் வஞ்சுவின் விருப்பங்களில் ஒன்று. முதல் முதலில் நடிகர் ரஜினியின் மகள் திருமணத்தில் பார்த்து அதன் பிறகு பல பிரபலங்களின் திருமணத்தில் கவனித்து வந்தவளுக்கு ராம்குமார் தனக்கு தாலி கட்டி முடித்ததும் முத்தமிட வேண்டும் என்று விரும்பினாள்.

அதை வாய் விட்டும் அவனிடம் கேட்டுக்கொண்டிருந்தாள். ராம்குமார் எல்லோர் எதிரிலும் முத்தமிட தயங்க வற்புறுத்தி சம்மதிக்க வைத்திருந்தாள்.

அதை இப்போது நினைவு வைத்திருப்பானோ என்று எதிர்பார்ப்போடு பார்த்தவளை ராம்குமார் ஏமாற்றவில்லை.

அது இன்னும் வஞ்சுவை சந்தோஷப்படுத்த நண்பர்கள் கேலி செய்த போதும் பெருமையாக தான் உணர்ந்தாள்.

சாந்திக்கும் கதிருக்கும் மாப்பிள்ளையின் செயல் மகளின் மேல் அவன் வைத்திருந்த அன்பை காட்ட கூச்சமாக இருந்த போதும் நிம்மதியாக இருந்தது.

பணக்கார வீட்டுப் பையன். என்ன தான் காதலித்தாலும் கல்யாணம் என்னும் போது பெற்றவர்கள் வார்த்தைக்கு தான் மதிப்பு கொடுப்பான் என்று நினைத்து இருந்தனர்.

ஆனால் ராம்குமார் ஒரே பிடியாக நின்று கல்யாணத்தை நடத்த வைத்ததோடு நில்லாமல் மகளின் ஆசைகளை எல்லாம் தட்டாமல் நிறைவேற்றுவதைப் பார்த்து பெண்ணின் வாழ்க்கை இனி நன்றாக இருக்கும் என்று நிம்மதி அடைந்தனர்.

மேடையில் நின்றிருந்த மூர்த்திக்கே மகனின் செயல் அதிகப்படியாக தெரிய அதை தடுத்து நிறுத்த என்ன செய்ய என்று யோசிக்கும் முன்னே போடோகிராபர்அதை வளைத்து வளைத்து போட்டோ எடுக்க அங்கே எதுவும் சொல்லாமல் அமைதி காத்தார்.

‘இதுக்கும் நீங்க எதுவும் சொல்ல மாட்டீங்களா’ என்று புவனா பார்க்க  அதை கவனியாதது போல முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்.

மூன்றாவது முடிச்சை போட மணமக்களின் பின்னால் நின்றிருந்த புவனாவுக்கோ இதற்கு அவள் மாமியார் என்ன சொல்லுவாரோ என்ற கவலை தம்பியின் திருமணம் முடிந்த சந்தோஷத்தை அனுபவிக்க விடாமல் செய்தது.

Advertisement