Advertisement

அத்தியாயம்-19

அன்று தான் அவர்களின் திருமண தினம். காலையிலேயே முஹூர்த்தம் என்பதால் கல்யாண மண்டபமே களை கட்டியது.

மண்டப வாசலில் மணமக்கள் ராம்குமார் B.Tech., M.B.A வெட்ஸ் வஞ்சுளவல்லி B.Tech என்று பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க இளைஞர்களின் கூட்டம் தான் அதிகமாக இருந்தது.

எல்லோரும் மணமகன் மணமகளோடு ஐடி கம்பனியில் வேலை செய்பவர்கள்.

 சொல்லி வைத்தாற் போல பெண்கள் எல்லோரும் லெஹெங்கா, கௌன் என மாடர்ன் உடைகளில் ஒன்று போல தலையை விரித்து விட்டு நொடிக்கொரு முறை தலைமுடியையும் உடையையும் சரி செய்து கொண்டு ஜீன்ஸில் வந்திருந்த அவர்களின் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தனர்.

அங்கங்கே கூட்டமாக அமர்ந்து அவ்வபோது குபீர் சிரிப்பொலியும் செல்பியுமாக அந்த இளைஞர் பட்டாளம் பொழுதைப் போக்கினர்..

ராம்குமாரை மணமகன் அறையில் அவன் நண்பர்கள் ரஞ்சித், ரவி, ஆதி, ரபிக் எல்லோரும் கிண்டல் செய்தபடி தயார் செய்ய  அவன் திருமணத்துக்காகவே அவன் கல்லூரி நண்பர்களும் பலர் வந்திருக்க அங்கும் ஒரே கிண்டலும் கேலியும் தான் ஓடிக் கொண்டிருந்தது.

அனைவரும் ஏற்கனவே பேசி வைத்துக்கொண்டு ஒரே மாதிரி வெள்ளை வெட்டி, கருப்பு சட்டையில் வந்திருந்தனர். அவர்களிலும் பலருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருக்க அவர்கள் மனைவிகள் தனியாக பேசிக் கொண்டிருந்தனர்.

“டேய்! நீ ரெட்டை சடைக்கு பாஞ்சு பாஞ்சு உதவி செய்யும் போதே நினைச்சேன் டா! இது இப்படித்தான் முடியும் என்று!”

வந்திருந்த அவன் வகுப்பு தோழன்  கலாய்க்க

“டேய் அதெல்லாம் இல்ல டா! அப்ப எல்லாம் அப்படி ஒரு ஐடியாவே கிடையாது. இது இப்ப தான் ….நாங்க கம்பெனில மீட் பண்ண பிறகு தான் இது….”

முழுவதும் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு ராம்குமார் இழுக்க அங்கே கோரஸாக “ஓஹோ!” என்று அனைவரும் கூவினர்.

ரஞ்சித் பெங்களூரில் வஞ்சு வேலைக்கு சேர்ந்த பிறகு நடந்ததை கண் காது மூக்கு வைத்து கதை கட்ட நேரம் போனதே தெரியாமல் நண்பர்கள் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.

 மணமகள் வஞ்சுவின் அறையிலும் லாவண்யா, வந்தனா, சோனல், மணிமேகலை, சுஜி சேர்ந்து ஓட்டி எடுக்க அங்கே வஞ்சுவின் பாடும் அதே போல தான் இருந்தது.

“ஆளு பாக்க அமுக்குணி மாதிரி இருந்துக்கிட்டு எங்க ராமையே கவுத்துட்டியே! “

சோனலால் தான் இன்னும் ஒத்துக்கொள்ள முடியவில்லை. தான் செய்ய முடியாததை போயும் போயும் ஒரு கிராமத்தில் இருந்து வந்த பட்டிக்காடு சாதித்து விட்டாளே என்று ஆங்காரம்.

அதுவும் வஞ்சுவின் குடும்பப்பின்னணி தெரிந்த பிறகு வன்மம் அதிகமானது.

வஞ்சுவுக்கு அது புரிந்தாலும் அதை சட்டை செய்யவில்லை. ஒரு சின்ன சிரிப்போடு விட்டு விட்டாள்.

வஞ்சுவின் பெற்றோர் இந்த திருமண ஏற்பாட்டில் ராம்குமார் குடும்ப வளமையை முழுவதுமாக தெரிந்து கொண்டார்கள். அவர்களின் வசதிக்கு தங்கள் வீட்டில் பெண் எடுத்ததே அதிகம் என்று புரிய அவர்கள் சொன்ன எதற்கும் மறுப்பு சொல்லவில்லை.

சொந்த பந்தங்கள் எல்லோரையும் அழைக்க சொல்லி ஐநூறு பத்திரிகைகளை மூர்த்தி கொடுத்து தேவைப்பட்டால் இன்னும் தருவதாக சொன்னார்.

ஆனால் கதிர் நூறு பத்திரிகைகள் எடுத்துக்கொண்டு அதுவே போதும் என்று நிறுத்திக் கொண்டார்.

முடிந்த வரை எல்லாவற்றிலுமே சிக்கனமாக இருந்து பணம் தான் கொடுக்கவில்லை; செலவாவது அதிகம் வைக்கக் கூடாது என்று பார்த்துக் கொண்டார்.

அதற்கெல்லாம் சேர்த்து வைத்து வஞ்சு செலவு செய்தாள். ப்ரீ வெட்டிங் ஷூட் போக வேண்டும் என்று வஞ்சுவின் பிடிவாதத்தில் ராம்குமார் அவளை பாண்டிச்சேரி அழைத்துச் சென்றான்.

அங்கே கடற்கரைகள், ஒயிட் டவுன் சுற்றி படமும் வீடியோவும் எடுக்க இரண்டு நாட்கள் திட்டமிட்டிருந்தனர்.

அதற்கு வஞ்சுவிற்கு உடையும் அலங்காரமுமே ஒரு லட்சம் தொட்டது. மேற்கொண்டு படமெடுக்க இரண்டு லகரங்கள் ஆக தங்கும் செலவு வேறு சேர்ந்து ராம்குமாரின் கையிருப்பை கணிசமான அளவுக்கு குறைத்தது.

ராம்குமாருக்கு இதிலெல்லாம் அவ்வளவாக ஆர்வம் இல்லை. இருந்தாலும் வஞ்சுவின் ஆசை என்று உடன்பட்டிருந்தான். ஏற்கனவே அவளிடம் ஒரு பரிவு உண்டு என்றாலும் அவள் குடும்பசூழலை பார்த்த பிறகு உருகியே போனான்.

இவ்வளவு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தன் சொந்த முயற்சியால் படித்து வேலை தேடிக் கொண்டு இவ்வளவு தூரம் முன்னேறி இருக்கிறாள்.

சிறு வயது முதல் சின்ன சின்ன சந்தோஷங்களைக் கூட அனுபவித்ததில்லை என்று அவள் சொல்லக் கேட்டிருக்கிறான். அதோடு வேலைக்கு சேர்ந்த புதிதில் உடைகள் வாங்கக் கூட அவன் தானே உடன் சென்றான்?

ஆக இது நாள் வரை அவன் பார்த்ததும், கேட்டதும் அவள் மேல் இன்னும் அனுதாபமும் அன்பும் கூட்ட அவள் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட ஆரம்பித்திருந்தான்.

வஞ்சு இதுவரை சம்பாதித்தது எல்லாம் அவள் வீட்டுக்கு செலவு செய்திருக்க இதற்கு முழு செலவும் ராம்குமார் ஏற்க வேண்டிய நிலை.

ராம்குமார் தன் வருமானத்தை வீட்டுக்கு தராமல் சொந்த சேமிப்பில் வைத்திருந்ததால் பெற்றவர்களை கேட்க தேவை இல்லாமல் போனது.

சொன்னால் நிச்சயம் எதிர்ப்பு வரும்; அவன் பெற்றோர்களுக்கு இதெல்லாம் பிடிக்காது என்று சொல்லவோ அனுமதியோ கேட்கவே இல்லை.

வஞ்சுவோ ராம்குமார் இந்த அளவு அவளை கவனிப்பதில் சொர்க்கத்தில் மிதந்தாள் என்று தான் சொல்ல வேண்டும். அவர்கள் எடுத்த வெட்டிங் ஷூட் படங்களையும் வீடியோவையும் முக நூலில் பதிவு செய்யவும் கவிதை எழுதவும் என அவளுக்கு நேரம் இனிமையாக நகர்ந்தது.

புவனா தான் இதையெல்லாம் முகநூலில் பார்த்து விட்டு அம்மாவிடம் சொல்வது. ராம்குமார் தங்களிடம் என்ன செஞ்சிட்டீங்க என்று கேட்ட கேள்வியை மகளிடம் சொல்லி பிரச்னையை பெரிதாக்கக் கூடாது என்று மூர்த்தி பானுவிடம் கண்டித்து சொல்லி இருந்ததால் பானு புவனாவிடம் எதுவும் சொல்லவில்லை.

எதுவும் தெரியாத  புவனா தான் பானுவிடம் புலம்பினாள்.

“அம்மா! இந்த போட்டோ வீடியோ எல்லாம் எடுக்க நிச்சயம் ரெண்டு மூணு லட்சமாவது ஆகும் மா! அவளுக்கு இவ்வளவு செலவு செய்யறான். எனக்கு எதுவுமே வாங்கித் தரல…. அட என்னை விடுங்க…என் பொண்ணுக்கு கூட எதுவும் செய்யல…   வீட்டு மாப்பிள்ளை அவரை ஒப்புக்கு கூட கேக்கல.

எங்க மாமியார் கூட கேட்டாங்க..உன் தம்பி அவன் கல்யாணத்துக்கு என்ன வாங்கிக் கொடுத்தான் என்று? எனக்கு எவ்வளவு அசிங்கமா போச்சு தெரியுமா?

நான் கேக்கலாம் என்று பார்த்தா உங்க மாப்பிள்ளை நீ எதுலயும் தலையிடக்கூடாது; நாத்தனார் வேலைய பார்த்தேன்னா பாத்துக்கோ என்று மிரட்டி வெச்சிருக்கார்….”

ராம்குமாருக்கு அக்கா குடும்பத்திற்கு வாங்க வேண்டும் என்று தோன்றாமல் இல்லை. ஆனால் ஓட்டம் இருந்தால் தானே?

வஞ்சுவின் சின்ன சின்ன ஆசைகளை தீர்த்து வைக்கவே சேமிப்பில் பெரும் பங்கு தீர்ந்து விட்டது. இன்னும் அவள் திருமணத்திற்கு பிறகு போட்டிருக்கும் லிஸ்ட் வேறு இருக்கிறதே!

முதல் நாள் பெண் அழைப்புக்கு செண்டை மேளம் வைத்து நண்பர்களோடு ஆடிக்கொண்டு மணமேடை வர வேண்டும் என்று சொன்னாளென்று கேரளாவில் இருந்து ஸ்பெஷலாக அழைத்திருந்தான்.

இன்னும் திருமணத்தன்று மாலை டிஜே வைத்து நண்பர்கள் கூட தாங்களும் ஆட வேண்டும் என்றதோடு அதற்கு ரிஹர்சலும் நடந்தது.

இதற்கே மெஹெந்தி சங்கீத் இதெல்லாம் வைக்கவில்லை என்று அவன் மேல் அவளுக்கு வருத்தம்..

“…..ஏற்கனவே வஞ்சு வீட்டுல வசதி கம்மின்றதால் நாம தான் எல்லா கல்யாண  செலவும் செய்யறோம்.

கூடவே அவங்க வீட்டுல நகைகள் கூட பதினஞ்சு பவுன் தான் போடறாங்க என்று நீங்க அதுவும் ஒரு இருபத்தி அஞ்சு பவுன் போடறீங்க. அது போக இது வேற எதுக்கு தண்ட செலவு மா? நீங்க தம்பி கிட்ட காசு ஏதும் குடுத்தீங்களா? இல்ல அவனே செலவு செய்யறானா?

நீங்க அவனை எதுவும் கேக்க மாட்டீங்களா?”

ஒரு பக்கம் பொறாமை மறுபக்கம் அக்கறை என்று புவனா அம்மாவிடம் பொருமித் தள்ள பானு வாயே திறக்கவில்லை.

அவர்கள் மகன் கல்யாணத்திற்காக மகள் குடும்பத்திற்கு நிறைக்க சீர் செய்தார்கள் தான்… ஆனால் தம்பி அக்காளுக்கு வாங்கித்தருவது தனி அல்லவா?

அவருக்குமே தங்கள் கைக்குள் இருந்த மகன் இப்போது திமிறிக்கொண்டு சென்றது மிகுந்த வேதனையை தந்தது.

ஆனாலும் மகனை விட்டுக் கொடுக்கக்கூடாது என்று எதிலும் குறையில்லாமல் தாராளமாக செலவு செய்து திருமண ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

அவர்கள் வசதிக்கு ஏற்ற பெரிய திருமண மண்டபம் , சாப்பாடு என எல்லாமே ஓஹோ ரகம் தான். மகனிடம் அதன் பிறகு காசு கேட்பதில்லை என்று மூர்த்தியும் முடிவு செய்ததால் எல்லா செலவும் அவரே பார்த்துக் கொண்டார்.

என்ன ஒன்று? மகனுக்கு வாங்கித்தர நினைத்திருந்த ப்ளாட்டும் காரும் மட்டும் ஒத்திப் போட்டிருந்தனர்.

அவர்களுக்கு இருந்த வருத்தம் கோபம் எல்லாம் மகன் மேலும் அவனை தன் இஷ்டத்துக்கு வளைக்கும் மருமகள்  மேலும் தான். சம்பந்தி நடந்து கொண்ட முறையில் அவர்கள் மேல் எந்த குற்றமும் இல்லை என்று தெளிவாகப் புரிய அவர்களிடம் இதமாகவே நடந்து கொண்டனர்.

இப்போது திருமண நாளன்றும் தங்கள் வருத்தம் ஏமாற்றம் எல்லாம் மறைத்துக்கொண்டு இருவரும் சந்தோஷமாகவே நடமாடினர். புவனா தான் தன்னைத் துளியும் கண்டுகொள்ளாமல் இருந்த தம்பி, தம்பி மனைவியின் மேல் மனஸ்தாபம் கொண்டு மூஞ்சியைத் தூக்கிக்கொண்டு சுற்றி வந்து கொண்டிருந்தாள்.

மண்டபத்திற்கு வந்ததில் இருந்து ஒரு வார்த்தை கூட முகம் கொடுத்து பேசாத வஞ்சுவின் மேலும் நண்பர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருத்த தம்பியின் மேலும் வருத்தம் வர ஷ்யாமின் தீவிர கண்காணிப்பில் காட்டவும் முடியாமல் உள்ளேயே வைத்து பொருமிக்கொண்டு இருந்தாள்.

Advertisement