Advertisement

அவரின் இத்தனை வருட திருமண வாழ்வில் மூர்த்தி இவ்வளவு வெளிப்படையாக எதையும் பேசியதே இல்லை. அப்படிப்பட்டவரே இப்போது இந்த அளவுக்கு மனதைத் தேற்றிக்கொண்டு மகனின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்கும் போது இன்னும் மகனை நினைத்தே எல்லா முடிவுகளும் எடுத்த போது இருந்த சந்தோசம் இதில் வரவில்லையே!

     ஆனாலும் வேறு வழியில்லை. என்ன ஆனாலும் அவரால் மட்டுமல்ல மூர்த்தியாலுமே கூட அவர்கள் மகனை விட்டுக்கொடுக்க முடியாது.

எப்படி எப்படியோ மனதைப் போட்டு உழப்பிக் கொண்டாலும் முடிவில் மகன் வழிக்கு தான் பெற்றவர்கள் போக வேண்டி இருந்தது. ஆனால் மகனோ அவன் மனம் கவர்ந்தவளின் வழியில் என்று பல சந்தர்ப்பங்களில் தெரிந்து கொண்டனர்.

     அடுத்த வாரம் ராம் வந்த போது சொன்னது அவர்களின் முடிவை இன்னும் சோதித்தது. ராம் வேலையில் சேர்ந்ததில் இருந்தே அவன் சம்பளத்தை அவனே தான் சேமித்து வைத்துக் கொண்டான். இவர்களும் மகனிடம் சம்பளம் எங்கே என்று ஒரு முறை கூட கேட்டதில்லை. அவனும் கொடுத்தது இல்லை.

     ஆனால் மாதா மாதம் இருபத்தி ஐந்தாயிரம் கொடுத்து விடுவான். அது போக பண்டிகைகளுக்கு பெற்றவர்களுக்கும் அக்கா குடும்பத்துக்கும் துணிகள் அவ்வபோது பரிசுகள் என்று செலவு செய்வான்.

மூர்த்தி மட்டுமே மகன் பணத்தை ஒழுங்காக முதலீடு செய்து வைத்திருக்கிறானா என்று அவ்வபோது விசாரிப்பார்.

எப்படியும் மகன் பெங்களூரில் தான் இருக்கப் போகிறான் என்பதால் கல்யாண நேரத்தில் தாங்களும் பணம் போட்டு ஒரு நல்ல ப்ளேட் வாங்கிக் கொடுக்கலாம் என்று நினைத்திருந்தார்.

அந்த வாரம் மாதக் கடைசி என்பதால் வழக்கமாக மகன் தரும் பணத்தை எங்கே என்று பானு கேட்க ராம் அலட்டவே  இல்லை.

“அம்மா!  ரிசெப்ஷனுக்கு வஞ்சுக்கு லெஹங்கா வேணும்னு கேட்டா இல்ல? நீங்க கூட வாங்க சொன்னீங்க இல்ல? அதான் அங்கேயே வாங்கிட்டோம். அது வெலை அம்பதாயிரம் ஆச்சு. கூட அக்சசரீஸ் கழுத்துக்கு காதுக்கு ஏன் புது சாண்டல்ஸ் எல்லாம் மேல இருபத்தி அஞ்சு ஆச்சு.

இன்னும் ப்ரீ வெட்டிங் ஷூட் கூட எடுக்கணும் என்று சொல்லி இருக்கா. அதுக்கு ஒரு லட்சம் தேவைப்படும் ….

அதுக்கு எல்லாம் சேர்த்து கணக்கு பார்த்தா இந்த மாச சம்பளம் அவுட். போகும் போது நானே உங்க கிட்ட தான் வாங்கிட்டு போகணும் என்று நினைச்சேன் மா. இன்னும் எனக்கும் கல்யாணத்துக்கு பர்சேஸ் வாங்க வேண்டியது பாக்கி இருக்கு.”

அவன் பேசிக்கொண்டே போக பானுவுக்கு சுறுசுறுவென்று கோபம் வந்தது. மகன் விருப்பம் என்று விட்டுக் கொடுத்துக் கொண்டே போனால் அதற்கும் ஒரு அளவு இல்லையா?

பானு பேசுமுன்னே மூர்த்தி தொடங்கி விட்டார்.

“எல்லாம் சரி தம்பி! இந்த கல்யாணத்துல எங்க வேலை என்ன ? எதெதுல நாங்க கருத்து சொல்லலாம்? அதையும் சொன்னா நல்லா இருக்கும். இல்ல எங்க வேலை வேலை செய்றதும் பணம் தரதும் தான் என்றால் அதையும் தெளிவா சொல்லிட்டா அதுக்கு தகுந்தா மாறி நாங்க முடிவு எடுக்கவும் வசதியா இருக்கும்….”

அதிகம் பேசாத மூர்த்தி இந்த குரலில் பேசினால் அதை மீறும் துணிவு ராம்குமாருக்கு இதுவரை இருந்ததில்லை.

தான் சொல்ல வந்ததை மூர்த்தி சுருக்கமாக கேட்டு விட பானு இப்போது மகனின் முகத்தை பார்த்தார்.

எல்லாம் மகனின் விருப்பத்திற்கே என்று இருந்தது தவறோ என்று இப்போது தோன்றியது. பட்டுப்புடவை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு எடுத்தாலாவது ஒரு விசேஷம் அது இது என்று கட்டலாம். இந்த லெஹங்காவை  ரிசெப்ஷனுக்கு விட்டால் வேறு எதற்கு போட முடியும்?

அடுத்த வருடமே ஒரு பிள்ளை பிறந்தால் இது சைஸ் கூட சேராது. கூட இருபத்தி ஐந்தாயிரம் கொடுத்து எதற்கு எதற்கும் உதவாத பித்தளை நகைகளை வாங்க வேண்டும்?

அவளைப் பார்த்தால் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்து கஷ்டம் நஷ்டம் தெரிந்து நடக்கும் பெண்ணாக தெரியவில்லையே?

எதிர்காலத்தில் மகனின் நிலைமை என்ன? அவள் சொல்லும் எல்லாவற்றுக்கும் தலையாட்டிக்கொண்டு வந்தவனை என்ன செய்வது?

கோபமும் ஆதங்கமும் கவலையுமாக பார்த்தார்.

அவர்களின் நியாயமான ஆசைகளை எதையும் அவர் தடுக்க விரும்பவில்லை. அதே நேரம் அனாவசியம் என்று இருக்கும் செலவுகளை செய்ய அவர் வயதுக்கு ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதுவரை பைக்கில் அலுவலகம் போய்க்கொண்டிருக்கும் மகனுக்கு கல்யாணம் முடிந்த பிறகு கார் வாங்கித் தர வேண்டும் என்று அவரே சொல்லிக் கொண்டிருந்தார்.

மகன் வரும்போது கேட்டு புக் செய்வதற்காக மூர்த்தி கூட சில மாடல்களை பார்த்து வைத்திருந்தார்.

உருப்படியான செலவுகளை இருவருமே மறுக்கப் போவதில்லை. ஆனால் இப்படி வஞ்சு ஆசைப்பட்டாள் என்று தேவையே இல்லாமல் லட்சக்கணக்கில் வெட்டியாக செலவு செய்வதை தான் ஏற்க முடியவில்லை.

ஆனால் இது போல் எந்த சிந்தனையும் ராம்குமாருக்கு இல்லை போலும்.

“அப்பா! நான் சொல்ற செலவெல்லாம் இந்த காலத்துல எல்லா கல்யாணத்துலயும் நடக்கறது தான். இதைப் போய் பெரிய விஷயமா சொல்றீங்க?

என் பிரெண்ட்ஸ் கல்யாணம் எல்லாம் பெரிய ரிசார்ட்ல நடக்குது. சங்கீத், மெஹெந்தி, டீஜே, மல்டி குசின் இப்படி கிராண்டா செய்யறாங்க? அதெல்லாம் நீங்க செஞ்சீங்களா என்ன? பங்களுர்ல நல்ல பாஷ் ஏரியால வீடு வாங்கிக் குடுத்து இருக்காங்க. கார் வாங்கிக் குடுக்கறாங்க….! நீங்க என்னவோ இதுக்கே குறை சொல்றீங்க?”

இதுவரை தங்களை எதிர்த்து ஒரு வார்த்தை கூட சொல்லாத மகன் இப்போது பேசும் விதத்தை வாயடைத்து பார்த்திருந்தனர் இருவரும்.

“எல்லாம் உன் முடிவுக்கே நடக்கணும்னா அப்ப பெத்தவங்க நாங்க எதுக்கு இருக்கோம்? நீ எதிர்பாக்கற வெட்டி செலவெல்லாம் நாங்க செய்யத் தயாரா இல்லை.

இவ்வளவு கேள்வி கேக்கறே?இவ்வளவு உன்னை பெத்து வளத்து படிக்க வெச்சதுக்கு இது வரை நீ வேலைக்கு போய் என்ன சம்பாதிச்சு எங்களுக்கு குடுத்தே சொல்லு?

மூர்த்தியின் பொறுமையும் எல்லைமீறி போக வார்த்தைகளும் தடித்தன. மனைவியிடம் சொன்ன பொறுமை அவரிடம் இப்போது இல்லை.

அவர்களே ஆசையாக மகனுக்கு எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்திருக்க மகனே அதை எங்கே என்று நிற்க வைத்து கேள்வி கேட்பது வேறு அல்லவா?

“நான் ஏன் தரணும்? பெத்தவங்க உங்க கடமை அது. அதை சொல்லி வேற காட்டுவீங்களா….?”

இதற்கு மேல் பேசினால் நன்றாக இருக்காது என்று பெற்றவர்கள் அமைதி காக்க பிள்ளையோ தான் சரியாக கேட்டு விட்டதாக நினைத்துக் கொண்டான்.

அதன் பிறகு எல்லா விஷயங்களிலும் இருவரும் மௌன சாட்சியாக பார்த்துக் கொண்டிருந்தனரே தவிர எதற்கும் கருத்து சொல்லவில்லை.

ஒரு வழியாக ராம்குமாரும் வஞ்சுவும் எதிர்பார்த்த திருமண நாளும் வந்தது. மூர்த்தி மகன் என்ன கேட்டாலும் பெற்ற தகப்பனின் கடமை என்று சென்னையில் நல்ல பெரிய மண்டபமாக பார்த்திருந்தார்.

வஞ்சு தான் தங்கள் மகனை வளைக்கிறாள் என்ற கோபம் இருந்ததே தவிர அவள் பெற்றவர்கள் மேல் இருவருக்கும் எந்த மனத்தாங்கலும் இல்லை.

அவர்கள் இனத்தில் பெண் வீட்டில் தான் திருமணம் செய்ய வேண்டும். ஆனால் வஞ்சுவின் வீட்டு நிலைமைக்கு அது முடியாது என்பதால் மூர்த்தியே எல்லா ஏற்பாடுகளும் செய்தார்.

சம்பந்திகள் இருவரிடையே சுமுகமான உறவு தான் நிலவியது. ஆனாலும் மூர்த்தி எல்லாமே வஞ்சுவின் அப்பாவோடு கலந்து கொண்டு தான் செய்தார்.

பானு எல்லா விசயத்திலும் சாந்தியை பக்கத்தில் வைத்துக் கொண்டார். சமயத்தில் அவரே பொறுக்க முடியாமல் மகளைப்பற்றி புலம்பினாலும் பானு அதற்கு எந்த பதிலும் தருவதில்லை.

அவர்களைப் பொறுத்தவரை கல்யாணம் முடிந்து மகன் பழையபடி பெங்களூரில் தான் வேலை பார்க்கப் போகிறான் என்ற பட்சத்தில் எப்போதாவது வந்து போகும் அளவே தங்களுக்கு மகனோடான உறவு இருக்கப் போகிறது என்று புரிந்து கொண்டனர். அதனால் எதிலும் தலையிட்டு தங்கள் மகனோடான உறவில் இன்னும் சிக்கல் ஆக்கிக் கொள்ள விரும்பவில்லை.

ராம்குமார் அன்று கேட்டானே தவிர அதன் பிறகு அதை சுத்தமாக மறந்தே போனான். பழையபடி அம்மா அப்பாவிடமும் அக்கா குடும்பத்தோடும் உறவாடினான்.

Advertisement