Advertisement

அத்தியாயம்-18

     இரண்டு குடும்பமும் கல்யாணத்திற்கு புடவைகள் எடுக்க காஞ்சிபுரம் வந்திருந்தனர். திருமண தேதி நெருங்கி விட்டதால் ஒவ்வொரு வார கடைசியும் வஞ்சுவும் ராம்குமாரும் அவர்கள் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.

     அதை வைத்து இருவரின் வசதியையும் கலந்து பேசித்தான் இன்று இரு குடும்பங்களும் இங்கு வந்ததே.

            பானு வஞ்சு தங்களோடு சேர்ந்து கொள்வாள் என்று எதிர்பார்க்க வஞ்சு ராம்குமாரை மட்டும் கூட்டிக்கொண்டு தனக்கு புடவை பார்க்க ஆரம்பித்தாள்.

     இருவருமாக தனியே போய் புடவை பார்க்க ஆரம்பிக்க அப்போதும் மூர்த்தி பானுவை அவர்களோடு போய் பார்க்க சொல்ல புவனாவுக்கோ அது பிடிக்காமல் தீபுவை பார்க்கும் சாக்கில் ஒதுங்கிக் கொண்டாள்.

அவளுக்கு வஞ்சுவை ஏற்கனவே தாங்கள் சந்தித்ததே இன்னும் நினைவில் இருக்க இப்போதும் அவள் தம்பியிடம் மட்டுமே பேசுவது சுத்தமாக பிடிக்கவில்லை.

     ஷ்யாம் வேறு வீட்டிலேயே அவள் நாத்தனார் வேலையைக் காட்டக் கூடாது என்று கண்டிப்பாக சொல்லி கூட்டி வந்திருக்க அதனால் அவள் தன் பிடித்தமின்மையை காட்ட சண்டை போடாமல் அதே நேரம் அமைதியாக நகர்ந்து கொண்டாள்.

     பானு நன்றாக இருக்கிறது என்று காட்டிய புடவைகளை வஞ்சு கையில் கூட வாங்கிப் பார்க்கவில்லை. அவள் விருப்பத்திற்கு தேர்வு செய்ய ஆரம்பித்தாள். தன் தேர்வை ராம்குமாரிடம் காட்டி கருத்தும் கேட்டுக் கொண்டாள்.

     ராம்குமாருக்கு இதில் எதுவும் தவறாகத் தெரியவில்லை. முன்புமே அவள் உடைகளைத் தேர்ந்தெடுக்க அவன் உதவியை கேட்டாள் தானே?

     அதே போல் தானே இதுவும்? இன்னும் சொல்லப் போனால் தங்களின் திருமணத்திற்கு தன் விருப்பத்தை கேட்டு புடவை எடுக்க விரும்புகிறாள் போலும் என்று நினைத்து சந்தோசம் தான் பட்டான்.

     அதே நேரத்தில் வஞ்சு தேர்ந்தெடுத்து தன்னிடம் காட்டுவதை அம்மாவிடம் காட்டவும் அவர் கருத்தை கேட்கவும் அவன் மறக்கவில்லை.

     வஞ்சு அவரிடம் எதுவும் கேட்காமல் ராம்குமாரின் கருத்தை மட்டுமே கேட்பதை கொஞ்ச நேரம் பொறுத்து பார்த்த புவனா  ராம்குமாரிடம்

“எனக்கு நின்னு நின்னு கால் வலிக்குது பா. ரெண்டு பேருமா புடவைகளை செலக்ட் பண்ணிட்டு வாங்க. முஹூர்த்தம், நிச்சயம், அம்போகம் அப்புறம் ரிசெப்ஷன் எல்லாத்துக்கும் சேர்த்து செலக்ட் பண்ணிட்டு வாங்க….நான் போய் உக்கார்றேன்…” என்று சொல்லி விட்டு மூர்த்தி அருகே போய் விட்டார்.

     அங்கே வஞ்சுவின் பெற்றோருக்கும் அதே நிலைமை தான். அவர்கள் வசதிக்கு அங்கே அந்த கடையின் பிரம்மாண்டமே மிரட்ட அவர்கள் உள்ளே வந்து அங்கிருந்த சேரில் பேசாமல் உட்கார்ந்தவர்கள் தான்.

வஞ்சுவின் தம்பி சுந்தர் இப்போது பனிரெண்டாம் வகுப்பு படிப்பதால் லீவு கிடைக்காத காரணத்தால் வரவேயில்லை.

அவர்கள் மூவரும் புடவைகள் தேர்ந்தெடுத்த விதத்தை தள்ளியிருந்தே பார்த்துக் கொண்டிருந்த மூர்த்தி பானுவின் முக வாட்டத்தை பார்த்தே அவர் மனதைப் புரிந்து கொண்டார்.

“வா பானு! உனக்கும் புவனாவுக்கும் நீங்க புடவை எடுங்க. கூட சம்பந்தி அம்மாவ கூட்டிக்கோங்க. புவனா எந்திரி மா. தீபு குட்டிய என்கிட்ட குடு. போய் உனக்கு பிடிச்ச மாதிரி எடுத்துக்க டா…” என்று அவர் மனதைத் திசை திருப்பும் முயற்சி எடுத்தார்.

பானுவும் அதைப் புரிந்து கொண்டு அவரை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்ததோடு சரி! தான் வருத்தத்தை சொன்னாலும் அவர் என்ன சொல்லுவார் என்று ஏற்கனவே அனுபவத்தில் புரிந்து போனதால் தலையை ஆட்டிவிட்டு போய் சாந்தியை அழைத்தார்.

பானுவே எதுவும் சொல்லாமல் போகும் போது எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த புவனாவுக்கு பேச ஏது வழி? அதனால் அவளுமே மெளனமாக அம்மாவை பின்தொடர்ந்து போனாள்.

புவனாவுக்கு தானும் வஞ்சுவும் நிச்சயத்தின் போது ஒரே மாதிரி புடவை வாங்கி உடுத்த வேண்டும் என்று ஆசை. தாங்கள் யாரும் வேண்டாம்! ராம் மட்டுமே போதும் என்றால் தாங்கள் இங்கே வந்திருக்கவே வேண்டாமே என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

“வாங்க சம்பந்தி அம்மா! நமக்கு புடவை பாப்போம்…!”

தன் மனவருத்தத்தை வெளியே காட்டாமல் சாதாரண முகபாவத்தோடு புவனா அழைக்க சாந்திக்கு தான் இப்போது தர்மசங்கடம்.

அவர்கள் வரும்போது தங்கள் சொந்தங்களுக்கும் இங்கே எடுத்து விடுவோம் என்று பேசிக்கொண்டு வந்திருந்தனர்.

ஆனால் அங்கே இருந்த சாதாரண பட்டுப்புடவை விலையே அவர்களின் பட்ஜெட்டை விட பல மடங்கு எகிற, கதிர்

“சாந்தி! இந்த வெல நமக்கு கட்டுப்படியாகாது. நாம இங்க பேசாம உக்காந்து இருந்துட்டு நம்ம ஊரு பாண்டியன் துணிக்கடைல வாங்கிக்குவோம்…அது தான் நமக்கு சரிப்பட்டு வரும்….”

என்று சொல்லி விட சாந்திக்கும் அதுவே சரியென்று பட்டது.

மகளும் அதற்கு ஏற்றார் போல் தங்களைத் திரும்பிக் கூட பார்க்காமல் ராம்குமார் உடன் போய் விட யாருக்கும் தங்களால் இடைஞ்சல் வேண்டாம் என்று தனியாக அமர்ந்து விட்டனர்.

பானு மகளோடு கிளம்பவும் அவர்களுக்கு வாங்கப் போகிறார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டு இவர்கள் இருக்க பானு இவர்கள் அருகே வந்து இவர்களை அழைக்கவும் சாந்திக்கு என்ன சொல்வது என்று திணறி விட்டார்.

அவர் தயக்கத்துடன் கதிரைப் பார்க்க “இருக்கட்டும் மா! நீங்க பாருங்க. நாங்க பெறகு எடுத்துக்கறோம்….” என்று சமாளிக்கப் பார்த்தார்.

அவர்களின் தயக்கத்திற்கான காரணம் பானுவுக்கு புரிந்து விட “சம்பந்தி! சம்பந்தி மரியாதைக்கு புடவை வாங்குறது நம்மள்ள பழக்கம் தானே? வாங்க! நாம ரெண்டு பேரும் ஒண்ணா வாங்கிக்குவோம்.. அப்படியே பட்டு வேட்டியும் சட்டையும் அவங்களுக்கும் வாங்கிடுவோம்…”

என்று சாந்தியை உரிமையாக கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போனார்.

சாந்தி பின்னால் திரும்பி கணவரைப் பார்த்துக் கொண்டே நடக்க அதற்குள் மூர்த்தி வந்து கதிரின் கையைப் பற்றி அழைத்துக்கொண்டு போகவும் சாந்தியின் இதழ்களில் நிம்மதியின் அடையாளமாக சிறு புன்னகை.

இவர்கள் தங்களுக்கு, சொந்தங்களுக்கு என்று எல்லாம் வாங்கி முடிக்கும் நேரம் ஒரு வழியாக ராம்குமாரும் வஞ்சுவும் வந்து சேர்ந்தனர்.

அப்போதும் வஞ்சுவின் முகத்தில் திருப்தி இல்லை. ராம்குமாரின் முகத்திலோ அப்பட்டமான களைப்பு.

மூன்று புடவைகளைக் கொண்டு வந்து அம்மாவின் கையில் கொடுத்து விட்டு “இந்தாங்கமா! இதுக்கும் சேர்த்து பில் போட்ருங்க….” என்று கொடுத்தான்.

“என்ன ராம் இது? நான் நாலு வாங்க சொன்னேனே?”

பானு மகனிடம் கேட்க “அம்மா! அவளுக்கு ரிசெப்ஷனுக்கு லேஹெங்கா தான் வேணுமாம்…அது அங்க பங்களூர்லையே கிடைக்கும். அங்கேயே வாங்கிக்கலாம்மா!” என்று முடித்து விட்டான்.

வஞ்சு எதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாக நிற்க பானு மீண்டும் மூர்த்தியை பார்த்தார்.

“சரிடா! இப்ப உனக்கு எடுத்த பட்டு வேட்டி சட்டை பிடிச்சிருக்கா பாரு? இல்ல வேற வேணாலும் உனக்கு பிடிச்ச மாதிரி எடுத்துக்க….” என்று தாங்கள் எடுத்ததை காட்ட பானுவுக்கு அவர் மனம் புரிந்தது.

 அவர் மனம் முரண்டும் போதெல்லாம் கணவர் சொன்னது தான் அவரை அமைதியாக போக வைக்கிறது.

நிச்சயம் முடிந்த அன்று வீட்டுக்கு வந்து தங்கள் அறையில் பானு பொறுக்க முடியாமல் மீண்டும் ஆரம்பித்தார்.

“ஏங்க! பொண்ணு விஷயத்துல தான் நா விட்டுக் குடுக்கணும்னா எதுலயுமே என் விருப்பம் கிடையாதாங்க? அப்படி என்னங்க அவசர அவசரமா இன்னிக்கே நிச்சயம் பண்ணனும்னு அவசியம்?

அப்ப இத்தனை நாள் பெத்து கஷ்டப்பட்டு வளத்து படிக்க வைக்க மட்டும் தான் நமக்கு உரிமையா? அவன் கல்யாண விஷயத்துல எதிலையும் என் கருத்துக்கு இடமில்லையா….? இனி அவன் எனக்கு பிள்ளையில்லையா…..?”

கோபமாக ஆரம்பித்தாலும் பேசப்பேச நா தழுதழுத்து கண்ணீர் முட்டியது.

மூர்த்திக்கு மனைவியின் வேதனை புரிந்தது தான். ஏன் அவருமே கூட அதே வருத்தத்தில் தான் இருக்கிறார்!

ஆனால்..?

தங்கள் உணர்வுகளையோ ஏமாற்றத்தையோ ராம்குமார் இனி கேட்கவோ புரிந்து கொள்ளவோ போவதில்லை எனும் போது வருந்தி என்ன பயன் என்று நினைத்தார்.

என்னவோ மகன் தங்களை விட்டு வெகு தூரம் விலகி விட்ட உணர்வு. அது இருவருக்குமே வலிக்க ஒரே வித்தியாசம் என்னவென்றால் பானு அதை வாய் விட்டு புலம்ப மூர்த்தி மனதுக்குள்ளேயே வைத்து குமைந்து கொண்டிருந்தார்.

அதை மறைத்துக்கொண்டு புவனாவின் அருகே அமர்ந்து அவர் தோளில் ஆதரவாக கை போட்டு அணைத்துக் கொண்டார் மூர்த்தி.

“பானுமா! உன் வருத்தம் புரியுது டா. அவனை உண்டானதில் இருந்து எல்லா விஷயத்திலயும் அவன் விருப்பம் அவன் வசதி அவனுக்கு எது நல்லது இப்படித் தானே யோசிச்சு எல்லாம் செஞ்சிருக்கே? இப்ப ஏன் உன் விருப்பம் உன் பிடித்தம் என்று யோசிக்கிறே?

அவனுக்கு பிடிச்சிருக்கு என்று நீ ஆசைப்பட்ட பாட்டுக் கிளாசை விட்டு கராத்தே கிளாஸ்ல சேர்த்து விட்டே? நாம ரெண்டு பேரும் அவன் மெடிசின் எடுத்து படிக்கணும் என்று விரும்பினோம். ஆனா அவன் இன்ஜினியரிங் தான் படிப்பேன் என்று பிடிவாதம் பிடிச்சப்போ நீ என்ன சொன்னே என் கிட்ட ஞாபகம் இருக்கா?

படிக்கப்போறது அவன் தானேங்க? அவன் இஷ்டத்துக்கு விட்டுட்டு போங்க என்று பிடிவாதமா இருந்த என்னையும் பேசிப்பேசி சமாதானம் செஞ்சே?

உன்னைப் போல தான் எனக்கும் நம்ம புள்ள திடீர்னு நம்மை எட்ட நிறுத்திட்ட வலியும் ஏமாற்றமும் இருக்கு. ஆனா இப்ப காலம் மாறிடுச்சு. ஊர்ல எல்லா குடும்பத்திலயும் இப்ப காதல் கல்யாணம் தான் நடக்குது.

அதோட அந்த பெண் கூட பல வருஷம் வாழப் போறவன் அவன் தான். அது அவனுக்கு பிடிச்ச பெண்ணா இருக்கட்டுமே?

இத்தனை விஷயத்துல அவன் விருப்பத்தை கேட்டு செஞ்சோம். இதையும் செஞ்சு பெத்தவங்க நாம பெருந்தன்மையா இருந்துட்டு போவோம் புவனா!”

அவர் பேசப்பேச புவனாவுக்கு மூர்த்திக்கும் தன்னைப் போலவே ஏமாற்றமும் வலியும் இருப்பதும் இருந்தாலும் மகனுக்காக அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் இருக்கிறார் என்றும் புரிய அதன் பிறகு அவர் புலம்புவதையே விட்டு விட்டார்.

Advertisement