Advertisement

ராம்குமாருக்கு அப்பாவின் கொட்டு புரிய தலை குனிந்தான். ஆனாலும் அவனால் அவன் சின்ன பாக்கெட்டை விட்டுக் கொடுக்க முடியாதே!

அதனால் அழுத்தமாகவே இருந்து கொண்டான். ஆனால் பானுவால் தான் அப்படி இருக்க முடியவில்லை. 

மகனின் திருமணத்தைப் பற்றி எவ்வளவோ கனவுகள் கண்டு கொண்டிருந்தவருக்கு இந்த தகவல் பெரிய இடி.

மகனை அதற்கு மேல் கேட்கப் பிடிக்காமல் உடனே மகளுக்கு அடித்தார். புவனாவின் செல்லில் ஷ்யாம் தான் எடுத்தான்.

பானு மகனின் அதிரடி முடிவை மாப்பிள்ளையிடம் சொல்லி அழ ஷ்யாம் தான் அவரை சமாதானம் செய்ய வேண்டி இருந்தது.

“அத்தை! ராம் அந்த பொண்ண தான் கல்யாணம் கட்டணும்னு தீவிரமா இருக்கான். நீங்க அதை ஏத்துக்கறது தான் நல்லது…”

“உங்க மாமா அப்படி தான் ஏத்துக்கிட்டார் போல. என்னால தான் முடியல….”

பானுவின் குரல் வருத்தத்தில் தழுதழுக்க ஷ்யாம் ஆறுதல் சொல்வதாக நினைத்து வாயை விட்டான்.

“அத்தை! அந்த பொண்ண நானும் புவனாவும் பாத்தோம். நல்ல பொண்ணு தான் அத்தை. நீங்க யோசிக்க ஒண்ணும் இல்லை….”  

“அப்ப உங்களுக்கும் தெரியுமா? புவனாவுக்கும் தெரியுமா? ஏன் நீங்க கூட என் கிட்ட சொல்லல?”

பானு விழித்துக் கொண்டு கேட்க ஷ்யாமின் நிலை தான் திண்டாட்டம் ஆனது. 

புவனா ஏற்கனவே தாங்கள் வஞ்சுளவல்லியை சந்தித்ததை சொல்லி இருப்பாள் என்று நினைத்து ஆறுதல் சொல்லப் போக இப்போது பானுவின் மனத்தாங்கலை அவன் எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

என்ன சொல்வது என்று புரியாமல் “அது…அது நடந்து ஒரு வருஷம் இருக்குமே..” என்று சொல்ல பானு மேற்கொண்டு எதுவுமே பேசவில்லை. 

“சரிங்க மாப்பிள்ளை!” என்று போனை வைத்து விட்டார்.

அன்று இரவு மூர்த்தி சொன்ன சமாதானத்திற்கும் மறுத்து எதுவும் சொல்லவில்லை. 

“பையன் தோளுக்கு மேல வளந்துட்டான். இனி நாம அவங்க முடிவுக்கு கட்டுப்படறதத் தவிர வேறு வழியில்லை பானு..!”

“பையன் வளந்துட்டா அம்மா நகந்து நின்னுக்கணுமாங்க?”

என்றதோடு படுத்துக் கொண்டார்.

அப்பாவின் சம்மதம் மறைமுகமாக கிடைத்ததில் ராம்குமார் அதற்கு மேல் தாமதிக்கவில்லை. 

உடனே வஞ்சுவிற்கு அழைத்து “நீ இப்பவே லீவு போட்டு உங்க ஊருக்கு போ. உங்க அம்மா அப்பா கிட்ட நம்ம விஷயத்த சொல்லி நாங்க பொண்ணு கேக்க வரோம் என்று சொல்லு.”

ராம்குமார் ஊருக்கு கிளம்புவதற்கு முன் அவளிடம் எல்லாம் சொல்லி இருந்தாலும் விஷயம் இவ்வளவு வேகமாக நகர்வதில் பயந்து போன வஞ்சுவை சமாளித்து கிளப்புவதற்குள் ராம்குமாரின் விழி பிதுங்கியது.

இது தான் ஆரம்பம் என்று தெரியாமல் ராம்குமார் அவளைத் தேற்றினான்.

“வஞ்சு! ஒரு வழியா எங்க வீட்டுல எதிர்ப்பு எல்லாம் சமாளிச்சு கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்க ரொம்ப கஷ்டமா போச்சு. அப்பாவ நினைச்சு தான் பயந்தேன். 

ஆனா அவரே ஒத்துக்கிட்டார். அம்மா தான் கொஞ்சம் கோவமா இருக்காங்க. அது போகப்போக சமாளிச்சிக்கலாம். 

நீயும் இப்ப உங்க வீட்டுல பேசி சம்மதிக்க வெச்சா தான் நம்ம கல்யாணம் நடக்க வாய்ப்பு. இல்லன்னா ரொம்ப கஷ்டம்…”

அவன் சமாதானம் செய்யாத வேலையை இந்த மறைமுக மிரட்டல் செய்ய வஞ்சு அப்போதே லீவு மெயிலை மேலிடத்துக்கு அனுப்பி விட்டு கிளம்பி விட்டாள்.

 சொன்னபடியே ராம்குமார் தன் குடும்பத்தோடு கருங்குழி கிராமத்துக்கு கூட்டி வந்திருந்தான். புவனா ஷ்யாம் மூலமாக அம்மாவுக்கு எல்லாம் தெரிந்ததை அறிந்து பானுவிடம் எல்லாம் சொல்லி விட்டாள்.

நாட்கள் போகப்போக தம்பி அவளை மறந்து விடுவான் என்று நினைத்து இதை பெரிது படுத்த வேண்டாம் என்று நினைத்ததாக சொல்லி விட பானு இனி பழசை நினைத்தும் பேசியும் புண்ணியம் இல்லை என்று மனதைத் தேற்றிக் கொண்டார்.

ராம்குமாரும் இந்த இரண்டு நாட்களில் அவரை கரையாய் கரைத்து இருக்க தன் மனதை மகனின் சந்தோஷத்துக்காக தேற்றிக் கொண்டார்.

பெண் வீட்டுக்கு போக மகளையும் மருமகனையும் மூர்த்தி முறையாக அழைக்க அவர்களும் வந்தனர்.

 கருங்குழிக்கு இவர்கள் வாடகைக் காரில் போய் இறங்க பானுவுக்கு வஞ்சுவின் வீட்டைப் பார்த்ததும் மீண்டும் மனம் நெருடியது.

மகனின் படிப்புக்கும் அழகுக்கும் அவர்களிடம் இருக்கும் வசதிக்கும் எப்படிப்பட்ட மருமகள் வர வேண்டும் என்று கனவு கண்டுகொண்டிருந்தார்.

பானுவின் முகத்தில் இருந்தே அவரின் ஏக்கத்தை புரிந்து கொண்ட மூர்த்தி தாழ்ந்த குரலில் 

“இனி அதையெல்லாம் நினைத்து பிரயோசனம் இல்லை பானு. நீ தானே உன் மகனுக்கு எப்பவும் பிடிச்சதை பார்த்து பார்த்து செய்வே? அங்கே உன் மகனின் முகத்தைப் பாரு. அந்த சந்தோஷத்துக்கு இதெல்லாம் விலையா நினைச்சிக்க. “ என்று மறுபடியும் மனைவியை தேற்றினார். 

அவருக்கும் பானுவைப் போலவே மகனின் காதல் ஏமாற்றத்தை தந்தாலும் அவர் விரைவாகவே மனதைத் தேற்றிக்கொண்டார்.

வழி நெடுக தீபுவை தன் மடியிலேயே வைத்து அவளைக் கொஞ்சிக் கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்த ராம்குமாரை ஏக்கத்துடன் பார்த்த புவனாவுக்கும் ஷ்யாம் கிட்டத்தட்ட இதே பதிலை சொல்லி இருந்தான்.

“இப்ப போலவே என் தம்பி கல்யாணத்துக்கு பிறகும் இருப்பானாங்க?” 

என்ற அவள் கேள்விக்கு “நீ கல்யாணம் பண்ணிட்ட பிறகு மாறிட்டியா? அப்ப ஏன் உன் தம்பிய மட்டும் சந்தேகப்படற?” என்று அவள் வாயை அடைத்திருந்தான்.

  ராம்குமாரின் வீட்டில் இப்படி இருக்க வஞ்சுவின் வீட்டிலோ வஞ்சு ஒரே நாளில் தன் குடும்பத்தை தன் வழிக்கு கொண்டு வந்திருந்தாள்.

ராம்குமாரை பற்றியும் அவன் குடும்பத்தின் வளத்தைப் பற்றியும் ஓஹோ என சொல்லி இருக்க இப்படிப்பட்ட குடும்பத்தில் தன் பெண்ணைக் கொடுக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்து விட்டனர்.

வஞ்சு படித்து வேலைக்கு போக ஆரம்பித்த பிறகே அவர்கள் வீட்டில் எல்லாம் அவள் பேச்சைக் கேட்டு தான் பெரிய முடிவுகள் எடுக்கப் பட்டன. 

தம்பியின் படிப்பு, வீடு கட்டுவது என எல்லாம் அவளைக் கலந்து கொண்டு தான் செய்தனர்.

பெண் சம்பாதித்துக் கொடுப்பது கல்யாணம் வரைக்கும் தான் என்ற நிதர்சனம் அவர்களுக்கும் புரிந்து தான் இருந்தது.

ஆக வஞ்சு நினைத்ததை விட சுலபமாக அவள் வீட்டு சம்மதமும் கிடைத்து விட ராம்குமார் வஞ்சு இருவரின் சந்தோஷத்திற்கு கேட்பானேன்?

அவர்கள் வீட்டை பார்த்ததுமே அவர்களின் பொருளாதார நிலை புரிந்ததால் ராம்குமார் குடும்பத்தினர் சீர்வரிசை பற்றி வாயே திறக்கவில்லை. 

வஞ்சுவின் வீட்டிலும் பெரிதாக செய்யும் நிலை இல்லை என்று அவள் அப்பா நேரடியாகவே சொல்லி விட ராம்குமார் வீட்டிலும் அதை எதிர்பார்த்தே இருந்ததால் அவர்கள் பேச்சு நேராக கல்யாண தேதி பற்றி மட்டுமே இருந்தது..

மூர்த்தி சூழ்நிலை புரிந்து அவரே கல்யாணம் செய்து விடுவதாக சொல்லி விட வாய்முறைக்கு கூட வஞ்சுவின் அப்பா கதிர் தான் எதுவும் செய்வதாக சொல்லவில்லை.

காதலர்கள் இருவருக்கும் இதெல்லாம் எதுவும் கவனத்தில் பதியவே இல்லை.

பானுவும் இப்போது பேசிப் புண்ணியம் இல்லை என்று அமைதியாக அமர்ந்து கொள்ள ஆண்கள் இருவருமே திருமணப் பேச்சை பேசி முடித்தனர்.

சாந்தி அடுக்களையில் அவர்களுக்கு கேசரியும் பஜ்ஜியும் செய்வதில் மும்முரமாக ஆகி விட வஞ்சுவும் ராம்குமாரும் ஒரு பக்கம் எதோ பேசிக் கொண்டு இருந்தனர்.

வேறென்ன? அவர்கள் கல்யாணம் இவ்வளவு சுலபமாக நிச்சயம் ஆன சந்தோசம் தான்.

கொஞ்ச நேரத்தில் தீபு அழுததை காரணம் காட்டி புவனாவும் ஷ்யாமும் காலார நடந்து விட்டு வருவதாக கிளம்பி விட்டனர்.

பானு வேறு வழியின்றி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு அமர்ந்து விட்டார்.

ஒரு புறம் தான் ஆசைப்பட்டபடி பெரிய இடத்தில் தன் மகனுக்கு திருமணம் செய்ய முடியவில்லை என்று கழுத்து வரை வருத்தம் இருந்தது. மறுபக்கம் தன் மகனின் விருப்பம் போல் செய் என்று தாய் மனது சமாதானம் செய்தது.

எதுவாகினும் இனி பேசிப் புண்ணியம் இல்லை என்று நிதர்சனமும் புரிந்து தான் இருந்தது. 

எதிலும் தன் விருப்பம் இல்லை என்று தெளிய சீர், மற்ற சாங்கியங்கள் பற்றி மட்டும் பேசி என்ன பயன் என்று அங்கு நடப்பவற்றை பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்து விட்டார்.

மூர்த்தியுமே அந்த வீட்டின் நிலைமைக்கு எதுவும் கேட்பதே வேஸ்ட் என்று முஹூர்த்தம் எப்போது நிச்சயம் எப்போது என்று பேசிக் கொண்டிருந்தார்.

சம்பந்திகள் இருவரும் ஒரு வழியாக இப்போதைக்கு கைத்தாம்பூலம் மாற்றிக் கொள்வது என்றும் கல்யாணத்திற்கு முந்தைய நாள் நிச்சயதார்த்தம் செய்து கொள்ளலாம் என்றும் முடிவு எடுத்தனர்.

அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அவர்கள் வீட்டில் பெண் வீட்டில் நிச்சயமும் பையன் வீட்டில் திருமணமும் செய்ய வேண்டும்.

வஞ்சுவின் குடும்ப சூழலில் கதிரால் ராம்குமாரின் குடும்ப சூழலுக்கு ஏற்ற அளவு செய்ய வசதி இல்லை என்று தான் மூர்த்தி இந்த ஆலோசனையை சொன்னார்.

கதிரும் ஒப்புக்கொள்ள மூர்த்தி ஷ்யாமுக்கு அழைத்து பூ பழம் வகையறாவை வாங்கி வரச்சொல்லி கேட்டார். பானு சொன்னதன் பேரில் கூடவே ஒரு நல்ல புடவையும் வாங்கி வரச்சொல்லி கேட்டுக் கொண்டார்.

சற்று நேரத்தில் எல்லாமே வந்து விட கதிர் அந்த ஊரில் இருந்த அவரின் நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைக்க கைத்தாம்பூலம் அவர்களின் வீட்டிலேயே சிறு விழா போல நடந்தது.

அதற்குள் சாந்தி கேசரி, பஜ்ஜி என்று பரபரப்பாக செய்து எடுக்க பானுவும் கூட உதவினார்.

வஞ்சு இந்த திடீர் நிகழ்ச்சிக்கு தயாராக சென்று விட ராம்குமார் அணிந்து வந்த உடையிலேயே இருந்து விட்டான்.

அவர்களின் உலகத்தில் அவர்கள் இருவர் மட்டுமே இருக்க மற்றவர்களின் மனதில் உள்ளது அவர்களுக்கு புரியவே இல்லை.

கதிர் சாந்தியின் மனதுக்குள் இப்போது புது கவலை வந்தது. அவர்கள் மகள் இன்னும் இரண்டு வருடங்கள் சம்பாதித்து கொடுப்பாள். அதை வைத்து மகனுக்கு உயர்கல்வி மற்றும் வீட்டுக்கு அத்தியாவசிய தேவைகளை முடித்துக் கொள்ளலாம் என்று இருந்தார்கள்.

இப்போது திடுதிப்பென்று கல்யாணம் கூடி விட இனி இதற்கு எப்படி கேட்க என்று யோசனை ஓடியது. அதே நேரத்தில் மகளுக்கு நல்ல புகுந்த வீடு கிடைத்த சந்தோஷமும் இல்லாமல் இல்லை.

ஆக ஒவ்வொருவரும் ஒரு மனநிலையில் இருக்க சம்பந்திகள் இருவரும் தாம்பூலம் மாற்றிக் கொண்டனர். 

நகை எதுவும் முன்னேற்பாடாக கொண்டு வராததால் பானு அவர் கழுத்தில் போட்டுக் கொண்டு வந்திருந்த சிவப்பு நேக்லேசை புடவையோடு வைத்தார்.

இருவரும் தாம்பூலம் மாற்றிக் கொண்டதும் வஞ்சு போய் புடவை மாற்றிக் கொண்டு வர புவனா நலங்கு வைத்து மாலை அணிவித்து அந்த நேக்லேசை வஞ்சுவிற்கு அணிவித்தாள். 

ராம்குமார் வீட்டில் எதையுமே கேட்காமல் டக்கென்று தன் கையில் இருந்த மோதிரத்தை வஞ்சுவின் விரலில் போட வஞ்சுவின் முகம் மலர்ந்து விகசிக்க மற்றவர்களின் உணர்வுகள்…….?

Advertisement