Advertisement

அத்தியாயம்-17

பானு ஒரு வருடம் வரை பொறுமையாக இருந்து பார்த்து விட்டு மறுபடி கல்யாணப் பேச்சை ஆரம்பித்தார்.

மூர்த்திக்கும் இனி தள்ளிப் போட முடியாது என்று புரிய அவரே அழைத்து மகனிடம் பேசினார்.

நீயும் டைம் கேட்டே. நாங்களும் உனக்காக காத்துட்டு இருந்தாச்சு. இனியும் தள்ளிப் போடறது சரி வராது பா. எதையும் காலாகாலத்துல செஞ்சா தான் அழகு. நீ என்ன முடிவு எடுத்து இருக்கே?

ராம்குமார் இப்படி அவர் திடீரென கேட்பார் என்று நினைக்கவில்லை. அவர் அழைத்த நேரம் அவன் அவர்கள் டூர் போட்டோவைப் பார்த்துக் கொண்டு அந்த நாட்களை அசை போட்டுக் கொண்டிருந்தான்.

போன வாரம் தான் அவர்கள் கேங்கில் ஹைதராபாத் போய் வந்திருந்தார்கள். வஞ்சுவும் அவனும் அந்த சண்டையின் பின் வந்த சமாதானத்தில் மிகவும் நெருங்கியிருந்தனர்.

அதுவும் இப்போது நிச்சயம் தங்கள் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையால் இருவரிடையே நெருக்கம் வெளிப்படையாகவே தெரிந்தது.

அதோடு எல்லோரிடமும் தாங்கள் காதலர்கள் என்பதை காட்டிக்கொள்ள தயங்கவும் இல்லை.

அலுவலகத்தில் இருவருக்கும் செய்யும் ப்ராஜெக்ட் பொறுத்து வேறு வேறு வேலை நேரங்கள் என்பதால் அதிகம் பேச நேரம் இருக்காது.

வார இறுதியில் மற்றும் இது போல டூர் போகும் நேரம் தான் இருவரும் சேர்ந்து இருக்க முடியும் என்பதால் அந்த நேரத்தில் அவர்கள் தங்களுக்கு இடையே எந்த சச்சரவும் வர விடுவதில்லை.

வஞ்சுவிடம் இப்போது ராம்குமார் அந்த அளவு மயங்கிப் போய் இருந்தான்.

அவள் “குரு! குரு!” என்று எல்லாவற்றுக்கும் அவனை சார்ந்து இருப்பது அவனுக்குள் ஒரு கர்வத்தை தந்திருந்தது.

அப்பாவின் பேச்சை ஸ்பீக்கரில் போட்டு விட்டு இதோ இப்போதும் அவர்களின் போட்டோக்களை தான் ராம்குமார் பார்த்துக் கொண்டிருந்தான்.

வஞ்சுவின் தோள் மேல் இவன் கை போட்டபடி இருக்க அவள் அவன் இடுப்பை அணைத்தபடி நின்று கொண்டிருந்தாள்.

அவள் முகத்தில் தெரிந்த இவன் என்னவன் என்ற பெருமையும் சிறு வெட்கமும் அவனுக்குமே பார்க்க பிடித்தது. 

டூரில் இருவரையும் மற்றவர்கள் திருமணமான ஜோடிகளைப் போலவே நடத்த அவர்கள் அடித்த லூட்டியை அதிகம் ரசித்தது இவர்கள் தான்.

ரஞ்சித் சும்மா இல்லாமல் “டேய்! பாஹுபலி ஷூட்டிங் இங்க தான் எடுத்தாங்களாம். அதுல பிரபாஸ் அவ்ளோ பெரிய லிங்கத்தை தூக்குனாரு! 

நீ முடிஞ்சா அட்லீஸ்ட் இந்த ரெட்டை ஜடைய தூக்குடா பாக்கலாம்..!” என்று உசுபேத்தவும் ராம்குமார் வஞ்சுவை கேள்வியாக பார்த்தான்.

அவர்கள் அன்று ராமோஜி ராவ் பிலிம் சிட்டிக்கு வந்திருந்தார்கள். 

நண்பர்களுடன் டூர் என்பதால் அவர்கள் இருவரும் தனித்துப் பேசிக் கொள்ள நேரம் கிடைக்காத காரணத்தால் இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்தனர்.

ஹோட்டலில் ரூம் எடுக்கும் போது மிசஸ் அண்ட் மிஸ்டர் ராம்குமார் என்று தான் ரூம் எடுத்திருந்தனர்.

ஒரே அறையில் இருந்தாலும் ஒரே படுக்கையைப் பகிர்ந்து கொண்டாலும் ஓரளவுக்கு மேல் எல்லை தாண்டியதில்லை.

தோளில் கை போடுவது, இடுப்பில் கட்டிக் கொள்வது, எப்போதாவது கன்னத்தில் முத்தம் என்பதோடு அவர்களின் நெருக்கம் நின்றது.

இப்போது ரஞ்சித் சீண்டவும் ராம்குமார் அவள் என்ன நினைக்கிறாள் என்று அறிய அவள் முகம் பார்க்க வஞ்சுவிடம் லேசான வெட்கமும் எதிர்பார்ப்பும் மட்டுமே.

பச்சை நிற லெகின்சும் வெள்ளையில் பச்சை இலைகள் நிறைந்த குர்தியும் அவளை இன்னும் அழகாக காட்டியது. கழுத்தில் இருந்த ஸ்டோல் நாகரீகத்தின் அடையாளம் மட்டுமே.

இப்போது அவள் கருங்குழியில் இருந்து வந்த கிராமத்துப் பெண் அல்ல. ராம்குமாரின் கையைப் பிடித்துக் கொண்டு உடை தேர்வு செய்து தரச்சொல்லி கேட்ட கட்டுப்பெட்டியும் அல்ல.

பெங்களூர் ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் நவநாகரீக யுவதி. 

நீண்ட கூந்தலை மட்டும் இன்னும் அம்மாவுக்கு பயந்து வெட்டவில்லை. மற்றபடி அவள் தோற்றம் முற்றிலும் மாறியிருந்தது.

ராம்குமார் சிறு சிரிப்புடன் நெருங்க அவளே தூக்க வாகாக தன் கைகளை தூக்கி அவன் தோள் மேல் வைத்தாள்.

ராம்குமார் புன்னகை இன்னும் விரிய அவளைத் தன் கைகளில் ஏந்தியவன் நடக்க ஆரம்பித்தான்.

அவன் சும்மா தூக்கி விட்டு கீழே விட்டு விடுவான் என்று மற்றவர்கள் நினைக்க அவனோ அங்கிருந்த செயற்கை குன்றில் ஏற ஆரம்பித்தான்.

ரஞ்சித் அதை வீடியோ எடுக்க மறுநாள் அவனை பெங்களூர் பாஹுபலி என்று மீம் போட்டு கிண்டல் செய்ய மற்றவர்கள் படம் எடுக்க ஆரம்பித்தனர்.

காதல் ஜோடிகள் இதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. வஞ்சுவின் முகத்தில் அவ்வளவு சந்தோசம். 

அதையெல்லாம் இப்போது நினைத்துப்பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அப்பாவின் கேள்விக்கு பின்னால் இருந்த எதிர்பார்ப்பு கவனத்திலேயே இல்லை.

சில நொடிகள் அவன் பதிலுக்காக காத்திருந்த மூர்த்தி அவரே பேச்சை மீண்டும் தொடர்ந்தார்.

“என்னப்பா! அந்த ரஞ்சனிக்கு இன்னும் கல்யாணம் ஆகல. அந்த பொண்ணே பாக்கலாமா? இல்ல வேற பொண்ணுன்னாலும் பாக்கலாம். என்ன சொல்றே?”

பக்கத்தில் இருந்த பானுவுக்கு அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை.

அவரிடம் இருந்து போனை “இங்க குடுங்க போன! நா பேசிக்கறேன்!” என்று வாங்க மூர்த்தி சிறு புன்னகையோடு கொடுத்தார்.

மகனின் மௌனம் ஏன் என்று அவருக்கு மட்டும் அல்ல பானுவுக்கும் கூட தெரியும். அப்படி இருந்தும் இன்னும் தன் மகன் தான் கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டான் என்று தன்னையே ஏமாற்றிக் கொள்கிறாள் என்று நினைத்தார்.

இப்போது கேட்டதுமே கூட அவன் வாயால் சொல்லக் கேட்க தான் அவர் கேட்டதே!

“என்னப்பா! அப்பா கேட்டத கவனிச்சே தானே? நீ ஓகே சொன்

னா இப்பவே போய் ரஞ்சனி வீட்டுல பேசி முடிச்சிடறோம். அவங்க ஆர்வமா தான் இருக்காங்க. ஒரு மாசத்துல கல்யாணத்த முடிச்சிடலாம். நீ வெளிநாடு எங்கும் போறதா இருந்தா கூட அவளையும் கூட்டிட்டு போலாம் தம்பி!”

பானு விட்டால் அப்போதே கல்யாணத்தை முடித்து விடுவது போல பரபரக்க ராம்குமாருக்கு இனியும் தள்ளிப்போட முடியாது என்று தெளிவாக புரிந்தது.

அதோடு வஞ்சுவுக்கும் தனக்கும் உள்ள காதலையும் தங்கள் கல்யாண முடிவையும் நேரில் போய் தான் பேச வேண்டும் என்று விளங்க அவர் கேள்விக்கு பதிலே சொல்லாமல்

 “அம்மா! இந்த வாரம் ரெண்டு நாள் லீவு போட்டு புதன்கிழமை ராத்திரியே வரேன்மா! நேர்ல பேசிக்கலாம்! இப்ப எனக்கு அவசரமா ஆபிஸ் வேலை இருக்கு! நானே அப்புறம் கால் பண்றேன்! பை!” என்று முடித்து அவர் பதிலுக்கு கூட காத்திராமல் அழைப்பை துண்டித்தான்.

“என்னங்க! இவன்? இப்படி பேசிட்டு இருக்கும் போதே போன டப்புனு வெச்சிட்டான்?”

பானு ஆற்ற மாட்டாமல் புலம்ப மூர்த்தி “இனிமே இதுக்கெல்லாம் பழகிக்க!” என்று முடித்து விட்டார்.  

“அம்மா! என் கூட வேலை பாக்கற வஞ்சுளவல்லிய நான் விரும்பறேன். அவளைத்தான் கல்யாணம் பண்ண விரும்பறேன். நீங்க அவங்க வீட்டுல பேசி கல்யாணத்தை முடிச்சு வைங்க.”

ராம்குமார் மின்னாமல் முழங்காமல் புவனாவின் தலையில் இடியைப் போட மூர்த்தியோ இதை எதிர்பார்த்த மாதிரி அமைதியாகவே உட்கார்ந்திருந்தார். 

“என்னங்க! இவன் இப்படி பேசறான். நீங்க அவனை என்னன்னே கேக்காம இப்படி பேசாம உக்காந்து இருக்கீங்க…?” 

பானு மூர்த்தியிடம் தன் ஆதங்கத்தை காட்டினார். இப்படி சட்டமாக பேசுபவனை என்ன கேட்க முடியும்?

மூர்த்திக்கு மனைவியின் வருத்தம் புரிந்தாலும் விஷயம் அவர்கள் கைமீறி போய் விட்டது என்று தெரிந்தது. இதுவரை சின்ன விஷயங்களுக்கு கூட தங்கள் ஆலோசனையை கேட்ட மகன் இப்போது தன் வருங்காலத்தை பற்றி தானே முடிவு எடுத்த பிறகு என்ன சொல்ல முடியும்?

“எப்ப போய் அவங்க வீட்டுல பேசலாம் என்று நீயே அவங்க கிட்ட கேட்டு சொல்லிடுப்பா!”

மூர்த்தி இப்படி சொல்லவும் ராம்குமாருக்கு அப்போது தான் நிம்மதி பெருமூச்சு வந்தது. என்னவோ தைரியமாக சொல்லி விட்டானே ஒழிய உள்ளுர ஒரு பயம் இருந்தது தான். 

நிறைய போராட வேண்டி இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தான்.

பானு கணவரின் பேச்சில் திகைத்துப் போனார். 

‘தான் சொன்ன பிறகும் அவனைத் தட்டிக் கேட்காமல் எப்போது அந்த பொண்ணு வீட்டுக்கு போய் சம்பந்தம் பேசலாம் என்று கேட்கிறாரே இந்த மனிதர்?’

அவருக்கு இன்னும் மகன் தன் கைக்குள் இருப்பதாக நினைப்பு. 

“என்னங்க இது? அவன் தான் சின்ன பையன். புரியாம பேசறான். நீங்களும் அப்படியே விட்டுடுவீங்களா? அந்த பொண்ணு யாரோ? அவங்க குடும்பம் எப்படியோ? எதுவும் விசாரிக்காம போய் பொண்ணு கேக்கலாம்னு சொல்றீங்க?”

ஆற்றாமையில் பானு படபடவென பொறிய மூர்த்தி மனைவியின் தோளில் மெல்ல தட்டியவர் 

“ஒரு வருஷம் முன்னையே உன் பையன் முடிவு பண்ணிட்டான். இப்ப போய் இதெல்லாம் நாம விசாரிச்சு என்ன பிரயோசனம் பானு? 

நம்ம அனுமதிய கேட்டு அவன் இப்ப வரல. தகவலை சொல்ல தான் வந்திருக்கான்.  அவன் விரும்பற பொண்ண கட்டி வெக்கறது மட்டும் தான் நம்ம வேலை. அதான் அவனையே விசாரிக்க சொல்லிட்டேன்…”

என்று மனைவிக்கு விளக்கம் கொடுக்கும் சாக்கில் மகனுக்கும் கொட்டு வைத்தார்.

Advertisement