Advertisement

ரஞ்சித் “இந்த வாட்டி ராம்குமாரும் வஞ்சுவும் இந்த கேக் கட் பண்ணட்டும்..” என்று தற்செயலாக சொல்வது போல சொல்ல நண்பர்கள் இடையே ஆரவாரம்.

ரஞ்சித் ராம்குமாரிடம் திரும்பி “மச்சான்! நீ என்ன காரணத்துக்காக வஞ்சு கூட சண்டை போட்டியோ தெரியல.

ஆனா நீங்க அவ்வளவு தூரம் லவ் பண்ணிட்டு இப்படி சண்டை போட்டு பிரிஞ்சு நிக்கறது நல்லாவே இல்லை. ரெண்டு பேரும் இப்பவே சமாதானம் ஆகணும்.

நம்ப ஸ்கூல்ல சண்டை போட்டா வாத்தியார் சொல்லுவார்.இல்ல? ரெண்டு பேரும் ஷேக் ஹேன்ட் பண்ணுங்க. காதைப்பிடிச்சி கிட்டு உன்னால நான் கேட்டேன். என்னால நீ கேட்டே அப்படி சொல்ல சொல்லுவாங்க. அது போர்!

அதுக்கு பதிலா நாங்க ஒரு பிளான் வெச்சிருக்கோம். எங்க எதிர்லயே நீங்க ரெண்டு பேரும் கேக் கட் பண்ணி ஒருத்தருக்கொருத்தர் ஊட்டிக்கணும். சண்டை சமாதானம் ஆயிடுச்சுன்னு எங்க எதிர்லயே கட்டிபிடிச்சு முத்தம் குடுத்துக்கணும்…..என்ன சரியா?”

என்று தன் கட்டளைகளை சொல்ல கேட்டுக் கொண்டே வந்த ராம்குமாரின் முகத்தில் தோன்றி இருந்த புன்னகை விரிவடைந்து கொண்டே போனது.

“சரி இப்ப நா என்ன பண்ணனும் சொல்லு?”

சொன்னதைக் கேட்பவன் போல ராம்குமார் கேட்க ரஞ்சித் “முதல்ல ரெண்டு பேரும் கேக் வெட்டுங்க…!” என்று தான் சொன்னதை செய் என்பது போல ஆணையிட்டான்.

ராம்குமார் “இதானே? வஞ்சு இங்க வா!” என்று ஒன்றுமே நடக்காதது போல அவளை அழைக்க எல்லோரும் என்னடா நடக்குது இங்க என்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

இருவரும் இனி பார்க்கவோ பேசவோ போவதே இல்லை என்று தாங்கள் நினைத்து ரூம் போட்டு யோசனை செய்து எல்லாம் செய்தால் இவர்கள்?

வஞ்சுவும் உடனே ராம்குமார் பக்கத்தில் வந்து நின்றாள். கத்தியை ராம்குமார் அவள் கையில் கொடுக்க வஞ்சு வாங்கிக்கொண்டாள்.

அவள் பின்னால் கையை கொண்டு சென்று அவள் கை மேல் கை வைத்து ராம்குமார் கேக் வெட்ட நண்பர்கள் நடுவே ஓவென்று சத்தம். ஒரே கைத்தட்டல்.

ராம்குமார் அதில் இரண்டு துண்டுகள் வெட்டிய பிறகு வஞ்சுவிடம் “இந்த பீஸை அந்த டிஷு பேப்பர்ல பாக் பண்ணிக்கோ!”  என்று சொல்லி விட்டு அங்கிருந்த கவரில் இருந்து ஒரு ஸ்நாக்ஸ் கவரும் கோக் பாட்டிலும் கையில் எடுத்துக்கொண்டான்.

“என்னடா பண்றே?”

என்று ரஞ்சித் புரியாமல் கேட்க எல்லோருமே ராம்குமாரை தான் வேடிக்கை பார்த்தனர்.

“பார்ட்டிக்கு தேங்க்ஸ் டா மச்சான்! அதுக்கு பதிலா நீ சொன்னதுல முதல் ஆர்டரை மட்டும் செஞ்சிட்டேன். மீதிய நானும் வஞ்சுவும் தனியா போய் பாத்துக்கறோம்.

எல்லாம் எடுத்துக்கிட்டோம். வரட்டா? பை பிரெண்ட்ஸ்! எல்லாரும் நல்லா என்ஜாய் பண்ணுங்க.” என்று சொல்லியபடி பே என்று பார்த்திருந்தவர்களை பார்த்து சிரித்துக்கொண்டே கிளம்பியவன் திடீர் ஞாபகம் வந்து ரஞ்சித்தை மறுபடி நெருங்கினான்.

அவன் பேன்ட் பக்கெட்டில் தொங்கிக்கொண்டிருந்த பைக் சாவியை உருவிக்கொண்டு “நீ யார் கூடயாவது போய்டு மச்சான்! வர்ட்டா? வா வஞ்சு!” என்று அவள் கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு போயே விட்டான்.

ஒரு சில நொடிகள் ஸ்தம்பித்து நின்ற ரஞ்சித் “டேய்! நீ திரும்ப வீட்டுக்கு வந்தா தெருவுல தான் நிப்படா! “என்று கத்த ராம்குமார் அலட்டிக்கொள்ளவே இல்லை.

“ஹான்! சொல்ல மறந்துட்டேன். வர பத்து மணி கூட ஆகும். பூட்டிடாதே!”

போகிற போக்கில் ராம்குமார் சொல்லிக்கொண்டே போக ஸ்தம்பித்து நின்றவர்களுக்கு தாங்கள் ஏமாந்த விதம் சிரிப்பைத் தர ஒரே குரலாக “ஹாவ் அ நைஸ் டைம்!” என்று கத்தினர்.

ராம்குமாரின் முகம் சற்று தூரம் நடந்ததும் சிரிப்பை தொலைத்தது.

வஞ்சுவோ இப்போது மறுபடி வெளியே நடந்ததை வைத்து ஏமாந்து போனாள்.

ராம்குமார் சொன்னதை வைத்து அவன் கோபம் போயே போய் விட்டது என்று உற்சாகமாக அவனோடு கிளம்பினாள்.

வண்டி அருகே வந்ததும் பைக்கை எடுத்து உதைத்து கிளப்பிய வேகத்தில் அது சீறிக்கொண்டு கிளம்பியது.

வஞ்சுவைப் பார்த்து கடினமான குரலில் “பின்னால ஏறு!” என்று ராம்குமார் சொல்ல வஞ்சு பின்னால் ஏறி அமர்ந்துகொண்டு அவன் வயிற்றை இரண்டு கைகளாலும் கட்டிக்கொண்டாள்.

ராம்குமார் பைக்கை கிளப்பிய வேகத்தில் அவன் முதுகில் ஒட்டிக்கொண்டவள் பயத்தில் கண்களை மூடிக்கொள்ள வண்டி பறந்தது.

கொஞ்ச நேரம் கழித்து வேகம் சற்று குறைய ராம்குமார் கோபமும் குறைந்தது.

ஆனால் இன்னமும் அவனுக்கு வஞ்சு செய்தது பிடிக்கவில்லை.

வண்டியை ரோட்டோரம் இருந்த இன்னொரு சின்ன பார்க்கில் நிறுத்தினான்.

சற்றே இருட்டத் தொடங்கியதால் காற்றும் இதமாக இருந்தது.

வண்டி நின்றதும் வஞ்சு மெதுவாக இறங்க ராம்குமார் பைக்கை நிறுத்தி விட்டு முன்னால் நடந்தான்.

அங்கிருந்த பெஞ்சில் அமர வஞ்சுவும் அவன் அருகே அமர்ந்தாள். எப்போதும் ஓயாமல் பேசும் வாய் இப்போது திறக்கவே இல்லை.

ராம்குமாரால் அதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை.

“நமக்குள்ள ஏது நடந்தாலும் அதை பேஸ்புக்ல போடுவியா? உனக்கு ஏதாவது அறிவிருக்கா?”

எடுத்த எடுப்பிலேயே அவன் திட்ட வஞ்சுவுக்கு அதில் என்ன தப்பென்று இவன் திட்டுகிறான் என்று தான் தோன்றியது.

“நா என்ன போட்டேன்? அப்படி போட்டா தான் என்ன தப்பு?”

தான் செய்தது தவறென்றே தெரியாதவளுக்கு எப்படி புரிய வைப்பது என்று புரியாமல் விழித்தவனுக்கு ஒன்று தோன்ற அவளை இழுத்தவன் அவள் உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டான்.

திடீரென அவன் இப்படி செய்யவும் வஞ்சுவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு நொடி பேசாமல் இருந்தவள் அடுத்த நொடி திமிறினாள்.

“என்ன பண்றீங்க பப்ளிக் ப்ளேஸ்ல?”

அவனிடமிருந்து வலுக்கட்டாயமாக விலகி வஞ்சு கோபமாக அதட்ட ராம்குமார் கோபமாக நகைத்தான்.

அந்த முத்தத்தோடு அவன் கோபமும் கரைந்து போனாலும் ராம்குமார் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.

      “ஓ பரவாயில்லையே! உனக்கே தெரியுதே? பப்ளிக்ல என்ன செய்யணும்? என்ன செய்யக் கூடாது என்று?”

அவன் குரலில் இருந்த நக்கல் புரிந்தாலும் இன்னும் வஞ்சுவுக்கு அவன் சொல்ல வந்தது புரியவில்லை.

      “இது எப்படி நம்ம ரெண்டு பேருக்கும் பர்சனலோ அதே போல தான் நம்ம ரிலேஷன்ஷிப் கூட.

நமக்கு நடுவில காதல் வந்தாலும் மோதல் வந்தாலும் நம்ம ரெண்டு பேருக்குள்ள தான் இருக்கணும். அத எல்லார் கிட்டயும் சொல்லிட்டு இருக்கக்கூடாது. முக்கியமா சோசியல் சைட்ல போடக்கூடாது. புரியுதா?”

.      அவனையே பார்திருந்தவளின் மோவாயைப் பிடித்து  அழுத்தி சொல்ல அதில் இனி செய்யக்கூடாது என்ற கட்டளை இருந்தது.

      “பேஸ்புக்ல நம்ம வாழ்க்கைல நடக்கற எல்லா விஷயங்களையும் சொல்ல வேண்டிய தேவையில்லை. எதை சொல்லணுமோ அதை மட்டும் சொன்னாலே போதும்.

      நீ போட்ட போஸ்ட்ல வந்த கமெண்ட்ஸ் எல்லாம் படிச்சியா? எத்தனை பேர் எவ்வளவு நக்கல்? நம்ம கூட சிரிச்சு பேசற எல்லோரும் உண்மையான வெல்விஷர்ஸ் கிடையாது.

      புரிஞ்சு நடந்துக்க வஞ்சு!”

      இறுதியில் அவன் குரலில் கோபம் குறைந்து வருத்தம் மட்டுமே இருக்க அது தான் வஞ்சுவை தொட்டது.

      எட்டி அவன் கையைப் பிடித்து “சாரி குரு! இனி இப்படி பண்ண மாட்டேன்!” என்று வருத்தத்தோடு சொன்னாள்.

      ஆனால் வேற பண்ணுவேன் என்று அதில் ஒளிந்திருந்த எச்சரிக்கை காதல் மயக்கத்தில் இருந்த ராம்குமார் அப்போது  அறியவில்லை.

      அதற்கு மேல் அதைப் பிடித்துக்கொண்டு இருக்காமல் ராம்குமார் பேச்சை மாற்றினான்.

      “ஆமா! இதுக்கும் உன்ன நல்லா திட்டணும் என்று நினைச்சேன்.என்ன இப்படி இளைச்சிட்டே? சரியா சாப்பிடறியா? இல்லையா?”

      பேசிக்கொண்டே கவரைப் பிரித்து அதில் இருந்த கேக்கை தானே அவளுக்கு ஊட்டி விட்டான்.

      வஞ்சு சுற்றி தயக்கத்தோடு பார்க்க அவள் தலையில் தட்டி “யாரும் பார்க்காத இடத்துல தான் இருக்கோம். சாப்பிடு!” என்றதும் தான் வாங்கிக் கொண்டாள்.

      “நீங்க பேசவே இல்லையா? லாவண்யா வேற என் தொல்லை தாங்காமல் நீங்க என்னை கழட்டி விட்டுட்டீங்க னு பயமுறுத்தினா? அதுல எனக்கு எதுவும் பிடிக்கல!”

      அவள் பேசப்பேச ராம்குமாருக்கே கஷ்டமாக ஆனது.

“நம்ம ரெண்டு பேருக்கும் சண்டையே இல்லை. அத நீயே பூதக்கண்ணாடி வெச்சு பெரிசாக்கி ஊர் பூரா சொல்லி அலார் பண்ணி வெச்சிருக்கே! உன்னை இப்படியே விட்டா சரி வராது. நாம உடனே வீட்டுல சொல்லி கல்யாணம் பண்ணா தான் சரி வரும்…”

      பேசிக்கொண்டே இரண்டையுமே அவளுக்கே தர “உங்களுக்கு?” என்று கேட்டவளிடம் மறுப்பாக தலையசைத்து “ நீ சாப்பிடு. வா போற வழியில எங்காவது ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு போவோம். உன்னைப் பார்த்தா தான்  பல நாளா பட்டினி கிடந்தவ மாதிரி இருக்கு!” என்று வருத்தமாக சொன்னான்.

      அவள் மெலிந்த கையைப்பிடித்து “பாரு! பிடிச்சா பென்சில் மாதிரி இருக்கு. சின்ன பாக்கெட் இப்ப மினி பாக்கெட்டா ஆயிட்டே!”

என்று கிண்டல் செய்ய வஞ்சுவுக்கு ரோசம் பொத்துக்கொண்டு வந்தது.

      “ஹான்! நான் ஒண்ணும் அவ்வளவு எல்லாம் இளைக்கல! மூணு கிலோ தான் இளைச்சிருக்கேன்!” என்று பொறுப்பாக பதில் சொல்ல ராம்குமார் சிரித்தான்.

      “எங்கெங்கே இளைச்சிருக்கேனு காட்டட்டுமா? என்றவன் அவள் கைகளைத் தொட்டு “இங்க!” அடுத்து கன்னத்தை தொட்டு “இதோ இங்க!” என்று அடுத்து அவள் இடையை பிடித்து “இதோ இங்கே! அப்புறம்?” என்று அவளை ஆராய வஞ்சுவுக்கு உலகம் மறந்து போனது.

Advertisement