Advertisement

அத்தியாயம் -16

            இவனே கூப்பிடட்டும் என்று அவளும் அவள் செய்தது ஏற்படுத்திய கடுப்பில் அவனும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளவே இல்லை.

      வஞ்சு போட்ட போஸ்டில் அவர்கள் சண்டை ஊருக்கெல்லாம் தெரிந்து போக துக்கம் விசாரிக்கும் சாக்கில் சிலர் வம்புக்கு அலைய சிலர் அக்கறையோடு அறிவுரை சொன்னார்கள். இரண்டுமே ராம்குமாருக்கு பிடிக்கவில்லை. எல்லாமே முகநூலில் கமெண்ட்ஸ் ஆக பதிவாக ராம்குமாருக்கு குறைந்திருந்த கோபம் மீண்டும் ஏறியது.

      ஆனால் வஞ்சு தன் சோகத்தை வெளிப்படையாகவே காட்டிக் கொண்டாள்.

      எப்போதும் சோகமான முகம். உடையும் ஏனோதானோ.  சரியான தூக்கமும் சாப்பாடும் இல்லாமல் ஆளும் ஒரே வாரத்தில் பாதி ஆனாள்.

      யாராவது அவளிடம் ராம்குமாரைப் பற்றி விசாரித்தால் கண்ணில் இருந்து நயாகரா தான். ஆனால் தானே போய் ராம்குமாரிடம் சமாதானம் செய்து கொள்ள மட்டும் தயாராக இல்லை.

      லாவண்யா அவளிடம் “ஏண்டி! தேவதாஸ் மாதிரி தாடி வளக்காத குறையா சுத்திட்டு இருக்கே? போய் நீயே தான் அண்ணா கிட்ட பேசினா என்னடி?” என்று கேட்டும் வஞ்சுவுக்கு அந்த எண்ணம் துளியும் இல்லை.

      “அது எப்படி? அவங்க தானே என்னைத் திட்டினாங்க? அப்ப அவங்க தான் சாரி சொல்லணும். சமாதானம் செய்யணும்…” என்று அவள் பிடியிலேயே நின்றாள்.

      இருவருக்கும் நண்பனாக இருந்த ரஞ்சித்திற்கு இப்படி அவர்கள் ஆளுக்கொரு பக்கமாக நிற்பது கஷ்டமாக இருந்தது.

அவன் தான் ஒரு காலத்தில் அவர்களை தங்களோடு நேரம் செலவிடவில்லை என்று கிண்டல் செய்தான்.

ஆனால் ஒரு அல்ப காரணத்துக்காக இப்படி இருவரும் சண்டை போட்டுக் கொண்டு விலகி நிற்பது அவனுக்கு சுத்த பைத்தியக்காரதனமாக தெரிந்தது.

தன் நண்பர்கள் கேங்கில் என்ன செய்யலாம் என்று ஆலோசனை நடத்த மணிமேகலை கூட குறைபட்டுக் கொண்டாள்.

“ஆமா டா! அவங்க ரெண்டு பேரையும் கலாச்சி நல்லா பொழுது போச்சு. இப்ப ரொம்ப போரடிக்குது…”

அவள் பேசவும் ரஞ்சித் அவள் தலையில் தட்டி “அவங்க அங்க தனியா பிச்சிட்டு நிக்கறாங்க. உனக்கு இங்க என்டர்டெய்ன்மென்ட் தேவைப்படுது. நல்லா வருவே!” என்று கண்டித்தான்.

அதற்கும் அவள் பதிலடி கொடுத்தாள்.

“ஆமாடா! அவங்களுக்கு வேற வேலையில்லை. லவ்வ சொன்னோமா! அடுத்து கல்யாணம் பண்ணோமா! நமக்கு கல்யாண சாப்பாடு போட்டோமான்னு ஒரு சமூக பொறுப்பு இருக்கா?”

அவள் பதிலில் எல்லோரும் சிரிக்க பிறகு ரஞ்சித்தே முடிவெடுத்தான்.

தன் திட்டத்தை அவர்களோடு பகிர்ந்து கொள்ள எல்லோருமே ஆதரவு தருவதாக ஒத்துக்கொண்டனர்.

அதன்படி ரஞ்சித் மாலை நாலு மணிக்கே ராம்குமாரிடம் போனான்.

“மச்சான்! இன்று பிரெண்ட்ஷிப் டேடா! அதனால அதை செலேப்ரெட் பண்ண லும்பினி கார்டன் போறோம். ஆறு மணிக்கு பார்ட்டி. நம்ம கேங் மட்டும் தான்.

இப்ப நேரா வீட்டுக்கு போய் ப்ரெஷ் பண்ணிட்டு அங்க போய்டலாம். கார்டன ஏழு மணிக்கே க்ளோஸ் பண்ணிருவாங்க. அதனால இப்ப கிளம்பினா தான் சரியா இருக்கும்.”

அவன் யோசிக்க நேரம் கொடுக்காமல் ரஞ்சித் அவசரப்படுத்த ராம்குமாருக்கே ஒரு மாற்றம் வேண்டும் போல இருந்தது.

வஞ்சு மேல் இருந்த கோபம் எல்லாம் போய் இப்போது வீம்பு மட்டுமே மிச்சம் இருந்தது.

தன் மேஜையை ஒழுங்குபடுத்திக் கொண்டே அலட்சியமாக கேட்பது போல கேட்டான்.

“என்னடா உன் ரெட்டை ஜடை தங்கச்சியும் வராளா?”

ரஞ்சித் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே “கூப்பிட்டு இருக்கேன். வருவாளா தெரியலடா! ஏன் அவ வந்தா நீ வர மாட்டியா?” என்று நக்கலாக கேட்டான்.

“சேச்சே! அதெல்லாம் இல்ல. அவ வந்தா அவ பாட்டுக்கு இருக்கப் போறா! நா பாட்டுக்கு நா இருக்கப் போறேன்!”

அவள் வருகை அவனை எந்த விதத்திலும் பாதிக்காதது போல ராம்குமார் பேச “நீ வாடா நல்லவனே!” என்று அழைத்துக்கொண்டு கிளம்பினான்.

இருவரும் வீட்டுக்குப் போய் உடை மாற்றிக் கிளம்பினர்.

ராம்குமார் பீரோவில் குடைந்து கவனமாக உடையை தேர்ந்தெடுத்தான்.

இருவரும் கேசுவல் உடை தான் அணிந்திருந்தனர்.

ராம்குமார் ஒரு காக்கி சினோஸும் கரும்பச்சை டீ ஷர்டும் அணிந்து கிளம்பினான்.

அவன் டீ ஷர்டில் ‘தேர் இஸ் நோ கெமிஸ்ட்ரி இன் மை ரிலேஷன்ஷிப்! ஒன்லி ஹிஸ்டரி!’ (There is no chemistry in my relationship. only History!)

என்று எழுதி இருந்தது.

‘ஆயிரக்கணக்கா பணம் செலவு பண்ணி லவ் ப்ரொபோஸ் பண்ணிட்டு இப்ப சாருக்கு சரித்திரமா? அதையும் பார்த்துறலாம் டா!;’ என்று ரஞ்சித் சிரித்துக் கொண்டான்.

இருவரும் அங்கே போகும் போது எல்லோருமே வந்திருந்தனர்.

வஞ்சுவும் மணிமேகலையோடு பேசிக்கொண்டிருந்தாலும் கண்கள் எதிர்பார்ப்போடு அவர்கள் வந்த வழியைத் தான் பார்த்துக்கொண்டு இருந்தது.

ராம்குமார் போல அவள் தன் மனதை மறைக்கவே இல்லை.

மணிமேகலை வந்து இன்று இந்த பார்ட்டியைப் பற்றி சொன்னதுமே அவள் கேட்ட ஒரே கேள்வி “குரு வருவாரா?” என்பது மட்டும் தான்.

அவள் ஆமாம் என்றதும் எங்கே என்ன எந்த கேள்வியும் கேட்கவில்லை.

உடனே கிளம்பி விட்டாள். அவன் வந்து விடப்போகிறான் என்று துளைத்து முன்னாலேயே மணிமேகலையை இழுத்துக்கொண்டு வந்திருந்தாள்.

இங்கும் வந்ததில் இருந்து ‘குரு எங்கே காணோம்? வருவாரா? மாட்டாரா?’ என்று தான் மணிமேகலையிடம் கேட்டுக்கொண்டே இருந்தாள்.

ஒரு கட்டத்தில் மணிமேகலை பொறுமை இழந்து “இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த பக்கமா தான் டி வருவான்! பொறுமையா இரு!” என்று பொங்கி விட அதன் பிறகு தான் வஞ்சு வாயை மூடி பார்வையை இந்த பக்கம் வைத்தாள்.

ரஞ்சித்தொடு ராம்குமார் உள்ளே நுழைய அவள் பார்வை சுற்றி இருந்தவர்களை மறந்து அவன் மேலேயே ஆர்வமாக இருக்க எல்லோரும் சுவாரசியமாக அவர்களை தான் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

ராம்குமாரும் அவளைப் பார்த்து விட்டாலும் எல்லோரும் அவர்களை ஆர்வமாக கவனிக்கும் போது தன் உணர்வுகளை காட்ட விரும்பவில்லை.

எல்லோரும் எல்லோரையும் வாழ்த்திக் கொள்ள வஞ்சு ராம்குமார் தான் தன் பக்கத்தில் வந்து வாழ்த்த வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

எல்லோருக்கும் சொல்லி விட்டு அவளை மட்டும் தவிர்த்தால் நன்றாக இருக்காது என்று “ஹாப்பி பிரெண்ட்ஷிப் டே வஞ்சு!” என்று வாழ்த்த வஞ்சுவுக்கு அதிலேயே குளிர்ந்து போனது.

“தேங்க்ஸ்! சேம் டூ யூ குரு!” என்றவள் அவள் எதிர்பார்த்தபடி அவன் பேசியதிலேயே சந்தோஷப்பட்டு அவனோடு மேலே பேச ஆரம்பிக்க ராம்குமார் கவனியாதது போல நகர்ந்து கொண்டான்.

தாங்கள் பிரிந்த இந்த சில நாட்களிலேயே அவள் இப்படி மெலிந்து இல்லை தேய்ந்து போய் இருப்பதை பார்த்து அவனுக்கு அதிர்ச்சி தான்.

இந்த பார்ட்டி முடிந்ததும் அவளை அழைத்துக் கொண்டு தனியாக பேசி தங்கள் விரிசலை சரி செய்ய வேண்டும் என்று முடிவும் செய்து கொண்டான்.

எல்லோர் எதிரிலும் தங்கள் அந்தரங்கத்தை காட்சிப்படுத்தும் விருப்பம் இல்லை.

தனியாக பேசும் போது ‘என்னடி இப்படி பண்ணி வெச்சிருக்கே!’ என்று நன்றாக திட்ட வேண்டும் என்றும் நினைத்தான்.

ஆனால் ராம்குமார் தன்னிடம் முகம் கொடுத்து பேசாமல் போனதில் வஞ்சுவுக்கு எல்லாமே இருண்டு போனது போல இருந்தது.

யாருக்காக ஆசையாக வந்தாளோ அவனே பேசவில்லை. பிறகு யார் பேசினால் என்ன?

எல்லோரும் கலகலத்து சிரிக்க வஞ்சு மட்டும் தனியே உட்கார்ந்து கொண்டாள்.

ராம்குமார் எல்லோரோடும் பேசினாலும் அவர்களின் கேலிப் பார்வையில் இருந்த கிண்டலில் அவனுக்கு வெட்கம் வந்தது.

இப்படி இவ எல்லாருக்கும் எதிரே மானத்தை வாங்கிட்டாளே? எல்லாம் ஓட்டியே காலி பண்ணிடுவாங்களே!

அவன் கவலை அவனுக்கு.

வந்தனா வந்து “வா ராம்! ஒரு செல்பி எடுத்துக்கலாம்!” என்று ராம்குமாரை அழைக்க ராம்குமாரும் பக்கத்தில் நின்றான்.

அவள் வஞ்சுவை வெறுப்பேற்ற ராம்குமார் அருகே நெருங்கி நின்று அவன் இடுப்பில் கை வைத்து அணைத்த மாதிரி நிற்க வஞ்சுவின் பார்வையில் அனல் பறந்தது.

ராம்குமாருக்கு வஞ்சுவிற்கு தங்கள் இருவருக்கும் முன்னால் நடந்தது தெரியும் என்பதே தெரியாது. அதனால் சாதாரணமாகவே நிற்க வஞ்சு ராம் குமாரையே முறைத்துக்கொண்டு இருந்தாள்.

அவள் முறைப்பில் ராம்குமாரே சற்று விலகி நின்று தன் இடுப்பில் இருந்த வந்தனாவின் கையை எடுத்து விட்டான்.

வஞ்சுவுக்கு அப்போதும் எரிச்சல் குறையவில்லை. எழுந்து சண்டைக்கு வர நடக்க அதற்குள் மணிமேகலை அவள் கையைப் பிடித்து நிறுத்தி “வாடி! கேக் கட் பண்ணப் போகலாம்” என்று இழுத்துக் கொண்டு போனாள்.

அதற்குள் ஆதி செல்பி எடுத்துக்கொண்டு இருந்தவர்களிடம் வந்து “ஏன் வந்தனா வில்லி வேலை செய்யற? நாம வந்தது இவங்கள சேர்த்து வைக்கத்தானே? பாரு! நீ செஞ்ச வேலையில வஞ்சு கோவமா போறா?”

என்று விஷயத்தை போட்டு உடைக்க ராம்குமார் சுதாரித்துக்கொண்டான்.

வந்தனா “இதுவும் அவங்க கெமிஸ்ட்ரிக்கு ஒரு காடலிஸ்ட் தான்” என்று சொல்லி சிரித்தாள்.

அவர்களின் நோக்கம் நல்லதாக இருந்தாலும் எல்லோரும் அவர்களின் அந்தரங்கத்தை எடுத்து பேசுவது ராம்குமாருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

அக்கா சொன்னது வேறு அந்த நேரத்தில் ஞாபகம் வர ராம்குமாரின் முகம் மாறியது.

எல்லோரும் சுற்றி நிற்க நடுவே ஒரு ஒயிட் பாரஸ்ட் கேக். அதில் ‘ஹாப்பி பிரெண்ட்ஷிப் டே!’ என்று எழுதி இருக்க கூடவே கோக் பெப்சி பாட்டில்கள். இன்னும் கொஞ்சம் ஸ்நாக்ஸ் வகைகள்.

முன்பும் இது போல அவர்கள் பல முறை பார்ட்டி கொண்டாடி இருக்கிறார்கள் தான்.

ராம்குமார் கவனமாக வஞ்சுவின் பக்கத்தில் நிற்பதை தவிர்த்தான்.

Advertisement