Advertisement

அத்தியாயம் -15

 

             ராம்குமாரின் எரிச்சல் எல்லாம் சிறிது நேரம் தான். அப்படியே படுத்து ஒரு தூக்கம் போட்டு எழுந்தவன் மணியைப் பார்க்க அது பத்து என்றது.

தூங்கி எழுந்ததில் நன்றாக பசிக்க எங்கே போகலாம் என்று யோசித்தான். அவன் நண்பர்கள் எல்லாம் இப்போது படம் முடிந்து அவர்கள் வழக்கமாக போகும் பார் கம் அசைவ ஹோட்டலுக்கு வந்திருப்பார்கள்.

மளமளவென்று முகம் மட்டுமே கழுவி பர்சில் பணம், கார்ட் எல்லாம் இருக்கிறதா என்று பார்த்தவன் உடனே கிளம்பி விட்டான்.

கோபத்தில் வஞ்சுவை திட்டியதை அவன் எப்போதோ மறந்து விட்டான்.

அதனால் கிளம்பும் போது ஹாய் சின்ன பாக்கெட்! என்ன பண்றே? என்று லவ் ஸ்மைலியை தூது விட அது நேராக வஞ்சுவின் மொபைலில் போய் விழுந்தது.

அவன் தான் மறந்தானே தவிர வஞ்சு அதிலேயே நின்று போனாள். அவன் இவ்வளவு கோபமாக தன்னிடம் பேச தான் ஏதாவது தவறு செய்தோமா?

 வீட்டில் ஏதும் தங்கள் கல்யாணத்திற்கு மறுப்பு சொல்லிட்டாங்களா அல்லது உடம்பு சரியில்லையா என்று புரியாமல் தவித்தவளுக்கு மண்டை வெடித்து விடும் போல இருந்தது.

அதை விட அவள் எவ்வளவோ அட்டகாசம் செய்த போதும் இது வரை அன்பாக மட்டுமே பேசியவன் இன்று காரணமேயில்லாமல் திட்டியதை அவளால் தாங்கவே முடியவில்லை.

அவன் திட்டியதில் இருந்து இந்த நான்கு மணி நேரமாக அதையே நினைத்து நினைத்து என்னெனவோ சிந்தித்து ஏகத்துக்கும் குழம்பி அழுது என்று தன்னை வருத்திக் கொண்டு இருந்தவளுக்கு இப்போது கோபம் மூக்கு நுனியில் இருந்து கை விரல் நுனிக்கு குடியேறியது.

காரணமேயில்லாமல் அவளைத் திட்டியதோடு இல்லாமல் அதற்கு ஒரு சாரி கூட சொல்லாமல் ஏன் அதை சுத்தமாக மறந்து விட்டு சர்வ சாதாரணமாக பேசியதை தான் அவளால் தாங்கவே முடியவில்லை.

அவன் அனுப்பிய குறுஞ்செய்தியை பார்த்தும் பதில் சொல்லாமலே விட அப்போதாவது அவன் தன்னை அழைத்து என்ன என்று விசாரிப்பான் என்ற அவளின் நினைப்பில் மண் விழுந்தது.

அவளுக்கு மெசேஜ் அனுப்பியதோடு அதை மறந்த ராம்குமார் அவன் நண்பர்கள் வழக்கமாக போகும் அந்த ஹோட்டலுக்கு பைக்கில் விரைந்தான்.

அவன் கணித்த மாதிரியே அவன் போகவும் அவர்கள் படம் முடிந்து வரவும் சரியாக இருந்தது. அங்கே அவனைப் பார்த்ததும் அவர்கள் புருவம் உயர்ந்தாலும் யாரும் எதுவும் கேட்கவில்லை.

வழக்கம் போல அவர்களுக்கு பிடித்த உணவும் பானமும் ஆர்டர் செய்தவர்கள் பேச்சில் உலகத்தையே ஒரு ரவுண்டு சுற்றி வந்தனர்.

அவர்களின் கம்பெனி வதந்திகள், விளையாட்டு, அரசியல், பார்த்த சினிமா, புதிதாக வந்த ஆப் (app), வாட்சப்பில் வந்த செய்திகள் என்று பேச விஷயத்திற்கா பஞ்சம்?

முழுக்க முழுக்க ஆண்களின் இரவாக பொழுதைக் கழித்து விட்டு எல்லோரும் மீண்டும் வீட்டுக்கு வந்த போது மணி இரண்டு.

ராம்குமாரைப் பொறுத்தவரை எல்லாம் சரியாகி விட நண்பர்களுடன் பல நாட்கள் கழித்து பேச்சு, சிரிப்பு என்று பொழுது போக்கியதும் பீர் அடித்த மயக்கமும் சேர வஞ்சுவின் நினைவே இல்லை.

சுகமாக படுத்து உறங்கி விட்டான்.

ஆனால் வஞ்சு? அவளால் அவள் குருவின் அலட்சியத்தை தாங்கவே முடியவில்லை. அவளால் வேறு என்ன செய்ய முடியும்?

      அவளே அவனுக்கு போன் போட்டு சண்டை போடலாம் என்றாலோ அவள் ரோஷம் தடுத்தது. தப்பு அவன் மேல் என்பதால்  முதல் அடியை அவன் தான் எடுத்து வைக்க வேண்டும் என்ற பிடிவாதம்.

      அவளால் முடிந்தது லாவண்யாவுக்கு போன் செய்து அவள் தூக்கத்தையும் கெடுத்தது தான்.

      லாவி! இந்த குரு இப்படி செய்வாங்கன்னு கொஞ்சம் கூட நினைக்கல தெரியுமா? என்னைப் போய் அதுவும் நான் எதுவுமே செய்யாதப்ப அவ்வளவு திட்டிட்டாங்க. இனிமே அவங்க கிட்ட நான் பேசவே போறதில்லை.

      ப்ரேக் அப் தான். நீயே சொல்லுடி. நா அவங்க மேல எப்படி பைத்தியமா இருக்கேன்? அவங்கள பத்தியே தான் நினைச்சிட்டு இருக்கேன். ஆனா அவங்க?

      நாம திட்டினமே ஒரு புள்ளைய? சமாதானம் செய்வோம்னு ஒரு எண்ணமே இல்ல. சும்மா போற போக்குல எப்படி இருக்கேன்னு ஒரு மெசேஜ் போட்டதோட சரி.

      ஏதுடா இவ அந்த மெசேஜ் பாத்தும் பதில் சொல்லாம இருக்காளே? போன் போட்டு என்னனு விசாரிப்போம்னு கொஞ்சமாச்சும் அக்கறை இருக்கா?

      அப்போலருந்து மொபைலை கையில வெச்சிட்டு தா உக்காந்து இருக்கேன். ஒரு போன் கூட பண்ணல. தெரியுமா?

      ஒரு வேளை அவங்க என்னை இனி வேண்டாம்னு விட்டுட்டாங்களோ?

      அப்படி மட்டும் செஞ்சா நா என்னடி செய்ய? அவங்க இல்லன்னா கண்டிப்பா நா செத்துருவேன். ஏய் பிசாசே? அப்போலருந்து ஒருத்தி பொலம்பிட்டு இருக்கேனே? ஒரு வார்த்தை ஆறுதலா சொல்றியா? நீயெல்லாம் ஒரு பிரெண்டாடி?

      அவள் பேச வாய்ப்பே தராமல் தான் மூச்சு விடாமல் கடந்த நான்கு மணி நேரமாக யோசித்ததையெல்லாம் கொட்டி விட்டு அவளிடம் சண்டைக்குப் போனாள் வஞ்சு.

      ஏற்கனவே அன்று ப்ராஜெக்ட் டெட்லைன் என்று மண்டையை பிய்த்து கொண்டு வேலை செய்து களைத்துப் போய் படுக்கையில் விழுந்தவளை மெனக்கெட்டு அழைத்து மூச்சே விடாமல் பேசி விட்டு மேற்கொண்டு அவளையே திட்டியவள் மேல் லாவண்யாவுக்கு கொலைவெறியாக கோபம் வந்தது.

      ஏய்! ஏண்டி இப்படி அர்த்தராத்திரியில் போனைப் போட்டு என் உசிர வாங்கற? இப்படி செஞ்சு தான் அண்ணா உன்ன திட்டி விட்டாங்களோ என்னவோ? சொன்ன மாதிரி பிரேக்அப் ஆனாலும் ஆச்சரியம் இல்லை…

      லாவண்யா அவளுக்கு வந்த எரிச்சலில் பேச அதைக் கேட்ட வஞ்சுவுக்கு அப்போது தான் சற்று நின்றிருந்த கண்ணீர் மறுபடி வழிய ஆரம்பித்தது.

      தன் ஆருயிர் தோழி தனக்கு ஏதாவது வழி சொல்வாள் என்று போன் போட அவளோ இவள் தலையில் இடியைப் போட்டிருந்தாள்.

      குரு இல்லாமல் அவளுக்கு எதிர்காலமா? நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை அவளால்.

      எதோ ஒரு கோவத்தில் குருவை விட்டு பிரிந்து விடுவதாக சொல்லி விட்டாளே தவிர அவள் மனதில் அப்படி ஒரு எண்ணம் துளிக்கூட இல்லை.

      இப்போது லாவண்யா அவள் பயத்தை உறுதி செய்ய அவளுக்கு பயத்தில் சொரேர் என்று இருந்தது.

      லாவண்யா! என்னடி நீ…? நீ நிஜமா தான் சொல்றியா?

      வஞ்சு கலங்கிப் போய் நலிந்த குரலில் கேட்கவும் அது வரை தூக்கம் தொலைந்த கடுப்பில் இருந்த லாவண்யாவுக்கு தோழியின் மேல் பரிதாபம் பொங்கியது.

      ஏண்டி இப்படி தப்பு தப்பா யோசிக்கிற? அண்ணா எதோ ஒரு எரிச்சலில் அப்படி சொல்லி இருப்பாங்க. மெசேஜ் போட்டாங்க தானே? நீ பதில் போட்டிருந்தா எல்லாம் சரியா போயிருக்கும். அதை விட்டு நீயே ஏன் எதையோ யோசிச்சு உன்னை குழப்பிக்கறே?

      இப்போது லாவண்யாவின் சமாதானம் கூட வஞ்சுவை தேற்றவில்லை.

      அதெப்படி என்னை அவங்க திட்டலாம்? நா பதில் சொல்லலன்னதும் என்னமா கோவமா என்று விசாரிச்சு இருக்கணும் தானே? 

நீ என் பிரெண்டா? அவங்க பிரெண்டா? என்னை நினைச்சு பாத்தியா நீ?

அவள் மாற்றி மாற்றிப் பேசியதில் மலை இறங்கி இருந்த லாவண்யா மறுபடி மலையேறினாள்.

ஏண்டி அன்னிக்கி போல ஏதும் குடிச்சிருக்கியா? குடிகாரனை மாதிரி மாத்தி மாத்தி பேசி என் உயிரை வாங்கற? உனக்கு இப்ப என்ன தான் வேணும்? சொல்லித் தொலை

லாவண்யா வள்ளென்று விழ அப்போது திடீரென உதித்த யோசனையில் வஞ்சு நீ எனக்காக அவங்க கிட்ட பேசறியா? என்று கேட்டாள்.

ஓ மகாராணி கோபத்துல இருக்காங்கன்னு அந்த மகாராஜா கிட்ட இந்த சேடி போய் தூது சொல்லணுமாம். இதை ராத்திரி மூணு மணிக்கி எழுப்பி சொல்றா ஒருத்தி?

ஊருல அவ அவ ஏகப்பட்ட பிரெண்ட்ஸ் வெச்சு சந்தோஷமா சுத்தறா! நா காலேஜ் சேந்த அன்னிக்கி தெரியாத்தனமா உன் பக்கத்துல உக்காந்ததுக்கு நீ நல்ல வேலை குடுத்திருக்கே. வைடி போனை….!

 லாவண்யா போனை வைத்து விட்டாலும் வஞ்சுவுக்கு அவள் தோழியை பற்றி நன்றாகத் தெரியும்.

நிச்சயம் தனக்காக ராம்குமாரிடம் தூது போவாள் என்று நம்பிக்கையோடு படுத்தவளுக்கு ராம்குமார் ஏன் தன்னிடம் கோபித்துக் கொண்டான் என்று புரியாமல் மண்டை வெடித்தது.

இருந்தும் அவன் தன்னை எப்படி திட்டலாம் என்று அந்த விஷயத்தையே இறுகப் பிடித்துக் கொண்டு அதிலேயே நின்றவள் தன்னையும் அறியாமல் அப்படியே உறங்கி விட்டாள்.

Advertisement