சில நிமிடங்கள் வரை அமைதியாக இருந்த வஞ்சுவிற்கு ராம்குமாரின் மலர்ந்த முகமும் புன்னகை தவழும் உதடுகளும் உண்மையை சொன்ன போதும் அதை அவன் வாய்மொழியாக வலிக்க வலிக்கக் கேட்டு உறுதி படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது.
“வந்து….. வந்து பொண்ணு பாக்க போனீங்களே? என்ன ஆச்சு?”
‘வேண்டாம் என்று சொல்லி விட்டேன் என்று சொல்லேன்’ என்ற தவிப்பு அவள் மெலிந்த குரலில் தெளிவாகத் தெரிந்தது.
“அது…..” என்று ஆரம்பித்த ராம்குமார் அவள் முகத்தை பார்த்ததும் சொல்ல வந்ததை அப்படியே நிறுத்தினான்.
கண்களில் காதலைத் தேக்கி தன்னை ஆவலோடு பார்த்தவளை பார்க்க பார்க்க அவனுக்குள் அவ்வளவு சந்தோசம்.
தன்னை உயிராக காதலிக்க ஒருத்தி இருக்கிறாள் என்பதே அவ்வளவு நிறைவைத் தர அதில் குஷியானவன் இன்னும் கொஞ்ச நேரம் அவளோடு விளையாட முடிவு செய்தான்.
அதாவது அவர்கள் போக இருக்கும் ஸ்பெஷல் இடத்துக்கு போகும் வரை.
அங்கே போனதும் அவன் சின்ன பக்கெட்டின் ரியாக்ஷனை கற்பனை செய்தவனுக்கு உற்சாகம் வர ஒரு குறும்புப் புன்னகையோடு பேச்சைத் தொடர்ந்தான்.
“ஆமா! என் உட்பிய பிக்ஸ் பண்ணியாச்சு….”
வஞ்சுவுக்கு யாரோ அவளை உயிரோடு குழிக்குள் புதைத்தது போல அந்த காரில் மூச்சடைத்தது.
“ஓ…..” என்ற அந்த ஒரு வார்த்தை அவள் உயிர் போய் வெறும் கூடான நிகழ்வை சொல்ல ராம்குமார் அதை கவனியாதவன் போல பேச்சைத் தொடர்ந்தான்.
“என் சின்னப் பாக்கெட்டும் ஐடி பீல்ட் தான். இங்க பெங்களூருல தான் வேலை பாக்கறா!”
‘அதுக்குள்ள செல்லப்பேர் வெக்கிற அளவுக்கு நெருங்கிட்டாங்க போல!’
வஞ்சு வாடிய முகத்தை அவனிடம் மறைக்க தலையைக் குனிந்து கொண்டாள். அவளையும் மீறி கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் மடி மேல் இருந்த அவள் கையில் விழுந்தது.
இனி என்ன என்று யோசிக்கக் கூட மூளை வேலை நிறுத்தம் செய்ய எங்கே போகிறோம் என்று கேட்க விருப்பம் இல்லாமல் தன் கைகளை வெறித்தபடி உட்கார்ந்து இருந்தாள்.
ஒரு வேளை அவன் உட்பியை சந்திக்கத் தான் கூட்டிப் போகிறானோ என்று தோன்ற பார்க்காமலே அவளைப் பிடிக்காமல் போனது.
லாவண்யா சொன்னது சரி தான் போல! ஏற்கனவே அந்தஸ்திலும் வசதியிலும் அவனுக்கு கீழே தான் என்பதோடு இப்போது தான் குடித்ததால் தான் அவனுக்கு தன்னைப் பிடிக்காமல் போனதோ என்று தோன்றியது.
ஆனால் இனி என்ன விளக்கி என்ன பயன்?
அன்று தான் குடித்ததைப் பற்றியோ எப்படி இருக்கே என்று அவள் நலனைப் பற்றியோ ஒரு வார்த்தை கூட கேட்காமல் தன் சந்தோஷத்தை உற்சாகமாக பகிர்ந்து கொண்டவனை வெறித்தாள்.
கார் அப்போதே நின்று விட எங்கே இருக்கிறோம் என்றே கவனிக்க விருப்பம் இல்லாமல் இயந்திர கதியில் கதவைத் திறந்து இறங்கினாள்.
நிமிர்ந்து பார்த்த போது தான் தெரிந்தது. இது அவள் முதல் முறை பார்ட்டிக்கு வந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் அல்லவா?
இங்கே வரும் போதெல்லாம் அவள் தலையில் இடி விழுகிறதே என்று நொந்து போய் நினைத்தவளுக்கு அப்படியே திரும்பி வீட்டுக்கு போய் தன் அறையில் கதவை அடைத்துக் கொண்டு மாசக்கணக்கில் அழுது தீர்க்க வேண்டும் போல இருந்தது.
ராம்குமார் காரில் இருந்து இறங்கி அவள் அருகே வந்து நின்று அவள் முகத்தில் கண்ணாடி போல் தெரியும் உணர்வுகளை சிறு புன்னகையோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
வஞ்சு இறுகிய தொண்டையை செருமி சரி செய்து கொண்டு சின்ன குரலில் “இங்க ஏன் வந்திருக்கோம்….? ஏதாவது பார்ட்டியா” என்று கவனமாக அவள் குருவைத் தவிர்த்து விட்டு கேட்டாள்.
அது அவள் ஆசையாக அவனுக்கு வைத்த பெயர். அதை சொல்லி கூப்பிட இனி அவளுக்கு உரிமை ஏது?
“ஆமா! பர்த்டே பார்ட்டி. அதுக்கு முன்ன என் பியான்சேவ நீ மீட் பண்ண வேண்டாமா? வா! காட்டறேன்!”
அவள் கையைப் பிடித்து முன்னால் இழுத்தான். ஏற்கனவே அவன் சொன்னதையே இன்னும் ஜீரணிக்க முடியாமல் தவித்தவளால் இப்போது அவன் உட்பியை சந்திக்க முடியும் என்று தோன்றவில்லை.
இருக்கும் வேகத்தில் அவளை கொலை செய்யக் கூட வாய்ப்பு இருக்கு என்று தோன்ற “பரவால்ல! மத்த பிரெண்ட்ஸ் மீட் பண்ணும் போது நானும் பாத்துக்கறேன். இல்ல உங்க என்கேஜ்மேன்ட்ல….” என்று சொல்ல வரும் போதே குரல் உடைய அப்படியே நிறுத்தி விட்டாள்.
ராம்குமாருக்கே இப்போது அவள் படும் பாட்டை பார்த்து கஷ்டமாக போய் விட்டது.
“வந்து பாரு!” என்று அவளை அழைத்துப் போனவன் ஒரு அறையின் முன்னால் நின்று கதவைத் திறந்து “உள்ளே தான் இருக்கா! போய் பாரு!” என்று அவளை முன்னால் அனுப்பி பின்தங்கினான்.
அவன் உத்தரவை மீற முடியாமல் வஞ்சு தன்னை ஒரு ஒரு அடியாக முன்னோக்கி கொண்டு சென்றாள். இப்போது அவள் முகத்தை பார்க்கும் ஆவலில் செல்ல உள்ளே ஒருவரும் இல்லை.
எங்கு நோக்கினும் இருந்த கண்ணாடியில் அவள் முகமே தெரிய சில நொடிகளிலேயே ராம்குமார் சொன்னது புரிந்தது.
அப்படியே சிலையாக நின்றவளை ராம்குமார் “என் பியான்சிய மீட் பண்ணிட்டியா?” என்று பின்னால் இருந்து கேட்க திரும்பியவள் ஒரே தாவலில் அவனை பாய்ந்து அணைத்தவள் அவனைக் கட்டிக்கொண்டு ஒரே அழுகை.
ஒரு வருடமாக சொல்லாமலே வைத்த காதலும் ஒரு வாரமாய் பட்ட தவிப்பும் இப்போது வரும் வழி நெடுக அவன் கொடுத்த டென்ஷனும் சேர அவளையும் மீறி அழுகை வந்து கொண்டே இருந்தது.
தன்னை அணைத்துக் கொண்டு அழுதவளை ராம்குமார் சில நொடிகள் கவனம் ஈர்க்க முயன்று அவள் திரும்பாததால் நெஞ்சளவே இருந்தவளை தன் உயரத்திற்கு தூக்க வஞ்சுவின் கரங்கள் இப்போது அவன் கழுத்தை இறுககிக் கொண்டது.
தன் முகத்தை அவன் முகத்தோடு ஒட்டிக் கொண்டு மறுபடியும் அவள் அழுகையைத் தொடர ராம்குமார் சத்தமாக சிரித்து விட்டான்.
“ஏய் சின்ன பாக்கெட்! என்ன இது பக்கெட் பக்கெட்டா வாட்டர கொட்டறே? பாரு மேலே எல்லாம் நனையுது! நா உண்மைய சொன்னதும் நீ கேட்ட மாதிரி என்னை இறுக்கி அணைச்சு ஒரு உம்மா குடுப்பேன்னு பார்த்தா அப்போ பிடிச்சு அழுதுட்டு இருக்கே க்ரை பேபி….?”
அவன் செல்ல அழைப்பில் தன் அழுகையை நிறுத்திய வஞ்சு கண்ணீர் இன்னும் கண்களில் இருந்த போதும் சந்தோஷமாக சிரித்தாள்.
“இது காதல்! என் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க வந்த அழுகை குரு!” என்று குணா பட டயலாகை அதே போல சொல்ல ராம்குமார் சத்தம் போட்டு சிரித்தான்.
அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் சிறு பார்ட்டி ஹால் அது. அங்கே அவர்கள் மட்டுமே இருக்க அந்த சுதந்திரம்.அவர்களை நாகரீகம் பார்க்கத் தேவையில்லாமல் நெருங்க வைத்தது.
நடுவே ஒரு டேபிளில் பல கேசரால்களில் உணவு இருக்க மேஜை மேல் ஒற்றை மெழுகுவர்த்தி ஸ்டாண்டில் எரிந்தது.
ராம்குமார் ஒரு கையால் அவளைத் தாங்கிக் கொண்டு அவள் கண்களை தன் கைக்குட்டையால் துடைத்தான்.
அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டே வாட்டமாக முகத்தைக் காட்டினாள் வஞ்சு.
நிதானமாக அவள் முகத்தை துடைத்து விட்டவன் “இந்த ஒரு வாரத்துல ரொம்ப இளைச்சிட்டே நீ! ரொம்ப பயந்துட்டியா?” என்று பரிவாக சொன்னான்.
வஞ்சுவின் உடல் வாகே ஒல்லி தான் என்றாலும் இப்போது எலும்பெடுத்து தெரிந்தாள்.
வஞ்சு அவன் தோளில் உரிமையாக சாய்ந்து கொண்டவள் “உயிரே போய்டுச்சு. இதுல லாவண்யாவும் வந்தனாவும் வேற ரொம்ப பயமுறுத்தி விட்டாங்க.” என்று சாவகாசமாக கதை பேசினாள்.
அவள் ஆள்காட்டி விரல் அவன் டீஷர்ட்டில் இருந்த ஐ அம் ஆல்வேஸ் யுவர்ஸ் என்ற வார்த்தைகளை தடவியது.
அவள் செய்ததை குறும்போடு பார்த்த ராம்குமார் “ஒரு வயசுப்பையன எங்க எல்லாம் தொடர நீ? இதே நாங்க செஞ்சா சும்மா விடுவியா?” என்று கிண்டலாக கேட்க வஞ்சு அவன் கேள்வியில் ‘ஞே’ என்று விழித்தாள்.
இப்படியெல்லாம் குரு பேசி அவள் கேட்டதே இல்லை. அதோடு இந்த நெருக்கம் இப்போது லேசாக கூச்சத்தை தர மெல்ல அவன் பிடியில் இருந்து நழுவி இறங்கினாள்.
தன் கூச்சத்தை மறைக்க “ரொம்ப பசிக்கிது! சாப்பிடலாமா?” என்று பேச்சை மாற்ற ராம்குமார் மேலே தன் பேச்சைத் தொடராமல் அவளை சாப்பாடு இருக்கும் மேஜைக்கு அழைத்துச் சென்றான்.
இருவர் மட்டுமே அமரும் அந்த மேஜையில் எதிர் எதிரே நாற்காலிகள் இருந்தன.
ராம்குமார் ஒரு புறம் போக வஞ்சு எதிர் நாற்காலியில் அமரப் போனாள்.