Advertisement

அதுக்கு அப்புறமும் அவனைக் கெஞ்ச நான் முட்டாளா என்ன? அதான் போடான்னு விட்டுட்டேன். அவன் நம்ம லவ்வுக்கு ஒரத் இல்ல வஞ்சு. கூட இருக்கும் வரை அவனை யூஸ் பண்ணிட்டு போய்டணும்.
அது தான் அவனுக்கு சரி! போடான்னு போவியா?
வந்தனா என்னவோ சமாதானம் தான் சொன்னாள். ஆனால் அவள் சொன்னதில் மற்றதெல்லாம் வஞ்சுவின் காதல் மனதிற்கு கேட்கவில்லை.
அப்ப என்னையும் வேணாம்னு சொல்லிடுவானா என்ற பயம் இன்னும் அதிகம் ஆனது. இனி அவன் இல்லாமல் இருக்க முடியுமா?
இந்த ஒரு வாரமும் அவளால் வேலையில் கவனம் செலுத்தவே முடியவில்லை. எப்போதும் டெலிவரியை சரியாக முடித்து விடுபவள் இந்த முறை திணற ரவி ப்ரீத்தி எல்லோருமே ஆச்சரியமாக பார்த்தனர்.
எல்லோர் கவனமும் தன் பக்கம் திரும்புவதை பார்த்து அவர்கள் என்ன ஏது என்று நோண்டுவதை தவிர்க்க முயன்று மனதை வேலையில் செலுத்தி எப்படியோ ஒப்பேத்தினாள்.
ஆனால் உணவும் உறக்கமும் பிடிக்காமல் போக ஒரே வாரத்தில் ஓவென்று ஆகியிருந்தாள்.
புதிய உடை கூட லூசாக இருக்க ஏற்கனவே மெலிந்த உடல் ஒட்டடை குச்சி ஆனது.
அவள் ஆதங்கத்தை எல்லாம் முகநூலில் கவிதையாக வழக்கம் போல எழுத அதற்கும் ராம்குமாரிடம் இருந்து எந்த எதிரொலியும் இல்லை.
உன் வானில் நான்
ஒரு நிலவு என்று நினைத்தேன்!
இப்போது தெரிகிறது நான் எரி(றி) நட்சத்திரம் என்று!
எறிந்து விட்டாய்
எரிந்து கொண்டிருக்கிறேன் நான்!!
 
எப்போதும் லவ் ரியாக்ஷன் போட்டு சூப்பர் என்றோ லவ் ஸ்டிக்கரோ போடுபவன் இந்த ஒரு வாரமாக கண்டுகொள்ளாமல் இருக்க வந்தனா சொன்னது தான் அவளுக்கு நினைவு வந்தது.
அவன் ஆன்லைனில் இருப்பதும் மற்றவர்களின் போஸ்டுக்கு கமெண்ட்ஸ் போடுபவன் தன்னை மட்டும் ஒதுக்குவதும் புரிந்தது.
இனி தன்னிடம் பேசவே மாட்டானோ? முகம் திருப்பிப் போவானா என்று மனம் அதிலேயே உழன்றது.
எப்படியோ ஒரு வாரம் கடக்க ராம்குமார் மறுபடி ஜாயின் செய்யும் நாள் இதோ இன்று.
     ராம்குமார் இன்று தான் லீவு முடிந்து வேலைக்கு வருவேன் என்று அவள் லூசுத்தனமாக உளருமுன் சொல்லியிருந்தான்.
    அதனால் காலையில் இருந்தே ஒரு பதட்டம். அன்று எதோ ஒரு அசட்டுத் துணிச்சலில் சொல்லி விட்டாளே தவிர  இந்த ஒரு வாரமாய் தன் முட்டாள் தனத்தை நொந்து கொள்ளாத நேரமில்லை.
      ஒரு வேளை அவன் சொன்ன மாதிரியே வீட்டில் பார்த்த பெண்ணை ஓகே சொல்லி விட்டானோ?
      அந்த விஷயத்தை சொல்ல தான் தன்னை தனியாகக் கூப்பிடுகிறானோ?
      பேசாமல் வாயை மூடிக்கொண்டு இருந்திருந்தால் அவனிடம் மரியாதையாவது மிஞ்சி இருக்கும் என்று ஒரு மனம் சொல்ல அதெப்படி அவன் இன்னொரு பெண்ணை கல்யாணம் பண்ணுவதை பார்த்துக்கொண்டு பேசாமல் இருக்க முடியும் என்றோ எதிர்குரல் எழுந்தது.
      இப்படி மனதுக்குள்ளேயே போராடி ஓய்ந்தவளை தான் ராம்குமார்  பார்த்தான்.
      அந்த பெரிய கண்களில் மட்டும் உயிர் ஒட்டிக்கொண்டிருக்க ஒரே வாரத்தில் ஓய்ந்து போனவளை பார்த்து முதலில் திகைத்துப் போனான்.
      சின்ன பாக்கெட் என்ன இது ரொம்ப சின்ன பாக்கெட் ஆகிட்டே!
      அவனைப் பார்த்த அந்த முதல் நொடியில் அவள் பார்வையில் தெரிந்த அந்த சந்தோஷம்! ஆர்வம்! பயம்! எல்லாம் கலந்த கலவை!
      அங்கேயே அவளை அள்ளி நெஞ்சோடு அணைத்துக்கொண்டு தன் காதலை சொல்ல மனம் பரபரத்தாலும் எல்லோரும் இருக்கும் அந்த இடத்தில் அதற்கு வாய்ப்பில்லை என்று அறிவு உணர்த்தியது.
      நின்றால் எங்கே தன்னையும் மீறி விடுவோமோ என்று விடுவிடுவென தன் காபினுக்கு போனான். வாட்சப்பில் மாலை ஆறு மணிக்கு அவளை அவள் வீட்டில் சந்திப்பதாக குறுஞ்செய்தி அனுப்பினான்.
       அவசர வேலைகளை மட்டும் பார்த்து விட்டு ஐந்து மணிக்கே கிளம்பியவன் ரஞ்சித்தின் சந்தேகப் பார்வையும் கண்டு கொள்ளவில்லை.
      அவனோடு தங்கியிருக்கும் சுந்தரிடம் மட்டுமே கார் இருக்கும். இன்று அவளோடு போக நினைக்கும் இடத்துக்கு பைக்கில் போனால் சரி வராது என்று தோன்ற சுந்தரிடம் காரணம் சொல்லாமலே காரை கடன் வாங்கினான்.
      குளித்து ஒரு கிரே ஜீன்சும் கருநீலத்தில் கிரே கோடு போட்ட ரவுண்டு நெக் டிஷர்டும் அணிந்தான். முன் ஒரு முறை வஞ்சு இந்த உடை அவனுக்கு நன்றாக இருப்பதாக சொன்னதால் வந்த விளைவு.
      கண்ணாடி முன் நின்று தலை வாரும் போது தான் ஏன் இந்த டீஷர்ட் அவளுக்குப் பிடித்தது என்று புரிந்தது.
      முன்னால் ஐ அம் ஆல்வேஸ் யூவர்ஸ் டார்லிங்! என்று எழுதி இருந்தது.
      சிறு புன்னகையுடன் தயாராகி வெளியே வந்தவன் என்னோட லவ்வு பண்ணு புஜ்ஜி என்று விசிலடித்தபடி காரை எடுத்தான்.
      வஞ்சு அவன் கிளம்பிப் போவதை பார்த்துக்கொண்டு தான் இருந்தாள். இப்போதும் அவளிடம் வந்து கிளம்பலியா என்று கேட்காமல் அவன் போக்கில் போனவனை பார்த்து இன்னுமா நீ நம்பிக்கொண்டு இருக்கிறாய் என்று மனம் இடித்தது.
      எப்போதும் அவன் சொன்ன சொல்லைத் தவறாமல் இருந்தே பழகி இருந்ததால் பின்னாலேயே அவளும் கிளம்பினாள்.
      பொதுவாக அவனை பார்க்கும் போதெல்லாம் தன் தோற்றத்தில் அதிக கவனம் செலுத்துபவளுக்கு இன்று எதிலும் மனம் செல்லவில்லை.
      நிச்சயம் அவன் நிச்சய செய்தியை சொல்லத் தான் கூப்பிடுகிறான் என்றே தோன்ற இருந்தாலும் வரவில்லை என்று சொல்லவோ போகாமலே இருக்கவோ துணிவும் இல்லை.
      போட்டிருந்த வெளிர் பிங்க் நிற குர்தி வெள்ளை லெக்கின்சோடு முகம் மட்டும் சோர்வைப் போக்க கழுவியவள் அப்படியே கிளம்பி விட்டாள்.
சொன்னபடி சரியாக ஆறு மணிக்கு அவள் வீட்டு வாசலில் காரை நிறுத்திய ராம்குமார் தான் வந்ததை அறிவிக்க ஹார்னை அழுத்தினான்.
      வஞ்சு தயாராகவே இருந்ததால் உடனே வெளியே வர ராம்குமாரின் பார்வை முதல் முறையாக அவளை பார்த்த பார்வையில் உரிமை இருந்தது.
      கண்கள் அவளை உச்சி முதல் பாதம் வரை வருடியது.
      அதுவரை தோழியாக கண்ணியமாக மட்டுமே அவளைப் பார்த்தவன் இப்போது அவளைத் தன்னவளாக பெண்ணாக பார்த்தான்.
      இப்போதும் அந்த நீண்ட கூந்தல் முன்னால் லேசாக கலைந்து நெற்றியில் விழ அவள் கோலிகுண்டு கண்கள் வேறெங்கோ வெறிக்க வந்து கொண்டிருந்தாள்.
      சின்ன முகத்துக்கேற்ற குட்டி நாசி, செப்பு உதடுகள். மெலிந்த தேகம். அவள் அணிந்திருந்த ரோஸ் நிற குர்தி அவளுக்கு பொருத்தமாக இருப்பது போல தோன்ற அவன் பார்வை உரிமையாக அவள் முகத்தை விட்டு கீழே இறங்கியது.
      முழுவதுமாக அவளைப் பார்த்து ரசித்துக் கொண்டே கிட்டே வர காத்திருந்தான்.
      வஞ்சு கார் அருகில் வந்ததும் தயங்கி நின்றாள். அவன் பக்கத்தில் உட்கார முன்பாவது நட்பாவது இருந்தது. இப்போது அதுவும் போக எங்கே உட்கார என்று தயங்கினாள்.
      ராம்குமார் ஒரு சிறு புன்னகையுடன் முன்னால் திறந்து விட அவனைப் பார்க்காமலே அவன் பக்கத்தில் அமர்ந்தாள்.
      ராம்குமாரின் பார்வை இன்னும் அவள் மேலிருந்து நகராமல் இருக்க அவள் பார்வையோ மடியில் இருந்த அவள் பை மேல் இருந்தது.
       அதுவும் அவன் பார்வை என்னவோ அனுதாபமாக தோன்ற நிமிர்ந்தால் அழுது விடுவோமோ என்று வஞ்சுவின் தலை நிமிரவே இல்லை.
      இரண்டு நிமிடங்களாகியும் கார் கிளம்பாமல் அப்படியே இருக்க ராம்குமார் வஞ்சுவிடம் இருந்து முதல் வார்த்தையை எதிர்பார்த்தவன் வஞ்சு! என்று அழைத்தான்.
      அவன் அழைப்பில் அவள் கண்கள் பையை விட்டு எதிர்பார்ப்போடு அவன் முகம் பார்க்க ராம்குமார் விண்டோ க்ளோஸ் பண்ணு! ஏசி போடப் போறேன்! என்றதில் சப்பென்று போனது. அதே நேரம் ஆசுவாசமும் கூட.
      அமைதியாக அவன் சொன்னதை செய்ய கார் கிளம்பி சாலையில் விரைந்தது.
      ராம்குமாரின் பார்வை அவ்வபோது வஞ்சுவைத் தொட்டுச் செல்ல வஞ்சுவோ அவனைத் தவிர எல்லா இடத்தையும் பார்த்தாள்.
      எப்போதாவது தான் இது போல இவர்கள் மட்டும் வரும் சந்தர்ப்பம் கிடைக்கும். அப்போதெல்லாம் வஞ்சு வாய் மூடாமல் பேசிக்கொண்டு வருவாள்.
      இன்று அவள் அமைதியாக இருக்க ராம்குமார் காரில் இருந்த மியூசிக் பிளேயர் போட்டு விட்டான்.
       என் காதல் சொல்ல நேரமில்லை!
            உன் காதல் சொல்லத் தேவையில்லை!
      நம் காதல் சொல்ல வார்த்தையில்லை!
            உண்மை மறைத்தாலும் மறையாதடி!
      அவர்கள் இருவரோடு அவர்களின் காதலும் அந்த காரில் மௌனமாய் பயணித்தது!
 
      பிரெண்ட்ஸ்! இதோட அடுத்த பார்ட் ரொமான்ஸ் வரணும்! கொஞ்சம் ரூம் போட்டு யோசிச்சிட்டு இந்த வீக் எண்டுக்குள் வந்திர்றேன்!

Advertisement