Advertisement

அத்தியாயம் –10
ஊருக்கு போனதில் இருந்து ஒரு வாரமாக தொடர்பே இல்லாமல் இருந்தவன் இன்று மாலை ஐந்து மணிக்கு சந்திக்கலாம் என்று மெசேஜ் அனுப்பியதும் வஞ்சுவிற்கு நிலை கொள்ளவில்லை.
இந்த ஒரு வாரமாக அவள் பட்ட பாடு! இதுவரை அவன் அவளோடு பேசவில்லை என்று கலங்கித் தவித்தவள் இப்போது திடீரென பேசுவோம் என்று சொல்லவும் அவளுக்கு அது குட்பை சொல்ல தான் என்றே தோணியது.
இல்லையென்றால் காலையில் அலுவலகத்தில் அவளை நேரே பார்த்த போது கூட ஒரு வார்த்தை பேசாமல் ஏன் ஒரு சிறு புன்னகை கூட இல்லாமல் இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு அவளைக்  கடந்து போய் விட்டு உடனே வாட்சப்பில் மாலை பார்க்கலாம் என்று மெசேஜ் மட்டும் போட்டால் என்னவென்று தோன்றும்?
ஒரு வாரம் முன்பு ராம்குமாரை பப்பில் பார்த்ததோடு சரி. அன்று வந்தனாவை வரச்சொல்லி அவளோடு கேபில் ஏற்றி அனுப்பியவன் தான். 
அதன் பிறகு அவனிடம் இருந்து எந்த எதிரொலியும் இல்லை. 
    முன்பெல்லாம் அவள் தினமும் அனுப்பும் குறுஞ்செய்திகள் எப்போதாவது தவறினால் என்ன ஆச்சு? நீ ஓகே தானே? என்று அக்கறையோடு விசாரிப்பவன் இந்த ஒரு வாரமாக ஒரு முறை கூட கேட்கவேயில்லை. 
    ஏற்கனவே தான் செய்தது தவறோ? அவசரப்பட்டு காதலை சொல்லி அவன் நட்பையே இழந்து விட்டோமோ என்று பயந்து கொண்டு இருந்தாள்.
பழக்கம் இல்லாமல் குடித்ததில் மறுநாள் காலையில் ஏகத்துக்கும் தலை வலித்தது. அதோடு முதல் நாள் தான் அவனிடம் என்ன சொன்னோம் என்று முழுசாக நினைவு இல்லாவிட்டாலும் அவனை காதலிப்பதாக சொன்னது ஞாபகம் இருந்தது.
    தான் செய்தது சரியா என்று காலம் கடந்து பயம் வர லாவண்யாவை அழைத்தாள் வஞ்சு. அவளும் உடனே எடுக்காமல் போக தலை வெடித்துப் போனது.
யாரிடமாவது ஆலோசனை கேட்கலாம் என்றால் இந்த வெட்கக்கேட்டை சொல்லவும் வெட்கமாக இருந்தது.
    பல முறை விடாமல் லாவண்யாவை அழைத்து அவளும் ஒரு வழியாக இரண்டு மணி நேரம் கழித்து எடுத்தாள்.
    “என்னடி ஆச்சு உனக்கு? ஞாயித்துக்கிழமை காலையில கூட என்ன நிம்மதியாக தூங்க விட மாட்ற?
    லாவண்யா வள்ளென்று விழ ஏற்கனவே மூட் அவுட்டில் இருந்த வஞ்சு அழுதே விட்டாள்.
    தூக்கம் கலைத்த எரிச்சலில் இருந்த லாவண்யாவுக்கு தோழி அழுததும் மனதே தாங்கவில்லை. 
        “சாரிடி! நேத்து நைட் ஷோ படம் போயிட்டு வந்து தூங்கினதே லேட். அதான் உன்ன திட்டிட்டேன். சொல்லுடி? என்ன பிரச்சனை? ஆபிஸ்ல மறுபடியும் யாரும் ஏதும் சொல்லிட்டாங்களா?
    அவளுக்கு உடம்பு சரியில்லை என்றால் இத்தனை நேரம் பெங்களூரில் இருந்து பேசியிருக்க மாட்டாள் என்று லாவண்யாவுக்கு நன்றாகவே தெரியும். 
       உடனே வீட்டுக்கு அழைத்து அதற்குள் அவள் அம்மா அப்பா என்று இவளுக்கு அழைத்து விவரம் கேட்டிருப்பார்கள்.
எது நடந்தாலும் தங்கள் மகள் தங்களை விட லாவண்யாவிடம் தான் எல்லாம் பகிர்ந்து கொள்வாள் என்று அவர்களுக்கும் தெரியும். 
    வஞ்சு இப்போதும் பதில் சொல்லாமல் அழுது கொண்டே இருக்க இப்போது லாவண்யா சரியான கேள்வி கேட்டாள்.
    “என்னடி உன் குரு கூட ஏதும் சண்டையா? இல்லனா எந்த பிரச்சனையா இருந்தாலும் மொத போன் சீனியர்க்கு தானே போட்டிருப்பே? என் கிட்டலாம் சொல்லுவியா?
    அவளின் முதல் பதவி உயர்வை முதலில் தன்னிடம் சொல்லாமல் ராம்குமாரிடம் சொன்னதை தன்னிடமே வஞ்சு பெருமையாக சொன்னதை லாவண்யா இன்னும் மறக்கவும் மன்னிக்கவும் இல்லை. 
    அவளை மலையிறக்க வஞ்சு பல முயற்சிகள் செய்து காலில் விழாத குறையாக கெஞ்சி இனி எதுவானாலும் அவளிடம் முதலில் சொல்வதாக சத்தியம் செய்த பிறகே லாவண்யா சமாதனம் ஆனாள்.
    அப்போதும் வஞ்சு பதில் சொல்லாமல் அழ அந்த பழைய கோபத்தை புறம் தள்ளி லாவண்யா “வஞ்சு! என்னடா ஆச்சு? சீனியர் ஏதும் திட்டிட்டாரா? இல்ல யாரும் ஏதும் சொன்னாங்களா? என்று கேட்ட பிறகே வஞ்சு நடந்ததை எல்லாம் சொன்னாள்.
        அவள் சொன்னதைக் கேட்டு மலையிறங்கி இருந்த லாவண்யா மறுபடி மலையேறினாள்..
       “அறிவிருக்காடி உனக்கு கொஞ்சமாச்சு? பெரிய அப்பா டை அம்மா கௌன் பரம்பரை நீ? தண்ணிய போட்டு அவங்க கிட்ட லவ் பண்றத சொல்லியிருக்கே?
    “இல்லடி! அவர் தான் சொன்னாரு. தண்ணி போட்டா தைரியம் வரும். மனசுல இருக்கறத பயமில்லாம பேச முடியும். இதுல ஒண்ணும் தப்பில்லன்னு அவர் தான் சொன்னாரு!”
    “வந்தேன்… உன் பல்ல உடைப்பேன்! அவரு சொன்னாராம். இவ குடிச்சாளாம்! விவஸ்தை கெட்டவ? பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப என்ன ஊன்னு அழுதுட்டு இருக்கே?””
      “நா…நா செஞ்சது தப்பாடி? அவர் இதுக்காகவே என்னை வெறுத்துடுவாரா? நேத்து நைட் வந்தனா கூட அனுப்பி விட்டவர் இது வரை என்னை ஒரு வார்த்தை கூட விசாரிக்கல. தெரியுமா?”
      வஞ்சு மூக்கை உறிஞ்ச லாவண்யாவுக்கு பற்றிக்கொண்டு வந்தது.
      “நீ கேக்கற கேள்வியில இருக்கிற அபத்தம் உனக்கே தெரியல? நம்ப ஊர் ஆம்பள எவனாவது இப்படி குடிக்கிற பெண்ணை கட்டிக்குவானாடி?
கொஞ்ச நஞ்சம் உன் மேல ஏதும் ஐடியா இருந்தா கூட இப்ப நிச்சயம் மாத்திட்டு இருப்பாங்க. இந்த செருப்பு போடவா அந்த ரிங் போடவான்னு இத்துப்போன விஷயத்துக்கு எல்லாம் எனக்கு போனப் போட்டு கேள்வி கேக்கறவ இத செய்யுமுன்ன கேக்க மாட்டியாடி?
இனிமே உனக்கு ராம்குமார்லாம் கிடைக்க வாய்ப்பே இல்ல. உங்க ஊர்லையே கருப்பனோ சுப்பனோ இருப்பான். அவன உங்க அப்பா கட்டி வெப்பாரு,. கட்டிக்க.!
லாவண்யாவிடம் ஆறுதலை எதிர்பார்த்து வந்தால் அவளும் சேர்ந்து சுள்ளென்று திட்ட வஞ்சுவிற்கு மொத்தமாக மனம் விட்டு போனது.
ராம்குமார் இல்லாத வாழ்கையை அவளால் கற்பனை கூட செய்ய முடியவில்லை.
    இதில் வந்தனா வேறு ஏகத்துக்கும் அவளை பயமுறுத்தி இருந்தாள். திடுதிப்பென்று அவளை அழைத்து வஞ்சுவை அழைத்துக்கொண்டு போக ராம்குமார் சொன்னதும் வந்தனாவுக்கு ஆர்வம் தாங்கவில்லை.
       “ஏன் வஞ்சுவுக்கு என்ன ஆச்சு? உன் கூட வந்தா அவளே திரும்பிப் போக மாட்டாளா? என்று வந்தனா  கேட்க ராம்குமார் என்னவென்று சொல்லாமல் அவளுக்கு திடீரென்று உடம்பு சரியில்லை என்று மட்டுமே சொல்லி வர சொல்லியிருந்தான்.
      வந்தனா வந்து வஞ்சுவைப் பார்த்ததுமே அவள் நிலையைப்  புரிந்து கொண்டாள்.
      சரியாய் அந்த நேரத்தில் வஞ்சு மறுபடி குரு! ஐ லவ் யூ சோ மச்! என்று ஐம்பதாவது முறை சொல்ல வந்தனா ராம்குமாரை ஒரு நக்கல் பார்வை பார்த்தாள்.
      சேதாரம் ரொம்ப ஜாஸ்தி போலயே?
      ராம்குமார் அதற்கு பதிலே சொல்லவில்லை.
      வந்தனா! அவ இப்ப இருக்கிற நிலமையில தனியா  அனுப்ப முடியாது! அதனால தான் உன்ன வர சொன்னேன்.
நானும் இனிமே தான் வீட்டுக்கு போய் பேக் பண்ணிட்டு ஊருக்குக் கிளம்பணும். கொஞ்சம் அவளை கூட்டிட்டு போய் விட்ரு. நா கேப் புக் பண்ணி இருக்கேன். இப்ப வந்திரும்…
      எதையும் வெளிக்காட்டாமல் ராம்குமார் வேலையை மட்டும் சொல்ல வந்தனாவுக்கு இப்போது வஞ்சுவின் மேல் தான் பரிதாபம்.
      கண்கள் செருக மேஜையில் சாய்ந்து இருந்தவளை போயும் போயும் இந்த பாறாங்கல் தானா உனக்கு லவ் பண்ண கிடைச்சது? என்று அனுதாபமாக பார்த்தாள்.
      ராம்குமார் அவளையும் கழட்டி விட்டான் என்பதில் அவள் மேல் பரிவு ஏற்பட அவளை வீட்டுக்கு அழைத்து வந்தவள் வஞ்சு வழியெல்லாம் ராம்குமாரை பற்றி பிதற்றிக்கொண்டு வருவதை பரிதாபத்தோடு கேட்டாள்.
      சந்தேகமாக திரும்பிப் பார்த்த கேப் டிரைவரிடம் அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை என்று சொல்லி சமாளித்தாள். அவர் நம்பவில்லை என்பது பார்வையிலேயே தெரிந்தது. ஆனால் என்ன செய்ய முடியும்?
      வீட்டுக்கு வந்து சுஜியின் உதவியுடன் அவளை உடை மாற்றி படுக்க வைத்து என்னவென்று விசாரித்தவளிடம் பூசி மெழுகி என்று வந்தனா நிறைய உதவி செய்தாள்.
      மறுநாள் லாவண்யாவிடம் பேசியதில் இன்னும் பயம் பிடித்துப்போக சோர்ந்து இருந்தவளை தான் வந்தனா வந்து பார்த்தாள்.
      கையில் வஞ்சுவுக்கு காலை உணவும் கொண்டு வந்திருந்தாள்.
      இந்தா! இந்த போஹாவை சாப்பிட்டு மாத்திரை போடு! லெமன் பிழிஞ்சு இருக்கதால வாய்க்கு நல்லா இருக்கும். மாத்திரை போட்டா தலைவலி போய்டும்!
      என்று இடிந்து போய் அமர்ந்திருந்த வஞ்சுவிடம் ஆதரவாக பேசினாள்.
      வஞ்சு கண்ணில் துளிர்த்த கண்ணீரோடு அப்படியே அமர்ந்திருக்க வந்தனா அவள் பக்கத்தில் அமர்ந்தாள்.
      இப்படி இடிஞ்சு போய் உட்கார ராம்குமார் ஒரத் இல்ல வஞ்சு! எத்தன பேரோட மனச உடைச்சிட்டு கல்லு மாதிரி தாண்டி போயிருக்கான் தெரியுமா?
      உன்கிட்ட உடைச்சு சொல்றேன். நானே அவன் கிட்ட ப்ரொபோஸ் பண்ணி இருக்கேன். அவன் ஒரே வார்த்தைல எங்க அம்மா அப்பா பாக்கற பொண்ண தான் கல்யாணம் பண்ணுவேன்.
நீ வேற ஆளப் பாருன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டான். அப்பயும் எனக்கு உன்னை தான் பிடிச்சிருக்கு என்று பின்னாலேயே போய் வெக்கத்தை விட்டு கெஞ்சினேன். அழக்கூட செஞ்சேன்.
மறுபடி நீ லவ் கிவ்ன்னு பேசினா நம்ம பிரெண்ட்ஷிப்பையே கட் பண்ண வேண்டியது தான். வெளிய எல்லார் கிட்டயும் சொல்லி உன் மானத்தை வாங்கிடுவேன் அப்படின்னு மெரட்டினான்.

Advertisement