Advertisement

 
 இன்னொருவன் என்ன மச்சி மாட்டர்? ஓவரா நோட் பண்ணா மாதிரி தெரியுது? ரூட் விடறியா? என்று ரஞ்சித்தை ஓட்ட ரஞ்சித் கையை தூக்கி விட்டான்.
டேய்! அதை பாத்தா என் குட்டி தங்கச்சி மாதிரி தெரியுது. கூட்டி போய் குச்சி மிட்டாய் வாங்கித் தரனும் போல தோணுதே தவிர சைட் எல்லாம் அடிக்க முடியாது டா! என் ரேஞ்சே வேற! என்று காலரை தூக்கி விட்டுக் கொண்டான்.
ரஞ்சித் அவளை மானாவாரியாக கலாய்ப்பது தெரியாமல் அவள் இன்னும் அங்கேயே நின்றிருந்தாள்.
ராம்குமார் சிரித்தபடியே திரும்பிப் பார்க்க அவள் கைகள் இரண்டும் பதட்டத்தில் பிசைய அவர்கள் பக்கத்தில் வர துணிவில்லாமல் அவர்களையே பார்த்தபடி நிற்பது தெரிந்தது.
கால் மாற்றி கால் வைத்து அவர்கள் கவனம் தன் பக்கம் திரும்புமா என்று பார்த்திருந்தாள். 
கண்களில் லேசாய் கண்ணீர் வருவது போல இருக்க அதை தடுப்பது போல மூக்கை உறிஞ்சிக் கொண்டே இருந்தாள்.
அவளைப் பார்த்து ராம்குமாருக்கே பாவமாகி விட மச்சி! அவ நம்மள பாக்க தான் நின்னுட்டு இருக்கா போல? நான் போய் கேட்டுட்டு வரேன்! என்று கிளம்பினான்.
ரஞ்சித் தான் டேய்! அப்படியே என் சார்பா ஒரு குச்சி முட்டாயும் வாங்கி குடுத்துட்டு வாடா! என்று குரல் கொடுக்க எல்லோரும் சிரித்தனர்.
ராம்குமார் டேய்! போங்கடா! போய் வேலைய பாருங்க! என்று சிரித்தபடியே நகர மச்சி! பிகரைப் பாத்ததும் பிரெண்ட்ஸ கழட்டி விடற பாத்தியா? என்று அதற்கும் சிரித்தனர்.
அவர்களைப் பொறுத்தவரை இதற்கெல்லாம் எந்த பொருளும் இல்லை. சும்மா யாரையாவது கிண்டல் செய்து சிரிப்பது அவ்வளவு தான்.
அதனால் ராம்குமாரும் சிரித்தபடியே அவளருகே வர அப்போது தான் அவளை கவனித்து பார்த்தான்.
குச்சிக்கு புடவை சுற்றியது போல அவள் ஒல்லி உடம்பை ஒரு டிசைனர் புடவை சுற்றி இருக்க ஜாக்கெட் அவள் ஒல்லி உடம்புக்கு லூசாக இருந்தது. அது அவள் அம்மாவுடையதாய் இருக்கும் என்று யுகித்தான்.
இது போன்ற நிகழ்வுகளில் மாணவர்கள் வேட்டி சட்டையிலும் மாணவிகள் புடவையிலும் வர வேண்டும் என்பதும் கூட அங்கே பழக்கம் தான்.
அவனுமே வெள்ளை வேட்டியை பெல்ட் போட்டு கட்டி மேலே கருப்பு முழுக்கை சட்டை தான் அணிந்திருந்தான்.
நீண்டு அடர்ந்து இருந்த முடியை விரித்து விட்டிருந்தாள். காலை வரை பின்னி ஜடை போட்டிருந்தது நெளி நெளியாய் இருந்த கூந்தலில் தெரிந்தது.
கைகளில் கழுத்தில் காதில் என புடவை நிறத்துக்கு பொருத்தமான பீத்தல் நகைகள்.
கிட்ட நெருங்கியதும் அவள் முகத்தை அப்போது தான் கூர்ந்து கவனித்தான்.
அவள் சின்ன முகத்தில் பெரிய கண்கள். அது முழுக்க பயம் அப்பியிருக்க கண்ணீர் இப்போது விழப் போகிறேன் என்றது. அதற்கு மேல் அவளை கவனிப்பதற்குள் அவள் பேச ஆரம்பித்திருந்தாள்.
..ண்ணா! ஒரு ப்ராப்ளம்! கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமாண்ணா?
கம்மிய குரலில் அவள் வேண்டினாள்.
அவர்கள் கல்லூரியில் ஜூனியர்கள் சீனியர்களை அண்ணா அக்கா என்று தான் கூப்பிட வேண்டும் என்பது எழுதப்படாத விதி.
அதனால் அண்ணா என்று அவள் விளித்ததை சாதாரணமாகவே ராம்குமார் எடுத்துக் கொண்டான்.
சொல்லுமா! ஏதாவது தகறாரா? வந்த பசங்க ஏதாவது கலாட்டா பண்றாங்களா? வா..! நான் கேக்கறேன். என்று கரிசனமாய் கேட்டபடி முன்னால் நடக்க அவளின் குரல் அவசரமாய் அவனை தடுத்தது.
அண்ணா! அதெல்லாம் இல்லண்ணா! என்று அவனை நிறுத்தியவள் தன் பிரச்னையை சொன்னாள்.
நான் பேப்பர் பிரசன்டேஷன் டீம்ல வாலண்டியராக இருக்கேன்ணா. தர்ட் இயர் பாலாஜி அண்ணாவும் ஸ்வாதி அக்காவும் தான் இன்சார்ஜ்.
செஷன் ஆரம்பிக்க இன்னும் அஞ்சு நிமிஷம் தான் இருக்கு. ஜட்ஜ் பண்ண மேம் கூட வந்துட்ருக்காங்க. என்னை ப்ரொஜெக்டர் ரெடி பண்ணி வெக்க சொல்லி அண்ணா நேத்தே சொன்னாங்க.
நான் தான் ப்ரொஜெக்டர் செக் பண்ணாம இருந்துட்டேன். இப்ப அது வேலை செய்யல.
யார் கிட்ட கேட்டாலும் தர மாட்றாங்க…பாலாஜி அண்ணா திட்றாங்க! மேம் இப்ப வந்துருவாங்க. திட்டினா நீ தான் பொறுப்புனு சொல்றாங்க…..
சொல்லும்போதே அவளுக்கு கண் கலங்கி விட்டது.
பயத்தில் வேர்த்து கொட்ட கண்களை ஒரு கையாலும் நெற்றி வேர்வையை மறு கையாலும் துடைத்தவளை பார்த்து அவனுக்கு சிரிப்பு வந்தது.
அவள் தன்னிச்சையாக மூக்கை உறிஞ்ச பார்க்க சின்ன பெண் போலவே தெரிந்தாள்.
இந்த சின்ன விஷயத்துக்கா இவ்வளவு டென்ஷன்! என்று நினைத்துக் கொண்டவன் சரிமா! உனக்கு வேற ப்ரொஜெக்டர் வேணும் அதானே? வா நான் ரெடி பண்றேன். லேப்டாப் ரெடியா?
கேட்டுக்கொண்டே அவன் முன்னால் நடக்க அவள் பின்னால் ஓட்டமும் நடையுமாய் தொடர்ந்தாள்.
அது என் பிரெண்ட் கிட்ட வாங்கி வெச்சிட்டேண்ணா! ப்ரொஜெக்டர் தான் வேணும்….
தன் மலை போன்ற கவலையை அவனிடம் இறக்கி வைத்ததில் அவளுக்கு லேசாக ஆறுதல் கிடைக்க குரல் கூட தைரியமாக சற்று உயர்ந்தது.
ராம்குமார் நேராக உள்ளே போக பாலாஜி ராம்குமாரை பார்த்ததும் எழுந்து நின்றான்.
என்னடா பாலாஜி? ஜூனியர மிரட்டிட்டு இருக்க?
எடுத்த எடுப்பில் ராம்குமார் ஆரம்பிக்க பாலாஜிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
பின்னால் அவள் நிற்பதை பார்த்து நீ தான் போய் கம்ப்ளெயின்ட் பண்ணி கூட்டிட்டு வந்தியா? என்பது போல முறைக்க அவள் ராம்குமார் முதுகின் பின்னால் மறைந்து கொண்டாள்.
இல்லண்ணா! அது மேம் வந்தா சத்தம் போடுவாங்களேன்னு கொஞ்சம் டெண்ஷனாகிட்டேன்.
நேத்தே இவளை செக் பண்ணி வெக்க சொன்னேன். இவ தான் செய்யல… என்று சமாளிக்க முயன்றான் பாலாஜி.
டேய்! விடுடா! பர்ஸ்ட் இயர் படிக்கிற பொண்ணுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்? இன்னும் டிபார்ட்மெண்டுக்கே வரல. மெதுவா தானே கத்துக்கணும்.
சரி..! இப்ப என்ன ? உனக்கு ப்ரொஜெக்டர் வேணும், அதானே? நான் ரஞ்சித் கிட்ட ஒரு ப்ரொஜெக்டர் ஸ்பெரா எடுத்து வெக்க சொன்னேன்.
போய் வாங்கிட்டு வா. மேம் வந்தா இன்ட்ரோ குடுக்க சொல்லி நான் சமாளிக்கிறேன்.
என்று சொல்ல ஏன் மகாராணி போக மாட்டாங்களோ? என்று அவளை முறைத்தான் பாலாஜி.
அவன் கோபப்பார்வையில் அவள் தலையை தாழ்த்திக் கொண்டாள்.
டேய்! இதெல்லாம் கணக்கு பாக்காதே! அந்த பொண்ணு புடவைய கட்டிட்டு எப்படி ஓடும்? நீனா வேகமா போவ!
என்று அவனை அனுப்பியவன் ப்ரொஜெக்டர் வரும் வரை அங்கேயே நின்றிருந்தான்.
அவள் போய் தன் குழுவுடன் சேர்ந்து கொண்டாலும் இன்னும் அவளிடம் பதட்டம் இருந்தது.
பாலாஜி ப்ரொஜெக்டர் கொண்டு வந்து அதை லேப்டாப்பில் இணைத்து சரி பார்த்துக் கொண்டிருந்தான். இன்னும் அவனுக்கு அவள் மேல் கோபம் போகவில்லை.
அதற்குள் ஜூரியாக வந்த மேடமை வரவேற்று அமர வைத்த ராம்குமார் அவருக்கு இந்த பிரச்சனை தெரியாதபடி அவரிடம் பேசிக்கொண்டிருந்தான்.
அவருக்கு தர வேண்டிய தண்ணீர் பாட்டில், நோட் பேட், பேனா எல்லாம் அவள் கொண்டு வந்து வைக்க பாலாஜி இப்போதும் அவளை முறைத்தான்.
என்ன ராம்குமார்! எப்படி போகுது ஈவேன்ட்ஸ் எல்லாம்? ஒண்ணும் ப்ரோப்லேம் இல்லையே?
அவர் தோழமையோடு ராம்குமாரை விசாரிப்பதை ஆவென்று பார்த்திருந்தனர் மற்ற மாணவர்கள்.
அவர் கொஞ்சம் கண்டிப்பானவர் என்பதால் எல்லா மாணவர்களுக்கும் கொஞ்சம் அவரிடம் பயம்.
அப்படிப்பட்டவர் அவனிடம் சிரித்து பேசவும் அவர்கள் அசந்து விட்டனர்.
சூப்பரா போகுது மேம்! நம்ம பசங்க எல்லாம் செமையா வேலை செய்றாங்க. நல்ல சப்போர்ட்.
இதோ இங்கயே பாலாஜி ஸ்ருதி கிட்ட இதுக்கு இன்சார்ஜ் அப்படின்னு மட்டும் தான் சொன்னேன். எல்லாம் அவங்களே யோசிச்சு அழகா ரெடி பண்ணிட்டாங்க.
அடுத்த வாட்டி அவங்க டர்ன் வரப்போ இன்னும் பெருசா பண்ணி அசத்துவாங்க பாருங்க!
என்று அவன் சொல்லவும் பாலாஜிக்கு எல்லாம் மறந்து போனது.
அதில் மேடம் எல்லோர் எதிரிலும் வெரி குட் பாலாஜி! என்று பாராட்டி விட அப்படியே உச்சி குளிர்ந்து போனதில் அவளையும் பார்த்து பெருமையாய் சிரித்தான்.
அதோடு நிகழ்ச்சி தொடங்கி விட ராம்குமார் ஒரு தலையசைப்புடன் வெளியேறினான்.
போகும்போது அவள் வாயால் சொல்லாத நன்றி அவள் கண்களில் தெரிந்ததோ?
கடைசி வரை அவள் பெயரை கேட்கவே இல்லை என்பது வெளியே வந்த பிறகு தான் ராம்குமாருக்கு தோன்றியது.
 
 

Advertisement