Advertisement

சின்ன சின்ன ஆசை!
அத்தியாயம் -1
 
பெங்களூரு மாநகரத்தில் அது ஒரு மிகப் பெரிய ஐடி நிறுவனம். கம்பெனி வளாகத்தில் அங்கங்கே பல அடுக்கு மாடி கட்டிடங்கள். ஒவ்வொன்றிலும் பல தளங்கள்.
அனைவரும் ஒரே நிறுவனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எல்லோரையும் எல்லோருக்கும் தெரிய வாய்ப்பு இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான நிறுவனம்.
ராம் குமார் தன் கேபின் இருந்த தளத்தில் நுழையும் போதே அவளை பார்த்து விட்டான். டக்கென்று தெரிந்தது. அவன் ஜூனியர்.
சின்ன பாக்கெட்…
வாய் தானாக தான் அவளுக்கு வைத்த பெயரை முணுமுணுக்க வேக நடை ஒரு நொடி தயங்க பார்வை அவள் மேல் கூர்மையானது.
மூன்று வருடங்களுக்கு முன் கல்லூரியில் பார்த்தது.
      இருவரும் ஒரே பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள். ஒரே பிரிவு. இன்பர்மேஷன் டெக்னாலஜி.
அவள் அவனுக்கு மூன்று வருடங்கள் ஜூனியர். அவள் பெயர் தான் நினைவில் வரவில்லை.
தான் படித்த கல்லூரியில் படித்தவள் என்றதோடு சரி. அவர்கள் கல்லூரியில் ராகிங் கட்டுப்பாடு அதிகம் என்பதால் முதல் வருடத்தில் இருந்த அவளை அதிகம் பரிச்சயமில்லை.
அவர்கள் துறையின் மாணவர் சிம்போசியம் நடந்த சமயத்தில் பார்த்தது தான். அதனால் முதலில் அவள் தான் என்று நினைத்தவனுக்கு பிறகு அவள் தானா என்பதே சந்தேகமாக இருந்தது.   
      ஒரு வேளை அவள் ஜாடையில் யாராவது இருக்குமோ? அவள் அப்படி ஒன்றும் நெருக்கமான பழக்கம் இல்லையே? தனக்கு ஜூனியர் என்ற முறையில் சில முறைகள் பார்த்தது தான்.
      அவளை கூர்ந்து பார்த்தபோது அவள் தோற்றத்தில் இருந்த மாற்றம் தெரிந்தது. மூன்று வருடங்களுக்கு முன் பார்த்த போது இருந்ததை விட கொஞ்சம் உயர்ந்து லேசாக சதை போட்டு இருந்தாள்.
      அவன் நின்று யோசித்த அந்த சில நொடிகளில் தன் சான்றிதழ்களையும் மற்ற சான்றுகளையும் கொடுத்துக் கொண்டு எதிரில் இருந்தவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தவள் லேசாக மூக்கை உறிஞ்ச அவனுக்கிருந்த சந்தேகம் உறுதியானது.
அது அவள் தான்.
      சரி! புதிதாக இங்கே சேர்ந்திருக்கிறாள் போலவே! அப்புறமாய் ஜூனியருக்கு ஒரு ஹாய் சொல்லுவோம் என்பதோடு தோளை குலுக்கிக் கொண்டு தன் அறைக்குப் போனவன் அதன் பிறகு அவளை மறந்தே போனான்.
      ட்ரெய்னியாக சேர்ந்தவன் இந்த மூன்று ஆண்டுகளில் கடுமையான உழைப்போடு ஹெச். ஆர். உடன் நல்ல உறவு முறையில் இருந்ததால் இப்போது டெக்னாலஜி அனலிஸ்ட் ஆக வளர்ந்திருந்தான்.
      ராம்குமார் ஐந்தே முக்கால் அடி உயரம் மாநிறம் தான்.
என்றாலும் ஒல்லியான உடல்வாகும் திருத்தமான முக அமைப்பும் அவனுக்கே பொருந்துவது போல உடுத்தியிருந்த பார்மல் உடையும் அவன் தோற்றத்தை எடுப்பாக்க, முகத்தில் அணிந்திருந்த கண்ணாடியும் சேர்ந்து ஒரு கம்பீரத்தைக் கொடுத்தது.
      அதோடு தன் உழைப்பில் வளர்ந்தது தானாகவே ஒரு தன்னம்பிக்கை கொடுக்க அதுவே ஒரு தனி அழகை கொடுத்தது.
      தன் அறைக்கு வந்தவன் மெயில் பார்த்து, அவன் டீமில் இருந்தவர்கள் அனுப்பியிருந்த ரிப்போர்ட்களை பார்த்து மேலிருந்து வந்த உத்தரவுகளை பார்த்து என தன் வேலையில் முழுகியவனுக்கு  இரண்டு மணி நேரம் கழித்தே ஒரு சிறு இடைவேளை கிடைத்தது.
      அது பொதுவாகவே அவர்கள் கம்பெனியில் தேநீர் இடைவெளி தான் என்பதால் தன் இருக்கையை விட்டு எழுந்தவன் மேஜையில் இருந்த தன் செல் பேசியை எடுத்து பார்த்தபடியே வெளியே வந்தான்.
      பள்ளியில் இருந்து கூடவே படித்து இப்போதும் இந்த கம்பனிலும் அவன் கூடவே பணியாற்றும் அவன் நண்பன் ரஞ்சித் கூட தான் அவன் எப்போதும் தேநீர் அருந்த போவான்.
      ரஞ்சித் கேபின் வேறொரு கட்டிடத்தில் இருக்க அவனோடு அரை மணி நேரம் கழித்து விட்டு தான் ராம்குமார் மீண்டும் வேலைகளை தொடர இங்கே திரும்புவான்.
      அவனோடு இன்னும் சில தோழர் தோழிகளும் சேர்ந்து கொள்ள சிரிப்பும் கிண்டலுமாக அந்த அரை மணி நேரம் களை கட்டும். 
அப்போது தான் அந்த சின்ன பக்கெட்டின் நினைவு வர அவளைப் பற்றி அவனிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வந்தவன் அவளை எங்கே என்று கண்ணால் துழாவினான்.
எங்கும் அவள் தென்படாததால் சரி! அவளை அப்புறம் பார்த்துக்கலாம்! என்று லேசான தோள் குலுக்கலுடன் வெளியே வந்தான்.
அவர்கள் கம்பெனியில் நடுவே சிறு பூங்கா இருக்க சுற்றி அலுவலக மாடி கட்டிடங்கள் இருக்கும்.
கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் வேலை செய்து மண்டையும் உடலும் சூடாகிப் போகும் கம்பெனி ஊழியர்களுக்கு இளைப்பாற அந்த கம்பெனியின் ஏற்பாடு.
நடுவே சிறு ஃபௌண்டைன் எந்நேரமும் நீரை சிறு தூறலாய் தூவிக் கொண்டிருக்க வண்ணமயமான பூச்செடிகளும் சிறு மரங்களுமாய் அந்த பூங்கா உண்மையில் ஆசுவாசம் தரும்.
அங்காங்கே நிழலில் அமர வசதியாக இருவர் அமரும் இருக்கைகள்.
எங்கும் தேவையில்லாமல் ஊழியர்கள் கூட்டமாக கூடி விடக் கூடாது என்று முன்னெச்சரிக்கை.
 செல்லில் ஒரு கண்ணும் பாதையில் ஒரு கண்ணுமாய் வந்தவனின் கவனத்தை ஈர்த்தாள் அவன் ஜூனியர்.
அந்த நேரத்தில் என்னவோ அதிசயமாக பூங்காவே காலியாக இருக்க அவள் மட்டுமே ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தாள் இன்னும் பெயர் தெரியாத அவன் ஜூனியர்.
தனியாக தலை குனிந்து அமர்ந்து இருந்தவளை நெருங்க யோசனையாக இருக்க அங்கேயே நின்று கண்களால் மீண்டும் அவளை அளவிட்டான் ராம்குமார்.
முன்பு சின்ன உருவமாய் கெச்சலாக இருந்தவள் இப்போது கொஞ்சம் வயதுக்கான வளர்த்தியோடு இருந்தாலும் அவள் தோற்றத்தில் பெரிய மாற்றம் இல்லை.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த மாதிரியே தான் இப்போதும் உடையும் தோற்றமும்.
பின்னிய முடி என்பது தெரிய நெளி நெளியாய் விரித்து விட்ட கூந்தல் அவளுக்கு தலைமுடியை விரித்து விட்டு பழக்கம் இல்லை என்று சொன்னது.
காதில் அதே வளையம். அவன் கம்பெனியில் பெண்கள் எல்லாம் குர்தி, டாப்ஸ், லெக்கின்ஸ் ஜீன்ஸ் என்று பார்த்திருக்க இவள் மட்டும் சல்வாரில் மேலே துப்பட்டாவோடு இருந்தாள்.
என்ன செய்கிறாள்? ஒரு வேளை செல் பார்க்கிறாளோ என்று ராம்குமார் உற்று நோக்க அவள் தன் கைகள் இரண்டையும் மடித்து தொடையில் வைத்துக் கொண்டு தன் மடியையே வெறித்துப் பார்ப்பதை கவனித்தான்.
நடுநடுவே வலது கை உயர்ந்து கண்களை துடைத்து விட்டுக் கொண்டிருந்தது.   
மூக்கை உறிஞ்சியபடியே அமர்ந்து இருந்தவளை பார்க்க அவன் முதல் முறை அவளை பார்த்த நாள் நினைவுக்கு வந்தது.
அவர்கள் கல்லூரியில் மாணவர் சிம்போசியம் எல்லா துறைகளிலும் வருடா வருடம் நடக்கும்.
எப்போதும் கடைசி வருடம் படிக்கும் மாணவர் தான் ஸ்டுடென்ட் கவுன்சில் செகரெட்டரி (Student Council Secretary) ஆக இருக்க முடியும் என்பதால் கடைசி ஆண்டில் இருந்த ராம்குமார் எலெக்ஷனில் நின்று ஜெயித்தான்.
ராம்குமாருக்கு இயல்பிலேயே எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு போகும் இயல்பு.
நன்றாக படிக்கும் மாணவன் என்பதால் ஆசிரியர்களின் ஆதரவு இருக்க ஜூனியர்கள் கூடவும் நல்ல பழக்கத்தில் இருந்ததால் தேர்தலில் எளிதாகவே வென்றான்,
மற்ற நேரங்களில் முதல் வருட மாணவர்களை சீனியர் மாணவர்களிடம் இருந்து பிரித்து பாதுகாக்கும் நிர்வாகம் இது போன்ற துறை சார்ந்த நிகழ்வுகளின் போது தங்கள் கட்டுப்பாடை தளர்த்துவர்.
இரண்டு நாட்கள் நடக்கும் சிம்போசியத்தில் வெளியே மற்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை அழைத்து பல போட்டிகளை நடத்துவர்.
ராம்குமார் கவுன்சில் செகரெட்டரி என்பதால் எல்லா நிகழ்வுகளையும் மேற்பார்வை பார்ப்பது, அங்கங்கே எழும் பிரச்சனைகளை சமாளிப்பது என்று இருந்தான்.
அவர்கள் துறையிலேயே வகுப்பறைகளிலும் கம்ப்யூட்டர் லேப்களிலும் போட்டிகள் ஒரே நேரத்தில் நடந்து கொண்டிருந்தன.
அவன் தலைமையில் அவன் துறை சார்ந்த மாணவர்கள் குழுக்களாக பிரிந்து போட்டிகளை நடத்திக் கொண்டு இருந்தார்கள்.
துவக்க விழா முடிந்து அங்காங்கே போட்டிகள் ஆரம்பிக்க, ராம்குமார் தன் நண்பர்கள் கூட்டத்தோடு காரிடாரில் நின்று அடுத்து செய்ய வேண்டிய விஷயங்களை பற்றி பேசியபடி இருந்ததால் அவளை கவனிக்கவே இல்லை.
அவர்களிடம் இருந்து பத்தடி தள்ளி நின்றிருந்தவளை முதலில் பார்த்தது ரஞ்சித் தான்.
டேய்! என்னடா! ரெட்ட ஜடை இன்னிக்கி மாடர்னா வந்திருக்கு? என்று கேட்க எல்லோர் பார்வையும் அவள் மேல் திரும்பியது.
அத்தனை பேர் பார்வையும் தன் பக்கம் திரும்பியதில் பயந்து போன அவள் முகத்தை வேறு பக்கம் திருப்பி கொண்டாள்.
அவள் சின்ன உருவமும் பயந்த தோற்றமும் ராம்குமாருக்கு அவன் பார்த்த விளம்பரத்தை நினைவு படுத்த யாரிந்த சின்ன பாக்கெட்? என்று யோசித்தான்.
ரஞ்சித்தை பார்க்க வந்திருப்பாளோ என்று நினைத்து யாருடா மச்சி அது? உனக்கு தெரிஞ்ச பொண்ணா? என்று ராம்குமார் கேட்க ரஞ்சித் அவளை பற்றி அவனுக்கு தெரிந்ததை சொன்னான்.
டேய் மச்சி! அவ பர்ஸ்ட் இயர் டா! பர்ஸ்ட் இயர் கிளாஸ் ஆரம்பிச்ச மொத நாள் அவங்களுக்கு வெல்கம் பண்ண பங்க்ஷன் நடத்துனாங்களே?
அதுக்கு  கொஞ்ச பேர பாண்டியன் சார் வாலண்டியரா கூப்டப்போ நானும் போனேன் டா. அங்க இவள பாத்தேன்.
மத்த பொண்ணுங்க எல்லாம் ஒத்த ஜடை, போனிடைல், பாப் கட்னு வந்தா இவ மட்டும் ஸ்கூல் புள்ளைங்க மாதிரி ரெட்டை ஜடை பின்னி ரிப்பன் வெச்சு மடிச்சு கட்டிட்டு வந்தா.
பாக்கவே செம காமடியா இருந்தது. ஸ்கூல்ல போடற மாதிரியே சுடிதார் போட்டு துப்பட்டாவ இரண்டு பக்கமும் வெச்சு பின் குத்தியிருந்தா!
எல்லோரும் அவன் வர்ணித்த விதத்தில் சிரித்தனர்.

Advertisement