Advertisement

சத்ரிய வேந்தன் – 27 – எதிர்பாரா வரம்
இரவு வேளைகளில் நிலவொளி நீ…
அதிகாலையின் இளங்கதிர்கள் நீ…
நீரோட்டத்தில் வென்நுரைகள் நீ…
தோட்டம்தனில் வண்ண மலர்கள் நீ…
என் வாழ்வில் யாவுமாய் நீ…
அதிகாலை சூரியன் கிழக்கில் உதித்திருக்க, தமது குதிரையில் மருத தேசம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரூபன சத்ரியர், வலதுபுறம் ஓடிய ஆற்றின் சலசலப்பில் தனது கவனத்தை பதிக்க, அதன் அழகில் குதிரையின் வேகத்தை குறைத்தார். 

ஆற்று நீர் கொலுசொலிகளின் கீதங்களை ஒன்றிணைத்தது போல சலசலத்தபடி ஓடிக்கொண்டிருக்க, அதிகாலை சூரியனின் கதிர்கள் அந்த நீரினில் பட்டு எதிரொலித்துக் கொண்டிருந்தது. ஏனோ அந்த பொலிவு மனம் முழுவதும் நிறைந்திருந்த மங்கையவளின் முகப் பொலிவை நினைவுப்படுத்தியது. 

சந்திர நாட்டிலிருந்து அதிகாலையிலேயே தமது பயணத்தை மருத தேசம் நோக்கி தொடங்கியிருந்தார் ரூபன சத்ரியர். இம்முறை சிறப்பாக மாறுவேடம் தரித்து, துணைக்கு யாருமின்றி தனியாக புறப்பட்டிருந்தார். மிக முக்கிய நபர்களைத் தவிர, அவர் மருத தேசம் சென்றிருப்பது யாருக்கும் தெரியாது. 

சந்திர நாட்டின் மன்னராய் முடிசூடி கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகப்போகிறது. இதுவரை ஒரு முறை கூட மருத தேசம் செல்ல முடியவில்லை. அதற்கு மிகமுக்கிய காரணம் அரண்மனையின் சுரங்கப்பாதைகளை மாற்றி அமைக்கும் பணி. 

ரூபனரே முன்நின்று அனைத்து வேலைகளையும் கவனித்துக் கொண்டதால், அவரால் மருத தேசம் செல்லவே முடியவில்லை. ஒருவழியாக அனைத்து வேலைகளையும் முடித்த பிறகே சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு மற்ற விஷயங்களை சிந்திக்க முடிந்தது. 

அந்த சமயம் தீட்சண்யரிடம் இருந்து வந்த ஓலையில், “எனது திருமண வேலைகளை தொடங்கி விட்டார்கள். நான் கூட உன்னை இருமுறை வந்து பார்த்தாயிற்று ரூபனா. என் திருமண வேலைகள் முழுவதையும் செய்வதாக கூறிய நீ, இன்னும் ஒரு முறை கூட என்னைக் காண வரவில்லை” என்றவாறு ரூபனரை சாடியிருந்தார். 

அதற்கு மேலும், மருத தேச பயணத்தை தள்ளி போட இயலாது என்று எண்ணியர், இதோ இப்பொழுது மருத தேசம் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். 

ரூபனரின் மனம் தீட்சண்யரைக் காணப் போகிறோம், சமுத்திர தேவிகையை கண்டு விடுவோம் என ஆர்ப்பரித்து மகிழ்ந்தாலும், மனதின் ஒரு ஓரத்தில் சில காலமாகவே ஒரு இனம் புரியா கலக்கம் மனதினை கணக்கச் செய்தது. 

பொதுவாக ரூபனர் முற்றிய நிலையிலான தெய்வபக்தி எல்லாம் கொண்டவர் இல்லை. தாயின் அரவணைப்பில் வளர்ந்திருந்தால், அவ்வாறு வளர்ந்திருப்பரோ என்னவோ, தந்தையிடம் வளர்ந்தவருக்கு கடவுள் நம்பிக்கை இருந்தது. மற்றபடி அதில் தீவிரம் என்றெல்லாம் இல்லை. 

ஆனால் சில காலமாக மனதினை உறுத்தும் பாரம் என்னவென்று புரியாமல் முகவும் தவித்தார். என்னதான் தீட்சண்யரும், வீரேந்திர மருதரும் ரூபனருடைய முடிவுகளை சரி பார்த்தாலும், நிறைய அறிவுரைகளை வழங்கியிருந்தாலும், எங்கோ எதிலோ கோட்டை விடுவதைப் போன்ற உள்ளுணர்வு. 

எதனையோ சரிவர செய்யவில்லையோ என்கிற பதற்றம், பயம். போதிய கல்வியும் இல்லாமல், சரியான வழிகாட்டியும் இல்லாமல், தேவையான பயிற்சிகளும் இல்லாமல் அரச பதவியை சமாளிப்பது மிகவும் கடினமாக இருந்தது. 

தமது முழு நாளையும் மக்கள் பணியிலேயே ஈடுபடுத்தவும் ரூபனர் தயார்தான். அவ்வாறுதான் பணியாற்றிக் கொண்டும் இருக்கின்றார். ஆனாலும், தான் செய்யும் பணியில் ஏதோ ஒரு திருப்தியின்மை, நெருடல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அது என்னவென்று அவரால் அனுமானிக்க இயலவில்லை. 

மனதில் இருக்கும் பாரம் கனக்க, மருத தேசம் என்றதுமே ரூபனரின் மனதில் தோன்றியது கரடுமலை தான். ஆகவே, அரண்மனை செல்லும் முன்பு கரடுமலை செல்ல வேண்டும் என்று தீர்மானித்திருந்தார். 

கரடுமலை அடிவாரத்தை விடியற்காலையில் அடைந்திருந்தார். முன்பும் ஒருமுறை அதிகாலையில் தரிசனம் செய்ததால், கூட்டம் குறைவாக இருந்தது. அதற்காகவே இன்றும் அதிகாலையில் சந்திர நாட்டிலிருந்து கிளம்பி இருந்தார். இருப்பினும் சில மணி நேர பயணம் என்பதால், அன்றைய தினத்தை விட சற்று தாமதமாகவே வந்திருந்தார். 

குதிரையை அருகினில் இருந்த மரத்தினில் கட்டி வைத்தார். தமது கம்பீரமான நடையில் அடிவாரத்தை அடைந்தவரின் மனம் முழுவதும் ஒருவித பரவசம். மலையடிவாரத்தில் அமைந்திருந்த விநாயக பெருமானை கண்மூடி தரிசித்துக் கொண்டிருந்தார். 

அவருக்கு சற்று தொலைவில், ஆலயத்தை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு இளம் யுவதி ரூபனரைக் கண்டதும், ஒரு நொடி தான் காண்பது கனவோ என எண்ணி விழி விரித்தாள். 

அழகிய அடர் நீல நிற பட்டினால் ஆன ஆடையையும், இளம் மஞ்சள் வண்ணத்தில் மேலாடையும் அணிந்திருந்தவள், தமது மேலாடையால் பாதி முகத்தை மறைத்திருந்தாள். 

எதிரில் கண்மூடி நிற்பவரைக் கண்டபடியே வந்து கொண்டிருந்தவளின் விழிகள் அவரை அளவிட்டுக் கொண்டிருந்தது. நல்ல உயரமும், அதற்கு பொருத்தமான உடற்கட்டும், சற்றே பெரிய மீசையும், அழகிய கேசம் வெளியில் தெரியாமல் இருக்க தலைப்பாகையும், காதில் சற்று வித்தியாசமான குண்டலமுமாக உண்மையில் மிக பொறுத்தமாகத்தான் மாறுவேடம் தரித்திருந்தார் ரூபனர். 

மங்கையவளின் மனமும் அவரை பாராட்டதான் செய்தது. அவளுடைய பார்வையும் மெச்சுதலாக அவரை வருடிக்கொண்டே அருகே வர, அவள் வரும்முன்பே, மலையின் மீது ஏற தொடங்கியிருந்தார் ரூபன சத்ரியர். 

வேகமாக வந்தவள், விநாயகரை வணங்கிவிட்டு, வேகவேகமாக ரூபனரை நோக்கி ஓடினாள். சில படிகளை கடந்திருந்த ரூபனரை விரைந்து நெருங்கி, “ஒரு நிமிடம்…” என்றாள் மூச்சிரைக்க. 

ஏற்கனவே தன் பின்னால், யாரோ ஓடிவருவதை உணர்ந்த ரூபனர், யாரென திரும்பி பார்க்க எத்தனித்த வேளையில் கொலுசொலி செவியில் தீண்ட, திரும்பாது விட்டுவிட்டார். இப்பொழுது தன்னை அழைக்கவும், மலை ஏறுவதை நிறுத்தி திரும்பி பார்த்தார். 

அழகிய பட்டாடையில் முகத்தினை மறைத்திருந்தவளின் விழிகளிலேயே பார்வையை பதித்தவரின் மனம் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தது. ஆனால், அதனை முகத்தில் துளியும் வெளிப்படுத்தாமல் வெறுமையான முகத்துடன் இருந்தார். 

நான்கு மாதங்களாக காண துடித்த முகம், மீண்டும் வெகு அருகினில் அவர் கண்கள் மெல்ல அவளை ரசித்தது. ஆனால், ஆராயும் பார்வை போல அவளை மேலிருந்து கீழ் வரை நோட்டம் விட்டார். 

மூச்சிரைக்க எதுவும் பேசாமல் நின்றவளை பார்த்து, “அழைத்தீர்களா…?” என கேள்வியாக கேட்க, 

‘என்ன என்னை தெரியவில்லையா?’ என்று மனதிற்குள் எண்ணியவள், இப்பொழுது அவரின் முகத்தை ஊன்றி கவனித்தாள். ரூபனர் என்ன மறைத்தும் அகத்தின் மகிழ்வு முகத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்தது. சற்று முன்பு விநாயகரை தரிசித்துக் கொண்டிருந்த பொழுது மனதில் பதித்துக் கொண்ட முகத்திற்கும், இப்பொழுது உள்ள முகத்திற்கும் இருக்கும் வித்தியாசம் உணர்ந்ததும் மனம் நிறைவாய் உணர்ந்தாள் மருத தேசத்து இளவரசி சமுத்திர தேவிகை. 

அவள் எப்பொழுதும் வருவது போல வைத்தியசாலைக்குத்தான் வருகை தந்திருந்தாள். இரகசிய வைத்தியசாலைக்கு செல்ல வேறு உடையினில், தன் முகத்தினை மறைத்து கரடுமலை அடிவாரம் வந்தபொழுதே ரூபனரைக் கண்டாள். 

ரூபன சத்ரியர் மாறுவேடத்தில் இருந்த பொழுதும், அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது. இப்பொழுது ரூபனரும் அவளை உணர்ந்து கொள்ளவும் அவள் அடைந்த மகிழ்வுக்கு எல்லையே இல்லை. அவளுடைய மனதில், முதல் பார்வையிலேயே மாறுவேடம் தரித்திருந்த தீட்சண்யரை தோகையினி அடையாளம் கண்டு கொண்ட சம்பவம் நினைவில் வந்தது. 

தன்னை அழைத்த பிறகும் பேசாமல் எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்த ரூபனர், “பெண்ணே உன்னிடம்தான் கேட்டேன். என்னை அழைத்தது போல இருந்தது. அழைத்தாயா?” என அவளது முகத்திலேயே பார்வையை பதித்தபடி மீண்டும் சற்று குரலினில் அழுத்தம் கொடுத்து கேட்டார். 

ரூபனருக்கு சமுத்திராவை பார்த்த மகிழ்ச்சி ஒரு புறம் என்றால், அவள் முகம் காட்டாமல் மறைத்து இருந்தது பெரிய ஏமாற்றமாக இருந்தது. அவளின் பொன் முகம், அவள் முகத்தினில் மூடியிருந்த மேலாடை வழியாக தெரிகிறதா என பார்க்க முயற்சி செய்து கொண்டிருந்தார். ஆனால், முயற்சிக்கு பலன்தான் இல்லை. 

சுற்றிலும் ஆராய்ந்தவர் தனியாக வந்திருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டார். அதற்காகத்தான் இப்படி முகம் மூடி வந்திருக்கிறாள் என்றும் தெரிந்து கொண்டார். ஆனால் ஏன் இப்படி தனித்து வரவேண்டும் என்கிற கோபமும் வந்தது. 

அதற்குள் சமுத்திரா, “ஆம் நான்தான் அழைத்தேன்” என்று திருவாய் மொழிந்து, ரூபனரின் எண்ணவோட்டத்தை தடை செய்தாள். 

“எதற்காக?” என்றவர் முகத்திலிருந்து எதையும் கண்டறிய முடியவில்லை. 

“அது நான் தனியாக வந்திருக்கிறேன். ஆகையால், ஆலயம் வரை உங்களுடன் வரலாம் என்று எண்ணினேன்?” மெல்லிய தயக்கத்தோடு சமுத்திரா உரைக்க, 

“ஏன் நாடு விட்டு நாடு செல்லப்போகிறாயா? தனியாக பயணம் செல்ல இயலாதா?” என்றார் இகழ்ச்சியாக,

சமுத்திராவிற்கும் கோபம் எட்டிப்பார்க்க பதில் கூறாமல் முன்னேறினாள். இதனை எதிர்பாராத ரூபனர், வேகமாக அவளுக்கு முன் சென்று தடுத்து, “இல்லை தெரியாமல் கூறிவிட்டேன். தவறாக எடுத்துக் கொள்ளாதே. நாம் செல்வோம். சென்றமுறை வந்தபொழுதே வழியினில் குரங்குகளைப் பார்த்தேன். உன்னிடம் இருக்கும் ஆயுதம் கொண்டு எத்தனை குரங்குகளை சமாளிப்பாய்? என்னுடனே வா…” என்றவாறு உடன் நடந்தார். 

சமுத்திர தேவிகை ஒரு சிறிய ஆயுதத்தை இடையினில் சொருகியவாறு மறைத்து வைத்திருந்தாள். ‘ஆயுதத்தை பார்த்திருக்கிறார் என்றால், எப்படி பார்வையாலேயே என்னை அளவிட்டிருக்க வேண்டும்’ என்று எண்ணியவள், அவரிடம் திரும்பி, “பெண்களை இப்படித்தான் பார்ப்பீர்களா? உச்சி முதல் பாதம் வரை அலசி ஆராய்ந்து” என்றாள் கோபமாக. 

“பெண்களை என்றால்? என்னைப் பார்த்தால் அனைத்து பெண்களையும் அலசி ஆராய்பவன் போல தெரிகிறதா?” நிதானமான வார்த்தைகள் என்றாலும், அதிலிருந்த கோபத்தின் அளவை அவளால் கணிக்க முடிந்தது. 

‘அவ்வாறெனில் என்ன கூறுகிறார்? என்னை மட்டும்தான் அளவிடும் பார்வை பார்ப்பாரா?’ என எண்ணியவளின் முகம் நொடிப்பொழுதில் செம்மையுற்றது. 

தனது கோபத்திற்கு எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் இருக்கவே, அருகில் நடந்து வருபவளை பார்த்தார். முதல்முறை சந்திப்பில், விழிகளை நோக்கி பேசியவள், இம்முறை பார்வையை தரைக்கு பரிசளித்துக் கொண்டிருந்ததை தற்பொழுது தான் கவனித்தார். அன்று அத்தனை வேலைகளை ஏவியவள், இன்று கேட்கும் கேள்விகளுக்கு வாயைத் திறப்பேனா என்றபடி நடந்து வந்தாள். 

“பெண்ணே உன்னிடம்தான் கேட்டேன்.” 

“இல்லை இடையில் தானே ஆயுதம் வைத்திருக்கிறேன். அதுவும் எளிதினில் வெளியே தெரியாதபடி. ஊன்றி கவனித்தால் மட்டும் தான் தெரியும். அதற்காக தான் அவ்வாறு கேட்டேன்” என்றாள் தன்னிலை விளக்கமாக. 

‘இதற்கு என்ன பதில் கூறுவது. அவள் கூறுவதும் உண்மைதான். நாம் அவளை விழிகளால் நிறைத்துக் கொண்டிருந்ததாலே அவளின் ஆயுதம் கண்களில் பட்டது’ என சிந்திக்கலானார். 

அவருக்கு பதிலை யோசிக்க அதிக சிரமம் தராமல், “உங்கள் பார்வையில் படும்படி வைத்து விட்டேன் போல. சரி விடுங்கள்” என்றாள் இலகுவாக. 

“ஆமாம் தனியாக எதற்காக வந்தாய்?” 

“உடன் வந்தவர்கள் கீழே வைத்தியசாலையில் இருக்கின்றனர்” 

“நீயும் அவர்களுடனேயே ஆலயம் வந்திருக்க வேண்டியது தானே” 

“அது… அவர்கள் ஆலயத்திற்கு வரவில்லை. வைத்திய சாலைக்கு தான் வந்திருக்கின்றனர்.” 

‘என்ன சொல்கிறாள் இவள். இவளை பாதுகாப்பது தானே அவர்கள் வேலை. இவள் செல்லும் இடம் வரப்போகிறார்கள். அவர்களின்றி இவள் என்ன செய்கிறாள்? அதுவும் சாதாரணமான உடையினில்’ என மனதிற்குள் குழம்பினார். 

அதற்குள் ஆலயம் வந்துவிட, ரூபனர் சென்று முருகரை வணங்கி, பிரகாரம் சுற்றி வந்தவர், சிறிது நேரம் ஆலயத்திலேயே அமர்ந்தவாறு சமுத்திராவை தேடினார். ‘என்னுடன் தானே வந்தாள். அதற்குள் எங்கு சென்று விட்டாள்?’ என்று எண்ணியபடி விழிகளை சுழற்றினார். 

ஆனால், சமுத்திரா அவர் கண்களில் படவே இல்லை. அவர் கண்களுக்கு புலப்படாமல் இரகசிய வைத்தியசாலைக்கு செல்ல நினைத்த சமுத்திரா, இறைவனை வணங்கியதும், ரூபனர் கண்களில் படாமல் இரகசிய வைத்திய சாலைக்கு சென்று விட்டாள். 

இரகசிய வைத்தியசாலையில் இருந்த இளம்பெண் இந்த சிலமாத சிகிச்சையின் பலனால் பூரண குணம் அடைந்திருந்தாள். சென்ற மாதம் சுயநினைவிற்கு வந்தவளால், சுற்றுபுறத்தோடு ஒன்றவே இயலவில்லை. மிகவும் மிரண்டு விழித்தாள். 

முதலில் கானகத்தின் நடுவினில் இருப்பதால் அவ்வாறு விசித்திரமாக நடந்து கொள்கிறாள் என்று எண்ணி, அவளை அந்த இடத்தை விட்டு அழைத்து வந்த பொழுது மேலும் மிரண்டாள். வேறு வழியின்றி முன்பு சிகிச்சை அளித்த இரகசிய வைத்தியசாலையின் அறையிலேயே பாதுகாத்து வந்தனர். அங்கே வேலை செய்யும் பெண்கள், இளவரசியார் என அனைவரும் அவளுடன் பேசி அவளை இயல்பாக்க முயல அந்த பெண்ணோ தன் கூட்டில் இருந்து வெளிவர முடியாமல் திணறினாள். 

எப்பொழுதும் பயத்தோடும், யாரும் பார்த்து விடுவார்களோ என்கிற படப்படப்போடுமே இருந்தாள். பல நேரங்களில் அழுகையில் கரைந்தவளை எப்படி தேற்றுவது என்றே யாருக்கும் புரியவில்லை. 

இரகசிய வைத்தியசாலைக்கு வந்த சமுத்திரா, “உணவு உண்டார்களா?” என்று அங்கிருந்த பணிப்பெண்களிடம் விசாரித்தார். 

“ஆம் இளவரசி. மிகவும் அழுதபடியே இருந்தார்கள். கட்டாயப்படுத்தி உண்ண வைத்தோம்.” 

‘நாமும் எவ்வளவோ இது பாதுகாப்பான இடம் என்று புரிய வைத்துவிட்டோம். இன்னும் அந்த பெண்ணால் இயல்புக்கு திரும்ப இயலவில்லையே. சித்தரும் இந்த பெண் குணமானதுமே இங்கிருந்து கிளம்பிவிட்டார். அந்த பெண் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறாள் என்று அறிவது இருக்கட்டும். அவளை இயல்புக்கு மாற்ற கூட முடியாமல் ஒரு மாதமாக திணறுகிறோமே!’ என்று சமுத்திரா மனதிற்குள் வருந்தினாள். 

“சரி நீங்கள் அனைவரும் இங்கேயே இருங்கள். இன்று நான் மட்டும் சென்று பார்க்கிறேன்” என்றவாறு அந்த பெண் இருந்த அறைக்கு பணிப்பெண்களிடம் கூறிவிட்டு சென்றாள். 

உள்ளே அறையில் எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தவளை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. இளவரசி சமுத்திராவைக் கண்டதும், எழுந்து கொண்டாள். 

“உணவு உண்டு விட்டீர்களா?” என கேட்டதும் மௌனமாய் தலையசைத்தாள். 

“தங்கள் பெயரையேனும் கூறலாமில்லையா?” என்றதற்கு தலை குனிந்து நின்று கொண்டாள். 

“சரி உன்னிடம் கேட்டு கேட்டு அலுத்து விட்டது. நீ உன் பெயரை கூறும் வரை உன்னை தாமரை என்று அழைக்கப் போகிறேன்” என சமுத்திரா கூற அந்த இளம்பெண் விழி விரித்தாள். 

சமுத்திரா என்ன நினைத்தாளோ அந்த பெண்ணின் அருகினில் சென்றவள் நடுங்கும் அவளுடைய கரங்களைப் பற்றி தமது கைகளுக்குள் வைத்துக்கொண்டு, “தாமரை, நீ எதற்காக வருந்துகிறாய் என்று தெரியவில்லை. நான் இந்த நாட்டின் இளவரசி என்று தெரிந்தும் என்னிடம் சொல்ல தயங்குகிறாய் என்றால், எனக்கு காரணம் புரியவில்லை. எதுவாக இருப்பினும் நீ கவலை கொள்ளாதே!” என தேற்றினாள். 

அவளுடைய ஆறுதல் மொழிகள் அந்த பெண்ணிற்கு இதமளித்தது. ‘இதுபோன்று ஆறுதல் கூறவும் நமக்கு உறவுகள் இருக்கிறதா?’ என்று எண்ணியவளின் மனதில், தன்னை உடன்பிறந்த சகோதரி போல போற்றி பாதுகாத்த இரு ஆண் மகன்களின் முகம் நினைவில் வர மீண்டும் கதறினாள். 

கதறி அழும் பெண்ணை தன் தோள் சாய்த்து, ஆறுதல் வழங்கினாள் மருத இளவரசி சமுத்திர தேவிகை.

Advertisement