Advertisement

சத்ரிய வேந்தன் – 25 – மக்கள் துயர்
வேந்தன் நானும் என் வேலியை மறக்கின்றேன்…
உன் முகம் காண தவிக்கின்றேன்…
என் தனிமைத்துயர் தீர,
வேதனையை போக்கிட,
வரமாய் நீ வேண்டும்…
ரூபன சத்ரியர் நாட்டின் பணிகளில் தம்மை முழுதாக அர்பணித்துக் கொண்டார். வெகு குறுகிய காலத்தில் படைத் தளபதியாக இருந்து மன்னராக பொறுப்பினை ஏற்றதினால், மருத இளவரசர் தீட்சண்யரும், மருத அரசர் வீரேந்திர மருதரும் தமக்கு கற்றுக் கொடுத்தவற்றை எல்லாம், அதிசிரத்தை மேற்கொண்டு கற்றுக் கொண்டவர் அச்சரம் பிசராமல் செயல்படுத்தி வந்தார். 

தமக்கு எப்பொழுது எந்த சந்தேகம் தோன்றினாலும், எங்கு தடுமாறினாலும், எந்த ஒரு பெரிய முடிவாகினும்… ராஜ புத்திரரும், தமது ஆருயிர் நண்பருமான தீட்சண்யரிடம் கலந்தாலோசிப்பார். 

ஆனால், பெரும்பாலும் அப்படி அவர் குழம்பி தவிக்கும் அளவு சந்தர்ப்பம் அமைந்ததில்லை. அவர் எடுத்திருக்கும் முடிவுகள் மிக சரியானதாகவே இருக்கும். பல முடிவுகளை அவர் எடுத்த பின்பு தீட்சண்யரிடம் கருத்து கேட்க, அல்லது தாம் எடுக்கப் போகும் முடிவினை விளக்கி கருத்து கேட்க, தீட்சண்யர் ரூபனரின் கருத்தினை பாராட்டி வரவேற்பார். 

அப்படி சமீபகாலத்தில் அவர் எடுத்திருந்த முடிவுதான் கதிரவனை படைத்தளபதியாக நியமித்தது. தனக்கு எந்த நேரமும் உறுதுணையாக இருந்து, நாட்டின் பணியில் தம்மை முழுவதும் ஈடுபடுத்திக் கொள்ளும் வீரனை கௌரவிக்கும் பொருட்டு இந்த பதவியைக் கொடுத்திருந்தார். 

சந்திர நாட்டின் அரசராக முடிசூடிய இருவார காலத்திற்குள் எடுக்கப்பட்ட பெரிய முடிவு என்பதால், தீட்சண்யரிடமும், சபையினரிடமும் கருத்தினை தெரிவித்து அவர்களின் விருப்பம் தெரிந்த பிறகே செயல்படுத்தினார். 

கதிரவன் படைத்தளபதியாக நியமித்த பொழுதிலும், அரசர் ரூபன சத்ரியர் அரண்மனையிலோ, அரசவையிலோ இல்லாத தருணங்களில் தமது முழு நேரத்தையும் அரசருடனேயே கழிப்பான் அந்த வீரன். பல நேரங்களில் அரசவையில் இருக்கும் தருணங்கள் கூட, கதிரவனை உடன் வைத்துக் கொள்வார் ரூபனர். 

அன்றைய அரசபையில், மருத தேசத்திற்கு மாதாந்திர கப்பம் கட்டவேண்டியதைப் பற்றி நினைவு படுத்தினார்கள். 

“மந்திரியாரே பொதுவாக கப்பம் கட்ட நம் நாட்டில் இருந்து யார் செல்வார்கள்?” என ரூபனர் கேட்டார். 

“காவலர்கள் தொடங்கி தளபதி வரை யார் வேண்டுமாகினும் செல்லலாம் வேந்தே” என மந்திரியார் பதில் கூறினார். 

“அரசர்கள் செல்வதில்லையா?” ரூபனர் எதையும் சிந்திக்காது மனதில் தோன்றியதை கேட்டு விட்டார். 

உண்மையில் அவருக்கு சமுத்திராவின் நினைவாகவே இருந்தது. ஒரு முறை சென்று பார்த்துவிட்டு திரும்பினால், நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால், என்ன காரணம் கொண்டு சென்று பார்ப்பது? அவனும் சாதாரண குடிமகன் இல்லை, அவளும் சாதாரண பிரஜை இல்லை, அவர்கள் எண்ணிய நேரத்தில் பார்த்துக் கொள்வதற்கு. 

அப்படியே ஏதாவது ஒரு காரணம் வைத்துக்கொண்டு சென்று மருத தேசம் சென்றாலும், அவளைக் காண முடியும் என்பதில் எந்த நிச்சயமும் இல்லை. 

ரூபன சத்ரியர் கூறியதும் அரசபையில் அனைவரும் திகைப்படைந்தனர். பின்னர் மந்திரியார் எதையோ கணித்தவராய், “தாராளமாக செல்லலாம் அரசே. நீங்கள் மருத யுவராஜர் தீட்சண்ய மருதரைக் காண விருப்பம் கொண்டு கேட்கிறீர்கள் போலும். உங்களுக்கு நேரம் அமையும் சமயம் சென்றுவிட்டு வாருங்கள். 

ஆனால், வேந்தே காவலர்கள் என்றால் அவர்கள் மட்டும் சென்றுவிட்டு திரும்பிவிடலாம். ஆனால், தாங்கள் செல்ல வேண்டுமாயின் தகுந்த பாதுகாப்புடன் செல்ல வேண்டியிருக்கும்” என்று நினைவு படுத்தினார். 

மந்திரியார் கூறிய பிறகே தாம் சபையில் இப்படி யோசிக்காமல் பேசிவிட்டதை உணர்ந்தார் ரூபன சத்ரியர். ரூபனர் பொதுவாக இப்படி கவனக்குறைவாக இருப்பவரோ, எதையும் சிந்திக்காமல் பேசுபவரோ இல்லை. இன்று இவ்வாறு பேசியதை நினைத்து மனதிற்குள் முதன்முறையாக பரிதவித்தார். 

‘என்ன கேட்டுவிட்டேன்? எதையும் சிந்தனை செய்யாது இப்படியா சபையினில் கேட்பது?’ என தன்னையே மனதிற்குள் கடிந்து கொண்டவர் தொடர்ந்து, ‘இனி கவனமாக இருக்க வேண்டும். எதையும் சிந்தித்து செயல்பட வேண்டும்’ என்று தீர்மானம் செய்து கொண்டார். 

அதன்பிறகு, நாட்டில் காவல் பணியில் இருக்கும் வீரர்கள் இருவரை அழைத்து, மருத தேசத்தில் கப்பம் கட்டிவிட்டு வருமாறு பணித்துவிட்டு, அரச அலுவல்களில் மூழ்கினார். 

அரச அலுவல்களில் மூழ்கி இருந்த வரை அவருக்குள் புதைந்திருந்த உணர்வுகள், இரவில் மஞ்சத்தில் துயில் கொள்ள முயற்சித்த பொழுது வீறுகொண்டு பூதாகரமாய் எழுந்து இம்சித்தது. 

மருத தேசத்திற்கு எந்த காரணம் கொண்டு செல்வது என்று இதுவரை தவித்த மனம், இன்று கப்பம் கட்டும் காரணம் வைத்து மருத தேசம் செல்லும் வாய்ப்பு இருப்பதை தெரிந்து கொண்ட பொழுது மனம் கொண்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. 

ஆனால், அந்த இன்பம் சில நொடிகள் கூட நீடிக்கவில்லை. ‘எதையும் சிந்திக்காமல் அரசபையில் மருத தேசம் செல்ல விரும்புவதாக மறைமுகமாக தெரிவித்து விட்டோமே. மந்திரியார் இதில் தீட்சண்யரை சம்மந்தப் படுத்தியதால் தப்பித்தோம். இல்லையேல் அனைவரும் என்ன எண்ணியிருப்பார்கள்?’ என்றவாறு காலையில் நிகழ்ந்த அனர்த்தத்தை எண்ணிக்கொண்டவர் தொடர்ந்து, 

‘மந்திரியார் கூறுவதும் சரிதான். கப்பம் கட்டுவதற்கு, ஒரு கூட்டத்தையே அழைத்துக் கொண்டு செல்ல இயலுமா? அது முறையாக இருக்குமா? அப்படியே சென்றாலும் சமுத்திராவை சந்திக்க இயலும் என்பதில் என்ன நிச்சயம்?’ தமக்குள் எண்ணிக்கொண்டிருந்தார். மனதின் வெம்மைக்கு மாறாக வெளியில் மழை பெய்து கொண்டிருந்தது. 

மழை சப்தத்தில் தன் கவனம் கலைந்தவர், மெல்ல எழுந்து மாடியின் முகப்பில் இருந்து மழையை ரசித்தார். மண் வாசனை நாசியை வருட, அதன் நறுமணத்தை ஆழ்ந்த மூச்சுகள் மூலம் அனுபவித்தார். மனதிற்குள் ஏனோ இனம் புரியாத மகிழ்வு படர்வதாய் தோன்றியது. 

மனதின் சஞ்சலங்கள் மட்டுப்பட்டதும், ‘மந்திரியார் என்ன கூறினார்? தீட்சண்ய மருதரைக் காண விருப்பம் கொண்டு கேட்கிறேன் என்றா? நாம் ஏன் அதையே செயல் படுத்தக் கூடாது?’ என்று எண்ணியவர், 

மறுநிமிடமே, ‘ஆம் தீட்சண்யரைக் காண சென்றால் மட்டும்… உடன் யாருமின்றி தனித்து செல்ல இயலுமா? கடினம்தான். தனியாக செல்ல வேண்டுமெனில், மாறுவேடத்தில் தான் செல்ல இயலும். 

ஆனால், சென்ற முறை நகர்வலம் சென்ற பொழுது செய்த பிழைகளை செய்து விடக்கூடாது. ஒரு மன்னராக அனைத்தையும் தெளிவாக சிந்தித்து செயல்பட வேண்டும்’ என்று எண்ணிக் கொண்டார். 

கடந்தமுறை பட்டாபிஷேக தினத்தன்று தாம் மட்டும் மிக சரியாக மாறுவேடம் போட்டுவிட்டு, உடன் வந்த கதிரவனின் மாறுவேடத்தில் அதிக கவனம் செலுத்தாமல் இருந்தது இன்றும் உறுத்தலாகவே இருந்தது. அதோடு, காவலர்களும் சற்று தொலைவில் பின் தொடராமல், கண்ணுக்கெட்டும் தொலைவில் பின்தொடர்ந்ததும் ரூபனருக்கு பிடித்தமில்லை. இதை அனைத்தையும் அன்றைய இரவில் துயில் கொள்ள முயற்சித்த பொழுது, ‘இன்று நாம் எவ்வாறு செயல்பட்டோம்?’ என்று சிந்தனையில் மூழ்கும் வேளையிலேயே அறிந்து கொண்டார். 

நாம் பெரும்பாலும் நமது சிந்தையில் ஒன்றை சிந்தித்துக் கொண்டே இருந்தால், அதனைப் பற்றிய தெளிவும், விடையும் நமக்கு இரவின் அரைகுறை உறக்கத்திலும், சிந்தனையிலும் கிடைக்கும். ரூபனரும் அவ்வாறே சில பிழைகளை கண்டறிந்திருந்தார். 

‘இந்த முறை மாறுவேடம் தரித்து தீட்சண்யரைக் காண மருத தேசம் சென்று விடலாம். பிறகு சமுத்திரா நம் கண்ணில் பட்டால் பார்த்துக் கொள்வோம், மருத தேசம் செல்வதே அசாத்திய காரியம், இதில் நாமாக வேறு எதையும் முயற்சிக்க வேண்டாம். எல்லாம் கடவுளின் எண்ணம் போல நடக்கட்டும். நாம் கதிரவன் இன்றி சென்றால் தீட்சண்யர் நம்மை படுத்தி எடுத்து விடுவானே. 

எதுவாக இருந்தாலும், இப்பொழுது இருக்கும் அரச அலுவலில் எங்கும் செல்ல இயலாது. பிறகு பார்ப்போம்’ என்று எண்ணிக் கொண்டார். 

மழையின் வேகம் அதிகரிப்பதைக் கண்டு ரசித்தவர், தமது சிந்தனையில் இருந்து விடுபட்டு, இப்பொழுது மனதை நிலைப்படுத்துவதைத் தவிர வேறு வழியின்றி போகவே, சமுத்திராவை சந்திக்க தோன்றிய திட்டத்தை உடனே செயல்படுத்த முடியாத தன் இயலாமையை எண்ணி இலேசாக பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு, படுக்கைக்கு சென்றார். 

அடுத்த நாள், ரூபன சத்ரியர் அரசபையில் மந்திரி பெருமக்களுடன் வீற்றிருக்க, அன்றைய அரசபை செயல்பட தொடங்கியிருந்தது. 

அன்று அரசபைக்கு வந்திருந்த வழக்குகளை மன்னர் ரூபன சத்ரியர் விசாரித்துக் கொண்டிருந்தார். 

அந்த நேரம் அரசபைக்குள் வந்த வாயிற்காவலன், “வேந்தே தங்களைக் காண நாட்டு மக்கள் சிலர் வந்திருக்கின்றனர்” என்று கூறினார். 

“உள்ளே அனுமதியுங்கள்” என காவலாளிக்கு ரூபனர் உத்தரவிட, வாயிற்காவலன் அவர்களை உள்ளே அனுமதித்தார். 

உள்ளே வந்தவர்களின் கவலை முகமும், கண்ணீர் முகமும் அனைவரையும் சற்று பதறச் செய்தது. 

“என்னவாயிற்று? ஏன் நீங்களெல்லாம் இவ்வளவு கவலையோடு இருக்கிறீர்கள்?” என மன்னர் கேட்கவும், யாராலும் பதில் கூட கூற இயலாமல் விசும்பத் தொடங்கியிருந்தனர். 

“நீங்கள் கூறினால் தானே எங்களால் ஆன உதவியை செய்ய இயலும்” என்று மிகவும் தன்மையாக மன்னர் கேட்டார். 

கூட்டத்தில் இருந்த ஒருவர், “வேந்தே, நேற்று பெய்த கன மழையால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு விட்டது. நெல் வயல்களில் நீர் தேங்கி பயிர்கள் பெரும் சேதம் அடைந்துவிட்டது” என்றார் ஒருவர். 

“ஆம் வேந்தே, இது மழைக்காலம் என்பதால் மாலையில் வீடு திரும்பும் நேரம், வயலின் வரப்பினை வெட்டி வைத்துவிட்டு வீடு திரும்புவோம். நேற்றும் அவ்வாறுதான் செய்தோம். ஆனால், யாரோ இரவோடு இரவாக வயல் வரப்புகளை மூடிவிட்டு சென்றிருக்கின்றனர். அதனால் வயல்களில் மழை நீர் தேங்கி பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது வேந்தே” என மனம் வருந்தி விசும்பினார் மற்றொருவர். 

“இன்னும் எத்தனை தினங்கள்தான் கார்முகிலன் தொல்லை தருவானோ அரசே. நாங்கள் சாதாரண விவசாயிகள். எங்களால் இந்த நஷ்டத்தை எப்படி தாங்க இயலும்?” என்று மனம் வருந்தினார் மற்றொருவர். 

மிகவும் எதிர்பார்ப்போடு பல மாத காலங்கள் தங்கள் உழைப்பைக் கொட்டி, வளர்த்த நெற்பயிர்கள் அறுவடைக்கு முன்பு சேதமடைந்தால் அது விவசாயிகளுக்கும், அவர்கள் குடும்பத்திற்கும் மட்டும் சேதம் இல்லை. நாட்டிற்கே பஞ்சம் ஏற்படுத்தும் செயல் ஆகும். 

களவாடி செல்லுதலே கொடுமை என்றால், இந்த செயல் அதை விடவும் கொடுமையாகவே பட்டது. மற்றவர்கள் உழைப்பைத் திருடி, திருடிய பொருட்களை அவர்கள் தேவைக்காக உபயோகப்படுத்துவதைக் கூட பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், மற்றவர்களின் உழைப்பை உபயோகமே இல்லாமல் சேதப்படுத்துவதை எதில் சேர்க்க? 

மக்கள் தங்கள் துயரங்களை கண்ணீருடன் கூறக்கூற, ரூபனரின் கோபம் உச்சியைத் தொட்டது. நிதானத்தை இழக்கக்கூடாது என, எப்படி கட்டுக்குள் கொண்டு வந்தாலும், கட்டுப்பட மறுத்தது. முயன்று தமது கோபத்தை கட்டுப்படுத்தி, பொறுமையை இழுத்துப் பிடித்தவாறு, அந்த சூழ்நிலையை கையாண்டார். 

“யாரும் கவலைப் படாதீர்கள். இது நாம் சோர்ந்து போகும் நேரம் இல்லை. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்போம். கவலைப் படாதீர்கள். விவசாயிகளுக்கு ஒரு துயரம் என்றால், அது நாட்டிற்கே துயரம். 

உங்கள் துயர் துடைப்பது எனது முழுமுதற் கடமை” என்று விவசாயிகளுக்கு ஆறுதல் தந்தவர், 

கதிரவனை நோக்கி, “கதிரவா இது எப்படி நடந்தது? இதன் பின்னணியில் செயல் பட்டவர்கள் யார்? என்கிற விவரங்கள் எனக்கு உடனடியாக வேண்டும். அதோடு நேற்றிரவு காவல் பணியில் இருந்த வீரர்கள் அனைவரையும் நான் உடனே காண வேண்டும்” என்று கர்ஜிக்கும் குரலில் கட்டளையிட, அந்த குரலே கூறியது அவரின் கோபத்தின் அளவை. அவரின் கட்டளையை நிட்டைவேற்ற உடனே புறப்பட்டார் சந்திர நாட்டின் படைத்தளபதி கதிரவன். 

அதன்பிறகு சபையில் இருந்த மந்திரிப்பெருமக்களைப் பார்த்தவர், “மந்திரியாரே, மக்களின் துயர் தீர்க்க என்ன வழி? பயிர்களை சேதத்திலிருந்து காக்க உடனடியாக எதுவும் செய்ய இயலுமா?” எனக் கேட்டார். 

இத்தனை நேரமும் ரூபனரின் ஆளுமையான குரல் மட்டுமே அந்த சபையினை நிறைத்திருந்தது. உடனடியாக செய்ய வேண்டியவற்றை பட்டியலிடும் அவரின் செய்கையும், ஆளுமையும் ஒரு ராஜ வம்சத்து புத்திரனின் செயல்களை ஒற்றிருந்தது என்னவோ உண்மை. 

“மன்னர் பெருமானே விளை நிலங்களை சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்றும் பணியை துரிதப்படுத்த வேண்டும்” என்று முதன் மந்திரியார் கூறினார். 

“ஆகட்டும்” என முதன் மந்திரியாரிடம் கூறிவிட்டு, விவசாயிகளை நோக்கி, “நீங்கள் ஏற்கெனவே பெரும் சேதம் அடைந்திருப்பீர்கள். ஆகையால், மழை நீரை வெளியேற்றும் பணிக்கான செலவையோ, உங்கள் நஷடத்திற்கான இழப்பீட்டு தொகை பற்றியோ எந்த கவலையும் வேண்டாம். 

அனைத்தும் இந்த அரசே ஏற்கும். ஐந்து நபர்கள் செய்ய வேண்டிய வேலையை பத்து நபர்கள் கொண்டு செய்யுங்கள். அதற்கும் மேலே ஆட்கள் கிடைத்தாலும் சேர்த்துக் கொள்ளுங்கள். எவ்வளவு விரைவாக வேலையை முடிக்கின்றோமோ அந்தளவு சேதாரம் குறையும். உங்களுக்கு தேவையான ஆள் பலத்திற்கு விரைந்து ஏற்பாடு செய்கின்றேன். 

எல்லாருடைய வயலும் எங்கு இருக்கிறது என்பதனைப் பற்றிய விவரங்களை அரண்மனைக் கணக்கரிடம் கூறிவிட்டு செல்லுங்கள். அவர் ஆய்வு செய்துவிட்டு இழப்பீட்டினை கொடுப்பார்” என்று கூறி அனைவரையும் அனுப்பி வைத்தார். 

விவசாயிகள் தங்கள் விவரங்களை கணக்கரிடம் தந்துவிட்டு செல்லவும், அரசபையில் மந்திரி பெருமக்களிடம் சிலவற்றை கலந்தாலோசித்தார். 

அவர்கள் மன்னரின் யோசனையை ஏற்கவும், அதனை உடனே செயல்படுத்த தொடங்கினார். 

காவலரை அழைத்து, மக்கள் அனைவருக்கும் ஒரு அறிவிப்பினை கூற சொன்னார் ரூபன சத்ரியர். அந்த அறிவிப்பின் சாராம்சம், “மக்கள் அனைவரும் விவசாயிகளுக்கு அவர்களின் வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவதற்கு உதவி செய்யுமாறு அரசர் கேட்டுக்கொண்டார். தங்களின் ஓரிரு நாள் உழைப்பும் நாட்டிற்கு பெரும் உதவியாய் இருக்கும். விவசாயிகளின் துயர் நாட்டின் துயர். நாட்டின் துயர் துடைக்க கரம் கோர்ப்போம். வாழ்க சந்திர நாடு!” என்பதாகும். 

மன்னரின் கோரிக்கை நியாயமாக பட்டதால், மக்கள் அனைவரும் விவசாயிகளுக்கு உதவி செய்ய சென்றனர். உதவிக்காக சென்ற மக்கள் முழு ஈடுபாடோடு செய்ததோடு மட்டுமில்லாமல், அவர்கள் செய்த வேலைக்கான ஊதியத்தையும் பெற மறுத்து விட்டனர். 

மந்திரி பெருமக்களும், அரசரும், கணக்கருடன் மேற்பார்வையிட்டு இழப்பீட்டு தொகையை கணித்து வந்தனர். நாட்டு மக்கள் ஊதியம் பெறாமல் வேலை செய்ததினால், இழப்பீட்டு தொகை எதிர்பார்த்ததை விடவும் குறைவாக வந்திருந்தது. தக்க சமயத்தில் கிடைத்த உதவியினால் விவசாயிகள் மகிழ்ந்தனர். 

பெரும் இழப்பீடு ஏற்பட்டிருக்க வேண்டிய நேரத்தில், பிரச்சனையை அழகாய் கையாண்டு வயலின் சேதாரங்களை குறைத்து, மக்களின் உதவியைப் பெற்று பெரும் நஷ்டத்திலிருந்து காப்பாற்றியதன் மூலம், மக்களின் மனதில் நிரந்தர இடத்தைப் பிடித்தார் ரூபன சத்ரியர்.

Advertisement