Advertisement

சத்ரிய வேந்தன் – 14 – வெகுமதி
உன் வீரம் வான்புகழ்
அடையட்டும்…
உன் திறமையும்,
விடாமுயற்சியும்,
பொறுமையும்
உன்னை சிறந்த
தலைவனாக செதுக்க
இறைவனின் அருளும்,
ஆசியும்
என்றும் உனக்கே…
தீட்சண்ய மருதர் வேங்கை நாட்டிலிருந்து புறப்பட்டு, சந்திர நாடு நோக்கி தமது பிரயாணத்தை தொடங்கினார். மருத சக்கரவர்த்தி வீரேந்திரரின் முன்னேற்பாட்டின்படி ஒவ்வொரு நாட்டைக் கடக்கும் பொழுதிலும் அந்தந்த நாட்டின் வீரர்கள் சிலர், தீட்சண்யருடன் இணைந்து அவர்கள் நாட்டின் எல்லை வரை பயணித்தனர்.
ஏற்கனவே தங்கை சமுத்திர தேவிகையுடனும், மருத தேசத்து நெசவாளர்களோடும் மருத தேசத்திலிருந்து, வேங்கை நாடு பயணித்த பொழுது, தந்தை வீரேந்திரர் இதே போன்றதொரு ஏற்பாட்டினை செய்திருந்தார். ஒரே வித்தியாசம் என்னவென்றால் அப்பொழுது வீரர்கள் இவர்களின் கண் பார்வையில் பயணித்தனர். இப்பொழுது தீட்சண்யருடனே பயணிக்கின்றனர்.
அதோடு, அப்பொழுதைய பாதுகாப்பு சமுத்திராவினை உடன் அழைத்து சென்றதினால் என்பதனை தெள்ளத்தெளிவாக தீட்சண்யரால் உணர முடிந்தது. ஆனால், இப்பொழுது உடன் வரும் வீரர்கள் குறித்து, அவருடைய மனம், ‘எனக்கு எதற்கு இந்த வழித்துணை காவலர்கள்? நான் பல முறை தனியே பயணித்து இருக்கிறேனே? தந்தை என்னை உடனே புறப்படச் சொன்னதற்கும், இதற்கும் ஏதேனும் காரணம் இருக்குமோ? கண்டிப்பாக இருக்கும்’ என்ற வண்ணம் சிந்தனையில் உழன்றது.
தீட்சண்யரால், தந்தையாரின் முன்னேற்பாடுகளை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. எப்பொழுதும், எந்த காரியத்திலும், அதிலிருக்கும் அனைத்து விஷயங்களையும், நன்கு சிந்தித்து அவர் செயல்படும் விதமும், அதற்கேற்றாற்போல் அவர் எடுக்கும் முடிவும், அவருடைய ஆளுமையையும், திட்டமிடும் பண்பையும் தெளிவுற உணர்த்தும்.
அது போன்ற தருணங்களில் எல்லாம், ‘நாமும் இது போன்று சமயோஜிதமாய் சிந்தித்து செயல்படுவோமா?’ என்ற எண்ணம் தீட்சண்யரின் மனதில் எழாமல் இருந்ததில்லை.
சில விஷயங்களை கல்வியையும் தாண்டி இது போன்ற அனுபவங்கள் கற்றுக் கொடுக்கும் என்பதனை கண்ணெதிரில் கண்டவர் தீட்சண்யர். அவர் குருகுலத்தில் கற்றதைக் காட்டிலும், தந்தையாரிடம் பெற்ற அனுபவ பாடமே அதிகம். அந்த பாடமே இப்பொழுதும் தந்தையாரின் இந்த ஏற்பாடுகளால், ஏதோ நிலைமை சரி இல்லை என்பதாக அவருடைய உள்மனம் உணர்த்தியது. ஆனால், அவருடைய பயணம் அதைப்பற்றி அவரை மேலும் சிந்திக்க விடவில்லை.
அவ்வப்பொழுது சிறிது ஓய்வும், தொடர் பயணமுமாக தீட்சண்யர் சந்திர நாட்டின் அண்டை நாட்டினை அடைந்திருந்தார்.
அண்டை நாட்டின் வீரர்களோடு தீட்சண்யர் சந்திர நாட்டின் தென்னாற்றங்கரை எல்லையை அடைந்தார். ஒவ்வொரு நாட்டின் எல்லையிலும், இவர்கள் செல்லும்பொழுது அந்த நாட்டின் வீரர்கள் காத்திருப்பார்கள். ஆனால், சந்திர நாட்டின் எல்லையை இவர்கள் அடைந்த பின்பும் அங்கே வீரர்கள் வரவில்லை.
“இனி நான் சென்று விடுகிறேன். தாங்கள் உங்கள் நாட்டிற்கு திரும்பலாம்” என்று தமது ஆளுமையான குரலில் தீட்சண்யர் மற்ற வீரர்களிடம் கட்டளையிட்டார்.
“மன்னிக்க வேண்டும் இளவரசரே! தங்களுடன் சந்திர நாட்டின் அரண்மனை வரை வர வேண்டும் என்பது எங்களுக்கான கட்டளை. அதோடு இந்த நாட்டின் எல்லையில், சந்திர நாட்டு வீரர்கள் மட்டுமின்றி மருத தேசத்து வீரர்களும் இணைந்த பின்பே பயணத்தை தொடங்க வேண்டும் என்பதும் எங்களுக்கு கிடைத்த கட்டளை” என்று தாழ்மையுடன் கூறினான் அந்த வீரர்களில் ஒருவன்.
இதுவும் தந்தையின் ஏற்பாடாகத்தான் இருக்கும் என்று எண்ணியவன், அவரின் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் இருக்கும் என தெளிவுற தெரியுமாதலால், “ஆகட்டும். காத்திருப்போம்” என பிற வீரர்களிடம் கூறிவிட்டு, மற்ற வீரர்களுக்காக காத்திருக்கத் தொடங்கினான்.
காத்திருக்கும் நேரத்தில், கரை புரண்டு ஓடும் தென்னாறு அவரது சிந்தனையை கலைக்கவில்லை. அவருடைய மனம் தந்தையின் செயல்களுக்கான காரணத்தை ஆராய்ந்து கொண்டிருந்தது. ‘சந்திர நாட்டு வீரர்கள் வருவார்கள் சரி. ஆனால், மருத தேசத்து வீரர்களும் வருகிறார்கள் என்றால்…?’
இதுவரை நடந்த ஏற்பாடுகளோடு, தந்தையின் தற்பொழுதைய ஏற்பாடு வரை அலசி ஆராய்ந்தவருக்கு விஷயம் என்னவென்று பிடிபட்டது. ஆனால், மனம் உணர்ந்து கொண்ட விஷயம்தான் உவப்பனதாக இல்லை. நொடியில் அவரின் முகம் வாடியது.
‘கடவுளே! என்ன கொடுமை இது! எவ்வளவு யோசித்தும் மனம் ஒரே பதிலையே தருகிறதே. என் யூகம் பொய்க்க வேண்டும்’ என மானசீகமாக கடவுளை வேண்டினார். அந்த வேண்டுதல் நிறைவேறாது என்று அறியாமல்.
சிறிது நேரத்தில் மருத தேசத்திலிருந்து, மருத தேசத்தின் படைத்தளபதியும், அவருடன் சில வீரர்களும் தென்னாற்றங்கரையை வந்தடைந்தனர். மருத தேசத்தின் படைத்தளபதி, தீட்சண்யரிடம் மருத சக்கரவர்த்தி வீரேந்திர மருதர் அனுப்பிய ஓலையை கொடுக்கவும், அதனை படித்த தீட்சண்யரின் மனம் கலங்கியது.
தீட்சண்யரின் மனம் யூகித்ததைப் போன்றே தந்தையிடமிருந்து செய்தி வந்திருந்தது. “சந்திர நாட்டின் மன்னர் அருள் வேந்தர் இறைவனடி சேர்ந்திருந்தார்” என்பதே அந்த செய்தியாகும். அருள் வேந்தருடைய மோசமான உடல் நிலையிலும், அந்த மாவீர சக்கரவர்த்தி இத்தனை காலம் உயிரைக் கையில் பிடித்து காத்திருந்ததே பெரிய விஷயம்தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக மன்னர் பட்ட சிரமத்தை நேரில் கண்டவரது மனம் இன்றும் அவரது வேதனையை எண்ணி கலங்கியது .
சந்திர நாட்டின் அரசியார் சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்திருக்க, வாரிசுகள் இல்லாத நாட்டில் அரசரும் நோய்வாய்ப்பட, நாட்டிற்குள் ஏற்பட்ட குழப்பங்களையும், சதிகளையும் கட்டுக்குள் கொண்டு வரவே தீட்சண்யர் இரண்டு வருடங்களாக கடும் முயற்சி செய்து கொண்டிருந்தார்.
இந்த இரண்டு வருடங்களில் பல சதிகளை முறியடித்து, பல சதி கூட்டங்களை அழித்து, சந்திர நாட்டினை திறம்பட தீட்சண்யர் காத்து வந்தார். இன்னும் சந்திர நாட்டினை கைப்பற்ற மன்னரின் உறவினரான கார்முகிலனும், அவனுடைய கூடத்தினரும் பெரும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். அது முடியவே முடியாது என்று தெரிந்த பின்பும், நாட்டை அழிக்கவாவது வேண்டும் என்ற எண்ணம் கொண்டு திரிகின்றனர்.
கார்முகிலனின் கூட்டத்தை இயன்றவரை தீட்சண்யர் அழித்திருந்தார். ஆனால் இன்னும் முழுமையாக அழிக்க முடியவில்லை. அதற்கான முயற்சிகளில்தான் சமீபகாலமாக ஈடுபட்டிருந்தார்.
இன்னும் சந்திர நாட்டிற்கு பொருத்தமான ஒரு மன்னரை தேர்வு செய்யாத நிலையில், கார்முகிலனின் கூட்டத்தையும் முழுமையாக அழிக்காத சூழலில் சந்திர நாட்டு மன்னர் அருள் வேந்தரின் மரணம் பலத்த அடிதான். இந்த சூழ்நிலையைக் கையாள்வது கத்தியின் மேலே நடப்பது போன்று.
‘ஏற்கனவே சந்திர நாட்டு மக்கள், மன்னரை இழந்த துயரில் இருப்பார்கள். இது போன்ற நேரத்தில் நாட்டில் கழகமோ, சண்டைகளோ என்றால் நிச்சயம் அவர்களால் அதனை தாங்க இயலாது’ என்று மக்களின் துயரை எண்ணி மிகவும் வருந்தினார் தீட்சண்யர்.
‘இல்லை என் மக்களை எந்த நாளும் வருந்த விடமாட்டேன். அவர்களுக்கு எந்த துயரமும் தீண்டாது. அவர்களைக் காப்பது என் தலையாய கடமை’ என மனதிற்குள் எண்ணிக் கொண்டார்.
தந்தையார் அனுப்பிய ஓலையில் தொடர்ச்சி இருப்பதை அறிந்த தீட்சண்யர், அந்த ஓலையோடு இணைக்கப் பட்டிருந்த மற்றொரு ஓலையினைப் படித்தார்.
மழைக்காலத்தில் நொடிப்பொழுதில் தோன்றி மறையும் மின்னல் கீற்றைப் போன்று, இரண்டாம் ஓலையை படித்தவரது முகமும், விழிகளும் தற்போது இருந்த சோகத்தையும், கவலைகளும் மறைந்து கணப் பொழுதில் பிரகாசித்து இயல்புக்கு திரும்பியது.
ஓலையை படித்ததும், அருகினில் நின்றிருந்த படைத்தளபதியை கேள்வியாகப் பார்க்க…
படைத்தளபதி அதனை எதிர்பார்த்து காத்திருந்தவர் போன்று, “இளவரசே! சக்கரவர்த்தியார் நம் நாட்டு வீரர்களோடு, விஜயபுரி நகரத்து படைத்தளபதி ரூபன சத்ரியரையும் அனுப்பி இருக்கிறார்” என்றவர் மேலும் தொடர்ந்து, ரூபனனை சுட்டிக்காட்டி,
“இவர்தான் விஜயபுரி நகரத்து படைத்தளபதி ரூபன சத்ரியர். கடந்த மாதம் மலைக்கள்ளர்களோடு நடந்த போரில, இவருடைய பங்களிப்பு மிகவும் அதிகம். அதனை கௌரவிக்கும் பொருட்டு சக்கரவர்த்தி இவரை விருந்துக்கு அழைத்திருந்தார்.
அதுமட்டுமல்லாது, விருந்துக்காக நம் தேசம் வந்தவர், நமது வாயிற் காவலனும், கடந்த நான்கு ஆண்டுகளாக வைகாசி திருவிழாவில், மற்போரில் வெற்றி வாகை சூடிய மாவீரனுமான நவிரனின் கர்வத்தையும், அலட்சியத்தையும் கண்டு கோபம் கொண்டு, அவனுடன் மற்போர் புரிந்து, அவனை அழித்து, இவருடைய வீரத்தை நாட்டிற்கே பறைசாற்றி விட்டார். சக்கரவர்த்தி என்ன நினைத்தாரோ தெரியவில்லை, ரூபனருக்கு சிறப்பான விருந்து அளித்த பின்னர், எங்களோடு இவரையும் உங்களுக்கு உதவி புரிய செல்லுமாறு கூறி விட்டார்” என்று கூறினார்.
காரணம் தெரிந்திருந்தும், அதனை வெளிப்படுத்தாது மிக இயல்பாய் ஒரு அறிமுகப்படலத்தை கொடுத்தவரை பாராட்டும் விதமாக பார்வையை செலுத்தினார் தீட்சண்யர். அதன் பிறகு ரூபனரைப் பார்த்து,
“தங்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி வீரரே. இப்பொழுது விஜயபுரி மன்னரின் உடல்நிலை எவ்வாறு இருக்கிறது?” எனக் கேட்டவரின் வார்த்தைகளில் கூட கம்பீரம் நிறைந்திருந்தது.
ஏற்கனவே தீட்சண்யரின் தோரணையிலும், நேர் கொண்ட பார்வையிலும், ஆளுமையான தோற்றத்திலும் மெய் மறந்து நின்றிருந்த ரூபனர், அவரின் கம்பீரமான குரலில் தன்னிலையடைந்து அவர் குரலின் ஆளுமையை பிரமிப்புடன் ரசித்தவராய், அதிலும் ஒரு பெரிய மாவீரன் பிறரது வீரத்தை அங்கீகரிப்பதை வியப்புடன் நோக்கி, வார்த்தைகளை வெளிப்படுத்த இயலாது, மெல்ல சிறு புன்னகையுடன் தலையசைத்தார்.
அவருடைய தயக்கம் உணர்ந்த தீட்சண்யரும், “தாங்கள் என்னிடம் இயல்பாக இருக்கலாம் ரூபனரே. எங்களுக்கு உதவி புரிய நீங்கள் வந்ததில் மிக்க மகிழ்ச்சி” என்று இயல்பாக மொழிந்து புன்னகைத்தார்.
தீட்சண்யரின் குணம் வியக்கத்தக்கதாகவே இருந்தது. ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் இளவரசர், பார் போற்றும் வீரன் இத்தனை தன்னடக்கமாக இருப்பதும், பிறரை மதிப்பதும் அவரைக் காண்பவர்கள் எல்லோருக்கும் எப்பொழுதும் வியப்பையும், பிரமிப்பையும் கொடுக்கும். இப்பொழுது ரூபனரும் அதே நிலையில்தான் இருந்தார்.
“உங்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி இளவரசே! உங்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்ததே எனக்கு பெரும் பாக்கியம்” என்றார் மகிழ்வோடு.
“ஆமாம் ஆமாம். நீங்கள் எனக்கு செய்யப் போகும் உதவி மிகவும் பெரியது. அதை நீங்களே விரைவினில் உணர்ந்து கொள்வீர்கள்” என்றார் மறைபொருளோடு.
ஆனால், ரூபனரின் கவனம் அதில் இல்லை. தீட்சண்யருக்கு உதவியாக இருக்கப் போகிறோம் என்பதிலேயே அகம் மகிழ்ந்து இருந்தார். அதே மகிழ்வான மனநிலையோடு, அவர் கூறியதற்கு அழகிய புன்னகையுடன் தலையசைத்தார்.
பின்னர் தீட்சண்யர் படைத்தளபதியிடம், “தளபதியாரே! இப்பொழுது தந்தையார் எங்கு இருக்கிறார்?” எனக் கேட்டார்.
“அவர் செய்தி கிடைத்த உடனேயே சந்திர நாட்டிற்கு சென்று விட்டார் இளவரசே. எங்களை நீங்கள் வரும் தருணத்தில் வந்து இணைந்து கொள்ளும்படி கூறி மந்திரிகள் சிலரோடு புறப்பட்டு விட்டார்.”
தளபதி கூறியதைக் கேட்ட தீட்சண்யர், “இறுதியாக மன்னர் அருள் வேந்தர் முகத்தை ஒரு முறை கூட பார்க்க கொடுத்து வைக்கவில்லையே” என மனம் வருந்தினார்.
வெகு நேரம் கழித்தே, சந்திர நாட்டு வீரர்கள் தென்னாற்றங்கரையை அடைந்தார்கள். அவர்கள் வரும்வரையிலும், அவர்களிடமிருந்து எந்த செய்தியும் கிடைக்காது, தந்தையின் கட்டளையை மீறி அவர்களை விடுத்து பயணத்தை தொடரவும் முடியாது இருதலைக்கொல்லி எரும்பாய் தவித்திருந்தார் தீட்சண்யர்.
சந்திர நாட்டின் படைத்தளபதி இல்லாமல் வீரர்களை மட்டும் கண்டதும், “ஏன் இவ்வளவு தாமதம்?” என தீட்சண்யர் வீரர்களிடம் விசாரிக்கத் தொடங்கினார். மன்னரை இழந்திருந்த வீரர்களின் முகத்தில் கவலை ரேகை அப்பட்டமாக தெரிந்தது.
“இளவரசே! வரும் வழியினில் கார்முகிலனின் கூட்டத்தினரைக் கண்டோம். அவர்கள் இருப்பிடம் அறிய அவர்களை துரத்திக் கொண்டு சென்றோம்.
அவர்கள் போக்கு காட்டிக்கொண்டே, தப்பிச்சென்றனர். பிறகு தளபதியார்தான் நீங்கள் காத்திருப்பீர்கள் என்று உங்களைக் காண எங்களை அனுப்பிவிட்டு மற்ற வீரர்களுடன் அவர்களை பின்தொடர்ந்து சென்றிருக்கிறார்” என்ற தகவலைக் கூறியதுதான் தாமதம், எரிமலையாய் தீட்சண்யர் மாறிவிட்டார்.
“உங்களை யார் இது போன்றதொரு முடிவை தன்னிச்சையாக எடுக்க சொன்னது? அவர்களே நேருக்கு நேர் போராட முன் வந்ததே இல்லை. பதுங்கியிருந்து சதியாலோசனை செய்பவர்கள்.
அவர்களைத்தேடி நாமே செல்வது, அதுவும் இப்படி சில வீரர்களுடன் மட்டும் செல்வது… எனக்கு இதிலும் அவர்கள் சதி இருப்பதாகவே தெரிகிறது.
விரைந்து சென்று நம் கூட்டத்தை தடுக்க வேண்டும். நீங்கள் முன்னே சென்று வழி காட்டுங்கள். சீக்கிரம்” என்று சந்திர நாட்டு வீரர்களுக்கு கட்டளையிட்ட கையோடு, “நீங்களும் பின் தொடருங்கள்” என்று அங்கே இருந்த மற்ற வீரர்களுக்கும் ஆணையை பிறப்பித்து தமது குதிரையில் விரைந்தார்.
அவரின் வேகமும், கோபமும், ஆளுமையும் வேறு எதையும் சிந்திக்க விடாமல் அவர் சொன்னதை கண்மூடி செயல்பட வைத்தது மற்றவர்களை.
குதிரைகளில் வீரர்கள் அனைவரும் அதி வேகமாக செல்ல, அந்த ஆள் அரவமற்ற கானகத்தில் ஒரு பகுதிக்கு மேல் எந்த வழியாக செல்வது என்று தெரியவில்லை.
“என்ன இங்கேயே நிற்கிறீர்கள்?” கோபத்தில் உறுமிய தீட்சண்யரைக் கண்டு வீரர்களுக்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது.
மெல்ல சிறு நடுக்கத்தோடு, “இங்கேதான் தளபதியாரிடம் விடை பெற்றோம்” என்றனர்.
சுற்றி இருந்த அனைவருக்குமே தீட்சண்யரின் கோபத்தின் மூலம், ஏதோ விபரீதம் நடக்கப் போவதாக உள்மனம் உணர்த்தியது.
ஏனெனில் தீட்சண்யரின் முகம் இதுவல்லவே! சற்று முன்பு அவர் நடந்து கொண்டதே அதற்கு சாட்சி. அவரே இத்தனை கோபம் கொள்கிறார் என்றால், நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவே அனைவருக்கும் தோன்றியதே தவிர, அவருடைய கோபம் வீணானது என்று யாராலும் சிந்திக்க இயலவில்லை.
தமது கோபத்தில் தமது நிதானம் இழக்காமல் இருக்க, சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு, தீட்சண்யர் அந்த இடத்தை நன்கு ஆராய்ந்தார். தளபதியார் சென்ற வழி எதுவாக இருக்கும் என யோசிக்கலானார்.
சிறிது தொலைவில் இருந்த புற்களின் சேதாரத்தில் இருந்து குதிரைகள் சென்ற திசையை யூகிக்க முடிந்தது. அந்த வழியே சிறிது தூரம் பயணித்தவர் அங்கே கண்ட கோர காட்சியில், வேகமாக சென்று கொண்டிருந்த தமது குதிரையின் கடிவாளத்தை இழுக்க, அது தமது முன்னங்கால்கள் இரண்டையும் மேலே தூக்கி, அந்த கானகம் அதிர கனைத்து அவ்விடத்தில் நின்றது.
அந்த ஆள் அரவமற்ற கானகத்தில், சந்திர நாட்டின் தளபதியாரும், அவருடன் சென்ற வீரர்களும் ரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்தனர். தீட்சண்யர் எண்ணியது போலவே விபரீதம் நடந்து இருந்தது. தீட்சண்யரை பின் தொடர்ந்து வந்த வீரர்களும் நிச்சயமாக இதனை எதிர்பார்க்கவில்லை. அனைவரும் இளவரசரின் கட்டளைக்காக காத்திருக்க, இளவரசர் தீட்சண்யரோ யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா என பரிசோதிக்கத் தொடங்கினார். அவரைத்தொடர்ந்து மற்றவர்களும் வீரர்களின் நிலையை பரிசோதிக்கத் தொடங்க அங்கே இருந்தவர்களில் ஒருவரும் உயிருடன் இல்லை.
பிறகு தீட்சண்யர் தமது கண்களை சுழற்றி இருக்கும் இடத்தினை ஆராய்ந்தார். அவர்களைத் தவிர வேறு யாரும் அங்கே இருப்பதாக தெரியவில்லை. அங்கிருந்த சந்திர நாட்டு வீரர்களிடம், “இவர்கள் அனைவரும் குதிரையில் தானே வந்தார்கள்?” என கேட்டார்.
“ஆம் இளவரசே. ஆளுக்கொரு குதிரையிலும், வேல்கள், வாள்கள் போன்ற ஆயுதங்களோடும்தான் வந்தனர்” என்றான் ஒரு காவலன்.
தீட்சண்யரின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது. அவரது ஆறடி உடல் கோபத்தில் விறைத்து முறுக்கேறி இருந்தது. ‘இந்த கார்முகிலனுக்கு என்னதான் வேண்டும். மருத தேசத்தை எதிர்க்க முடியாது என்று நன்கு தெரிந்திருந்தும் ஏன் இவ்வாறு முயற்சிக்கிறான்? இந்த சிறிய சாம்ராஜ்யமான சந்திர நாட்டிடம் நேரடியாக போராட கூட தேவையான ஆள் பலமோ, ஆயுத பலமோ இல்லாமல் இருக்கிறான்.
அப்படி இருந்தும், தாம் அடையாததை யாரும் அடையக்கூடாது என்ற எண்ணத்தோடு செயல்படும் இவனை என்ன செய்தால் தகும்?
இவனால் இனி இந்த சந்திர நாட்டினை ஆளவே இயலாது என்று தெரிந்து, சந்திர நாட்டையே அழித்து விட வேண்டும் என்று எண்ணுகிறானே. இவன் எல்லாம் என்ன பிறவி?’ மனம் சிந்தித்துக் கொண்டிருக்க, அவர் விழித்திரையில் இருந்த காட்சி, “இப்பொழுது அவனை பற்றி சிந்திப்பது முக்கியமில்லை. மேற்கொண்டு நடக்க வேண்டியதை கவனிப்போம்” என்றபடி சிந்தனையைக் கொடுத்தது.
மற்ற வீரர்களிடம், “ஆயதங்களையும் குதிரைகளையும் கார்முகிலனின் ஆட்கள் கொண்டு சென்றிருப்பார்கள். நாம் இவர்களின் உடலை எடுத்துக்கொண்டு நாட்டிற்கு திரும்பலாம்” என கட்டளையிட்டார்.
சந்திர நாடு திரும்பிய தீட்சண்யர், மன்னர் வீரேந்திர மருதரை சந்தித்து நடந்தவற்றை கூறினார்.
“நான் கொடுத்த கட்டளையை மீறி தளபதியார் இப்படி அவசரம் காட்டியிருக்க வேண்டாம்” என அவரும் மிகவும் வருந்தினார்.
மேலும் தொடர்ந்து, “சரி தீட்சண்யா நமக்கு போதிய நேரம் இல்லை. மன்னர் இல்லாமல் ஒரு நாடு இருப்பது அபசகுணம். கெட்டதிலும் ஒரு நல்லது என்பார்கள், சந்திர நாட்டிற்கான சரியான அரசரை நான் தேர்வு செய்ததை அருள் வேந்தர் உணர்ந்து கொண்டார் போலும். அதனால்தான் நிம்மதியாக தமது கண்களை மூடிவிட்டார்.
இனி பட்டாபிஷேகத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய். நான் ஏற்கனவே விஜயபுரி நகரத்திற்கு செய்தி அனுப்பி விட்டேன். அவர்களுக்கும் இதில் மகிழ்ச்சி. ரூபனரிடம் நானே விஷயத்தை தெரியப்படுத்தி விடுகிறேன்.
நீ மற்ற நாடுகளுக்கு அழைப்பு விடுத்து விடு. பட்டாபிஷேக ஏற்பாடுகளை உடன் இருந்து கவனித்துக்கொள்” என்றார்.
ரூபனரின் பட்டாபிஷேக விழா ஏற்பாடுகளை தீட்சண்யர் தொடங்கி இருந்தார். சந்திர நாட்டின் அரசனாக ரூபனர் முடிசூட அடுத்து வந்த நல்ல முகூர்த்த தினத்தை அரண்மனை ஜோதிடர் கணித்துக் கொடுத்திருந்தார்.
அருள் வேந்தரின் மரணம் மக்களுக்கு வேதனை கொடுத்த பொழுதிலும், புதிய மன்னரின் தேர்வு அவர்களின் வேதனைக்கு மருந்தாய் இருந்தது. ஏற்கனவே ரூபன சத்ரியரின் பெருமைகளை அனைவரும் அறிந்திருக்க, வீரேந்திர மருதரின் தேர்வு என்பது கூடுதல் சிறப்பாக இருந்தது.
மக்கள் அனைவரும் மகிழ்வோடு புதிய அரசரை வரவேற்க தயாராயினர்.

Advertisement