Advertisement

“இல்லை… அது சின்னப் பொண்ணு. நாளைபின்ன அவ கல்யாணத்துக்குப் பிறகு, இதால அந்த பொண்ணு வாழ்க்கையில பிரச்சினை வந்துரக் கூடாதுன்னு தான் கொஞ்சம் யோசனையா இருக்கு” என்றவர் மகனின் பதிலுக்காக அவன் முகத்தையே உற்றுப் பார்க்க
அவனோ,”திங்க் பாஸிட்டீவ் ப்பா…அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது”என்று ஆரூடம் சொல்லியபடி
“ப்ளீஸ் பா… அவ கிட்ட வேண்டாம், அப்டி இப்டி ன்னு ஏதாவது சொல்லி அம்மா ஆப்ரேஷனை டிலே பண்ணிடாதீங்க” கிட்டத்தட்ட கெஞ்சினான்.
“ச்ச…ச்ச நான் எப்படி டா டிலே பண்ணுவேன்? ஆனால் சாருமதியோட கிட்னி அம்மாவுக்கு மேட்ச் ஆகுமான்னு முடிவு தெரியுறதுக்கே நாளெடுக்குமாம்”
“அந்த இடைவெளியில ஏதாவது அம்மாவுக்கு பொருத்தமா வேற கிடைச்சா பாக்கலாம்ணு தான்…” என்று தன் மனதைச் சொன்னவர், லேசான பெருமூச்சோடு
“நாம எவ்வளவு தான் திட்டம் போட்டாலும் நடக்குறது தான் நடக்கும். பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு!” என்றபடியே கலங்கி நின்ற தன் மகனின் தோளில் லேசாக தட்டியபடியே நகர்ந்தார்.
********
“சாரு…”
“ம்ம்…”
“ஏய்! சாரு…”
“என்ன ஹேம்ஸ்?”
“உன் முடிவை ஒருதடவை நீ மறுபரிசீலனை பண்ணக்கூடாதா?” இந்த ஒருவாரத்தில் திரும்பத் திரும்ப கேட்ட கேள்வியை சளைக்காமல் கேட்டுக்கொண்டிருந்தாள் ஹேமா.
“எந்த முடிவை ப்பா”
“ம்ம்…அதான் உன் கிட்னியை சட்னியா நினைச்சு ரொம்ப ஈசியா, அந்த திமிருபிடிச்சவனோட அம்மாவுக்கு தானம் பண்ணுறேன்னு ப்ராமிஸ் பண்ணிட்டு வந்துருக்கியே! அந்த முடிவை” 
“ஹஹஹ… இப்போ நான் கிட்னி டொனேட் பண்ணப்போறது உனக்கு பிடிக்கலையா? இல்லை கிருஷ்ணாவோட அம்மாவுக்கு குடுக்குறது உனக்கு பிடிக்கலையா?” 
“இரண்டுமே எனக்கு பிடிக்கலை” 
“ஏன்?  ஒரு மனுஷன் உயிர் வாழ ஒரு கிட்னியே போதும் ங்கிற விஷயம் டாக்டரம்மாவுக்கு தெரியாதோ?”  விளையாட்டாகக் கேட்ட சாருமதியின் முதுகில் ஒரு அடிவைத்த ஹேமா
“எரும… எரும… மனுஷன் சீரியஸா பேசிக்கிட்டு இருக்கும் போது உயிர் வாழ ஒரு கிட்னி போதும்னு  பாடமா எடுக்குற நீ?” என்று மறுபடியும் அடிக்க வர,
 லேசாக சரிந்து அந்த அடியிலிருந்து தப்பியவள் படுமும்மரமாக கேஸ் ஷீட் எழுதிக்கொண்டிருக்குமிடம்  மருத்துவக் கல்லூரியின் லேபர் வார்டு. நேரமோ இரவு பதினொன்றுக்கு மேல்.
மருத்துவ உயர்படிப்பில் நேரம் காலம் பார்க்காமல் எந்த அளவுக்கு நம் உழைப்பை போடுகிறோமோ அந்த அளவுக்கு தொழிலில் தேர்ச்சி பெறலாம் என்பதால் பெரும்பாலும் தோழியர் இருவரின் ஜாகையும் கல்லூரியின் மருத்துவமனையிலேயே இருக்கும். 
அதனாலேயே உள்ளூரில் இருந்தாலும், ஹேமா கூட மருத்துவ கல்லூரி வளாகத்தில் இருக்கும் ஹாஸ்டலிலேயே இம்முறை சாருமதியோடு தங்கியிருக்கிறாள்.
இரவு எந்நேரமென்றாலும் சீனியர் மருத்துவர்களுக்கு உதவிசெய்து கொண்டு கல்லூரி மருத்துவமனையில் இருப்பவர்கள், 
சாயங்காலம் ஐந்து மணியிலிருந்து ஒன்பது மணி வரை ஹேமாவின் பெற்றோரின் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியில் இருக்கிறார்கள்.
ஹேமாவின் தாயாரும் பிரபல மகப்பேறு மருத்துவர் என்பதால் தன் மகளோடு சாருமதியையும் ஒரு சிறந்த மகப்பேறு மருத்துவராக்குவதற்கான அத்தனை பயிற்சிகளையும் தந்து கொண்டிருக்கிறார். 
“உன் கிட்னியை டொனேட் பண்ணி… அது… என்னது அது? ஹாங்… செஞ்சோற்று கடனை தீர்க்கப் போறியா நீ?” திரும்பவும் விட்ட இடத்திலேயே பிடிவாதமாக வந்து நின்றாள் ஹேமா.
“அப்படி வேணும்னாலும் நினைச்சுக்கலாம். ஆனால் நான் இதை செய்றது எங்க ஐயாவுக்காக மட்டும் தான்.”
சற்றே நிறுத்தி குழப்பத்தோடு தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த தோழியைப் பார்த்து லேசாக சிரித்தவள்,
“ஆமாப்பா, வேதவல்லி அம்மாக்கு ஏதாவது ஒன்னுன்னா எங்கய்யா மீண்டு வர்றது ரொம்ப கஷ்டம். அந்தளவுக்கு அவங்க மேல உயிரையே வச்சிருக்காரு மனுஷன்” 
“ஊருக்கெல்லாம் உதவி செய்யுற மனுஷன் அவர் வாழ்க்கையில  நிம்மதியா, சந்தோஷமா இருக்கணும்னா அவரோட மனைவி நல்லாயிருக்கணும்.”
“அதோட எங்க முகத்துல சிரிப்பை விதைச்சவர் முகத்துல சோகத்தை பார்க்க எனக்கு பிடிக்கலை. அந்த சோகத்தை என்னால போக்கமுடியும்னா நான் ஏன் அதைச் செய்யக்கூடாது? அதான் அம்மா கிட்ட கூட கலந்துக்காம அந்த இடத்திலேயே நான் என் முடிவைச் சொல்லிட்டேன்”
“ஆனால் எங்கம்மாவையும் சும்மா சொல்லக்கூடாது. நான் விஷயத்தை எடுத்து சொன்னதும் புரிஞ்சுகிட்டாங்க”
“தம்பி?”
“அவன் உன்னைப்போலத் தான். இரண்டு மனசா இருக்குறான். ஐயாவுக்கு உதவியும் பண்ணனும். ஆனால் அது தன்னோட அக்கான்னு வரும் போது ஒத்துக்கவும் மனசுல்ல” 
 “உனக்கு ஒன்னு தெரியுமா? அவன் கூட டொனேட் பண்ண ரெடியானான். ஆனால் அவனோட ப்ளட் குரூப்பும் மேட்ச் ஆகலை தெரியுமா?” 
“இந்த விஷயத்துக்கு கடவுள் என்னைத் தான் தேர்ந்தெடுத்துருக்கார் போல” சிரித்தபடியே சொல்லிக்கொண்டிருந்த தோழியை அதிசயப் பிறவியைப் போல பார்த்தபடி இருந்தாள் ஹேமா.
***************
தங்கள் வீட்டு கோவிலில் இருந்த கிருஷ்ணர் விக்ரகத்திற்கு முன்னால் கண்களை மூடியபடி நின்றான் கிருஷ்ணா. 
மனமோ எங்கும் நிறைந்திருக்கும் அந்த பரபிரம்மத்திடம் தன்னுடைய பிரார்த்தனைகளை வைத்துக் கொண்டிருந்தது.
வணங்கி முடித்து நெற்றியில் அடையாளமிட்டு வீட்டுக்கு வந்தவன், வீட்டின் அனைத்து கதவுகளும் சரியாக தாழிடப்பட்டிருக்கிறதா? என்று மறுபடியும் ஒருமுறை பரிசோதித்து விட்டு ஹாலுக்கு வந்தான்.
அங்கே ஏற்கனவே பிரயாணத்திற்கு தயாராக வைத்திருந்த பையை கையிலெடுக்கும் நேரம் வந்த கேசவன்.
“கிளம்பிட்டியா கிருஷ்ணா?” என்று கேட்க
“ம்ம்… இன்னும் இரண்டு நாள்ல ஆப்ரேஷனை வச்சிட்டு நான் இன்னும் இங்க இருந்தா சரிவராதே, அதான் கிளம்பிட்டேன்” என்றவன்
அங்கிருந்த கிருஷ்ணர் கோவிலின் சாவியை கேசவனின் கையில் கொடுத்து,”ண்ணா… நாங்க வர்றவரைக்கும் தினமும் காலையில கோயிலுக்கு தீபம் வச்சிடுங்க… அப்படியே வீட்டையும் கொஞ்சம் பத்ரமா பாத்துக்கோங்க” என்று கம்மியக் குரலில் சொல்ல
“நாங்க இங்க எல்லாம் பாத்துக்குறோம். நீ கவலைப்படாமல் போ கிருஷ்ணா. அம்மாவுக்கும் எல்லாம் நல்லதாவே நடக்கும்” என்று சொன்ன கேசவனை ஆரத்தழுவிக் கொண்ட கிருஷ்ணாவிடம் தான், இந்த இரண்டு மாதங்களில் எத்தனை மாற்றங்கள்!
மனைவி வேதவல்லியின் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையை மதுரையில் வைத்துக்கொண்டால் சரியாக இருக்கும் என்று பண்ணையார் முடிவெடுத்ததால், 
அங்குமிங்கும் அலைவதை தவிர்க்க சிகிச்சைக்கு தான் தெரிவு செய்த மருத்துவமனைக்கு அருகிலேயே வீடு ஒன்றை வாடகைக்கு பிடித்துக் கொண்டார் பண்ணையார்.
கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகிறது அவர்கள் அங்கே சென்று. அந்த மூன்று மாத இடைவெளியில் பண்ணையாரும் வேறு டோனருக்கு முயற்சி செய்யாத நாளேயில்லை. ஆனால் பலன் தான் கிடைக்கவில்லை.
விஷயம் தெரிந்து வந்த வேதவல்லியின் உடன்பிறந்தவர்கள், பண்ணையாரின் உடன்பிறந்தவர்கள் என்று அனைவரும் வேதவல்லிக்கு டொனேட் செய்ய முன்வந்தார்கள்.
 ஆனால், சாருமதி சொல்லியது போல அவளைத் தான் கடவுள் தேர்ந்தெடுந்திருந்தார் போலும், அவளுடையது தவிர யாருடையதும் வேதவல்லியோடு பொருந்தி போகவில்லை. 
கடைசியில் சாருமதியே வேதவல்லிக்கு கிட்னி தானம் செய்வது என்று முடிவாகி அதன் முன்னேற்பாடுகள் போய்க்கொண்டிருக்கிறது.
 கிருஷ்ணாவின் கல்லூரியும் மதுரையிலேயே என்பதால் கல்லூரிக்கு அங்கிருந்தே சென்றுவந்தவன், குறிப்பிட்ட இடைவெளியில் டயாலிசிஸ் க்காக தன் தாயை மருத்துவனைக்கு அழைத்து செல்லும் போது தவறாது தன் தந்தையோடு செல்வான்.
 முதன்முறையாக தன் அரண்மனையை விட்டு வெளியே வரும் போது பார்த்த காட்சிகள் ‘சித்தார்த்தன்’ என்னும் இளவரசனை ‘புத்தராக்கியது’ என்றால் 
கிருஷ்ணா என்னும் ‘அகங்காரனை’ டயாலிசிஸ்காக தன்னுடைய அன்னையோடு மருத்துவமனைக்கு வரும்போது, அங்கு அவன் கண்ட காட்சிகள் ‘மனிதனாக்கியது’ என்று சொன்னால் அது மிகையில்லை. 
அதிலும் ஒருமுறை பத்தே வயதான சிறுவன் ஒருவன் டயாலிசிஸ்காக வந்திருந்ததைக் கண்டவன் அரண்டு போனான்.
‘அடுத்த நொடிப்பொழுது வாழ்க்கை கூட நமக்கு சொந்தமில்லை என்னும் போது கோபம், அகங்காரம், ஆத்திரம், திமிர் இத்தனையையும் நாம் இத்தனை நாட்கள் தூக்கிச் சுமந்து கொண்டு திரிந்திருக்கிறோமே?’ நினைக்கும் போது அவனுக்கே, அவனை நினைத்து அவமானமாக இருந்தது. 
தாயின் சிகிச்சைக்காக வந்த இடத்தில் சத்தமின்றி மகனின் மனதிற்கும் சிகிச்சை நடந்து முடிந்து விட்டது காலத்தின் விந்தையன்றி வேறேது?
தன் கைகளில் பயணப்பையை தூக்கிய கிருஷ்ணாவின் கையிலிருந்து அதை வாங்க முயன்ற கேசவனிடம்,”இல்ல… நானே கொண்டு வர்றேன்” என்று கொடுக்க மறுத்தவனிடம் 
“நீ முன்ன மாதிரி இல்லை. எவ்வளவோ மாறிட்ட ங்குறது எனக்கு புரியுது. அதுக்காக ஓவராப் பண்ணி எனக்கு ஷாக் குடுக்காதடா!” 
தன்பேச்சால் சற்றே சூழ்நிலையை இலகுவாக்க முயன்ற கேசவன் பையை வாங்கிக் கொண்டு கிருஷ்ணாவோடு வெளியே வர,
அங்கே வாசலில் வீட்டில்  வேலை செய்யும் வேலையாட்களோடு கிராமத்திலுள்ள ஒரு சிலரும் நின்றிருந்தனர்.
கிருஷ்ணாவை கண்டதும்,”அம்மா சீக்கிரம் நல்லபடியா குணமாகி வீட்டுக்கு வரணும்னு நாங்களும் ஆண்டவன் கிட்ட பிரார்த்தனை வைங்குறோமுங்க ய்யா. நீங்க கவலைப்படாம போய்ட்டு வாங்க” என்று சொல்ல
 வாழ்க்கையில் முதன்முறையாக இருகை எடுத்து அந்த எளிய மனிதர்களை வணங்கிய கிருஷ்ணா,”உங்க எல்லோருடைய அன்புக்கும் நன்றி” என்று உணர்ந்து சொன்னான்…
 

Advertisement