Advertisement

சாருமதி.
அத்தியாயம் 09
தனது அறையில்  சோஃபாவில் உட்கார்ந்து, தன் முன்னால் கிடந்த சிறிய டேபிளில் காலை நீட்டியபடி  சாய்ந்திருந்த கிருஷ்ணாவின் மூடியிருந்த விழிகளிலிருந்து இமைகளைத் தாண்டி கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
எவ்வளவு நேரம் தான் அப்படி இருந்தானோ தெரியாது?,”பி பிரேவ் மேன்! நீயே இப்படி அழுதுட்டு இருந்தால், உடைந்து போய் இருக்கிற உன்னை பெத்தவங்களை யாரு பாத்துப்பா?” என்று மனம் குரல் கொடுக்க
‘அதுவும் சரிதான்’ என்று  தன் கண்ணீர் துடைத்தவனின் கரங்களில் ஒருவாரம் ஷேவ் பண்ணாத தாடி முள்ளாய் குத்த, அன்றைய நாளின் நினைவுகளும் நெருஞ்சி முள்ளாய் மனதை அழுத்தியது.
‘அன்று நடந்தவை யாவும் வெறும் கனவாக இருந்து விடக் கூடாதா?’ என்று ஏங்கியது அவன் மனது.
ஆனால் அவன் காதுகளில் இடைவிடாது ஒலித்துக் கொண்டிருந்த மருத்துவரின் குரல் நடந்தது அத்தனையையும் உண்மை என்று அவனுக்கு உரக்கச் சொல்லிக்கொண்டே இருந்தது.
அன்று… ஸ்கேன் முடிவுகள் இன்னதென்று சாருமதிக்கும் புரிந்து விட்டது என்பதை அவள் முகமாறுதலில் இருந்தே தெரிந்து கொண்ட டாக்டர் நிர்மலா, வேதவல்லியை சாருமதி வசம் ஒப்படைத்து விட்டு தான் மட்டும் வெளியே வந்தார்.
வெளியே வந்தவரிடம்,”என்னாச்சு மேடம்?” என்று பண்ணையார் பதட்டத்துடன் கேட்க
“வாங்க சார் ரூம்ல போய் பேசலாம்” என்றார் டாக்டர் நிர்மலா.
கிருஷ்ணாவோ தன் அன்னையின்றி தனியே வந்த மருத்துவரைப் பிடித்து உலுக்காத குறையாய்,”அம்மா எங்க? என்னோட அம்மா எங்க?” என்றான் சற்றே குரலை உயர்த்தி
“ஷ்ஷ்ஷ்…இது உங்க ஹாஸ்பிடல் தான், நான் இல்லைங்கலை. அதுக்காக நீங்க இப்படி சத்தமா பேசணும்னு அவசியம் இல்லை”  கிருஷ்ணாவைப் பார்த்து சின்னதாக ஒரு அதட்டல் குரலில் பேசிய டாக்டர் நிர்மலா, 
“நான் இங்க வச்சு உங்க அம்மாவுக்கு இந்த விஷயம் தெரியவேண்டாம்னு நினைக்கிறேன். அப்புறம் உங்க இஷ்டம்” என்று முடித்தவர் தனது அறையில் சென்று இருக்கையில் உட்கார்ந்தார்.
அவரின் அதட்டல் குரல் சற்றே வேலை செய்ய  அமைதியாக தந்தையுடன் வந்து மருத்துவரின் முன் உட்கார்ந்தான் கிருஷ்ணா. 
அமைதியாக இருந்தானேயொழிய அவன் உள்ளுக்குள் ஓடும் நடுக்கத்தை பிரயத்தனப்பட்டு மறைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான் என்பது ஒரு மருத்துவராக அவருக்கு புரியவே செய்தது.
தன் முன் உட்கார்ந்திருந்தவர்களை அமைதியாகப் பார்த்த டாக்டர்,” இப்போ நான் சொல்லப் போறது உங்களுக்கு ஷாக்கிங்கா இருக்கலாம். ஆனால் அது தான் உண்மை” என்ற பீடிகையோடு,
தன் கையிலிருந்த ஸ்கேன் ரிப்போர்ட்டை உற்றுப் பார்த்தபடியே பண்ணையாரிடம்,”சார்! உங்க மனைவிக்கு இரண்டு சிறுநீரகமுமே செயலிழக்க ஆரம்பிச்சிடிச்சி.”
“எவ்வளவு சீக்கிரம் அவங்களுக்கு மாற்று சிறுநீரகம் பொருத்துறமோ அவ்வளவுக்கு அவங்களோட வாழ்நாளை நம்மால நீட்டிக்க முடியும்” என்று மின்னாமல் முழங்காமல் இடியொன்றை இறக்கினார் இருவரின் தலையிலும்.
அவரின் பூடகமான பேச்சிலேயே ஏதோ ஒன்று பெரிதாக வரப்போகிறது என்று யூகித்திருந்தாலும், இந்தளவிற்கு எதிர்பார்க்காததால் பண்ணையார் பேச்சற்று உறைந்து போயிருக்க,
கிருஷ்ணாவோ தன் முன்னாலிருந்த மேஜை மீது கைகளால் ஓங்கியடித்தபடியே எழுந்தவன், அந்த மேஜை மீதே கைகளிரண்டையும் ஊன்றி சற்றே முன்நோக்கி மருத்துவரை பார்த்து குனிந்து நின்றபடி,
“என்ன? விளையாடுறீங்களா? இப்போ காலைல எங்கம்மா கையால காஃபி குடிச்சிட்டு வெளியேப் போய்ட்டு, இதோ… வந்து தான் நிக்குறேன், அதுக்கிடையில நீங்க இப்படி சொன்னா, நாங்க நம்பிடனுமா என்ன?” என்று பாமரனைப் போல பேசியவன், கைகளை கோபத்துடன் வீசியபடியே வெளியே சென்றான்.
 மருத்துவரின் வார்த்தைகளை ஒப்புக்கொள்ள மறுத்து வெளியே சென்று கொண்டிருக்கும் மகனின் செயலுக்கு, அந்த நேரத்திலும் பண்ணையார் முறையாக மருத்துவரிடம் மன்னிப்பு கேட்க, 
தாய் மீது அதீத பாசம் கொண்ட ஒரு மகனின் மனது, தான் சொன்ன உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது என்பதை  புரிந்த மருத்துவர், தன் கையிலிருந்த ஸ்கேன் ரிப்போர்ட்டை பண்ணையாரிடம் கொடுத்து, 
“எனக்கு உங்க மகனோட உணர்வுகள் புரியுது சார். முதல்ல அவரையும், உங்க மனைவியையும் நீங்க போய் பாருங்க. மற்ற விஷயங்களை நாம பிற்பாடு பேசிக்கலாம்” என்று தன்மையாக பேசி பண்ணையாரை அனுப்பி வைத்தார்.
வேகமாக வெளியே வந்த கிருஷ்ணா, ஸ்கேன் ரூமிலிருந்து சாருமதியோடு வெளியே வந்து கொண்டிருந்த தன் அன்னையிடம் பாய்ந்து சென்று,
“வாம்மா, நாம வீட்டுக்கு போகலாம். இங்க நின்னா இன்னும் புதுசு புதுசா ஏதும் சொன்னாலும் சொல்லுவாங்க” என்றபடியே தன் தாயை தன் தோளோடு அணைத்து நகர்த்திச் செல்ல,
விஷயம் ஏதும் புரியாமல் தன்னை குழப்பமாக பார்த்த தாயிடம்,”ஹூம்…உனக்கு கிட்னி ஃபெயிலியர் ஆகிடிச்சாமாம். மெத்தப் படிச்ச மேதாவிங்க சொல்லுறாங்க…” ஒரு  நம்பாதத் தன்மையோடு சொன்னவன்,
“அப்படியே ஆனாலும், என்னோட இரண்டு கிட்னியையும் குடுத்துன்னாலும், நான் என் அம்மாவை காப்பாத்திடமாட்டேன்!” என்றான் தனக்கு தானே.
கிட்டத்தட்ட அரைப்பைத்தியம் போன்ற நிலையில் தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருந்த இந்த கிருஷ்ணா முற்றிலும் புதியவனாகத் தெரிந்தான் சாருமதிக்கு. 
அப்போது அங்கே வந்த பண்ணையார் தன் மகனுக்கும் மனைவிக்கும் பின்னே வந்து கொண்டிருந்த சாருமதியிடம் தன் கையிலிருந்த ஸ்கேன் ரிப்போர்ட்டை லேசாக உயர்த்திக் காட்டியபடியே
“டாக்டர் என்னென்னவோ சொல்லுறாங்களேம்மா…” என்று தழுதழுக்க
“அவங்க சொல்லுறது எல்லாம் உண்மை தான் ஐயா” என்று சாருமதி சொல்லத் தான் தாமதம், சரேலென்று திரும்பிய கிருஷ்ணா ஆங்காரத்தோடு,
“இவளே ஒரு கத்துக்குட்டி டாக்டர். இதுல இவ சொல்லுறது எல்லாம் உண்மையாகிடுமா?” 
“நீ வாம்மா, நாம இப்பவே திருநெல்வேலிக்கு போய் பெரிய ‌ஹாஸ்பிடல்ல செக் பண்ணி, உனக்கு ஒன்னுமே இல்லைன்னு ப்ரூஃப் செய்து, இவங்க‌ மூஞ்சியில கரியைப் பூசலாம்” என்றபடியே தாயோடு வேகமாக காரை நோக்கி நடக்க
தாயின் உடல்நிலையைப் புரிந்து கொள்ள மறுத்து மூர்க்கனாக நடந்து கொள்ளும் மகனைப் பார்ப்பதா? இல்லை நடக்கும் எதையும் கிரகித்துக் கொள்ள முடியாமல் தவிக்கும் மனைவியைப் பார்ப்பதா? என்று தவித்து நின்ற பண்ணையாரிடம்,
“ஐயா! கிருஷ்ணா சொல்லுற ஹாஸ்பிடல்லயே போய் அவனோட திருப்திக்காக இன்னொரு தடவை வேணும்னாலும் டெஸ்ட் பண்ணிடுவோம்”
“எப்படியும் இதுக்கு மேல ட்ரீட்மெண்ட்க்கு கண்டிப்பா நாம வேற ஹாஸ்பிடலுக்கு போய்தான் ஆகணும். அதுக்காக இன்னைக்கே போயிருக்கோம்னு நினைச்சுக்கலாம்” என்று சாருமதி சொன்னாள்.
சாருமதியின் வார்த்தைகளை  ஒத்துக்கொண்டு பண்ணையாரும் காரை நோக்கிச் செல்ல, சாருமதியும் அவரைத் தொடர்ந்தாள். 
திருநெல்வேலியில் பெயர்பெற்ற ‘கிட்னி கேர் சென்டருக்கு’ வேதவல்லியை அழைத்து வந்திருந்தான் கிருஷ்ணா.
“நீ எங்களோடு எதற்கு?” என்பது போன்ற கிருஷ்ணாவின் பார்வையை ஒதுக்கி அவர்களோடு சாருமதியும் வந்திருந்தாள்.
வந்தவர்கள் அங்கிருந்த மருத்துவரிடம் வேதவல்லியின் உடல்நிலையைச் சொல்லி, அவரை பரிசோதனைக்கு உட்படுத்த, முடிவுகளோ அச்சுப்பிசகாமல் ஏற்கனவே தெரிந்த முடிவாய் இருந்ததில்  கிருஷ்ணாவின் உலகமே ஆட்டம் கண்டது.
நொறுங்கிப் போனவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஞாபகத்திற்கு வர, வேகவேகமாக லேப்பிற்குச் சென்று தானே தன் அன்னைக்கு சிறுநீரகம் கொடுப்பதாகச் சொல்ல, 
ஒத்துக்கொண்டவர்கள்,”உங்க ப்ளட் குரூப் தெரியுமா? தெரிஞ்சா சொல்லுங்களேன்” என்று கேட்க, சொன்னவனிடம்
“இல்லை சார்! உங்கம்மா ப்ளட் குரூப் ‘ஓ நெகட்டிவ்.’ இரத்தமே உங்களோடது அவங்களுக்கு ஒத்துப்போகலை. அதனால வேற டோனரை நீங்க சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க” என்றுவிட,
நொறுங்கிப் போனான் கிருஷ்ணா. ‘முடியாதா? என்னால் என் அன்னையை காப்பாற்ற முடியாதா? என்னால் முடியுமென்று இறுமாந்திருந்தேனே! என்னால் முடியவே முடியாதா?’ 
பித்து பிடித்தவனைப் போல தலையை கைகளிரண்டிலும் தாங்கி பக்கத்திலிருந்த நாற்காலியில் சாய்ந்தவனின் காதுகளில்,
“என்னோட ப்ளட் குரூப் ‘ஓ நெகட்டீவ்’ தான். நான் அவங்களுக்கு கிட்னி டொனேட் பண்ணுறேன். என்னோட ப்ளட்டை டெஸ்டுக்கு எடுத்துக்கோங்க” என்ற சத்தம் கேட்க
சட்டென்று நிமிர்ந்து பார்த்தவனின் கண்களில், பரிசோதனைக்கு தன்னிடமிருந்து இரத்தம் சேகரிப்பதற்காக கையை நீட்டியபடி நின்று கொண்டிருந்த சாருமதி விழுந்தாள். 
அவ்வளவு தான்… மொத்தமாக ஆடிப்போனான் கிருஷ்ணா. ‘ நான் எத்தனை நாட்கள், எத்தனை பொழுதுகள் இந்த பெண்ணை அவமானப் படுத்தியிருப்பேன், அழவைத்திருப்பேன்.’
‘ஆனால் அவளோ அதை எதையுமே மனதில் வைத்துக்கொள்ளாமல் என் உயிரையே எனக்கு திருப்பித் தருகிறேன் என்று சொல்லுகிறாளே!’ ஆச்சர்யத்தில் உயர்ந்த அவனின் புருவங்கள் இரண்டும், நெற்றியின் உச்சியையேத் தொட்டு மீண்டன.
இத்தனை நாள் ஒரு மனுஷியாகக் கூட கிருஷ்ணாவின் கண்களுக்குத் தெரியாத சாருமதி, அந்த நொடிப் பொழுதிலிருந்து அவன் உலகத்தை உய்விக்க வந்த தேவதையாகத் அவனுக்குத் தெரியத் தொடங்கினாள்…
“கிருஷ்ணா… கிருஷ்ணா… ” என்ற தகப்பனின் அழைப்பு நினைவுகளிலிருந்து நிகழ்காலத்திற்கு அவனை அழைத்து வர,
“ஹாங்… என்னப்பா? இதோ வரேன்” என்றவன் சட்டென்று
எழுந்து, ஒரே வாரத்தில் முதுமையை தத்தெடுத்துக் கொண்டாற் போலிருந்த தந்தையிடம் வந்தான்.
“சாப்டியா ப்பா?” 
“ம்ம்… அதெல்லாம் ஆச்சு ப்பா… அம்மா என்ன பண்ணுறாங்க?” 
“தூங்குறா… ” என்றவர்
“கிருஷ்ணா! உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லலும்னு தான் வந்தேன்”
“என்ன விஷயம் ப்பா?” 
 “நான் எனக்கு தெரிஞ்ச இரண்டு மூனு பேரு கிட்ட லீகலா டோனேட்  பண்ணுற டோனர்ஸ் யாரும் கிடைச்சா தெரியப்படுத்துங்கன்னு சொல்லி வச்சிருக்கேன் பா” 
“அப்படி யாராவது கிடைச்சா பணம் குடுத்து வாங்கிட்டு சாருமதியை டொனேட் பண்ண வேண்டாம்னு சொல்லலாம்னு நினைக்கிறேன்” 
“ஆனால்… அம்மாவோட ப்ளட் குரூப் கொஞ்சம் ரேர் ஆக இருக்குறதால சீக்கிரம் கிடைக்கிறது கஷ்டம்னு சொல்லுறாங்க.” என்றவரின் பேச்சில் இடையிட்ட கிருஷ்ணா,
“ஆனால் டாக்டர்ஸ் அம்மாவுக்கு சீக்கிரம் ஆப்ரேஷன் பண்ணனும்னு சொல்லுறாங்களேப்பா. இப்போ போய் நீங்க சாருமதி டொனேட் பண்ணவேண்டாம், நாம வேற பாத்துக்கலாம்னு சொன்னா என்ன அர்த்தம்?” கொஞ்சம் படபடப்பாகவே பேசினான் கிருஷ்ணா.

Advertisement