Advertisement

வியந்து போன அந்த அரசாங்க உயரதிகாரி,” உங்களை மாதிரி கிராமத்துக்கு ஒரு ஆளு இருந்தாப் போதும் சார், சீக்கிரமே கிராமங்கள் தற்சார்பு அடைஞ்சிடும்.”
“நானும் உங்களுடைய முயற்சிகளுக்கு என்னாலான உதவிகளை செய்ய தயாராயிருக்கிறேன். அதனால எந்த உதவியா இருந்தாலும் தயங்காமல் எங்கிட்ட கேளுங்க” என்று பண்ணையாரிடம் சொல்லியேச் சென்றார்.
கலெக்டர் சென்றவுடன் மருத்துமனைக்காக பண்ணையாரால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த மருத்துவ தம்பதியர்களான டாக்டர் நிர்மலா மற்றும் டாக்டர் ராகவன்  தம்தம் பகுதியில் உட்கார்ந்து கொண்டு, தங்களின் உடல் உபாதைகளைச் சொல்லி தீர்வு கேட்ட மக்களுக்கு மருத்துவம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். 
 அங்கிருந்த இளம் மருத்துவர்கள் அவர்களுக்கு உதவியாக இருந்தார்கள். 
அன்று அங்கு நிறைந்திருந்தது பெரும்பாலும் உள்ளூர் மக்களாகவே இருந்ததால், தங்கள் மண்ணின் மகளான சாருமதியை மருத்துவராக கண்டவர்களுக்கு உற்சாகம் கட்டுக்குள் அடங்க மறுத்து அனைவரும் அவளோடு பேசமுயற்சி செய்தனர். 
அவளும் எந்த விதமான அலட்டலும் இல்லாமல் எப்போதும் போலவே அவர்களுடன் பேச, ஒரு பெண்மணி,”சங்கரன் பெத்த பொண்ணு டாக்டராகி நிக்குது, ம்ஹும்… ஆனால் அதைப் பார்க்கத்தான் அவருக்கு குடுப்பினை இல்லாமல் போச்சு” என்று அங்கலாய்த்தது.
அதைக் கேட்டுக்கொண்டு நின்ற கிருஷ்ணா,’ஆமாம்… படிக்குறது அடுத்தவன் வீட்டு காசுல, இதுல இருந்து பாக்குறதுக்கு அப்பா இல்லைங்குற அங்கலாய்ப்பு வேற!’ என்று மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டே வீட்டுக்கு போவதற்காக வெளியே வர
 
அங்கே ஒரு வயதான நபர் பண்ணையார் மூர்த்தியைப் பார்த்து கைகூப்பி வணங்கியபடியே,”உங்க தாத்தா, அப்பா வழியில தலைமுறை தலைமுறையா மக்களுக்கு நல்லது பண்ணணும் என்கிற நல்லெண்ணம் உங்க இரத்தத்துலயும் ஊறியிருக்குது ஐயா.”
“இனி வர்ற தலைமுறைக்கும் இதே எண்ணம் மனசுல பதிஞ்சு போகணும் என்கிறது தான் என்னோட ஆசை” என்று நெகிழ்ச்சியோடு சொல்லிக்கொண்டிருக்க 
அந்த பெரிய மனிதரின் பேச்சைக்கேட்டுக் கொண்டே
 தன்னைக் கடந்து சென்ற மகனை உற்றுப்பார்த்த பண்ணையார், மகனின் முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியையும் காணமுடியாது தவித்துப் போனாரென்றால்
கிருஷ்ணாவோ,’சம்பாதிக்கிறதையெல்லாம் அவரு ஊருக்கு  அள்ளி அள்ளி விதைக்கறதைப் போல நானும் விதைக்கணுமா? அதுமட்டும் நடக்கவே நடக்காது’ என்று உள்ளுக்குள் சூளுரைத்துக் கொண்டான். 
இவ்வாறு அந்த மருத்துவமனையின் திறப்புவிழா ஊர்மக்களுக்கு மகிழ்ச்சியையும், பண்ணையாருக்கு மனநிறைவையும், கிருஷ்ணாவிற்கு இதெல்லாம் தேவையில்லாத வேலை என்ற எண்ணத்தையும் தந்தது என்றால்
ஒருவனுக்கு மட்டும் சொல்லொண்ணா கோபத்தை கொடுத்தது. அவன் பக்கத்து கிராமத்தில் வசிக்கும் துரைபாண்டி. 
சுற்றுவட்டார மக்களால்;’டாக்டர்’ என்றழைக்கப்படும் ‘போலிடாக்டர்’. பத்தாம் வகுப்பில் கூட தேர்ச்சியடையாத தற்குறி. 
ஆனால் அந்த காலத்தில் ஏதோ ஒரு கம்பவுண்டருக்கு கையாளாக இருந்து கொண்டு ஊசி போடுவதற்கும் காய்ச்சல், வயிற்றுவலி போன்ற சின்னச் சின்ன  உடல் வருத்தங்களுக்கான மருந்துகளையும் தெரிந்து கொண்டு, மருத்துவராக சுற்றுவட்டார கிராமங்களில் உலா வந்து கொண்டிருப்பவன். 
ஆமாம்… உலா வருபவன் தான். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட மணிநேரத்தில் குறிப்பிட்ட கிராமத்தின் தெருவில் தன்னுடைய பைக்கில் உலா வருவான். தேவைப்பட்டவர்கள் அவனை வீட்டுக்கே அழைத்து சென்று மருந்து மாத்திரை வாங்கிக் கொள்வார்கள்.
ஊசி போடத் தெரிந்தவர்களெல்லாம் டாக்டர் என்ற நம்பிக்கையில் இருந்த கிராம மக்களுக்கு தங்களை அங்கும் இங்கும் அலையவிடாமல் தங்கள் வீட்டுக்கே வந்து மருத்துவம் பார்க்கும் அந்த மனிதன் மிகப்பெரிய மருத்துவராகத் தெரிய, வேறென்ன? அந்த துரைபாண்டி காட்டில் பணமழை தான். 
போலி மருத்துவர் என்று பண்ணையாரால் இரண்டு மூன்று முறை புகார் செய்யப்பட்டு கைதாகி ஜெயிலுக்குள் போயிருந்தாலும், ‘கடவுளர்கள் வதம் செய்யும் போது வெட்ட வெட்ட முளைக்கும் அசுரர்களின் தலையைப் போல’
ஜாமீனில் வெளியே வந்தவுடனே அதே தொழிலை திரும்பவும் செய்ய ஆரம்பித்து விடுபவனுக்கு, 
பண்ணையாரின் இலவச மருத்துவமனை என்னும் திட்டம் அவனுடைய தொழிலுக்கு அடிக்கப்பட்ட இறுதிமணியாகத் 
தெரிய, திறப்புவிழா அன்று அங்கே நிலவரம் என்ன? என்று தெரிந்து வருவதற்காக அனுப்பியிருந்த மகன் பூபாலனின் வரவுக்காக காத்திருக்கிறான்.
பாப்பன்பட்டி சென்று வந்த மகனோ,” ப்ச்ச்… நாம நினைச்சது மாதிரி இல்லப்பா, அந்தாளு பக்காவா எல்லாம் பண்ணியிருக்காரு” என்று உதட்டை பிதுக்க
“சொல்லுறதை தெளிவாச் சொல்லிச் தொலைடா” என்று மகனிடம் எகிறினான் போலி. 
“இப்போதைக்கு அரசாங்கத்துல வேலை பார்த்து ரிட்டயர்ட் ஆன இரண்டு டாக்டர்ஸ் இருக்காங்க ஹாஸ்பிடல்ல.  அதுல லேடி டாக்டர் மகப்பேறு டாக்டராம். அந்த  டாக்டரோட புருஷன் குழந்தைகள் ஸ்பெஷலிஸ்ட்டாம். இரண்டு பேரும் ஹாஸ்பிடலிலேயே அவங்களுக்குன்னு இருக்கிற வீட்டுல தங்குறாங்களாம்”
“அதனால் எந்த நேரத்திலும் சிகிச்சை கிடைக்கும் என்கிற நம்பிக்கை மக்களுக்கு கிடைக்குது. கூடவே ஸ்கேன், எக்ஸ் ரே வசதியெல்லாம் இருக்குதாம். அதோட அங்கேயே தங்கி சிகிச்சை எடுத்துக்குறதுக்கு ரூம் வசதியும் இருக்கு” 
“இது எல்லாத்தையும் விட முக்கியமான விஷயம் என்னன்னா, ட்ரீட்மெண்ட் எடுத்துக்க ஒத்தக்காசு கூட  ஃபீஸா வாங்கப் போறதில்லையாம் அந்த பண்ணையார்” 
தான் அங்கு கண்டது, கேட்டவை எல்லாவற்றையும் தகப்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தான் பூபாலன். அவனும் கூட தந்தையிடமிருந்து தொழிலைக் கற்றுக் கொண்டு சமீபகாலமாக மக்களை சோதனை எலிகளாக்கிக் கொண்டிருக்கிறான்.
அவன் சொன்ன எல்லா விஷயங்களையும் கூர்மையாகக் கேட்டுக்கொண்டிருந்த அந்த போலிக்கு, பணமில்லாத சிகிச்சை என்னும் விஷயம் மட்டும் பிடிக்கவே இல்லை. 
இலவச சிகிச்சை என்ற விஷயம் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மக்களுக்கு எல்லாம் தெரிந்து விட்டால் தன் பிழைப்பு சந்தி சிரித்து விடும் என்ற நிதர்சன உண்மை அவனது முகத்தில் அறைய,
‘இல்லை… கூடாது… இதை மட்டும் நான் நடக்கவே விடமாட்டேன்’ என்று மனதுக்குள் உறுதி எடுத்துக் கொண்டவன் மகனிடம், 
“பூபாலா! நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்கு தெரியாது? ஆனால் மக்கள் மத்தியில அந்த ஹாஸ்பிடலைப் பற்றி தப்பான அபிப்பிராயத்தை பரப்பணும்” 
“நானும் எம்பங்குக்கு அந்த வேலையை திவ்யமா செஞ்சிடுவேன். அந்த இலவச சிகிச்சை எங்குற ஒத்த விஷயமேப் போதும் எனக்கு மக்களை குழப்பிவிட” 
“ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பச் சொன்னா, அது பொய்யா இருந்தாக் கூட உண்மைன்னு இந்த மக்களும் நம்பிடுவாங்க. அப்புறம் ஆட்டுமந்தைக் கூட்டம் மாதிரி நம்ம பின்னாடி தான் வருவாங்க” 
 தன் ஒருவனின் பிழைப்பிற்காக படுதீவிரமாக தன்னலமில்லாத பண்ணையாரின் தர்மகாரியத்தின் மீது கறுப்புச் சாயம் பூச தயாரானான் அந்த துரைபாண்டி.
****************
மறுநாள் காலை புறப்பட்டு தனது பேக் பேக்கை தோளில் சுமந்து கொண்டு பண்ணையார் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தாள் சாருமதி. 
நேற்று சாயங்காலமே நண்பர்கள் அனைவரும் கிளம்பிச் சென்றிருந்தார்கள். அவர்களோடு ரகுவும் சென்றிருந்தான். 
கிளம்பும் போது ஹேமா இவளையும் உடன் வரச் சொல்லி அழைக்க,”காயத்ரி இப்போ திருநெல்வேலி காலேஜ்ல பிஎஸ்சி ஃபர்ஸ்ட் இயர் படிக்குறான்னு உனக்கு தெரியும் தானே ஹேம்ஸ். அவ ஃபர்ஸ்ட் செமஸ்டர்லயே எல்லா சப்ஜெக்ட்லயும் ஃபெயில் ஆகியிருக்கிறா ப்பா!”
 
“அதனால நாளைக்கு காலைல நான் அவ காலேஜ்க்கு போய் அவ ஹெச் ஓ டி யைப் பார்த்து பேசிட்டு, அப்படியே பஸ் பிடிச்சு வந்துடுறேன். நீங்க இப்ப கிளம்புங்க” என்று அனுப்பி வைத்திருந்தாள். 
இப்போதெல்லாம் தான் எதைச் சொன்னாலும் அதை தவறாக எடுத்துக் கொண்டு நேர்மாறாகச் செய்யும் தங்கையை நினைக்கும் போதே கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது சாருமதிக்கு. 
‘ஆனாலும் அவளை அப்படியே விட்டுவிட முடியாதே’ என்ற எண்ணத்தில் தான் கல்லூரி வரை சென்று வரவேண்டும் என்று சாருமதி நினைத்தது. 
காலையிலேயே இன்று பண்ணையார் வீட்டிலிருந்து அவசரமாக அழைப்பு வரவே சீக்கிரமாக சென்றுவிட்டார் கல்யாணி. 
தங்கைகள் இருவரையும் பள்ளிக்கும், கல்லூரிக்கும் அனுப்பி விட்டு அம்மாவிடம் சொல்லிவிட்டு செல்லலாம் என்ற எண்ணத்தில் வந்துகொண்டிருந்தவளுக்கு,
  வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாகவே தன் அன்னையின் குரல் ,”யாராவது வாங்களேன்… ஐயோ! யாராவது வாங்களேன்” என்று பதட்டத்தோடு கேட்கவும், வேகவேகமாக வீட்டினுள் நுழைந்தாள். 
அங்கே ஹாலில் சாய்ந்து கொண்டிருந்த வேதவல்லியை தன் கைகளில் பிடித்து, தாங்கமுடியாமல் தாங்கிக் கொண்டே பதட்டத்தோடு கத்திக்கொண்டிருந்தார் கல்யாணி. 
அதைக் காணவும் தன் தோளில் கிடந்த பேக்கை அவசரமாக கழற்றி எறிந்த சாருமதி ஓடிவந்து தன் அன்னையோடு சேர்ந்து வேதவல்லியை கீழே விழாதவாறு தாங்கிக் கொண்டு, 
பக்கத்தில் இருந்த சோஃபாவில் சாய்வாக அமரவைத்து டைனிங் ஹாலில் இருந்த தண்ணீரை எடுத்து அவரின் முகத்தை துடைத்து விட்டவள், கைபிடித்து நாடியை பரிசோதித்துப் பார்க்க, ஹைபிட்ச்சில் எகிறியது துடிப்பு
தண்ணீர் முகத்தில் படவுமே கண்விழித்த வேதவல்லியிடம் எதுவுமே காட்டிக்கொள்ளாமல்,”இப்போ தான் முதல் தடவை இப்படி வருதா? இல்லை இதுக்கு முன்னாடியும் இந்த மாதிரி வந்திருக்காம்மா?” என்று ஒரு மருத்துவராக கேள்வியை கேட்டவள்,
கலவரமுகத்தோடு நின்ற தன் அன்னையிடம் திரும்பி,”சூடா ஒரு ஹார்லிக்ஸ் போட்டு சீக்கிரமா எடுத்துட்டு வாங்கம்மா” என்று பணித்துவிட்டு
“ம்ம்… சொல்லுங்க ம்மா” என்று வேதவல்லியிடம் கேட்க 
“போன வாரத்திலயும் இப்படித் தான் ஒருநாள் தலை சுத்தி கீழ விழப்பார்த்தேன். ஆனால் சட்டுன்னு சுதாரிச்சு உட்கார்ந்திட்டேன்.” 
“அப்புறம் முகத்தைக் கழுவிட்டு கொஞ்சம் சுகரை அள்ளி வாயில போட்டுட்டேன். கொஞ்ச நேரத்தில சரியாயிடிச்சி” என்றவர்
“ஏன்?” என்று எதிர்கேள்வி கேட்டார் சாருமதியிடம்.
“ஒன்றுமில்லை ம்மா… தெரிஞ்சிக்கத் தான் கேட்டேன்” என்றவள் தன் அன்னை கொண்டு வந்த ஹார்லிக்ஸ்ஸை வாங்கி வேதவல்லியை குடிக்க வைத்து விட்டு
பண்ணையாரை அழைக்க ஃபோனை கையிலெடுக்க, அப்போது வெளியிலிருந்து வந்தவர் மனைவியின் நிலை கண்டு பதற
“ஒன்னுமில்லை ய்யா…கொஞ்சம் பிரஷர் அதிகமா இருக்கு.  மேடத்தை நம்ம ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் செக் பண்ணி பாத்துட்டு வந்துடலாம். வாங்க” என்றவள்
பண்ணையாரின் உதவியோடு வேதவல்லியை காரில் ஏற்றி அவரின் பக்கத்தில் அமர, சரியாக அந்த நேரத்தில் வீட்டுக்குள் தனது பைக்கில் வந்த கிருஷ்ணா, வண்டியைக் கூட ஸ்டாண்ட் போட்டு நிறுத்தாமல் அப்படியே விட்டுவிட்டு 
காருக்கருகில் ஓடி வந்து,”ஏய்…என் அம்மாவை என்ன பண்ணுறீங்க” என்று கத்தினான்.
அந்த சோர்ந்து போன நேரத்திலும் தன் மகனின் பதட்டமான முகத்தைப் பார்த்து,”அம்மாவுக்கு கொஞ்சம் பிரஷர் அதிகமாகிடிச்சி குட்டா. அதான் ஹாஸ்பிடல் போய் செக் பண்ணிட்டு வந்திடலாம்னு சாருமதி சொல்லுறா.”
“நீயும் அம்மாக்கூட வா குட்டா, ஹாஸ்பிடல் வரைக்கும் போய்ட்டு வந்துடலாம்” என்று மெல்லிய குரலில் சொல்ல 
பதட்டத்தோடு காரின் கதவை திறந்து கொண்டு அன்னையின் அருகில் அமர்ந்தவன் தாயின் தலையை தன் தோள்களில் தாங்கிக் கொண்டான்.
ஹாஸ்பிடலில் வேதவல்லியை பரிசோதித்த டாக்டர் நிர்மலா, பிரஷர் அதிகமாக இருப்பதால் ப்ளட் டெஸ்ட் ஒன்று செய்துவிடலாமென்று சொன்னார்.
அவ்வாறே செய்யப்பட்ட இரத்த பரிசோதனையின் முடிவு இரத்தத்தில் யூரியா, சீரம் கிரியாடினின் அதிகமாக இருப்பதாகச் சொல்ல
 “எதுக்கும் அப்டமன் ஸ்கேன் ஒன்னு செய்துடுவோம் சார்”  என்றார் டாக்டர், பண்ணையாரிடம்.
பிரஷருக்கென்று வந்து ஸ்கேன் வரை நீண்ட சிகிச்சையைக் கண்டு பதறிய பண்ணையாரிடம்,
“பயப்படாதீங்க சார். ஜஸ்ட் ஒரு கிளாரிஃபிகேஷனுக்காகத் தான்” என்றவர் வேதவல்லியை அழைத்துக் கொண்டு ஸ்கேன் ரூமிற்குள் நுழைய, பின்னோடே சென்றாள் சாருமதி.
ஸ்கேன் செய்வதற்கு டாக்டருக்கு எல்லா உதவிகளையும் செய்த சாருமதியின் கண்கள் கம்ப்யூட்டரின் திரையையே உற்றுப் பார்க்க அங்கு தெரிந்த முடிவில் கலவரத்தை தந்தெடுத்தது அவளின் முகம்.
 

Advertisement