Advertisement

சாருமதி.
அத்தியாயம் 08
இயற்கை எழில் கொஞ்சும் பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாந்தோப்பில் நடந்து கொண்டிருந்தான் கிருஷ்ணா. கூடவே நண்பன் தனஞ்செயன். 
மாந்தோப்பு என்றால் அடர்ந்து கிளைகள் பரப்பி நிற்கும் பெரிய பெரிய மரங்கள் நிற்கும் தோப்பல்ல. இப்போது தான் வளர்ந்து வரும் இளம் மரங்கள் நிறைந்திருக்கும் தோப்பு.
அங்கு நிற்கும் மரங்களுக்கு வயது ஐந்து மட்டுமே. கிருஷ்ணா பிஎஸ்சி அக்ரி சேர்ந்த முதல் வருடத்தில் வைத்து வளர்க்க ஆரம்பித்த மரங்கள்.
கல்லூரியில் சேர்ந்து, முதல் லீவிற்கு வீட்டுக்கு வரும் போதே “இந்த இடத்தில் தனக்கு மரக்கன்றுகள் நடவேண்டும்” என்றும், “தந்தையிடம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கச் சொல்லு” என்றும் அன்னையை நச்சரிக்க ஆரம்பித்து விட்டான் கிருஷ்ணா. 
வழக்கம் போல மகனின் ஆசையை கணவனிடம் கொண்டு போன வேதவல்லியிடம்,”இப்பவே எதுக்கு மா? அவன் படிப்பை முடிச்சி வரட்டும் பாத்துக்கலாம்” 
“அதுவும் இல்லாமல் இங்கயே ஏகப்பட்ட ஏக்கர்ல தென்னந்தோப்பு இருக்கு? அப்புறம் எதுக்கு புதுசா? இருக்கறதுலயே அவன் என்ன பண்ணனும்னு ஆசைப்படுறானோ அதைப் பண்ணச் சொல்லு” என்று பண்ணையார் சொல்லிவிட, மேள தாளம் இல்லாமலேயே சாமியாடினான் கிருஷ்ணா.
“ஏன்? ஊர்ல உள்ளவங்களுக்கெல்லாம் செலவழிக்க மனசு வரும். ஆனால் பெத்த பிள்ளைக்கு செலவழிக்க மனசு வராதா உன் வீட்டுக்காரருக்கு?”
“என்னையும் பெருசா டாக்டருக்கு படிக்கச் சொன்னாரே! நானும் படிச்சிருந்தா எவ்வளவு செலவாகி இருக்கும் பண்ணையாருக்கு? இப்போ அப்படி இல்லைல்ல, அந்த காசை இங்க செலவழிக்கச் சொல்லு” 
பிஎஸ்சி அக்ரி படிப்பதற்காக மதுரையிலேயே புகழ்பெற்ற கல்லூரியில் சேர்ந்து கொண்டு, ஐந்து காசு செலவில்லாமல், தான் படித்துக் கொண்டிருப்பது போல கணக்கு சொன்னவன், 
 “நான் படிச்சு முடிச்சு வெளியே வரும் போது மரம் எல்லாம் பெருசா வளந்துருக்கணும்னு நினைக்கிறேன், அது தப்பா? எப்போ பாரு என்னோட ஆசைக்கு முட்டுக்கட்டை போடுறதே உன் வீட்டுக்காரருக்கு வேலையா போச்சு” என்று கத்த 
இது போதாதா வேதவல்லிக்கு! அந்த வருட இறுதி பருவத்தேர்வை எழுதி முடித்து ஊருக்கு வந்தவன் மேற்பார்வையிலேயே மரங்கள் நடவு செய்யும் பணி நடந்தது.
மொத்தம் முப்பது ஏக்கர் நிலம். அதில் ஏற்கனவே ஒரு ஐந்து ஏக்கர் நிலத்தில் தென்னை மரங்கள் இருக்க, அவற்றின் தண்ணீர் தேவைக்காக கிணறுகளும் தோப்புக்குள் கிடந்தன.
தரிசாக கிடந்த மீதி நிலத்தில் மாமரம், சப்போட்டா, கொய்யா, எலுமிச்சை, நெல்லி, செந்தெங்கு என்று கிருஷ்ணா தெரிவு செய்த மரங்கள் நடப்பட்டு, அத்தனைக்கும் சொட்டுநீர் பாசனமும் போடப்பட்டது.
இந்த மொத்த இடத்தின் மேற்பார்வையாளர் வெங்கையா. 
அவரின் தலைமையில் மூன்று குடும்பங்கள் தோட்டத்திற்குள்ளேயே தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். 
அவர்களுக்கு இரண்டு அறைகள் உள்ள சிறுவீடுகளும் கூட கட்டிக்கொடுக்கப்பட்டிருந்தது. 
‘வருமானம் வராத விவசாயம் ஆனையை கட்டி தீனிபோடுவதற்கு சமம்.’ அந்த ஆனைக்கு தீனிபோட அங்கு நின்ற தென்னை மரத்திலிருந்து வரும் வருமானத்தை அப்படியே ஒதுக்கச் சொல்லிவிட்டார் பண்ணையார்.
 
இதோ ஐந்து வருடங்களில் மரங்களும் ஓரளவு பருவத்துக்கு வந்து விட்டது. 
லேசாகத் தூறிய சாரலில் நனைத்து கொண்டே, குளுமையான காற்றில் நிறைந்திருந்த குற்றால மலையின் மூலிகை வாசத்தை ஆழ்ந்து சுவாசித்தபடி, மரங்கொள்ளா பூக்களோடு நின்ற மாமரங்களை ரசித்தவாறே நடந்து கொண்டிருந்தான் கிருஷ்ணா. 
“ஒருவழியா நீ நெனச்சதை சாதிச்சிட்ட இல்ல மச்சான்!” தனா, தான் கேட்டிருந்தான் நண்பனிடம்.
“இதென்னடா சாதனை?  இன்னும் இதைவிட பெரியப் பெரிய தோப்பெல்லாம் உண்டாக்கணும்.  அதுவும், அத்தனை மரங்களும் செயற்கை உரம் இல்லாது நானே தயாரிக்கிற இயற்கை உரத்துல வளரணும்.”
“இந்த மாவட்டத்திலயே, இல்லை… நம்ம தமிழ்நாட்டிலயே எங்கிட்ட தான் மிகப்பெரிய ஆர்கானிக் பண்ணையிருக்குன்னு எல்லாரும் சொல்லணும்”
“என் பண்ணையில விளையுற அத்தனை பொருட்களுக்கும் இன்டர்நேஷனல் அளவுல டிமாண்ட் ஏற்பட்டு, நானே அதை எல்லாம் எக்ஸ்போர்ட் பண்ணணும்”
“இப்படி எங்கிட்ட, இன்னும்… இன்னும்… நிறைய கனவு இருக்குடா. அதையெல்லாம் இதோ என்னோட எம் எஸ் சி யை முடிச்சிட்டு வெளியே வரவும் ஒவ்வொன்னா இம்ப்ளிமெண்ட் பண்ண ஆரம்பிச்சிடுவேன்.”  
முகத்தில் விரிந்த சிரிப்போடு ரசனையோடு சொல்லிக்கொண்டிருந்த கிருஷ்ணா, தான் இளங்கலை பயின்ற அதே கல்லூரியில் விவசாய படிப்பின் முதுகலை இறுதி ஆண்டில் இருக்கிறான். 
தனா, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து கடந்த ஒருவருடமாகச் சென்னையில் பிரபலமான கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
நண்பர்கள் இருவரும் சேர்ந்தாற்போல் ஊரில் இருக்கவும் பழைய குற்றாலத்தில் இருக்கும் கிருஷ்ணாவின் தோப்பிற்கு வந்துவிட்டார்கள்.
மரங்களுக்கிடையே இருந்த சீரான இடைவெளியில்  பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்தவர்களின் நடைக்கு,”அப்பு…” என்ற அழைப்பு அணைபோட, நின்று திரும்பிப்பார்த்தார்கள். அழைக்கும் முறையே சொன்னது, அழைத்தது வெங்கய்யன் என்று.
இரண்டு மரங்களுக்கப்பால் நின்று கொண்டு ஒரு மாமரத்தில் படர ஆரம்பித்திருந்த காட்டுக்கொடியை வெட்டிக்கொண்டு நின்ற மனிதர், தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து முகத்தை துடைத்தபடியே இவர்களை நோக்கி வந்தவர்,
“என்ன அப்பு? ஒரு குடையை பிடிச்சிட்டு வராம மழைத் தூத்தலுல நனைஞ்சிட்டே வர்றீங்க?” என்று விசனப்பட, 
“இந்த மழைக்கெல்லாம் உங்க அப்பு கரைந்து போகமாட்டான் தாத்தா! அதனால கவலப்படாதீங்க” என்று தனா கிண்டலடித்தான்.
நண்பனின் பேச்சில் முகத்தில் லேசாக புன்னகை இழையோட, தன் தலைமுடியிலும் முகத்திலும் பூந்தூறலாய் படிந்நிருந்த மழைத்துளியை வலதுகைக் கொண்டு துடைத்து விட்ட கிருஷ்ணா,
“வெங்கையா! சாரல் விழ ஆரம்பிச்சிடிச்சி, அதனால தோட்டத்து வேலியில் நிக்குற எல்லா மரத்தோட  இலைத் தழைகளையும் வெட்டி ஒவ்வொரு மரத்தோட மூட்டுலயும் குழிதோண்டி புதைச்சு வைக்கணும்”
“அப்புறம், கேசவன் வரும் போது, நான் சொன்னேன்னு சொல்லி தேவையான அளவு மாட்டுஎரு அடிச்சி வைக்க சொல்லிடு. நாம தேவைப்பட்டப்போ மரத்துக்கு போட்டுக்கலாம்”
“அதுக்கு முன்னாடி இந்த ஆட்டுக்கிடை போடுறவங்களைப் பார்த்து, இங்க தோப்புக்குள்ள ஒரு பதினைந்து நாளாவது ஆடுகளை கொண்டு வந்து கிடைபோடச் சொல்லி நான் சொன்னேன்னு கேசவன் கிட்ட சொல்லிடு”  
“அப்புறம் ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம், தோட்டத்துக்குள்ள ஒரு பிளாஸ்டிக் கவர் கூட வரக்கூடாது. தப்பித்தவறி வர்றதை எல்லாம் தனியா எடுத்து வச்சிடு, நாம டிஸ்போஸ் பண்ணிக்கலாம்” என்று ஒன்றன்பின் ஒன்றாக வெங்கையனிடம் தான் இல்லாத நாட்களில் செய்ய வேண்டியவற்றை பட்டியலிட,
“கவலையே படாதீங்க அப்பு! அதெல்லாம் நான் பாத்துக்குறேன். நீங்க மொதல்ல நல்லபடியா  படிப்பை முடிச்சிட்டு வாங்க” என்றவர்
 “ஹாங்… செந்தெங்குல குறும்பல் பிடிச்சிருக்கு. அப்படியே போகும் போது அதையும் பாத்துட்டு போங்க” என்று சொல்ல
“ம்ம்ம்… இப்போ அங்க தான் போறோம். நான் சொன்னதையெல்லாம், நீயும் மறக்காமல் செய்திடு” என்றவன் மேலே நடக்க, கூடவே நடந்த தனா,
“எவ்வளவு தான் இருந்தாலும், நீ டாக்டருக்கு படிச்சிருக்கலாம் என்கிற எண்ணம் மட்டும் எனக்கு, ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது வந்துடுது மச்சி!”
“மெடிசின் படிக்க போதுமான கட் ஆஃப் மார்க்கையும் கையில வச்சிகிட்டு, நீ டாக்டருக்கு படிக்க மாட்டேன்னு சொன்னது, ரொம்பவே வருத்தமா இருந்தது எனக்கு” இத்தனை வருடங்களுக்குப் பிறகும் கூட தன்னுடைய ஆதங்கத்தை வெளியிட்டான் தனா.
“தனா! என்னை பத்தி நல்லா தெரிஞ்ச நீயே இப்படி யோசிக்கலாமா? எனக்கு  இந்த மரம்,மட்டையைத் தான் பிடிச்சிருக்கு!  இந்த சேவை, புண்ணாக்கு, புடலங்காய் எல்லாம் எனக்கு ஒத்தே வராது டா.”
“இன்னும் ஒருமாசத்தில உங்க அப்பா கட்டிகிட்டு இருக்கிற ஹாஸ்பிடல் மக்களோட பயன்பாட்டுக்கு வரப்போகுதாம். நீ மட்டும் டாக்டருக்கு படிச்சிருந்தா எவ்வளவு கெத்தா அதுல டாக்டரா உக்காரலாம்! ஆனால் இப்போ…” என்று அவன் வார்த்தைகளை இழுக்க,
“இப்ப மட்டும் என்ன? மண்டையைப் பிளக்குற வெயில்ல நான் போய் மண்ணை வெட்டிகிட்டா நிக்கப்போறேன்?”   
என்னோட மேற்பார்வையில் ஆட்களை வச்சு வேலை செய்துட்டு, நானும் கெத்தா தான் உட்காரப்போறேன்” 
“அதுமட்டுமில்ல, என்னோட ஐடியாப்படி எல்லாம் நடந்தால் நானே நூத்துக் கணக்கானவங்களுக்கு வேலை குடுப்பேன் தெரியுமா?”
நாம் நினைக்கும் அத்தனையும் அப்படியே நடந்துவிட்டால் வாழ்க்கையில் சுவாரஸ்யம் என்பது இல்லை என்ற உண்மை தெரியாமல் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தான் கிருஷ்ணா.
***********
பாப்பன்பட்டி கிராமமே அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. 
கிராமத்து மக்கள் அனைவரும் ஏதோ விழாவிற்கு செல்வது போல புறப்பட்டு, ஊருக்கு மத்தியில் இருந்த அந்த புதிய கட்டடத்தை நோக்கி போய்க் கொண்டிருந்தார்கள். 
அந்த கட்டிடத்தின் முகப்பில் ‘திரு. கிருஷ்ணமூர்த்தி நினைவு மருத்துவமனை’ என்ற எழுத்துக்கள் பளபளத்துக் கொண்டிருந்தது. 
ஆமாம்… பண்ணையார் மூர்த்தி தன் வாழ்நாள் கனவான மருத்துவமனையை கட்டி முடித்து, அதற்கு தன்னுடைய அப்பாவின் பெயரை வைத்திருந்தார். அதற்குத் தான் இன்று மாவட்ட ஆட்சியர் கையால் திறப்பு விழா.  அதனாலேயே ஊர் இன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. 
மருத்துவமனையின் திறப்பு விழாவை ஒரு குடும்ப விழாவாகக் கருதி குடும்பத்தின் அத்தனை சொந்தங்களையும் அழைத்திருந்தார் பண்ணையார். விருப்பம் இல்லையெனினும் வேறு வழியில்லாமல் கிருஷ்ணாவும் அங்கே தன் குடும்பத்தினரோடு நின்றுகொண்டிருந்தான். 
 அங்கே கலெக்டரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை பரபரப்பாக   செய்துகொண்டிருந்த சாருமதியும் அவளது நண்பர்களும் மருத்துவ மேற்படிப்பின் முதல் வருடத்தில் இருந்தார்கள். 
சாருமதியும், ஹேமாவும் மதுரையிலேயே மகளிர் சிறப்பு மருத்துவத்தில் மேற்படிப்பில் சேர்ந்திருந்தார்கள். 
ரேணு, அஸ்வின், திவாகர் மூவரும் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு துறைகளில் மேற்படிப்பில் இருந்தாலும் தங்களது தோழியின் அழைப்பை ஏற்று இங்கே வந்திருந்தார்கள். கூடவே ரகுராமும் வந்திருந்தான்.
“ஏய் வல்லி! அந்த சாருமதி இங்க வேலை தானடி பார்கப்போறா? ஆனால் என்னமோ இந்த ஹாஸ்பிடலுக்கே அவதான் முதலாளி மாதிரி, பவுசுல சுத்தி சுத்தி வர்றா?”  
சொன்னது வேறு யாராக இருக்கமுடியும்? எப்போதும் போல வேதவல்லியின் தாயார் தான்!
“ப்ச்ச்… ம்மா… கொஞ்ச நேரம் சும்மா தான் இருங்களேன்.”
“ம்ஹும்… இங்க நடக்குறதையெல்லாம் பாக்கும்போது எனக்கென்னவோ சரியாப்படலடியம்மா”  சற்று வேகமாக அங்கலாய்த்த பாட்டியின் குரல் பேரனின் காதில் விழ 
தானாகவே தலை சாருமதி நின்ற பக்கம் லேசாகத் திரும்பிப் பார்த்தது. 
 படிப்பு கொடுத்த அழகு, அந்த பிறை முகத்தை பிரகாசிக்கச் செய்திருந்தது என்றால்,  போட்டிருந்த டாக்டருக்கே உரிய வெள்ளை கோட்டும், கழுத்தில் மாலையெனக் கிடந்த டெதஸ்கோப்பும் தோற்றத்தில் ஒரு கம்பீரத்தை அவளுக்கு கொடுக்க, பாட்டி சொன்னது போல அந்த மருத்துவமனைக்கே உரிமையாளர் போன்று தான் தெரிந்தாள் சாருமதி.
‘நீ எப்படி இருந்தால் எனக்கென்ன?’ என்பது போல லேசாக உதட்டைச் சுழித்து சாருமதியின் மீதிருந்த பார்வையை விலக்கிக் கொண்டவனின் கண்களில், சாருமதியைப் பார்த்த தன்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த ஹேமா விழ, சற்றே சுவாரஸ்யம் கூடியது கிருஷ்ணாவின் பார்வையில்.
சற்று நேரத்துக்கெல்லாம் வந்த மாவட்ட கலெக்டரின் கையால் மருத்துவமனை திறப்புவிழா காண, மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது அந்த மருத்துவமனை.
ஏதோ இலவச மருத்துவமனை என்ற அளவில் வந்திருந்த கலெக்டருக்கே மருத்துவமனையின் உள்கட்டமைப்புகள் ஆச்சர்யத்தைத் தான் தந்தது. 

Advertisement