Advertisement

‘இல்லையே! என் நண்பர்களும் இவனைப் போல வசதியானவர்கள் தானே! ஆனால் அவர்கள் இவனைப் போல இல்லையே!’  என்று அன்று நடந்ததை மறக்கமுடியாமல் இன்றும் மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தவளை,
“சாரு! நம்ம ஹனி கண்ணை மூடி கனவு கண்டா, அதுல ஒரு நியாயம் உண்டு. ஆனால் நீ ஏன் கொசுவர்த்தி சுருள் சுத்துற?” என்று ஹேமா உலுக்க  
“ஹாங்… ” என்று ஒரு வினாடி தடுமாறியவள்,”நான் ஊருக்கு வரும் போதெல்லாம் பண்ணையாரைப் போய் பாத்திடுவேன். அதான் இன்னைக்கு எப்போ போகலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன் ஹேம்ஸ்…” என்று சமாளித்தாள்
“பண்ணையார் வீட்டுக்கா? நாங்களும் வரோம்பா, ரேணு கூட அவரைப் பாக்கணும் னு சொல்லிட்டே இருந்தா. எங்களையும் கூட்டிட்டு போ பிளீஸ்…”
“ம்ம்… முதல்ல மணிமுத்தாறு அருவியில போய் குளிச்சிட்டு வருவோம். அப்புறமா கேசவன் அண்ணாக்கு ஃபோன் செய்து, ஐயா வீட்ல இருக்காங்களான்னு கேட்டுட்டு போகலாம்” என்றபடியே கொல்லைப்புறத்தில் நின்ற மற்ற நண்பர்களை நோக்கி நகர்ந்தாள் சாருமதி.
அங்கே காயத்ரியின் துணையோடு கிணற்றிலிருந்து ‘கப்பி’ மூலமாக வாளியில் தண்ணீர் இறைக்க மல்லுக்கட்டிக் கொண்டிருந்த மற்ற நண்பர்களுக்கும் தேன்மொழியை அறிமுகப்படுத்திய சாரு, தன்னுடைய திட்டத்தைச் சொல்ல மகிழ்வோடு கிளம்பினார்கள் அனைவரும். 
எவ்வளவு அழைத்தும் கல்யாணி அம்மா வர மறுத்து விட, இளையவர்கள் அனைவரும் சென்று அந்த அருவியே அதிரும் வண்ணம் ஆட்டம் போட்டு விட்டு வந்திருந்தார்கள்.
வந்தவர்கள் சுடச்சுட கல்யாணி அம்மா பரிமாறிய உணவை உண்டு சற்றே ஓய்வாக ஆங்காங்கே அமர்ந்து கொள்ள, தேன்மொழி விடைபெற்று சென்றிருந்தாள். 
சாருமதி கேசவனுக்கு அழைத்து,”பண்ணையார் வீட்டில் இருக்கிறாரா?” என்ற விபரம் கேட்க, அவனும்,”இருக்கிறார் சாரும்மா! உடனே வா” என்று விடவே தன் நண்பர்களை அழைத்துக் கொண்டு கிளம்பினாள் சாருமதி.
 எப்போதுமே சாருமதி பண்ணையார் இல்லாத சமயத்தில் அங்கே செல்வதை தவிர்ப்பதற்காக, கேசவனிடம் வீட்டில் அவரின் இருப்பைப் பற்றி தெரிந்து கொண்டே தான் செல்லுவாள். அவளின் எண்ணம் புரிந்தாற்போல கேசவனும் அவளுக்கு உதவி செய்வான்.
பண்ணையாரின் மாளிகையின் முன் காரைக் கொண்டு நிறுத்தி ட்ரைவர் சீட்டிலிருந்து இறங்கிய ஹேமா,”வாவ்! எவ்ளோ பெரிசா, எவ்ளோ அழகா இருக்கு இந்த வீடு! இல்லயில்ல பங்ளா” என்று தன் வார்த்தையை தானே திருத்திக்கொள்ள
பின்சீட்டிலிருந்து இறங்கிய மற்றவர்களும் ஹேமாவின் வார்த்தைகளையே பிரதிபலித்தார்கள்.
யதேச்சையாக தன் அறையின் ஜன்னல் வழியே வெளியே பார்த்த கிருஷ்ணாவின் கண்களில் ட்ரைவர் சீட்டிலிருந்து 
இறங்கிய ஹேமா விழ,
‘ம்ம்ம்… அன்னைக்கு ட்டூ வீலர்! இன்னைக்கு ஃபோர் வீலரா?’ இதழ்களில் புன்னகை மின்ன ஹேமாவை ஆராய்ச்சி பார்வை பார்த்தவனின் கண்களில் பக்கத்து சீட்டிலிருந்து இறங்கிய சாருமதி விழவும்
‘ஆனால் என்ன? சகவாசம் சரியில்லையே!’ என்று முணுமுணுத்துக் கொண்டான். 
நேற்றே சாருமதி குடும்பத்தோடு இவர்களை கோயிலில் பார்த்திருந்தபடியால் இன்று ஹேமாவைக் கண்டு அவனுக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை.
சொல்லப் போனால் இன்று சாருமதியுடன் அவர்களை இங்கே எதிர்பார்த்திருந்தான் என்றே சொல்லலாம்.
தாங்கள் காரிலிருந்து இறங்கிய நேரத்திலிருந்து தங்களையே ஒருவன் ஆராய்ச்சி பார்வை பார்த்துக்கொண்டு நிற்கிறான் என்று தெரியாமல், சுற்றும் முற்றும் பார்த்து ரசித்தபடி அந்த மாளிகையினுள் மெதுவாக நுழைந்தது அந்த நண்பர்கள் கூட்டணி.
ஐவரில் முதல் ஆளாக சென்ற சாரு, மெதுவாக ஹாலின் உள்ளே எட்டிப்பார்த்தாள். அந்த ஹாலே பண்ணையாரின் உறவுக்கூட்டத்தால் நிறைந்திருந்தது.
பிரபல கேட்டரிங் சர்வீஸின் யூனிஃபார்ம் அணிந்த இரண்டு மூன்று நபர்கள் அங்குமிங்கும் அலைந்து அங்கிருந்தவர்களுக்கு டீயும் சிற்றுண்டியும் வழங்கிக் கொண்டிருந்தார்கள். 
ஆமாம்… திருவிழா நேரத்தில் எப்போதுமே பண்ணையார் மாளிகை உறவினர்களாலும், நண்பர்களாலும் நிறைந்து விடும் என்பதால் திருவிழாவின் கடைசி மூன்று நாள் சமையலுக்கு கேட்டரிங் சர்வீஸிலிருந்து ஆட்களை வரவழைத்து விடுவார் பண்ணையார்.
அந்த மூன்று நாட்களும் ஏதாவது தேவையென்றால் மட்டும் கல்யாணி க்கு அழைப்பு வரும். இல்லையென்றால் லீவு தான்.
ஹாலில் பண்ணையாரின் உறவுக் கூட்டத்தைக் கண்ட சாருமதி,’ஓஹ்..‌. திருநாள் டைம் இங்க எல்லா சொந்தக்காரங்களும் வந்துருப்பாங்க எங்கிறது மறந்து போய் நாம தான் முந்திரிகொட்டை தனமா வந்துட்டமோ?’ 
‘எப்பவுமே இங்க திருநாள் டைம்ல இவ்வளவு கூட்டம் இருக்கும் எங்குறது நமக்கு தெரிஞ்சும், அது நமக்கு மறந்து போச்சுன்னா, நான் இங்க வர அவ்வளவு ஆர்வமாவா இருந்திருக்கேன்?’
‘ஒருவேளை, நான் வசதிகுறைவான வீட்ல பிறந்ததுனால என்னை மனுஷியாக் கூட மதிக்காத கிருஷ்ணா கிட்ட என்னோட ஃப்ரெண்ட்ஸ்ஸை காட்டி, இங்க பாரு! இவங்களும் உன்னைப் போல வசதியானவங்க தான், ஆனால் குணத்தில உன்னை மாதிரி கிடையாது. நான் ன்னா அவங்களுக்கு உயிருன்னு காட்டி பீத்திக்கணும்னு நினைச்சு  ஓடிவந்துட்டனோ?’
ஹாலின் நுழைவாயில் நின்று கொண்டு ஒரு நொடியில் ஏதேதோ எண்ணங்களில் உழன்று கொண்டிருந்த சாருமதியைக் கண்ட அர்ச்சனா ஓடி வந்து,
“வாங்க டாக்டர் மேடம்! ஏன் அங்கயே நின்னுட்டீங்க” என்று கேலியாக கேட்டவாறே கையை பிடித்து உள்ளே அழைத்து செல்ல, பிரமிப்பு மாறாமல் கூடவே வந்தார்கள் சாருமதியின் நண்பர்கள்.
சிறிது நேரத்தில் ஹாலுக்கு வந்த பண்ணையாருக்கு வணக்கம் வைத்தவள் தன் நண்பர்களை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.
டாக்டர் படிப்பு மேல் ஒரு பெரிய மரியாதை மனதில் இருந்த மனிதர், தன்வீட்டில் ஒரே நேரத்தில் ஐந்து வருங்கால மருத்துவர்களைக் காணவும் உற்சாக மிகுதியில் அவர்களுடன் பேச ஆரம்பித்தவர்
அந்த ஹாலின் ஒரு பக்கத்தில் அமர்ந்திருந்த தனது மனைவியையும் அப்போது அங்கே வந்து கொண்டிருந்த மகனையும் அருகே அழைத்து அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க, 
லேசான ஒரு சிரிப்புடன்,”இருந்து சாப்பிட்டுட்டு தான் போகணும்” என்ற விண்ணப்பத்தோடு வேதவல்லி ஒதுங்கி கொண்டார்.
அதிசயத்திலும் அதிசயமாக அஸ்வினும், திவாகரும் நீட்டிய நட்புக் கரத்தை பற்றிக் கொண்டு அவர்களுடன் பேச ஆரம்பித்தான் கிருஷ்ணா.
ஆனால் நொடிக்கொருமுறை கண்கள் அர்ச்சனாவோடு பேசிக்கொண்டிருந்த சாருமதியை கூர்மையுடன் தொட்டு மீண்டது. 
ஒருவேளை “உன் நண்பர்களை நான் வளைத்து விட்டேன் பார்!” என்று சொல்லாமல் சொல்லியதோ அந்த பார்வை.
இவர்கள் இப்படி என்றால்,”இது என் மகன் கிருஷ்ணா!” என்று பண்ணையார் அறிமுகப்படுத்தவுமே,
“ஹேய்!  இதென்னடி! நம்ம சாரு நமக்கு சொன்ன பண்ணையார் கதையில இதுவரைக்கும் வராத கேரக்டர், அதுவும் ஹேண்ட்சம் ஹீரோ கேரக்டர் எல்லாம் இன்னைக்கு நமக்கு அறிமுகமாகுது!” என்று ரேணுவிடம் கிசுகிசுத்த ஹேமா
“ஒருவேளை இரண்டு பேருக்குமிடையில சம்திங் ஸ்பெஷல் இருக்குமோ? அதான் சாரு நம்மகிட்ட சொல்ல வெக்கப்படுறாளோ?” என்று மெதுவாக கேட்க
“எனக்கு தெரிஞ்சு நந்திங் ஸ்பெஷல்தான். ஏன்னா அந்த கிருஷ்ணா வந்த நேரத்திலிருந்து நம்ம சாருவை கடுவன்பூனை கணக்கா முறைக்குறான்.”
“நம்ம அம்மணியோ அவனை பார்க்கவே பிடிக்காத மாதிரி அவன் இருக்குற பக்கமே திரும்ப மாட்டேங்குறா” ஏதோ அலசி ஆராய்ந்தவள் போல தோழியைப் போலவே கிசுகிசுத்த ரேணு
“எதுக்கும் இங்க இருந்து வெளியே போகும் போது முழு ரிசல்ட்டும் சொல்லுறேன். ஓகே…” என்று சொல்ல
தன் பக்கத்தில் வந்தமர்ந்த மகளிடம் வேதவல்லியின் அம்மா, சாருமதியை சைகையால் குறிப்பாக காட்டி,”ஏய் வல்லி! அந்த குட்டி நம்ம வீட்டு வேலைக்காரி கல்யாணியோட பொண்ணு தான?” என்று  கேட்டு உறுதிபடுத்திக் கொண்டு
“யாரை யாரை எங்கெங்கே வைக்கணுமோ, அங்கங்க தான் வைக்கணும். அதவிட்டுட்டு நடு கூடத்துல கொண்டு வச்சிருக்காரு உன் மாப்பிள்ளை”
“போற போக்கப் பாத்தா, எம் பேரனுக்கு அந்த குட்டியை கல்யாணமே பண்ணிவச்சிடுவார் போலயே” என்று அலுத்துக் கொள்ள 
சட்டென்று தன் மகனையும், கணவரையும் திரும்பிப் பார்த்து,”ம்மா… மெதுவா பேசுங்கம்மா. இதுவரைக்கும் எம் புருஷனுக்கு அப்படியொரு எண்ணமே இல்லை. உங்க பேச்சு அவருக்கு கேட்டுச்சுன்னா அந்த எண்ணம் வந்தாலும் வந்துடும்” என்று பதட்டத்தோடு பேசிய வேதவல்லிக்கு,
தன் கணவனோடு சேர்ந்து தானும், தன் தாயால் வேலைக்காரி என்று சொல்லப்பட்ட கல்யாணியிடம்  சென்று தன் மகனுக்காக பெண் கேட்டு நிற்போம் என்று தெரிந்திருக்கவில்லை.
 
காலத்தின் கைகளில் நாம் ஒவ்வொருவரும் பொம்மலாட்ட பொம்மைகளே என்ற பேருண்மை தெரியாமலேயே, அதன் கைகளில் தன்னை ஒப்புவிக்க தயாராகிக் கொண்டிருந்தார் வேதவல்லி.
 
*********
நகரின் மிகப் பெரிய ஸ்டார் ஹோட்டலில் பதிவு செய்யப்பட்ட டேபிளில் நம் நண்பர்கள் கூட்டணி  வட்டமாக உட்கார்ந்திருக்க, அவர்கள் முன் ஒரு பிறந்த நாள் கேக் கொண்டு வைக்கப்பட்டது.
சாருமதியின் பிறந்த நாளை, கேக் வெட்டிக் கொண்டாடவே கூடியிருக்கிறது இந்த நண்பர்கள் குழு. 
“ம்ம்… சீக்கிரம் கட் பண்ணு… அதையும் டேஸ்ட் பண்ணிடலாம்” என்று ரேணு சொல்ல 
நண்பர்களின் வாழ்த்து பாடலுக்கிடையே கேக்கை கட் செய்தாள் சாருமதி. கட் செய்த கேக்கிலிருந்து சிறு துண்டுகளை எடுத்து அவள் நண்பர்களுக்கு ஊட்ட
நண்பர்களோ அவளுக்கு வாயில் ஊட்டுவதற்குப் பதில்  கன்னத்திற்கும், நெற்றிக்கும், மூக்கிற்கும் இவள் தடுக்கத் தடுக்க ஊட்டினார்கள். 
எவ்வளவு தடுக்கவும் முடியாமல் போகவே, “என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க” என்று ஜென் நிலையில் இவள் உட்கார்ந்து விட ஆசைதீர தோழியின் முகத்தில் கோலம் போட்டவர்கள்
“இப்போ போய் கழுவிட்டு வா” என்று எழுப்பி விட, இமைகளிலெல்லாம் கேக்கின் கிரீம் அப்பியிருக்கவே கண்கள் பாதி மூடி திறந்து என ஒருவழியாக பேலன்ஸ் செய்து வாஷ்பேஷின் அருகே வந்தவள், ஒரு செகண்ட் இடைவெளியில் எதிரே வந்த நபர் மீது மோதாமல் சுதாரித்துக்கொண்டாள். 
படபடவென்று முகத்தில் நீரையடித்து லேசாக கழுவி விட்டு,”சாரி சார்” என்றபடியே தன்னருகே நின்றவனை நிமிர்ந்து பார்க்க, கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியபடி இவளையே உறுத்து விழித்தபடி கிருஷ்ணா நின்று கொண்டிருந்தான்.  
அவனுக்கு கல்லூரியில் இது கடைசி வருடம் என்பதால் வகுப்புத் தோழர்கள் ஒரு கெட் டுகெதர் போல ஏற்பாடு செய்திருந்தார்கள்.  அதற்காகவே இங்கு வந்திருந்தான்.
கிருஷ்ணாவைக் கண்டதும் இதுவரை இருந்த சந்தோஷ மனநிலை வடிய, சற்றே பின்னடைந்தவளின் மீது, 
“எடுக்குறது பிச்சை, ஆனால் அட்டிட்டியூட் எல்லாம் பெரிய லேண்ட்லாட் போலத் தான் இருக்கு” என்று வார்த்தைகளை அமில மழையாய் வாரி இறைத்து விட்டு அவன் நகர்ந்து செல்ல
அங்கே வந்து கொண்டிருந்த ஹேமாவின் காதுகளிலும் அவனின் வார்த்தைகள் லேசாக விழவே,
“யாருடி அவன்? அந்த கிருஷ்ணா தானே? என்ன சொன்னான்? ஏதோ பிச்சைன்னு சொன்ன மாதிரி இருந்துதே?” என்று படபடவென்று கேட்ட ஹேமா
பதிலேதும் சொல்லாமல் நின்றவளைப் பார்த்து,” நீ இப்படியே நில்லு. நான் அவனையே சட்டையைப் பிடிச்சு 
என்னடா சொன்னன்னு கேட்டுட்டு வரேன்” என்று எரிச்சலில் இவளை லேசாக தள்ளிவிட்டு செல்ல முயன்றவளின் கோபம் தெரிந்தவளாய், அவள் கைகளை எட்டிப்பிடித்த சாரு,
“வேண்டாம் ஹேம்ஸ் விட்டுரு… அந்த நல்ல மனுசனுக்காகவாவது இவன்கிட்ட பிரச்சினை பண்ணாமல் விட்டுரு” என்று தடுக்க
“அவங்க அப்பா படிக்க வச்சா, இவன் என்ன வேணும்னாலும் பேசுவானாம்மா? என்ன பெரிய காசு? இவ்வளவு நாளும் உன்னை படிக்க வைக்க செலவழிச்சது எவ்வளவு ன்னு கணக்கு பாத்து சொல்லச்சொல்லு, ஒரே தடவைல தூக்கி எறியுறேன் நானு” 
 திருநாள் முடிந்து கல்லூரி க்கு வந்த பின்னர் தோழிகள் கிருஷ்ணாவுக்கும் தனக்கும் ஏதோ இருப்பது போல பேசி தன்னை கிண்டலடிக்கவும், அவனுக்கு தன்னைக் கண்டாலே ஆகாது என்ற உண்மையை தோழியரிடம் சொல்லியிருந்தாள். 
அதனாலேயே கிருஷ்ணா மீது அளவுகடந்த கோபம் ஹேமாவிற்கு 
“ஏத்தி விட்ட ஏணியை என்னைக்குமே எட்டி உதைக்கக்
கூடாது ஹேம்ஸ். ஐயா மட்டும் எனக்கு ஹெல்ப் பண்ணலைன்னா நான் இங்க தான் வந்திருப்பனா?  உங்களை எல்லாம் சந்திக்க தான் முடிஞ்சிருக்குமா?” என்று கேட்டவளிடம்
“இப்படியே ஏதாவது சொல்லிச் சொல்லி அவனை சேஃப் பண்ணிடு” என்றவள்
“குடுக்குற கை என்னைக்கும் குடுக்குற இடத்திலயும்,வாங்குற கை என்னைக்கும் வாங்குற இடத்திலும் இருக்காது.”
“காலம் மாறும் காட்சிகளும் மாறும் எங்குறது உண்மைன்னா, ஒருநாள் உன் கை குடுக்குற இடத்திலும் அவன் கை வாங்குற இடத்திலும் இருக்கும். அன்னைக்கு இருக்குடி அந்த பட்டிக்காட்டானுக்கு.”
ஹேமா சொன்னவற்றில் எதையுமே பெரிதாக எடுத்துக் கொள்ளாத சாருமதி கிருஷ்ணாவை அவள் ‘பட்டிக்காட்டான்’ என்று சொன்ன வார்த்தையில் பக்கென்று சிரித்துவிட
சாருமதி யின் சிரிப்பு சத்தத்தில் நண்பர் குழாமோடு வெளியே சென்று கொண்டிருந்த கிருஷ்ணா திருப்பி பார்த்து சாருமதியை முறைக்க, தன் தோழியை முறைக்கும் அவனை வெட்டவா? குத்தவா? என்று கோபத்தோடு பார்த்துக் கொண்டு நின்றாள்  ஹேமா.
 
 

Advertisement