Advertisement

சாருமதி.
அத்தியாயம் 07.
“ரைட்டா…”
“ரைட்டு…”
“ரைட்டா…”
“ரைட்டு…”
 
“ரைட்டா…” என்று ராகமாகக் கேட்ட ஹேமாவின் கேள்விக்கு
“ராங்கு… ராங்கு… ராங்கு…” என்று ஆர்ப்பரித்தபடியே குதித்தாள் சாருமதியின் தங்கை கௌரி…
ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக போடப்பட்டிருந்த ஐந்து நீளமான செவ்வக வடிவ கட்டத்துக்குள் கண்களை மூடிக்கொண்டு, லேசாக அண்ணார்ந்து பார்த்தபடியே முன்னும் பின்னுமாக தன் காலை வைத்திருந்த ஹேமா, கௌரியின் குரலில் அப்படியே காலை வைத்துக் கொண்டே,
“அதெல்லாம் கிடையாது… நான் ராங்கா எல்லாம் காலை வச்சிருக்க மாட்டேன். எல்லாம் சரியாத்தான் வச்சிருப்பேன்!” என்று சிணுங்கியவள், கௌரி சொன்னதை ஒத்துக்கொள்ள மனமின்றி, 
 ஒற்றை கைக் கொண்டு தன் தலையில் இருந்த சில்லாங்கல்லைப் பிடித்தபடியே லேசாக குனிந்து
 பார்க்க, அவளின் வலதுகால் அந்த பாண்டிகட்டத்தின் கோட்டை நச்சென்று மிதித்தபடி இருந்தது. 
அதைப் பார்த்தவளின் முகமோ சிணுங்கியபடியே அஷ்டகோணலாக மாற, அவளின் சிறுபிள்ளைத்தனமான செயலில் சாருமதியின் வீட்டு திண்ணையில் உட்கார்ந்திருந்த நண்பர்கள் குழு குபீரென்ற சிரிப்பலையை எழுப்பி ஹேமாவை எரிச்சல்படுத்தியது.
ஆமாம்… அந்த நண்பர்கள் குழு சாருமதியின் வீட்டு திண்ணையில் தான் உட்கார்ந்திருந்தது.
நண்பர்களின் பெருத்த எதிர்பார்புகளுக்கிடையே சாருமதியின் ஊர் அம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்தோடு தொடங்கியிருக்க, இந்த நான்கு வருடங்களில் முதன்முறையாக நண்பர்களை தன் வீட்டுக்கு  அழைத்து வந்திருந்தாள் சாருமதி.
மொத்தம் பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் கடைசி இரண்டு நாள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் என்பதால், 
ஒன்பதாம் திருநாளான நேற்று கல்லூரி முடிந்தபின், ஹேமா வீட்டு மகேந்திரா எக்ஸ் யு வி யிலேயே இந்த ஐவர் குழு கிளம்பியது. 
அந்த நண்பர்கள் குழு, தங்கள் வீட்டு காரில் சாருமதியின் வீட்டுக்கு போகப்போகிறார்கள் என்று தெரிந்ததும் அவர்களுடன் இணைந்து கொள்ள முயன்ற பிரவீணை,
“எங்க ஃப்ரெண்ட்ஸ் கூட்டணிக்குள்ள உனக்கெல்லாம் இடம் கிடையாது ப்ரோ!” என்று சொல்லி அவனை கழற்றிவிட்டு விட்டு வந்திருந்தாள் ஹேமா. 
நேற்று இரவு சிறிது நேரம் சாருமதியின் அம்மாவோடு கோயிலுக்குச் சென்று கலைநிகழ்ச்சிகளை எல்லாம் கண்டு களித்து விட்டு வீட்டுக்கு வந்து, பெண்கள் எல்லோரும் அந்த ஒற்றை அறையிலும், ஹாலிலுமாகத் தூங்க
 திருவிழாவிற்காக  வீட்டுக்கு வந்திருந்த ரகுராமோடு சேர்ந்து திவாகரும், அஸ்வினும் மொட்டை மாடியில் தூங்கினார்கள். 
காலையில் ஒரு எட்டு மணிக்கு போல தூங்கி முழித்த ஹேமா வீட்டு முற்றத்துக்கு வந்தாள். அங்கே முந்தைய நாள் கௌரி விளையாடிவிட்டு அழிக்காமல் விட்டிருந்த பாண்டி விளையாட்டு கட்டம் தெளிவாகத் தெரியவும்,
அந்த கட்டத்தைக் காட்டி சாருமதியிடம்,”அது என்ன?” என்று கேட்க,  
அவளோ பாண்டிவிளையாட்டைப் பற்றி சொல்லியதோடல்லாமல், கௌரியை அழைத்து விளையாடிக் காட்டவும் சொல்ல
கொஞ்சம் வெட்கத்தோடே விளையாடிக் காட்டினாள் கௌரி.
அவ்வளவு தான்…”எனக்கும் விளையாடிப் பார்க்கவேண்டும்” என்று கௌரியோடு இணைபோட்டுக் கொண்டு இதோ விளையாடிக் கொண்டுமிருக்கிறாள் ஹேமா.
அவள் விளையாடுவதைப் பார்த்ததும் திண்ணையில் வந்து குவிந்திருந்த நண்பர்களின் கேலிச்சிரிப்பு எரிச்சல் மூட்ட, 
சில்லாங்கல் என்று கௌரியால் தன் கையில் தரப்பட்டிருந்த ஒரு உடைந்த மண் பானையின் சிறு ஓட்டுத்துண்டை நண்பர்களை நோக்கி எறிந்தாள் ஹேமா.
“ஹேய்… ரௌடி! எங்க மண்டைய உடைச்சிடாதடி ஆத்தா!” என்ற சத்தத்தோடே அந்த நண்பர்கள் குழு சிதறி ஓட,
இவர்களின் நடை, உடை, பாவனை அனைத்தையும் சுவாரஸ்யத்தோடு பார்த்துக்கொண்டு நின்ற அக்கம்பக்கத்து சிறுமிகள், இளையவர்களின்  கலாட்டாக்களைக் கண்டு கிளுக்கிச் சிரித்தனர்.
அவர்களின் வெள்ளந்தி சிரிப்பில் வசீகரிக்கப்பட்ட ஹேமா,”இனிமேல் நீங்க தான் என்னோட ஃப்ரெண்ட்ஸ்” என்று அவர்களின் தோள்களில் கைபோட்டபடியே அவர்களோடு அளாவளாவ ஆரம்பித்தாள்.
அப்போது,”சாரு…” என்ற உற்சாக அழைப்போடு தேன்மொழி வர 
தன் திடீர் நண்பர்களுக்கு தற்சயம் விடை கொடுத்த ஹேமா தேன்மொழியைப் பார்த்து,”தேன்மொழி! ரைட்…” என்று தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்க 
“ஆமாம்… ” என்ற தேன்மொழி,
“நீங்க… ஹேமா தானே!” எனக் கேட்க
“ஹேமா தான். ஆனால் நீங்க இல்ல, நீ…” என்று திருத்தியவள்
“நோ ஃபார்மாலிட்டீஸ் ஹனி!” என்று சொல்ல
“சொல்லிட்டல்ல…  இனி பாரு நம்ம பெர்ஃபார்மன்ஸ்ஸை!” என்ற தேன்மொழிக்கும், தன் புதிய நண்பர்களும் ஒருவரையொருவர் ஃபோட்டோ மூலம் அறிமுகப் படுத்தியிருந்தாள் சாருமதி. 
 இப்போது ஒரு மாதத்திற்கு முன் எடுத்த தேன்மொழியின் திருமண ஃபோட்டோவையும் கூட நண்பர்களிடம் காண்பித்திருந்தாள். 
அதனாலேயே இருவரும் உடனடியாக ஒருவரையொருவர் கண்டு கொண்டது.
ஏதோ நெடுநாள் பழகியவர்கள் போல இருவரும் முற்றத்தில் நின்று பேசிக்கொண்டிருக்க, தேன்மொழியின் சத்தத்தைக் கேட்டு வீட்டுக்குள்ளிருந்து ஓடிவந்த சாருமதி,
“தேனு…” என்று தன் தோழியை கட்டிக்கொண்டு,”எப்போ டி வந்த? நல்லா இருக்கியா? மாமா வந்துருக்காங்களா?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு அவளை திணறடித்தாள். 
தன்னைக் கண்டதும் தன் தோழியிடம் ஏற்பட்ட சந்தோஷ பரபரப்பை ரசித்த தேன்மொழி,”ஒவ்வொரு கேள்வியா கேளுங்க டாக்டரம்மா! பதில் சொல்லுறேன்” என்று சிரித்தபடி
“நாங்க நேற்று இராத்திரி வந்தோம் சாரு! வந்த உடனே உன்னை பார்க்கணும் நினைச்சேன். உன் மாமாவும், கூட வந்திருந்ததால நடக்கல புள்ள,”
“அதான்  இன்னைக்கு அவங்களை வேலைக்கு அனுப்பி வச்ச கையோடு வீட்டுக்குள்ள கூட போகாமல், அம்மா கிட்ட சொல்லிட்டு ஓடி வந்துட்டேன்” என்றவளின் குரலில் மிதமிஞ்சிய உற்சாகத் துள்ளல் தெறித்தது.
கல்யாணத்திற்கு பிறகு இப்போது தான் முதன்முறையாக இருவரும் சந்திப்பதால், தன் தோழியின் புகுந்த வீடு, அங்கிருக்கும் நபர்கள், அவர்கள் தன் தோழியிடம் நடந்து கொள்ளும் விதம், பற்றிப் பேசிக் கொண்டிருந்த  சாருமதி திடீரென்று,
“ஹேய்… தேனு! வருஷா வருஷம் நீ அம்மனுக்கு முளைப்பாரி எடுப்பியே! இந்த வருஷமும் எடுப்பல்ல” என்று கேட்க
“ப்ச்ச்… எங்க சாரு! முளைப்பாரி எடுக்கணும்னா கொடியேத்துன நாளுல இருந்து விரதம் இருக்கணும். இப்போ அது நடக்குற காரியமா? சொல்லு” முகத்தில் லேசாக வெட்கப்புன்னகை பூக்க பதில் சொன்னவளிடம்
“ஏன்டி? ஏன்? எப்பவும் போல உனக்கு விரதமிருந்தா என்னவாம்?” நொடித்துக் கொண்ட பெண்ணிற்கு தோழியின் பேச்சின் அர்த்தம் மெதுவாகப் புரிய,
“ஷ்ஷ்ஷ்…” என்று சப்தமெழுப்பிபடியே கண்களை  மூடித்திறந்து, நாக்கை சற்றே வெளியே நீட்டி பற்களால் கடித்தபடி தோழியைப் பரிதாபமாகப் பார்த்தாள்.
அவள் செயலில்,”தேனு! உன் ஃப்ரெண்ட் டாக்டருக்கு படிக்குறான்னு தான் பேரு… ஆனால் சரியான தத்தி” என்று  வெடித்து சிரித்த ஹேமா
“அட் லாஸ்ட் … லேட்டானாலும், லேட்டஸ்டா உனக்கு கல்யாணம் ஆனது அம்மணிக்கு ஞாபகம் வந்துடிச்சி” என்று கண்ணடித்தபடிச் சொல்ல,  
ஹேமாவின் பேச்சில் தேன்மொழியின் கல்யாணம் மட்டுமல்ல, அந்த கல்யாணத்தில் கலந்துகொள்வற்காக தான் வந்த அன்று இரவு நடந்தவைக் கூட ஞாபகம் வந்தது சாருமதிக்கு…
அன்று இரவு, தன் ஊருக்கு செல்லும் கடைசி பஸ்ஸும் போய்விட்டது எனத் தெரியவும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நின்றவளுக்கு தன் ஊரைச் சேர்ந்த பொன்னையனைக் காணவும் சற்றே நெஞ்சில் நிம்மதி பரவியது. 
வந்தவரோ பரபரப்பாக,”சாரும்மா! நம்ம ஊருக்கு போற கடைசி பஸ் போயிடிச்சி.  நான், நம்ம ஐயா வீட்டு கார்ல தான் வந்திருக்கிறேன். வா! அதுல போயிடலாம்” என்று அழைக்க
ஐயா வீட்டு கார் எதற்காக இங்கே வந்திருக்கிறது என்று இவளுக்கு தெரியும் தானே. அதனால் 
“அது… கிருஷ்ணா…” என்று முடிக்காமல் இழுக்க 
“அதெல்லாம் தம்பி கிட்ட சொல்லிட்டு தான் வந்திருக்கிறேன், வாம்மா சீக்கிரம் போகலாம்” என்றார் பொன்னையன் அவசரமாக.
ஆமாம்… அவர் கிருஷ்ணாவிடம் சொல்லிவிட்டுத் தான் இங்கே வந்திருக்கிறார்.
கிருஷ்ணா வந்திறங்கிய பஸ்ஸிலிருந்து இவளும் இறங்கி  ஓடியதைக் கண்ட மனிதர், அவனிடம்
“நம்ம ஐயா படிக்க வைக்கிற பொண்ணும் இந்த பஸ்ல தான் வந்துருக்கு தம்பி! நம்ம ஊருக்கு வர்ற கடைசி பஸ் வேற போயிடிச்சி. அது தெரியாமல் அந்த புள்ள அந்த பக்கமாக போகுது. பாவம் பொட்டப்புள்ள இந்த இராத்திரி நேரத்துல தனியா என்ன செய்யும்? நம்ம கூட ஊருக்கு கூட்டிட்டு போய்டுவோமா தம்பி?” என்று வேகவேகமாக கேட்க
“ம்ம்…” என்ற ஒற்றை வார்த்தையில் அவனிடமிருந்து பதில் வந்தது.
அதைப் பிடித்து கொண்டு ஓடிவந்து சாருமதியை அழைத்தால், அவளுக்கோ தயக்கம். 
ஆனால் தயக்கத்தை மீறி நிசர்தனம் மண்டையில் உறைக்க சுற்றும்முற்றும் பார்த்தாள். ஆங்காங்கே ஒருசில கண்கள் தன்னையே ஆவலாக பார்ப்பதைக் கண்டவளுக்கு
‘தெரியாத பேய்களை விட தெரிந்த பிசாசே’ மேல் என்று தோன்றிவிட, மறு யோசனை ஏதுமின்றி பொன்னையனுடன் நடக்கத் தொடங்கி விட்டாள்.
ஆனால் அவள் உறுதி எல்லாம் பண்ணையார் வீட்டு அந்த வெள்ளை நிற இன்னோவாவையும், அங்கே ட்ரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்த கிருஷ்ணாவை காணும் வரையில் தான். 
அவனைக் கண்டதும், அதுவரை இருந்த மனநிலை மாறி வண்டியில் ஏற மனது அடம் செய்ய, பொன்னையன் பின் கதவை திறந்து விட்டு,”உள்ளே ஏறுமா…” என்றார் மெதுவாக.
வேறுவழியில்லாமல் வண்டியினுள் ஏறியவளின் காதுகளில்,”ம்ஹும்…பெரிய எலிசபெத் மகாராணின்னு நினைப்பு, கதவைத் திறந்து விட்டால்தான் காருக்குள்ள ஏறுவாங்க” என்ற கிருஷ்ணாவின் முணுமுணுப்பு தெளிவாக விழ, திக்கென்றது சாருமதிக்கு. 
‘நான்கு வருடங்கள் கழித்துமா இவனுக்கு என்மேல் இருக்கும் துவேஷம் தீரவில்லை?’ அடிபட்ட சாருவின் மனது இயலாமையால் சுருண்டு விட, எதுவுமே செய்யமுடியாத தன் நிலையை வெறுத்தவள் அப்படியே பின்சீட்டில் ஓர் ஓரம் ஒதுங்கி அமர்ந்து கொண்டாள்.
கார் கிளம்பி சிறிது நேரத்தில், ஒரு ஹோட்டலின் முன்னால் காரை நிறுத்தச் சொன்னவன், ட்ரைவரின் கையில் பணத்தைக் கொடுத்து,”பொன்னையா! ஒரு வாட்டர் பாட்டிலும், டிஃபனும் வாங்கிட்டு வா” என்று அனுப்பி வைக்க
திரும்பி வந்து தண்ணீர் பாட்டிலை அவன் கையில் கொடுத்து,” டிஃபன் எல்லாம் தீர்ந்திடுச்சாம் தம்பி” என்றவர்,”அவசரத்துக்கு கொஞ்சம் பழம் வாங்கிட்டு வரட்டுங்களா?”என்று அவன் அனுமதி வேண்டி நின்றார்.
தண்ணீர் பாட்டிலை திறந்து கடகடவென்று வாயில் சரித்துக்கொண்டவன் பாதி பாட்டிலைக் காலியாக்கி முடித்தபின்,
“ப்ச்ச்… அதெல்லாம் வேண்டாம். வா! வந்து வண்டியை எடு. இனி வீட்டுக்கே போயிடலாம்” என்று சொல்ல, பொன்னையனும் அவசர அவசரமாக ட்ரைவர் சீட்டில் ஏறி அமர்ந்து வண்டியைக் கிளப்பினார்.
இருவரின் உரையாடலையும் கேட்டுக் கொண்டிருந்த சாருமதி, அவன் பசியோடு உட்கார்ந்திருக்கிறான் என்று தெரிந்ததும் எதைப்பற்றியுமே யோசிக்காமல்,
“கிருஷ்ணா! இதுல கொஞ்சம் ஃப்ரூட்ஸ் இருக்கு. இதை சாப்டுக்கோ” என்று அந்த பழங்கள் இருந்த கவரை அவன் முன்னால் நீட்ட
“எனக்கே பிச்சை போடுறியா நீ? உங்கிட்ட வாங்கி சாப்பிடுற அளவுக்கு என் நிலமை இறங்கிப் போகலை. முதல்ல உன் தகுதி என்னவோ அதப்புரிஞ்சு நடந்துக்கோ” என்று  ஆங்காரமாகச் சொன்னவன்,
“பொன்னையா! பெண்பிள்ளை, ஐயோ பாவம் ன்னு நீ சொன்னதுனால தான், நான் இவளை என் வண்டியில கூட்டிட்டு போக தலையாட்டுனேன்”
“இப்படி அதிகப்பிரசங்கித்தனமான வேலை ஏதும் செய்தால், வேற ஏற்பாடு செய்து போகச் சொல்லு” என்று  கத்தியவன், 
ஏதோ வேண்டாத லக்கேஜை போல சாருமதியை அவளின் வீட்டு வாசலில் உதிர்த்து விட்டு போயிருந்தான் அன்று.
‘பசித்தவனுக்கு அந்த பசியைப் போக்க தான் பழங்கள் கொடுத்தது அதிகப்பிரசங்கித்தனமா? என்னங்கடா நியாயம் இது? ஓஹ்… ஒருவேளை இது தான் பணக்காரர்களின் நியாயமோ?’

Advertisement