Advertisement

நிச்சயத்திற்கு போகாததற்கே ஒருபாட்டம் ஆடித்தீர்த்தாள் தேன்மொழி. கல்யாணத்திற்கு போகவில்லையோ? அவ்வளவு தான் உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவாள் சாருமதியை. 
கல்யாணம் வார இறுதியில் அமைந்து விட்டதால் சாருமதிக்கும் வசதியாக போய்விட்டது. 
சாயங்காலம் வகுப்புகள் முடிந்து அவசர அவசரமாக சாருமதியின் விடுதி அறைக்கு தோழிகள் மூவரும் வந்தனர்.
வந்ததும் தன் முகம் கழுவி, தலைமுடியைத் திருத்தி சாருமதி புறப்பட, ஹேமாவோ தான் உடுத்தியிருந்த சுடிதாரை  களைந்து, ஹேமாவின் அறையில் தான் வைத்திருக்கும் ஜீன்ஸ், டிசர்டை எடுத்து உடுத்தத் தொடங்கினாள்.
அவளின் டிரஸ்ஸைப் பார்த்த உடனேயே,”நாம பெரிய வண்டியில போறோம்மா?” கொஞ்சம் பயத்துடனே கேட்டாள் சாருமதி
“ம்ம்…” 
“பெரிசுன்னா எனக்கு பயமா இருக்கும். சின்னதுலயே போலாமே!” 
தோழியின் குழந்தைத்தனமான பயத்தைக் கண்டதும் குறும்புதனத்தில் கண்கள் மின்ன அவள் அருகில் நெருங்கி வந்தவள்,”பயமா இருந்தா இந்த ஹேமாவை இறுக்கி கட்டிபிடிச்சிட்டு உட்கார்ந்துக்கோ டார்லிங்…” என்று விளையாட்டாக சொல்ல
“ஹைய்யோ! உன் பேச்சும், ட்ரெஸ்ஸும், ஹேர்ஸ்டைலும் அப்படியே பையன் மாதிரியே இருக்கு‌. எதுக்கும் நீ ஒரு பத்தடி தள்ளி நின்னே பேசு மா” என்று வேண்டுமென்றே அவளை விட்டு நகர்ந்து சென்ற சாருமதியைக் கண்டு அட்டகாசமாக சிரித்த ஹேமா 
“அப்டியா? நான் பையன் மாதிரியா இருக்கேன்?” என்று தலையை கோதிவிட்டபடியே கண்ணாடியைப் பார்க்க 
“ம்ம்… பையன் மாதிரி தான் இருக்குற. ஆனால் ‘ருத்ரா’ படத்துல பையன் வேஷம் போட்ட கௌதமி மாதிரி சும்மா கும்முன்னு இருக்கிற” என்று ரேணு கலாய்க்க
அதில் காண்டான ஹேமா, காலையிலேயே ஊருக்கு போவதற்காக சாருமதி ரெடி செய்து வைத்திருந்த பேக் பேக்கை தூக்கி ரேணுவை நோக்கி எறிந்தாள்.
அதை லாவகமாக கேட்ச் செய்தவள், தன் தோள்களில் மாட்டியபடியே,”சீக்கிரம் வாங்க நேரமாகுது” என்றபடியே ரூமைவிட்டு வெளியே நடக்க ஆரம்பித்தாள்.
அது பெண்கள் விடுதி என்பதால் ஆண்களுக்கு அனுமதி இல்லை. எனவே பெண்களின் தோழர்களோடும், இவ்வளவு நேரமும் இவர்களின் பேச்சில் அடிபட்ட பெரிய வண்டியான ‘ஹார்லி_ டேவிட்சனோடும்’ விடுதிக்கு வெளியே இவர்களுக்காக காத்து நின்றான் பிரவீண். 
ஹேமாவின் ஒற்றைச் சகோதரன்.
அவனும் இங்கே தான் எம்எஸ் கார்டியாலஜி இரண்டாம் வருடம் பயில்கிறான். அந்த வருங்கால இதய மருத்துவனின் கண்கள் தன் தங்கையோடு வரும் சாருமதியை கொஞ்சம் ஆவலாகப் பார்த்து வைத்தது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தனக்கு பிடித்த பைக்கில் ரைட் போகப் போகும் உற்சாகத்தில் தன் தமயனிடம் விரைந்து வந்து அவனிடமிருந்து பைக் சாவியையும் ஹெல்மெட்டையும் வாங்கிய ஹேமா
தன் தலையில் ஹெல்மெட்டை அணிந்து கொண்டே கிசுகிசுப்பான குரலில்,”டேய் பிரவீண்! கொஞ்சம் ஓவரா  வடியுது, தொடச்சிக்கோ” என்று கிண்டலாகச்  சொல்லியபடியே
“நீ வாழணும்னு நினைக்கிற ஹைஃபை வாழ்க்கைக்கு என்னோட கிராமத்து பைங்கிளி செட்டாகாது. அதனால உன் பார்வையை மாத்திக்கோ” என்று லேசான குரலில் மிரட்டவும் செய்தாள்.
தங்கையின் மிரட்டலை  புறம்தள்ளியபடியே சிரித்த பிரவீண்,”அதை நீ சொல்லக்கூடாது குட்டிம்மா. உன்னோட கிராமத்து பைங்கிளி சொல்லணும். ஓகே” என்று கிசுகிசுக்க
அவனை முறைத்தபடியே வண்டியில் ஏறி அமர்ந்தவள் அதை ஸ்டார்ட் செய்து தோழியின் அருகே கொண்டு வந்து நிறுத்தி,”ஏறிக்கோ சாரு!” என்று சொல்ல
ஏறும் முன் தன் தோழர்களைப் பார்த்து சிரித்து விடைபெற்ற சாருமதி, உயிர் தோழியின் உற்ற சகோதரன் என்ற எண்ணத்தில் பிரவீணைப் பார்த்தும் லேசாக சிரித்து வைத்தாள்.
அந்த ஒற்றை சிரிப்பில் உலகம் மறந்து போனான் பிரவீண்.
ஹேமாவின் கைகளில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை நோக்கி உயர்ஜாதி குதிரை போல காற்றாகப் பறந்து கொண்டிருந்தது அந்த ப்ளாக் கலர் ஹார்லி_ டேவிட்சன். 
“கொஞ்சம் மெதுவாத் தான் போயேன் ஹேம்ஸ்…”  பயத்தில் அவளை நெருங்கி உட்கார்ந்து கொண்டு சாருமதி கெஞ்ச
“ஹேய்! உனக்காக மினிமம் ஸ்பீட்ல தான் போறேன் அம்மாஞ்சி! என்றவள்,
“இந்த வருஷம் கண்டிப்பா நாங்க உங்க ஊரு திருநாளுக்கு உங்க வீட்டுக்கு வருவோம். இந்த வருஷமும் உங்களுக்கு தங்க வசதி காணாது, வாய்க்கால் காணாதுன்னு ஏதாவது சொல்லி எங்களை கழற்றி விடப்பார்த்த…” என்று வில்லங்கமாக சிரித்தவள்
“உனக்கு ஒரு மயக்க ஊசியை போட்டு வண்டியில  அள்ளிபோட்டுகிட்டு கூகுள் நாவிகேஷன்ல மணிமுத்தாறு பாப்பன்பட்டின்னு போட்டு ஸ்ரெய்ட்டா உங்க வீட்டு வாசல்ல போய் இறங்கிடுவோம் பாத்துக்கோ” என்றாள்.
ஹெல்மெட்டை போட்டுக்கொண்டு ஹேமா பேசியதால், அவள் பேசுவது தெளிவாக கேட்பதற்காக, தோழியின் வலது தோள்பட்டையில் தனது முகவாயைப் பொருத்தி கதை கேட்டுக்கொண்டு வந்தாள் சாருமதி.
ஹேமாவின் கைகளில் பறந்த பைக், அவள் ட்ரெஸ், ஹேர் ஸ்டைலோடு ஹெல்மெட்டும் சேர்ந்து ஆணைப்போன்ற  தோற்றத்தை அவளுக்கு கொடுக்க
அவள் தோள் சாய்ந்து கதை பேசிக் கொண்டு வந்த சாருமதியைப் பார்த்தவர்களுக்கு ஏதோ காதலனின் தோளில் சாய்ந்து கொண்டு கதைபேசி வரும் காதலியைப் போன்றே தோன்றியது.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் திருநெல்வேலிக்கு போகும் பேருந்தில் ஏறி அமர்ந்திருந்த கிருஷ்ணாவுக்கும் கூட அப்படித்தான் தோன்றியது.
ஆமாம்… கிருஷ்ணா தான்…
இந்த நான்கு வருடங்களாக கிருஷ்ணாவும் மதுரையில்  ஒரு புகழ்பெற்ற விவசாயக் கல்லூரியில் தான் பயின்று வருகிறான்.
 வார இறுதி நாட்களில் பெரும்பாலும் ஊருக்கு சென்று விடுவது அவன் பழக்கம். இங்கிருந்து பஸ்ஸில் திருநெல்வேலியில் போய் இறங்கினான் என்றால், அங்கே ட்ரைவரோடு காத்திருக்கும் அவர்கள் வீட்டு காரில் ஏறி வீட்டுக்கு சென்றுவிடுவான். 
இன்றும் அப்படித்தான் வீட்டுக்கு போவதற்காக திருநெல்வேலி ‘பைபாஸ் ரைடரில்’ ஏறி அமர்ந்திருக்க அந்த பஸ்ஸை நோக்கி பஸ் ஸ்டாண்டுக்குள்ளேயே ஹார்லி_ டேவிட்சன் ஒன்று வந்தது.
தன் மனம் கவர்ந்த பைக்கை ஆவலாக பார்வையிட ஆரம்பித்தான் கிருஷ்ணா. அதிலும் பைக்கில் வந்தது ஒரு இளம் ஜோடி போல இருக்க இன்னும் ஆர்வமாகப் பார்வையிட்டான் கிருஷ்ணா.
வந்த வண்டி இவனுக்கருகே நிற்க ஹேமாவின் தோள்களைப் பற்றியபடி இறங்கிய சாருமதி இப்போது அவன் பார்வையில் விழுந்தாள்.
ஹேமாவின் தோற்றம் ஏதோ ஆண்பிள்ளை என்றே அவனை எண்ணவைத்திருக்க, அவள் தோள்களைப் பற்றியபடியே இறங்கிய  சாருமதியைக் கண்டு ஏளனமாக உதடுகள் வளைய அதில் அலட்சியப் புன்னகை ஒன்று உடனடியாக வந்து உட்கார்ந்தது. 
“ம்ஹும்… ஓசிக்கு படிக்க வந்த இடத்தில் நல்ல பசையுள்ள ஆளாப் பார்த்து பிடிச்சாச்சு போலிருக்கே” என்று ஏளனமாக நினைத்தவன், 
 ஹெல்மெட்டை கழற்றியபடியே ஒற்றைக்கையால் தன் முடியைக் கோதிக்கொண்டு வண்டியிலிருந்து இறங்கிய ஹேமாவைப் பார்த்து வாயடைத்துப் போனான். 
அவனுக்கு இப்போது சாருமதியோ அவளை தான் தவறாக நினைத்ததுவோ எதுவுமே நியாபகத்தில் இல்லை. 
ஆண்பிள்ளையான தனக்கே மறுக்கப்பட்ட வண்டியை லாவகமாக ஓட்டி வந்த ஹேமாவையே ஆர்வமாக பார்த்தபடி இருந்தான்.
‘கோர்ஸ் கம்ப்ளீட் ஆனதும் தானும் இதே போல ஒரு வண்டியை எப்பாடுபட்டேனும் கண்டிப்பாக வாங்கி விடவேண்டும்’ என்ற எண்ணம் மீண்டும் அலையெறிந்தது அவன் மனதில்.
வண்டியிலிருந்து இறங்கிய ஹேமா, கிருஷ்ணா அமர்ந்திருந்த பஸ்ஸை சாருமதியிடம் காட்டி,”முன்னாடி போய் உக்காரு சாரு! இதோ வந்துடுறேன்” என்றபடியே, 
பேருந்து நிலையத்திற்குள் இருந்த கடையில் சென்று கொஞ்சம் பழங்களும், ஃப்ரெஸ் ஜூஸும், தின்பண்டங்களும் வாங்கி வந்தாள். 
“இந்த ஃப்ரூட்ஸையும், ஜுஸையும் டிராவலப்போ நீ சாப்பிட்டுக்கோ, ஸ்நேக்ஸ்ஸை வீட்டுல காயு, கௌரிகிட்ட கொண்டு குடு”  என்று எல்லாம் அடங்கிய பையை தன்னிடம் நீட்டியபடியே, தன்னருகே உட்கார்ந்த தோழியை முடிந்த மட்டும் முறைத்த சாருமதி
“நானும் நிறைய டைம் இப்படியெல்லாம் வாங்கித் தராதன்னு உங்கிட்ட படிச்சு படிச்சு சொல்லியாச்சு ஹேமா!
ஆனால் நீ கேக்குறது மாதிரி இல்லை. இனிமேல் நீ இப்படி செய்தா நான் தனியாத் தான் பஸ்ஏற வருவேன்” என்று கொஞ்சம் கண்டிப்பாக சொல்ல 
“வந்து பாரு… உங்காலை ஒடைச்சிடுறேன்” என்று சிரித்தபடியே சொன்ன ஹேமா, இன்னும் ஏதோ பேசுவதற்காக முயன்ற சாருமதியிடம்
“ட்ரைவர் வந்தாச்சு. நான் கிளம்புறேன், போய் சேர்ந்ததும் மறக்காமல் ஃபோன் பண்ணு. பை…” என்றபடியே இறங்கி பஸ்ஸுக்கு வெளியே நின்று கைகாட்ட
எதிர்பார்ப்பு ஏதுமின்றி தன்மீது அன்பைப் பொழியும் தோழியின் மீது அதற்கு மேலும் கோபத்தை பிடித்து வைக்க முடியாதவளாய்,”வண்டியை ஸ்பீடா ஓட்டாத ஹேம்ஸ்…” என்றவாறு கையசைத்தவள், வண்டி நகரவும் சீட்டில் சாய்ந்து உட்கார்ந்து கண்களை மூடினாள். 
அதே பேருந்தில் பின்வரிசையிலிருந்த கிருஷ்ணாவோ, ஹெல்மெட் அணிந்தபடியே மிகலாவகமாக தன்னுடைய ஹார்லி_ டேவிட்சனில் ஏறிஅமர்ந்து, சாலையில் போய்க்கொண்டிருந்த வாகனங்களையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு வேங்கையென பாய்ந்து சென்ற ஹேமா புள்ளியாய் மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்தான்.
ஒரு அரைமணிநேரம் போல எந்த தடையுமின்றி வேகமாக தன் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருந்த பைபாஸ் ரைடர் திடீரென்று மெதுவாக ஊர்ந்து செல்வது போலிருக்க,
கண்களைத் திறந்து பார்த்தாள் சாருமதி. அவர்களின் பஸ்ஸுக்கு முன்னால் நிறைய வாகனங்கள் வரிசைகட்டி நின்றிருந்தன.
ஏதோ அரசியல் கட்சியின் ஊர்வலமாம்… அவர்கள் மட்டுமே இந்த இந்தியத் திருநாட்டின் பிரஜைகள் என்பது போல ரோடு முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டும் ஏதேதோ கோஷங்களை முழங்கிக் கொண்டும் நகர்ந்து கொண்டிருந்தார்கள். 
ஓரிடத்தில் அதற்கு மேல் செல்லமுடியாமல் வண்டியை நிறுத்தி போட, வண்டியிலிருந்த எல்லாரும் தம்தம் இடங்களை விட்டு எழும்பி வந்து பார்த்தனர். 
அப்படி கிருஷ்ணாவும் முன்னே வர, அப்போதுதான் அவனைப் பார்த்த சாருமதி,”ஓஹ்… இவனும்  ஊருக்கு போறானா?’ என்று எண்ணிக்கொண்டாள்.
ஒரு ஒன்னரை மணிநேர தாமதத்திற்கு பிறகு அங்கிருந்து நகர்ந்த வாகனம்  சாலையில் ஓரிடத்தில் ஏற்பட்டிருந்த விபத்தின் காரணமாக பாதை மாற்றியும் விடப்பட்டது.
ஒருவழியாக அந்த பைபாஸ் ரைடர் திருநெல்வேலி பேருந்து நிலையத்திற்குள் நுழையும் போது சாருமதியின் ஊருக்குச் செல்லும் கடைசி பஸ்ஸுக்கான நேரம் கடந்திருந்தது.
பேருந்திலிருந்த அத்தனை பேரும் அலுத்துக் கொண்டே இறங்க சாருமதியோ பயந்து கொண்டே இறங்கினாள்.
இறங்கியவள் ஓடிச்சென்று தங்கள் ஊருக்குச் செல்லும் பேருந்துகள் நிற்கும் பிளாட்ஃபாரத்தைப் பார்க்க அந்த இடமே வெறிச்சோடியிருந்தது.
தளர்ந்து போனவள்,’தெய்வமே! நான் எப்படி ஊருக்குப் போய் சேருவனோ தெரியலையே?’ என்று உள்ளுக்குள் புலம்பியபடியே நிற்க
“சாரு ம்மா…” என்ற சப்தம் கேட்டு திரும்பினாள்.
அங்கே பண்ணையார் வீட்டில் நீண்ட காலங்களாக ட்ரைவராக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொன்னையன் நின்று கொண்டிருந்தார்.
 
 

Advertisement