Advertisement

சாருமதி.
அத்தியாயம் 06
“ஒரு நாளாவது பீட்ஸா, பர்கர், நான், பனீர் மசாலா இப்படி ஏதாவது ஒன்னு பிரேக் பாஃஸ்டா குடுக்கலாம்ல. எப்போ பாரு இந்த இட்லி, சட்னி, காய்ந்து போன சப்பாத்தி, குருமா ன்னு குடுத்து கொல்லுறாய்ங்க.”
“அதுலயும் இந்த  இட்லி இருக்குப்பாரு இட்லி, இதைத் தூக்கி அந்த கேண்டீன் மாஸ்டர் தலையில எறிஞ்சா கண்டிப்பா அவர் மண்டை உடையும் போல, அவ்வளவு ஹார்டா இருக்குது” 
தனக்கு எதிரில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் இரண்டாம் வருடம் மருத்துவம் படிக்கும் பெண்களின் பேச்சில் தனது தட்டில் இருந்த இட்லியைப் பிய்த்துப் பார்த்தாள் சாருமதி.
அந்த பெண்கள் குறை சொல்லும் அளவிற்கு அப்படியொன்றும் மோசமாக இருக்கவில்லை இட்லி. ‘இதைக் கூட இந்த பெண்கள் குறைசொல்லுகிறார்களே!’
 அலுத்துக் கொண்டது சாருமதியின் மனது.
“டீ …சாருமதி! இங்கே இருப்பவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ராஜா வீட்டு கன்றுக்குட்டிகள்.  உன்னைப் போல சாதாரண வீட்டுப் பெண்களல்ல. இந்த இட்லியை மட்டுமல்ல, தாஜ் ஹோட்டல் சாப்பாட்டையேக் கூட இவர்கள் குறைசொன்னாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை!” என்று மெதுவாக முணுமுணுத்தது அவள் மனது.
‘அது என்னவோ சரிதான். ஒருவருக்கு உயர்வாகத் தெரியும் பொருள், இன்னொருவருக்கு உயர்வாகத் தெரிவதில்லை தான்’ 
தன் மனதின் எண்ணத்தோடு ஒத்துப்போன சாருமதி தற்போது இருக்குமிடம் ‘மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில்’ ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் பெண்களுக்கான கேண்டீனில்.
ஆமாம்… மருத்துவ கவுன்சிலிங்கில் சாருமதிக்கு மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்திருந்தது. பண்ணையார் தன் சார்பாக கேசவனை அனுப்பி மருத்துவப்படிப்பில் சாருமதியை சேர்த்து விட்டிருந்நார்.
கல்லூரி கட்டணத்தோடு சேர்த்து ஹாஸ்டல் ஃபீஸ், மெஸ் ஃபீஸ் எல்லாமுமே பண்ணையார் கட்டுவது போல எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தான் கேசவன்.
 சாருமதியின் பள்ளி ஆசிரியர்களும் தங்களுக்குள்ளாக ஒரு தொகையை கலெக்ட் செய்து சாருமதி பெயரில் வங்கியில் டெபாசிட் செய்து அதன் பாஸ்புக்கை அவள் கையில் குடுத்திருந்தார்கள். 
அந்த பணம் சாருமதியின் சின்னச்சின்ன அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள உதவியது.
அப்படி இப்படி என்று சாருமதியும் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து இதோ நான்கு வருடங்கள் முடியப் போகிறது…
ஆமாம்… சாருமதி இப்போது மருத்துவ கல்லூரியின் நான்காம் வருட மாணவி. சாருமதி மட்டுமல்ல அவள் தம்பி ரகுராமும் இப்போது மூன்றாம் வருட மருத்துவப் படிப்பில் இருக்கிறான். ஆனால் அவன் படிப்பது கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரியில்.
அவனையும் படிப்பிப்பது நம் பண்ணையாரே…  அக்காவுக்கு பண்ணையார் சொன்ன அதே நிபந்தனை தான் தம்பிக்கும்
‘பண்ணையார் மட்டும் தக்க சமயத்தில் உதவி செய்யாவிட்டால் என்ன ஆகியிருக்கும் தங்கள் படிப்பு?’ நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது சாருமதிக்கு.
‘என்னவானாலும் சரி, தன் காலம் முழுவதும் அந்த நல்ல மனிதருக்கு விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும்’ 
எண்ணங்களில் மூழ்கியிருந்தவளை அவள் கையிலிருந்த கைபேசி அழைப்பு நடப்புக்கு கொண்டுவந்தது.
அலைபேசியின் ஒளிரும் திரையைப் பார்க்க, தோழி ஹேமா அழைத்துக் கொண்டிருந்தாள்.
அழைப்புக்கு கிரீன் சிக்னல் கொடுத்து அலைபேசியை காதில் வைத்தவள் “ஹலோ” சொல்வதற்கு முன்பே,
“எங்கடி இருக்குற?” என்று நான்கு வருட நட்பு தந்த உரிமையில் அதிகாரமாகவே கேட்டாள் ஹேமா.
“கேண்டீன்ல பிரேக்பாஃஸ்ட் சாப்பிட்டுட்டு இருக்கேன் ப்பா”
“ஹேய்! நேற்றைக்கே அந்த தீஞ்சுபோன இட்லியைக் காலைல சாப்பிடப் போகாத, உனக்கு சாப்பாடு கொண்டு வருவேன்னு, சொல்லிட்டு தானே போயிருந்தேன்” என்றவள்
“நான் சொல்லிட்டு போன பிறகும் அங்க போய் உட்கார்ந்துட்டு இருக்குற ம்ம்… முதல்ல நீ நம்ம பிளேஸ்க்கு வந்து சேரு. அப்புறம் வைக்கிறேன் உனக்கு கச்சேரியை” என்று மிரட்டலாக சொல்லி முடிக்க
சாருமதி பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த அறைத்தோழி கயல்விழி,
“சீக்கிரம் போ சாரு! இல்லைன்னா உன் ரௌடி ஃப்ரெண்ட் இங்க வந்து உன்னை குண்டுகட்டா தூக்கிட்டு போனாலும் ஆச்சர்யப் படுறதுக்கில்ல” என்று கிண்டல் தொனியில் சொல்லி சிரித்தாள்.
‘அம்மாடியோவ்! சொல்லமுடியாது… அந்த அராத்து செய்தாலும் செய்யும்’ 
மனதுக்குள் அலறியபடியே தன் பாத்திரத்தில் இருந்த இட்டிலியை வேகவேகமாக விழுங்கிய சாருமதி தட்டை கழுவி அதற்குரிய இடத்தில் கவிழ்த்து விட்டு வெளியே ஓடினாள். 
அவள் வெளியே வரவும் அவளின் மற்றொரு தோழி ரேணுகா ஸ்கூட்டியில் வந்து அவள் பக்கத்தில் நிற்கவும் சரியாக இருந்தது.
அவள் பின்னே வண்டியில்  ஏறி அமர்ந்தவள்,”என்னாச்சு? அம்மணி ரொம்ப கோபமா இருக்காங்களோ?” என்று கேட்க
“அப்படி தான் போல இருக்கு” என்று சொல்லி இவள் வயிற்றில் நன்றாக புளியைக் கரைத்தாள் ரேணுகா. ரேணுகாவிற்கு சொந்த ஊர் இதே மதுரை தான். அப்பா பெரும் தொழிலதிபர். அம்மா இல்லத்தரசி.
தூரத்தில் வரும்போதே தங்களின் ஓய்வு நேரத்தில் ஒன்றாகக் கூடும் அந்த மரத்துக்குக் கீழே கைகளை பின்னால் கட்டியபடியே அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த ஹேமா தெரிந்தாள். 
நல்ல நெடுநெடுவென்ற வளர்த்தியும் அதற்கேற்ற பூசினாற் போன்ற உடம்பும், கழுத்து வரை வெட்டி விடப்பட்டிருக்கும் அலையலையான கேசமுமாக காண்பவரை வசீகரிக்கும் தோற்றத்தில் இருக்கும் ஹேமாவும் இதே மதுரையைச் சேர்ந்த பெண்ணே.
அவளின் தாயும் தகப்பனும் நகரத்தின் பிரபல மருத்துவர்கள். 
வளர்ப்பு முறையோ இல்லை வாழ்க்கை முறையோ, ஏதோ ஒன்று அவளை கொஞ்சம் தடாலடிப் பெண்ணாகவே ஆக்கியிருந்தது. 
அந்த தடாலடி பெண்ணும் கூட இந்த கல்லூரியில் மடங்கும் ஒரே ஆள் உண்டென்றால் அது சாருமதி தான். எதிரெதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் என்பது நட்புக்கும் பொருந்தும் போல.
 கிராமத்திலிருந்து வந்த சாருமதிக்கு தொடக்கத்தில் இங்கு எல்லாம் பிரமிப்பாகவும், பயமாகவும் இருக்க, அவளுக்கு ஒரு பாதுகாப்பு அரணாக இருந்து  அவளை இயல்பாக்கி கல்லூரிச் சூழ்நிலையோடு பொருந்தச் செய்ததும் ஹேமா தான்
ரேணுகாவின் ஸ்கூட்டி தாங்கள் கூடும் மரத்துக்கு கீழ் வந்து நிற்க, அந்த மரத்துக்குப் பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹேமாவின் ‘ஹோண்டா ஆக்டிவா’ கூட தன்னைப் பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டு நின்றது போல இருந்தது சாருமதிக்கு.
லேசான புன்னகையோடு வண்டியின் பின்னாலிருந்து இறங்கிய சாருமதி, தன்னைக் கண்டதும் நடையை நிறுத்தி தன்னை முறைத்துக் கொண்டு நின்ற தோழியிடம் சென்று
“சாரி… ஹேம்ஸ்… உண்மையிலேயே நீ சொன்னது மறந்து போய் வழக்கம் போல கயல் கூட சேர்ந்து காண்டீனுக்கு சாப்பிட  போய்ட்டேன்” என்றவள் தோழி தன் முறைப்பைக் கைவிடாததைக் கண்டு 
“இப்போ என்ன? நீ கொண்டுவந்ததை சாப்பிடணும் அவ்வளவு தானே. குடு சாப்பிடுறேன்” என்று சிறு குழந்தையாய் தன் தோழி  முன் கையை நீட்டிக் கொண்டு நின்றாள்.
இப்படித் தான் நடந்திருக்கும் என்று தெரிந்து தான் இருந்தது ஹேமாவிற்கு. ஆனாலும் தன் கோபத்தை கைவிடாதவளாய்,
“இதை மட்டுமா மறந்து போன? மூனு வருஷமா இந்த ஹாஸ்டலை தலைமுழுகிட்டு எங்கூட, எங்கவீட்ல வந்து தங்குன்னு கரடியா கத்திகிட்டு இருக்குறேன். அதையும் தான் நீ காதுலயே போட்டுக்க மாட்டேங்குற”
“ஒரு வேளை நிஜக்கரடிதான் கத்துதோ என்னவோன்னு பயந்து போய் பேசாமா இருக்காளோ என்னவோ?’ அரதப்பழசான காமெடியை அவிழ்த்து விட்டதுமல்லாமல் அதற்கு தானே சிரித்துக்கொண்ட ரேணுவின் தலையில் ஓங்கி ஒரு தட்டுதட்டியபடியே
“அடங்குடி…” என்ற ஹேமா, தன்னிடம் ஏதோ சொல்ல முயன்ற சாருவைப் பார்த்து,
“இப்போ நீ என்ன சொல்லப்போற எங்குறதும் எனக்கு தெரியும். நானே சொல்லுறேன் கேட்டுட்டு சரியான்னு சொல்லு” என்று நக்கலாகச் சொன்னவள், லேசாக தொண்டையைச் செருமியபடி
“நான் உங்களைப் போல இல்லப்பா… என்னை படிக்க வைக்குறதே எங்க ஊரு பண்ணையாரு தான். அவரு எனக்காக பே பண்ணுற ஹாஸ்டல்ல இருந்து நான் வெளியே வந்துட்டேன்னா, அந்த ஹாஸ்டல் பிடிக்காமல் நான் வெளியே போனதா ஆகிடும்”
“அது எங்க பண்ணையாருக்கு நான் செய்யுற மரியாதையில்லை. அதனால அந்த தப்பை மட்டும் நான் என்னைக்குமே செய்யமாட்டேன். சாரி ஹேம்ஸ்… என்னை தப்பா நினைச்சுக்காதே” என்று சாருமதி சொல்லுவது போலவே அச்சுஅசலாகச் சொல்லிமுடித்தவள்
“இந்த டயலாக்கைத் தானே சொல்ல வர்ற… ” என்று சாருமதியிடம் கூறியவள்,
“இதைக் கேட்டு கேட்டு எங்காது ரெண்டும் புளிச்சுப் போச்சு. தயவு செய்து திரும்பவும் சொல்லிடாத” என்றவளின் கைகள் தன் கழுத்துவரைக்கும் கிடந்த அடர்ந்த கேசத்தை நேர்செய்கிறேன் பேர்வழி என்று அடிக்கடி கலைத்து விட்டுக் கொண்டிருந்தது.
ஹேமாவின் அதிரடியில் இமைக்காது அவளையேப் 
பார்த்துக் கொண்டிருந்த சாருமதியை ஹேமாவிடம் காட்டிய ரேணுகா,
“பாவம், சாரு… நீ போட்ட ஆட்டத்துல மந்திரிச்சி விட்ட மாதிரியே நிக்குறா. இதுக்கு மேல தாங்க மாட்டா, விட்டுறு” என்றவள்
 
“டைமாகுது.‌‌..சீக்கிரம் சாப்பாட்டை எடுத்துக் குடு ஹேம்ஸ், சாப்பிட்டுட்டு கிளாஸுக்கு போவோம்” என்று சொல்ல 
வண்டியிலிருந்த லஞ்ச் பேக்கை எடுத்த ஹேமா,”ஒன்னுவிடாமல் சாப்பிட்டுருக்கணும்” ‌என்ற மிரட்டலோடு சாருமதியின் கைகளில் கொடுத்தவள்,”நீயும் டேஸ்ட் செய்து பாரு ரேணு” என்றாள்.
அந்த மரத்தடியில் கிடந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்த சாருமதி உணவு டப்பாக்களை திறக்க, ஒன்றில் சில்லி பரோட்டாவும், மற்றொன்றில் சிக்கன் ஃப்ரையும் இருந்தது.
“ம்ம்… யம்மி…” என்றபடியே ரேணு சிக்கன் ஃப்ரையை எடுத்து டேஸ்ட் செய்ய, ஏற்கனவே சாப்பிட்டிருந்த சாருமதியோ திருதிருவென முழித்தபடியே சில்லிபரோட்டாவை எடுத்து வாயில் வைத்தாள்.
ஒரு இரண்டு வாய் தான் வைத்திருப்பாள்… அப்போது அங்கே தங்களின் வண்டியில் வந்திறங்கிய இரண்டு வாலிபர்கள் சாருமதியின் கையிலிருந்த உணவு டப்பாக்களை சட்டென்று பிடுங்கிக் கொண்டு வேகவேகமாக சாப்பிடத் தொடங்கினார்கள்.
“டேய்… அஸ்வின்! நான் கை வச்சி சாப்பிடத் தொடங்கிட்டேன் டா….” என்று சாருமதி பதறினாலும்,’அப்பாடி! நல்ல வேளை, சரியான நேரத்துக்கு வந்தாங்களோ! நான் தப்பிச்சேன்’ என்ற உணர்வே அவளிடம் மிஞ்சி நின்றது.
“கை வச்சிதான சாப்பிட்ட? வாய் வச்சி இல்லல்ல?” என்று பதில் சொன்னபடியே அஸ்வினோடு நின்ற திவாகர் சாப்பிட, அஸ்வினோ அதுவும் கூட சொல்ல முயன்றானில்லை.
 அஸ்வின், திவாகரோடு சேர்ந்து இந்த நண்பர்கள் குழுவில் ஐந்து பேர்கள். எங்கு என்றாலும் இவர்கள் ஐந்து பேரும் சேர்ந்தே தான் போவார்கள், சேர்ந்தே தான் வருவார்கள். 
இந்த நான்கு வருடங்களில் ஆண்பெண் பேதமின்றி இவர்களிடையே ஒரு நல்ல நட்பு வளர்ந்து கிளை பரப்பி நிற்கிறது.
ஒருவழியாக சண்டை சமாதானங்களோடு சாப்பிட்டு முடித்து கைகழுவி வகுப்பிற்கு செல்ல தயாரான நண்பர்கள் குழு அவரவர் வண்டியில் ஏறியமர, சாருமதி ஹேமாவின் பின்னால் அமர்ந்து கொண்டாள்.
“இன்னைக்கு சாயங்காலம் சாரு ஊருக்கு போகணும்னு சொன்னாளே! பஸ் ஏத்தி விட நீ போவியா? இல்லை நான் போகணுமா? ஹேம்ஸ்” என்று திவாகர் கேட்க
“நானே போறேன் திவா” என்றாள் ஹேமா
“ஓகே… எங்க வாழ்த்தையும் தேன்மொழிக்கு சொல்லிடு சாரு!  சேஃப் ஜார்னி” என்று சொல்லியபடியே  வகுப்பறையை நோக்கி நகர்ந்தது அந்த நண்பர்கள் குழு.
நாளை தேன்மொழிக்கு திருமணம்.  பி எஸ்சி முடித்து இந்த வருடம் பிஎட் செய்து கொண்டிருக்கிறாள் தேன்மொழி.
நல்ல வரன் வரவே,  திருமணத்திற்கு பிறகு மீதியை படித்துக்கொள் என்று சொல்லிவிட்டார்கள் அவளது வீட்டில். 
ஒரு இருபது நாட்களுக்கு முன் நடந்த அவளது திருமண நிச்சயத்தில் சாருமதியால் கலந்து கொள்ள முடியவில்லை. 

Advertisement