Advertisement

“அதான் எப்படி?”
“அக்கா இப்போ எஜுகேஷன் லோன் எல்லாம் கிடைக்குது. அது உனக்கு தெரியுமா இல்லையா?”
“தெரியும் ரகு! ஆனால் அது கூட பேரண்ட்ஸ்ஸோட வருமானத்தோட அடிப்படையில் தானே குடுக்காங்களாம்.
என் கிளாஸ்மெட் ஒருத்தி சொன்னா” 
“நமக்கு என்ன வருமானம் வருதுன்னு உனக்கே தெரியும் தானே. அப்புறம் எப்படி ரகு நமக்கு லோன் கிடைக்கும்” விஷயங்கள் எதுவும் சரிவரத் தெரியாத சூழ்நிலையில் தானும் குழம்பி தம்பியையும் குழப்பியது பெண்.
“கவலைப்படாத க்கா. நாம நேரடியா பேங்க்ல போயே விசாரிச்சு விஷயத்தை தெரிஞ்சுக்கலாம். அதுக்கு முன்னாடியே நீ ஏன் டென்ஷன் ஆகுற?” என்று சமாதனப்படுத்தியவன்
“அம்மா இன்னைக்கு இட்லி அவிச்சு வச்சிட்டு போயிருக்காங்க. வா சாப்பிடலாம்” என்று அவளை வீட்டுக்குள் அழைத்து சென்றான்.
மேலும் ஒரு பத்து நாட்கள் கழிந்திருந்தது.
 ராஜாத்தி அம்மாவின் மகன் முதல் மாதச் சம்பளத்தை எப்படி சாருமதியின் வங்கி கணக்கு மூலம் கொடுத்திருந்தாரோ அதே போல அடுத்த மாத சம்பளத்தையும் வங்கியிலேயே  செலுத்தி இருந்தார்.
அந்த பணத்தை வைத்து கவுன்சிலிங்கிற்கு அப்ளை செய்திருந்தார்கள்.
வங்கியில் நேரடியாக சென்று லோனைப்பற்றி விசாரிக்கும் போது “கல்வி கடன் பெற, பெற்றவர்கள் இல்லை பாதுகாவலரின்  வருமானம் குறிப்பிட்ட அளவுக்கு இருக்க வேண்டுமென்று சொன்னார்கள்.” 
என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி கொண்டிருந்த நேரத்தில் ஒரு நாள் மாலை நான்கு மணியளவில் பண்ணையார் வீட்டிலிருந்து கேசவன், “பண்ணையார் சாருமதியை அழைத்துக் கொண்டு வரச்சொன்னதாக” வந்து நின்றான்.
தனது தாயார் வேலையில் இருந்து திரும்பி வராத நிலையில் கேசவன் வந்து அழைக்கவும் பயந்து போன சாருமதி,”ஏன் ண்ணா? அம்மாவுக்கு ஏதும்…” என்று பயத்தோடு கேட்க்கவும்
“சேச்ச… அப்படி எல்லாம் ஒன்னும் இல்லம்மா? எதுக்குன்னு தெரியலை, ஐயா உன்னை கூட்டிட்டு வரச்சொன்னாங்க” என்று சொன்னான்.
“நீங்க போங்க ண்ணா. நான் தம்பியோட வர்றேன்” என்று சொல்லி கேசவனை அனுப்பி வைத்து விட்டு தம்பியோடு விருப்பமே இல்லாவிட்டாலும் பண்ணையாரின் வார்த்தைக்காக வந்தாள்.  
வந்தவர்கள் சட்டென்று வீட்டினுள் நுழையாமல் தயங்கியபடியே வெளியே நின்றிருக்க, இவர்களை கண்டவுடன் கேசவன் ஓடிவந்து,”உள்ள வாங்க, ஐயா ஹால்ல தான் இருக்காங்க” என்று அழைத்து சென்றான்.
உள்ளே சென்றவர்கள், ஹாலின் இடது பக்கத்தில் கிடந்த விலையுயர்ந்த சோஃபாவில் உட்கார்ந்திருந்த பண்ணையாரைப் பார்த்து இருகரம் கூப்பி வணக்கம் வைக்க,
சிறு பிள்ளைகள் தானே இவர்களுக்கு எதற்கு பதில் வணக்கம் என்றில்லாமல் முகம் மலர ஒருசேர இருவரையும் பார்த்து பதில் வணக்கம் வைத்தவர்,”உட்காருங்க” என்று தனக்கு எதிரே கிடந்த இருக்கையையும் காட்டினார்.
 இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடியே
சோஃபாவில் தயக்கத்தோடு பட்டும் படாமலும் உட்காரவும்,”எதுவும் சாப்பிடுறீங்களா?” என்று கேட்டு இருவருக்கும் மயக்கத்தையே வர வைத்தார் பண்ணையார்.
“இல்லை…இல்லைய்யா… நாங்க சாப்பிட்டுட்டு தான் வந்தோம்.” என்று அவசரமாக மறுத்த ரகு,
“நீங்க அக்காவை வரச்சொன்னதா கேசவன் அண்ணா வந்து சொன்னாங்க, அதான் கூட்டிட்டு வந்தேன். என்ன விஷயமா வரச் சொன்னீங்க ஐயா!”  என்று தெளிவாக அதே நேரம் பௌவ்யமாக தன் கண்ணைப் பார்த்து கேட்கும் ரகுராமை அவ்வளவு பிடித்தது பண்ணையாருக்கு. 
“இதோ உங்க அம்மாவையும் கூட்டிட்டு வரச் சொல்லியிருக்குறேன் அவங்களும் வந்துடட்டும்” என்றவர் சாருமதியைப் பார்த்து,”இந்த வருட ட்டுவெல்த் எக்ஸாம்ல நீதானே ஸ்கூல் ஃபர்ஸ்ட்டாம். கேள்விப்பட்டேன் ம்மா. வாழ்த்துகள்” என்று சொல்ல
எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த எதிர்பாராத வாழ்த்தில் மகிழ்ந்து போன சாருமதி பண்ணையாருக்கு  “நன்றி” சொன்னாள்.
 கல்யாணி பின்கட்டிலிருந்து வர, சரியாக வேதவல்லியும், கிருஷ்ணாவும்  மாடியிலிருந்து படிவழியாக கீழே இறங்கி கொண்டிருந்தார்கள்.
சாருமதியைக் தன்வீட்டு ஹாலிலேயே காணவும் முகம் கறுக்க தாயைப் பார்த்த கிருஷ்ணா ஹாலின் வலது பக்கத்தில் கிடந்த சோஃபாவில் போய் தொப்பென்று அமர்ந்தான்.
மகனின் முகவாட்டத்தை பொறுக்காத தாயும் கணவனை தவிர்த்து மகனின் அருகில் போய் அமர்ந்து கொண்டு நடப்பவற்றை கவனிக்க தயாரானார்.
தன் தொண்டையை லேசாக செருமிக்கொண்ட பண்ணையார்,”நான் சுத்தி வளைக்காமல் நேரடியாகவே விஷயத்துக்கு வரேன்…” என்று தன்முன்னால் அமர மறுத்து நின்று கொண்டிருந்த கல்யாணியைப் பார்த்து சொன்னவர்,
“இப்போ இரண்டு மூனு நாளைக்கு முன்னால நான் பேங்க் க்கு போயிருந்தேன். அப்போ பேங்க் மேனேஜர் அங்க கவுண்டர்ல நின்னுட்டு இருந்த உங்க மகளை எங்கிட்ட காட்டி, இந்த பொண்ணுக்கு உங்க ஊரு தான். மெடிசின் படிக்க மார்க் இருக்கு. ஆனால் லோனுக்கு எலிஜியிள் இல்லை. உங்களை மாதிரி யாராவது கேரண்டி கையெழுத்து போட்டா கிடைக்கும்னு சொன்னார்”
பேச்சை சற்றே நிறுத்தியவர், மனைவியை ஒருமுறை பார்த்துவிட்டு,”கேரண்டி கையெழுத்து போட்டு லோன் வாங்கி குடுக்குறதை விட உங்க மகளை நானே படிக்க வச்சிடலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். இதுல உங்களுக்கு ஆட்சேபணை ஒன்னும் இல்லையே ம்மா?” என்று தன் தாடையைத் தடவியபடியே கல்யாணியைப் பார்த்து கேட்க
கடலில் வழிதெரியாது தவித்துக் கொண்டிருந்த ஒற்றைப் படகோட்டியின் உள்ளத்தில் தூரத்தில் தெரியும் கலங்கரை விளக்கத்தின் ஒளி நம்பிக்கையை விதைப்பது போல, 
பரீட்சை முடிவுகள் வந்த நாளிலிருந்து ‘மகளை எப்படி அடுத்து படிக்க வைக்கப்போகிறேன்?’ என்று தவிப்பிலிருந்த தாயின் மனதில் நம்பிக்கை ஒளி படர
“வாயெடுத்து கேட்டால் கூட உதவி செய்யாத ஜனங்க இருக்குற இந்த உலகத்துல, நாங்க கேக்காமலேயே எங்க தேவை அறிஞ்சு உதவி செய்றேன்னு சொல்லுறீங்களே! நீங்க தெய்வம் ஐயா. அந்த தெய்வத்தோட முடிவுல  எனக்கு என்ன ஆட்சேபணை வந்துடப்போகுது?” 
அந்த ஏழைத்தாயின் குரல் உணர்ச்சி வசப்பட்டிருக்க, கைகளோ தன்னை மீறி அந்த பெரிய மனிதரை சேவித்தது.
கல்யாணின் பதிலில் முகத்தில் புன்னகை தவழ,”உனக்கு சந்தோஷமா ம்மா?” என்று சாருமதியைப் பார்த்து பண்ணையார் கேட்க
சட்டென்று ஹாலின் வலதுப்புறத்தில் உட்கார்ந்திருந்த கிருஷ்ணாவின் பக்கம் தன்னையறியாமலேயே பார்வையை வீசினாள் சாருமதி.
அங்கே கிருஷ்ணாவின் முகம் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தது. சோஃபாவின் திண்டிலிருந்த அவன் கைகளோ அதை பிய்த்து விடுவது போல கசக்கிக்கொண்டிருந்தது.
ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் முடிவெடுத்தவள் பண்ணையாரின் கேள்விக்கு,”இல்லை…” என்பது போல தலையசைத்தபடியே மெதுவான குரலில்,
“பெரியவங்க என்னை மன்னிக்கனும்… இந்த உலகத்துல இனாமா கிடைக்கிறது எதுவுமே இல்லை அப்படிங்குறது என்னோட கருத்து. லோன் கிடைச்சா நான் வேலை பார்த்து திரும்ப அடைச்சிடுவேன். ஆனால்…” என்றவள் லேசாக தயங்கியபடியே மேலே பேசாமல் நிறுத்தினாள்.
தன் மகளின் பதிலில் லேசாக அதிர்ந்து போன கல்யாணி,
“சாரு… யார் கிட்ட பேசுறன்னு…” என்று மகளின் பேச்சில் அவசரமாக குறுக்கிட,
தன் வலது கையை லேசாக உயர்த்தி அவரை பேசவிடாமல் தடுத்த பண்ணையார்,”நீ மேலே சொல்லு என்பது போல சாருமதியை பார்த்து தலையசைத்தார்.
 
“ஆனால் நீங்க என்னை படிக்க வைக்க செலவழிக்கிற பணத்தை நான் எப்படி திருப்பி கொடுப்பேன்? நான் படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் வேலை பார்த்து நீங்க என் படிப்புக்கு செலவழித்த பணத்தை திருப்பி குடுத்தா வாங்கிக்குவீங்களா?” என்று தைரியமாக கேட்க
அதே ஹாலில் வலப்புற இருக்கையில் இருந்த இருவருக்கு சாருமதியின் பேச்சு திமிர்த்தனமாகத் தெரிய, பண்ணையாருக்கோ அந்த பதிலில் சாருமதியின் சுயமரியாதை அடங்கியிருந்ததாகத் தோன்றியது.
‘அதுவுமில்லாமல் தான் உனக்கு சந்தோஷமா?’ என்று கேட்டதும், அவள் தன் மகனைப் பார்த்ததும், அவனின் முக மாற்றங்களையும் கவனித்த பண்ணையாரின் மனம் ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று எளிதாக கணக்கு போட
‘தன் மகன் எப்போதோ இந்த பெண்ணின் சுயமரியாதையை நிச்சயமாக உரசிப் பார்த்திருக்கிறான்’
என்பது அவருக்கு நிச்சயமாகியது.
அவளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தவர்,”சரிம்மா… நான் உன் படிப்புக்கு செலவழிக்குற பணத்தை நீ எனக்கு திருப்பித் தரலாம்… ஆனால் அது எனக்கு பணமா வேண்டாம். உன் உழைப்பா திருப்பித் தா” 
 தன் பேச்சின் சாராம்சம் புரியாது முழித்த சாருமதியைப் பார்த்து லேசாக சிரித்தபடியே,”நான் பேசுறது உனக்கு தலையும் புரியலை வாலும் புரியலைல்ல…” என்றவர், 
தன் கனவைச் சொல்லி அதற்கு மகனின் பதிலையும் சொன்னவர், மகனை திரும்பி பார்த்தபடியே”அதுக்காக நான் என் கனவை கைவிடப்போறதில்லை. கண்டிப்பா கூடிய சீக்கிரம் ஹாஸ்பிடல் கட்டி வேற டாக்டர்ஸ் மூலமா நான் நினைச்சதை செய்யத் தான் போறேன்” என்றவரின் குரலில் நம்பிக்கை நர்த்தனமிட, சாருமதியைப் பார்த்து,
“நீ படிச்சி முடிச்சி டாக்டரா வெளியே வரும் போது கண்டிப்பா ஹாஸ்பிடல் அதோட சேவையை தொடங்கியிருக்கும். அந்த ஹாஸ்பிடல்ல நீ ஒரு மூனு வருஷம் வேலைப் பார்த்தா போதும். அப்புறம் நீ யாருக்கும் கடன்பட்டவளும் இல்லை, கட்டுப்பட்டவளும் இல்லை. இந்த டீல் உனக்கு ஓகேயா ம்மா?” என்று கேட்க
  ‘தனக்கு பிடித்த படிப்போடு தான் பிறந்த ஊர்மக்களுக்கே மருத்துவம் பார்க்க கிடைக்கும் வாய்ப்பு, அதோடு தான் கடன்பட்டவள் என்ற என்ற எண்ணத்தில் இருந்து விடுதலை, இந்த மூன்றும் பண்ணையாரின் யோசனையை ஏற்றுக்கொண்டால் கிடைக்கும்’ என்பதால் சாருமதிக்கும் அந்த டீல் பிடித்து தான் இருந்தது.
‘என்ன பதில் சொல்லப் போகிறாள்?’ என்று தன்னையே ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்த தாயையும் தம்பியையும் பார்த்தவள்,”சரி ஐயா! நீங்க சொல்லுறதுக்கு நான் ஒத்துக்கிறேன்” என்று சொல்லவும்
தாயினருகே இருந்த கிருஷ்ணா சடாரென்று எழுந்து விறுவிறுவென அந்த இடத்திலிருந்து வெளி நடப்பு செய்தான்.
 

Advertisement