Advertisement

சாருமதி.
அத்தியாயம் 05
“முடியாது… முடியாது…முடியாது… என்னால டாக்டருக்கெல்லாம் படிக்க முடியாது” தாயிடம் உறுதியாக மறுத்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணா.
தாயும் மகனும் மாடியிலிருக்கும் குடும்பத்தினர் மட்டுமே உபயோகப்படுத்தக் கூடிய அந்த ஹாலில் உட்கார்ந்திருந்தார்கள். 
“அப்பா ஆசைப்படுறாங்கல்ல குட்டா! அதான் நல்லமார்க் வேற எடுத்துருக்கியே டாக்டருக்கு படிச்சாத் தான் என்னவாம்?” 
“உன் வீட்டுக்காரருக்காகவெல்லாம் நான் படிக்க முடியாது ம்மா. எனக்கு புடிச்சாத் தான் நான் படிக்க முடியும். வேணும்னா ஒன்னு செய்யலாம்” சொல்லிவிட்டு கிருஷ்ணா சற்றே நிதானிக்க
“என்னடா?” என்றார் வேதவல்லி ஆவலாக
“உங்களை மாதிரி இல்லாமல் கல்யாணத்துக்கு அப்புறம் நான் நாலஞ்சு பெத்துப்போடுறேன். அதுல ஒன்னையோ இரண்டையோ, தாராளமா பண்ணையாரை டாக்டராக்கிக்க சொல்லு. இப்போ என்னை ஆளவிடுங்க.” 
சொன்னவன் கைகளிரண்டையும் சப்தம் வரும்படி அடித்து கூப்பி  ஒரு வணக்கம் வைத்தான் தாய்க்கு.
நேற்று பன்னிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளியாகியிருந்தது. வழக்கம் போல பள்ளியின் முதல் மதிப்பெண்ணை சாருமதி தன்னிடமே தக்கவைத்துக் கொண்டாள்.
கிருஷ்ணா ஏழு மதிப்பெண்கள் வித்தியாசத்தில் இரண்டாவதாக வந்திருந்தான். 
அதுவே அவனுக்கு எரிச்சலைக் கொடுத்திருக்க,”டாக்டருக்குப் படி…டாக்டருக்குப் படி…” என்று நேற்றிலிருந்து தாயும் தகப்பனும் திரும்பத் திரும்ப சொன்னது ஒருவித எரிச்சலையே உண்டாக்கியது கிருஷ்ணாவுக்கு..
சிறிது நேரத்தில்”என்ன சொல்லுறான் உன் பிள்ளை?” என்று கேட்டவாறே மனைவியின் அருகில் வந்தமர்ந்தார் பண்ணையார்.
கணவர் வந்தமர்ந்ததும் எழும்பி செல்ல முயன்ற மகனின் கையைப்பிடித்து இழுத்து தன் பக்கத்தில் அமர்த்திய வேதவல்லி,”உன் முடிவை நீயே அப்பா கிட்ட சொல்லு குட்டா!” என்று சொல்ல
“இல்லப்பா, எனக்கு டாக்டருக்கு படிக்க இஷ்டம் இல்லை” எந்தவித தயக்கமுமின்றி சொல்லியவனின் உடல்மொழி இது தான் என் இறுதி முடிவு என்பதுபோல இருந்தது. 
மகனின் பதிலில் பெருமூச்சொன்றை வெளியிட்டபடியே சோஃபாவில் சாய்ந்தமர்ந்தவர்,
“ம்ஹும்…இந்த ஊர்ல ஒரு பெரிய ஹாஸ்பிடல் கட்டி உன் மூலமா மக்களுக்கு இலவச சிகிச்சை பண்ணனும் எங்கிறது என்னோட கனவு. ஆனால் என் கனவு வெறும் கனவாகவே போய்டும் போல இருக்கு” என்று ஆதங்கப்பட
“என்னது? இந்த பட்டிக்காட்டு மக்களுக்கு இலவசமா மருத்துவம் பார்க்குறதுக்காக என்னை டாக்டராக்கணும்னு நினைச்சீங்களா? ஹஹ… நல்லா இருக்கே உங்க கதை!” என்று  சிரித்தவன்
“நானும் ஏதோ பிரஸ்டீஜ் இஸ்யூ க்காக என்னை  டாக்டராக்க பாக்குறீங்கன்னு நினைச்சா, போயும், போயும்
இந்த காட்டுஜனக்களுக்கு ஊசிபோடவா என்னை டாக்டராக்கணும்னு நினைச்சீங்க?” என்று நக்கலாக சிரித்தபடியே, தந்தையை வேற்றுகிரகவாசியைப் போல பார்த்து வைத்தான்.
மகனின் பேச்சில் கோபம் சர்ரென்று தலைக்கு ஏற,”முதல்ல மனுஷங்களை மதிக்க கத்துக்கோ கிருஷ்ணா. இல்லைன்னா, என்ன படிச்சிருந்தும் சுத்த வேஸ்ட் நீ” என்று மகனைப் பார்த்து ஏறக்குறைய உறுமியவர், 
சட்டென்று எழும்பி துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு,”தென்காசி வரைக்கும் போய்ட்டு வரேன் வேதா” என்று சென்றுவிட்டார்.
கணவன் கோபத்துடன் அந்த இடத்திலிருந்து அகன்றது பொறுக்காமல்,”ப்ச்ச்…என்ன குட்டா! அப்பா கோபப்படுற மாதிரி ஏன் பேசுற?” என்று அலுத்துக் கொண்ட அன்னையிடம்,
“பின்ன என்னம்மா! தானம், தர்மம்னு வர்ற வருமானத்துல பாதிக்கு பாதி அனாதை ஆஸ்ரமம், முதியோர் இல்லம்னு குடுக்குறாரு. அது காணாதுன்னு இப்போ கொஞ்ச நாளா, தன்னை அந்த கர்ணனுக்கு தம்பின்னு நினைச்சுகிட்டு பாவப்பட்ட பசங்களை படிக்க வேற வைக்கிறாரு”
“இப்போ, அதெல்லாம் போதாதுன்னு ஃப்ரீ ஹாஸ்பிடல்  கட்டப்போறாராம். அதுல நான் வேற டாக்டரா இருந்து சேவை பண்ணனுமாம். ம்ஹும்… இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல” சொல்லியபடியே உதட்டை அலட்சியமாக சுழித்தவன்
“இந்த தானம், தர்மம், சேவை, கீவை எல்லாத்தையும் அவரோட நிறுத்திக்க சொல்லும்மா. தேவையில்லாமல் என்னை அதுல இழுக்க வேண்டாம்ன்னு உன் வீட்டுக்காரர் கிட்ட தெளிவா சொல்லி வை” என்று நீட்டி முழக்கினான். 
“டேய் தம்பி! இல்லாதவங்களுக்கு நாம செய்றதை யாராவது சொல்லிக் காட்டுவாங்களாடா? அதுவுமில்லாமல் பணத்துக்கு மேல பணத்தை சேர்த்து நாம என்ன செய்ய போறோம்? இப்படி தர்மம் செய்தா நமக்கு புண்ணியமாவது வந்து சேரும்” என்ற வேதவல்லி
“நம்ம பரம்பரையில் நாலாவது தலைமுறையா நீ ஒரே ஆண்வாரிசு. அது உனக்கு தெரியும் தானே குட்டா! எந்த தலைமுறையில் யார் செய்த பாவமோ தெரியலை, இந்த குடும்பத்துல உள்ளவங்க ஒவ்வொரு ஜெனரேஷன்லயும் குழந்தையில்லாமல் கஷ்டப்பட்டுருக்காங்க.”
” உங்க அப்பாவோட தாத்தா, அவரும் ஒரே ஆண் வாரிசு தான் வீட்டுக்கு. அவருக்கு கிட்டத்தட்ட பதினைந்து வருடமா குழந்தையே இல்லாமல், நம்ம வீட்டு முன்னாடி இருக்கிற பாலகிருஷ்ணர் கோயிலைக் கட்டி கும்பாபிஷேகம் செய்த பிறகு தான் உன் தாத்தா பிறந்திருக்கிறார். உன் தாத்தாவுக்கும் கல்யாணம் முடிந்து ஐந்து வருஷத்துக்கு அப்புறம் உன்னோட அப்பாவும் இரண்டு அத்தையும் பிறந்தாங்க.”
 
“எங்களுக்கும் கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகியும் குழந்தை ஏதும் இல்லைன்ன உடனே செக்கப்புக்காக ஹாஸ்பிடல் போனோம். அங்க எங்ககிட்ட எந்த விதமான குறையும் இல்லை, பேபீஸ் இருக்கும் வெயிட் பண்ணுங்கன்னு சொல்லிட்டாங்க. அப்பதான் உங்க அப்பா இந்த கதையெல்லாம்  எங்கிட்ட சொன்னாங்க” என்றவரின் தோற்றம் அந்த நாட்களின் நினைவுகளில் நீந்தியது போல இருந்தது.
“புதுசா கல்யாணம் ஆனவங்க கிட்ட உங்களுக்கு எத்தனை குழந்தைங்க இருக்குன்னு கேட்பாங்களா? இல்லை உங்க கிட்ட எவ்வளவு காடுகரை, சொத்துசுகம் இருக்குன்னு கேட்பாங்களா? நீயே சொல்லு” என்று  கேட்டவரின் கேள்வியில் குழந்தையில்லாத காலங்களில் அவர் அனுபவித்த மனக்கஷ்டத்தின் சுவடு அப்பட்டமாகத் தெரிந்தது.
 “இந்த குடும்பத்துல உள்ளவங்க ஒவ்வொரு ஜெனரேஷன்லயும் குழந்தைக்காக கஷ்டப்பட்டது போல நாமளும்  கஷ்டபட்டுடக் கூடாது. நாம செய்யுற புண்ணியமாவது நமக்கு பிள்ளையா வந்து பிறக்கும் எங்கிற நம்பிக்கைல தான், கல்யாணம் ஆன புதுசுல இருந்தே  வருமானத்தில ஒருபகுதியை நாங்க தானம் செய்ய ஆரம்பிச்சிட்டோம். எங்க தானத்தோட பலனாலத் தான் ஏழு வருஷம் கழிச்சு  எங்களுக்கு நீ மகனா வந்து பிறந்தன்னு நான் ரொம்பவே நம்புறேன். அதனால நீ உன் வாயால அப்பா செய்யுற தர்மத்தை பழிக்காத கிருஷ்ணா” என்று தழுதழுத்தவர்
“பலனை எதிர்பார்த்து செய்யத் தொடங்கிய தர்மகாரியங்கள் தான். நான் இல்லைன்னு சொல்லலை. ஆனால் இன்னைக்கு உங்க அப்பா எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான், முன்னாடி நாம செய்ததை விட அதிகமா நல்லது செய்யுறார். ஆனால் எனக்கு இன்னும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கு” என்றபடியே மகனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவர்
“உனக்காவது இரண்டு ஆண்குழந்தைகள் பிறக்கணும். இந்த குடும்பத்துல தலைமுறை தலைமுறையா ஒரு ஆண் குழந்தை தான் பிறக்கும் எங்கிற அந்த பேச்சு உன்னோட ஜெனரேஷன்லயாவது மறையணும்” என்று சற்றே உணர்ச்சிவசப்பட்டவராக தன் அபிலாஷையை வெளியிட்ட தாயை லேசாக அணைத்துக் கொண்ட கிருஷ்ணா
“ஹையோ! போதும் போதுங்குற அளவுக்கு ஏற்கனவே பண்ணையாருங்க கதையைச் சொல்லி என் காதை ஓட்டையாக்கியிருக்க ம்மா” என்று சலித்துக்கொண்டே, 
“ஆனால்… உன்னோட எதிர்பார்ப்புன்னு கடைசில சொன்னப் பாரு… அது எனக்கு புதுத் தகவல். கவலையேப்ப்படாத… உன்னோட வேண்டுதல் கண்ண்டிப்ப்பா நிறைவேறும்… அதுக்கு நான் கேரண்டி”  தாயை சமன்படுத்த வேண்டி, கிண்டலாக வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்து இழுத்துச் சொல்ல
அவன் கிண்டல் புரிந்து,”படவா…” என்று அவன் காதை முறுக்கினார் வேதவல்லி.
அன்னையின் மனம் சமநிலை அடைந்து விட்டது என்று தெரிந்ததுமே,”நம்ம பையன் நாம சொன்னதை படிக்க மாட்டேங்குறான், அப்போ அவன் என்ன தான் படிக்க ஆசைப் படுறான்னு ஒருவார்த்தை நீயோ இல்லை உன் வீட்டுக்காரரோ கேட்டீங்ளா ம்மா?” என்று குற்றப்பத்திரிகை வாசித்தான் கிருஷ்ணா.
முகத்தை தன் கைகளால் துடைத்தபடியே,”சரி இப்ப சொல்லு…அடுத்து என்ன படிக்க போற?” 
“பி.எஸ்சி அக்ரி” அன்னையின் கேள்விக்கு தயங்காமல் பதில் வந்தது மகனிடமிருந்து
“விவசாயமா படிக்கப்போற!”
“ஏன் கூடாதா?”
“இல்லை மெடிசின் வேண்டாம்னு சொல்லிட்ட, அப்போ இன்ஜினியரிங் பண்ணுவியா இருக்கும்ன்னு நினைச்சேனேயொழிய இப்படி ஆசைப்படுவன்னு நினைக்கலை”
“ஏன்? இந்த ரெண்டு படிப்பு படிச்சவங்க தான் இந்த உலகத்தில வாழ ததகுதியானவங்களா என்ன?” கொஞ்சம் வில்லங்கமாகக் கேட்டவன்
“மரம், செடி, கொடி மேல எனக்கு எவ்வளவு இன்ட்ரெஸ்ட் உண்டுன்னு உனக்கே தெரியும் தானே ம்மா. அதனால நான் ஆசைப்பட்டதை படிக்க பண்ணையார் கிட்ட பெர்மிஷன் வாங்கிக் கொடுக்கிறது உன் பொறுப்பு” என்று எப்போதும் போல இப்போதும் பொறுப்பை அன்னையின் கைகளில் ஒப்படைத்தான் கிருஷ்ணா.
“ம்ம்… அப்பா வந்ததும் சொல்லுறேன்” என்றவர்,”ஆமாம்… தனாவும் அக்ரி தான் படிக்கப் போறானா? உங்கிட்ட ஏதாவது சொன்னானா, என்ன?” என்று கேட்க
“இல்லம்மா… தனாவுக்கு இஷ்டம் இருக்கு. ஆனால் அவங்க அப்பா இன்ஜினியரிங் தான் படிக்கணும்னு ஒத்தகால்ல நிக்குறாராம்.” 
“ஓ… அவனும் உன்கூட வந்தால் நல்லாயிருக்கும்னு நினைச்சேன். ஆனால் அவங்க அப்பாக்கு இஷ்டம் இல்லைன்னா நாம ஒன்னும் பண்ண முடியாது” மெதுவாக சொல்லிக் கொண்டவரிடம்
“எதுக்கும் நானே ஒரு தடவை அவங்க அப்பாவைப் போய் பாத்துட்டு வரேன் ம்மா” என்று சொல்லிக் கொண்டு வண்டியில் கிளம்பினான் கிருஷ்ணா. அவன் இப்படி தன் நண்பன் வீட்டிற்கு செல்வதெல்லாம் அரிதிலும் அரிதான ஒன்று.
தனாவின் வீட்டுக்கு செல்லும் வழியில் தான் சாருமதியின் வீடு இருக்கிறது. வண்டியில் சென்று கொண்டிருந்தவனின் பார்வை தானாகவே சாருமதியின் வீட்டருகே செல்லும் போது அங்கே பார்க்க,
அங்கே திண்ணையில் உட்கார்ந்து கொண்டு தன் தோளில் இருகைகளையும் மாலையாக கோர்த்து தொங்கிக்கொண்டிருந்த கௌரியை தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டிருந்த சாருமதியே இவன் கண்களில் விழுந்தாள்.
“ம்ஹும்… ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்துட்டோம்கிற சந்தோஷத்தில மெதந்துகிட்டு இருக்குறாப் போல. இரு… இரு… அடுத்து படிக்கிறதுக்கு நீ என்ன பண்ணப் போறன்னு நானும் பார்கத்தானே போறேன்” என்று கறுவியபடியே கடந்து சென்றான்.
உண்மையில் கிருஷ்ணா நினைத்தது போல சந்தோஷத்தில் மிதந்து கொண்டெல்லாம் இருக்கவில்லை சாருமதி. 
‘மேற்கொண்டு எப்படி படிக்கப் போகிறேன்?’ என்ற மனகலக்கத்தில் உட்கார்ந்திருந்தவளை ஓடிவந்து கட்டிக்கொண்ட கௌரி,”உன்னைப் போல நானும் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வருவேன் க்கா” என்று சொல்ல, 
“எங்க பட்டுகுட்டி அக்காவை விட நல்ல மார்க் எடுத்து ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரணும்” என்று சொல்லிபடி தங்கையை கட்டிக்கொண்டிருந்தாள். 
‘முன் ஏர் செல்லும் வழியில் பின் ஏருகளும் செல்லுமாம்’ இது பழமொழி. ஆனால் இங்கு அந்த மூன்றாவது ஏர் தன் முன் ஏருகளை பின்பற்றுமா?
“என்னக்கா? அதிசயத்திலும் அதிசயமா, உன் தங்கச்சி நீ ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்ததுக்கு உன்னை விஷ் பண்ணுனா போலயே!” கிண்டலாக கேட்டபடியே தன் அக்கா பக்கத்தில் வந்தமர்ந்த ரகு, அக்காவிடமிருந்த தங்கள் குட்டித் தங்கையை தன்னை நோக்கி இழுத்தான்.
“ஏன்? அவ  உனக்கு தங்கச்சி இல்லையாக்கும்?” என்று கேட்டவளின் இதழ்களில் தம்பியின் கிண்டல் பேச்சில் எழுந்த மெல்லிய சிரிப்பு நிறைந்திருந்தது.
வேறொன்றுமில்லை காயத்ரியும் சாருமதியை வாழ்த்தியிருந்ததையே ரகுராம் இவ்வாறு கிண்டலாகச் சொன்னது.
“ரகு!” 
“என்னக்கா?”
“இதுக்கு மேல படிக்க என்னடா பண்ணப்போறோம்?” என்றுமில்லாத கலக்கம் இன்று சாருமதியின் வார்த்தைகளில். அக்காவின் கலக்கத்தை காணப்பிடிக்காதவனாய்,
“ப்ப்ச்… இப்பவே எதுக்குக்கா டென்ஷன் ஆகுற. முதல்ல கவுன்சிலிங்கு அப்ளை பண்ணுவோம். அதுக்கப்புறம் நடக்க வேண்டியதை அப்புறமா பாத்துக்கலாம்” என்று சொல்ல 

Advertisement