Advertisement

உடனே அவர் அதை ரகுராமிடம் சொல்ல சாருமதியும் ஒத்துக்கொண்டு தன் அன்னையின் ஒப்புதலோடு இதோ வேலைக்கு சென்று கொண்டிருக்கிறாள்.
காலையில் இருவரும் தங்கள் சைக்கிளில்  ஒன்றாக மணிமுத்தாறு வந்து பஸ்பிடித்து திருநெல்வேலி போனார்களென்றால் வரும் போது அவரவர் வேலை முடிந்து வரும் நேரத்தைப் பொறுத்து வீடுவந்து சேர்வார்கள்.
வேலைக்கு வந்த சிறிது நாளிலேயே ராஜாத்தி அம்மாவுக்கு மட்டுமல்லாமல் அவரின் மகனுக்கும் மருமகளுக்குமே ரொம்பவும் பிடித்தவளாகிப் போனாள் சாருமதி.
தினமும் காலையில் வந்த உடன் செய்தித்தாள்களை முதலில் வாசித்து காட்டுவாள் சாருமதி. அதன் பிறகு அவர் சொல்லும் புத்தகங்களை வாசித்து காட்டுவாள்.
ஒரு பதினோரு மணிக்கு போல இரண்டுபேரும் சேர்ந்து டீ குடிப்பார்கள். பின்னர் மதிய உணவு. அதுவும் அவளுக்கு அங்கேயே தான். பின்னர் அந்த முதியபெண்மணி சிறிது நேரம் தூங்குவார். சாயங்கால டீயை சாருமதியே தயாரிக்க இருவரும் சேர்ந்தே குடித்துக்கொள்வார்கள். 
ராஜாத்தி அம்மாவின் மருமகள் சரியாக ஐந்து மணிக்கு வீட்டுக்கு வந்து சாருமதியை வேலையிலிருந்து விடுவித்து வீட்டுக்கு அனுப்பி வைத்து விடுவார்.
சம்பளம் ஒன்றை மட்டும் குறியாகக் கொள்ளாமல் விரும்பியே தனக்கு எல்லாம் செய்யும் அந்த சிறுபெண்ணின் வருகையை அந்த முதிய மனது தினமும் ஆர்வமுடன் எதிர்பார்க்கத் தொடங்கியது‌.
இன்று  எப்போதும் போல சாருமதி முதியவரின் வீட்டுக்கு வரும் போது வீடே அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது.
சதாசிவமும் சுலோச்சனாவும் கார் ட்ரைவரின் உதவியோடு பாட்டியை காரில் ஏற்றி இருந்தார்கள்.
பாட்டியின் முதுமையால் சுருங்கியிருந்த முகமோ வலியில் இன்னும் சுருங்கியிருந்தது.
“பாட்டிக்கு என்னாச்சு மேடம்? எங்க கூட்டிட்டு போறீங்க?” என்று பாட்டியின் மருமகள் சுலோச்சனாவிடம் பதட்டத்துடன் சாருமதி கேட்க
வண்டியினுள் இருந்த பாட்டியோ சட்டென்று சாருமதியின் கைகளை பிடித்துக் கொண்டு,”வந்துட்டியா? உன்னைத் தான் தேடிக்கிட்டே இருந்தேன் தெரியுமா?” என்றவர்,
“காலைல பாத்ரூம்ல வழுக்கி கீழே விழுந்துட்டேன். கால்ல அடிபட்டுடிச்சி, வலி உயிர் போகுது. எங்கூட கொஞ்சம் ஆஸ்பத்திரிக்கு வர்றியா? சாயங்காலம் எப்பவும் போல நீ வீட்டுக்கு போயிடலாம்”
தன்னோடு அவள் வந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆவலில் வலியையும் தாண்டி பாட்டி அவளோடு நீளமாகப் பேச, சாருமதி பாட்டியின் மருமகளைத் திரும்பி பார்த்தாள்.
“கொஞ்சம் எங்க கூட வரமுடியுமா சாரு? நீ வந்தா நல்லாயிருக்கும்னு அத்தை ஃபீல் பண்ணுறாங்க” 
சுலோச்சனாவுக்கு தான் அவர்களோடு செல்வதில் ஆட்சேபனை ஏதுமில்லை எனவும், பாட்டி அருகில் காரில் அமர்ந்தாள் சாருமதி.
நகரின் பிரபல ஆர்தோ மருத்துவமனைக்கு பாட்டியை அழைத்து வந்திருந்தார்கள். “முதல்ல காலை ஒரு எக்ஸ் ரே எடுத்துடுங்க” என்று பாட்டியை பரிசோதித்த மருத்துவர் கூற
அதன்படி எடுத்த எக்ஸ் ரே யின் முடிவு பாட்டிக்கு வலது கணுக்காலில் லேசான எலும்புமுறிவு என்று சொன்னது.
உடனே ஆப்ரேஷன் தேவை என்று மருத்துவர்கள் சொல்லிவிடவே சம்மதம் சொல்லிவிட்டார் பாட்டியின் மகனும். 
ஆப்ரேஷனை முடித்து சிறிது நேரம் தங்கள் கண்காணிப்பில் வைத்திருந்த மருத்துவர்கள் குழு பாட்டியை ரூமிற்கும் மாற்றிவிட்டார்கள். மாத்திரை, மருந்துகளின் உபயத்தால் அந்த முதியவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். 
அன்று சாயங்காலம் வரை தங்களுக்கு உதவியாக அங்கேயே இருந்த சாருமதியை நான்கு மணிக்கெல்லாம் கிளம்பச் சொன்ன சுலோச்சனா,
“சாரு! நாளைக்கு எனக்கு ஆஃபீஸ்ல ஆடிட்டிங் இருக்குறதால கண்டிப்பா போயே ஆகணும். நீ கொஞ்சம் நாளைக்கு வந்து அத்தை கூட இருந்தால் நான் கொஞ்சம் நிம்மதியா ஆஃபீஸுக்கு போய்ட்டு வருவேன். வருவியா ம்மா?”  என்று கேட்க
மருத்துவமனை படுக்கையில் ஓய்ந்து கிடந்த பாட்டியை பார்த்தவளின் தலை சரியென்று தானாக ஆடியது.
அன்று மட்டுமல்ல ராஜாத்தி அம்மா ஹாஸ்பிடலில் இருந்த  ஐந்து நாட்களும் சாருமதி ஹாஸ்பிடலுக்கே வந்துவிட்டாள். அவள் வருவது சுலோச்சனாவிற்கும் உதவியாக இருந்தது.
டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு போகும் போது,”உதவிக்கு நர்ஸ் எதுவும் தேவையா?” என்று கேட்ட  மருத்துவருக்கு,”வேண்டாம்” என்று சொல்லிய ராஜாத்தி அம்மா,
தன்மகனைப் பார்த்து,”சாருமதி மட்டும் எங்கூட இருந்தால் நான் சமாளிச்சிடுவேன் டா” என்றபடியே இவளைப் பார்த்து “வருவல்ல…” என்று கேட்க
“கவலப்படாதீங்க பாட்டி.உங்களை எழுப்பி நடமாட வச்சிட்டு தான் நான் எங்கேயும் போவேன்” எதற்கெடுத்தாலும் தாயைத் தேடும் சேயாய் தன்னையேத் தேடும் பாட்டியிடம் உறுதிமொழி அளித்தாள் சாருமதி
அதன் பிறகு கிட்டதட்ட ஒரு ஹோம் நர்ஸ்ஸாகவே மாறிப்போனாள் சாருமதி. ஒரு இருபது நாட்களிலேயே இராஜாத்தி அம்மா வாக்கரின் உதவியோடு நடக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அந்த வீட்டிலுள்ள மூன்று பெரியவர்களுமே சாருமதியை வேலைக்கு வரும் பெண் என்பதையும் தாண்டி தங்களின் உறவாகவே நடத்த, உற்சாகமாகவே அந்த வீட்டில் வளையவந்தாள் சாருமதி. 
 
ஆனால் அதற்கும் ஒரு நபரால் பங்கம் வந்தது. 
ஆமாம்… சென்னையில் தங்கி படித்துக்கொண்டிருக்கும் சதாசிவம் சுலோச்சனா தம்பதியினரின் புதல்வன் வீட்டுக்கு வந்து மூன்று நாட்களாகியிருக்கிறது.
அந்த ராகேஷ் வந்த நாளிலிருந்து சாருமதியால் இயல்பாக வீட்டினுள் நடமாட முடியவில்லை. 
அவளுக்கு எப்போதும் தன்னை யாரோ வெறித்து பார்த்துக் கொண்டிருப்பது போலவே ஒரு பிரமை ஏற்பட்டது. 
அதனால் அவள் அந்த வீட்டில் தன் நடமாட்டத்தை சுருக்கிக் கொண்டு எப்போதும் பாட்டியோடே இருக்கிறாள்.
‘பாட்டி ஓரளவுக்கு நல்லாவே நடக்க ஆரம்பிச்சுடாங்க. அதனால நாளையிலிருந்து வேலைக்கு வரமாட்டேன்னு அவங்க  கிட்ட சொல்லிடணும்’ 
மதிய சாப்பாட்டுக்குப் பிறகு இராஜாத்தி அம்மா படுத்திருக்க, சாருமதியின் மனம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்துக் கொண்டிருந்தது. 
ஒரு நான்கு மணிக்கு போல தூக்கம் கலைந்த பாட்டி,”சாரும்மா! டைனிங் டேபிள்ல பழம் எல்லாம் இருக்கு, கொஞ்சம் சாலட் போட்டு எடுத்துட்டு வர்றியா சாப்பிடலாம்” என்று கேட்க, 
‘பாட்டிக்கு சாலட் போட்டு குடுத்துட்டு இனிமேல் நான் வரலைங்கற விஷயத்தை சொல்லிட்டு கிளம்பிட வேண்டியதுதான்’
எண்ணியபடியே டைனிங் டேபிளிலிருந்து பழத்தை எடுத்துக்கொண்டிருந்த சாருமதியின் தோளை அழுத்தமாக பற்றியது இருகைகள்.
வெடுக்கென்று தோளை உதறியவள் யாரென்று திரும்பி பார்க்க, பாட்டியின் பேரன் அந்த ராகேஷ் சாருமதிக்கு மிக நெருக்கமாக நின்று கொண்டிருந்தான். 
அவன் கண்களோ  இரையைக் கண்ட வேட்டை நாயின் கண்களைப் போல ஜொலித்துக் கொண்டிருந்தது.
‘இப்படி ஒன்று நடந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் வேலையிலிருந்து நின்று விடவேண்டும் என்று சாருமதி நினைத்ததே.
சட்டென்று உள்ளத்தில் பயத்தீ பரவ அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்,”தள்ளி நில்லுங்க…” என்று அதட்டியவள், அங்கிருந்து நகர முற்பட்டாள்.
நகர்ந்தவளின் கைகளை எட்டிப்பிடித்து,”எங்கப்பா தர்ற சம்பளத்துக்கு பாட்டிக்கு மட்டுமில்ல அவரோட  பேரனுக்கும் கொஞ்சம் அங்க சேவை செய்யலாம்”  திறந்திருந்த அவன் அறைவாசல் வழியே தெரிந்த கட்டிலைக் கைகாட்டியது அந்த ஈனப்பிறவி.
அவ்வளவு தான்… எங்கிருந்து தான் சாருமதிக்கு அவ்வளவு தைரியம் வந்ததோ தெரியாது! கைகளை அவனிடமிருந்து விடுவித்திருந்தவள் அந்த ராகேஷின் கன்னம் பழுக்க ஒரு அறையும் வைக்க
மூர்க்கனான அவன்,”ஆஃப்டர்ஆல் ஒரு ஆயா வேலை பார்க்க வர்ற உனக்கே இவ்வளவு திமிர் இருந்தா, எனக்கு எவ்வளவு இருக்கும்?” என்று மறுபடியும் சாருமதியின் கையை பிடிக்க முயற்சித்தான்.
இப்போது இரண்டு மூன்று நாட்களாக தன்னறைக்குள்ளேயே அடைந்து கிடக்கும் சாருமதியின் செயல் ராஜாத்தி அம்மாவிற்கும் எதையோ உணர்த்த, தனது வாக்கிங் ஸ்டிக்கின் உதவியோடு ‘சாருமதியை இன்னமும் காணவில்லையே?’ எனத் தேடி வந்தவரின் கண்களில் பேரனின் செயல்விழ,
“பொண்ணுங்க வேலைக்குன்னு வீட்டை விட்டு வெளியே வந்தாலே உங்களுக்கு அவ்வளவு எளக்காரமா போச்சாடா? ராஸ்கல்! என்ன பேச்சு பேசுற! ச்சீ… நீயெல்லாம் எப்படிடா எம்புள்ளைக்கு வந்து மகனாப் பிறந்த?” 
தன் ஆதங்கத்தை எல்லாம் வார்த்தைகளாகக் கொட்டி தன் பேரனை வாக்கிங் ஸ்டிக்கால் விளாசிதள்ளி விட்டார் இராஜாத்தி அம்மா.
 பாட்டியின் முன் தன் முகமூடி கழன்று போன வெக்கத்தில் தன் அறைக்குள் நுழைந்து கொண்டான் அந்த ராகேஷ்.
“என்னை மன்னிச்சிடும்மா… இப்படி ஒரு குணத்தோடு என் வீட்டுக்குள்ளேயே ஒருத்தன் இருப்பான்னு நான் நினைச்சு கூட பாக்கலை, என்னை மன்னிச்சிடு” என்றவர்
“இனிமேல் ஒரு நிமிஷம் கூட நீ இந்த பாழாப்போன வீட்ல நிக்ககூடாது, கிளம்பு…” என்றவர் சாருமதியின் கரங்களை பிடித்து தன் கண்களில் ஒற்றியபடியே குலுங்கிக் குலுங்கி அழுதார்.
 தன் தளர்ந்த உடல் குலுங்க அழும் இராஜாத்தி அம்மாவை ஆதரவாக அணைத்து, அழைத்து வந்து அவர் படுக்கையில் விட்ட சாருமதி
“தயவு செய்து அழாதீங்க பாட்டி. உங்க பேரன் செய்த  தப்புக்கு நீங்க எப்படி பொறுப்பாக முடியும்?”
“நானே இன்னைக்கு உங்ககிட்ட சொல்லிட்டு வேலையிலிருந்து நின்னுக்கணும்னு தான் நினைச்சிருந்தேன் பாட்டி!” என்றவள் தன் பையை எடுத்துக்கொண்டு,”போய்ட்டு வரேன், கவனமா உடம்பை பாத்துக்கோங்க” என்று சொல்லியபடி கிளம்ப
 
 அவளை தன்னை நோக்கி இழுத்து முன்னுச்சியில் முத்தமிட்ட பாட்டி,”இங்க திருநெல்வேலியில் உனக்கு ஒரு பாட்டி இருக்குறாங்குறதை மட்டும் மறந்துடாத” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
இங்கு ஒரு பாட்டியை மட்டுமல்ல ஒரு எதிரியையும் சாருமதி சம்பாதித்துக் கொண்டாள் என்பதை, போகும் பெண்ணையே தன்னுடைய அறையின் ஜன்னல் வழியே வெறித்துக் கொண்டிருந்த ராகேஷின் பார்வை சொன்னது.
*******************
 நடந்த அனைத்தையும் யோசித்தபடியே, தன்வீட்டுக்கு போகும் பாதையில் சைக்கிளை மிதித்து கொண்டிருந்த சாருமதியின் எண்ண ஓட்டத்தை அவள் சைக்கிளிலிருந்து வந்த ‘கடக்…கடக்…’ என்ற ஒலி  தடை செய்ய, குனிந்து பார்த்தாள்.
சைக்கிள் சங்கிலி கழன்று கிடந்தது. ‘ச்ச்ச… இது வேற’ அலுத்துக் கொண்டவள் சைக்கிளிலிருந்து கீழே இறங்கி அதை சரிசெய்ய முயற்சி செய்ய
சர்ரென்று காதை கிழிக்கும்  சத்தத்தோடு அவள் அருகில் புத்தம் புதிய பைக் ஒன்று வந்து நின்றது. பைக் நின்ற சத்தத்தில் லேசாக அரண்டு போன சாருமதி படபடப்புடன் நிமிர்ந்து பார்க்க 
பைக்கின் பின்னாடி இருந்து வேகமாக இறங்கிய தனா,
“என்னாச்சு சாரு?” என்றபடியே சைக்கிளை நோக்கி வந்தான்.
ஆனால் பைக்கை ஓட்டி வந்தவனோ, தன் நாக்கை தேள் கொடுக்காக மாற்றி சுழற்ற ஆரம்பித்தான். வேறு யார்? எல்லாம் கிருஷ்ணா தான்! 
சிறிது நாட்களுக்கு முன்னர் தான் ‘ஹோண்டா யூனிகார்ன்’ பைக் வாங்கியிருந்தான். அது தான் இப்போது அவன் கைகளில் இப்போது உறுமிக்கொண்டிருந்தது.
“டேய் தனா! கொஞ்ச நாளைக்கு முன்னாடி யாரோ டாக்டரம்மா ஆகப்போறேன்னு சொன்னாங்க, ஆனா அவங்க இப்போ ஆயாம்மாவா மாறிட்டாங்களே! சொன்ன வீரவசனம் எல்லாம் எங்கடா போச்சு?” நக்கல் சிரிப்போடு கேட்டான் கிருஷ்ணா.
கைகளில் சைக்கிள் செயினின் மை ஒட்டி விடும் என்பதால் ஒரு குச்சியை வைத்து அதை எடுத்து சரியாகப் போட முயற்சி செய்து கொண்டிருந்த தனா,”கொஞ்ச நேரம் சும்மா தான் இரேன் மாப்ள!” என்று சலித்துக்கொள்ள
கிருஷ்ணாவை நிமிர்ந்து பார்த்த சாருமதி,”உனக்கு ஒன்னு  தெரியுமா தனா? இந்த உலகத்தில எல்லா அம்மாக்களும் தன்னுடைய பிள்ளைகளுக்கு ஆயாம்மா தான். ஒரு வேளை உன் ஃப்ரெண்டோட அம்மா மட்டும் பிள்ளையை ஆயாம்மாவா மாறி பாத்துக்காம பிறந்த உடனே நிஜ ஆயாம்மா கையிலேயே தூக்கி குடுத்துட்டாங்க போல” 
“அதான் எந்நேரமும் யாரை வார்த்தையால குத்திக் கிழிக்கலாம்னு அலைஞ்சிட்டு இருக்குறாப்ல உன் ஃப்ரெண்ட்”
ஒரு தாய் வளர்க்கும் பிள்ளையிடம் இருக்கும் குணநலன்கள் உன்னிடம் இல்லை என்னும் ரீதியில் சாருமதியின் பேச்சிருக்க, 
அதில் சீண்டிவிடப்பட்ட கிருஷ்ணா,”ஏய்…எங்க அம்மாவை பத்தி பேச உனக்கு எந்த அருகதையும் இல்லை” என்று சட்டியிலிட்ட பாப்கார்னாக குதிக்க ஆரம்பித்தான். 
“ஏன்? யாரோ ஒரு அம்மா பெத்த பிள்ளையை மட்டும் நீ காணும் போதெல்லாம் கண்டபடி பேசலாம்… ஆனால் உன்னோட அம்மாவைப் பற்றி நான் சொன்ன உடனே மட்டும் ரோஷம் பொத்துகிட்டு வருதோ?”
“நீ பார்க்கும் போதெல்லாம்  மட்டம்தட்ட என்னை உனக்கு நேர்ந்து விட்டுருக்காங்களா? இல்ல நீ தான் என் முறைப்பையனா? இனி ஒருதரம் இப்படி எங்கிட்ட நீ நடந்துகிட்டா, உங்கப்பா கிட்ட வந்து உன்னை பற்றி கம்ப்ளைண்ட் பண்ண வேண்டியிருக்கும், பாத்துக்கோ” 
இன்று மாலையில் நடந்த சம்பவங்கள் பெண்ணவளை வாய் திறந்து பேசவைத்திருக்க, நேரடியாகவே கிருஷ்ணாவை மிரட்டினாள் சாருமதி.
 ஆனால் அவனோ முகத்தை சுளித்தபடி,”உவ்வாக்… யாரு? நான்… உன் முறைபையன்… ஐயே! இப்படி ஒரு முறப்பொண்ணு எனக்கு வேண்டவே வேண்டாம் சாமி” 
வாழ்க்கை ஒரு வட்டம் அதில் தான் பேசும் வார்த்தைகளே பூமாரங்காயாக மாறி தன்னையே சுழற்றியடிக்கும் என்று தெரியாமல் அழகாக வார்த்தைகளை சிதறவிட்டுக் கொண்டிருந்தான் கிருஷ்ணா.
 ‌

Advertisement