Advertisement

சாருமதி.
அத்தியாயம் 04.
சித்திரை வருடப் பிறப்பையொட்டி கனி காணும் நிகழ்ச்சியை வீட்டில் காலையிலேயே சிறப்பாக முடித்திருந்தார் வேதவல்லி.
முதல்நாள் இரவே பூஜையறையில் ஒரு கண்ணாடி முன் வெள்ளித் தாம்பாளத்தில், மங்கலப் பொருட்களோடும் முக்கனிகளோடும், ஆப்பிள், ஆரஞ்ச், திராட்சை, மாதுளை, வெள்ளரிப்பழம், ஒரு எலுமிச்சம்பழம், வெற்றிலை, பாக்கு, பணம், நகைகள் எல்லாம் வைத்து அந்த கண்ணாடிக்கு ஒரு தங்க ஆரத்தையும் போட்டு தயார் செய்து வைத்திருந்தார்.
மறுநாள் அதிகாலையில் எழுந்து முதன்முதலில் தான் அதில் கண்விழித்து விட்டு, அதன்பிறகு மகனையும் கணவரையும் ஒவ்வொருவராக கண்ணைமூடி அழைத்து வந்து கண்ணாடி முன் இருக்கும் அந்த கனிகளும், செல்வமும் நிறைந்திருக்கும் தாம்பாளத்தை பார்க்க வைத்திருந்தார்.
அப்படி செய்வதால் அந்த வருடம் முழுவதுமே செல்வச்செழிப்பாக சுபிட்சமாக இருக்கும் என்பது ஒரு நம்பிக்கை. இது சித்திரை விசு அன்று கன்னியாகுமரி மாவட்ட மக்களிடையே பரவலாக இருக்கும் பழக்கம். 
 அந்த மாவட்டத்தில் பிறந்தவரான வேதவல்லியும் இதுநாள் வரை அந்த நிகழ்வை தவறாது கடைபிடித்து வருகிறார்.
அதன் பிறகு குளித்து முடித்து வீட்டு வளாகத்தில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு காலை சாப்பாட்டிற்காக டைனிங் டேபிள் முன் இருக்கிறார்கள்.
இட்லி, பொங்கல், வடை, கேசரி, சாம்பார், சட்னி எல்லாம் சாப்பிடுவதற்கு தயாராக சாப்பாட்டு மேஜையில்  இருந்தது. கூடவே சித்திரை திருநாள் அன்று அவல் சாப்பிடுவது விசேஷம் என்பதால் நனையவைத்த அவலில் கருப்பட்டி, துருவின தேங்காய் போட்டு கிளறி வைத்திருந்தார் வேதவல்லி.
ஆமாம்…வேதவல்லி தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று வேதவல்லி சமையலறையில் நின்று மகனுக்கும் கணவருக்கும் பிடித்த பொங்கலையும், கேசரியையும் கூடவே இந்த அவலையும் தானே தயார் செய்திருந்தார்.
“ம்மா… எனக்கு முதல்ல பொங்கலையும் கேசரியையும் வச்சி அந்த தட்டை இந்த பக்கமாத் தள்ளும்மா” 
கைகளை பரபரவென்று தேய்த்துக்கொண்டே ஆவலாகக் கேட்ட மகனுக்கு அவன் கேட்டபடியே தட்டில் வைத்து வேதவல்லி கொடுக்க,
“ம்ம்ம்… சூப்பரா இருக்கு… இப்படி நெய் சொட்டச்சொட்ட ருசியா கேசரி உன்னை மாதிரி யாராலையும் செய்யமுடியாது ம்மா” 
ரசித்து சாப்பிட்ட மகனை வாஞ்சையுடன் பார்த்தபடியே, கணவனின் பாத்திரத்தில் இட்லி, சாம்பார், சட்னி வைத்துக் கொடுத்தார்.
இட்லியில் ஒரு விள்ளல் எடுத்து  சாம்பார், சட்னியில் தோய்த்த பண்ணையார் மூர்த்தி அதை முதலில் மனைவிக்கு ஊட்டி விட லேசான முறுவலோடு வாங்கிக் கொண்டார் வேதவல்லி.
“இந்த விஷயத்தில மட்டும் பண்ணையாரை அடிச்சுக்க ஆளே கிடையாது, ரொமான்ஸ் மன்னன் தான் போங்க” மெலிதாக முணுமுணுக்கிறேன் பேர்வழி என்று மகன் சொன்னது தெளிவாகவே வேதவல்லியின் காதுகளில் விழுந்தது.
“நீயும் கல்யாணத்துக்குப் பிறகு உனக்கு வர்றவளுக்கு ஊட்டிவிடு. அதுக்காக எங்களைப் பார்த்து ஏன்டா கண்ணுவைக்கிற?” சிரித்தபடியே மகனின் பாணியிலேயே முணுமுணுத்தார் அம்மா.
கல்யாணம் முடிந்ததிலிருந்து இன்றுவரை இது ஒரு பழக்கம் பண்ணையாருக்கு. எங்கே இருந்து சாப்பிட்டாலும் சரி , கூட யார் இருந்தாலும் சரி, மனைவி பக்கத்திலிருந்தால் மனைவிக்கு முதல் வாய் உணவு கொடுக்காமல் சாப்பிடமாட்டார் மனிதர்.
முதலிலெல்லாம் வெட்கமாக இருந்த வேதவல்லிக்கும் போகப்போக பழகிவிட்டது.
கணவனுக்கும், மகனுக்கும் இடையில் அமர்ந்து பார்த்துப் பார்த்து பரிமாறிக் கொண்டிருந்த வேதவல்லியிடம்,
 “ம்மா கேளு…ம்மா கேளு…” என அவர் காதை கடித்துக் கொண்டிருந்தான் மகன்.
“ப்ச்ச்…அப்பா சாப்பிட்டு முடிக்கட்டுமேடா”
“ஹாங்… சாப்பிட்டு முடிச்சதும் ஊருக்கு நல்லது செய்யுறேன்னு வெளியப் போயிடுவார். பின்ன நீ எப்போ கேட்ப?”
‘அவன் சொல்லுறதும் சரிதான், மனுஷனை இப்போ விட்டா எப்ப பிடிக்கமுடியுமோ தெரியாது? அதனால கேட்டுட வேண்டியது தான்’
ஒரு முடிவோடு கணவனைப் பார்க்கவும்,”என்ன விஷயம்?அம்மாவும் பிள்ளையும்  ரொம்ப நேரமாக குசுகுசுன்னு பேசிக்கிறீங்க?” என்று அவரேக் கேட்கவும் சரியாக இருந்தது.
‘அவரே கேட்டுட்டார், சொல்லிட வேண்டியது தான்’ என்ற எண்ணத்தோடு மகனைப் பார்க்க அவனோ, “சொல்லிவிடு” என்பதாய் கண்ஜாடை காட்டினான் .
“இல்ல…தம்பி, ஆசையா பைக் வாங்கி கேக்குறான்…ஒன்னை வாங்கித் தான் குடுத்துடுங்களேன்” 
மகனின் தேவையையும் சொல்லி, அதை செய்துவிடுங்கள் என்று நாசூக்காக தன் முடிவையும் சொல்லி விட்டு கணவனின் முகத்தைப் பார்த்தார் வேதவல்லி.
இப்போதென்றில்லை எப்போதுமே கிருஷ்ணாவின் தேவைகள் எதுவுமே நேரடியாக தகப்பனிடம் வருவதில்லை. எல்லாத் தேவைகளும் அவனுடையத் தாயார் வேதவல்லி மூலமாகவே தகப்பனிடம் சொல்லி நிறைவேற்றிக் கொள்வான்.
எப்போதாவது மனைவி கேட்டும், அவர் முடியாது என்று சொன்னால்,
“இருக்கிறது ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு கருவேப்பிலை கொத்தாட்டம் ஒரு புள்ள. என்னமோ ஒன்பது பிள்ளையை பெத்து வச்சிருக்கிற மாதிரி, எப்போ எது கேட்டாலும், இல்லைன்னு சொல்லுறதே உங்க வேலையாப் போச்சு” இந்த டயலாக்கைப் பேசியே கணவனை ஆஃப் செய்து விடுவார் வேதவல்லி.
“ம்ம்… என்ன பைக் வேணுமாம்? அதையும் முடிவு பண்ணிட்டு தானே உங்கிட்ட வந்துருப்பான் உம்பிள்ளை”
“இப்போ பைக் எதுக்கு? இன்னும் கொஞ்ச நாள் கழித்து பார்க்கலாம்” என்ற பதிலையே தந்தையிடமிருந்து எதிர்பார்த்த கிருஷ்ணா, தந்தையின் பதிலில் உற்சாகமாகி,”ஹார்லி_ டேவிட்சன்” என்றான் அவரிடமே நேரடியாக.
மகனின் பதிலில்  பண்ணையார் வெடிச்சிருப்பு சிரிக்க, குழம்பிப் போன வேதவல்லி,”ஏங்க? அப்படி என்ன சொல்லிட்டான்னு இப்படி சிரிக்கீங்க?” என்று கேட்டார்.
“வேதா…ஹஹஹ…உம்பிள்ளை நம்ம சொத்தையெல்லாம் வித்து அந்த காசுல ஒரு பைக்கை வாங்கிக் குடுன்னு கேக்குறான். அதுக்கு நீயும் சப்போட்டு”
தகப்பனின் பதிலில் உசுப்பிவிடப்பட்ட கிருஷ்ணா,”ஏம்பா? நம்ம சொத்தோட மதிப்பு வெறும் பன்னென்டு, பதிமூனு லட்சம் தானா?” என்று கேட்டான் கோபமாக.
 “ஓஹ்… உனக்கு பன்னிரண்டு பதிமூனு லட்சமெல்லாம் வெறும் சும்மா பணமா தெரியுது! இல்லடா?”
“அவனவன் இருக்க வீடு இல்லாமலும் சாப்பிட சோறில்லாமலும் கிடந்து அல்லாடுறான். உனக்கு இத்தனை லட்சத்தில ஒரு பைக் கேக்குது, ம்ம்…” பணத்தின் அருமை தெரியாமல் தன் மகன் இப்படி  இருக்கிறானே என்ற கவலையில் மூர்த்தி பேச 
“அது அவங்கவங்க வாங்கிட்டு வந்த வரம். அதுக்கு நான் என்…” என்று பேசிக்கொண்டிருந்த மகனின் பேச்சில் குறுக்கிட்ட வேதவல்லி,
“குட்டா! நீ இனிமேல் தான் பைக் ஓட்டியே கத்துக்கணும், அதுக்கு முதல்ல ஒருலட்ச ரூயாய்க்கு போல ஒரு பைக் வாங்கு. நல்லா ஓட்டி பழகுன பிறகு நாம நீ சொன்ன அந்த டேவிட்சனை வாங்கலாம்”
இதுநாள் வரையிலும் தந்தைக்கும் மகனுக்குமிடையே எந்த உரசலும் வந்திராத நிலையில், இன்று இரண்டு பேரும் கொஞ்சம் வாக்குவாதம் செய்யவும் பயந்து போன வேதவல்லி அவசர அவசரமாக மகனை சமாதானப்படுத்த தானே ஒரு முடிவு எடுக்க,
இப்போதும் வெடிச்சிரிப்பு சிரித்த மூர்த்தி,”வேதா! உம்மகனுக்கு பைக் ஓட்டி கத்துக்க ஒருலட்ச ரூபாய் வண்டி ம்ம்… சும்மா சொல்லக்கூடாது, நீங்கெல்லாம் பெரிய ஆளுங்க தான் மா”
“அப்புறம் இன்னொரு விஷயம். உம்புள்ள பைக் ஓட்ட கத்துகிட்டு ஒருவருஷமும் எட்டு மாசமும் ஆச்சு. நான் சொன்ன கணக்கு சரிதானான்னு உம்புள்ள கிட்டயேக் கேளு”
கணவனின் பதிலில் அரண்டு போன வேதவல்லி,”டேய் தம்பி! நீ பைக் ஓட்ட கத்துகிட்டியா? எப்போ டா? அம்மாகிட்ட சொல்லவேயில்லை!” என்று அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்க,
“அது போன வருஷத்தில ஒரு நாள் கால்மூட்டை பேத்துகிட்டு இரத்தக்களரியா வந்து நிக்கும்போது, நீ  கேட்டதுக்கு கூட கிரௌண்ட்ல கபடி விளையாடும் போது கீழவிழுந்துட்டேன்னு சொன்னானே, உனக்கு ஞாபகம் இருக்கா? அப்போ தான். என்ன கிருஷ்ணா! சரியா நான் சொல்லுறது?’
அப்பாவின் பதிலில் உண்மையிலேயே அரண்டு போனான் கிருஷ்ணா. தான் வண்டி ஓட்டி பழகியது வீட்டில் யாருக்கும் தெரியாது என்று நினைத்திருக்க, தந்தையோ நாள் கணக்கையே சொன்னதில்,”என் பார்வை வட்டத்துக்குள் தான் நீ இருக்கிறாய் மகனே” என்று அவர் சொல்லாமல் சொல்லியது போல இருந்தது அவனுக்கு.
பொதுவாக வாலிப வயதில் இளவட்டங்கள் பைக் ஓட்டக் கற்றுக்கொள்ளுவது என்பது ஒரு சாதாரண விஷயம் தான். ஆனால் கிருஷ்ணாவை பொருத்தவரை அப்படி இல்லை. 
வேதவல்லிக்கு மட்டும் தெரிந்திருந்தால் கீழ விழுந்திடுவ, அடிபட்டுரும், அப்படி, இப்படி என்று சொல்லி மகனை வண்டியை தொட்டிருக்கவே விட்டிருக்கமாட்டார்.
இப்போது கூட வேதவல்லி தன் தாயாரின் நச்சரிப்புத் தாங்காமல் தான் மகனுக்கு பைக் வாங்கித்தரவே சம்மதித்தது.
“யாருகிட்ட டா கத்துகிட்ட?”
“தனா” 
“திருட்டுப் பசங்க … இரண்டு பேரும் சேர்ந்து எங்கிட்ட மறைச்சிட்டீங்கல்ல. இன்னைக்கு வரட்டும்… அவனுக்கு இருக்கு…”
“உம்பையனுக்கு அவன் நல்லது தான் பண்ணியிருக்கான். அவன் வந்தா எதுவும் சொல்லிடாத வேதா” என்று பண்ணையார் சொல்லிக்கொண்டிருக்கும் போதே,”ஐயா…” என்ற அழைப்பு கேட்க,
கூப்பிட்டது யாரென்று குரலில் இருந்தே தெரிந்து கொண்ட பண்ணையார் மூர்த்தி,”உட்காரு கேசவன்! இதோ வந்துடுறேன்” என்றபடியே எழும்பி கையை கழுவி மனைவியின் முந்தானையில் துடைத்து விட்டு ஹாலை நோக்கிச் சென்றார்.
 பண்ணையாரின் கணக்குபிள்ளையின் மகன் தான் இந்த கேசவன். அவருக்கு வயதாகிவிடவே வணிகவியலில் இளங்கலை பட்டம் பெற்ற தன் மகனை பண்ணையாரின் அனுமதியோடு தனக்கு பதிலாக தன்னிடத்தில் அமர்த்தி  கணக்கின் அத்தனை நெளிவு சுளிவுகளையும் மகனுக்கு சொல்லி குடுத்து விட்டார்.
“என்ன விஷயம்? சொல்லு கேசவா!” என்றபடியே தன்னருகே வந்தமர்ந்த பண்ணையாரிடம் ஒரு பையை நீட்டியவன்,
“போன வாரம் தேங்காய் லோட் ஏத்துனோம்ல, அதுக்கான தொகை தான் இதுல இருக்கு. நீங்களும் கொஞ்சம் கணக்கை சரிபார்த்து குடுத்துட்டீங்கன்னா  பணத்தை அக்கவுண்ட்ல போட்டுருவேங்கய்யா” என்று சொல்ல
“சரி…” என்று சொல்லி கைநீட்டி அந்த பையை வாங்கியவர், தன் சட்டைப் பையிலிருந்து ஆயிரம் ரூபாய் தாளை எடுத்து கேசவனுக்கு,”கைநீட்டம் வச்சுக்கோ…” என்று சொல்லி கொடுக்க
எத்தனையோ தர்மகாரியங்கள் செய்யும் பண்ணையாரின் காலில் விழுவது தப்பே இல்லை என்ற காரணத்தால் அவரின் பாதம் தொட்டு கண்களில் ஒற்றியபடியே ரூபாயைப் பெற்றுக்கொண்டான் கேசவன்.
அதை இங்கிருந்தே பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணா,
“அதானே கால்ல விழுந்து நல்லா குல்லா போடுறவங்களுக்கெல்லாம் உன் வீட்டுக்காரர் அள்ளி அள்ளி குடுப்பாப்ல… ஆனால் சொந்த மகன் ஏதும் கேட்டா  தான் கணக்கு பார்ப்பார் பண்ணையார்”  எரிச்சலில் வார்த்தைகளை துப்பினான் கிருஷ்ணா
“நம்ம கேசவன் அப்படி இல்ல கிருஷ்ணா… அவன் ரொம்ப நல்லமாதிரி”
” பண்ணையாரைப் போலத்தானே பண்ணையாரம்மாவும் இருப்பீங்க. இது தெரியாமல் உங்க கிட்ட வந்து கதைபேசுறேன் பாருங்க” தன் கருத்தையொட்டி பேசாத தாயிடம் முகத்தை திருப்பிக் கொண்டு அந்த இடத்திலிருந்து நகர்ந்து போனான் கிருஷ்ணா. 
***************
 “என்னைக்கும் விட நாம இன்னைக்கு ஐந்து நிமிஷம் லேட்டு, பஸ் போயிருக்குமோ ரகு?” 
சைக்கிளை அதை பாதுகாக்கும் இடத்தில் விட்டுக் கொண்டிருந்த சாருமதி, தன் சைக்கிள் பக்கத்தில் தன்னுடைய சைக்கிளையும் நிறுத்தி பூட்டிக்கொண்டிருந்த தம்பியிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். இடம் மணிமுத்தாறு.
“இன்னைக்கு வர்ற ட்ரைவர் பஸ்ஸை உருட்டத்தான் செய்வார் க்கா. வேணும்னா பாரேன் இனிமேல் தான் பஸ் வரும்” 
பேசிக்கொண்டே இருவரும் பேருந்து நிறுத்துமிடத்தில் வந்து அங்கு நின்றவர்களிடம் குறிப்பிட்ட பஸ்ஸைச் சொல்லி “அது போய்விட்டதா?”என்று கேட்க, அவர்கள்,”இல்லை” என்று சொன்னார்கள்.
“நான் சொன்னேன்ல க்கா” என்று சிரித்த தம்பியோடு சாருமதி தானும் வேலைக்கு போக ஆரம்பித்து கிட்டத்தட்ட இருபது நாட்களுக்கு மேலாக இருக்கும். 
தம்பியோடு என்றால் தங்களுடைய தமிழாசிரியர் வீட்டிலில்லை. திருநேல்வேலியில் ஆசிரியரின் நண்பரின் வீட்டில் தான் சாருமதி வேலை பார்ப்பது.
அக்கா சொன்னது போல் ‘எதற்கும் கேட்டு பார்ப்போமே’ என்று தன் அக்காவின் ஆசையையும் ரகு ஆசிரியரிடம் சொல்ல, உண்மையிலேயே அவரின் நண்பரின் வீட்டுக்கு சாருமதியைப் போன்ற ஒரு சிறு பெண்ணின் உதவி தேவையிருந்தது.
ஆசிரியரின் நண்பர் சதாசிவமும் அவரது மனைவி சுலோச்சனாவும் பாளையங்கோட்டையில் அரசாங்க அலுவலகத்தில் பணிபுரிகிறார்கள். அவர்களின் ஒரே மகன் சென்னையில் பிரபல இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கிறான். 
சதாசிவத்தின் அம்மா ராஜாத்திக்கு கண் ஆப்ரேஷன் சமீபத்தில் தான் செய்திருந்தது. அந்த அம்மா அந்த காலத்து ஆசிரியர்.
பணிஓய்வுக்குப் பிறகு அவருக்கு வாசித்தல் தான் முழுநேர பொழுதுபோக்காம். இப்போது கண் ஆப்ரேஷன் செய்தபிறகு சிறுது நாட்களுக்கு வாசிக்க கூடாது என்று மருத்துவர்கள் கட்டுப்பாடு விதிக்கவே திணறிப் போனார் அந்த வயதானவர்.
மகன், மருமகள் இருவரும் அலுவலகம் சென்ற பிறகு புத்தங்களை தன்னுடைய துணையாக கொண்டு தன் நேரத்தை கழித்த அந்த பெண்மணிக்கு இப்போது தனிமை பூதாகரமாகத் தெரிய தன் பிரச்சினையை மகனிடம் சொன்னார்.
அவர் தனிமையை போக்குவதற்கு யாராவது ஒரு பெண்ணை நியமித்து அவருடனே தாங்கள் வரும் வரை வீட்டில் இருத்தி விட்டுப் போகலாமென்றால் யாரையும் நம்புவதற்கும் பயமாக இருந்தது.
 
 சதாசிவம் தன் பிரச்சினையை தன் நண்பரான ஆசிரியரிடம் சொல்ல அவருக்கு  சாருமதியின் ஞாபகம் தான் வந்தது.

Advertisement