Advertisement

ஒரு உப்புமாவிற்கே சந்தோஷப்படும் தங்கையின் தலையை வாஞ்சையோடு தடவிக் கொடுத்தவளுக்கு ‘தான் ஒரு நல்ல நிலைக்கு வந்து கண்டிப்பாக தன் தம்பி தங்கைகளின் வாழ்க்கைக்கு வழிகாட்ட வேண்டும்’ என்ற எண்ணம் ஆழமாக விழுந்தது மனதில்.
அதன் பிறகு அக்காவின் அனுமதியோடு விளையாடச் சென்றுவிட்டாள் கௌரி.
சிறிது நேரத்திலேயே ரகுராமோடு, காயத்ரியும் வந்து விட கௌரிக்கு கொடுத்தது போலவே இருவருக்கும் காஃபியும் உப்புமாவும் கொடுத்தாள் சாருமதி. 
 கௌரியைப் போலவே மகிழ்வோடு உண்டான் ரகுராம். கூடவே,”நீ சாப்ட்டியா க்கா? அம்மாவுக்கு இருக்காக்கா? இல்லைன்னா இதுல இருந்து கொஞ்சம் எடுத்துக்கோ” என்ற சம்பாஷனையும் ஓடியது தமக்கையிடம்.
ஆனால் காயத்ரியோ,”ம்ஹும்… இதெல்லாம் ஒரு டிபன்னு இவ்வளவு அதகளம் நடக்குது இந்த வீட்டுல” என முகத்தை சுளித்துக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
அவள் செய்கையில் சட்டென்று ரகுராம் க்கு கோபம் வந்தது.”அவ்வளவு கஷ்டப்பட்டு  உன்னை யாரும் சாப்பிடச் சொல்லலை. வேண்டாம்னா வச்சிட்டுப் போ…” என்றவன் விளையாடி முடித்து தன்னருகே வந்து நின்ற கௌரியின் வாயில் ஒருவாய் உப்புமாவை ஊட்டிவிட்டான்.
தன்னை திட்டிய தமையன், தங்கைக்கு ஊட்டிவிட்டதை கண்டதும் ஒருவித பொறாமையில் பொங்கிய காயத்ரி,”உங்களுக்கெல்லாம் என்னைக் கண்டாலே ஆகாது. எப்போ பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருப்பீங்க” சொல்லியவள் கண்களில் அந்த மணிமுத்தாறு அணையையே திறந்து விட்டாள். ‌
ஆனால் கைகளோ கர்மசிரத்தையாக உப்புமாவை அள்ளி வாய்க்கு கொடுத்து கொண்டிருந்தது‌. அவளின் செய்கையில் சிரிப்பு வந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல்
“எதுக்கெடுத்தாலும் உடனே கண்ணை கசக்குற பழக்கத்தை முதல்ல விடு காயத்ரி”  அதட்டிய சாருமதி,” நீ இன்னும் சின்ன பிள்ளை இல்லை டா, கொஞ்சமாவது நம்ம வீட்டு நிலைமையை புரிஞ்சுக்கோ”  தங்கைக்கு கிளிப்பிள்ளைக்கு  சொன்னது போலச் சொல்ல அது எதையும் கேட்க மனமின்றி எழுந்து போனாள் காயத்ரி.
அவளின் செய்கையில் பெருமூச்சு ஒன்றை  வெளியிட்டவள், தம்பியைப் பார்க்க,”விடுக்கா… எல்லாம் அவளுக்கும் புரியிற நாளும் வரும்” என்றவன் 
“க்கா…எனக்கு இன்னும் இரண்டு பரீட்சை தான் பாக்கியிருக்கு”
“ம்ம்…ஆமால்ல…என்னைக்கு முடியுது பரீட்சை”
“வர்ற வெள்ளிக்கிழமையோடு முடியுது க்கா” என்றவன் தயங்கியபடியே,”க்கா…” என்றழைக்க
“என்னடா?”
“இந்த வெக்கேஷன் லீவ்ல வேலைக்கு போகலாம்னு முடிவெடுத்திருக்கேன்”
“இதென்னடா? நீ ஏதோ இப்பதான் புதுசா வேலைக்கு போற மாதிரி எங்கிட்ட சொல்லுற. ஸ்கூலுக்கு போய்ட்டு இருக்கும் போது கூட லீவ் நாள்ல யார் வேலைக்கு கூப்பிடாலும் நீ போய்டுவியே தம்பி” குரல் உணர்ச்சிவசப்பட்டு கொஞ்சம் கம்மியது. 
ஆமாம்… விடுமுறை நாட்களில் இன்னது தான் என்றில்லாமல் கூப்பிட்ட வேலைகளுக்கெல்லாம் போவான் ரகுராம். அது கிராமம் என்பதால் விவசாய வேலைகளே அதிகமாக இருக்கும். 
அதன் மூலம் வரும் வருமானத்தை தாயிடம் கொடுத்து தன்னால் இயன்ற அளவுக்கு தாயின் பாரத்தை குறைக்க முயற்சி செய்வான் ரகுராம்.
“ப்ச்ச்… எல்லாம் நாம படிச்சு முடிச்சு ஒரு வேலைக்கு போற வரைக்கும் தான் க்கா இந்த கஷ்டம். அப்புறம் நாமளும் நல்லா இருப்போம் பாரு” நம்பிக்கையோடு சொன்னவன்,
“இந்த லீவ்ல நம்ம தமிழ் சார் அவருக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாமான்னு எங்கிட்ட கேட்டாருக்கா.”
“யாரு? திருநெல்வேலியிலிருந்து வருவாரே அவரா!”
“ம்ம்…ஆமா க்கா”
“என்னவாம்?”
“சார் ஏதோ புக் எழுதுறாங்களாம். அதை பேப்பர்ல எழுதி வச்சிருக்காங்களாம். அதையெல்லாம் கம்ப்யூட்டர்ல டைப் பண்ணி தரமுடியுமான்னு கேட்டாங்க க்கா…கூடவே அவங்க வீட்ல பெருசா லைப்ரரி ஒன்னும் அவங்க யூஸ் பண்ணுறதுக்கு வச்சிருக்காங்களாம். அதுல உள்ள புக்ஸ்ஸையும் சரியாக செல்ஃப்ல அடுக்கி இன்டெக்ஸ் போட்டு குடுக்க முடியுமான்னு கேட்டாங்க க்கா”  சொன்னவன் அதற்கு சம்பளமாக அந்த ஆசிரியர் தருவதாகச் சொன்ன தொகையைச் சொல்ல 
“டேய்…ரகு… உண்மையிலேயே சார் அவ்வளவு குடுக்கேன்னு சொன்னாங்களா? ஆனால் உனக்கு கம்ப்யூட்டர் டைப்பிங் தெரியுமா என்ன?”
“அதெல்லாம் ஜுஜுபி மேட்டர் க்கா இந்த ரகுக்கு” அக்காவின் சந்தோஷம் தம்பியிடமும் தொற்றிக்கொள்ள சிரித்தபடியே சொன்னவன்
“பத்தாம் கிளாஸ் லீவ்ல, மணிமுத்தாறுல, ஒரு கம்ப்யூட்டர் சென்டர்ல, ஸ்காலர்ஷிப்ல கோர்ஸ் சொல்லிக் குடுக்குறாங்கன்ன உடனே உன் தம்பி டெய்லி ஒரு மணி நேரம் ஓடி ஓடி போய் படிச்சிட்டு வந்தானே, அத மறந்துட்டியா?” சிரித்தமுகமாக பயங்கர ஏற்ற இறக்கத்தோடு சொன்ன தம்பியின் தோள்களில் லேசாக தட்டியவள்
“எனக்கும் இதேமாதிரி ஏதாவது வேலை இருந்தா சார் கிட்ட சொல்லி வாங்கித்தாடா, நானும் இந்த லீவுல வேலைக்கு போறேன்” என்றாள் ஆவலாக.
” நீ ஏன் க்கா?”
“இல்லடா… இந்த லீவ்ல நானும் ஏதாவது கொஞ்சம் சம்பாதிச்சு அம்மா கிட்ட குடுத்தால் அடுத்து ஸ்கூல், காலேஜ் திறக்கும் போது அவங்களுக்கு ஈசியா இருக்கும்ல”
“ம்ம்…கேட்டுப்பாக்குறேன் க்கா…” ரகு சொல்லிக் கொண்டிருக்கும் போதே,”என்னடா கேட்டுப்பாக்கப்போற?”
என்ற கேள்வியோடு அவன் பக்கத்தில் வந்து அமர்ந்தார் அவர்களின் அம்மா‌. முகம் ஏனோ இன்று அதிகப்படியான சோர்வைக் காட்டியது.
அம்மாவின் கேள்விக்கு ஏற்கெனவே தாங்கள் பேசியதைப் பற்றி கூறியவர்கள் தாங்கள் வேலைக்கு போவதற்கு அனுமதியும் கேட்டனர். 
“ம்ம்… போகலாம்… ஆனால் அதுக்கு முன்னாடி ஒரு வாரம் எங்கூட கொஞ்சம் பண்ணையார் வீட்டுக்கு ஹெல்ப் க்கு வாயேன் சாரு”
“என்னம்மா…”
எதிர்பாராத நேரத்தில் தௌசண்ட் வாலா பட்டாசை நம் பக்கத்தில் கொளுத்திப் போட்டால் எப்படி பதறிப்போவோமோ அப்படி ஓரு பதட்டம் சாருமதியிடம்.
‘ம்மா… எனக்கு நீயே அங்க வேலைக்கு போறதுல உடன்பாடு இல்லை. இதுல என்னையும் அங்க கூப்பிடுறியேம்மா?’ மனம் ஊமையாய் அழுதது.
முன்பெல்லாம் சாரு இப்படி யோசித்தது இல்லை. ஆனால் என்றைக்கு கிருஷ்ணா அப்படி ஒரு வார்த்தையைச் சொல்லி இவள் மனதை புண்படுத்தினானோ அன்றிலிருந்து அவனைக் காணும் போதெல்லாம் நெருப்பின் மீது நிற்கிறது பெண்.
“படிக்கிறப் பிள்ளையை வீட்டு வேலைக்கு கூப்பிடக் கூடாதுன்னு எனக்கும் புரியுது சாரு. ஆனால் இந்த கையை வச்சுகிட்டு என்னால ஒரு நாலஞ்சு நாளைக்கு ஒன்னும் பண்ண முடியாதே. அதனாலத் தான் உன்னை கூப்பிடுறேன்” என்றபடியே தீப்புண்ணால் சிவந்து கொப்பளித்திருந்த தன் வலது கையை பிள்ளைகளிடம் காட்ட
பார்த்த பிள்ளைகள் இருவரும் பதறிப்போய்,”எப்படி ம்மா?” என்று ஒரே குரலில் கேட்டார்கள்.
“சமைக்கும் போது சூடான எண்ணை கைதவறி கொட்டிடிச்சி. ஆனால் நல்லவேளையா இப்படி நடந்தா உடனே ஐஸ் வைக்கணும்னு சாரு சொன்னது ஞாபகம் வந்ததோ நான் தப்பிச்சேன்.” ஐஸ் வைத்ததால்  ஓரளவுக்கு தோல் கொப்பளிப்பதிலிருந்து தப்பித்திருந்த தன் கையை பார்வையிட்டபடியே பேசினார் கல்யாணி.
தோல் கொப்பளிப்பதிலிருந்து தப்பித்திருந்ததேயொழிய வலியிலிருந்தல்ல. வலியால் கையை தூக்கி வாயால் காற்றை ஊதிக்கொண்டிருந்தவரின் கைக்கு மயிலிறகால் மருந்திட்டு கொண்டிருந்த அக்காவை பார்த்துக் கொண்டே,”நீங்க ஒருவாரம் லீவ் போட்டுவிட வேண்டியது தானே ம்மா. அதுக்காக ஏன் அக்காவை அங்க கூப்பிடுறீங்க”
அன்னையின் பிரச்சினைக்கு எளிதாக தீர்வு சொல்லிவிட்டோம் என்ற பாவனையில் மகன் இருக்க,
“ஆமா…அம்மா பாக்குறது அரசாங்க வேலைப்பாரு, அதனால உடனே லீவ் எடுத்துரலாம். அடப்போடா… ஒருவாரம் நான் போகாமல் மறுவாரம் போகும் போது வேற ஒரு ஆள் நம்ம இடத்தில நிக்கும். நாம வேலையில்லாமல் தெருவுல தான் நிக்கணும்” நிதர்சனத்தை புரிந்தவராய் பேசினார் கல்யாணி.
தான் இவ்வளவு சொல்லியும் கூட வருகிறேன் என்று சொல்லாமல் அமைதியாக உட்கார்ந்திருக்கும் மகளைப் பார்த்து,”வேலையில உசந்த வேலை தாழ்ந்த வேலைன்னு எதுவும் இல்லை ம்மா. அப்பா போன பிறகு நம்ம ஐந்து பேருக்கும் வயிறு வாடாமல் சோறு போட்ட இந்த வேலை தான் என்னைப் பொருத்தவரை உசந்தவேலை. பொய் சொல்லாமல், களவெடுக்காமல் செய்யுற எந்த வேலையும் என்னை பொருத்தவரை உசந்த வேலை தான்” சொல்லியபடியே இனி முடிவு உன் கையில் என்பது போல எழுந்து வீட்டினுள்ளே சென்றார் கல்யாணி.
************************
மறுநாள் அம்மாவின் வழக்கமான நேரத்துக்கு அவர்கூடவே பண்ணையார் வீட்டுக்கு வந்திருந்தாள் சாருமதி. 
பிரம்மாண்டமான அந்த மாளிகையின் பின்கட்டில் தான் சமையலறை என்பதால் எப்போதும் பின்பக்கமாகவே சமையலறைக்கு வருவார் கல்யாணி.
இன்றும் வழக்கம் போல அவர் வர, அதுவே சாருமதியின் மனதில் ஒரு வலியை உண்டாக்கியது.
 ஆனாலும் அம்மா நேற்று சொன்ன வார்த்தைகளை மந்திரம் போன்று மனதில் உறுபோட்டுக் கொண்டு எந்த வித உணர்ச்சிகளையும் முகத்தில் காட்டாமல் தாய் சொல்லச்சொல்ல அதன்படியே அடுப்பில் நின்று சமைத்துக் கொண்டிருந்தாள் சாருமதி.
சமையல் அவளுக்கொன்றும் புதிதல்ல. தன் தாய் வர பிந்தும் நாட்களில் அவள் தானே பள்ளி விட்டு வந்து சமைப்பது.
சிறிது நேரத்தில் சமையலறைக்குள் நுழைந்த வேதவல்லி அங்கு நின்ற சாருமதியைப் பார்த்து யோசனையுடனே,”கல்யாணி! இவ உன் மூத்த பொண்ணுல்ல,  இவளுக்கு இங்க என்ன வேலை?” என்று படபடவென்று கேட்க
கல்யாணி தன் கையைக் காட்டி,”நேத்து சமைக்கும் போது எண்ணெய் கொட்டிடிச்சி மா. அதான் எம்பொண்ணை ஒத்தாசைக்கு கூட்டிட்டு வந்தேன்” என்றார் பவ்யமாக.
“நீ சமைக்காமல், சமையலை அவகையில குடுத்து சாப்பாடை ருசியில்லாமல் செய்துராத. அப்புறம் எம்புள்ளை சாப்பிட மாட்டேன்னு சொல்லிடப் போறான்”
சொல்லியபடியே சாருமதியை நன்றாக பார்வையிட்டார்.
 இத்தனைக்குப் பிறகும் ஏதோ மலை உளுங்கி மகாதேவி போல எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் நின்று சமைத்துக் கொண்டிருந்த சாருமதியை பார்த்தவர்
“அப்படியே கிச்சனையும் கிளீன் பண்ணி பாத்திரத்தையும் கழுவி கமத்திடச் சொல்லு உம்பொண்ணை” என்று சொல்லியவரின் உள்ளமோ தன்மகனை தோற்கடிக்கும் பெண்ணை தான் தண்டித்து விட்டது போலவே மகிழ்ந்தது.
****************
பின்கட்டுக்கு வெளியே கிடந்த தண்ணீர் தொட்டிக்கு பக்கத்தில் உட்கார்ந்து தன் முன்னால் குவிந்து கிடந்த பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்த சாருமதியின் காதுகளில் அன்று கிருஷ்ணா சொன்ன பழமொழியே திரும்பத் திரும்ப ஒலித்தது.
‘ம்ஹும்…அவன் சரியாத்தான் சொல்லியிருக்கிறான். நம்ம தான் நம்ம நிலைமைத் தெரியாமல் துள்ளியிருக்கோம்’ இன்று ஒரு நாளிலேயே தன் மொத்த நம்பிக்கையும் தரைதொட, இட்ட வேலையை செய்து கொண்டிருந்தாள் சாருமதி.
 அவள் சிந்தனையை அருகில் கேட்ட கைதட்டல் தடைசெய்ய, நிமிர்ந்து பார்த்தாள் பெண். இதழ்களில் ஏளனச்சிரிப்போடு கைதட்டியபடி கிருஷ்ணா நின்று கொண்டிருந்தான்.
“வாவ்! என்ன ஒரு அருமையான காட்சி! பாத்திரத்தோடு பாத்திரமா உன்னை பார்க்கும் போது எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா? இது…இது தான் உன்னோட இடம். எங்கம்மா கிட்ட சொல்லி இந்த வேலையிலேயே உன்னை பெர்மணன்ட் பண்ணட்டுமா?” 
ஏளனமாகக் கேட்டவனின் குரலில் ‘ஒரு அற்புத சக்தியால் அந்த இடத்திலிருந்து தான் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து போகமாட்டோமா?’ என்று தவித்துப் போனாள் சாருமதி.
இன்னும் கொஞ்ச நேரம் கிருஷ்ணா நின்றிருந்தால் என்ன பேசியிருப்பானோ தெரியாது. ஆனால் அதற்குள்,”கிருஷ்ணா…” என்று அழைத்துக் கொண்டே வந்த பண்ணையார், சாருமதியை கண்டதும் தன் மகனை அழைத்த காரியம் மறந்து” நீ கல்யாணி அம்மாவோட பொண்ணு சாருமதி தானே ம்மா” என்று கேட்க
இவ்வளவு நேரமும் தலையைக் குனிந்திருந்த பெண் மெதுவாக நிமிர்ந்து”ஆமாம்” என்பதாய் தலையாட்டியது.
அவ்வளவு தான்,”கல்யாணி… கல்யாணி…” என்று கத்திய கத்தலில் முதல் கட்டில் நின்று தன்னால் முடிந்த வேலை செய்துகொண்டிருந்த கல்யாணி அடுத்து பிடித்து ஓடிவந்தார்.
வந்தவரிடம்,” இப்படி படிக்கிற பிள்ளையை வீட்டு வேலை செய்ய கூப்பிட்டுட்டு வரலாமா?” என கேட்டவரிடம் கல்யாணி பயந்து கொண்டே தன்கையை காட்டியபடி மகளைக் கூட்டி வந்த காரணம் சொல்ல
“இதெல்லாம் வந்த உடனே வேதா கிட்ட சொல்லவேண்டாமா?” என்றவர், 
கணவரின் சத்தம் கேட்டு இங்கு வந்து நின்ற வேதவல்லியிடம்,”ஏன்மா? படிக்கிற பிள்ளையைப் போய் வீட்டு வேலை செய்ய கூட்டிட்டு வந்துருக்காங்க.இதெல்லாம் நீ கவனிக்கிறதில்லையா?” என்று குறைபட்டுக் கொண்டே,
“படிக்கிற பிள்ளைங்க சரஸ்வதிக்கு சமம்… நீயெல்லாம் இந்த வேலை செய்யவரக் கூடாது ம்மா… போ…போய் படிக்கிற வேலையை மட்டும் பாரு” என்று சொன்ன மனிதரை விழிவிரித்து நன்றி ததும்ப பார்த்தாள் சாருமதி.
அந்த கண்கள் இரண்டும் கண்ணீரால் நிரம்பியிருக்க கண்ணீர் முத்துக்களோ,’இதோ இப்போது நான் விழுந்து விடுவேன்’ என்று பயங்காட்டிக் கொண்டு நின்றது.
“கல்யாணி! நீங்களும் ஒருவாரம் பத்துநாள் லீவ் போட்டுட்டு புண் நல்லா ஆறுனதுக்குப் பிறகு வேலைக்கு வாங்க” சொல்லியபடியே தன் சட்டைப்பையிலிருந்து ரூபாயை எடுத்து, மனைவி கையால் கல்யாணி மறுக்க மறுக்க குடுக்க வைத்த மனிதர் மகானாகத் தெரிய,
 விறுவிறுவென அந்த மாளிகையை விட்டு வெளியேறத் தொடங்கினாள்சாருமதி.

Advertisement