Advertisement

சாருமதி
அத்தியாயம் 03
ஹேய்…. என்ற உற்சாகக் குரலோடு தேர்வு அறைகளை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தார்கள் மாணவ மாணவிகள்.
ஒருசிலர் கையிலிருந்த வினாத்தாளை தூக்கியெறிந்து பட்டமாகப் பறக்கவிட இன்னும் ஒரு சிலரோ தங்கள் பேனாக்களில் இருந்த மையால் நண்பர்களின் சட்டைகளில் மாடர்ன் ஆர்ட் வரைந்தார்கள்.
வேறொன்றுமில்லை, இன்றோடு பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நிறைவுபெற்றன. இவ்வளவு நாளும்  பொதுத்தேர்வு என்ற தளையால்  கட்டப்பட்டிருந்த மாணவர்கள் பரீட்சை முடியவும், ஏதோ சுதந்திரக் காற்றை சுவாசித்தது போல குதூகலித்துக் கொண்டிருந்தனர்.
ஒவ்வொருவரும் அவரவர் நண்பர்களோடு குழுக்களாக நின்று பேசியபடி இருக்க சாருமதி பக்கத்து தேர்வு அறையிலிருந்து வெளியே வரும் தேன்மொழிக்காக காத்துக்கொண்டு நின்றாள்.
தோழி வரவும் அவளோடு இணைந்து நடந்தபடியே,”பெல் அடிச்சபிறகும் பயங்கரமா எழுதிட்டு இருந்த…அப்போ சென்டம் தான்னு சொல்லு”  சாருமதி கிண்டலடிக்க
“ஹேய்…இது சென்டம் வாங்குற மூஞ்சி மாதிரியா டி இருக்கு?” 
“ஏன்? இந்த மூஞ்சிக்கு என்ன குறைச்சலாம்? நல்லா படிச்சா யார் வேணும்னாலும் சென்டம் வாங்கலாம்” என்று தோழிக்குச் சொன்னவள்
“தேனு…அடுத்ததா என்ன பண்ணப்போற? காலேஜ்க்கு போவதானே?” என்று கேட்டாள்
“எனக்கும் காலேஜ்க்குப் போக ஆசை தான் சாரு. கண்டிப்பா மார்க்கெல்லாம் கூட ஓரளவுக்கு நல்லாதான் வரும். ஆனால் எங்க வீட்ல ஏதோ என்னை ஒரு சுமையாவே நினைச்சு இறக்கி வைக்கவேப் பாக்குறாங்க” சொன்ன தோழியை குழப்பமாக சாருமதி பார்க்க
“அதான்மா… கல்யாணம் பண்ணி வீட்டை விட்டு அனுப்பி வச்சிடலாமான்னு பிளான் போடுறாங்க. அதுலயும் என் அண்ணன்காரன் இருக்கான் பாரு, படுபாவி… என்னைக் கல்யாணம் பண்ணி குடுத்து, அவன் ரூட்டை கிளியர் பண்ணுறதுலயே குறியா இருக்கான்.”
“என்னது! இப்பவே கல்யாணமா!” தோழியின் பேச்சில் பதறியவள்,”நீ வாயத்தொறந்து அப்பாகிட்ட ஒரு டிகிரியாவது முடிச்சுக்குறேன் ப்பான்னு சொல்லு தேனு.
கண்டிப்பா அப்பா புரிஞ்சுக்குவாங்க.”
“ம்ம்… நானும் அப்படித்தான் நினைச்சுருக்கேன் சாரு. என்ன நடக்குதுன்னு பாக்கலாம்” என்றவள் 
“சாரு! ரொம்ப நாளாக எனக்கு ஒரு சந்தேகம், நல்லா படிக்கிற பசங்களை பாத்த உடனே இவங்க  படிப்ஸ்னு தெரியிற மாதிரி எப்பவுமே ஒரு ஒளிவட்டம் அவங்க தலைக்கு பின்னாடி சுத்துதே! அதெப்படி?” 
“ம்ஹும்…என்ன சுத்தி என்ன பிரயோஜனம் தேனு? நாம விரும்புறதை படிக்கவும் ஒரு அதிஷ்டம் வேணும்” சாருமதியின் இதழ்களில் விரக்தி சிரிப்பு வழிந்தது.
சாருமதியின் வார்த்தையில் இருந்த வேதனை ஒரு தோழியாக தேன்மொழிக்கு புரியத்தான் செய்தது. ‘இந்த கிருஷ்ணாவைப் போல தன்  வீடும்  வசதியாக இருந்திருந்தாலாவது தன் தோழிக்கு ஏதாவது உதவி செய்திருக்கலாம். ஆனால் தன் நிலைமையும் தோழிக்கு  உதவி செய்யுமளவிற்கு இல்லையே?’ உள்ளுக்குள் வருந்தியவள்
“கவலப்படாதடி…கண்டிப்பா நீ ஆசைப்பட்ட மாதிரியே மெடிசின் படிச்சிருவ” என்று தோழிக்கு ஆறுதல் மொழி சொன்னாள்…
“அப்புறம் உனக்கொன்னு தெரியுமா சாரு! அடுத்த வருஷத்துல இருந்து டாக்டருக்கு படிக்குறதுக்கு நீட் எக்ஸாம் கட்டாயமாகப் போகுதாம்.  நேற்று நியூஸ்ல சொன்னாங்க தெரியுமா?”
“ம்ம்…நானும் பார்த்தேன் ப்பா…”
பேசிக்கொண்டே வந்தவர்கள் தேர்வு அறைகள் இருக்கும் ப்ளாக்கை விட்டு வெளியே வர எதிரில் அவர்களுடைய வகுப்பாசிரியர் கிருஷ்ணாவிடமும் தனாவிடமும் பேசிக்கொண்டு நின்றிருந்தார்.
அவரை கடந்து செல்ல முடியாமல் அவர் அருகில் வந்ததும் இருவரும் மெதுவாக அவரை வணங்கி நிற்க, அவர்களிடமும் “அடுத்ததாக என்ன படிக்கப்போறீங்க?” என்ற கேள்வியை முன்வைத்தார் ஆசிரியர்.
“நல்ல மார்க் வந்திச்சின்னா டாக்டருக்கு படிக்கணும்னு ஆசையாக இருக்கு சார்” என்ற சாருவின் பதிலில் ஆசிரியர் முகம் மலர்ந்து பாராட்ட, அங்கு நின்ற கிருஷ்ணாவின் இதழ்களோ ஏளனத்தில் வளைந்தன.
சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு தன் மாணவர்களின் எதிர்கால முயற்சிக்கு வாழ்த்துகளைச் சொல்லி ஆசிரியர் நகர,”தனா…” என்றழைத்த கிருஷ்ணா,”ஆசை இருக்கு தாசில் பண்ண, ஆனால் அதிஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க. இப்படி ஒரு பழமொழி இருக்கு, அதை நீ கேட்டுருக்கியா டா”  எப்போதும் போல வேண்டுமென்றே சத்தமாகக் கேட்டான்.
கிராமத்து மாணவர்களுக்கு பழமொழியா தெரியாது? தனாவுக்கு மட்டுமல்ல பெண்கள் இருவருக்குமே அந்த பழமொழி மட்டுமல்ல அதன் பொருளும் கூட நன்கு தெரியும். 
கூடவே அந்த பழமொழி இப்போது எதற்காக? யாருக்காக? 
சொல்லப்பட்டது என்பதும் தெரிய, தனா பதறியவனாக,”மாப்ள… வேணாம் டா” என்று கிருஷ்ணாவின் கைகளைப் பிடித்தான். 
அவனுக்கு அன்றே சாருமதியை பார்த்து,’எங்க வீட்டு மிச்ச சாப்பாடு சாப்பிடுறா’ என்று கிருஷ்ணா சொன்ன வார்த்தைகளில் உடன்பாடில்லை. 
அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அவள் முகம் காட்டிய சோகம் இன்னமும் அவன் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. அதனாலேயே அப்படி எதுவும் இன்று நடந்து விடக்கூடாது என்று அவன் பதறுகிறான்.
 ஆனால் எந்த பதட்டமுமே இல்லாமல் தேன்மொழி,”சாரு… அந்த அன்பு தெய்வத்தின்(பண்ணையார்) மகனா இவன்?” என்று நக்கலாகக் கேட்க
 தன் தோழி உடனிருக்கும் தைரியத்தில்,
“இல்லை…இல்லவே இல்லை…” என்று சாருமதி பின்பாட்டு பாடினாள். பின்னே எத்தனை நாள் தான் குட்டக் குட்டக் குனிவதாம்?
தான் சாருமதியை நோகச்செய்து விடவேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு பழமொழியைச் சொன்னால்  தன்னையே ‘தெய்வமகன்’ படப்பாடலில் வரும் டயலாக்கை சற்றே மாற்றிப் போட்டு பெண்களிருவரும் கலாய்த்துவிட,”ஏய்…என்ன திமிரா?” என்று சாருமதியை உறுத்து விழித்தபடியே அடிக்குரலில்  தேன்மொழியிடம் உறுமினான் கிருஷ்ணா.
“ஏன்? அது உனக்கு மட்டும் தான் இருக்கணுமா?” சற்றும் அசராமல் பதில் சொன்ன தேன்மொழியைப் பார்த்து   
“ச்சீ…நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளேயில்லை…” என்று முகம் சுழித்தான் கிருஷ்ணா.
“இல்லல்ல… அப்புறம் ஏன் இங்க நிக்குற..போ…” என்று ஜெயம் பட நாயகியைப் போல கையை நீட்டியபடி நின்றாள் தேன்மொழி.
“உன்னை…” 
“என்னை…ஒன்னுமே நீ செய்யமுடியாது கிருஷ்ணா. ஏன்னா இது ஸ்கூல், உன் வீடில்ல” என்றவள்,”நீ வாடி” என்று சாருமதியை இழுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
இவை அத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த தனாவுக்கு,’ இது கிருஷ்ணாவிற்கு தேவையில்லாத விஷயம் என்றே தோன்றியது.’ ஆனால் எடுத்துச் சொன்னால் அவன் கேட்கவும் போவதில்லை என்பதால்  வாளாதிருந்தான்.
தன்னை ஒரு பொருட்டாக மதிக்காமல் வார்த்தைக்கு வார்த்தை மரியாதையில்லாமல் பேசிய தேன்மோழியின் வார்த்தைகளில் உள்ளுக்குள்ளே ஒரு எரிமலையே வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தது கிருஷ்ணாவிற்கு.
‘இந்த தேன்மொழி கூட இருந்தா, அந்த புள்ளபூச்சிக்கெல்லாம் கூட கொடுக்கு முளைச்சிடுது. என்னைக்காவது ஒருநாள் எங்கிட்ட வசமா மாட்டுவீங்க, அன்னைக்கு இருக்குது உங்க ரெண்டு பேருக்கும்’  மனதுக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டவன் வேறுவழியில்லாமல் எல்லையில்லா எரிச்சலோடு மேலே நடக்க
சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு செல்லும் வழியில் நின்று கொண்டு,”கிருஷ்…” என்று அழைத்தாள் மிருதுளா. அந்த பால் வடியும் முகத்தில் இன்று சோகம் டன்டன்னாக வழிந்து கொண்டிருந்தது.
அவளை அங்கு கண்ட கிருஷ்ணா,’இவ வேற நேரம் கெட்ட நேரத்தில வந்து நின்னுட்டு… சரியான இம்சை’ என்று எரிச்சல்பட்டவன்,”என்ன?” என்றான் வார்த்தையில் கடுமையைக் கொண்டு வந்து
ஏற்கனவே ‘இனிமேல் கிருஷ்ணாவை பார்க்க முடியாதே’ என்ற கவலையில் வந்த பெண்ணுக்கு அவனின் கடுமையான முகம் ஏமாற்றத்தைக் கொடுக்க சரசரவென்று கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.
மிருதுளா அழுதால் இப்போது தேவையில்லாத சூழ்நிலை உருவாகிவிடும் என்பதை சட்டென்று உணர்ந்து கொண்ட கிருஷ்ணா,”என்ன மிருதுளா?” என்று வரவழைத்துக் கொண்ட மென்மையான குரலில் கேட்டான்.
அந்த அப்பாவியோ,”இனிமே நாம பாத்துக்கவே முடியாதா கிருஷ்…” என்று சோகமயமாக கேட்க, அந்த இடத்தை விட்டு சென்று விடவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவன்
“ஏன் முடியாது?” என்று கேட்டபடியே, அவள் கையிலிருந்த நோட்டை வாங்கி அதில் வேகவேகமாக தன்னுடைய வீட்டு விலாசத்தை எழுதி அதன் கீழே அவன் கையெழுத்தையும் போட்டு,”இதே அட்ரஸ்ல தான் நான் எப்பவும் இருப்பேன். நீ தாராளமா எப்போ வேணும்னாலும் என் வீட்டுல வந்து என்னைப் பார்க்கலாம்” என்று லேசான சிரிப்போடு அதை மிருதுளாவின் கையில் வைத்தான்.
அவன் கைகளால் எழுதிய விலாசத்தை தன் விரல்களால் தடவிக்கொடுத்த அந்த பேதை,” தேங்யூ…அண்ட், ஆல் தி பெஸ்ட் கிருஷ்” சொல்லியபடி மனமேயில்லாமல் நகர்ந்தாள்.  
கிருஷ்ணா மிருதுளாவுடன் பேச ஆரம்பித்த உடனேயே சற்று தள்ளிப் போய் நின்றுகொண்ட தனா, தன்னருகே வந்த நண்பனிடம்,”என்ன கிருஷ்ணா…கமிட் ஆகிட்டியோ?” என்று கேட்க
 “கமிட்…. ஹஹஹ…யாரு நானா? அதுவும் இந்த பொண்ணு கூடவா? ஹஹஹ…நல்ல ஜோக்” என்றபடியே நண்பனின் வயிற்றில் விளையாட்டாக குத்தியவன்,”இது கமிட் ஆகுற வயசாடா எனக்கு?” என்று அதிபுத்திசாலியாக கேள்வியையும் கேட்டு வைத்தான்.
“என்னடா சொல்லுற? அப்போ ஏன் அந்த பொண்ணோட ஆசையை என்கரேஜ் பண்ணுற மாதிரி அவகூட பழகுன?”
“ஏய்…நிறுத்துடா…  விட்டா எங்க இரண்டு பேருக்குமிடையில தெய்வீகக் காதல் கரைபுரண்டு ஓடிச்சின்னு நீயே சாட்சி சொல்லிடுவ போலயே.” 
“அப்போ இல்லையா?”
“இல்லை என் மங்குணி மந்திரியாரே”
“அப்போ…”
“அப்போ ஏன் அந்த பொண்ணோட பேசுன, பழகுன? இதானே உன் கேள்வி?”
“ஆமாம்” என்பதாய் தனா தலையாட்ட
“ஒட்டு மொத்த ஸ்கூலே அவ பின்னாடி அலையும் போது, நம்ம ஊரு பொண்ணுங்களை மாதிரி சுமார் மூஞ்சி சுந்தரியா  இல்லாத அவ, எம்பின்னாடி வந்தது எனக்கு பிடிச்சிருந்தது. எனக்கும் ஒரு எண்டர்டெயின்மெண்ட் வேண்டாமா? அதான்…” என்று எளிதாகச் சொல்லி சிரித்த கிருஷ்ணாவை வெறித்து பார்த்தான் அந்த உண்மைத் தோழன்.
தனஞ்செயனுக்கும் இந்த வயதிலேயே தன் நண்பன் காதலில் விழுவதிலெல்லாம் உடன்பாடு இல்லை தான். 
‘ஆனாலும் இவ்வளவு தெளிவான எண்ணமுள்ளவன் ஆரம்பத்திலேயே அந்த பெண்ணின் ஆசைகளைத் தூண்டி விடுபவன் போல அவளிடம் நடந்துகொண்டிருக்க வேண்டாமே!’ என்ற எண்ணமே அவனிடம்.
தன் பதிலால் நண்பனின் முகம் கசங்கியதைக் கண்டு கொண்டவன்,”விட்றா…விட்றா…அவளே இன்னும் கொஞ்ச நாளுல என்னை மறந்துடுவா… நீ வேணும்னா பாரேன். இதெல்லாம் இந்த வயசுல வர்ற சின்ன சின்ன க்ரஸ்… அவ்வளவு தான் தனா. இதுக்கு இவ்வளவு முக்கியத்துவம் குடுத்து நீ எங்கிட்ட இப்படி மூஞ்சியைத் தூக்காத மச்சி”
நண்பனின் பதிலில்,’ஒருவேளை அப்படித்தானோ?’ என்ற சிந்தனை எழ அமைதியாக நடந்தான் தனஞ்செயன்.
**********************************
பரீட்சை முடிந்து வீட்டுக்கு வந்திருந்த சாருமதி எப்போதும் தன் அம்மா சாவியை வைத்து விட்டு செல்லுமிடத்திலிருந்து வீட்டுச்சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே வந்தாள்.
சின்னதாக ஒரு ஹால், சின்னகிச்சன், ஒற்றை   படுக்கையறை என்று கைக்கு அடக்கமாக வீடு சிறியதாகவே இருந்தது. 
சமையலறைக்குள் வந்த சாருமதி வயிறு பசிக்கவே, மிச்சம் இருந்த காலை உணவான உளுந்தங் கஞ்சியைத் தேங்காய்த் துவையலை வைத்து குடித்துவிட்டு பாயைவிரித்து படுத்து அசந்து உறங்க ஆரம்பித்தாள். 
பரீட்சை தொடங்கிய நாள் முதலாக கூடுதல் நேரம் கண்விழித்து படித்த அயர்ச்சி எல்லாம் சேர்ந்து சாருமதியை அமைதியான நித்திரைக்குள் இழுத்துச் சென்றது.
சாருமதியின் அம்மா கல்யாணி காலையில் எட்டு மணிக்கு போல் பண்ணையார் வீட்டுக்கு வேலைக்கு போனாரானால் சாயங்காலம் ஆறு மணிக்கு பிறகே வீட்டுக்கு திரும்பி வருவார்.
ஒருசில நாட்களில் மட்டும் நடுவில் வந்து சாயங்காலம் பள்ளி விட்டு வரும் பிள்ளைகளுக்கு ஏதாவது சமைத்து வைத்து விட்டு போவார்.
ஒரு நான்கு மணிபோல எழுந்தவள் சமையலறையில் கொஞ்சம் போல இருந்த ரவையை வறுத்து இருந்த ஒரே ஒரு கேரட்டுடன் பச்சைமிளகாய், பெரிய வெங்காயம் எல்லாம் சேர்த்து  ரவா உப்புமா செய்து பாலில்லாத கறுப்பு காஃபியும் போட்டு வைத்து விட்டு வாசல் திண்ணையில் வந்து உட்கார்ந்திருந்தாள்.
சிறிது நேரத்திலேயே தெருவில் பள்ளி முடிந்து செல்லும் பிள்ளைகளின் ஆரவாரம் கேட்க ஆரம்பித்து விட்டது. ‘அப்படின்னா இப்போ கௌரி வந்துடுவா’ என்று தன் குட்டி தங்கை வரும் பாதையையே பார்த்துக் கொண்டிருந்தாள் சாருமதி. கௌரி உள்ளூரிலேயே ஐந்தாவது படிக்கிறாள்.
பக்கத்து வீட்டு பிள்ளைகளோடு வந்து கொண்டிருந்த கௌரி தன் வீட்டுக்கு முன்னால் அக்கா உட்கார்ந்திருப்பதை கண்டதும்,”அக்கா…” என்று அழைத்துக்கொண்டே ஓடிவந்து சாருமதியைக் கட்டிக்கொண்டு நின்றாள்.
பெரும்பாலான நாட்களில் இந்த குட்டிப்பெண்ணே சாயங்காலம் அவர்கள் வீட்டில் முதலாவதாக வரும் நபர்.
இன்று அவ்வாறு இல்லாமல் தன் பிரியத்துக்குரிய அக்கா வீட்டில் இருக்கவும் நிரம்பவே சந்தோஷமாக இருந்தது கௌரிக்கு. 
வழக்கம் போல வீட்டுக்கு பின்பக்கம் இருந்த தண்ணீரில் முகம் கைகால் கழுவிவந்த தங்கைக்கு ரவா உப்புமாவை ஒரு சின்ன பாத்திரத்தில் வைத்துக் கொடுத்தவள், காஃபியை சரியான பதத்தில் ஆற்றி தங்கையின் கையில் கொடுத்தாள்.
என்றைக்குமில்லாத விதமாக இன்று வந்தவுடன் சூடாக காஃபியும், உப்புமாவும் கிடைக்க,  சாப்பிடும் போது இடையிடையே,”ரொம்ப நல்லாயிருக்கு க்கா… ரொம்ப நல்லாயிருக்கு க்கா…”என்று முகம் சந்தோஷத்தில்  மின்ன  சொல்லிக்கொண்டே சாப்பிட்டு முடித்தாள் கௌரி. 

Advertisement