Advertisement

மருத்துவமனையின் தரம், சுத்தம், குறைந்த கட்டணத்தில் நிறைவான சிகிச்சை என்ற கோட்பாடுகள் மக்களை ஈர்க்க, நறுந்தேன் அடங்கிய மலரை ஓயாது மொய்க்கும் தேனீக்கள் போல மருத்துவமனையில் எப்போதும் கூட்டம் குவிந்த வண்ணமே இருக்கிறது. 
சாருமதியின் கல்லூரி கால மருத்துவ நண்பர்களும் இப்போது தங்களது துறையில் நன்றாக கால் பதித்திருக்க, அவர்களும் மாதம் ஒருமுறை இங்கு வந்து இரண்டு நாட்கள் தங்கியிருந்து பணியில் ஈடுபடுகிறார்கள்.
மொத்தத்தில் எல்லா வசதிகளோடும்  நகரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு ஈடாக, பாப்பன்பட்டி கிராமத்தில் இருக்கும் கிருஷ்ண மூர்த்தி நினைவு மருத்துவமனை திகழ்வதோடு, பட்டிதொட்டி எல்லாம் தன் புகழைப் பரப்பி வளர்ந்து நிற்கிறது.
இத்தனை வருடங்களில் மனைவி சிறந்த மருத்துவராக பரிமளிக்கிறாளென்றால், கணவனோ மிகச் சிறந்த மனிதனாக சுற்று வட்டார மக்களின் மனதில் பதிந்து நிற்கிறான். 
ஆமாம்… ஏதாவது பிரச்சினையா? கிருஷ்ணாவிடம் சென்றால் அதற்கு வழிபிறக்கும் என்று நம்புமளவிற்கு மக்களின் மனதில் உயர்ந்த இடத்தில் இருக்கிறான் கிருஷ்ணா. 
இயற்கை விவசாயத்தின் நன்மைகளையும், அதனால் கிடைக்கும் பலன்களையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லி இயற்கை விவசாயம் செய்ய மக்களை தூண்டியவன், அதன் விளைச்சல்களை சரியாக சந்தைப்படுத்தி மக்களுக்கு நல்ல இலாபத்தையும் பெற்றுத்தர தவறியதே இல்லை. 
அதே போல இன்று அவர்களின் தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்து நிற்கிறது. 
ஒருகாலத்தில் தந்தையின் தர்மகாரியங்களை எல்லாம் அசூசையாகப் பார்த்தவன், இன்று தந்தையின் அனுமதியோடு ‘நம்பிக்கை ஃபவுண்டேஷன்’ என்னும் பெயரில் ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து அதன் மூலம் முதற்கட்டமாக திருநெல்வேலி மாவட்டத்தில் படிக்க விருப்பமிருந்தும் படிக்க முடியாத ஏழை மாணவ மாணவிகளை படிக்க வைக்கிறான்.
தன்னால் எத்தனை எத்தனை புதிய தொழில்கள் செய்ய முடியுமோ அத்தனை அத்தனை புதிய தொழில்களை அரசாங்கத்தின் உதவியோடு செய்பவன், தன்னுடன் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கும், தன் கிராம மக்களுக்கும் அதன் மூலம் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறான். 
மொத்தத்தில் இருக்கிற இடம் முக்கியமில்லை. எந்த இடத்திலிருந்தாலும் நம் உழைப்பாலும், தன்னலமில்லாத சேவையாலும், இந்த உலகத்தையே நம்மை உற்றுப் பார்க்க வைக்க முடியுமென்பதை கணவனும் மனைவியும் நிரூபித்து விட்டார்கள்.
அதற்கு அவர்களின் சொந்தங்களும் நட்புகளும் அவர்களோடு துணை நின்றன என்று சொன்னால் அது மிகையல்ல.
*************
இரவு உணவிற்கு பிறகு தன் தாத்தா பாட்டியோடு சேர்ந்து தன் மகன்கள் இருவரும் தூங்கும் அறைக்கு வந்த சாருமதி கையிலிருந்த பால் க்ளாஸ்கள் அடங்கிய ட்ரேயை அங்கிருந்த மேஜையில் வைத்தாள். 
நேரம் காலம் பார்க்காமல் சாருமதி மருத்துவமனைக்கு  செல்லவேண்டி இருக்குமாதலால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஸ்ரீ யும், ஹரியும் தூங்குவது தனது தாத்தா, பாட்டியிடமே தான். 
இரண்டு பெரிய கட்டில்களை இணைத்து போட்டு நான்கு பேரின் தூக்கமும் நடக்கும். 
இப்போதும் தூங்குவதற்கு ஏதுவாக நான்கு பேரும் கட்டிலில் உட்கார்ந்திருக்க, மாமியாரின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்தவள்,”இன்னைக்கு ராஜ் அண்ணாட்ட எத்தனை டீ ஸ்ராங்கா சுகர் போட்டு வாங்கி குடிச்சீங்க அத்த? சுகர் அளவு சும்மா எகிறியிருக்கு” என்றாள்.
“யாரு? நானா? என்ன விளையாடுறியா சாரு? அதெல்லாம் நான் டீ குடிச்சே மாசக்கணக்காச்சு தெரியுமா?” 
மருமகளின் கேள்விக்கு லேசாக அவளை கடிந்தபடியே வேதவல்லி பதில் சொல்ல, 
“அப்போ, இன்னைக்கு இன்னும் கொஞ்சம் சுகர் போடு ராஜ் னு கேட்டு வாங்கி டீ குடிச்சது நீங்க இல்லையா அப்பாம்ம?” அப்பாவியாக தன் விழிகளை விரித்து  கேட்டான் பதினோரு வயது ஹரி.
“அப்பாம்ம…அது நீங்க இல்லைன்னா வேற யாரா இருக்கும்?” வேண்டுமென்றே ஸ்ரீ யும் கிண்டலில் இறங்கினான்.
“டீ மட்டும் தானா? இல்லை ஸ்வீட்டும் உண்டான்னு கேளும்மா” அழகாக பண்ணையார் எடுத்துக்கொடுக்க,
“ஹையோ… இன்னைக்கு ஒருநாள், ஒருகப் டீ சுகர் போட்டு குடிச்சதுக்கு இவ்வளவு அலப்பறையா?” அலறினார் வேதவல்லி. 
“ஹஹ… வந்துடிச்சில்ல… உங்க வாய்லயிருந்தே உண்மை வந்திடிச்சில்ல” இரட்டையர்கள் இருவரும் உற்சாகமாக ஹைஃபை குடுத்துக்கொள்ள,
“நீங்க சின்ன பிள்ளை இல்லத்த… சொன்னா புரிஞ்சுக்கோங்க” சொல்லியபடியே கொண்டு வைத்த பாலை எடுத்து அனைவருக்கும் கொடுக்க ஆரம்பித்தாள் சாரு. வழக்கம் போல வேதவல்லி க்கு இனிப்பில்லா பால் தான்.
“ம்மா… ரகு மாமா அத்தை ஃபோன் பண்ணுனாங்க ம்மா. கௌரி சித்தியும் சித்தப்பாவும் ஊருக்கு வந்திருக்காங்க ல்ல. அவங்களை அத்தையும் மாமாவும் நாளைக்கு போய் பாக்கப்போறாங்களாம்.”
“எங்களையும் வரீங்களான்னு கேட்டாங்கம்மா. நாளைக்கு சன்டே தானே, நாங்க போய்ட்டு வரட்டுமா?” ஹரி தான் கேட்டது.
படித்து முடித்து கௌரி ஒரு ஆறுமாதம் கூட வேலை பாத்திருக்கமாட்டாள், பண்ணையாரின் பெரிய தங்கையின் கணவர் தன்னுடைய குடும்பத்திலுள்ள ஒரு பையனுக்கு கௌரியை பெண் தந்தால் தான் ஆச்சு, என்று இந்த திருமணத்தை நடத்தியிருந்தார். 
பையனும் இன்ஜினியர் தான். இரு குழந்தைகள் கூட உண்டு இந்த தம்பதியருக்கு. வேலை விஷயமாக இருவரும் இருப்பது பெங்களூருவில். 
தங்கை திருமணத்திற்கு பிறகு ரகு, எத்தனையோ வசதியான வீடுகளிலிருந்து தனக்கு பெண் தர முன்வந்த பிறகும் அதையெல்லாம் மறுத்து, தங்களைப்போலவே வசதி வாய்ப்புள்ள வீட்டிலிருந்து டாக்டரான ஒரு பெண்ணையே திருமணம் செய்து கொண்டான். 
இப்போது அந்த பெண்ணும் இங்கே மருத்துவமனையில் தான் வேலை பார்க்கிறாள். அவர்களுக்கும் இரண்டு குழந்தைகள் உண்டு. 
“ம்ம்… போய்ட்டு வாங்க ப்பா” சொல்லியபடியே திரும்பியவள், கணவரின் கையிலிருந்த பால் கிளாஸை சட்டென்று உருவி, குடித்த வேதவல்லியின் செயலைப் பார்த்து,
“அத்த… என்ன பண்ணுறீங்க… நீங்க?” என்று கேட்க
“ம்ம்… என் வீட்டுக்காரருக்கு பால்ல இனிப்பெல்லாம் சரியா போட்டுருக்கியான்னு டெஸ்ட் பண்ணி பாத்தேன். பரவாயில்லை… சரியாத்தான் போட்டுருக்க” கெத்தாகச் சொன்ன மாமியாரின் பதிலில்
“உங்களை ஒன்னும் சொல்லுறதுக்கில்ல த்த…” அலுத்துக் கொண்டே சாருமதி கிளம்ப, நால்வரின் சிரிப்பு சத்தமும் அந்த அறையை நிறைத்தது. 
 அங்கிருந்து நேராக தங்களின் ரூமுக்கு சென்றவள் கதவை தாளிட்டு விட்டு ஒளிர்ந்து கொண்டிருந்த மெல்லிய விளக்கொளியில் கட்டிலைப்பார்க்க,
அங்கே தகப்பனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள் ஐந்தே வயதான அவர்களின் செல்ல மகள் கிருஷ்ணப்ரியா…
தங்கள் மூன்று பிள்ளைகளுக்குமே தன் கணவனுடைய பெயரையும் சேர்த்து பெயர் வைத்தது சாருமதி தான்.
அந்த அளவுக்கு அவள் கிருஷ்ணபக்தை ஆகிப்போயிருந்தாள். ஆனால் அந்த பக்தைக்கு தான், அவளின் கிருஷ்ணாவின் பக்கத்தில் போவதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டது அவர்களின் பெண்ணரசியின் வருகைக்குப் பிறகு‌. 
ஹஹஹ… இப்போது கிருஷ்ணாவின் காட்டில் மழை.
உழைக்கத் தயங்காத உடல் இன்னும் உரமேறிப்போய், திரண்ட தோள்களும், விரிந்த மார்புமாய் ஆணழகனாய் திகழ்ந்த கணவனின் அருகில் உட்கார்ந்தவள்,  உறங்கிக்கொண்டிருந்த மகளின் பட்டுக்கூந்தலை மெதுவாக தடவி  கணவனிடமிருந்து விலக்கப்பார்க்க,
அவளோ இன்னும் அவன் கழுத்தை இறுக்கிப் பிடித்தபடி,
“ப்பா…” என்று உறக்கத்திலேயே சிணுங்க, இவளோ உதட்டை சுழித்தாள் கணவனைப் பார்த்து.
“விட்றி… யாருகிட்ட பொறாமை படணும்னு இல்லாம” 
கணவனின் வார்த்தையில் வாய்க்குள் முணுமணுத்தபடியே அந்த பெரிய கட்டிலின் ஓரத்தில் போய் படுத்துக்கொண்டவளை புன்னகை முகத்தோடு பார்த்திருந்தவன், 
மகளை நன்றாக தூங்க வைத்து மகளுக்காகவே சுவரோரம் நெருக்கி போடப்பட்டிருந்த கட்டிலில் அவனுக்கு மறுபுறம் படுக்க வைத்தவன், பக்கத்தில் வரிசையாக தலையணையையும் அடுக்கி வைத்துவிட்டு மனைவியின் அருகில் வந்தான்.
ஓருபுன்னகையோடே, தனக்கு முதுகு காட்டி படுத்திருந்த தன் மனையாளின் இடையில் கைகொடுத்து தன்னை நோக்கி திருப்ப முயல, 
அவன் கைகளில் ஒரு அடியைப் போட்டவள்,”ஒன்னும் வேண்டாம் கையெடு கிருஷ்ணா” திரும்ப மறுத்தவளின் குரல் கொஞ்சம் கரகரப்பாக இருந்தது. 
சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை. அதுபோல தன்னைப் பார்த்து தன் குழந்தைகளும் கிருஷ்ணாவை ஏகவசனத்தில் பேசிவிடக்கூடாது என்பதற்காகவே கிருஷ்ணாவை மரியாதை பன்மையில் பேச பழகிக்கொண்டாள் சாருமதி.
ஆனாலும் அவர்களுக்கேயான தனிமையில் அதே பழைய பேச்சு தான் இப்போதும். 
“ஐயோ! பாவம், கட்டில்ல இருந்து கீழ விழுந்துடக் கூடாதுன்னு உன்னை இழுத்தேன். நீ வேற எதுக்குன்னு நினைச்ச சாரு?” சிரிப்பை அடக்கியபடி அவள் காதில் முணுமுணுத்தான் கிருஷ்ணா.
அவ்வளவு தான்… சட்டென்று அவன் பக்கம் திரும்பியவள்,
“ஐயோ பாவம்னு பாத்தியா? அவ்வளவு இளக்காரமாப் போனனா நான் உனக்கு?”  கேட்டவாறே சரமாரியாக அவனை அடிக்கத் தொடங்க,
அவள் கைகளைப் பிடித்து தடுத்தவன் அப்படியே தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டு,”எதுக்கு அம்மணிக்கு இவ்வளவு கோபம்?” முகமெங்கும் குட்டி குட்டி முத்தங்களை வைத்துக்கொண்டே மென்மையாக கேட்டான். 
“ஹாங்… நீ இப்படி கேட்டா எனக்கு தான் ஒன்னுமே ஞாபகம் இருக்காதே! அப்புறம் நான் எந்த கோபத்தை சொல்லுவேன்?”
“ஹ்ம்ம்… ஒருவேளை நீ அதுக்காகத் தான் இப்படி எல்லாம் செய்யுறியோ?” அவன் முகத்தை தன் கைகளால் பற்றி  அவனை உற்றுப் பார்த்துக் கொண்டே கேட்டவள்,
“செய்தாலும் செய்வடா… சரியான ஆள்மயக்கி நீ” என்றும் சொல்ல, 
“எனக்கு வேற யாரும் மயங்க வேண்டாம். நீ மட்டும்… நீ மட்டும் மயங்குனா போதும்” கரகரப்பான குரலில் சொல்லியவன்,
“இந்த மாமன் உன்னை மயக்கிட்டனா சாரு? கேள்வியைக் கேட்டுவிட்டு ஒரு எதிர்பார்ப்போடு மனைவியின் முகத்தையே பார்த்தான் கிருஷ்ணா. 
“இதோ, இந்த அராத்தோட சேத்து, முத்தா மூனு பிள்ளைங்களை பெத்தபிறகும் உனக்கு ஏன் இந்த சந்தேகம் மச்ச்சன்?” 
அந்த மெல்லிய விளக்கொளியில் கணவனின் முகத்தை  ஆழ்ந்து பார்த்தபடி தெளிவாக கூறியவள், மச்சனை கூடுதல் அழுத்தத்தோடு சொல்லி, வெக்கம் மேலிட கணவனின் திண்ணிய மார்பிலேயே முகம் புதைத்துக் கொண்டாள்.
மனைவியின் பதிலிலும், மச்சனிலும் நெக்குருகிப் போய் அவளை இறுக்கி அணைத்து அந்நேரத்தின் இனிமையை   உள்வாங்கியபடி அமைதியாக இருந்தவன், சிறிது நேரம் கழித்து, 
“சாரு!” என்றழைக்க,
“ம்ம்… ” என்றாள் அந்த மெல்லிடையாள். 
“அன்னைக்கொரு நாள் நீ எங்கிட்ட ஒரு கேள்வி கேட்டியே, அது உனக்கு ஞாபகம் இருக்கா?
 “ஓராயிரம் கேள்வி உங்கிட்ட கேட்டுருப்பேன். அதுல எதைன்னு நான் ஞாபகம் வச்சிக்குறது?”
 “உங்கம்மாவுக்கு மட்டும் உடம்புக்கு எதுவும் இப்படி ஆகலைன்னா, நீ இன்னும் அதே கிருஷ்ணாவா, இந்த சாருமதியை பிடிக்காமல், அவளை வெறுக்குற கிருஷ்ணாவாத் தான் இருந்துருப்பல்லன்னு கேட்டியே, அது உனக்கு ஞாபகம் இருக்கா?” 
வந்து விழுந்த கேள்வியில் அதிர்ந்து போன சாருமதி, சட்டென்று கட்டிலில் எழுந்தமர்ந்து, கணவனை முற்றிலுமாக பார்வையிட்டாள். 
‘ஆண்டவா! இத்தனை வருடங்களாகவா இந்த கேள்வியை சுமந்து கொண்டு திரிகிறான்?’ 
மனம் நொந்து போனவளுக்கு இப்போது அந்த கேள்வி அபத்தமாகப்பட,”அது… ஏதோ ஒரு மனநிலையில் அப்போ கேட்டுட்டேன் ப்பா… அதெல்லாம் இன்னுமா ஞாபகம் வச்சிட்டு இருப்ப நீ?” 
தான் எழுந்தமர்ந்ததும் தன்னோடே எழுந்து கட்டிலில் சாய்ந்தமர்ந்து கொண்ட கணவனின் தோள்களில் சாய்ந்தபடி லேசாக அவன் மார்பின் இடப்புறத்தை தடவிக்கொடுத்தபடியே கேட்டவளிடம்,
“உண்மையிலேயே, அந்த கேள்விக்கு எங்கிட்ட இப்போ வரைக்கும் பதிலில்ல சாரு. ஆனால்… ஆனால்… நீ மட்டும் என் வாழ்க்கையில் வரலைன்னா இந்த கிருஷ்ணா ஒன்னுமே இல்லன்னு ஆகியிருப்பேன்னு மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும்” என்றான் நெகிழ்ந்து போன குரலில்.
“இன்னைக்கு நான் ஒரு நல்ல மனுஷனா நாலு பேருக்கு உபயோகப்படுற மாதிரி இருக்கேன்னா அது உன்னால, உம்மேல எனக்கு வந்த காதலால மட்டும் தான்”
கணவனின் வார்த்தைகளில் இருந்த காதலில் வாயடைத்துப்போனாள் சாருமதி.
என் எல்லாமுமே நீதான் என்கிறானே கணவன்! இதை விட என்ன வேண்டும் ஒரு பெண்ணுக்கு… 
மனம் நிறைந்து போனவளுக்கு, பழைய நினைவுகளில் கணவன் வாடுவது பிடிக்காமல் போக, அவனை இயல்புக்கு கொண்டு வருவதற்காக,
“எல்லாம் சுயநினைவோட தெரிஞ்சு தான் சொல்லுறியா கிருஷ்ணா” என்றாள் விளையாட்டாக,
“ம்ம்…”
“பின்ன நாளை பின்ன மாத்திகீத்தி சொல்லமாட்டியே?”
“ம்ஹூம்… ஏன்?”
“இல்ல… உனக்கு எல்லாம் நான் தான் ங்குற… அப்போ நாளைல இருந்து உம் மகளுக்கு பதிலா நான் தான் உங்கழுத்தை கட்டிகிட்டு தூங்குவேன். ஓகே யா?”
“ஹ்ம்ம்… எனக்கு ஓகே…” என்றவன் மெல்லிய சிரிப்பை உதடுகளுக்குள் மறைத்தவாரே,
“கொஞ்சம் இரு, எதுக்கும், இந்த டீல் ஓகே யான்னு  என் லட்டுகுட்டியை எழுப்பி கேட்டுட்டு வரேன்” சொல்லியபடியே மகளை எழுப்புவதற்கு செல்வது போல பாவனை செய்தவனின் கைகளை எட்டிப் பிடித்து தடுத்தவள்,
“ஏன்? நான் இந்த பெட்ரூம்ல படுக்குறது உனக்கு பிடிக்கலையா மச்சன்?  பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்ட மனைவியின் பாவனையில் வெடித்து சிரித்த கணவனோடு, இணைந்து கொண்டாள் சாருமதி.
 

Advertisement