Advertisement

சாருமதி.
அத்தியாயம் 22 (இறுதி அத்தியாயம்)
“வெங்கையா…”
“சொல்லுங்க அப்பு…”
“இந்த மரம் இவ்வ்ளோ… பெருசா… இருக்கே, இதுக்கு எனக்கு இருக்கிற மாதிரி அம்மா உண்டா?” 
வீட்டுத் தோட்டத்தில் நின்ற குல்மோஹர் மரத்துக்கு கீழே வெல்வெட் பஞ்சுகளாக உதிர்ந்து கிடந்த அதன் பூக்களின் மீது தன் பிஞ்சு பாதங்கள் பதிய நடந்தபடியே மரத்தை அண்ணார்ந்து பார்த்து தன் மழலைக்குரலில் வெங்கையாவிடம் கேட்டுக்கொண்டிருந்தான்  ‌‌ ஸ்ரீகிருஷ்ணா. 
ஆம்… கிருஷ்ணா, சாருமதி தம்பதியரின் மூன்றே வயதான மூத்த மகன் ஸ்ரீ கிருஷ்ணா. 
“அது வந்து அப்பு…” என்று வெங்கையா தொடங்க,
“ஸ்ரீ… பெரியவங்களை பேரைச் சொல்லி கூப்பிடக்கூடாதுன்னு அம்மா சொல்லி இருக்காங்கல்ல, சாரி கேளு… தாத்தாகிட்ட சாரி கேளு…”
இன்னுமொரு இளங்குரல் அதட்டியது ‘ஸ்ரீ’ என்ற ஸ்ரீ கிருஷ்ணாவை.
அந்த குரலுக்கு சொந்தக்காரன் ஹரி கிருஷ்ணா. கிருஷ்ணா சாருமதி தம்பதியரின் மூன்று வயதான இளையமகன் ஹரி கிருஷ்ணா.
ஆமாம்… ஸ்ரீ கிருஷ்ணா, ஹரி கிருஷ்ணா இருவருமே இரட்டையர்கள். ஆனால் ஐடெண்டிகல் ட்வின்ஸ் போலில்லாமல் பெரியவன் ஸ்ரீ, கிருஷ்ணா ஜாடையிலும் சின்னவன் ஹரி, சாருமதி ஜாடையிலும் இருந்தார்கள்.
“ச்சாரி… தாத்தா… மன்னிச்சுக்கோங்க…” கண்களைச் சுருக்கி தலையை சரித்து தன் செப்பு வாய் திறந்து கேட்ட விதத்தில் வெங்கையாவை மயக்கிய  ஸ்ரீ, 
“ஆனால் அம்மா, அப்பாவை கிருஷ்ணான்னு பேர் சொல்லி கூப்பிடுறாங்களே ஹரி!” தன் ஆட்காட்டி விரலால் நாடியைத் தட்டியபடி தன் கருவறைத் தோழனிடம் சந்தேகம் கேட்டான்.
“அது அம்மா பெரியவங்க ல்ல…” ஏதோ ஹரி தன்னறிவுக்கு எட்டியவகையில் விளக்கம் சொல்ல முற்பட …
அடுத்தாற்போல் நின்ற பன்னீர் மரத்திற்கு கீழே கிடந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து குழந்தைகளிலேயே தங்கள்  கவனத்தை வைத்திருந்த தம்பதியரில் கிருஷ்ணா மட்டும் மகனின் பேச்சைக் கேட்டு வெடித்து சிரித்தான்.
“திஸ் ஈஸ் ட்டூ… பேட் கிருஷ்ணா… அப்படி உம்புள்ள என்ன சொல்லிட்டான்? நீ இப்படி சிரிக்கிறதுக்கு?”  கிருஷ்ணாவிடம் காய்ந்த சாருமதி,
கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன் மாயாவும் இதே கேள்வியை  கேட்டபிறகு, கூடுமானவரை கிருஷ்ணாவை பெயர் சொல்லி நீ, வா, போ என்று அழைப்பதை தவிர்க்கத் தான் நினைக்கிறாள்.
அதிலும் பிள்ளைகள் பிறந்து, சுற்றுச்சூழலை அவர்கள் கவனிக்க ஆரம்பித்த பிறகு இந்த எண்ணம் அவளிடம் மிகுந்திருக்கிறது தான்.
ஆனாலும் அவளால் ஏனோ அதை நடைமுறைப்படுத்த தான் முடியவில்லை.
“நீ முதல்ல வெங்கையா தாத்தாவை பேரைச் சொல்லி கூப்பிடுறதை நிறுத்து கிருஷ்ணா, அப்போ தன்னால ஸ்ரீ யும் தாத்தாவைப் பேரைச் சொல்லி கூப்பிடுறதை நிறுத்திடுவான்.” 
“ஹேய்… அவர்மேல தாத்தாங்குற மரியாதை தான் எனக்கு. ஆனால் சின்னதுலயே அப்படி கூப்பிட்டு பழகுனதுனால, இப்போ தாத்தான்னு கூப்பிட்டாலும்  வேற யாரையோ கூப்பிட்டது போல இருக்கு சாரு” 
“அப்படிதான் எனக்கும் இருக்கும்…” தன் முகவாயை லேசாக தோள்பட்டையில் இடித்துக் கொண்டவளிடம்
“அப்போ மச்சன்னு கூப்பிடுமா…” கேலி இழையோட சொல்லியவனின் கண்களில், மனைவி தன்னை அப்படி அழைத்துவிட மாட்டாளா என்ற ஆவல் மின்னியதோ?
ஆனால் அவன் மனவியோ,”ஐயே! இது அதைவிட மோசம்” என்று உதடு சுழிக்க, அந்நேரம்,
“ம்மா…” என்று அழைத்துக்கொண்டே, பூப்பந்தாய் ஓடி வந்து அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு தொங்கிய ஹரி கிருஷ்ணா, அன்னையின் முகத்தை தன் முத்தத்தால் ஈரப்படுத்தினானென்றால்,
ஸ்ரீ யோ, உதிர்ந்து கிடந்த பன்னீர் பூக்களை தன் பிஞ்சுக் கரங்களால் பொறுக்கி எடுத்து தன் ஷாட்ஸ் பாக்கட்டிலும் சட்டை பாக்கட்டிலுமாக திணித்துக்கொண்டு, இன்னும்… இன்னும் அள்ள முயன்றான்.
சிறுவனின் ஆவலைக் கண்டு அதே பூக்களை பொறுக்கி, அழகாக அடுக்கி வெங்கையா தர, தன் கைகொள்ளாத அளவிற்கு வாங்கிக்கொண்டு,  பூக்களுக்கு பதிலாக புன்னகை ஒன்றை அந்த முதியவருக்கு பரிசளித்தவன், 
 அன்னையின் மடியில் ஓடிவந்து பொத்தென்று விழுந்து, அங்கு ஏற்கனவே குடிகொண்டிருந்த ஹரியை தன்னுடலால் லேசாக நெருக்கித் தள்ளி, வாகாக மடிசாய்ந்து கொண்டு, தன் கையிலிருந்த பூவை முகர்ந்து பார்த்தபடியே, தாயின் மூக்குக்கு நேராக பிடித்து,”எவ்ளோ மணம்ல்ல ம்மா?” என்று கேட்டான். 
மகனின் செயலை எல்லாம் ஒரு வாடாத புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தவள், தன் மகவின் பிஞ்சுக் கரத்தை பற்றி அந்த பூவின் சுகந்தத்தை ஆழ்ந்து உள்ளிழுத்தவள்,”ம்ம்… சூப்பரா இருக்கு குட்டியப்பா…” என்றபடியே, 
ஸ்ரீ நெருக்கித் தள்ளியதால் லேசாக முகம் வாடியபடி தன்னை விட்டு சற்றேத்தள்ளி நின்ற ஹரியையும், ஸ்ரீ யையும் தன்னிரு கைகளால் சேர்த்தணைத்துக் கொண்டு முத்தமாரிப் பொழிந்தவள், வெங்கையாவிடம்,
“தாத்தா! நாங்க பசங்களைப் பாத்துக்குறோம், நீங்க வீட்டுக்கு போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க” என்று சொன்னாள்.
பிள்ளைகள்  வீட்டு தோட்டத்தில் நடையிலும் போது அவர்களுக்கு துணையாக இருப்பதற்காகவே தனது தோட்டத்திலிருந்து வீட்டுக்கு வெங்கையாவை கூட்டிக்கொண்டு வந்துவிட்டான் கிருஷ்ணா.
“ஹ்ம்ம்… இந்த பொடிசுகளைப் பாக்குறதெல்லாம் ஒரு வேலைன்னுட்டு என்னை ரெஸ்ட் வேற எடுக்கச் சொல்லுறீங்களேம்மா” லேசாக முணுமுணுத்தபடியே அவர் இடத்தை காலி செய்ய,
“அடேய்… உங்க அப்பன்னு ஒருத்தன் இங்க தான் டா இருக்கேன்” என்றான் கிருஷ்ணா, அவர்களின் கூட்டணியில் புசுபுசுவென்று தன் மூச்சுக்காற்றை வேகமாக வெளியே விட்டவாறே.
எப்போதுமே சிறுவர்களுக்கு தந்தையை விட தாயிடமே ஒட்டுதல் அதிகம். அதுவும் மருத்துவமனை வேலைகள் சாருமதியை அதிகம் இழுத்துக் கொள்ள, பெரும்பான்மையான நேரங்கள் தங்கள் அப்பாம்மை வேதவல்லியோடு கழிக்கும் சிறுவர்கள், இப்படி சாதாரணமாக அன்னையை கண்டுவிட்டால் விடவே மாட்டார்கள்.
“அப்பா பாவம்ல செல்லம்ஸ், அப்பாவுக்கும் ஒரு முத்தம் குடுங்க பாக்கலாம்…”
அன்னையின் சிபாரிசின் பெயரில் போனால் போகுது என்பது போல முத்தம் என்ற பெயரில் ஏதோ ஒன்றை தகப்பனுக்கு கொடுத்த சிறுவர்கள், 
தங்கள் அம்மாவிடம் சொல்ல வேண்டுமென்று சேமித்து வைத்திருந்த கதைகளையெல்லாம் தங்கள் மழலை மாறாத குரலில் சொல்ல ஆரம்பித்தார்கள். 
“இதுக்காகவே நான் ஒரு பொட்டப்பிள்ளையைப் பெத்துக்குறனா இல்லையா பாரு டி!” 
தன் காதருகில் கிசுகிசுத்த கணவனின் குரலில், ஒரு மந்தகாச புன்னகையையோடு,”ததாஸ்து புருஷா…” என்று  சொல்லியவளுக்கு, 
இரண்டு கிருஷ்ணாக்களும் பிறந்த நாளன்று, மாமியார் வேதவல்லி இருவரையும் கையில் அள்ளிக்கொண்டு கண்கள் நிறைய ஆனந்தக் கண்ணீரோடு நின்ற காட்சி ஞாபகத்திற்கு வந்தது. 
நான்கு தலைமுறைகளுக்கு பிறகு அந்த குடும்பத்தில் பிறந்த இரண்டு ஆண்வாரிசுகள் அந்த குடும்பத்தை உய்விக்க வந்த தேவதூதர்களாகவே அவர் கண்களுக்கு தெரிந்தது போலும். 
“அம்மாடி சாரு! இதேப் போல இன்னும் ஒரு ரெட்டை பொண் குழந்தைகளை சீக்கிரம் பெத்துமட்டும் குடுத்துடு. அத்த வளத்துக்குறேன்” அந்த இடத்திலேயே அடுத்த குழந்தைக்கான விண்ணப்பத்தையும் அவர் வைக்க,
“எம்பொண்டாட்டியைப் பார்த்தால் பிள்ளை பெத்துக்குடுக்கற மிஷினாட்டும் தெரியுதா ம்மா உனக்கு” பதிலுக்கு அன்னையின் மீது பாய்ந்தவனின் செய்கை இப்போது ஞாபகம் வர, பெண்ணவளின் இதழ்களில் மெல்லிய இளநகையொன்று விரிந்தது. 
“என்னடி சிரிக்குறவ?” 
“இல்லை… யாரோ நம்ம பசங்க பிறந்த அன்னைக்கு, அத்தைகிட்ட என்னவோ கேட்டு சண்டைக்கு போனாங்க. அது ஞாபகம் இருக்கா கிருஷ்ணா உனக்கு?”
“எல்லாம் எங்களுக்கு ஞாபகம் இருக்கு… அதான் பசங்களுக்கு மூனு வயசு ஆயாச்சே. அப்புறம் என்ன? 
“யாருக்குப்பா மூனு வயசாச்சு?” தன் சில்வண்டு கண்களை உருட்டியபடி ஸ்ரீ கேட்க…
“அதானே அம்மாகிட்ட பேசுனாலே மூக்கு வேர்த்திடுமே உனக்கு” என்றபடியே அவனை இழுத்து தன் கையணைப்புக்குள் கொண்டு வந்தவன்,
“உங்களுக்கு ஒரு தங்கச்சி பாப்பா வேணும்ல குட்டா! அதான் அம்மாட்ட சொல்லிட்டு இருக்கேன்” 
தங்கள் கூட்டணியில் அடுத்து ஒரு குழந்தையை சேர்த்துக்கொள்வது குறித்து தங்கள் குழந்தைகளின் மனநிலை எவ்வாறு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுவதற்காக அவனிடம் இவ்வாறு சொல்ல,
அந்த ஜகத்ஜாலகில்லாடியோ,”அதான் காயூ சித்தி வயித்துக்குள்ள தங்கச்சி பாப்பா இருக்குதுன்னு அன்னைக்கு அம்மா சொன்னாங்களே! அப்புறம் நமக்கெதுக்கு இன்னொரு தங்கச்சி பாப்பா, இல்லடா ஹரி!” என்று கேட்டு கிருஷ்ணாவை விழி பிதுங்க வைத்தான்.
ம்ம்… தனா, காயத்ரி கல்யாணமும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த வருடம் சிறப்பாக நடந்து முடிந்திருந்தது. 
தனாவின் தொந்தரவு தாங்காமல் காயத்ரி பிஎட் படிக்கும் போதே அவர்களின் திருமண நிச்சயதார்தத்தை நடத்திக் கொடுத்திருந்தான் கிருஷ்ணா. 
 தன் தங்கைகள் இருவரையும் நல்லபடியாக கல்யாணம் செய்து கொடுத்திருந்த மகனின் விருப்பத்திற்கு தடைசொல்லாத தனாவின் பெற்றோர்கள், கல்யாணி அம்மாவிடம் பெண் கேட்டு சென்று, என்று எந்த குறையும் இல்லாமல் மகனின் திருமணத்தை நல்லபடியாக நடத்தி வைத்திருந்தார்கள்.
இப்போது காயத்ரி ஏழு மாத கர்ப்பம். கணவனோடு சென்னையில் தான் இருக்கிறாள். போனமுறை ஊருக்கு வந்திருந்த போது மேடிட்ட அவளின் வயிறைக் காட்டி சிறுவர்கள் சந்தேகம் கேட்கவே, சாருமதி இப்படி பதில் சொல்லியிருந்தாள். 
அதுவே இன்று கிருஷ்ணாவின் கேள்விக்கு பதிலாக வந்தது ஸ்ரீ யிடமிருந்து. 
அதேபோல ரகுவும் எம் எஸ் ஆர்தோ முடித்து இங்கே மருத்துவமனையில் வேலையில் சேர்ந்திருந்தான். கூடவே திருநெல்வேலியில் ஒரு மருத்துவமனையில் பகுதி நேரமாக வேலையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
கௌரியும் இந்த வருடம் தான் தன் இன்ஜினியரிங் படிப்பை முடித்து வந்திருக்கிறாள். 
வீட்டில் “கல்யாணத்துக்கு பார்க்கலாமா?” என்றால் “ஒரு இரண்டு வருடங்களாவது வேலை பார்க்கிறேன்” என்கிறாள். 
“அப்படியென்றால் உனக்காவது கல்யாணத்துக்கு பார்க்கலாமா?” என்று ரகுவிடம் கேட்டால் அவனோ,”கௌரி கல்யாணத்துக்குப் பிறகே தன் கல்யாணம்” என்று உறுதியாக சொல்லி விட்டான். 
******
மேலும் வருடங்கள் எட்டு கழிந்திருந்தது…
கிருஷ்ண மூர்த்தி நினைவு மருத்துவமனையின் பிரசவ அறையின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்த சாருமதி, இந்த பூமியை புத்தம்புதிதாக சற்றுமுன் தரிசித்த சிசுவை அதன் பாட்டியின் கைகளில் கொடுத்து வாழ்த்துகளைச் சொல்ல,
அவரோ அவளின் கைகளை பிடித்து கண்களில் ஒற்றியவாறே,”பத்து வருஷமா எம்மகளுக்கு குழந்தையில்லாமல், நாங்க பாக்காத மருத்துவம் இல்லை, வேண்டாத தெய்வமும் இல்லை ம்மா…”
“ஆனால், உங்க மூலமாத் தான் என்புள்ளை வாழ்க்கைல ஒளி வந்துருக்கு. நீங்க தான் எங்க குடும்பத்தோட குல தெய்வம் ம்மா” என்று உணர்ச்சிவசப்பட,
“என்னால எதுவுமே இல்லை ம்மா. எல்லாம் அந்த ஆண்டவனோட செயல். இப்போ நீங்க இப்படி உணர்ச்சிவசப்படுவதை விட்டுட்டு பேரக்குழந்தை வந்ததை கொண்டாடுங்க” 
புன்னகையோடு சொல்லியவளின் முகத்தில் அந்த படிப்புக்கேயான தேஜஸோடு, அனுபவமும் சேர்ந்து ஒரு புதிய அழகை எழுதியிருந்தது.
ஆமாம்… இந்த நீண்ட வருடங்களில் சாருமதி ஒரு சிறந்த மகப்பேறு மருத்துவராக பரிமளித்ததோடு மட்டுமல்லாமல் குழந்தையில்லாத தம்பதியருக்கும் சிகிச்சையளித்து அவர்கள் வாழ்வில் குழந்தை செல்வத்துக்கான சாத்தியத்தையும் உண்டாக்குகிறாள். 
அதோடு எலும்பு முறிவு அறுவைசிகிச்சையில ரகுவும் தேர்ச்சி பெற்றவனாக விளங்கவே குன்றிலிட்ட விளக்கின் தீபம் போல மெல்ல மெல்ல மருத்துவமனையின் புகழ் வெளியூர்களிலும் பரவ ஆரம்பித்து விட்டது. 
வெளியூர்களிலிருந்தெல்லாம் இந்த மருத்துவர்களைத் தேடி மக்கள் வர ஆரம்பிக்க இன்னும் மருத்துவமனையை விரிவாக்கம் செய்தார் பண்ணையார்.
 தன் மருத்துவமனையில் குவியும் மக்களுக்கெல்லாம் இலவசமாக மருத்துவம் பார்க்க மனதிருந்தாலும் நடைமுறையில் அது சாத்தியம் இல்லை என்பதால், 
உள்ளூர் மக்களுக்கு எப்போதும் போல இலவச சிகிச்சை என்றும், வெளியே இருந்து வரும் மக்களுக்கு அவர்களின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் இலவச சிகிச்சையோ அல்லது வருமானத்தின் அடிப்படையில் கட்டணம் என்ற முறையில் இயங்கி வருகிறது மருத்துவமனை. 
இம்முறையின் மூலம் இன்னும் இன்னும் மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய முடிகிறது பண்ணையாரால். 

Advertisement