Advertisement

வாழ்க்கை பயணத்தில் ஒருவரோடு ஒருவர் இணைந்து பயணம் செய்யும் போது என்ன பேசவேண்டுமென்று ஒருவருக்கொருவர் யோசித்து யோசித்து பேசமுடியாதே. 
 அதேபோல சாதாரண பேச்சுக்களில் கூட குற்றம் கண்டுபிடிக்க ஆரம்பித்துவிட்டால், அந்த வாழ்க்கையும் நரகம் தானே.
“உங்கம்மா நல்லா சமைப்பாங்க” இது கிருஷ்ணாவிடமிருந்து இயல்பாக வந்த வார்த்தை.
 ஆனால் அதையே,”ஏன்? எங்கம்மா உங்க வீட்ல சமையல் வேலை பாத்தாங்கங்குறதை சொல்லிக்காட்டுறியா?” என்று சாருமதி கேட்டுவிட்டால், அந்த வாழ்க்கையில் நிம்மதிக்குத் தான் இடமேது?
ஆனால் அப்படி எதுவுமில்லாமல், தன்துணை மீதுள்ள புரிதலில் இயல்பாக மறுமொழிச் சொல்லிச் சென்ற மனைவியின் மீது காதல் பொங்கி வழிந்தது அந்த கணவனுக்கு.
அன்று சாயங்காலம் திண்ணையில் உட்கார்ந்து மாயாவோடு சாருமதி பேசிக்கொண்டிருக்க, வேலை முடிந்து வந்திருந்த கிருஷ்ணா ஒரு பிரம்பு நாற்காலியை எடுத்து வெளியே போட்டு உட்கார்ந்திருந்தான். 
“சாரு க்கா…” 
“என்னடா…” 
“நானும் உங்களை மாதிரி டாக்டர் ஆகலாமா சாருக்கா?” கண்களில் கனவு மின்ன கேட்டது அந்த சிட்டு.
“ம்ம்… நல்லா படிச்சா யாரு வேணும்னாலும் ஆகலாம் டா” 
“அப்போ… டாக்டருக்கு படிக்க ரொம்ப செலவாகுமா க்கா?”
“நல்ல மார்க் எடுத்தா செலவு கூட கம்மி தான் டா” 
“ம்ம்…” பதில் பேசாது மாயா தனக்குள் ஏதோ யோசனையில் மூழ்கிப்போக…
“நீ நல்லா படிடா… அப்பாவுக்கு முடியலைன்னா நாங்களே உன்னை டாக்டருக்கு படிக்க வைக்குறோம். அப்படித்தானே கிருஷ்ணா!” கணவனையும் தன்பேச்சில் இழுத்தாள் சாருமதி.
“ம்ம்… நீ நல்லா படி ம்மா… மிச்சத்தை நாங்க பாத்துக்குறோம்” கிருஷ்ணாவும் உறுதி கூற,
சந்தோஷமாக தலையை உருட்டியவள்,”க்கா… எனக்கொரு டவுட்” என்றாள்.
“என்னடா?” 
“நீங்க ஏன் அண்ணாவை பேரைச் சொல்லி கூப்பிடுறீங்க?”  
கொஞ்சம் வெக்கத்தோடு தான் வந்தது கேள்வி. 
சாருமதி கொஞ்சம் திகைத்து போய் பார்க்க கிருஷ்ணாவோ கண்களிரண்டும் குறும்பு சிரிப்பில் பளபளக்க சாருமதியின் பதிலுக்காக அவளையே பார்க்க ஆரம்பித்தான். 
“திடீர்னு ஏன்டா இந்த கேள்வி கேக்குற?” எதுவும் காரணமில்லாமல் சிறுவர்களிடமிருந்து இப்படி கேள்விகள் வராது என்ற நம்பிக்கையில் சாருமதி கேட்க,
“அது எங்கம்மா அப்பாவை மச்சன்னு கூப்பிடுவாங்க.  அதான்…”
“மச்சன்!” சாருமதி புரியாது திருப்பி கேட்க
“ஹாங்… மச்சன்” 
“அக்கா‌‌… மச்சானைத் தான் அவ அந்த அழகுல  சொல்லுறா க்கா” அங்கே வந்த ஜெயாவின் பதிலில் மாயா உட்பட அனைவரும் வெடித்துச் சிரிக்க, 
 “இன்னைக்கு நைட் எங்க வீட்ல சாப்பிடுறீங்களாக்கா?” தயக்கமாக வந்த ஜெயாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல், கணவனைப் பார்த்தாள் சாருமதி.
“எத்தனை மணிக்குன்னு சொல்லும்மா, டாண்ணு வந்து நிக்குறோம்” பளிச்சென்று பதில் வந்தது கிருஷ்ணாவிடமிருந்து. 
“உங்களுக்கு பசிக்கும் போது வந்துடுங்க ண்ணா” சொல்லியபடியே தங்கையை அழைத்துக் கொண்டு சென்றாள் ஜெயா. 
************
“ம்ம்…  செம டேஸ்ட்டா இருக்கு… சூடா இன்னொன்னு போடு ம்மா” வஞ்சமே இல்லாமல் வளைத்து கட்டிக் கொண்டிருந்தான் கிருஷ்ணா. 
“வீட்டுக்குள் உட்கார்ந்தால் உனக்கு பரிமாற கஷ்டமா இருக்கும்” என்று ஜெயாவிடம் சொல்லி, வீட்டுக்கு முன்னால் வானத்தையே கூரையாகக் கொண்டு வெட்டவெளியில் போடப்பட்டிருந்த அடுப்புக்கு சற்று தள்ளி, மனைவியோடு நாற்காலியில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தான் கிருஷ்ணா.
நல்ல பெரிய விறகடுப்பு. அடுப்புக்கு தகுந்தாற்போல் தோசை கல்லும் ஒரே நேரத்தில் இரண்டு தோசை சுடும் அளவுக்கு பெரியதே. 
 நல்லெண்ணெயில் அடைதோசை சுட்டு, சாம்பார், தேங்காய் சட்னியோடு ஜெயா சுடச்சுட பரிமாறிக் கொண்டிருக்க, பக்கத்தில் சின்ன அடுப்பில் இட்லி வெந்து கொண்டிருந்தது. 
கணவன் சாப்பிடும் வேகத்தை விழிபிதுங்க பார்த்துக் கொண்டிருந்த சாருமதி,”ஜெயா! எல்லாருக்கும் மாவு இருக்காம்மா?”  மெதுவாகக் கேட்க
“இது தீந்து போனா என்ன க்கா? புட்டு மாவு கூட இருக்கு, தேவைப்பட்டா புட்டும் அவிச்சிகிடலாம்” 
“எது? குழாப்புட்டா ம்மா? அது கேரளா ஸ்பெஷல் ல்ல” வேறு யார்? இன்று பகாசுரனாக மாறி சாப்பிட்டு கொண்டிருக்கும் கிருஷ்ணா தான் கேட்டான். 
தேனோடு பாலும், தெள்ளமுதும் வீட்டில் உணவாக இருந்தாலும் அதை உண்ண மறுத்து, வெளியே விருந்துக்கு சென்ற இடத்தில் கிடைக்கும் எளிய உணவைக் கூட, 
அதுவரை உணவென்ற ஒன்றையேக் காணாதது போல உண்ணும் குழந்தைகளைப் போல மாறி நின்ற கிருஷ்ணாவை, பள்ளிக்காலத்து கிருஷ்ணாவோடு ஏனோ ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை சாருமதிக்கு.
ஆமாம்… படிக்கும் காலத்தில் இயல்பாக தங்களுக்குள் உணவை பரிமாறிக் கொள்ளும் மாணவர்கள் தப்பித்தவறி கிருஷ்ணாவின் டிஃபன் பாக்ஸில் கை வைத்துவிடவேக் கூடாது. 
அப்படி யாராவது கைவைத்தால் அந்த உணவை அப்படியே ஒதுக்கிவிடுவான். அதற்காகவே அவனின் பாத்திரத்தில் மாணவர்கள் கைவைப்பதில்லை. அதே போல வேறு யாரிடமிருந்தும் வாங்கி சாப்பிட்ட சரித்திரம் அவன் பள்ளி நாட்களில் கிடையவே கிடையாது.
ஆனால் இன்றோ தங்களிடம் வேலை பார்ப்பவரின் வீட்டிலேயே விரும்பி, கேட்டு வாங்கி உண்ணுகிறான். 
இந்த ஒற்றை நிகழ்வு ஒன்றே போதுமே அவனுளிருந்த அகங்காரன் அடியோடு அழிந்து போனானென்பதற்கு. 
சாப்பிட்டு முடித்து உணவுக்கு நன்றி சொல்லியவர்கள் தங்கள் வீடு நோக்கி தோளோடு தோளுரச மெல்லியக் குரலில் கதை பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்தார்கள்.
 வானத்தில் காய்ந்து கொண்டிருந்த வெண்ணிலவும் அவர்கள் என்ன பேசுகிறார்களென்று கேட்டு விடும்  ஆசையில் அவர்களோடு சேர்ந்து நடைபோட்டுக் கொண்டிருந்தது.
அவர்கள் வீட்டை சமீபிக்கும் நேரம்,  வீட்டு வாசலில் வந்து நின்ற இரண்டு ட்டூவீலரிலிருந்து இறங்கிய நபர்களில் இருந்த பெண் பதட்டத்தோடு சாருமதியிடம் வந்து,
“அம்மா… என்னோட தங்கச்சி பொண்ணுக்கு சின்ன ஆக்சிடண்ட் ஆகிடிச்சி மா. நம்ம ஊரு அரசாங்க ஹாஸ்பிடலுக்கு கொண்டு போனோம். அங்க டாக்டர் இல்லை ம்மா… தயவு செய்து நீங்க வந்து எம்பிள்ளையை  காப்பாத்தி தாங்க ம்மா” என்று கதற
அவர்கள் ஏற்கனவே தோப்புக்கு வேலைக்கு வருவதால் தெரிந்த முகங்களாகவே இருக்க, மனைவியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான் கிருஷ்ணா.
கிராமத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் அளவில் சிறியதாக இருக்க, அதன் பணியாளர்களின் அளவும் சுருக்கமே. 
அன்று இரவுப் பணியிலிருந்த பெண் மருத்துவரும் ஒரு செவிலியரும், எதிர்பாராமல் வீட்டிலேயே அரைகுறையாக பிரசவத்தில் மாட்டிக்கொண்ட பெண்ணை  பார்ப்பதற்காகப் ஊருக்குள் போயிருக்கிறார்களாம்.
 தன்னை அறிமுகம் செய்து கொண்டு சாருமதி விபத்துக்காளான சிறுமிக்கு சிகிச்சையை மேற்கொள்ள அங்கிருந்த நர்ஸ், மருத்துவர் இல்லாததற்கான காரணத்தை சாருமதிக்கு சொல்லிக் கொண்டிருந்தார்.
சிறுமி விபத்தில் சற்றே அதிகமாக இரத்தத்தை இழந்திருந்ததால் ‘கொஞ்சம் இரத்தம் ஏற்றினால் நன்றாக இருக்கும்’ என கருதி சிறுமியின் இரத்த வகையை உறவினர்களிடம் சாருமதி சொல்ல
அவர்கள் யாரையும் எதிர்பார்க்காமல்,”என்னோட க்ரூப் அதுதான் சாரு! நான் தரேன்” என்றபடி முதல் ஆளாக வந்து நின்றான் கிருஷ்ணா. 
அதன்பிறகு எல்லா வேலைகளையும் மளமளவென்று முறைப்படி முடித்து, சிறுமிக்கு இரத்தமும் ஏற்றி முடிக்க, அந்த மருத்துவமனையின் மருத்துவரும் வந்து சேர சரியாக இருந்தது. 
 சாருமதியின் உதவிக்கு நன்றி கூறிய அந்த மருத்துவர், சிறுமியை இனி தான் பார்த்துக்கொள்வதாகச் சொல்ல, அனைவரிடமும் விடைபெற்று வீடுவந்து சேர்ந்திருந்தார்கள் தம்பதியர். 
வந்த இடத்தில் எதிர்பாராமல் நடந்த நிகழ்வுகளிலிருந்து வெளியே வந்த சாருமதி, வீட்டுக்கு முன் வந்து நின்ற காரிலிருந்து இறங்க, கூடவே இறங்கிய கிருஷ்ணா ஒரு சிறு கல் காலை இடறியதால் லேசாக தடுமாறினான்.
சட்டென்று அவன் இடுப்போடு கை கொடுத்து அணைத்துக் கொண்ட சாருமதி,”என்னாச்சு கிருஷ்ணா? ப்ளட் கொடுத்தது டயர்ட்டா இருக்கா என்ன?”  பதட்டத்தோடு கேட்டவள், அவனை அணைத்தவாறே அழைத்துச் செல்ல, 
மனைவி தன்மீது காட்டும் இந்த அக்கறை பிடித்துப் போனவனாய்,”ம்ம்…” என்று பொய்யாக தலையை ஆட்டினான் கிருஷ்ணா. 
கணவனின் பதிலில் அறிவுக்கு விடை கொடுத்து உணர்ச்சியின் பிடியில் சிக்கிக் கொண்ட சாருமதி, பரபரப்பாக கதவை திறந்து கணவனை தன் கையணைப்பிலேயே கொண்டு வந்து நாற்காலியில் அமர்த்தியவள், 
“ஒரு நிமிஷம் உக்காந்திரு கிருஷ்ணா! நான் ஏதாவது உனக்கு குடிக்க தரேன்” என்றபடியே வேகமாக கிச்சனுக்குள் ஓடியவள்…
“ஹையோ… நம்ம வீடா இருந்தால் ஹார்லிக்ஸ் ஏதாவது சட்டுன்னு கலக்கிடலாம்! இப்போ ஹெல்த் ட்ரிங்ஸ்ஸுக்கு நான் எங்க போவேன்?” 
லேசாக புலம்பியபடியே ப்ளாக் டீ போட ஆயத்தமானவளை, ஒரு சிரிப்போடு ரசித்துக் கொண்டிருந்தவன், எழுந்து வந்து பின்னோடு அணைத்து கழுத்து வளைவில் தன் இதழ் பதிக்க
பெண்ணவளோ, அது எதுவும் மனதில் பதியாதவளாக தன்னருகில் வந்து நின்ற கணவனிடம்,”இப்போ எப்டி இருக்கு கிருஷ்ணா?” என்று கேட்க
“ம்ம்ம்… நல்லாருக்கு…” தன் வசீகரக் குரலில் சொல்லியவன், தன்னவளின் முகம் பற்றி,”உங்கிட்டயே ஹெல்த் ட்ரிங் வச்சிட்டு எதுக்கு டி புலம்புறவ?” தன் ஒற்றை விரல்  கொண்டு பெண்ணவளின் செம்பவள இதழை லேசாக வருடியவன் கிசுகிசுப்பான குரலில் கேட்க, ‌
இப்போது தான் கணவனின் கள்ளத்தனம் புரிந்தது சாருமதிக்கு. 
‘கள்ளன்… என்னை ஒரு நிமிஷம் பதறவச்சிட்டான்’ உள்ளுக்குள் புலம்பியவள், தன் கை நீட்டி அடுப்பை அணைக்க, 
அந்த கைபற்றி தன்னை சுற்றி போட்டுக்கொண்டவன், “சொல்லு சாரு… ஹெல்த் ட்ரிங்கை நான் எடுத்துக்கலாமா?” மெதுவாக மிக மிக மெதுவாக கேட்டான் தன்னவளிடம்.
எதிர்பார்த்த விஷயம் தான். இருந்தாலும் அவன் கேட்கும் விதத்தில் வெட்கம் அழையா விருந்தாளியாக பெண்ணவளில் வந்து குடிகொள்ள, கணவனின் மார்பிலேயே முகத்தை பதித்தாள் சாருமதி. 
அவளின் செயலில் அட்டகாசமாக சிரித்தவன் அவசர முத்தம் ஒன்றை வைத்து தன் சுவர்க்கத்தை கையில் அள்ளிக் கொண்டு பள்ளியறைக்குள் நுழைந்து காதல் பாடங்கள் கற்றுத்தர…
இல்லறம் என்னும் நல்லறத்தினுள் இனிதே நுழைந்தனர் இருவரும்.

Advertisement