Advertisement

இவர்கள் கார் வந்து நின்ற சத்தத்தில் தோப்புக்குள்ளேயே குடியிருந்த கங்காணியார் தங்கப்பன் இவர்களை வரவேற்று,
“பெரியய்யா ஃபோன்ல எல்லா விபரமும் சொன்னாங்கய்யா. நீங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம். முதல்ல சின்னம்மாவைக் கூட்டிட்டு வீட்டுக்குள்ள போங்க அப்புறமா நாம பேசிக்கலாம்” என்றபடியே வீட்டுச்சாவியை கையில் கொடுத்தார்.
அவர் அருகே ஸ்னேகபாவத்தோடு இவர்களைப் பார்த்து சிரித்தபடி நின்ற சிறு பெண்களுக்கு பதில் முறுவல் தந்த சாருமதி, 
எப்போது எந்த சிறார்களை கண்டாலும் தான் கேட்கும் பொதுவான கேள்வியான,”என்ன படிக்கிறீங்க?” என்பதைக் கேட்க, 
“பெரிய பெண் கல்லூரி முதலாமாண்டு என்றும் சின்னது எட்டாம் வகுப்பு என்றும் பதில் சொல்லியது.”
“இதோ ஒரு பத்து நிமிஷத்துல வரேன், நாம தோப்புக்குள்ள போய்ட்டு வந்துடலாம்” சொல்லியபடியே கங்காணியாரிடம் விடைபெற்று  கதவை திறந்து கொண்டு  மனைவியோடு வீட்டுக்குள் நுழைந்தான் கிருஷ்ணா. 
வீடு சுத்தப்படுத்தப்பட்டு அழகாக இருந்தது. ஹாலில் நான்கு பிரம்பு நாற்காலியும் ஒரு பிரம்பாலான மோடாவும் கிடந்தது. 
ஹால் பக்கவாட்டு சுவரிலிருந்த கதவை கிருஷ்ணா திறக்க, அது அட்டாச்டு பாத்ரூம் வசதியோடு கூடிய பெட்ரூம். அறை பார்ப்பதற்கு சிறியதாக அழகாக இருந்தது. 
அறையின் சுவர் முழுவதும் மரத்தால் கவர் செய்யப்பட்டிருக்க, இயற்கையாகவே அந்த அறை குளுமையோடு இருந்தது. 
அறையின் நடுநாயகமாக கிடந்த கட்டில் இவர்களை பார்த்து வரவேற்பாக புன்னகைக்க, மனைவியின் காதருகே குனிந்து,”எனக்கு இதை பாத்து தான் பயம்மா இருக்கு சாரு!” என்றான் கிசுகிசுப்பாக
‘பயப்படுற ஆளா இவன்!’ நம்ப முடியாத பார்வையை கணவன் மீது வீச,
“ஹ்ம்ம்… நம்ம இரண்டு பேரோட வெயிட் தாங்குமா? என்னன்னு தான் பயம். ஏன்னா அது தாத்தா காலத்து கட்டில்! என்றான் அவள் காதருகே.
‘இவனுக்கு வெட்கமென்பதே கிடையாதா? இப்படி பேசுகிறானே?’ தன் உள்ளத்து எண்ணங்களை கணவனிடம் கேட்க, 
“பொண்டாட்டிகிட்ட வெட்கப்பட்டு நான் என்னத்தை சாதிக்கப்போறேன் ம்மா சொல்லு?” அப்பாவியாய் அவளிடமே கேட்டான். 
கேள்வி கேட்டவளுக்கு இப்போது வெட்கமாகிப் போக  கிச்சனுக்கு வந்து பின்வாசல் கதவை திறந்து வெளியே இறங்கி நின்றவள் தொடர்ச்சியாக நாலைந்து தும்மல்களைப் போட, 
“மழைல நனைஞ்சது வேலையைக் காட்டிட்டு போலயே. வா… வந்து கொஞ்சம் சூடா தண்ணிவச்சு குடி” வீட்டைச் சுற்றி முன்வாசலுக்கு கூட்டி வந்தவன்,
 தன் அன்னை சமையலுக்கு தேவையான பொருட்களென்று வைத்து விட்டிருந்தவற்றை வண்டியிலிருந்து இறக்கி வைக்க ஆரம்பித்தான்.
அதில் ஒரு சிலிண்டரும் கேஸ் அடுப்பும் கூட இருந்தது. ஆமாம்… இங்கு எப்போதாவதுதான் குடும்பத்தோடு வருவதால் சமையல் செய்ய பண்டபாத்திரங்கள், முக்கியமாக அடுப்பு இல்லை. 
அதனாலேயே எல்லாம் வைத்து விட்டிருந்தார் வேதவல்லி. 
 இறக்கி வைத்த பொருட்களை கிருஷ்ணா வீட்டுக்குள் அள்ளி வைக்க முயல,
அப்போது அங்கே வந்த கங்காணியாரின் பெண்கள்,”முதலாளி! நாங்க வைக்கிறோம்” என்றபடியே வேலையில் இறங்க முயல,
“என்னது? முதலாளியா? யம்மா… எனக்கு அவ்வளவு வயசாகிப்போச்சா என்ன? சும்மா என்னை அண்ணான்னே கூப்பிடுங்க ம்மா” இலகுவாகச் சொன்னவன்,
அந்த சிறுபெண்களை ஒதுக்கி தானே எல்லாவற்றையும் வீட்டுக்குள் எடுத்து வைக்க முயல, அவன் பின்னோடே அந்த பெண்களும் பொருட்களை அள்ளிக் கொண்டு வீட்டுக்குள் போனார்கள்.
கிச்சன் திண்டில் அடுப்பை வைத்து சிலிண்டரை  பொருத்தி, செக் செய்து பார்த்து விட்டு,”இப்போ கொஞ்சம் ஹாட் வாட்டர் வச்சி குடி சாரு!” என்றான் கிருஷ்ணா.
அந்நேரம் கங்காணியாரும் வந்துவிட,”தோப்புக்குள்ள போய்ட்டு வந்துடுறேன் சாரு. நீ வெந்நீர் வச்சி குடிக்க மறந்துடாத” மனைவியிடம் சொல்லியவன்,
“நாங்க வர்றவரைக்கும் அக்கா கூடவே கொஞ்சம் துணைக்கு இருந்துக்கோங்க ம்மா” அந்த சிறு பெண்களிடமும் சொல்லிவிட்டு கங்காணியாரோடு தோப்புக்குள் இறங்கி நடந்தான்.
இப்போதெல்லாம் கிருஷ்ணா மீதான வெறுப்பு என்னும் திரை முற்றிலும் விலகியிருக்க, அவனின் ஒவ்வொரு செயல்களும் மனைவியான சாருமதியின் மனதை நிறைக்கின்றன. 
அதிலும் தன்மீது அவன் காட்டும் அக்கறையைக் காணும் போது தேனுண்ட வண்டாகக் கிறங்கியது மனது.
அந்த சிறுபெண்களோடு சேர்ந்து பொருட்களை அடுக்கி முடித்தவளுக்கு அவர்களோடு ஒரு நல்ல பிணைப்பு ஏற்பட்டிருந்தது.
பாவம்… அந்த சிறுபெண்களுக்கு அம்மா இல்லையாம். பெரிய பெண்ணின் பெயர் ஜெயா, சின்னவளின் பெயர் மாயாவாம். இப்படி பெண்களின் விஷயம் சாருமதிக்கு தெரிய வந்திருந்ததென்றால், 
சாருமதி ஒரு டாக்டர் என்ற விஷயம் அந்த பெண்களுக்கு தெரியவந்திருந்தது. 
கொஞ்ச நேரத்துக்கெல்லாம் முதலாளியின் மகன் தன் புது மனைவியோடு வந்திருக்கிறார் என்ற விஷயம் தெரியவும், 
தோப்பில் தங்கி வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் தவிர, கிராமத்திலிருந்து தினம் வேலைக்கு வந்து போகும்  பெண்களும், வேலை முடிந்து ஒவ்வொருவராக வந்து சாருமதியை பார்த்தவண்ணம் இருந்தனர். 
அதிலும் அவள் டாக்டர் என்னும் விஷயம் மாயா மூலம் எல்லோருக்கும் தெரியவரவும், இன்னும் கொஞ்சம் ஆச்சர்யத்தோடு அவளை பார்வையிட்டவர்கள், இயல்பாக தங்கள் உடல்நிலையைச் சொல்லி “அதுக்கு என்ன செய்யலாம் ம்மா?” என்று கேட்கவும் செய்தார்கள்.
 சில பெண்களோ, எந்தவித பந்தாவும் இல்லாமல் எளிமையாக பேசும் சாருமதியிடம், பெண்களுக்கேயான சில உடல் பிரச்சினைகளைப் பற்றி கேட்க,
தெளிவாகவும், அவர்களுக்கு புரியும்படியுமாக பதில் சொன்ன சாருமதியின் புகழ் ஒரே நாளிரவில் அந்த கிராமம் முழுவதும் பரவியது.
ஒரு ஆறரை மணிக்கு போல தோப்பிலிருந்து திரும்பிவந்த கிருஷ்ணா கண்டது, தன் மனைவி வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருக்க அவளை சுற்றி பெண்கள் இருந்ததைத் தான். 
அவனைக் கண்டதும்,”நாளைக்கு வரோம் டாக்டர்!” சாருமதியிடம் சொல்லியபடியே கலைந்து சென்றது அந்த கூட்டம்.
“டாக்டரா… என்னடி இது? இங்கயும் வந்து உன்னோட வேலையை தொடங்கிட்டியா?” மனைவியிடம் போலியாக அலறினான்.
“முகமெல்லாம் சிவந்து போயிருக்கே… டாக்டரம்மாவை ஓவரா புகழ்ந்துட்டாங்களோ?” கிண்டல் செய்து கொண்டே சிவந்து போயிருந்த சாருமதியின் மூக்கைப் பற்றி ஆட்டியவன், 
சட்டென்று அவள் நெற்றியில் கைவைத்து,”என்ன சாரு? உடம்பு நெருப்பா கொதிக்குது? இப்படி பேசாமல் உக்காந்திருக்க?” 
லேசாக கடிந்து கொண்டவன், அவள் கைப்பற்றி எழுப்பி வீட்டினுள் கூட்டிச்சென்று, தாயார் இரவு  சாப்பிடுவதற்கென்று ஹாட்பாக்ஸில் வைத்திருந்த இட்லியை தட்டில் போட்டு கொடுத்து,
“சாப்பிடு … மாத்திரை போட்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்கலாம்” என்று சொல்ல,
“ஒன்னும் இல்ல கிருஷ்ணா… ஜஸ்ட் கோல்ட்டால வந்த ஃபீவர் தான். எனக்கு கோல்ட் வந்தா இப்டி தான் ஆகும்.”
“ஓஹ்… அதான் அம்மணி ரொம்ப ஆசையா மழைல நனையணும்னு துடிச்சீங்களோ?” 
தனக்காக அவன் படும் கோபம் கூட ஒருவித சுகத்தை தர, சாப்பிட்டு, கையிலிருந்த மாத்திரையை போட்டு படுத்தவள், உறங்கியும் போனாள்.
இவனும் உண்டு வந்து பார்க்க, மாத்திரையின் உபயத்தால் முத்துமுத்தாக வியர்த்திருந்தாள் மனைவி. அவள் வியர்வை துடைத்து அவளருகில் படுத்தவனுக்கு,
‘ஓவர் உற்சாகம் உடம்புக்கு ஆகாதுன்னு, சொல்லுறது உண்மைதான் போல கிருஷ்ணா… காலையிலிருந்து நீ ஆடுன ஆட்டம் என்ன? மவனே இப்போ அடங்கிப் போய் படுத்துருக்கிறது என்ன?’ என்று தோன்ற, 
தன்னைப்போல சிரிப்பு வந்தவனுக்கு, ஏமாற்றத்தையும் தாண்டி இந்த ஏகாந்தத்தில் ஏனோ மனம் லயித்து தான் போயிருந்தது.
சாருமதி மறுநாள் காலை எழும்பும்போதே எட்டு மணியாகியிருந்தது. 
கிச்சனிலிருந்து பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்கவே அங்கு சென்றவள், அங்கே நின்று கொண்டிருந்த கிருஷ்ணாவிடம்,”இங்க என்ன பண்ணுற கிருஷ்ணா?” என்று கேட்க, 
“கஞ்சி வைக்குறேன் மா… பத்தியக் கஞ்சி” என்று தோள்தட்டியவன், சாருமதியின் கழுத்தில் கைவைத்து பார்த்து, காய்ச்சல் இல்லை என்பதில் திருப்தியடைய,
“உனக்கு இதெல்லாம் பண்ணத்தெரியுமா கிருஷ்ணா! எப்படி?” அதிசயத்தோடு கேட்டாள் சாருமதி. 
பின்னே, ராஜாவீட்டு கன்றுக்குட்டிக்கு இதெல்லாம் தெரிந்திருந்தால் அதிசயமாகத்தானே இருக்கும்!
“தெரியாது சாரு. ஆனால் ஒரு விஷயம் நமக்கு அவசியம்ன்னா கத்துக்கிடலாமே!” 
“யாரு அத்தைக்கிட்ட கேட்டு தெரிஞ்சிகிட்டயா?” 
“அடப்போம்மா… உங்க அத்தைக்கு மருமகளுக்கு காய்ச்சல்னு தெரிஞ்சா, வேற நல்ல டாக்டர்கிட்ட காமிக்கலாம்னு உன்னை வந்து அள்ளிட்டு போனாலும் போய்டுவாங்க” குரலில் கிண்டல் தெறிக்க சொன்னவனின் தோளில் அடித்தவள்
“யாருன்னு சொல்லு கிருஷ்ணா…” என்று சிணுங்க
“யு ட்யூப் இருக்க பயமேன்?” என்று ஃபோனை காட்டியவனிடம், 
“அடச்சீ… கஞ்சிக்கு யூ ட்யூப்… நாடு தாங்காது சாமி” என்றவளின் பூவதனம் பூரிப்பில் மின்னத்தான் செய்தது. 
பல்துலக்கி வந்தவளோடு  கிருஷ்ணாவும் கஞ்சியையேக் குடிக்க, சாருமதிக்கு தான் மனதே சரியில்லை. தன் மனதை மறைக்காது அவனிடம் சொல்லியது பெண்.
அவனோ,”பரவாயில்லை விடு… உடம்பு சரியாகி வந்து மாமனுக்கு விருந்தே வச்சிரு, மறந்துறாதம்மா… பிரியாணி… பிரியாணி விருந்து…” கண்சிமிட்டியபடியே தோப்புக்குள் இறங்கி சென்றவன், இரவுகளில் அவளை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யவே இல்லை.
வேலி போடும் இடத்தில் அந்த பக்கத்து நிலத்துக்காரர் வந்து தகராறு செய்ய, விஏஓ முன்னிலையில் நில அளவையரை வைத்து, சட்டப்படி நிலத்தை  அளந்து வேலிபோடுவதில் மும்முரமாக இருந்தான் கிருஷ்ணா.
அப்படி இப்படி என்று மூன்று நாட்கள் முடிந்திருக்க சாருமதியின் ஜலதோஷக் காய்சலும் அவளிடமிருந்து விடைபெற்று சென்றிருந்தது.
 அன்று  காலையிலேயே எழுந்து வெந்நீரில் குளித்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டவள், காலை உணவுக்கு சப்பாத்தி குருமா, மதியத்திற்கு சாம்பார், அவியலென்றும் அன்றைய சமையலை அசத்த
திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக சாருமதியின் கைச்சமையலைச் சாப்பிட்டவன்,”உங்க அம்மா கைபக்குவம் உனக்கு அப்படியே இருக்கு சாரு. அவங்களும் இப்படி தான் சூப்பரா சமைப்பாங்க” வேகமாக சொல்லிவிட்டவன், கொஞ்சம் திடுக்கிட்டு அவளைப் பார்க்க,
“அவங்க பொண்ணு அவங்களை மாதிரி சமைக்காமல் பக்கத்து வீட்டு ஆயா மாதிரியா சமைக்கும்?” கிண்டலாகச் சொல்லியவளின் பதிலில் ஆழமாக மூச்சை இழுத்து வெளியே விட்டான் கிருஷ்ணா…

Advertisement