Advertisement

சாருமதி.
அத்தியாயம் 21 (Prefinal episode)
“நானும் பாத்துட்டு தான் இருக்கேன், வந்த நாள்ல இருந்து நீ இந்த மூனு இட்லிக்கு அதிகமா ஒரு இட்லி கூட சாப்பிடுறது இல்லை” 
“இப்டி சாப்பாட்டை கொறிச்சா உடம்புல என்னது தான் ஒட்டும் சாரு…” 
மகனும், மருமகளும் காலை உணவுண்ண உட்கார்ந்திருக்க, பரிமாறிக் கொண்டிருந்த வேதவல்லி அதட்டிக்கொண்டே சாருமதியின் தட்டில் இன்னும் இரண்டு இட்லிகளை வைத்து,”சாப்பிடு…” என்று சொல்ல, பக்கத்தில் இருந்த கணவனை பரிதாபமாகப் பார்த்தாள் சாருமதி.
அவனோ,”நல்லா சொல்லு ம்மா, டாக்டரா இருந்துட்டு ஒரு ஹெல்த் கான்சியஸ் வேண்டாம்…” வேதவல்லியை இன்னும் கொஞ்சம் ஏத்திவிட, 
சாருமதியின் பரிதாபப்பார்வை இப்போது கோபப் பார்வையாக மாறி கிருஷ்ணாவை லேசாக முறைத்தது.
“உன் தட்டை பார்த்து சாப்பிடாமல், அங்க என்ன பார்வை?”  அதற்கும் ஒரு அதட்டல் வேதவல்லியிடமிருந்து வந்து விழ,
ஆசிரியைக்கு கட்டுப்படும் மாணவியாய் வேகவேகமாக உண்ண ஆரம்பித்தாள் சாருமதி. 
முந்தையநாள் இரவு மருத்துவமனைக்கு சென்றவள் மருத்துவர் நிர்மலாவோடு சேர்ந்து நல்லபடியாக இரண்டு பிரசவங்களையும் முடித்து வெளியே வரும்போது விடியற்காலை மூன்று மணியாகிவிட்டது.
‘இவ்வளவு நேரத்துக்கு வீட்டுக்கு எப்படி திரும்பி போவது? கிருஷ்ணாவை கூப்பிடவா? வேண்டாமா? பாதிதூக்கத்தில் எழுப்பினால் தொந்தரவாக இருக்குமா?’ யோசித்தவாரே காரிடாரில் நடந்து வந்து கொண்டிருந்தவளுக்கு,
மெல்லிய விளக்கொளியில் தன் டியூட்டி அறைக்கு முன்னால் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்த கிருஷ்ணாவை கண்டபோது எப்படி உணர்ந்தாளென்றே சொல்லமுடியவில்லை. 
அந்த நள்ளிரவில் சூரியனைக் கண்ட தாமரையாய் முகம் மலர்ந்தவள், ஓடிவந்து அவனருகே நின்று கொண்டு, அவன் தலைமுடியை தன் கையால் கலைத்து விட்டுக்கொண்டே “எப்டி கிருஷ்ணா நான் கூப்பிடாமலே சரியான நேரத்துக்கு வந்த?” வாயெல்லாம் பல்லாகிப் போனவளாகக் கேட்க, 
“எல்லாம் ஒரு சின்ன கெஸ்ஸிங் தான்” அலட்டாமல் பதில் சொல்லியவாறே பைக்கில் வீட்டுக்கு திரும்ப அழைத்து வந்திருந்தான் மனைவியை. 
லேட்டாக வந்து படுத்திருந்தாலும் கூட தினமும் கிளம்பும் நேரத்தில் மருத்துவமனைக்குச் போக இதோ புறப்பட்டு உட்கார்ந்திருக்கிறாள் சாருமதி. 
சாப்பிட்டு முடித்து இருவரும் கைகழுவி வர, கைகளில் கற்றை முத்திரைத்தாள் பத்திரத்தோடு வந்த பண்ணையார்,”கிருஷ்ணா… நம்ம மானூர் தோப்பு இருக்குல்ல, அது வரைக்கும் நீ போய்ட்டு வரலாமா?” என்று கேட்க,
“செங்கோட்டை பார்டர்ல இருக்கே, அதுக்கா ப்பா?” 
“ம்ம்…ஆமாடா! அந்த தோப்புக்கு வடக்கு எல்கைக்கு அடுத்தால உள்ள இடத்துக்கு சொந்தக்காரர், நம்ம இடத்துக்குள்ள ஆக்குபை பண்ணிட்டே வரார்னு நம்ம இடத்தை பாத்துக்குற கங்காணியார் ரொம்ப நாளா சொல்லிட்டே இருக்கார்” 
“அதான் தோப்பை சுத்தி கம்பி வேலி போட்டுடலாம்னு முடிவு செய்துருக்கேன். எல்லாம் ஏற்பாடாயாச்சு. நாளைலயிருந்து வேலை தொடங்குது.” 
“ஒரு மூனு நாலு நாள் இருக்கும் வேலை. அப்போ நாம யாராவது நின்னா நல்லாயிருக்கும்னு கங்காணியார் விருப்பப்படுறார்.”
“உனக்கும் எல்லாம் தெரியணும்ல, அதனால நீ போய்ட்டு வர்றியா? தங்குறதுக்கு வசதியா அங்க வீடும் இருக்குத்தானே”
செங்கோட்டை என்பது தென்காசியை அடுத்தாற்போல் இருக்கும் ஒரு பெரிய ஊராகும். அந்த ஊரின் முடிவு எல்லையிருந்து கேரளா தொடங்குகிறது. 
அதனாலேயே அதை செங்கோட்டை பார்டர் என்று அழைப்பது வழக்கத்திலிருக்கிறது. 
“ம்ம்… சரிப்பா… நான் போய்ட்டு வரேன்” தன்னுடைய விருப்பத்திற்கு சம்மதித்த மகனிடம்,
“எதுக்கும் இதையும் வச்சிக்க, தேவைப்படலாம்” என்றவாறே அந்த நிலத்துக்குரிய பத்திரங்களைக் கொடுத்தவர்,” எப்போ கெளம்ப போறப்பா?” என்று கேட்க
அவனோ,”நீயும் எங்கூட வர்றியா சாரு?” என்று மனைவியிடம் கேட்டான் ஆசையாக. கண்களோ,”பிளீஸ்… வரேன்னு சொல்லேன்” என்று அவளிடம் கெஞ்சியது. 
அவனது ஆர்வத்தை பார்த்தவளுக்கு, உடன் செல்ல ஆசை கிளர்ந்தாலும்,”நானா? நானெப்படி…? ஹாஸ்பிடல்…” என்று தடுமாற, 
“நீயும் வேணும்னா தம்பி கூட போய்ட்டு வாம்மா… நீ வர்றவரைக்கும் நான் இங்க வேற டாக்டர் போட்டுக்குறேன்” 
தன் ஐயாவின் பதிலில் சந்தோஷமாக தலையாட்டியபடியே வேதவல்லியைப் பார்க்க, அவரோ மகனிடம்,”அது ரொம்ப சின்ன வீடுடா… அங்க எப்படி சாருமதியோட?…” என்று இழுத்தார்.
“ஒருஹால், பெட்ரூம், கிச்சனோடு இருக்கிற வீடு உனக்கு சின்னவீடாமா? ஒரு மூனு நாள் தங்குறதுக்கு அது போதாதா?…” அவசர அவசரமாக கேட்ட மகனின் குரலே மனைவியோடு அங்கே போவதிலிருக்கும் ஆவலை அந்த தாய்க்கு சொல்லியது.
அதற்கு மேலும் தடுப்பது நாகரீகமில்லை என்பதால்,”சரி…” என்று ஒத்துக்கொண்டார் வேதவல்லி.
“அப்போ நீ மத்தியானம் வரைக்கும் ஹாஸ்பிடல் போய்ட்டு வா சாரு. மத்தியானம் சாப்பாட்டுக்கு பிறகு நாம கிளம்புனா, சரியா இருக்கும்” ஆர்வமாக கிளம்ப ஆயத்தங்களை செய்ய ஆரம்பித்தான் கிருஷ்ணா.
*******************
‘மாசி மாசம் ஆளானப் பொண்ணு 
மாமன் எனக்குத் தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்கு தானே…’
தங்களின் மந்திரக்குரலில் ஜேசுதாஸூம், ஸ்வர்ணலதாவும் மயக்கிக் கொண்டிருக்க, கூடவே சேர்ந்து பாடிக்கொண்டு அந்த மகேந்ரா போலேரோவை விரட்டிக் கொண்டிருந்தான் கிருஷ்ணா. 
“தோட்டத்துக்கு வேலி போடுறதைப் பாக்கப் போனமாதிரி இல்லை. ஏதோ பொண்டாட்டி கூட ஹனிமூனுக்கு கிளம்பி போனமாதிரி இருக்கு உன் பில்டப்பு” அருகிலிருந்த சாருமதியின் கிண்டல் மொழியில் 
“பின்ன இல்லையா? அது பாட்டுக்கு அது… இது பாட்டுக்கு இது” கண்களைச் சிமிட்டியபடிச் சொல்லியவன்,
“ஏ… ஆசை நான் கொண்டு வந்தால், அள்ளித் தேன்கொள்ள வந்தால்… மயங்கி கிறங்க… கிறங்கி உறங்க… ஓஹோஹோ…” என்று அடுத்த வரிகளோடு ஒன்றி உச்சஸ்தாயியில் பாட,
“ஹையோ… இந்த லூஸூ கிருஷ்ணா கூட முழுசா மூனு நாளு நான் தனியா கழிக்கணுமே! ஆண்டவா! நீ தான் என்னை காப்பாத்தணும்” கையை கூப்பியபடி பொய்யாய் தன் பிரார்த்தனையை வைத்த மனைவியைப் பார்த்து,
“பொய் சொல்லக்கூடாது காதலி…
பொய் சொன்னாலும் நீயே என் காதலி” என்று அழகாகப் பாடினான் கிருஷ்ணா.
“கன்ஃபார்ம்… தான்” மையலாகச் சிரித்தவள், சாலைக்கு இருமருங்கிலும் காரின் வேகத்துக்கு ஈடுகொடுத்து வேகமாக மறைந்து பின்னால் சென்ற மரங்களடர்ந்த பகுதிகளைப் பார்த்து,
“காடு மாதிரியே எவ்ளோ அடர்த்தியா மரங்கள் இருக்குல்ல கிருஷ்ணா” என்று கேட்க
“ம்ம்… செங்கோட்டை தாண்டிட்டுல்ல சாரு, இனி இப்படித்தான் இருக்கும்” என்றவன், 
“கிளைமேட் கூட கொஞ்சம் சேன்ஜ்ஜாகிட்டு பாரு… சில்லுன்னு இப்போ மழை வர்ற மாதிரி மேகம் கறுத்துட்டு நல்லாயிருக்கில்ல” ரசித்து சொன்னான்.
அவன் வார்த்தைக்காக காத்திருந்தது போல வானமகளும் பூந்தூறலாய் மழையைத் தூவ,
“கிருஷ்ணா… கிருஷ்ணா ‌… பிளீஸ்ஸ்… கிருஷ்ணா…இங்க கொஞ்சம் வண்டியை  ஸ்டாப் பண்ணுறியா? அத்தை ஃப்ளாக்ஸ்க்ல டீ வச்சிருக்காங்க… அதை அப்படியே இந்த தூத்தல்ல நனைஞ்சிட்டே  குடிச்சிட்டு போலாம்” 
சிறுபிள்ளையென கெஞ்சிய மனைவியின் ஆசையை மறுக்க மனமின்றி சாலையோரம் வண்டியை ஒதுக்கி நிறுத்தியவன், இறங்கி காரின் பானட்டில் ஏறி அமர்ந்து கொள்ள, 
சாருமதியோ, இறங்கி இருகைகளையும் விரித்து ஒரு சுற்று சுற்றி சிலிர்த்தபடி ப்ளாஸ்க் இருந்த பேகை எடுத்தாள்.
முதலில் அதிலிருந்த மேரிகோல்ட் பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து காரின் பானட்டின் மீது வைத்து,”எடுத்துக்கோ கிருஷ்ணா!” என்றவாறே இரண்டு டம்ளரில் டீயை ஊற்றி ஒன்றை அவன் கையில் கொடுத்தாள்.
மற்றொன்றை தன் கையில் எடுத்துக் கொண்டு அவனருகே சென்று நின்று கொண்டு தனக்கும் பிஸ்கட் எடுக்க முயல, 
தன் கையிலிருந்த பிஸ்கட்டை டீயில் நனைத்து மனைவிக்கு ஊட்டினான் கிருஷ்ணா. மறுக்காமல் சிறுபுன்னகையோடு வாங்கிக்கொண்டவளிடம்,
“எனக்கில்லையா?” என்று திருப்பிக் கேட்க,
அவளோ, பிஸ்கட் இருந்த அவன் கையைப் பற்றி, அவன் டீயிலேயே நனைத்து, அவன் கைமூலமாகவே அவன் வாயில் வைக்க,”சாமார்த்தியம் தான் டி உனக்கு…” என்றவன்,
“இது எத்தனை நாளைக்குன்னு நானும் பாக்கத்தானே போறேன், இல்லல்ல… சின்ன கரெக்ஷன் எத்தனை மணிநேரத்துக்கு” என்று வில்லங்கமாகச் சொல்லிச் சிரிக்க,
செங்கொழுந்தாகிப் போனவள் எதையும் கேட்காதவள் போன்ற பாவனையில், இரண்டுபேரும் டீ குடித்த டம்ளரை கையிலிருந்த தண்ணீரில் கழுவி மறுபடியும் எல்லாவற்றையும் பேக்கில் அடைத்து விட்டு, காரில் ஏறி தன்னிடத்தில் அமர்ந்து கொண்டு,
“சீக்கிரம் வா… கிருஷ்ணா! நேரமாகுது” என்று அவனையும் அழைத்தாள். 
அதுவரை அவளின் செயல்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன்,”பார்றா… அம்மணிக்கு தேவைன்னா இறங்கணும். இப்போ காரியம் முடிஞ்சதும் நேரமாகுதா? ஹ்ம்ம்…” சொல்லியபடியே ட்ரைவர் சீட்டில் ஏறியமர்ந்து காரை உயிர்பித்தான்.
கருத்தொருமித்திருந்த இரு உள்ளங்களும் காற்றை விட வேகமாக மானூர் கிராமத்தை நோக்கிப் பறக்க, அவர்களுக்கு ஈடுகொடுத்து அந்த போலேரோவும் காற்றைத் கிழித்துக் கொண்டு வேகமாக பறந்தது.
கிட்டத்தட்ட மூன்று மணிநேர பிரயாணத்திற்கு பிறகு அந்த கிராமத்திற்கு வந்து சேர்ந்திருந்தார்கள். 
அவர்களது கிராமத்தைப் போலவே உள்ளடங்கியே இருந்தது அந்த கிராமம். ஆனால் எங்கு நோக்கிலும் பசுமை… பசுமை… பசுமை மட்டுமே. 
ஊருக்குள் நுழைந்து சிறிதுநேர பயணத்திற்குப் பின், ஒரு காம்பவுண்ட் சுவரில் திறந்து வைக்கப்பட்டிருந்த கேட் வழியே தோப்புக்குள் சிறிது தூரம் சென்று அங்கிருந்த சிறிய வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான் கிருஷ்ணா. 
“இறங்கு சாரு! இது தான் நம்ம தோப்பு… இதுதான் இப்போதைக்கு நம்ம வசந்த மாளிகை” 
சொல்லியபடியே இறங்கியவனை பின்பற்றி தன்பக்க கதவை திறந்து இறங்கியவள், அப்படியே கண்களை சுழற்றிப்பார்க்க
தென்னை மரங்களடர்ந்த தோப்பு அது. பல வருஷங்கள் கண்ட மரங்கள் என்பது அதை பார்க்கும் போதே தெரிந்தது. 
அதன் நடுவே கேரளபாணியில் அமைந்திருந்த அந்த வீடு அழகாக இருந்தது. வீட்டு முன்னே நின்ற மாமரத்திலும் பலாமரத்திலும் வெற்றிலைக் கொடியும், மிளகுக் கொடியும் படத்தி விடப்பட்டிருந்தது. 

Advertisement