Advertisement

“நான் என்னைக்கு உம்மேல நம்பிக்கை இல்லைன்னு சொன்னேன் கிருஷ்ணா?” என்றாள் மெதுவாக.
கேட்டபின் தான், தன் கேள்வியில் இருந்த அபத்தம் அவளுக்குப் புரிய, சட்டென்று  பல்லால் நாக்கை கடித்து ஒரு அப்பாவி சிரிப்பை சிரித்துவைக்க,
“அடடா… மேடத்துக்கு எம்மேல டன் டன்னா  நம்பிக்கை இருந்ததுனால தான், நான் ரூமுக்குள்ள வரும்போது நீங்க தூங்காமயிருந்தா, அப்படியே தூக்கி முழுங்கிடுவேன்னு நினைச்சு  தூங்கிடுறீங்களோ?”
“ஆமாம் உண்மையாவே தூங்குனீங்களா?… இல்ல அதுவும் நடிப்பா?
எல்லாம் சரியாகிவிட்டது என்ற எண்ணத்தில் இருந்தவனுக்கு எதுவுமே சரியாகவில்லை என்று சொல்லாமல் சொன்ன சாருமதியின் செயல்கள் கொஞ்சம் ஏமாற்றத்தை உண்டாக்கியிருக்க, தன் ஏமாற்றத்தின் வலியை வார்த்தைகளில் காட்டினான்.
 சாருமதிக்கு தன்னுடைய தவறும் அதனால் கிருஷ்ணாவின் மனதில் எழுந்த கோபமும் தெளிவாகப் புரிய,’இத்தோடு இதை முடிவுக்கு கொண்டு வந்துவிட வேண்டும்’ என்ற எண்ணத்தோடு’
“நான் பண்ணுனது தப்பு தான் சார்… அது உங்களை ஹர்ட் பண்ணியிருந்தா சாரி சார்… இனிமேல் சார்… இந்த மாதிரி சார், தப்பித்தவறிக் கூட செய்யமாட்டேன் சார்… இவ்வளவு போதுமா சார்.. இல்லை நீல்டவுண் ஏதும் போட்டு நிக்கணுங்களா சார்…” 
கைகளிரண்டையும் பெருக்கற்குறி போல் வைத்துக் கொண்டு, விரல்களால் இருகாது நுனியையும் பிடித்தவள் லேசாக குனிந்து பவ்யமாகக் கேட்பதுபோல கேட்க, 
அவள் செய்கையில் சிரிப்பு வந்தாலும் இம்மியளவு கூட அதை வெளியே காட்டிக்கொள்ளாதவன்,”அதெல்லாம் தேவையில்லை. நீ செய்யமாட்டேன்னு சொன்னதை செயல்ல செய்துகாட்டு அதே போதும்” என்றபடியே தூங்க முற்பட்டான்.
“கிருஷ்…ணா… அதான் சாரி கேட்டுட்டேன்ல… அப்புறமும் நீ தூங்கப் போனா என்ன அர்த்தம்?” அவனருகே உட்கார்ந்து சிணுங்கியவளுக்கு போட்டியாக கிருஷ்ணாவிற்கு அந்த பக்கத்திலிருந்த அவனுடைய ஃபோனும் சிணுங்க, 
சட்டென்று அவன்மீது கவிழ்ந்து அவனுக்கு முன்னமே அந்த ஃபோனைக் கைப்பற்றியவள், அழைத்தது யாரென்று பார்க்க, தனா என்றவுடன் ஃபோனை ஆன் செய்து அவன் கையில் கொடுத்தாள்.
‘ஹையோ… இன்னைக்கு இவ என்னை ஒருவழியாக்காமல் தூங்கமாட்டா போலயே’ சுகமாக அலுத்துக்கொண்டவன், எழுந்து உட்கார்ந்து ஃபோனை காதில் வைத்து,”ம்ம்…சொல்லுடா…” என்றான். 
எதிர்பக்கத்திலிருந்த தனா, எடுத்தவுடனே, “மச்சான்! காயத்ரி டிகிரி கம்ப்ளீட் பண்ணுனதும் எங்க மேரேஜை வச்சிக்கிடலாமா டா?” என்று கேட்க, 
“ஹலோ! தனா… ஹலோ… என்ன சொல்லுற? ஒன்னுமே கேக்கமாட்டேங்குது டா…, திரும்பச் சொல்லு” சொல்லிக்கொண்டே ஸ்பீக்கரை ஆன் செய்தான்.
நண்பன் சொல்லியதை நம்பி தான் ஏற்கனவே சொல்லியதை திரும்பவும் தனா சொல்ல, அதைக் கேட்டுக்கொண்டிருந்த சாருமதியின் முகத்திலும் புன்னகை தவழ்ந்தது.
ஆமாம்… தனா காயத்ரியை விரும்புவதை, பேச்சுவாக்கில்  மனைவியின் காதில், தற்போது யாருக்கும் இந்த விஷயம் தெரியவேண்டாம் என்ற நிபந்தனையோடு போட்டு வைத்திருந்தான் கிருஷ்ணா. 
அதேபோல, காதலெனும் விஷயத்தில் காயத்ரிக்கு கிடைத்த மோசமான அனுபவத்தால், நேரடியாக அவளிடம் தான் காதல் சொல்லப்போவதில்லை என்றும், பெற்றோர் மூலம் நிச்சயிக்கப்பட்ட திருமணம் போலவே கல்யாணம் செய்து கொள்கிறேன் என்ற தனாவின்  முடிவும் கூட சாருமதிக்கு தெரியும். 
“டேய்… கேட்டுச்சா… இல்லியா? பதில் சொல்லுடா?” அந்தப்பக்கம் இருந்து தனா கத்த
“ஹ்ம்ம்… கேக்குது…கேக்குது … ஆனால் இப்ப உடனே எல்லாம் கல்யாணம் பண்ணிதர முடியாது” 
“ஏன்டா?”
“டிகிரி முடிச்சா ஆச்சா? அதுக்கு மேல எதுவும் படிக்க வேண்டாமா?” 
“ஏன்? காயூ, மேல படிக்கணும்னு ஏதும் ஆசப்படுறாளா என்ன?”
“அவ ஆசப்பட்டாதானா? நல்லதை நாமளும் சொல்லிக் குடுக்கலாம்? அடுத்ததா பிஎட் படிக்கச் சொல்லணும். படிச்சா நம்ம ஸ்கூல்லயே கூட வேலை எடுத்துடலாம் பாரு”
உண்மையிலே காயத்ரியை பிஎட் படிக்கச்சொல்ல வேண்டும் என்ற எண்ணம் கிருஷ்ணாவுக்கு இருக்கத்தான் செய்கிறது. அதையே தனாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான். ஆனால் தனாவோ,
“அடப்பாவி… நீ மட்டும் கல்யாணம் பண்ணி குடும்பத்தோட குஜாலாயிருக்கணும். நான் ஊர்ல வேலைபாக்குற டீச்சர் பொண்டாட்டியை அங்கயே விட்டுட்டு, தனியா இங்க வந்து கும்மியடிக்கணுமா? நல்லாயிருக்கு டா உன் திட்டம்” 
அங்கலாய்ப்பாக உதிர்த்த தனாவின் வார்த்தைகளில் சாருமதி கிளுக்கிச் சிரித்துவிட,”டேய்! யாருடா அது? சாருமதியா? அப்போ அந்த புள்ளையும் இவ்வளவு நேரமும் எம்பேச்சை கேட்டுட்டு தான் இருந்தாப்லயா? மவனே உன்ன…”
ஏதோ அங்கிருந்தே கிருஷ்ணாவை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுபவன் போல உருண்டவன்,”ஆமா… சாருமதிக்கு எல்லாம் தெரியுமா என்ன?” என்று ரகசியக் குரலில் கேட்க
“ம்ம்… எனக்கு மட்டும் எல்லாம் தெரியும் தனா” சிரிப்போடு பதில் சொன்னவள், 
 “தனா! வருங்கால மனைவியோட அக்காவை இனிமேல் பேரைச் சொல்லியெல்லாம் கூப்பிடாத. அண்ணின்னு மரியாதையாவே கூப்பிடு சரியா? விளையாட்டாகச் சொல்ல
 “பிள்ளபூச்சிக்கு கொடுக்கு முளைச்சாப்லன்னு நம்ம ஊர்காட்ல சொல்லுவாங்கல்ல சாரு! அதை இன்னைக்கு நான் அனுபவத்துல பார்க்கவே செய்துட்டேன்” அதிகப்படியான கிண்டலை குரலில் குழைத்து பேசியவன்,
“எதுக்கும் நீ சொன்ன வார்த்தையை ஒரு நாலஞ்சு நாள் சொல்லிபாத்து ட்ரெயினிங் எடுத்துட்டே வரேன். இப்போ ஃபோனை வைக்கிறேன், என் நண்பன் அந்த நல்லவன்கிட்ட சொல்லிடு” என்றவாறே  ஃபோனை வைத்துவிட
முகம் முழுவதும் விரிந்த சிரிப்போடு, தன்னையே எட்டாம் அதிசயம் போல பார்த்துக்கொண்டிருந்த கணவனின் கையில் ஃபோனை கொடுத்தவள்
சட்டென்று உணர்ச்சிப் பிளம்பாக மாறி,”நீங்க ரெண்டு பேரும் இல்லைன்னா அன்னைக்கு என் தங்கச்சியோட நிலமை…” லேசாக கேவியபடியே கிருஷ்ணாவின் மார்பில் சாய்ந்து முகத்தை தேய்க்க,
 ஆறுதல் வேண்டி தன்னிடமே சரணடைந்தவளை நம்பமுடியாதவனாக பார்த்தவன், சுதாரித்துக் கொண்டு தன் கையால் மனைவியை மார்போடு அணைத்து, “நடந்ததை பத்தியே பேசிட்டு இருக்காத சாரு… இனி என்ன நடக்கணுமோ அதை மட்டும் பாரு!” 
லேசான கண்டிப்பு த்வனியில் வந்த குரலில், இயல்புக்கு வந்தவள், கிருஷ்ணாவின் அணைப்பில் வாகாக பொருந்திக்கொண்டு தங்கையின் வாழ்வில் அடுத்து என்ன என்பது குறித்து அவனோடு திட்டமிட ஆரம்பித்தாள்.
 பேச்சின் இடையே,”நான் சொல்றதை தப்பா எடுத்துக்க கூடாது சாரு!” பீடிகையோடு பேச்சை ஆரம்பித்த கிருஷ்ணாவை யோசனையோடு பெண்ணவள் நிமிர்ந்து பார்க்க,
 “இல்ல…உங்க வீடு ரொம்ப சின்னது சாரு. காயத்ரி கல்யாணத்துக்கு முன்னாடி கொஞ்சம் பெரிசா கட்டுவமா?
அப்போதான் கல்யாணத்துக்கு பிறகு காயத்ரிக்கும் வந்து போக நல்லாருக்கும்” தயங்கித் தயங்கித் தான் கேட்டான்.
 பின்னே, தன் பிறந்த வீட்டின் வசதியின்மையை சொல்லிக் காட்டுகிறானென்று தவறாக நினைத்து விடக்கூடாதே! 
“ம்ம்… நானும் எத்தனையோ தடவை இதை நினைச்சிருக்கேன் கிருஷ்ணா. ரகு வந்து வேலையில் ஜாயின் பண்ணட்டும் அப்புறமா ஒரு லோன் போட்டு கட்டலாம்” 
தன் வார்த்தைகளை புரிந்து கொண்டு பதில் தந்த மனைவியை லேசாக இறுக்கி அணைத்து,”சமத்து சாரு…” என்றபடியே உச்சிமுத்தம் ஒன்றை வைக்க,
“எனக்கொரு சந்தேகம் கிருஷ்ணா!” தன் மார்பிலிருந்தே முகம் நிமிர்ந்தி கேட்டவளிடம், 
“இப்படியே சமத்து சாருவாக இருப்பது எப்படின்னு ஏதும் கிளாஸ் எடுக்கணுமா என்ன? சொல்லு நான் ரெடி” அவள் கன்னக்கதுப்புகளை தடவியபடியே குறும்பாக கேட்டவனிடம்,
“ஹையோ… ரொம்பத்தான்… நாங்களே இனி சமத்தா இருக்கணும்ன்னு டிசைட் பண்ணிட்டோம். அதனால அந்த விஷயத்தில் உன் கைடன்ஸ் எனக்கு இனித் தேவைப்படாது”
“ஆனால், நம்ம கல்யாணம் முடிஞ்சு இந்த ரூமுக்கு வந்த நாள்ல இருந்து, அந்த ரூம் எதுக்குன்னு யோசிச்சு யோசிச்சு மண்டைகாயுது எனக்கு. அது மட்டும் எதுக்குன்னு நீதான் சொல்லணும்”
முதல்நாள் கிருஷ்ணா நுழைந்து கொண்ட அறையை  காட்டி கேட்க,”அதுவும் பெட்ரூம் தான்” என்றான் கணவன்
“என்னது? பெட்ரூமுக்குள்ளேயே பெட்ரூமா?” வாயைப் பிளந்தவள்,
“ஒருவேளை கம்பிள்ஸ்குள்ள சண்டை வந்தால் யாருக்கும் தெரியாமல் ஒரே ரூம்ல தனித்தனியா இருந்துக்கலாம்னு யோசிச்சு கட்டியிருப்பாங்களோ?” 
ஏதோ பெரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்தவள் போல கேட்டவள்,”அப்படித்தான் இருக்கும்… அதான் ஃபர்ஸ்ட் நாளே உனக்கு யூஸ் ஆச்சுல்ல”  
வாயைப்  பொத்தி சிரித்தபடியே சொன்னவளின்  காதைப்பிடித்து லேசாக முறுக்கி,”எப்போ பாரு சண்டப் போடுறதுலயே குறியா இருக்குறது” என்றவன்
“அது பெட்ரூம் தான்… ஆனால் பேபீஸ் பெட்ரூம்” என்று சொல்லிமுடிக்கவில்லை, அவ்வளவு தான்… சட்டென்று அவன் அணைப்பிலிருந்து விலகியவள் மெல்லிய அதிர்ச்சியோடு,
“என்னது… பேபீஸ் பெட்ரூமா?”
“ஹ்ம்ம்…”
“பிள்ளைங்கள மட்டும் தனியா படுக்கவைக்கிறதுக்கா?”
“ஆமா…”
“நானெல்லாம் நம்ம பிள்ளைங்களை தனியா படுக்கவைக்க மாட்டேன் ப்பா… அதான் நம்ம பெட்ல நம்ம இரண்டு பேருக்கிடையில இரண்டு பிள்ளைங்களை படுக்க வைக்கிற அளவுக்கு இடமிருக்கே.. அப்புறம் என்ன?” 
“அதுவும் காணலையா? இவ்ளோ பெரிய பெட்ரூம் இருக்கு. அதுல நம்ம பக்கத்துலயே இன்னொரு பெரிய கட்டில் வாங்கி போட்டா போச்சு. நம்ம பிள்ளைங்க நம்ம கூடவே தான் இருக்கணும். அதைவிட்டுட்டு பேபீஸ் ரூம்… அப்பிடி இப்டி ன்னு ஏதாவது சொன்னா எனக்கு பொல்லாத கோபம் வந்துடும் கிருஷ்ணா” 
மடைதிறந்த வெள்ளம்போல இயல்பாக தன் உள்ளத்து எண்ணங்களை  கொட்டியவளுக்கு, தன்னையே வைத்தகண் வாங்காது பார்த்திருக்கும் கணவனை கண்டபின் தான், தன் பேச்சின் சாராம்சம் புரிந்தது.
முகமெங்கும் வெட்கப்பூக்கள் பூக்க,”கிருஷ்ணா…” என்று சிணுங்கியவளை வாரியணைத்து தன்னோடு சேர்த்தணைத்தவன்,
“ராட்சஷி… இந்த அளவுக்கு மனசுக்குள்ள என்னை சுமந்துட்டு, அதை எங்கிட்டயே நீ காட்டலைப் பாத்தியா?”
“இத்தனை நாள் என்னை ஏமாத்துனதுக்கு தண்டனை தந்தேயாகணுமே! உன்னை என்ன செய்யலாம்?” சொல்லியபடியே தன்னவளை எலும்பு நொறுங்கும்படி இறுக்கி அணைத்து தன் ஆளுமைக்குள் கிருஷ்ணா கொண்டு வர,
அங்கே சட்டென்று மாறிய சூழ்நிலையில் சடசடவென்று காதல் தீ பற்றிக்கொள்ள, முத்தமழையைப் பொழிந்து அதை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டான் கிருஷ்ணா.
ஆரம்பத்தில் சிறுநடுக்கம் இருந்தாலும் தன்னை ஒப்புக்கொடுத்தவளின் செயலில் இன்னும்… இன்னும்…  என்று அவளில் மூழ்கத்தொடங்கிய நேரம், சாருமதியின் கைபேசி சிணுங்கி அவளை அழைத்தது.
அதன் பிரத்யேக அழைப்பிலேயே டாக்டர் நிர்மலா தான் அழைக்கிறார் என்று சாருமதிக்கு தெரிந்து விட,
“கிருஷ்ணா! ஹாஸ்பிடல்ல இருந்து ஃபோன்” என்றாள் கிசுகிசுப்பாக
“ப்ச்ச்… இந்நேரத்துக்கு எதுக்கு கூப்பிடுறாங்க?” லேசான சலிப்பிருந்தது கணவனின் குரலில்.
“ஃபோனை அட்டண்ட் பண்ணுனாத்தானே தெரியும்” கைநீட்டி பேசியை எடுத்து காதில் வைத்து,”இதோ… பத்து நிமிடத்தில் வரேன் டாக்டர்” என்ற பதிலைச் சொல்ல, 
முகத்தில் ஒரு ஏமாற்ற உணர்வு சூழ, தன்னை பார்த்த கணவனிடம்,”திடீர்னு ஒரேநேரத்தில இரண்டு டெலிவரி கேஸ் வந்திடிச்சாம் கிருஷ்ணா. நைட் நேரம் வேற… அதான் ஹெல்ப்புக்கு கூப்பிடுறாங்க” 
“நம்ம சந்தோஷத்தை விட அடுத்தவங்க வாழ்க்கையில் சந்தோஷத்தை கொண்டு வர்றது பெரிய விஷயமில்லையா?” 
“நாம எங்க ஓடிரப்போறோம்? இல்லை நம்ம வாழ்க்கை தான் எங்க ஓடிரப்போகுது? இப்போ நான் போய்ட்டு வரட்டுமா கிருஷ்ணா…” கணவனின் பதிலை எதிர்பார்த்து நின்றாள்.
தங்கள் வாழ்க்கையில், தான் இதே மாதிரியான நிறைய தருணங்களை கண்டிப்பாக கடந்து வரவேண்டியிருக்கும் என்பது புரிந்தவனாய்,
“கிளம்பு கொண்டு விட்டுட்டு வரேன்” சொல்லிவிட்டு முன்னே சென்றவனைக் கைபற்றி இழுத்து தன் மொத்த அன்பையும் திரட்டி கணவனின் கன்னங்களில் முத்தமாகக் கொடுத்து கூட நடந்தாள் சாருமதி…
  

Advertisement