Advertisement

சாருமதி
அத்தியாயம் 2௦
பித்தனைப்போல பிதற்றிக் கொண்டிருந்தவனை, சுயநினைவுக்குக் கொண்டுவர, அதட்டிப்பேசியும் முடியாமல் போகவே எதைப்பற்றியும் யோசிக்காமல்  இதழணைத்துவிட்டாள் சாருமதி. 
அந்த மருத்துவ முத்தம் தன் வேலையைச் சரியாகச் செய்ய இயல்புக்கு திரும்பியவனுக்கு, மனைவியின் செயலில் உடலெங்கும் சந்தோஷ மின்சாரம் உச்சபட்ச அலைவரிசையில் தாக்குதல் நடத்த, 
சற்றும் தாமதியாமல் அருகிலிருந்தவளின்  இடையைப்பற்றி தன்பக்கமாக இழுத்தவன், தன்னவளின் இதழமுதம் மொத்தத்தையும் மிச்சமின்றி தன் ஒற்றை இதழணைப்பில் கொள்ளை கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டான்.
தன்னுடைய செயலை அவனுடையதாக்கிக் கொண்டபோதே கணவன் இயல்புக்கு திரும்பிவிட்டான் என்பதை புரிந்து கொண்ட சாருமதி, இருக்குமிடம் உணர்ந்து முத்த யுத்தத்திலிருந்து பின்வாங்க முயற்சிக்க,
 காளையவனோ, அவள் முயற்சிகள் அனைத்தனையும் முறியடித்து வெற்றிக்கொடியை நாட்டிவிடும் முயற்சியில் படு தீவிரமாக இருந்தான்.
 தன்னை மறந்து, முத்தக்கடலில் முக்குளித்துக் கொண்டிருப்பவனுக்கு இருக்குமிடத்தை உணர்த்தவேண்டிய கட்டாயத்திலிருந்தவள்,
 வேறுவழியில்லாமல் கணவனின் உதடுகளை தனது பச்சரிசிபற்கொண்டு வெடுக்கென்று கடித்து, கண்களை உருட்டி தங்கள் முன்னால் நீண்டிருந்த சாலையைக் காட்ட, 
மனைவியின் செயலில் சுற்றுப்புறம் உணர்ந்து அவளை தன் பிடியிலிருந்து மெதுவாக விலக அனுமதித்தவன், சிரித்தபடியே தன் தலைகோதி, உதடுகளை மடித்து பற்களால் லேசாக கடித்து விடுவித்தவன், சரசக்குரலில்,
“பாதி சாப்பாட்டுல இழுத்துட்டு வந்தேன்… உண்மை தான்… அதுக்காக இப்டியா?” விஷமமாகக் கேட்டு கண்சிமிட்டினான்‌.
‘ஹையோ… இவனுக்கு பாவம் பார்க்கப்போய், இப்போ நீயே இப்டி பரிதாபமா முழிக்கிறியே சாரு! உனக்கு இது தேவையா?’ தன்னைத்தானே கேட்டுக்கொண்டவள் வெட்கத்தில் சிவந்து போய், இருக்கையில் கண்மூடி சாய்ந்து கொள்ள, 
அவள் தனக்கு தந்த அதே தண்ணீர்பாட்டிலின்  மூடியைத் திறந்து  அவள் கையைப்பற்றி  வைத்து,”குடி…” என்று சொன்னான்.
அந்த நேரம் அவளுக்கும் அது தேவையாக இருந்தபடியால் அவசர அவசரமாக தன்வாயில் சரித்துக்கொள்ள, அதுவும் கூட எட்டப்பனாய் மாறி அவளின் பதட்டத்தின் அளவை அழகாகக் காட்டிக் கொடுத்தது அவனுக்கு. 
ரோஜாக்களில் சிதறியிருக்கும் பனித்துளிபோல அவள் முகத்தில் சிதறியிருந்த நீரை துடைக்க முற்படவனின் கையை சட்டென்று பிடித்துக்கொண்டவள், “போலாம் கிருஷ்ணா…” என்றாள் காற்றாகிப்போன குரலில்.
ஒரு நிமிடம் அவள் முகத்தையே ஆழ்ந்து பார்த்தவன், அதற்கு மேலும் அவளை சோதிக்க விரும்பாதவனாய் அவள் கையிலிருந்த மீதி தண்ணீரை வாங்கி கடகடவென்று குடித்துவிட்டு, காரைக் கிளப்பினான். 
 முன்னால் வந்ததற்க்கு நேர்மாறாக நிதானமாக போய்க்கொண்டிருந்த கார் நாகர்கோவிலை அடைந்து பிரபல ஹோட்டலின் முன்னால் போய் நின்றது. 
“இங்கே எதற்கு?” பார்வையாலே கேட்டவளுக்கு,
“நாம வீட்டுக்கு போய் சேர இன்னும் டைமாகும். அதுக்குள்ள பசிக்குதுன்னு சொல்லி நீ…” அதற்குமேல் சொல்லாமல் இழுத்தவன், விஷமமாய் சிரிக்க
அவன் கேலி புரிந்தவளுக்கு, வெட்கம் பிடுங்கித் தின்றாலும், கணவனின் இந்த புது அவதாரத்தில் கொஞ்சம் மிரண்டுபோய் தான் நின்றாள்.
ஏற்கனவே சிறிதளவு சாப்பிட்டதாலோ இல்லை இதோ சற்றுமுன் நடந்த எதிர்பாராத நிகழ்வுகளாலோ பசி மந்தித்து போயிருக்க உணவு வேண்டாமென்று மறுத்தவளை, அதட்டி உருட்டி சாப்பிடவைத்து காருக்கு அழைத்து வந்திருந்தான்.
அதன் பிறகான பிரயாணநேரம் பேச்சின்றி அமைதியாக கழிய, அதற்கு நேர்மாறாக ஆணவனின் வண்டாய் துளைத்த பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தவித்துப் போனது அந்த பெண்மை. 
காரின் வின்டோ கிளாஸை இறக்கிவிட்டு வெளியே பார்த்து வருவதுபோல தன் வெட்கம் மறைத்து வீடுவந்து சேர்ந்தாள் சாருமதி. 
 இரண்டு நாட்கள்  கழித்து தான் திரும்பி வருவோமென்று சொல்லி தன் பிறந்த வீட்டுக்குச் சென்ற மகன், மனைவியோடு மறுநாளே வந்து நிற்க, கேள்வியோடு தான் அவர்களை எதிர்கொண்டார் வேதவல்லி.
ஆனால் உண்மையான காரணத்தை வேதவல்லியிடம் சொல்லாமல், கணவன் மனைவி இருவருமே சமாளித்துவிட்டார்கள்.
தேனிலவு சென்று திரும்பி வந்த தம்பதியரின் முகத்தைப் போல ஜொலித்துக்கிடந்த இருவரின் முகமும்  அங்கு நடந்த எதையுமே இங்கு வந்து எதிரொலிக்கவில்லை. 
அதனால் மகனின் சமாளிப்பை உண்மையென்றே நம்பிவிட்டார் வேதவல்லி.
தங்களது அறைக்கு வந்து கிருஷ்ணா உடைமாற்றிக் கொண்டு,”நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு சாரு! நான் நம்ம தோப்புவரைக்கும் போய்ட்டு வந்துடுறேன்” என்றவாரே வெளியே கிளம்பிச் சென்றான்.
மனம் என்னவோ மனைவியோடு இருக்க விரும்பினாலும், கொஞ்சம் அதிர்ந்தாற்போல இருந்த மனைவிக்கு தனிமை கொடுத்து வெளியே சென்றிருந்தான்.
கணவன் வெளியே செல்லவும் உடல்கழுவி உடைமாற்றியவள் மெத்தையில் சாய, கண்முன்னே தான் கிருஷ்ணாவுக்கு கொடுத்த முத்தமே
காட்சியாய் விரிந்தது.
தலையை உலுக்கியபடி எழுந்தமர்ந்தவளுக்கு,”எப்படி தன்னால் முடிந்தது? தானா இப்படி?” என்ற கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாய் கிளம்பி அவளை குழப்பியது. 
மனம் முழுக்க தன் துணை மீது மாறாத அன்பிருந்தால் அது சாத்தியமே என்ற தெளிவிற்கு ஏனோ அந்த மெத்தப் படித்த மருத்துவரால் வரமுடியவில்லை. 
யோசிக்க யோசிக்க இன்னும் மனம் குழம்பியதே தவிர ஒரு தெளிவிற்கு வரமுடியாதவளாய் ‘அறையிலிருந்தால் இன்னும் குழப்பமே மிஞ்சும்’ என்று பயந்துபோய் அறையை விட்டு வெளியே வந்தாள்.
 தன் பிறந்த வீட்டுக்குச் சென்றுவந்திருந்த மருமகளை அங்கிருந்த வேதவல்லி பிடித்துக் கொண்டு அங்குள்ள கதைகளை கேட்க ஆரம்பித்தார்.
பெண்களுக்கு எத்தனை வயதானால் தான் என்ன? பிறந்த வீடு பற்றிய பேச்சுகளை பேச என்றுமே சலிக்காது தானே. ஒவ்வொன்றாக ஆவலோடு கேட்க ஆரம்பித்தார்.
 ‘இப்டி நடக்கும்னு தெரிஞ்சிருந்தா  ரூம்லயே இருந்திருக்கலாமே?’ இந்த எண்ணம் மனதிலெழுந்தாலும், அதை மறைத்து,
“ம்ம்… நல்லாயிருந்தது அத்த… வெளியல்லாம் போனோம்” என்றாள் தன்னை உற்சாகமாகக் காட்டிக்கொண்டு.
பின்னே… ‘உன் அம்மா என்னை ஒருவாய் சோறு கூட நிம்மதியாக சாப்பிட விடவில்லை என்று சொல்லவா முடியும்?’  
சந்தோஷமான மாமியார், அடுத்த கேள்விக்கு தாவும் முன் ஃபோன் சிணுங்க, அழைத்தது அவருடைய அம்மா எனவும் உற்சாகமாக அழைப்பை ஏற்று,”சொல்லுங்க ம்மா…”  என்க
 அந்த அம்மாவோ,”பிறந்து இத்தனை வருஷத்துல உம்பிள்ளை என்னை இன்னைக்கு அம்மம்மான்னு கூப்டாம ‘பாட்டீ’ ன்னு கூப்பிட்டுட்டான் வல்லி” என்றார் புகாராக.
அம்மாவின் பேச்சு, புகாராக வந்து விழ,’எதுவோ சரியில்லை’ என்பதை உணர ஆரம்பித்தவர், 
“என்னாச்சும்மா?” என்று கேட்க, 
“அதான் மருமகள்ங்குற பெயர்ல ஒரு வக்கத்தவளை வீட்ல கொண்டு வச்சிருக்கீங்களே, அவளை கொஞ்சம் பேசிட்டேன். அவ்வளவு தான்… அதுக்குள்ள உம்புள்ள அவளுக்கு பரிஞ்சிட்டு எங்கிட்ட சண்டைக்கு வரான்” 
நடந்தவற்றை கூட்டியும், குறைத்தும் மகளிடம் சொல்லியவர்  “எல்லாம் புதுப்பொண்டாட்டி ல்ல… அதான் எம்பேரன் ஒரு வேகத்துல பேசுறான்”
“கொஞ்சநாள் போனா, அவனே எங்கிட்ட வந்து, நான் தப்பு பண்ணிட்டேன் பாட்டி. நீங்க சொன்ன மாதிரி நம்ம தகுதிக்கேத்த மாதிரி தான் பொண்ணெடுத்துருக்கணும்னு சொல்லத்தான் போறான்.
அதை நான் என் ரெண்டு காதால கேக்கத்தான் போறேன்” 
கண்ணுக்கு கண்ணான பேரன், அவன் மனதுக்கு பிடித்த பெண்ணை மணம் செய்திருக்கிறான். தனக்கு பிடிக்கிறதோ இல்லையோ, அவன் சீரும் சிறப்புமாக வாழவேண்டும் என்று வாழ்த்தவிடாமல், பணத்தின் மீதும் அந்தஸ்தின் மீதுமான பைத்தியம், அந்த மூதாட்டியின் கண்ணை மறைத்து வாயிலிருந்து வாழ்த்துக்குப் பதில் விஷத்தை கக்க வைத்திருந்தது. 
பரிமளவல்லி பேசியது அத்தனையும் அட்சரம் பிசகாமல் அருகிலிருந்த சாருமதிக்கும் கேட்க, இத்தனை நேரம் மறந்து போனவை இல்லை கிருஷ்ணாவினால் மறக்கடிக்கப்பட்டவை எல்லாம் தானாகவே மேலெழுந்து வந்து நின்றது. 
‘ஏற்கனவே தானாகவே கணவனுக்கு முத்தம் கொடுத்தது சரியா? தவறா?’ என்ற பட்டிமன்றம் மனதுக்குள் நடந்து கொண்டிருக்கும் போது, பரிமளவல்லியின் பேச்சு இன்னமும் குழப்பியது அவளை
‘அப்போ எம்மேல இருக்கிற அட்ராக்ஷன் குறைஞ்சதும் கிருஷ்ணா என்னை விட்டுருவானா? இல்லை… நான் இன்னைக்கு முதல்ல முத்தம் குடுத்ததை, அவனை வளச்சு பிடிக்கிறதுக்காக செய்ததுன்னு என்னைக்காவது ஒருநாள் சொல்லிக்காட்டுவானோ?’
 ஏதேதோ வேண்டாத எண்ணங்கள் மனதில் சூறாவளியாக சுழன்றடிக்க வேதவல்லி தனது அம்மாவை காய்ச்சி எடுப்பது எதுவும் காதினில் விழாதவளாய் எழும்பி தங்களறைக்குப் போனாள் சாருமதி.
அறையினுள் நுழைந்து படுக்கையில் விழுந்தவள், பயண அலைச்சல் காரணமாக படுத்ததும் தூங்கிப் போக, மனம் முழுவதும் ஆனந்த கற்பனைகளோடு ஆர்வமாக திரும்பி வந்திருந்த கிருஷ்ணாவுக்குத் தான் ஏமாற்றமாகிப் போனது.
தோப்புக்குச் சென்றவன் அங்கு தேங்காய் நார் உரம் லோடு ஏற்றுவதை மேற்பார்வையிட்டு, அதை தயாரிப்பதைப் பற்றி  தெரிந்து கொள்வதற்காக  அவனைத் தேடி வந்திருந்த இரண்டு இளைஞர்களுக்கு  செயல்முறைகளை சொல்லிக்கொடுத்து என்று அவன் நினைத்து சென்ற நேரத்தை விடவே  அதிகமாகிவிட்டது. 
அறைக்கு வந்து பார்த்தாலோ மனைவி நல்ல தூக்கத்தில் இருக்கிறாள். ஏமாற்றம் வந்து மனதைக் கவ்வ தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு படுக்கைக்கு வந்து மனைவியருகில் படுத்தவன்,
 ஒரு சின்ன முகச்சுழிப்போடு தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் புருவத்தை,’தூங்கும் போதுமா யோசனை?’ என்ற எண்ணத்தோடு  நீவிவிட்டவனின் மனது, 
‘எனக்கு இருக்குற தவிப்பில் ஒரு சதவீதம் கூட உனக்கில்லையா சாரு! அப்படியிருந்திருந்தால் எப்படி என்னை எதிர்பார்த்து காத்திருக்காமல் உன்னால் இப்படி தூங்க முடியும்?’ 
எதிர்பார்த்தது கிடைக்காத ஏமாற்றத்தில் புலம்பியது அவன் மனது. 
ம்ம்ம்…வேகமாக ஒரு பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கும் போது ஒரு தடைவந்தால் இயல்பாக நம் வேகம் குறைந்து ஒரு சிந்தனை நம்மை ஆட்கொள்ளுமே… அந்த நிலையிலிருந்தான் கிருஷ்ணா.  
தூங்கிக்கொண்டிருப்பவளை இப்போதே தட்டியெழுப்பி,’ராட்சஷி! உனக்கு இன்னுமா என்னை புரியவில்லை?’ என்று கேட்டுவிடுவோமா? இல்லை இப்படியே… இப்படியே… ஸ்வாஹா…” 
 ‘அடேய்! அப்படி மட்டும் ஏதாவது ஏடாகூடமா பண்ணித்தொலைச்சுறாதடா. இப்பத்தான் உன்னை ஒரு மனுஷனாவே மதிச்சு பேச ஆரம்பிச்சிருக்கா. அப்புறம் உன்னை காட்டுமிராண்டின்னு சொன்னாலும் சொல்லுவா!’
தன் எண்ணம் போன திசையை எண்ணி சிரித்தவனுக்கு, மனைவியிடம் நாசூக்கு, நாகரீகம் எதுவும் பார்க்காமல் மனம் விட்டு பேசினாலேயே எல்லா குழப்பங்களும் சூரியனைக் கண்ட பனியாய் மறைந்து போகும் என்பது ஏனோ தெரியவில்லை.
மறுநாள் காலையிலிருந்தே ஒவ்வொரு விஷயத்திலும் அவனை அழகாக தவிர்த்து ஒரு கண்ணாமூச்சி ஆட்டத்தை தொடங்கினாள் சாருமதி. 
இரண்டு மூன்று விஷயங்களிலேயே அவளின் ஆட்டம் அவனுக்கு புரிந்துவிட,’நீ உன் இஷ்டம் போல நடத்து…’ என்பது போல கிருஷ்ணாவும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட, 
அதற்கும் ஒருபாடு மனதிற்குள் அவனை திட்டி தீர்த்தாள்.
தொடர்ந்து வந்த ஒரு நாலைந்து நாட்கள் அவனிடம் கண்ணாமூச்சி ஆடிய சாருமதியால்  அதை தொடரமுடியவில்லை. 
தொடரமுடியவில்லை என்பதைவிட தொடர இஷ்டமில்லை.
அவளுக்குள்ளும் போராட்டம் தான். அடிக்கடி தண்ணீருக்கும் கரைக்குமாக இழுக்கும் தன் மனநிலையை அவளே வெறுக்கத்தான் செய்தாள். 
அதிலும் “என்னை இன்னும் புரியவில்லையா உனக்கு?” என்னும் விதமான குற்றம்சாட்டும் கணவனின் பார்வைகளை அத்தனை எளிதாக ஒதுக்கித்தள்ள முடியவில்லை அவளால்.
யாரோ எதுவோ சொன்னார்கள் என்று அவனிடமிருந்து ஓடி ஓடி ஒளிவதை விட்டுவிட்டு அவனோடு எப்போதும் போல இருந்து கொள்ள முடிவெடுத்தவள், அன்று இரவு அவனுக்காக காத்திருக்க, 
வழக்கமான நேரம் கழித்து அறைக்குள் வந்த கிருஷ்ணா, இப்போது நான்கைந்து நாள்களாக இல்லாத வழக்கமாக தூங்காமல் விழித்திருக்கும் சாருமதியைப் பார்த்தும் கண்டுகொள்ளாமல், தன்னை சுத்தப்படுத்தி இலகு உடைக்கு மாறி வெளியே வந்தான்.
 அப்போதும் தூங்காமல் விழித்திருந்த சாருமதியைப் பார்த்து,”இன்னைக்கு என்ன? டாக்டர் மேடம் அதிசயமா முழிச்சிருக்கீங்க?…” கையிலிருந்த டவலால் தன் முகத்தை துடைத்துக்கொண்டே குற்றம்சாட்டும் குரலில் கேட்க, 
அவன் குரலின் பேதம் புரிந்து,’நீ இப்போ இந்த நாலஞ்சு நாளா பண்ணுன வேலைக்கு உன்ன தூக்கி வச்சு கொஞ்சுவாங்களாக்கும்? தன்னைத்தானே நொடித்துக் கொண்டவளுக்கு,
‘ஏன் தூக்கிவச்சி கொஞ்சுனாத்தான் என்னவாம்?’ என்றும் தோன்ற,”ஹ்ம்ம்… இன்னைக்கு தூக்கம் வரலை அதான் தூங்கலை…” என்றாள் அமைதியாக,
“ஓஹ்…” லேசாக புருவத்தை உயர்த்தியவன், வேறு எதுவும் சொல்லாமல் தூங்கும் முயற்சியில்  ஈடுபட, 
பார்த்துக் கொண்டிருந்தவள்,”கிருஷ்ணா… நான் உங்கூட கொஞ்சநேரம் பேசிட்டு தூங்கலாம்னு உட்கார்ந்திருக்கேன், நீயென்னடான்னா…” முடிக்காமல் இழுத்தாள்.
“ஃபைனலி, டாக்டர் மேடத்துக்கு இந்த கேணையன் கிருஷ்ணா மேல நம்பிக்கை வந்திடிச்சி போல… அப்பிடித்தான?” ஒட்டாத குரலில் அழுத்திக் கேட்டவன்,
“இந்த நம்பிக்கை எத்தனை நாள்னு சொல்லிடுங்க மேடம்… அதுக்குத் தகுந்தால நானும் என் மைண்டை செட் பண்ணிப்பேன் பாருங்க” என்றான் கோபமாக.
தனக்குத்தானே கேணையன் என்று அடைமொழி சொல்லிக் கொண்டதிலேயே கிருஷ்ணாவின் கோபம் புரிந்து கொண்ட சாருமதி,

Advertisement