Advertisement

அவனது ஓங்கியக் கையை அவன் பின்னால் இருந்து பிடித்து தடுத்திருந்தாள் கிருஷ்ணாவின் அத்தை மகள் அர்ச்சனா. 
அத்தை மகள் என்றால் பண்ணையாரின் உடன்பிறந்த தங்கையின் மகள். பண்ணையாரின் உடன் பிறந்தவர்கள் இரண்டு பெண்கள். இரண்டு பேருமே அவருக்கு இளையவர்கள் தான். 
ஆனால் அத்தைகளின் எல்லா பிள்ளைகளும் கிருஷ்ணாவிற்கு மூத்தவர்களாய் இருக்க, இவள் மட்டும் அவனைவிட ஒருவயது இளையவள். 
“ஏய் விட்றி என் கையை” என்று முரண்டு பண்ணியவனின் கையை விடாமலேயே,”அண்ணா… நீங்க தூரப் போங்கண்ணா…” என்று அந்த வேலையாளைப் பார்த்து அவள் சொல்ல
அவரோ,”அர்ச்சனா ம்மா…செடி…ஜாடி…”  திக்கித் திணறினார் ஒருவித பயத்தில்.
“நான் பாத்துக்குறேன், நீங்க போங்க ண்ணா…” என்று அவள் அழுத்திச் சொல்லவும், விறுவிறுவென அந்த இடத்திலிருந்து நகர்ந்து விட்டார் அந்த மனிதர். 
அவர் போவதற்காக காத்திருந்தவள் அவனின் பிடித்த கையை விடாமலேயே தன் மாமன் மகனைப் பார்த்து,”நீ இன்னும் திருந்தவே இல்லையா கிருஷ்ணா? எவ்வளவு ஈசியா உன்னை விட பெரிய மனுஷனைப் பார்த்து கையை ஓங்குற? ம்ம்…” என்று அதட்ட
“வேலைக்காரனைப் பாத்து அண்ணான்னு அழகுத் தமிழ்ல கூப்பிடுற நீதான் ம்மா மொதல்ல திருந்தணும். இதுல வந்துட்டா என்னைத் திருந்தலையான்னு கேட்டுகிட்டு” பற்களை கடித்தபடியே ஆத்திரத்துடன் பதில் சொன்னவன் ஒற்றை உதறலில் அர்ச்சனாவிடமிருந்து தன் கைகளை விடுவித்துக் கொண்டான்.
அவன் உதறிய உதறலில் இவள் தோள்பட்டையே கழன்று விடும்போல் வலிக்க அதை தனது இடது கையால் பிடித்து விட்டவள்,”யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும் டா…” என்றாள் எரிச்சலாக.
“அப்படி வரும்போது பாத்துக்கலாம் டி…” என்று வார்த்தைகளை அழுத்திச் சொன்னவன், இப்போ கீழேக் கிடக்குற அந்த செடியை எடுத்து இன்னொரு ஜாடியில வச்சி  எம்மாமன் பொண்ணு கிட்ட நீ குடுக்கிற, ரைட்…” என்று அர்சனாவிடம் கட்டளையாகச் சொன்னவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.
கிருஷ்ணாவின் இந்த அவதாரத்தைக் கண்டு மிரண்டு போய் நின்றிருந்த அந்த மூன்று சிறு பெண்களைப் பார்த்து,”அவன் அப்படித்தான் திடீர்… திடீர்னு அவனுக்குள்ள இருக்கிற அந்நியனை இப்படி அவிழ்த்து விடுவான். அதைப்பார்த்து நீங்கல்லாம் பயப்படாதீங்க” என்று அவர்களை தேற்றிய அர்ச்சனா
“இவனெல்லாம் சொல்லித் திருந்துற ஆளில்லை…பட்டுத்திருந்துற ஆளு” என்று முணுமுணுத்தபடியே புதிய ஜாடியில் அந்த செடியை வைக்கும் முயற்சியில் இறங்கினாள்.
**************************************************************
கிருஷ்ணாவின் வார்த்தைகள் தந்த அவமானத்தால் முகம் சிவந்து போன சாருமதிக்கு உடன்வந்த தோழியின் ஆறுதல் வார்த்தைகள் எதுவுமே மனதில் பதியவில்லை.
எங்கிருந்தோ, எதிலிருந்தோ தப்பிப்பது போல வேகவேகமாக சைக்கிளை மிதித்து எப்படியோ வீடு வந்து சேர்ந்துவிட்டாள். பாப்பன்பட்டி தான் இவர்களுக்கும் சொந்த ஊர்.
வீட்டில் தம்பி சொன்னது போல் காயத்ரி புயல் பத்து வயதான தங்கள் சிறிய தங்கை கௌரியை புரட்டிப்போட்டுக் கொண்டிருந்தது.
அந்த சிறிய வீட்டின் முன்னறையில் கட்டிப்பிடித்து தரையில் உருண்டு கொண்டிருந்தார்கள் இருவரும். தன்னைவிட மூன்று வயது பெரியவளான காயத்ரிக்கு ஈடுகொடுத்து கௌரியும் சண்டைபோட்டுக் கொண்டிருந்தாள்.
வழக்கம் போல அம்மா அந்த நேரத்தில் வீட்டில் இல்லாததால் தடுப்பாரின்றி ஜரூராக நடந்து கொண்டிருந்தது சண்டை.
ஏற்கனவே பயங்கர கோபத்தில் இருந்த சாருமதி இருவர் முதுகிலும் ஆளுக்கொன்று போட்டு பிரித்துவிட்டவள், 
“இப்போ எதுக்குடி இந்த சண்டை?” என்று கேட்க
“அக்கா… இது குட்டிஅக்கா ஸ்கூல்பேக்குள்ள இருந்துச்சு…” சட்டென்று விரித்து காட்டிய கௌரியின் கையில் ஒரு விலை அதிகமான யூனிபால் பேனா இருந்தது.
‘இங்கே பத்து ரூபாய் இங்க் பேனாவிற்கே பத்து தடவை குட்டிக்கரணம் அடித்தால் கூட எளிதாக கிடைக்காத சூழ்நிலையில், இந்த விலை அதிகமான பேனா இவளிடம் எப்படி?’
மனதில் எழுந்த கேள்வியை காயத்ரியிடம் சாருமதி கேட்க,”ஃப்ரண்ட்  குடுத்தா…” கொஞ்சம் பயத்துடன் மெதுவாகவே வந்தது பதில்
“யாருகிட்ட இருந்தும் எந்த பொருளும் வாங்க கூடாதுன்னு உங்கிட்ட எத்தனை தடவை சொல்லுறது காயத்ரி”  அதட்டலாகவே கேட்டாள் சாருமதி
“நீங்களும் வாங்கித் தரமாட்டீங்க, பாவம் பாத்து யாராவது தந்தாலும் வாங்கிக்கக் கூடாதுன்னும் சொல்லுவீங்க. நல்லாயிருக்கு உங்க நியாயம்” வெடித்தாள் காயத்ரி
“காயூ… இந்த உலகத்துல சும்மா கிடைக்கிற பொருள் எதுவுமே கிடையாது டி. எல்லாத்துக்கும் கண்டிப்பா ஒரு விலையிருக்கும். அதனால யாருகிட்ட இருந்தும் எந்த பொருளும் வாங்காத” தங்கைக்கு புரியவைத்து விட வேண்டும் என்று கொஞ்சம் தணிவாகவே சாருமதி சொல்ல
“ஆமாம்… நம்மகிட்ட ஏக்கர் கணக்குல நிலம் இருக்கு, லட்சக்கணக்குல பணம் இருக்கு பாரு, அதையெல்லாம் இந்த ஒத்த பேனாவைத் தந்து என்னை ஏமாத்தி வாங்கிட்டு போய்டுவாங்க…” என்றுமில்லாமல் இன்று கத்திய காயத்ரி
“சும்மா போவியா…எப்போ பார்த்தாலும் அட்வைஸ் பண்ணி என்னக் கொல்லாத. உன் அட்வைஸுக்கு பயந்து தான் இந்த பேனாவை நான் ஒளிச்சே வச்சேன். எப்படியோ இந்த குட்டிபிசாசு கண்டுபிடிச்சி அது ஸ்கூலுக்கு தூக்கிட்டு போயிடிச்சி” என்றவள் கௌரியின் கன்னத்தை பிடித்து அழுத்தி கிள்ளிவிட்டு சென்றாள்.
காயத்ரி கிள்ளியது வலித்துவிட கன்னத்தை தடவியபடியே “ஓ…” என்று அழத்தொடங்கிய குட்டித்தங்கையைக் கூட சமாதானப்படுத்த முனையாமல்
வீட்டின் கொல்லைப்புறத்தில் கிணற்றுக்கு பக்கத்தில் இருக்கும் துணி துவைக்கும் கல்லில் போய் தொப்பென்று அமர்ந்தாள் சாரு.
என்ன சொன்னாலும் புரிந்து கொள்ளாமல் எப்போதுமே தங்கள் தகுதிக்கு மீறி ஆசைப்படும் தங்கையை நினைத்து கலங்கியது மனது.
‘தாங்கள் சாப்பிடும் சாப்பாட்டையே ஒருவன் எங்க வீட்டு மிச்ச சோறு என்று ஏளனம் செய்கிறான். ஆனால் இது எதுவும் தெரியாமல் தன்னிடம் ஆகச்சிறந்த பொருள்கள் எதுவுமில்லை என்று ஆதங்கம் கொள்ளும் காயத்ரியை நினைத்து அழுவதா? சிரிப்பதா’ என்று தெரியவில்லை சாருமதிக்கு. 
‘இந்த காயத்ரிக்காகவாவது தங்கள் தந்தை உயிரோடு இருந்திருக்கலாம்’ எண்ணமிட்ட மனது தந்தையின் நினைவுகளால் தத்தளித்தது.
அப்பா சங்கரன் கரண்டி பிடித்து கட்டடங்கள் கட்டும் கொத்தனார். சுற்றுவட்டாரத்தில் வேலை பார்ப்பதால் வரும் வருமானம் அவருக்கு கைக்கும் வாய்க்கும் சரியாய் இருந்தது போல தோன்றியது.
அதனால் பெரியப் பெரிய அடுக்கு மாடி கட்டடங்கள் கட்டுமிடத்தில் வேலைக்கு சேர்ந்தால் நன்றாக சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் ஒரு நான்கைந்து வருடங்களுக்கு  முன்னால் சென்னைக்கு கிளம்பிச்சென்றார். 
அவர் நினைத்தது போலவே அங்கு ஓரளவுக்கு அதிகமான வருமானம் வரவே செய்தது.  ஒருவருடத்திலேயே அவரின் நேர்மையான, கள்ளமில்லா உடலுழைப்பைக் கண்ட அந்த கட்டிட காண்டிராக்டர் அவரை மேஸ்திரி லெவலுக்கு உயர்த்தி சம்பளமும் அதிகம் கிடைக்குமாறு செய்தார்.
இனி தங்கள் வாழ்விலும் விடியல் வந்துவிடும் என்று மகிழ்வோடு வேலைபார்த்துக் கொண்டிருந்த சங்கரனுக்கு, தான் அடுத்த நாள் விடியலைக் கூட காணப்போவதில்லை என்ற விஷயம் தெரியவில்லை. ஆமாம்…அங்கு நடந்த விபத்து ஒன்றில் அவரோடு சேர்ந்து அவரது ஆசைகளும் புதைந்து போயின. 
அவர் உயிரோடு இருந்த வரை மனைவியையும் பிள்ளைகளையும் கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டார்.
கணவனின் இறப்புக்குப் பிறகு பெரிதாக எந்த வேலைகளுமே தெரியாத கல்யாணி நான்கு பிள்ளைகளையும் கரைசேர்க்கும் கட்டாயத்தில் பக்கத்து வீட்டு பெண்ணோடு பண்ணையார் வீட்டுக்கு வேலைக்கு சென்றார்.
ஆரம்பத்தில் வெளிவேலைகளை மட்டுமே பார்த்தவர் ஒருமுறை வேதவல்லிக்கு உடம்பு சரியில்லாமல் போகவே சமையல் செய்தார். அவரின் கைப்பக்குவமும், சுத்தமான பாங்கும் பிடித்துப் போகவே அந்த வீட்டின் சமையல் வேலை விரும்பியே கல்யாணியிடம் ஒப்படைக்கப்பட்டது.
 சாப்பாட்டு நேரத்தில் தன்னைப் பார்க்க வரும் நபர்களை தன்னுடன் சாப்பிட வைத்து அனுப்புவது தான் பண்ணையாரின் வழக்கம். அதனால் எப்போதுமே அங்கு கூடுதல் சமையலே நடக்கும். 
 அப்படி அதிகப்படியான சமையலில் மிஞ்சிப் போகும் உணவை கல்யாணி பிள்ளைகளுக்காக கொண்டு வருவார். அதுதான் இன்று கிருஷ்ணாவின் வாயில் ‘மிச்ச சோறு’ ஆனது.  
என்ன முயன்றும் தடுக்க இயலாமல் கிருஷ்ணா சொன்ன வார்த்தைகளே திரும்பத் திரும்ப சாருமதியின் காதுகளில் எதிரொலித்தது.
‘ஒருவரை மட்டம்தட்ட அவரின் ஏழ்மையைக் கூட இப்படி ஏளனமாகப் பேசுவார்களா? ஏழ்மை அவ்வளவு ஏளனத்துக்குரியதா என்ன?’ நினைக்க நினைக்க மனதெல்லாம் வலித்தது சாருமதிக்கு. 
நேரம் போவது தெரியாமல் பித்துபிடித்தவளைப் போல அங்கேயே உட்கார்ந்திருந்தவளை,”சாரு… சாரு…” என்ற அம்மாவின் அழைப்பு கலைக்க,”என்னம்மா…” என்று இங்கிருந்தே பதில் கொடுத்தாள்.
“ஊரே ஐயா வீட்ல போய் சாப்பிட ரெடியாகிட்டு இருக்கு. நீ அங்க என்னடி பண்ணுற? சீக்கிரம் வந்து புறப்படு நாமளும் போகலாம்” என்றவர்,”தம்பி எப்போ வருவான், தெரியுமா உனக்கு?” என்று கேட்க
“இதோ வந்துட்டனே ம்மா” என்று தாயின் பக்கத்தில் வந்து நின்று சொன்ன ரகு,”க்கா…நீ எப்பவே வீட்டுக்கு வந்தக்கா!
ஏன் இன்னும் ட்ரெஸ் கூட மாத்தாமல் இங்கயே உட்கார்ந்திருக்க” கேட்டுக்கொண்டே அக்காவின் அருகில் வந்தவன், அவள் முகத்தை பார்த்து
“ஏதும் பிரச்சனையா க்கா? தயங்காமல் எங்கிட்ட சொல்லுக்கா. இவன் நம்மளை விட சின்னப்பையன் தானே? இவனால என்ன செய்ய முடியும்ன்னு நினைச்சு எங்கிட்ட எதுவும் சொல்லாமல் இருந்துராத க்கா. என்னன்னாலும் எங்கிட்ட சொல்லுக்கா, பாத்துக்கலாம்…” என்று தன்னிடம் நெருங்கி வந்து படபடத்த தம்பி தகப்பனாகத் தெரிய 
அவன் இடுப்பை கட்டிக் கொண்டு “ஓ…” வென்று அழுதாள் சாருமதி. தன் மனதின் வெப்பம் குறையும் வரை அழுதாள்.
அழுது முடித்து தன் கண்களை துடைத்துக் கொண்டவள் லேசாக சிரித்தபடியே தன்னையே பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்த தம்பியிடம்,”ஒன்னுமில்லடா, அப்பா ஞாபகம் வந்திடிச்சி அவ்வளவுதான்” என்றவள்
“வா… போகலாம்…”என்று அவன் கையை பிடித்து வீட்டுக்குள் இழுத்துக் கொண்டு போக,”உண்மையிலேயே ஒன்னுமில்லையே க்கா…” என்று கேட்டான் அந்த இளவல்.
“உண்மையிலே ஒன்னுமில்ல டா… அப்படியே ஏதுமின்னா உங்கிட்ட சொல்லாமல் வேற யாருகிட்ட சொல்லுவேன் நான்” என்று தலையைச் சரித்து அவனிடம் கேட்ட சாருமதிக்கு இன்று நடந்த எதையுமே தம்பியிடம் சொல்ல மனதில்லை.
‘ஏற்கனவே ஏனோ அவனுக்கும் கிருஷ்ணாவை பிடிப்பதில்லை. இதில் தானும் இன்று நடந்ததைச் சொன்னால் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போலாகிவிடும்.’
‘அதன்பிறகு அவனும் அம்மாவோடு இன்று வரமுடியாது என்று சொல்லுவான். பிறகு அம்மாவை சமாளிப்பது கஷ்டமாகிப்போகும்.’
வீட்டிற்குள் வந்த இருவரிடமும் “சீக்கிரம் கிளம்புங்க” என்று கல்யாணி அவசப்படுத்த
“நீங்கெல்லாம் போங்கம்மா, நான் வரலை” என்ற சாருமதியை எரிச்சலோடு பார்த்தாள் காயத்ரி.
அவளுக்கு அங்கு போகப்பிடிக்கும்… அதுவும் இந்த நாளில் போக ரொம்பவே பிடிக்கும். அதற்கு இன்று அங்கு பரிமாறப்படும் ருசியான உணவு ஒரு காரணம் என்றால், அழகழகாக புது மாடல் உடையோடு, அதற்கு பொருத்தமாக நகைகள் எல்லாம் அணிந்து தேவலோகத்து அப்சரஸ்களாக நடமாடும் பண்ணையார் வீட்டு பெண்களையும் இன்று பார்க்கலாம் என்பது இன்னொரு காரணம்.
“ஏய்…என்னடி சொல்லுற! நீயும் வருவன்னு நினைச்சு நான் வீட்டுக்கு சாப்பாடு கூடப் கொண்டுவரலையே?” என்று பதறியவர்
 “ப்ச்ச்…வா…சாரு…வந்து ஒருவாய் சாப்பிட்டுட்டு வந்துடு”
 எங்கே மகள் வராமல் இருந்து விடுவாளோ என்ற ஆதங்கத்தில் கல்யாணி கெஞ்சினார்.
 “பரவாயில்லை… இன்னைக்கு ஒருவேளை நான் சாப்பிடாமல் இருக்குறதால செத்து ஒன்னும் போய்டமாட்டேன்” என்று புதிதாக பிடிவாதம் பிடிக்கும் மகளை கவலையோடு பார்த்தபடி நின்றார் கல்யாணி…
கொடிது கொடிது வறுமை கொடிது…
அதனினும் கொடிது இளமையில் வறுமை…
 

Advertisement