Advertisement

சாருமதி.
அத்தியாயம் 02.
நான்கு தலைமுறைகள் கண்டு கம்பீரமாக நிற்கும் அந்த மாளிகையின் மதிற்சுவர்கள் கோட்டை மதிர்சுவரைப்போல நெடிந்துயர்ந்திருக்க, அதன் அலங்காரகேட் இருபுறமும் நன்றாக திறந்து வைக்கப்பட்டிருந்தது.
மாளிகையின் வளாகத்துக்குள்ளேயே வலப்புறத்தில் கிழக்கு முகமாக அமைந்திருந்த கிருஷ்ணர் கோவில் அந்த மாளிகையில் வாழுபவர்களின் பாராம்பரியத்தை குறைவில்லாமல் எடுத்துக்கூறியது. 
இன்று அந்த மாளிகை வாரிசின் பிறந்த நாளையொட்டி கோவில் பூமாலைகளால் அலங்கரிப்பட்டிருந்தது. 
திறந்திருந்த கேட் வழியே அந்த மாளிகையின் ஏகவாரிசான கிருஷ்ணா  தன் சைக்கிளை சல்லென்று விட்டான்.  அவனைக் கண்டவுடன் ஆங்காங்கே வேலைசெய்து கொண்டிருந்தவர்கள் அவனுக்கு வணக்கம் வைத்தனர். 
ஏதோ பெரிய மனிதன் போல லேசான தலையசைப்புடன் அதை ஏற்றுக்கொண்டவன்  நடக்கும் ஏற்பாட்டை பார்த்துக்கொண்டே வீட்டுக்கும் மெயின் கேட்டுக்கும் இடைப்பட்ட அந்த நீண்ட தூரத்தை சைக்கிளில் கடந்து கொண்டிருந்தான்.
வழக்கம் போல கிருஷ்ணாவின் இந்த வருட பிறந்தநாளுக்கும் ஊர்மக்களுக்கு விருந்துக்கான வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. 
தயாராகிக் கொண்டிருந்த விருந்தின் மணம் காற்றில் கலந்து வந்து நாக்கின் சுவை அரும்புகளைத் தூண்டியது… ஊர்மக்களுக்கான விருந்து தானே என்று அலட்சியமாக இல்லாமல் எப்போதுமே நல்ல தரமான ருசியான உணவு பந்தியில்  பரிமாறப்பட வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருப்பார் பண்ணையார் மூர்த்தி.
அதற்காகவே எத்தனைபேர் இருந்தாலும் தானும் அந்த சமையல் செய்யும் இடத்திலேயே மேற்பார்வை செய்து கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருப்பார்.
வீட்டுக்கு முன்னே இருக்கும் பரந்த மைதானத்தில் சாப்பிடுவதற்காக டேபிளையும் செயர்களையும் சிலர் வரிசையாக போட்டபடி இருந்தார்கள்.
சைக்கிளில் போய்கொண்டிருந்த கிருஷ்ணா சட்டென்று ஓரிடத்தில் அதை நிறுத்தி காலை தரையில் ஊன்றியவாரே,”வெங்கையா…” என்று கத்த
ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க தோற்றத்தில் இருந்த அந்த வெங்கையா,”அப்பு…” என்று அழைத்தபடியே  விறுவிறுவென இவனைநோக்கி ஓட்டமும் நடையுமாக வந்து சேர்ந்தார்.
“இவ்வளவு நேரமும் உங்கள எதிர்பார்த்து இங்கனத் தான் இருந்தேன் அப்பு… இப்பதான் அந்தபக்கமாப் போனேன், நீங்க வந்துட்டீங்க” என்று சொன்னவர் உழைத்து உழைத்து உரமேறிப்போன தன் கறுத்த  கைகளால் அவன் முகத்தை ஆதூரமாக தடவியபடியே,”எப்படி இருக்கீங்க அப்பு…” என்று அன்பொழுகக் கேட்க
“எனக்கென்ன வெங்கையா…  நல்லா ஜம்முன்னு இருக்கேன்”  சொன்னவன் லேசாக அவரைப் பார்த்து முறைத்தபடியே,”ஆமா…நீ இங்க இருந்து உன் மக வீட்டுக்கு போகும் போது என்ன சொல்லிட்டு போன?” என்று விறைப்பாக கேட்க
“அது… ஒரு மாசத்துல வந்திரலாம்னு தான் போனேன் அப்பு…போன இடத்தில பேரப்பிள்ளைங்க விடமாட்டேன்னு
ஒரே ஆர்ப்பாட்டம். இப்போக் கூட போனா நீ திரும்ப வரமாட்டன்னு சொல்லி, விடமாட்டேன்னு தான் சொன்னாங்க. ஆனாலும் என்னோட அப்பு பிறந்த நாளுக்கு நான் இல்லாமையான்னு, பிடிவாதமா வந்திட்டேன்ல”  லேசாக நெளிந்தபடியே பதிலைச் சொன்னார்  வெங்கையன். 
இந்த வெங்கையன் ஆரம்ப காலத்தில் இங்கு தோட்டக்காரனாக வேலை பார்த்தவர். பின்னர் கிருஷ்ணா   வீட்டுத்தோட்டத்தில் ஓடியாடி விளையாட ஆரம்பித்த காலகட்டத்தில் அவனுக்கு பாதுகாவலராக இருந்த மனிதர். 
கிருஷ்ணாவின் பள்ளி ஆரம்ப நாட்களின் போது ஒருமுறை பாடப்புத்தகத்தில், நல்ல காற்றோட்டமாக, போதிய அளவு தண்ணீர் மற்றும் சூரிய ஒளி உள்ள இடத்தில் ஊன்றப்படும் விதை முளைப்பதற்கும் இவையனைத்தும்  குறைவாக இருக்கும் இடத்தில் ஊன்றப்படும் விதை முளைப்பதற்கும் உள்ள வேறுபாட்டை செயல்முறையாக செய்து பாருங்கள் என்று இருக்க, அதை வெங்கையனின் உதவியோடு தான் செய்திருந்தான் கிருஷ்ணா.
முதன்முறையாக ஒருவிதை மண்ணைக் கீறிக்கொண்டு வெளியே வருவதைப் பார்த்த அந்த சிறுவன் கிருஷ்ணாவிற்கு எதையோ சாதித்து விட்டது போல மகிழ்ச்சி பொங்கியது.
 அதன் பிறகு பதியம் போடுதல், செடியிலிருந்து சிறு குச்சியை வெட்டி தழுக்க வைத்து இன்னொரு செடியாக்குதல் போன்ற அவனது சின்னச் சின்ன செயல்முறைகள் அனைத்துக்கும் உதவியாக நின்ற வெங்கையன் இதோ இப்போது பங்களாவின் பின்னால் நூறுக்கும் மேற்பட்ட வெவ்வேறு வண்ணங்களில் விதவிதமான ரோஜாக்கள் நிறைந்த தோட்டத்தை உருவாக்கியிருக்கும் கிருஷ்ணாவின்  முயற்சி வரை  கூடவே நின்றவர். அதனாலேயே அந்த மனிதரை ரொம்பவே பிடிக்கும் கிருஷ்ணாவிற்கு.
தங்களையெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்காத தங்களது சின்னமுதலாளி வெங்கையனோடு நின்று பேசிக் கொண்டிருப்பதை அந்த வீட்டின் மற்ற வேலையாட்கள் ஒரு சுவாரஸ்யத்தோடு பார்த்துக்கொண்டே தங்களது வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.
“இனிமேல் யாரு உன்னை அங்க திரும்பி போக…”  கிருஷ்ணா பேசிக்கொண்டிருக்கும் போதே
“இது என்ன பழக்கம் கிருஷ்ணா? வயசுக்கு மரியாதை குடுக்காமல்  பேசுறது?” கண்டிப்பான குரலோடு மகனின் அருகில் வந்து நின்ற பண்ணையார் மூர்த்தி கட்டுமஸ்தாக நல்ல கம்பீரமான  தோற்றத்தோடு   இருந்தார்.முகத்தில் இருந்த அந்த அடர்ந்த மீசை அவருக்கு கூடுதல் கம்பீரத்தைக் கொடுத்தது. 
அவர் அணிந்திருந்த வெள்ளை வேஷ்டியும் வெள்ளைச் சட்டையும் தோளில் கிடந்த அதே கலர் அங்கவஸ்திரமும் 
அவருக்கு இன்னும் கூடுதல் தேஜஸையேக் கொடுத்தது. 
“அதென்ன புள்ளையக் அப்படி கோவிக்கீங்க முதலாளி? சின்னவரு அப்படி கூப்பிடுறதால நான் என்ன கொறைஞ்சு போய்ட்டேன். அதுவுமில்லாமல் எனக்கு அவுக அப்படி கூப்பிடுறது தான் பிடிச்சிருக்கு. இதையெல்லாம் நீங்க கண்டுக்காதீங்க முதலாளி” வெங்கையன் கிருஷ்ணாவிற்காகப் பரிந்து கொண்டு வர
“ஆமா… இப்படியே நீங்க ஆளாளுக்கு செல்லம் குடுத்து அவனை நல்லா கெடுத்து வச்சிருக்கீங்க. அவன் என்னடான்னா வரவர ஒருத்தரையும் மதிக்க மாட்டேங்குறான்”  பண்ணையாரின் வார்த்தைகளில் மகனின் நடவடிக்கை குறித்து உண்மையான வருத்தமே மேலோங்கி நின்றது. 
‘இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை தனக்குப் பின்னால் தன் மகன் எப்படி கட்டியாளப் போகிறானோ?’ என்ற கவலை சமீபகாலமாக அவரை பிய்த்து தின்கிறது.
ஏனென்றால் ஒரு நல்ல தலைவனுக்கு பணிவு இருக்க வேண்டும். தன் மக்களோடு இணைந்து வாழும் பண்பு இருக்கவேண்டும். அவர்களை அரவணைத்து அழைத்துச் செல்லும் பக்குவம் இருக்க வேண்டும்.
அப்போது தான் அந்த மக்களின் மனதில் ஒரு நல்ல தலைவனாக ஒருவன் நிலைபெற்று நிற்கமுடியும். இல்லாமல் இதோ கிருஷ்ணாவைப் போல ‘நான் ஆண்டான் நீ அடிமை’ என்ற எண்ணத்தோடு இருப்பவர்களை மக்கள் எப்போதுமே தங்கள் அருகில் சேர்த்துக் கொள்வதில்லை.
 அதனாலேயே அவரால் முடிந்த அளவு மகனை மாற்றப்பார்க்கிறார். ஆனால் ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்ன?’
பேசும் தந்தையைப் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணாவைப் பார்த்து,”மலையாளத்தில இருந்து அம்மா வீட்டாளுங்க எல்லாரும் வந்தாச்சு அப்பு…வீட்டுக்குள்ள இருக்காங்க, நீங்கப் போய் அவங்களையெல்லாம் பாருங்க…போங்க” என்று சொல்லி கிருஷ்ணாவை அங்கிருந்து அனுப்ப முயன்றார் வெங்கையா.
உண்மையில் பண்ணையார் மனைவி வேதவல்லி கேரளாவைச் சேர்ந்தவர் இல்லை. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மார்த்தாண்டம் என்ற ஊர் தான் அவரின் சொந்த ஊர்.
கன்னியாகுமரி மாவட்டம், ஒரு காலத்தில் கேரளாவோடு இணைந்திருந்ததாலோ என்னவோ அங்கிருக்கும் மக்களின் சாயல் கொஞ்சம் மலையாள மக்களைப் போலவே இருக்கும்.
அதே போலத்தான் அவர்கள் பேசும் தமிழும் மலையாளம் கலந்தே இருக்கும். அதனால் தான் மார்த்தாண்டத்து மக்களை மலையாளத்துக்காரங்க என்று சொன்னார் வெங்கையா.
வெங்கையாவின் பேச்சில் ஒருவித சலிப்போடு நின்ற தந்தையை நிமிர்ந்து பார்த்து,’இப்போ என்ன செய்வீங்க?’ என்பது போல ஒரு பார்வையை அவர் மீது வீசிய கிருஷ்ணா  வீட்டை நோக்கி வேகமாக தனது சைக்கிளை விட்டான்.
சைக்கிளிலிருந்து இறங்கியவன் தனக்காகவே காத்திருந்த ஒருவனின் கைகளில் அதை அவசரமாக ஒப்படைத்து விட்டு பரபரப்பாக வீட்டினுள் நுழைந்தான்.
அந்த பெரிய ஹாலின் வாசற்கதவின் இருபக்கங்களிலும் பின்புறமாக மறைந்திருந்த அவனின் சித்தி பெண்களான விதுலாவும், சுஜிதாவும் “ஹேப்பி பெர்த்டே அண்ணா…” என்று ஆர்ப்பரித்தபடியே அவன் முன்னால் வந்து அவன் கைகளைப் பற்றி குலுக்கினார்கள். 
அவர்களை அந்த  ஹாலில் கிடந்த சோஃபாக்களில் இவன் தேட அவர்களோ கதவுக்குப் பின்னே இருந்து அவன் எதிர்பாராத நேரத்தில் வரவும் உண்மையாகவே ஆச்சர்யப்பட்டுப் போனான்.
சிரிப்போடு அவர்களின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டவன் ஹாலில்  கிடக்கும் விலையுயர்ந்த சோஃபாக்களில் தங்களை புதைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்த தன் அம்மம்மா, சித்தி, சித்தப்பா, மாமி, மாமா எல்லோரையும் பார்த்து வரவேற்பாக சிரித்தபடியே,”அம்மம்மா…” என்று அழைத்துக் கொண்டே அவனின் உயிரான அம்மாவின் அம்மாவை நோக்கி வேகமாகச் சென்று அவரைக் கட்டிக்கொண்டான்.
பெரும் ஆவலோடு தன் பேரனை மார்போடு தழுவிக்கொண்ட அந்த மூதாட்டியின் கண்கள் லேசாக கலங்கிப் போயின.
அவர் பெற்ற மற்ற மக்களின் பிள்ளைகள் எல்லாம் பக்கத்தில் இருப்பதால் எழுதில் காணக்கிடைக்க, தூரத்தில் இருக்கும் கிருஷ்ணாவை அடிக்கடி பார்க்க முடியாது என்பதால் அவனிடம் எப்போதுமே‌ அவருக்கு பாசம் அதிகம் தான். 
அதுவுமில்லாமல் வாராது வந்த மாமணியாய் தன் மகளுக்கு ஏழு வருடங்கள் கழித்து வந்து பிறந்து அவளின் பிள்ளைக்கலி தீர்த்தவன் கிருஷ்ணா என்ற எண்ணமும் அவரிடம் உண்டு. அதனாலேயே அவருக்கு இன்னும் அதிகப்படியான பேரன்பு அந்த பேரனிடம்.
பேரனின் தலையில் தன் முதிய கைகளை ஆசீர்வாதமாக வைத்து தடவியர்,”இன்னும் சைக்கிள்ல தான் ஸ்கூலுக்கு போய்ட்டு இருக்கிறியா மோன? உங்கப்பாவுக்கு உனக்கு ஒரு பைக் வாங்கித் தர்ற அளவுக்கு கூட காசு இல்லையா என்ன?”  அங்கலாய்த்தவரின் தலைமுடி அத்தனையிலும் மூப்பு தன் முத்திரையை பதித்திருந்தது.
அவரது கைகளிலும் கழுத்திலும் கிடந்த வைரங்கள் அவர்களின் செல்வச்செழிப்பை பறைசாற்றியது.
“அத்தானால வாங்கித்தர முடியாமல் இல்லம்மா… இப்போ வேணாம்னு நினைக்கிறாங்க போல” வேதவல்லியின் தம்பி தான் அம்மாவின் அங்கலாய்ப்பு பொறுக்காமல் பதில் சொன்னது.
“நீ அந்த மனுஷனுக்கு சப்போட்டுக்கு வர்றியாடா…வண்டி இப்போ ஓட்டாமல் பின்ன எப்போ ஓட்டுறதாம்…அங்கங்க அரைக்கால் டிரௌசரப் போட்டுகிட்டு நண்டு சிண்டு எல்லாம் வண்டி ஓட்டுது. இராசா மாதிரி இருக்கான் எம்பேரன், அவன் பைக் ஓட்டக்கூடாதா?” 
மருமகனிடம் எதுவும் சொல்லமுடியாத அந்த மாமியார் வலிய வந்து வாயைத் கொடுத்த மகனை தன் பேச்சால்  உண்டு இல்லை என்று ஆக்கத் தொடங்கிவிட்டார்.
“விடுங்க அம்மம்மா…இப்போ பைக் இருந்தாலும் ஸ்கூலுக்கெல்லாம் அதுல போகமுடியாது. அதனால அடுத்த வருஷமே வாங்கிக்கலாம்” என்ற பேரனின் பேச்சில் தான் அமைதியானார் அந்த பெரிய மனுஷி.
மகன் வீட்டுக்குள் வந்த நேரத்திலிருந்து இதோ இப்போது வரை தன்  பிறந்த வீட்டினரோடு பாசமாக, ஆரவாரமாக பழகும் தன் மகனை பார்வையாலேயே தொடர்ந்தவண்ணம் இருந்தார் வேதவல்லி.
இந்த ஆரவாரத்தையும் தாண்டி ஆரம்பத்தில் ஹாலுக்குள் நுழையும் போது மகனின் கண்களில் தெரிந்த ஒருவகையான ஏமாற்றம் அந்த தாயின் கண்களில் இருந்து தப்பவில்லை.
‘ஒருவேளை அந்த கடங்காரி எம்புள்ளைய முந்தியிருப்பாளோ? ஒன்னு ரெண்டு மார்க்கு எம்புள்ளையை விட கம்மியா எடுத்தா தான் அவளுக்கு என்னவாம்!’ 
மனதுக்குள் நொடித்துக்கொண்ட வேதவல்லிக்கு 
தனக்கும் சாருமதிக்கும் இடையே நடக்கும் பனிப்போரைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாக மகன் சொல்லியிருந்ததால் எல்லாமேத் தெரியும். 
இன்று பள்ளியில் நடந்தவற்றைப் பற்றி மகனிடம் கேட்பதற்கான நேரம் இதுவல்ல என்று உணர்ந்ததாலோ என்னவோ வேதவல்லி அமைதியாக உட்கார்ந்திருந்தார்.
அப்போது,”அத்தான்…” என்ற சிணுங்கலோடு அவர்களுக்கு எதிரில் கிடந்த சோஃபாவிற்கு பின்னாலிருந்து எழும்பி வந்தாள் கிருஷ்ணாவின் மாமா பெண் சுப்ரியா.
“நீங்க வந்து இவ்ளோ நேரமாகியும் ஒருவார்த்தை என்னைத் தேடுனீங்களா அத்தான்? நான் வேற உங்களை நம்பி, நீங்க வந்த உடனே என்னைத்தான் தேடுவீங்கன்னு அந்த பக்கி சுஜிதா கிட்ட ஐநூறு ரூபாய் பெட் வச்சிகிட்டேன் தெரியுமா?”
அத்தை மகன் தன்னைத் தேடவில்லை என்பதை விட தான் ஐநூறு ரூபாய் தோற்றுவிட்டோமே என்ற ஆதங்கத்தில் சுப்பிரியா பேச, கைதட்டி ஆரவாரித்தாள் சுஜிதா.
“நான் அடுத்ததா உன்னைப் பத்தி விசாரிக்கனும்னு தான்  நினைச்சேன். நீ அதுக்குள்ள அவசரப்பட்டு வெளியே வந்தா நான் என்ன பண்ண முடியும் பிரியா”
“ம்ஹும்…போங்கத்தான்… உங்களாலத் தான் நான் தோத்தேன். நீங்க வந்த உடனே என்னத் தேடியிருந்தீங்கன்னா நான் தோத்துருக்கமாட்டேன்ல. அதனால நீங்கத் தான், நான் பெட் கட்டுன ரூபாயை சுஜிக்கு குடுக்கணும்” புதிய தீர்ப்பு வழங்கியது பெண்.
“ஹேய்… எங்கிட்ட பணம் இல்ல, நீங்க குடுங்க அத்தான்னு சொன்னா நான் குடுத்துட்டுப் போறேன். அதுக்கு ஏன் பழியை எம்மேல தூக்கிப் போடுற” என்று சிரித்தவன்,”ம்மா…” என்க
எழும்பி வீட்டினுள் போய் வந்த வேதவல்லி தன் தம்பி மகள் கையிலும் தங்கை மக்கள் இருவர் கையிலும் ஆளுக்கு ஆயிரம் ரூபாயை கொண்டு வைத்தார்.
“அம்மான்னா இப்படி இருக்கணும்…” என்று இளசுகள் மூவருமே தன் பெற்றோரைப் பார்த்து சொல்லியபடியே வேதவல்லியை கட்டிக் கொண்டனர்.
கிருஷ்ணாவின் அன்னை இவர்தான் என்று பார்த்த மாத்திரத்திலேயே சொல்லிவிடலாம் அத்தனை உருவ ஒற்றுமை இருந்தது இருவருக்கும். 
“சரி…சரி…நீ போய் குளிச்சு ரெடியாகிட்டு வா மோன” என்று பாட்டி சொல்ல
“இல்ல…இல்ல… அத்தான் முதல்ல எங்களை ரோஜா தோட்டத்துக்கு கூட்டிட்டு போங்க” என்ற சுப்ரியா
“த்தான்… நான் சொன்னமாதிரியே வைட் ரோஸ் செடியில, யெல்லோ ரோஸும், ரெட் ரோஸும்  பூக்குறமாதிரி ஒட்டு போட்டு வச்சிருக்கீங்களா?” ஆவலாகக் கேட்டாள்.
“ம்ம்… அதெல்லாம் எப்பவோ ரெடி. அந்த செடியில மொட்டு கூட வந்திடிச்சி தெரியுமா”  தனக்கு ரொம்பவும் பிடித்த விஷயத்தைப் பற்றிய பேச்சாக இருக்கவும் உற்சாகமாக பதில் வந்தது கிருஷ்ணாவிடமிருந்து.
“ஹையோ…அப்படியா! த்தான்…த்தான்… முதல்ல அங்க போலாம் த்தான்…” ஆயிரம் தடவை அத்தான் ராகம் பாடியபடியே கிருஷ்ணாவின் கைகளை பிடித்து இழுத்தாள் பிரியா.
தன் மகள் கிருஷ்ணாவை குளித்து வரக்கூட அனுமதிக்காமல் தோட்டத்துக்கு இழுக்கவே,”காசு குடுத்தால் எங்க வேணும்னாலும் அந்த செடியை வாங்கலாம். அதுக்கு ஏன்டி தம்பியை படுத்துற” என்று கேட்ட தாய்க்கு
“வாங்கலாம் தான் ம்மா… ஆனால் அதை என்னோட அத்தான் தந்ததுன்னு ஃப்ரெண்ட்ஸ் கிட்டல்லாம் பீத்திக்க முடியாதே” என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னவள் கைப்பிடியாக கிருஷ்ணாவை தோட்டத்துக்கு அழைத்தே வந்துவிட்டாள். கூடவே  அவனது சித்தி மக்களும் ஆர்வமாகச் சேர்ந்து கொண்டனர்.
ரோஜாக்கள் பூத்துகுலுங்கி மனம் பரப்பிக் கொண்டிருந்த அந்த தோட்டத்தைக் கண்ட அந்த சிறு பெண்களுக்கு உற்சாகம் கரைபுரண்டோட, கடந்த தடவை தாங்கள் பார்த்ததை விட இப்போது செடிகளெல்லாம் நன்றாக வளர்ந்திருக்கிறது என்று பரவசத்தோடு சொன்னார்கள்.
அதிலும் இம்முறை பிங், வெள்ளை, சிகப்பு இந்த மூன்று கலர் செம்பருத்தியும் ஒரே செடியில் பூத்திருக்க,”எப்படி ண்ணா இவ்வளவு அழகா ஒட்டு போட கத்துகிட்டீங்க” என்று விதுலா கேட்டாள்
“நம்ம வீட்டுக்கு மரக்கன்னு குடுக்க ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்ட்ல இருந்து ஆளுங்க வருவாங்க ம்மா. அவங்க தான் சொல்லி குடுத்தாங்க” என்றவனிடம்
“த்தான்…என்னோட செடியை எடுத்துக் குடுங்க” அவசரப்படுத்தினாள் ப்ரியா
கிருஷ்ணாவும் கொஞ்சம் தள்ளி நின்ற வேலையாளை அழைத்து குறிப்பிட்ட மண்ஜாடியை காண்பித்து,”அதை எடு…” என்க
சின்னமுதலாளி இட்ட கட்டளையை சிரமேற்கொண்டு செய்கின்ற பரபரப்பில் ஜாடியை கைதவறி கீழே போட்டு விட்டார் அந்த பணியாள்.
அவ்வளவு தான்… இவ்வளவு நேரமும் தன் மனதிற்கினிய சொந்தங்களின் வரவால் அவனுள் அடங்கி இருந்த ‘அகங்காரன்’ விஸ்வரூபம் எடுத்து வெளியே வந்தான்.
“முட்டாள்…” என்று கத்தியவன்,”உன்னை…” என்றபடியே அந்த பணியாளை அடிக்க கையை ஓங்க… அவனால் ஓங்க மட்டும் தான் முடிந்திருந்தது.

Advertisement