Advertisement

அவளின் பதிலில் சுர்ரென்று கோபம் ஏற,”தயவு செய்து படுத்து தூங்கு இல்லன்னா கோபத்துல ஏதாவது சொல்லிடப்போறேன்” கட்டிலில் உட்கார்ந்திருந்தவளை பிடித்து தள்ளிவிட்டு விட்டு தானும் படுத்துக்கொண்டான் கிருஷ்ணா.
மறுபடியும் வாழ்க்கை செக்கு சுற்றும் மாடாக தொடங்கிய இடத்திலேயே வந்து நிற்க, விழிபிதுங்கி போனது அவனுக்கு. 
மறுநாள் காலை, முடிவு செய்திருந்தபடி வெளியே கிளம்பியிருந்தார்கள். அவர்களோடு சித்தியும் அவரின் பெண்களிருவரும், ப்ரியாவும் மட்டுமே உடன் வந்தார்கள். 
“எங்க சுத்தினாலும் மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துரணும் ” என்று சொல்லி அனுப்பியிருந்தார் கமலா. 
நேற்றிரவு தங்களுக்குள் நடந்த பேச்சு கனவோ என்று எண்ணும்படி இருந்தது சாருமதியின் நடவடிக்கைகள்.
இளைய பெண்கள் மூவரோடும் நன்றாக பொருந்தி போன சாருமதி, அவர்களுக்கு இணையாக எல்லா இடங்களிலும் கொட்டமடித்தாள்.
 எந்த முகத்திருப்பலுமின்றி எப்போதும்போல இயல்பாகவே கிருஷ்ணாவிடமும் பேசினாள்.
எல்லா இடங்களுக்கும் சென்று விட்டு மதியம் இரண்டு மணிக்கு மேல் வீடு வந்து சேர்ந்தார்கள். வீட்டினுள் வரும்போதே சமையல் வாசனை மூக்கை துளைக்க,
“மாமி! உங்க சமையல் வாசமே பசியை அதிகப்படுத்துது சீக்கிரம் போடுங்க சாப்பிடலாம்” சொல்லிக்கொண்டே  டைனிங் டேபிள் முன் அமர்ந்தவன், தன்னருகே மனைவியை அமரவைத்துக் கொண்டே,
 அங்கிருந்த தன் அம்மம்மாவிடம்,”நீங்க சாப்பிட்டாச்சா அம்மம்மா? இல்லைன்னா வாங்க சாப்பிடலாம்” என்று அழைக்க,
அவரோ,”நான் பிரஷர்க்கு டேப்லட் போடணும்ல, அதனால சீக்கிரமே சாப்பிட்டுட்டேன். நீங்க சாப்பிடுங்க குட்டா” என்றார் .
மீன் குழம்பு, மீன்ஃப்ரை என்று உணவுகளை பரிமாற ஆரம்பித்த மாமனின் மனைவியிடம்,”என்னோட ஸ்பெஷல் உண்டுல்ல மாமி” என்று கிருஷ்ணா கேட்க
“ம்ம்… உனக்காக மாமா கடற்கரைக்கே போய் ப்ரெஸ்ஸாவே வாங்கிட்டு வந்தாங்க கிருஷ்ணா” சிரித்தபடியே சொல்லியவர் 
கணவன், மனைவி இருவர் இலையிலும் அவித்த வாளைமீன்களை  வைத்து,”கிருஷ்ணாவுக்கு ரொம்ப பிடிச்ச மீன். சாப்பிட்டு பாத்து எப்படி இருக்குன்னு சொல்லு ம்மா” என்றார் சாருமதியிடம்.
மண்சட்டியில் மஞ்சள், வத்தல், மல்லி, சீரகம், சின்னவெங்காயம் வைத்து அரைத்தெடுத்த விழுதோடு, சுள்ளென்று புளிக்கரைசலும், தேவைக்கு உப்பும் சேர்த்து அதில் வாளைமீன்களை  பக்குவமாக  மசாலா சுண்டி வரும்வரை வேகவைத்து  எடுக்க வேண்டும். காரமும், புளியும் சற்று தூக்கலாக இருந்தால் மீனின் ருசி அபாரமாக இருக்கும். 
தன் இலையில் இருந்தவற்றை ரசித்து சாப்பிட ஆரம்பித்தவன்,”ம்ம்… செம டேஸ்ட்டா இருக்கு மாமி!” சப்புகொட்டியவாறே மனைவியை பார்க்க,
அவளோ முள் நீக்கி மீனை சரியாக எடுத்து சாப்பிடத்தெரியாமல் திணறிக்கொண்டிருந்தாள்.
அதைப்பார்த்து லேசாக சிரித்தவன்,”அப்படி இல்ல சாரு!” என்றபடியே மீனின் ஒருபக்கமாக குண்டூசியை வரிசையாக சொருகிவைத்தது போல் இருந்த முள்ளை லாவகமாக உருவியவன், பின் மீனை பிய்க்க, அது கிட்கேட் சாக்லேட் பாரை நீளவாக்கில் பிய்த்தெடுக்கலாமே அப்படி பாளம்பாளமாக பிய்ந்து வந்தது. 
அதிலும் சமைத்திருந்த மீன் நல்ல விளைந்த மீனாக இருக்க, அழகாக பிய்ந்து வந்தது. தன் மனைவியின் இலையிலிருந்த மீனுக்கெல்லாம் அவனே முள்நீக்கி கொடுத்து உண்ணச்சொல்ல, ரசித்து உண்டவள்,
“நீ கையை எடு கிருஷ்ணா நானும் ட்ரை பண்றேன்”  சுற்றம் மறந்து சிணுங்க, உடன் சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் அவர்களின் அன்னியோன்யத்தை பார்த்து ரசித்துக்கொண்டிருக்க
“முன்னபின்ன இந்த மாதிரி சாப்ட்டுருந்தா தான எப்படி சாப்பிடனும்னு தெரியும், பிறந்ததுலயிருந்து இந்த மாதிரி சாப்பாடை எல்லாம் கண்ணாலக் கூட பாத்துருக்க மாட்டா.”
“அதனால நல்லா முள்ளெடுத்து  சாப்பிடக்குடு குட்டா, இல்லைன்னா உம்பொண்டாட்டிக்கு தொண்டைல முள்ளு கிள்ளு குத்திடப்போகுது”
அந்த வீட்டின் பெரியமனுஷியிடமிருந்து நக்கலாக வந்து விழுந்தது வார்த்தைகள்.
சட்டென்று ஒரு கனமான சூழ்நிலை அங்கு உண்டாக,
“என்ன பேசுறீங்க அம்மம்மா…” என்றான் கிருஷ்ணா சற்றே குரலையுயர்த்தி
“தப்புதான்… தப்பு தான்… உம்பொண்டாட்டி இந்த மாதிரி சாப்பாடெல்லாம் பாத்துருக்க மாட்டான்னு நான் சொன்னது தப்புதான்” போலியான பணிவோடு ஒரு மாதிரியான குரலில் சொன்னவர்,
“கண்டிப்பா எம்மக வீட்டுல இருந்து இவ அம்மா மிச்ச…” என்று தொடங்க… 
அவ்வளவு தான்… அடுத்து என்ன வரப்போகிறது என்று யூகித்திருந்த கிருஷ்ணா படாரென்று உட்கார்ந்திருந்த நாற்காலியை வேகமாக பின்னுக்கு தள்ளியபடியே எழும்பியவன்,
“உங்க முட்டாள்தனமான பேச்சை இதோட நிறுத்திக்குங்க பாட்டீ… ஒரு பொண்ணு ஏழ்மையான சூழ்நிலையிலிருந்து வந்தவளா இருந்தா என்ன வேணும்னாலும் பேசுவீங்களா நீங்க?” கிட்டத்தட்ட கர்ஜித்தான்.
“இங்கப்பார்றா… எம்பேரன் ஏழைகளின் பங்காளியா என்னைக்கு மாறுனான்? இந்த விஷயம் எனக்கு தெரியாமல் போச்சே ப்பு!” வயதான காலத்திலும் நக்கல் துள்ளி விளையாடியது கிழவியின் பேச்சில்
“ம்ஹும்… எந்த இடத்தில நாம செய்றது தப்புன்னு நமக்கு தெரியுதோ, அந்த இடத்தில நம்மளை நாம திருத்திக்கணும். அது தான் மனுஷனா பொறந்தவனுக்கு அழகு.”
“நான் மனுஷன் தான்னு நிரூபிச்சிட்டேன். இதை எங்க வேணும்னாலும், யார் முன்னாடி வேணும்னாலும் சொல்லுவேன்.” ஒரு நிமிர்வோடு சொல்லியவன்
 “தன்னோட உயிர்ல பாதியைக் கொடுத்து, உங்க மகளை அந்த எமனோட கைலயிருந்து பிடுங்கிட்டு வந்தவளை பூ போட்டு பூஜை பண்ணுங்கன்னு  நான் சொல்லலை. ஒரு மனுஷியா மதிங்கன்னு மட்டும் தான் சொல்லுறேன்” 
கொஞ்சமாவது புரிந்து கொள்ளமாட்டாரா? என்ற எண்ணத்தில் கிருஷ்ணா சொல்ல,
“ஏய்! நிறுத்துடா… வந்துட்டான் எப்போ பார்த்தாலும் காப்பாத்திட்டா… காப்பாத்திட்டான்னு சொல்லிக்கிட்டு”
“செய்ததுக்கு காசை வாங்கிட்டு ஒதுங்கிபோயிருக்க  வேண்டியது தானே. அதை விட்டுட்டு எதுவுமே வேண்டாம்ன்னு நாடகம் போட்டு, இன்னைக்கு மொத்த சொத்தையும் வளைச்சிட்டால்ல” வார்த்தைகளில் நெருப்பையள்ளி வீசினார் பரிமளவல்லி. 
 அங்கிருந்த மகளும், மருமகளும் அவரை கட்டுப்படுத்த முயல, அடங்குவேனா? என்று நின்றார் அந்த அம்மணி. 
சாருமதியோ துடித்துப்போனவளாய் கண்கள் கண்ணீரால் நிறைய கிருஷ்ணாவை மலங்க மலங்க பார்த்து விழிக்க… இதற்கு மேல் இவர்களிடம் பேசி பயனில்லை என்று முடிவெடுத்தவனாய்
மனைவியின் அருகில் வந்து அவள் விழிநீரை துடைத்தவன்,”போ… போய்… நம்ம பேக்கை எடுத்துட்டு வா சாரு!” என்று சொல்ல
“கிருஷ்ணா கொஞ்சம் பொறு ப்பா” மாமியும் சித்தியும் பதறினர்.
பெண்களின் பதற்றத்தைக் கண்டு சாருமதி லேசாக தயங்க,”இங்க நின்னு இன்னும் அசிங்கப்படப் போறியா… போடி… போய் எடுத்துட்டு வான்னு சொல்றேன்ல” 
கொண்டவனின் கோபத்தில் அவசர அவசரமாக கையைக் கழுவியவள், ஓடிப்போய் தங்கள் உடமைகளை அள்ளிப்போட்டு பயணப்பையை எடுத்துக் கொண்டு வர, அந்த நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த தன் கணவனிடம் அனைத்தையும் சொன்னார் கமலா. 
பாவம் அந்த மனிதர்… ‘என்ன சொன்னாலும் இந்த அம்மா திருந்தவே மாட்டாரா?’ நொந்துபோனவராய் சாருவிடமும் கிருஷ்ணாவிடமும் மன்னிப்பு கேட்க, 
“மன்னிப்பு கேட்குற அளவுக்கு நீங்க என்ன பண்ணுனீங்க மாமா? உண்மையிலேயே இப்படி உங்களை சங்கடபடுத்திட்டு கிளம்பி போறேனேன்னு எனக்கு தான் கில்டியா ஃபீலாகுது”
“ஆனால் இதுக்குமேல நான் இங்க இருந்தா என் மனைவிக்கு மரியாதை இல்லாமல் போயிடும்” சொல்லிவிட்டு சாருமதியின் கைகளை அழுத்தமாக பற்றி காருக்கு அழைத்து சென்றவன், ஒரு சின்ன தலையசைப்போடு அனைவரிடமும் விடைபெற்று கிளம்பி சென்றே விட்டான் தன் மனைவியுடன்.
அந்த வெள்ளைநிற இன்னோவாவில் கனத்த அமைதி நிலவ, சீறும் சிறுத்தையென வந்தவழியே அது திரும்பி சென்று கொண்டிருந்தது. 
சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்த சாருமதி காரின் வேகம் கண்டு கணவனின் தோள் தொட்டு லேசாக உலுக்கி,”கிருஷ்ணா! வேகத்தை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணு” என்று அதட்ட, 
மனைவியின் அதட்டலில் சற்றே தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு வேகத்தை குறைத்து, ஒரு பெரிய மரத்துக்கு கீழ் வண்டியை கொண்டு நிறுத்தினான்.
 சிறிது நேரம்கண்ணாடி வழியே முன்னால் தெரிந்த பாதையை வெறித்து பார்த்தபடியே இருந்தவன்,
“நீ என்னை கல்யாணம் பண்ணாமல் வேறயாரையாவது கல்யாணம் பண்ணியிருந்தா உறவுங்குற பேருல யாரும் உன்னை இப்படி கொத்தி கொதறியிருக்க மாட்டாங்கல்ல சாரு?” குரலில் விரக்தி தாண்டவமாட கேட்க,
மனம் முழுக்க வேதனையை சுமந்து கொண்டிருக்கும் பெண்ணால் இதற்கு என்ன பதில் சொல்லிவிட முடியும்?
ஆனாலும் இப்போது தன் வேதனையை விட தன்னை நினைத்து தன் கணவன் வேதனைப்படுவதை தாங்கிக்கொள்ள முடியாதவளாய்,
“ப்ச்ச்… விட்டுதள்ளு கிருஷ்ணா… இதையெல்லாம் நினைச்சுட்டேயிருந்தா நம்ம நிம்மதி தான் பறிபோகும்” தன் வலிமறைத்து எளிதாக சமாதானம் சொல்லியவள், 
ஹேண்ட்பேக்கிலிருந்த சின்ன வாட்டர்பாட்டிலை எடுத்து அவன் முன் நீண்டியபடியே,”மொகத்தை கழுவி கொஞ்சம் தண்ணி குடி கிருஷ்ணா! கொஞ்சம் ரிலாக்ஸ்ஸாயிருக்கும். அப்படியே நம்ம வீட்டை பாத்து போயிடலாம்” என்று சொல்ல, தண்ணீர் பாட்டிலோடு தன்முன்னே நீண்ட அந்த கையை பற்றியவன்,
“உன்னை அரை உயிராக்கி எங்க தேவைக்கு உபயோகப்படுத்திட்டு, குடும்பமே சேர்ந்து வெக்கமேயில்லாமல் உன்னையே மட்டம் தட்டி பேசுறோமே… நாங்கல்லாம் என்ன மனுஷங்க சாரு… “
அவன் அம்மம்மா இன்று செய்த காரியத்தில் தன்னையும் கூட்டு சேர்த்து கொண்டவன், அவளின் பற்றிய கைகொண்டு தன் முகத்திலறைந்து கொண்டு கதறியபடியே
“நான் பாவி சாரு… நான் பாவி… அவங்க அவ்வளவு பேசுறாங்க… நான் கோழை மாதிரி உன்னை கூட்டிட்டு ஓடிவந்துருக்கேன் பாரு… நான் பாவி…” என்று மீண்டும் மீண்டும் சொல்லியபடி கதற,
அவனின் இந்த கதறல் இன்றைய நிகழ்வுக்கானது மட்டுமல்ல என்று புரிந்துகொண்டவளுக்கு, அவனின் இந்த செயல் அவள் ஊனை உருக்கி உயிரை மெதுவாக அசைத்துப் பார்த்தது.
அந்த நிமிடம் தன் நெஞ்சத்தில் சேர்த்து வைத்திருந்த அத்தனை கோபங்களையும் அவன் கண்ணீரில் கரைத்தவளாய்,
“என்ன பண்ணிட்டு இருக்கிற கிருஷ்ணா… நடந்ததையே நினைச்சிட்டு இங்கயே புலம்பிட்டு நிக்கப்போறியா? சீக்கிரம் ரிலாக்ஸ் ஆகு, நாம கிளம்பலாம்…” என்று அதட்டலாகச் சொல்ல
எதுவுமே காதில் விழாதவனாக,”நான் பாவி… நான் பாவி…” என்று திரும்பத் திரும்ப பிதற்றிக் கொண்டிருந்தவனை தன் மற்றொரு கையால் தன்னை நோக்கி வளைத்தவள்,
 அவன் கண்களை தன் ஊடுருவும் விழிகளால் சந்தித்து,”ரிலாக்ஸ் கிருஷ்ணா…” என்று மெல்லிய குரலில் சொல்லியபடியே அவன் உதடுகளை தன் இதழ்களால் அழுந்தமூடினாள்…
  

Advertisement