Advertisement

சாருமதி.
அத்தியாயம் 19.
“அத்தான்… என்னத்தான் இப்படி பண்ணிட்டீங்க?”
“எப்படி பண்ணிட்டேன்?”
“எங்கிட்ட ஒருவார்த்தை கூட சொல்லாமல் சாரு க்காவை கல்யாணம் பண்ணிட்டீங்க?”
“சொல்லியிருந்தா என்ன பண்ணியிருப்ப?”
“சொல்லி…யிருந்தா… ஹாங்… சொல்லியிருந்தா என்னை கல்யாணம் பண்ணச் சொல்லி கேட்டுருப்பேன்ல!” 
தன் மாமன் வீட்டு ஹாலில் மனைவி சாருமதியோடு  சோஃபாவில் உட்கார்ந்திருந்த கிருஷ்ணாவுக்கு பக்கத்தில், சோஃபாவின் கைவைக்கும் திண்டில் அமர்ந்து கொண்டு, பேசிக் கொண்டிருந்தாள் சுப்ரியா. கிருஷ்ணாவின் மாமன் மகள் சுப்ரியா.
திருமணத்திற்குப் பிறகு தன் தாய்மாமா, சித்தி வீடு தவிர அருகிலிருந்த அனைத்து சொந்தங்களின் வீடுகளுக்கும் அவர்களின் அழைப்பின் பேரில் தம்பதியினர் விருந்துக்கு ஏற்கெனவே சென்றுவந்திருந்தனர். 
பள்ளியின் தரத்தை உயர்த்துவதற்கான அஃபிஷியல் வொர்க்ஸ் போய்க்கொண்டிருந்ததால் சட்டென்று போய்விட்டு திரும்ப முடியாத தூரத்தில் இருந்த வேதவல்லியின் உடன்பிறந்தவர்களின் வீடுகளுக்கு விருந்தாட தம்பதியரால் போகமுடியாத சூழ்நிலை.
அதனால் அந்த வேலைகள் முடிந்த பிறகு  வருகிறோமென்று தன் மாமனிடமும் சித்தியிடமும் சொல்லியிருந்தான் கிருஷ்ணா. 
மட்டுமன்றி தன்னுடைய திருமணத்தில் அம்மம்மா யாருக்கு வந்த விருந்தோ என்னும் பாவனையில் ஒன்றாமல் இருந்தது அவனுக்கு வருத்தமாகவே இருந்தது.
காரணம் தான் அவனுக்குத் தெரியுமே. அதனால் நிதானமாக தன் அம்மம்மாவிடம் தன் மனைவியைப் பற்றி எடுத்து சொல்லி புரிய வைக்கவேண்டும் என்று நினைத்திருந்தான் கிருஷ்ணா. 
அதற்கு போன உடனே திரும்புவதென்பது ஆகாதே. அதனாலேயே இங்கே பள்ளி சம்மந்தப்பட்ட வேலைகள் முடியட்டும் என்று நினைத்தது. 
இதோ இரண்டு நாள்களுக்கு முன்னர் அந்த வேலைகள் முடிந்திருக்க மதியத்திற்கு மேல் கிளம்பி மனைவியோடு மாமன் வீடு வந்து சேர்ந்துவிட்டான் கிருஷ்ணா.
அவர்கள் வந்து சேரும்போது ஐந்து மணி கழிந்திருந்தது. வீட்டிலிருந்த, மாமி கமலா அவர்களை வரவேற்று உட்கார வைத்துவிட்டு, குடிக்க, கொறிக்க எடுத்து வரவென்று உள்ளே சென்றிருக்க, அம்மம்மா மதியத்தூக்கம் முடிந்து அறையை விட்டு இன்னமும் வெளியே வந்திருக்கவில்லை.
அந்நேரம் கல்லூரி விட்டு வந்த சுப்ரியா தான், கிருஷ்ணாவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு இப்படிப் பேசிக்கொண்டிருப்பது. உடன் உள்ளூரிலேயே இருக்கும் கிருஷ்ணாவின் சித்தி பிள்ளைகள் சுஜிதாவும், விதுலாவும்.
சுப்ரியாவின் பேச்சில் ஒரு நொடி கண்ணை சுருக்கி அவளைப் பார்த்தவன், எதிரே சோஃபாவில் உட்கார்ந்திருந்த தங்கைகளை உற்றுப்பார்த்தான். 
 வாய்க்குள் சிரிப்பை அடக்கிக்கொண்டு    உட்கார்ந்திருந்தவர்களை பார்த்தவனுக்கு விஷயம் ஒருவாறு பிடிபட்டுவிட,
“ஏம்மா… ஏன்? எங்க கல்யாணத்தை எல்லாம் நல்லா என்ஜாய் பண்ணிட்டு தான வந்த? அப்புறம் இப்போ என்ன?” 
 ப்ரியாவின் பேச்சால் தன்னருகே அமர்ந்திருக்கும் மனைவியின் முகத்தில் ஏற்படும் மாறுதல்களை தன்  கடைக்கண்ணால் அளந்துகொண்டே, வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு  கேட்டான்.
“ம்ம்…அது… அது… ஒரு பொருள் நம்ம கைல இருக்கும் போது அதோட அருமை தெரியாதாம்ல… அது நம்ம கையை விட்டு போன பின்னாடி தான் அதோட அருமையேத் தெரியுமாம்.”
 “அப்படித் தான் எனக்கும் உங்களை மிஸ் பண்ணிட்டனோன்னு இப்போ ரொம்ப ஃபீல்‌ ஆகுது த்தான்…” 
சுப்ரியாவின் இந்த பேச்சில் லேசாக முகம் கறுக்க, சடாரென்று தன் பக்கத்திலிருந்து எழும்பிய சாருமதியை எழும்பவிடாமல்  கைகளை பற்றி இழுத்து முன்னைவிட நெருக்கமாக தன்னருகே கிருஷ்ணா அமர்த்திக் கொள்ள,
“ஹேய்… ” என்ற ஆரவாரத்தோடு சுஜிதாவும், விதுலாவும் எழும்பி ஓடிவந்து சுப்ரியாவின் கையை ஆளுக்கொன்றாக பற்றி ஆட்டியபடி,”நாங்க ஜெயிச்சிட்டோம்… ஜெயிச்சிட்டோம்… ஜெயிச்சிட்டோம்… சொல்லு ப்ரியூ…” டோரா பாணியில் பாடி அவளை வெறுப்பேற்றியவர்கள்
 சாருமதியை,”தேங்ஸ் ண்ணி…” என்றவாரே லேசாக  அணைத்து விடுவித்தார்கள்.
சுப்ரியாவோ,”ஹும்ம்…போங்க க்கா… நீங்க என்ன ஏமாத்திட்டீங்க!” என்று சிணுங்கினாள். 
முன்னவர்களின் சந்தோசத்துக்கு காரணம் புரியாவிட்டாலும் அவர்களிடம் புன்னகை முகம் காட்டிய சாருமதி, பின்னவளின் பேச்சின் அர்த்தம் புரியாது ஒரு குழப்பத்தோடே கணவனை முறைத்துப் பார்க்க, 
அவனோ முப்பத்திரெண்டு பல்லையும் முழுதாக வெளியே காட்டியபடி,”வேறென்ன? நம்ம ரெண்டுபேரையும் வச்சு ஏதாவது பெட் வச்சிருப்பாங்க. அதுல ப்ரியா தோத்துருப்பா, அதான் இப்டி சலிச்சுக்குறா சாரு!” என்றான்  மனைவியின் கோபத்தை ரசித்தபடியே.
 தன் காதலுக்கான எதிரொலியை மனைவியிடம் தினம்தினம் தேடுபவனுக்கு, சுப்ரியாவின் பேச்சில் தன்னவளின் முகத்தில் வந்து ஜாலம் காட்டிச் சென்ற உரிமையுணர்வுகளால், மனது உள்ளுக்குள் குதியாட்டம் போட, மகிழ்ச்சி முகத்தில் மத்தாப்பூவாய் சிதறியது
“ஆமா ண்ணி… பெட் தான். இதோ நம்ம ப்ரியா பேசினால்ல, அப்படி அவ பேசினா நீங்க டென்ஷனாகுவீங்களா? இல்லியா? இது தான் பெட்”
“நீங்க டாக்டர், அதனால இதெல்லாம் டேக் இட் ஈஸியா எடுத்துப்பீங்க, டென்ஷனே ஆகமாட்டீங்கன்னு அடிச்சு சொன்னா ப்ரியா.”
“ஆனால், அண்ணி டென்ஷனாகிடுவாங்கன்னு நாங்க ரெண்டு பேரும் சொன்னோம்…” சாருமதியிடம் தங்களின் பந்தயம் பற்றிய விபரம் சொல்லியபடியே,
“ஹேய்… ப்ரியூ… கடைசியில என்னாச்சும்மா? நாங்க சொன்னதுதான நடந்தது. எடு… எடு… சொன்னபடி காசை இந்த பக்கமா தள்ளு ம்மா” ஆர்ப்பரித்தாள் விதுலா.
“டாக்டர்னா, புருஷனை யார் வந்து கொத்திட்டு போனாலும், ஒன்னும் சொல்லாமல் பல்லை காமிச்சிட்டே இருப்பாங்களாம்மா? நல்லா வச்சாங்கம்மா பெட்டு… இவங்க போதைக்கு நாங்க தான் ஊறுகாவா?” 
இயல்பாய் கோபம் வர பற்களுக்கிடையே வார்த்தைகளை கடித்தபடி முணுமுணுத்துக் கொண்டிருந்த சாருமதியைப் பார்த்து கிருஷ்ணா மறுபடியும் வாயெல்லாம் பல்லாகிப் போக, 
“என்ன சிரிப்பு வேண்டிகெடக்கு உனக்கு?” கிசுகிசுத்தபடியே கண்களை உருட்டி மிரட்டினாள் அக்மார்க் மனைவியாகிப் போன சாருமதி. 
இதைத் தவிர வேறென்ன வேண்டும் கிருஷ்ணாவுக்கு… மனைவிக்கு இயல்பாய் தன்மீது ஒரு உரிமையுணர்வு,  பாசம், நேசம், கோபம் எல்லாம் இயல்பாய் மிக இயல்பாக, வரவேண்டும் என்று தன்னவளிடம் தேடிக் கொண்டிப்பவன் தானே…
அதை இப்போது அவளிடம் கண்டுகொண்டவன்  உல்லாசமாகச் சிரிக்க, அப்போது அங்கே வந்த பரிமளவல்லி ஏதோ தன் பேரன் மட்டுமே வந்திருக்கும் பாவனையில்,
“வா…குட்டா!” என்று வரவேற்றவர் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவாரே தன் பேத்தியைப் பார்த்து
“ஏன்டி கூறுகெட்டவளே! நீ இன்னைக்கு சொன்னதை ஒரு மாசத்துக்கு முன்னாடி சொல்லியிருந்திருந்தா எம்மக கைல கால்ல விழுந்தாவது உங்க கல்யாணத்தை முடிச்சிருப்பேன்ல?”
“எம்பேரன் வாழ்க்கையிலும் இப்படி கண்டதுகளும் வந்து தலையை நுழைச்சிருக்காதுல்ல” சாருமதியைப் பார்த்தவாறே அலட்சியமாக பேச,
அவ்வளவு தான்… முகத்திலிருந்த சிரிப்பு துணிகொண்டு துடைத்தாற்போல அழிந்து போக, அம்மம்மாவிற்கு ஏதோ பதில் சொல்ல முயன்ற கிருஷ்ணாவை முந்திக்கொண்டார் அந்த வீட்டின் மருமகள்.
 கையிலிருந்த காஃபி ட்ரேயை டீபாயில் வைத்தவாறே,”அத்த… இதென்ன வேண்டாத பேச்சு?” அழுத்தமாக அதட்டியவர்,
“நீ தப்பா எடுத்துக்காதம்மா சாரு… எங்க யாருக்குமே இந்த மாதிரி ஒரு எண்ணம்  கற்பனையில் கூட வந்தது கிடையாது. எனக்கும், சின்ன அண்ணிக்கும் பசங்க கிடையாது. கிருஷ்ணாவை தான் எங்க பையன் மாதிரி நாங்க மனசுல வச்சிருக்கோம்”
தன் மகளின் விளையாட்டும், மாமியாரின் பேச்சும் சாருமதியிடம் ஏதும் தேவையில்லாத குழப்பத்தை உண்டாக்கி விடக்கூடாது என்ற பதட்டத்தோடு அவர் விளக்கம் கொடுக்க முயல,
“ஹையோ… ஆமாக்கா… நான் கூப்பிடுறது தான் அத்தான். மற்றபடி சுஜி, விது மாதிரி நானும் அண்ணனாத் தான் ஃபீல் பண்ணுவேன்” 
“சும்மா ஃபன் பண்ணுறதுக்காக மூனு பேரும் இப்படி ஏதாவது பண்ணிட்டிருப்போம். நான் பேசுனது உங்களை ஏதாவது ஹர்ட் பண்ணியிருந்தா சாரி க்கா…”
சோஃபாவில் அமர்ந்திருந்த சாருமதியின் உயரத்திற்கு அவள் முன்னே கால்களை மடக்கி அமர்ந்த ப்ரியா, பேசியபடியே  சாருமதியின் கைகளைப்பற்றிக் கொள்ள,
“ச்சு… நீங்க ஃபன் தான பண்ணுனீங்க. அப்புறம் எதுக்கு சாரி, பூரி எல்லாம் சொல்லிக்கிட்டு… விட்டு தள்ளுவியா”  
என்றவள் தன் தங்கை வயதிலிருந்த சிறு பெண்ணின் தலையை மெதுவாக தடவி விட,
“அப்போ ஃப்ரெண்ட்ஸ் ஓகே…” அடுத்த கட்டத்திற்கு அடிபோட்டது அந்த பெண்.
“ஓகே… ஃப்ரெண்ட்ஸ்…” சொல்லியபடியே உயர்த்திய அவள் கைகளில் தன் கைகொண்டு சாருமதி அடிக்க,
‘தங்கள் வேடிக்கை விபரீதமாகிவிட்டதோ?’ என்று கலவரமுகமாக நின்ற விதுலாவும், சுஜிதாவும் ஓடி வந்து இந்த கூட்டணியில் இணைந்து கொள்ள,
வைத்தகண் வாங்காமல் சாருமதியை வெறித்துக் கொண்டிருந்த தனது அம்மம்மாவையே கவலையோடு பார்த்துக்கொண்டிருந்தான் கிருஷ்ணா.
அதன்பிறகு சிறிது நேரத்திலேயே மாமா வர, அவர் வந்த சிறிது நேரத்துக்கெல்லாம் தனது கணவனோடு புதுமணத் தம்பதியரை, தங்கள் வீட்டுக்கு அழைக்கவென சித்தி வர, அங்கு கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. 
இரவுணவை எல்லாரும் இங்கேயே முடித்து கொள்ளலாமென்று வீட்டுமனுஷியாக கமலா சொல்ல ஒத்துக்கொண்டு அனைவரும் ஒன்றாக இருந்து உணவருந்தியபடியே,
 நாளைக்காலை அங்கே அருகிலிருக்கும் பத்மநாபபுரம் அரண்மனை, திற்பரப்பு அருவி, தொட்டிப்பாலம் எல்லாவற்றிற்கும் போய் வரலாமென்று  திட்டமிட்டுவிட்டு கலைந்து சென்றனர்.
இரவு தூங்குவதற்காக தங்களுக்கென ஒதுங்கியிருந்த அறைக்குள் மனைவியோடு வந்திருந்தான் கிருஷ்ணா. அறை சகலவசதிகளோடு அருமையாக இருந்தது.
அங்கிருந்த பாத்ரூமில் உடல்கழுவி இரவு உடைக்கு மாறிக்கொண்டவன், சாருமதியையும் அவ்வாறே பணிக்க, அவளும் தட்டாது உடல்கழுவி சாரியிலிருந்கு ஒரு சுடிதாருக்கு மாறி வந்தாள். 
வந்தவள் இயல்புக்கு மாறாக கிருஷ்ணாவிடம் எதுவுமே பேசாமல் படுப்பதற்கு தயாராக, அவளின் அமைதியை தாங்கிக்கொள்ள முடியாதவனாக,”அம்மம்மா இப்படி பேசுவாங்கன்னு நானே எதிர்பார்க்கலை. சாரி சாரு!” என்றான் உலர்ந்து போனக்குரலில்..
“அவங்க சரியாத்தானே சொன்னாங்க கிருஷ்ணா! அப்புறம் எதுக்கு சாரி?” 
“என்ன சொல்லுற சாரு?”
“ஹ்ம்ம்… அவ்வளவு வசதியான தன் பேரனுக்கு, ஒரு மினிஸ்டர் பொண்ணோ இல்லை அட்லீஸ்ட் ஒரு ஜமீன் பொண்ணோ ஜோடியாகி இருந்தா, மனுஷங்களா தெரிஞ்சிருக்கும்”
“அப்படியில்லாமல், அவங்க வீட்ல வேலைப்பார்த்த சமையல்காரம்மாவோட பொண்ணு ஜோடியானா, அவங்க கண்ணுக்கு கண்டதுகளாத் தானே தெரியும் கிருஷ்ணா.”
“லூசா டி நீ?” எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிற?  அவள் பதிலில் சூடாகிப்போனவன் வேகமாக கத்த,
“ம்ம்… கண்டிப்பா கிருஷ்ணா… இல்லைன்னா இந்த கல்யாணம் வேண்டாம்ன்னு நான் முதல்ல எடுத்த முடிவுல
உறுதியா இருந்திருப்பனே!”

Advertisement