Advertisement

சாருமதியும் அவனையே பின்பற்றினாள். அந்த பார்த்தசாரதியிடம் அவர்கள் வைத்த வேண்டுதலின் வார்த்தைகள் வெவ்வேறாக இருந்தாலும் வேண்டுதலென்னவோ ஒன்றாகத்தான் இருந்தது. 
வணங்கி முடித்தவன் தன்நெற்றியிலும் அடையாளமிட்டு சாருமதியின் நெற்றியிலுமிட, அமைதியாக அனுமதித்தாள் அவனை. 
தன் மனதின் மாற்றத்தை அந்த எல்லாம் வல்ல இறைவனின் சந்நிதானத்திலிருந்தே கைக்கொண்டாள் அந்த காரிகை.
மேலும் மாதம் ஒன்று கழிந்திருந்தது… அந்த புதுமணத் தம்பதியரின் வாழ்க்கை, விருந்து, கேளிக்கைகள் முடிந்து கொஞ்சம் இயல்புக்கு திரும்பியிருந்தது.
அன்று ஒருநாள் மட்டும் தான் கிருஷ்ணா தனியறையில் தனியாக படுத்தது. மறுநாளே சாருமதியிடம்,”சாரு… அங்க, அந்த ரூம்ல காட் இல்ல, தரையில் படுக்க கஷ்டமாயிருக்கு. அதனால நான், இங்க, இந்த பெட்லயே படுத்துக்கலாமா?”
தனதறையில், தனது கட்டிலில், தன் மனைவியருகே படுக்க, தன் மனைவியிடமே அனுமதி கேட்டு நின்றான் அந்த நல்லவன். 
ஆனால் அவன் மனைவியோ,”அப்போ நான் அந்த ரூம்ல போய் படுக்கணுமா?” சந்தேகம் கேட்டாள் கணவனிடம்.
“இல்லல்ல… உனக்கு அப்ஜெக்ஷன் இல்லைன்னா நாம இரண்டுபேரும் இந்த பெட்டையே ஷேர் பண்ணிக்கலாம்”
 ஒருவழியாக இருவரும் கட்டில் உடன்படிக்கைக்கு வந்திருந்தார்கள்.
 சாருமதியும் இப்போதெல்லாம் கிருஷ்ணாவிடம் முகம் திருப்புவதில்லை. அவனிடம் சாதாரணமாக பேசிப் பழகுகிறாள்.
அவனுடனேயே ட்டூவீலரில் ஹாஸ்பிடல் போகிறாள், மத்தியானம் சாப்பாட்டிற்கு அவனுடன் வீட்டுக்கே வருகிறாள். அவனது சின்னச்சின்ன தொடுகைகளை கூட வேறுபாடு இல்லாமல் ஏற்றுக்கொள்கிறாள். 
சுருங்கச்சொன்னால் அவள் மனதில் பதிந்து போயிருந்த அந்த அகங்காரன் கிருஷ்ணாவுக்கும் அவள் கணவன் கிருஷ்ணாவுக்கும் ஆறு என்ன? அறுநூறு வித்தியாசங்கள் கூட சொல்லுவாள் இந்த மனைவி சாருமதி. 
இந்த கல்யாணத்திற்கு மூலக்காரணமான மனிதரோ இப்போது ஆனந்தத்தின் உச்சியில். 
 வேதவல்லியிடமும் ஒரு சுமுகமாக உறவையே கொண்டு செல்கிறாள் சாருமதி. இதுதான் தன்வாழ்க்கை என்று முடிவு செய்தபின் எந்த பழைய நிகழ்வுகளையும் நிகழ்காலத்தோடு சேர்த்து குழப்பிக்கொள்ள தயாராக இல்லை அவள்.  
அதேபோல தன்வீட்டின் மூத்த மகளாக அவளது கடைமைகளிலிருந்தும் கொஞ்சம் கூட இறங்கினாளில்லை.
ரகுவும் கௌரியும் படிப்பிற்காக ஹாஸ்டலில் இருப்பதால்,
கல்யாணி அம்மாவும், காயத்ரியும் மட்டுமே வீட்டில். 
 நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன் வீட்டுக்கு வந்து விடும் சாருமதி,காயத்ரியிடம் தனிமையில் “அந்த ராகேஷால் அதன் பிறகு ஏதும் பிரச்சனை உண்டா?” என்பதையும் கேட்க தவறுவதில்லை. 
கூடவே “அப்படியே பிரச்சினை ஏதும் வந்தால் கூட  தங்களிடம் மறைக்கக்கூடாது. எதையும் துணிச்சலாக எதிர்கொள்ள வேண்டும். பயந்து ஓட ஓடத்தான் பயம் காட்டுகிறவர்களுக்கு கொண்டாட்டமாக போய்விடும்” என்று தங்கைக்கு தைரியம் சொல்லித் தரவும் தவறுவதில்லை. 
மொத்தத்தில் தராசின் முள் போல, தன் இருகுடும்பத்தையும் சமமாக தாங்கி நிற்கிறது அந்த பெண்மை. 
ஆனால் கணவனுக்கு மட்டும் இன்னும் அறைத்தோழி மட்டுமே. அதைத் தாண்டி அடுத்த கட்டத்திற்கு போக இருவருக்குமே ஒரு தயக்கம். 
அன்று கிருஷ்ணாவோடு தன்வீட்டுக்கு வந்திருந்த சாருமதி, தன் அந்த மாத சம்பளத்தை அப்படியே அம்மாவிடம் கொடுக்க, பதறிப்போனார் கல்யாணி. 
 மருமகனாகிப் போன கிருஷ்ணாவை பார்த்தவர்,”ஐயோ! இதெல்லாம் வேண்டாம் சாரு! நான் இங்க எல்லாம் பாத்துக்குவேன். நீ உன்வாழ்க்கைப் பாரு” 
“என்னது? என் வாழ்க்கையா? அப்போ நீங்கல்லாம், இப்போ என்வாழ்க்கைல இல்லையா?” 
“அப்டி இல்லம்மா… இப்போ உனக்கு கல்யாணம் ஆகிடிச்சி…இனி உன் குடும்பத்தை தான் நீ பாக்கணும்” 
“அப்போ கல்யாணம் ஆகிடிச்சுன்னா நான் சுந்தரம் கல்யாணியோட பொண்ணில்லைன்னு ஆகிடுமா?” சாருவின் இந்த கேள்வியில் ஆதங்கம் கொஞ்சம் அதிகமாகவே கலந்திருந்தது.
“அப்டி இல்லைம்மா…” 
“பின்ன எப்படி?” 
தங்கள் இருவருக்குமிடையே தலையிடாமல், தங்களையே கவனித்து கொண்டிருந்த கிருஷ்ணாவைப் பார்த்த கல்யாணி,
“அங்க உன் வீட்ல…” என்று தயங்க, 
“நான் எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன் ம்மா… யாருக்கும் எந்த அப்ஜெக்ஷனும் இல்ல” என்றவள்,
“ம்மா… வாங்கிக்கோங்க ம்மா… கௌரிக்கு ஃபீஸ் கட்டணும், காயத்ரி அடுத்து படிக்கணும்னு சொன்னா படிக்க வைக்கணும். அதுக்கெல்லாம் என் சம்பளம் இல்லைன்னா ரொம்ப கஷ்டப்படுவீங்க.”
சாருமதியின் வார்த்தைகளிலுள்ள உண்மை உறைக்க,”தம்பி, வேலைக்கு போய் சம்பாதிக்குற வரைக்கும் தான் வாங்குவேன்” என்ற நிபந்தனையோடே வாங்கிக்கொண்டார் கல்யாணி.
“கல்யாணம்னு ஒன்னு முடிஞ்சு, கழுத்துல தாலின்னு ஒன்னு ஏறுனதும் பெத்தவங்களுக்கு பொண்ணுங்க ஏதும் பண்ணக்கூடாதா?”
“அப்படியே பொண்ணுங்க  பண்ணுனாலும் அதை வாங்கிக்கிறதுக்கு பொண்ண பெத்தவங்க எவ்வளவு யோசிக்கிறாங்க!”
“நான் உங்களுக்கு பணம் தர்றது என் புருஷன் வீட்ல எல்லாருக்கும் தெரியும்னு சொன்னாதான் வாங்கிக்கிறாங்க. ம்ஹூம்…பொல்லாத கல்யாணம்… இந்த கல்யாணத்தை பண்ணிட்டு பொண்ணுங்க படுற அவஸ்தை இருக்கே?” 
போன மாதம் வரை தன்னிடம் பணம் வாங்கி வீட்டு செலவு
செய்த அம்மா, இன்று தன்னிடம் பணம் வாங்க யோசித்தது மனதை பாதிக்க, இரவு உணவு முடித்து, படுக்கைக்கு வந்தபிறகும் கிருஷ்ணாவிடம் அங்கலாய்த்து கொண்டிருந்தாள் சாருமதி. 
“அது அப்படி இல்ல சாரு…” 
“பின்ன எப்படியாம்? உனக்கு ரொம்ப தெரியுமோ கிருஷ்ணா?” கொஞ்சம் எரிச்சலில் தான் வந்து விழுந்தது பேச்சு.
“நம்ம வீட்டைப் பொறுத்தவரைக்கும் ஒன்னும் பிரச்சினை இல்லை. ஆனால் எல்லாரும்…” பேசிக்கொண்டிருந்தவனின் வாயை தன் கையால் வேகமாக மூடியவள், 
“யப்பா சாமி…ஏற்கனவே நானே மண்ட சூடாகிப்போய் இருக்கேன். நீ வேற லெக்சர் குடுத்து என்னக் கொல்லாத” 
இயல்பாக தன் கையால் அவன் வாயை மூடியதை உணராதவளாய் அருகில் கிடந்த ரிமோட்டால் படுக்கைக்கு எதிர்ப்புறம் இருந்த டிவியை உயிர்ப்பிக்க, 
ஏதோ நாடகம் போல…அதில், ஒரு எட்டு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஏதோ ஒரு பொருள் கேட்டு அடம்பிடித்துக் கொண்டே இருக்க, அவன் தாயோ மறுத்துக்கொண்டேயிருந்தாள். 
தாயின் மறுப்பால் கோபம் கொண்ட அந்த சிறுவன் திடீரென்று தன் கையிலிருந்த ஃபோனை சுவரில் தூக்கி எறிய சில்லுசில்லாக நொறுங்கிப்போனது அந்த கைபேசி. 
உடனே ஓடிவந்த அந்த தாய்,”கூல்டவுண் பேபி… ரிலாக்ஸ்…ரிலாக்ஸ்…” என்று அணைத்து, அவன் முதுகை தடவி விட்டுக்கொண்டே,
“அப்பா வந்ததும் வெளியே போய் நீ கேட்டதை வாங்கிட்டு வந்துடலாம். ஓகே” என்று சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.
அதை பார்த்துக் கொண்டிருந்த சாருமதியோ கோபமாக டிவியை ஆஃப் பண்ணிவிட்டு,”புள்ளையா அது குரங்கு. அது செய்ததுக்கு முதுகுல நாலு இழுப்பு இழுக்காம, அந்த பெரிய குரங்கு அதை கொஞ்சுது. இப்படி வளத்தா புள்ள உருப்டாப்ல தான்” 
சத்தமாக சொல்லியவள் படுத்துக்கொண்டு தலை வரை பெட்ஷீட்டை இழுத்து விட்டுக்கொண்டாள். 
“நானும் ஒருகாலத்துல இந்த பையனைப் போல குரங்காத்தான் இருந்தேன் சாரு. ஆனால் இந்த பையனை மாதிரி என்னை எங்கம்மா அடம்பிடிக்க விட்டது கிடையாது”
“ஹாங்… நீ என்ன சொன்ன கிருஷ்ணா?…” தன் முகத்தை மூடியிருந்த பெட்ஷீட்டை விலக்கியபடியே, தான் கேட்டது சரிதானா  என்னும் விதமாக கேட்க, 
“நீ சொன்னமாதிரி நானும் ஒரு குரங்காத்தான் சின்னபுள்ளைல இருந்தேன்னு சொன்னேன்.”
‘ஐயையோ! நான் அந்த பையனை மட்டும் குரங்குன்னு சொல்லலையே! அவனோட அம்மாவையும்ல…’ பதறிப்போனவள், வேகமாக எழுந்து உட்கார்ந்து கொண்டு, “நான் எதையும் மீன் பண்ணி சொல்லலை கிருஷ்ணா” என்க
“ம்ம்… சின்ன வயசுல கிடைச்ச அளவுக்கதிகமான செல்லம், நான் கேட்டதெல்லாம்… சமயத்துக்கு கேக்காததும் கூட கிடைச்ச வேகம் இதெல்லாம் எனக்கு ஒரு திமிரை உண்டாக்கிச்சுன்னா…” 
“அந்த சின்ன வயசுலயே கிடைச்ச அளவுக்கதிகமான மரியாதை… அதுவும் என்னைவிட வயசுல ரொம்ப… பெரியவங்கெல்லாம் கூட என்னை மரியாதையா கூப்பிட்டது, நடத்துனதெல்லாம் சேர்ந்து என்கிட்ட மிகப்பெரிய அகங்காரத்தை உண்டு பண்ணிச்சு” 
“அது, நான் பெரியவன், எனக்கு கீழத்தான் எல்லாரும், அபபடிங்குற எண்ணத்தை எம்மனசுல ஆழமா பதிய வச்சது” 
“அந்த எண்ணத்தாலத் தான் கிளாஸ்ல நீ என்னை ஜெயிக்கும் போதெல்லாம், நீ எனக்கு கீழத்தான்னு மட்டம் தட்டுறதுக்காகவே  உன்னை வெறுப்பேத்துவன்” 
சொல்லிக்கொண்டிருந்தவனின் குரல் தன்செயல் குறித்த
வெட்கத்தில் உள்ளடங்கிப் போக…
“ஆனால் நீயெல்லாம் எனக்கு ஜூஜூபி… நான் இருக்கேன்டா உனக்கு அப்பன்னு என்னை ஆட்டம் காண வச்சிட்டான் அந்த கடவுள் என் அம்மா மூலமா” 
“உண்மையிலேயே அதுக்கப்புறம் தான் எனக்கு வாழ்க்கை ன்னா என்னன்னே புரிஞ்சுது சாரு…” ஏனோ தன்னைப்பற்றி சொல்லவேண்டுமென்று தோன்ற எந்த ஒளிவுமறைவுமின்றி சொல்லிவிட்டான் கிருஷ்ணா.
மௌனமாக கேட்டுக்கொண்டிருந்தவள்,”அப்போ உங்கம்மாவுக்கு மட்டும் உடம்புக்கு எதுவும் இப்படி ஆகலைன்னா, நீ இன்னும் அதே கிருஷ்ணாவா, ஐ மீன்…இந்த சாருமதியை பிடிக்காமல், அவளை வெறுக்குற கிருஷ்ணாவாத் தான் இருந்துருப்ப ல்ல?”
கேள்வியைக் கேட்டவள் என்னவோ படுத்தவுடன் உறங்கிப்போக… அதற்கு விடை தெரியாமல் நீண்டநேரம் விழித்திருந்தான் கிருஷ்ணா…
 
 

Advertisement