Advertisement

சாருமதி.
அத்தியாயம் 18.
“சாரு…”
“சாருமதி…”
ஏதோ கனவில் அழைத்தது போலிருந்தக் குரலில் சட்டென்று கண்விழித்தாள் சாருமதி.
தூக்கம் விழித்த கண்களுக்கு சுற்றுப்புறம் கலங்கலாகப் புலப்பட, நேற்று தனக்கு கிருஷ்ணாவுடன் திருமணம் ஆனதும், தான் இப்போது கிருஷ்ணாவின் வீட்டில் அவனின் அறையிலிருப்பதுவும் ஞாபகத்திற்கு வந்தது அவளுக்கு.
கூடவே, நேற்றிரவு கிருஷ்ணாவின் அறைக்கு அழைத்து  வரும்போதே,”நாளைக்கு விடியகாலம் அஞ்சு மணிக்கெல்லாம் எழுப்ப வந்துடுவேன். கரடின்னு இந்த பெரியம்மாவை நினைச்சுக்காம எழுந்துக்கணும் டா” என்று வைதேகி சொல்லியது ஞாபகத்துக்கு வர,
   வேகமாக படுக்கையிலிருந்து இறங்கியவளுடனே படுக்கையில் தூவியிருந்த பூக்களில் சிலதும் தரையைத் தொட்டன. 
மூன்று பேர் தாராளமாக படுத்து உருளலாம் போன்று இருந்த அந்த பெரிய கட்டிலைத் திரும்பிப் பார்க்க, அதில் தான் மட்டுமே படுத்ததற்கான அடையாளம் தெரிந்தது.
‘ஓ… அப்போ நேத்து நைட் முழுக்க தலைவர் அந்த ரூம்லயே செட்டில் ஆகிட்டாரு போல!’ எண்ணமிட்டபடியே தனக்கு வலதுபக்கமாக சுவரில் இருந்த கதவை நோட்டமிட, அது சாத்தியது சாத்தியபடியே இருந்தது. 
அதே சுவரில் சற்று தள்ளி  இன்னும் ஒரு கதவு சாத்தியிருக்க,’ஹ்ம்ம்… ரூமுக்குள்ளேயே ரூமா? இதோ நான் நிக்குற ரூம்லயே எங்கவீட்டை போல ரெண்டுவீடு கட்டிறலாம் போல! இதுல இன்னும் இரண்டு சைட்ரூம் வேற இருக்கு!’ 
“சாருமதி…” 
அடுத்த அழைப்பில் எண்ணஇழைகள் அறுபட,
“இதோ வந்துட்டேன் பெரிம்மா…” சொல்லியபடியே  சரியான தூக்கம் வாய்க்கப்பெறாததால் நெருப்பென காந்தியக் கண்களை தடவி விட்டுக்கொண்டு, 
அவசரமாக தன்னை குனிந்து பார்க்க, நேற்றைய இரவுக்கென உடுத்தியிருந்த புடவையோடு அலுங்காமல், நலுங்காமல் இருந்தது தோற்றம்.
‘ம்ம்… பெர்ஃபெக்ட்…’ முணுமுணுத்தபடியே வாசலை நோக்கி நகர்ந்தவளை,
“ஹேய்… சாரு… கதவை திறக்காத…ஒரு நிமிஷம் நில்லு..”  மெலிதாக கத்தியபடியே பக்கத்து அறையிலிருந்து ஓடி வந்த கிருஷ்ணா, அவள் கையைப் பிடித்து வேகமாக இழுக்க முயற்சிக்க, 
கைக்குப் பதில் அவளுடைய புடவையின் முந்தானையும், தலையில் நீளமாக வைத்திருந்த நேற்றைய பூச்சரமும் சேர்ந்து அவன் கையில் இழுபட்டது.
 இழுத்த இழுப்பில், புடவையில் குத்தியிருந்த பின் தெறித்து அவள் தோள்களிலிருந்து புடவை கீழே நழுவ ஆரம்பித்ததென்றால்,  அவள் தலையிலிருந்த பூச்சரம் இப்போது வெறும் நார்ச்சரமாக தொங்கியது.
 தன் தோள்களிலிருந்து நழுவிய புடவையைச் சட்டென்று தன்னிருகைகளால் பற்றிக்கொண்டவள்,”என்… என்ன பண்ணுற கிருஷ்ணா?…” அதட்டியபடிக் கேட்டவளின் குரலில் கோபமிருக்க
“ல்ல… ஒன்னுமில்ல… ” என்றபடியே நிதானமாக அவளை பார்வையிட்டவன்,”ம்ம்… இப்போ போ…”  என்று சொல்லிவிட்டு வேகமாகப் அந்த அறையில் கிடந்த கட்டிலிலேயே போய் படுத்துக்கொண்டான். 
அவன் செயலில்,”லூசாப்பா நீ…” என்ற பாவனையில் கிருஷ்ணாவை பார்த்துக் கொண்டிருந்த சாருவை மீண்டும்,”சாரு ம்மா…” என்ற குரல் உசுப்ப,
“இதோ… வந்துட்டே இருக்கேன் பெரிம்மா…” என்றவள் கட்டிலில் கிடந்த கிருஷ்ணாவை உறுத்து விழித்துவிட்டு முந்தானையை சரியாக தோள்களில் அள்ளிப் போட்டவாறே கதவைத் திறந்தாள். 
 அவ்வளவு நேரத்துக்கெல்லாம் குளித்து முடித்து மங்களகரமாக நின்றுகொண்டிருந்த வைதேகி,  தன் முன்னால் நின்று கொண்டிருந்த சாருமதியை தலைமுறை கால்வரை உற்றுப் பார்த்தவர்,
திருப்தியாய் ஒரு புன்னகையை உதட்டில் நெளியவிட்டு,”என் ராசாத்தி…” என்றபடியே சாருமதியின் கன்னம் வழித்து திருஷ்டியெடுத்தார்.
இப்போது கிருஷ்ணாவின் செயலுக்கு நன்றாகவே அர்த்தம் புரிந்தது சாருமதிக்கு. ‘அடப்பாவி! உன்னைப் போய் நான் லூசுன்னு தப்பா நெனைச்சுட்டனேடா! ஆனால் நீ பெரிய தில்லாலங்கடியால்ல இருப்ப போல’ நினைத்துக் கொண்டவளை
“வா ம்மா… கீழ போய் குளிச்சிட்டு சாமி கும்பிடலாம்” என்ற வைதேகி, ரூமுக்குள் லேசாக எட்டிபார்த்தபடியே,”நீயும் சீக்கிரம் குளிச்சிட்டு கீழ இறங்கி வா கிருஷ்ணா, சாமி கும்பிடணும்” என்க
“ம்ம்… சரி த்த…” அப்போது தான் தூக்கம் கலைந்தவனைப் போன்ற பாவனையில் படுக்கையிலிருந்தே லேசாக தலையைத் தூக்கி பதில் சொல்லிய கிருஷ்ணாவைப் பார்த்து
‘எங்கப்பா சாமி! நேத்து ராத்திரி டயலாகெல்லாம் அடிச்சிட்டு தனியா அந்த ரூம்ல போய் தூங்குனதென்ன? இப்போ வந்து நான் படுத்த இடத்திலேயே படுத்துட்டு பதவிசா பதில் சொல்லுறதென்ன? சரியான நடிகன் டா நீ!’ 
முணுமுணுத்தது சாருமதியின் மனது.
ம்ம்… நேற்று கல்யாண நிகழ்வுகளெல்லாம் முடிந்து சொந்தங்களும் பந்தங்களும் இனிதே விடைபெற்று சென்றிருந்ததைப் போல, பகல்பொழுதும்  இனிதே இரவு சாம்ராஜ்யத்திடம் விடைபெற்று சென்றிருக்க, 
சாருமதியை அந்த நாள் இரவுக்கென மெலிதாக அலங்கரித்து ஆயிரம் அறிவுரைகளோடு கிருஷ்ணாவின் அறையில் கொண்டு விட்டுவிட்டு வந்திருந்தார் வைதேகி. 
அறையின் உள்ளே வந்தவள் அந்த ஒற்றை அறையின் பிரம்மாண்டத்திலேயே திகைத்துப் போனவளாக சுற்றும் முற்றும் பார்க்க, கிருஷ்ணா அங்கு இல்லை என்பது நிச்சயமாகவும்,
படபடத்துக் கொண்டிருக்கும் தன்னை நிதானப்படுத்திக் கொள்வதற்காக அறையின் ஒருபுறமாக மல்லிகை பூக்களாலும் ரோஜா இதழ்களாலும் தன்னை அலங்கரித்துக் கொண்டு நின்ற கட்டிலைத் தவிர்த்து,
அங்கே கிடந்த சோஃபாவில் போய் உட்கார்ந்து கொண்டு கட்டிலைப் பார்க்க, ஏனோ அது இவளைப் பார்த்து மௌனமாக சிரித்தது போலவே இருந்தது.
 ‘தானாக ஒத்துக்கொண்டதால் தான் இந்த திருமணம் இதுவரை வந்திருக்கிறது. ஆனாலும்… ஆனாலும்… இருவருக்கிடையே எந்தவொரு புரிதலுமே இல்லாமல் தன்னை சம்சாரசாஹகரத்தில் தள்ளிவிடுவானோ இந்த கிருஷ்ணா!’
இந்த எண்ணமே பூதாகரமாக அவளை வியாபித்து நிற்க, கதவு திறந்து மூடும் சத்தம் கேட்கவும் தானாகவே விறைப்புற்றது அவள் உடம்பு. 
இன்று முழுவதும் ஒரு இலகுதன்மையோடு இயல்பாக நடந்து கொண்ட கிருஷ்ணாவை லேசாக மனம் ரசித்திருந்தாலும் கூட, அவனுடனான தனிமையை ஏற்றுக்கொள்ள மறுத்து முரண்பட்டு நின்றது அவள் மனது. 
காலடிச்சத்தம் அவளை நெருங்க நெருங்க அவனை எதிர்கொள்ள முடியாதவளாய் கண்களிரண்டையும் இறுக மூடியபடி உட்கார்ந்திருக்க,
அவளருகில் வந்து தன் மூச்சுக்காற்று அவள்மீது படும் தூரத்தில் அவள் முகத்துக்கு நேராக குனிந்து நின்றவன்,
“ஹேய்… இங்க என்ன உட்கார்ந்துட்ட சாரு? வா அங்க போலாம்…” என்றபடியே அவள் கைகளிரண்டையும் பற்றி அவளை எழுப்பியவன், அப்படியே படுக்கைக்கு அழைத்து சென்று அதில் அவளை அமரவைத்து “சாரு…” என்று மென்மையாக அழைத்தான்.
அந்தக் குரலில் அவளின் இருதயம்  பந்தயக் குதிரையின் வேகம் கொள்ள, முகமெங்கும்  வியர்வை முத்துக்கள் லேசாக பூக்க ஆரம்பித்தது.
“எங்கிட்ட என்ன பயம் உனக்கு? ஹ்ம்ம்…” மெல்லிய குரலில் கேட்டவன், அவள் மனதை போல நெற்றியில் அலைபாய்ந்து கொண்டிருந்த கற்றை கூந்தல் மீது இதழ்குவித்து காற்றை லேசாக ஊதி அதை ஒதுக்க முயல, அதுவும் அவள் மனதைப் போலவே அடங்க மறுத்தது.
தன் கைகொண்டு அதை ஒதுக்கி அவள் காதுக்கு பின்னே லேசாக செருகிவிட்டவனின் செயலில், அந்த தேக்குமரக் கட்டிலின்காலை இருகப் பற்றிக்கொண்டவளைப் பார்த்து லேசாகச் சிரித்தவன், 
“அன்னைக்கு, நீ உன் ஐயாவுக்காக தான் எங்க அம்மாவுக்கு உயிர் பிச்சை போட்ட. இன்னைக்கும் அதே ஐயாவுக்காக தான் அவரோட மகனுக்கு வாழ்க்கை பிச்சை போட்டுருக்கங்குறது உனக்கு புரியுதா சாரு!” 
நிதானமாக கேட்டவனின் குரலில் சட்டென்று நிமிர்ந்தவள், மாட்டிக்கொண்டவளைப் போல பரிதாபமாக அவன் முகம் பார்க்க, அவன் கண்களிலோ அப்பட்டமான வலி  தெரிந்தது.
“போனா போகுதுன்னு, அவருக்காக நீ  பிச்சை போட்ட இந்த வாழ்க்கையை இப்போ நான் வாழ இஷ்டப்படலை  சாரு. என்னைக்கு, எனக்கே எனக்காக உன் இதயம் துடிக்குதோ அன்னைக்கு… அன்னைக்கு  பாத்துக்கலாம் எல்லாம்” 
உறுதியாகச் சொன்னவன் லேசாக அவள் கன்னம் தட்டியபடியே நகர்ந்து சென்று அறைக்குள் இருந்த அந்த மற்றொரு அறைக்குள் சென்று கதவடைத்துக் கொள்ள, 
நடந்தது எதையும் நம்பமுடியாத பாவனையில் விழிவிரித்து பார்த்துக் கொண்டிருந்தாள் சாருமதி.
அவளுக்கு கிருஷ்ணாவின் இந்த முடிவு நிம்மதியைத் தந்திருந்தாலும், அவன் கண்களில் தெரிந்த வலி ஏனோ அவளை கொஞ்சம் அசைத்துப் பார்த்தது.. 
‘ஏய் சாரு! கிருஷ்ணா என்னை அப்டி பேசினான், இப்டி பேசினான்… அந்த வார்த்தையால எம்மனசு வலிச்சுன்னு சொன்னியே?’ 
‘ஆனால் இன்னைக்கு உன்னோட ஒவ்வொரு செயலாலையும் அவனுக்கு மனவலியைக் கொடுக்கிறியே! இது எந்த ஊரு நியாயம் மேடம்?” 
 வாழ்வில் முதன்முறையாக அவளுடைய மனசாட்சி கிருஷ்ணாவிற்கு ஆதரவாக அவளை நிற்க வைத்து கேள்வி கேட்டது.
‘நான் செய்ததெல்லாம் தப்பு என்னை மன்னிச்சிடுன்னு ஒருத்தன் கால்ல விழுந்து கதறாத குறையாக மன்னிப்பு கேட்டு தன்னை மாற்றிக்கொண்ட பின்பும் பழங்கணக்கு பாத்துக்கொண்டே இருந்தால், தன் நிம்மதியோடு சேர்ந்து பலர் நிம்மதியும் பாழாகிப் போய்விடும்’ என்பது புரிந்தவளாய், 
உலகத்து மனிதர்களெல்லாம் நிம்மதியாக வாழ்வதற்கு இறைவனால் கொடுக்கப்பட்ட மாமருந்தாம் மறதியை, தனக்கு தானே பிரிஸ்கிரைப் செய்து கொள்ள முடிவெடுத்துக் கொண்டாள் அந்த மருத்துவர்.
*******
இருள்பிரியாத அந்த அதிகாலை வேளையில், இதமான வெந்நீரில் சாருமதியை குளிக்கச் சொல்லி, புத்தாடை கொடுத்து உடுத்தச்சொல்லி, தலைநிறைய பூ, நெற்றிவகிட்டில் குங்குமமும் வைத்து தங்களுடைய அந்த பாரம்பரியமான பூஜையறையில் விளக்கேற்றச் சொன்னார்கள் வைதேகியும், தேவகியும். 
ஏற்கனவே நேற்று திருமணம் முடிந்து பூஜையறையில் சாருமதி விளக்கேற்றியிருந்தாலும் மறுநாள் காலையில் அந்த வீட்டில் பிறந்த பெண்பிள்ளைகளோடு நின்று விளக்கேற்றுவது ஒரு சம்பிரதாயமாம் அந்த குடும்பத்தில்.
அதைத்தான் மூன்று பேரும் சேர்ந்து செய்து முடித்திருந்தார்கள். 
அவர்களுடைய சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் எல்லாம் பார்க்கும் போது, ‘வருங்காலத்தில் இதையெல்லாம் நான் சரியாக கடைபிடித்துவிடுவேனா?’ என்ற ஒரு சின்ன பயம் அவள் முகத்தில் தெரிய
அதை சரியாக படித்த வைதேகி,”சாரு! எதுக்கு பயப்படுற? போகப்போக எல்லாம் தன்னாலே உனக்கு தெரிஞ்சிடும். அப்படி  இல்லையா? எங்க அண்ணிட்ட கேளு”
“அவங்களுக்கும் தெரியலையா? ஒரு ஃபோனை போட்டு எங்ககிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோ. அவ்வளவு தான் சிம்பிள்…” என்றவருக்கு ஏனோ சாருமதியின் முகம் லேசாக வாடுவதைக் கூட காணப் பொறுக்கவில்லை.
அதுவும், நேற்று திருமணம் முடிந்து சாயங்காலம் போல கிளம்பிய அவளின் நட்புகளிடம் கண்ணை கசக்கிக்கொண்டு நின்ற சாருமதியாகட்டும், 
 பெண்ணையும், மாப்பிள்ளையும் மறுவீடு அழைத்துச் சென்று, திரும்பவும் முறையாக புகுந்த வீட்டில் மகளை  விட்டு விட்டுச் சென்ற தாயையும், உடன் பிறந்தவர்களையும் கட்டிக்கொண்டு அழுத சாருமதியாகட்டும்…
அவளின் எல்லா செயல்களிலும் அந்த பேரிளம் பெண்ணிற்கு தன்னுடைய திருமண நாளின் நினைவுகளை கொஞ்சம் எட்டிப் பார்த்தனவோ என்னவோ?
அதனால் தான் அவளை தனிமையாக உணரவிடாமல் நேற்றிலிருந்தே அவளுடனே ஏதாவது பேச்சுக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.
வைதேகி, தேவகி இருவரின் இயல்பான பேச்சால் சாருமதி கூட தன் தயக்கம் ஒதுக்கி அவர்களுடன் சகஜமாக பேச ஆரம்பித்திருக்கிறாள். 
தன் நாத்தனார்கள் காலையில் இந்த சடங்கை சரியாக செய்து முடித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையோடு, கல்யாண அசதியும் சேர்ந்து கொள்ள, வேதவல்லி இன்னமும் தூக்கம் முழித்து வெளியே வரவில்லை.
பூஜையை முடித்திருந்த மூவரும் கையில் டீயோடு டைனிங்டேபிளை சுற்றி அமர்ந்திருக்க, சொன்னதுபோல குளித்து முடித்து புது வேஷ்டி சட்டையில் இறங்கி வந்த கிருஷ்ணா, இயல்பாக சாருமதியின் அருகில் கிடந்த நாற்காலியில் உட்கார போக
“போ ய்யா… போ..முதல்ல பூஜை ரூம்ல போய் சாமி கும்பிட்டுட்டு அப்படியே நம்ம கிருஷ்ணரையும் ஜோடியா போய் பாத்துட்டு வந்து அப்புறமா வந்து உட்காரு, போ…”  என்று தன் அண்ணன் மகனை தேவகி விரட்டினார்.
“எம்பொண்டாட்டி பக்கத்துல உக்காரக்கூட விடமாட்டேங்குறீங்க த்த…” செல்லமாக அலுத்துக் கொண்டாலும், முதலில் பூஜை ரூமில் சென்று கும்பிட்டவன்,
அங்கிருந்த கிருஷ்ணர் கோவிலுக்கான சாவியை எடுத்துக் கொண்டு,”வா…சாரு! கோவிலுக்கு போய்ட்டு வந்துடலாம்”  அழைத்தபடியே வேகமாகப் போக, வைதேகியிடமும் தேவகியிடமும் தலையசைத்துவிட்டு அவன் பின்னோடு சென்றாள் சாருமதி.
“கொஞ்சம் பொறுமையா நின்னு புள்ளைய கூடவே கூட்டிட்டு தான் போயேன்டா. எதுக்கு இந்த அவசரம்?’ பெரியத்தையின் குரலில் தன்நடையின் வேகம் குறைத்து திரும்பிப் பார்க்க சாருமதியோ இன்னும் கொஞ்சம் வேகமாக நடந்து கிருஷ்ணாவோடு இணைந்து கொண்டாள்.
கோயிலின் நடைதிறந்து,”வா…” என்றபடியே உள்ளே சென்று, நேற்றைய இவர்களின் திருமணத்திற்காக தனது வெள்ளிக்கவசத்தை அணிந்து ஜம்மென்று நின்ற அந்த குழலூதும் கண்ணனுக்கு முன்னாலிருந்த குத்துவிளக்கில் தீபமேற்றிவிட்டு தன் கைகளைக் கூப்பி கிருஷ்ணா வணங்க,

Advertisement