Advertisement

“அதனால நீங்க எதுவுமே பேசாமல் அமைதியா இருக்குறதா இருந்தா மட்டும் சொல்லுங்க, உங்களை கூட்டிட்டு போறேன். இல்லையா, நீங்க இங்க வீட்லயே இருங்க, நாங்க மட்டும் கல்யாணத்துக்கு போய்ட்டு வரோம்”  கண்டிப்பாக சொல்லிவிட,
‘பிடிக்காத பெண்ணாக இருந்தாலும் நடக்க இருப்பது தன் செல்லப் பேரனின் திருமணம். அதற்கு நானில்லாமலா?’ என்று யோசித்தாரோ என்னவோ மகனோடு வந்து இதோ நடக்கும் நிகழ்வுகளை அமைதியாக பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.
சாருமதியை வீட்டினுள் அழைத்து வந்திருந்த வேதவல்லி, இப்போது அர்ச்சனா வசம் அவளை ஒப்படைத்து,
“மாடிக்கு கூட்டிட்டு போ அர்ச்சனா” என்றவர்
ஹேமாவிடமும் ரேணுவிடமும் ,”ஏழுமணிக்கு நிச்சயதார்த்தம். அதுக்குள்ள உங்க ஃப்ரெண்ட்டை ரெடி பண்ணிடுங்க ம்மா…” என்றவாறே மற்ற வேலைகளை கவனிக்க சென்றுவிட்டார். 
இளைய பெண்பிள்ளைகள் பட்டாளம் அத்தனையும் மணப்பெண்ணோடு சேர்ந்து மாடிக்கு சென்றுவிட, கல்யாணியை எப்போதுமே வைதேகி அல்லது தேவகி உடன் வைத்துக்கொண்டார்கள்.
சற்றுநேரத்துக்கெல்லாம் பண்ணையாரின் தங்கை வைதேகி கொண்டு வந்து கொடுத்திருந்த நிச்சயப்புடவையை கட்டுவதற்காக தோழிகள் மூவரும் மட்டுமே அறையிலிருக்க, சாருமதிக்கு உதவியபடியே அவளை ஒருவழி செய்து கொண்டிருந்தார்கள் ஹேமாவும் ரேணுவும்.
அடுத்தாற்போல் கொஞ்சம் நகைகளை கொண்டு வந்து ஹேமாவிடம் கொடுத்த தேவகி,”அப்டியே இதையும் உங்க ஃப்ரெண்ட்க்கு போட்டு விட்டுருங்க ம்மா” என்று சொல்ல,
இப்போது மறுத்தாள் சாருமதி.
“எங்க அண்ணன் தான், இதெல்லாம் என் மருமகளை போட்டுட்டு வரச்சொல்லுன்னு எங்கிட்ட குடுத்துவிட்டாங்க சாரு ம்மா”
யார் பெயரைச் சொன்னால் சாருமதி பேசாமல் ஒத்துக்கொள்வாள் என்பது புரிந்து போயிருந்தபடியால், அப்படி சொல்லச் சொல்லி அனுப்பியிருந்தார் வேதவல்லி.
அவரின் எண்ணமும் சரிதான் என்பதுபோல அமைதியான சாருமதி, தான் ஏற்கனவே போட்டிருந்த அன்னம் வைத்த ஒற்றை டாலர் செயினுக்கும் நெக்லஸுக்கும் பொருத்தமான நகையை தெரிவு செய்துவிட்டு மீதியை தேவகி கையில் கொடுத்து
 “இது மட்டும் போதும் ங்க…” தயங்கியபடியே சொல்ல, ஒத்துக்கொண்ட தேவகி, அதிலிருந்த தங்க வளையல்களை சாருமதியின் இருகைகளிலும் போட்டுவிட்டவாறே,
“கிருஷ்ணாவுக்கு நாங்க அத்தைன்னா, உனக்கு சித்தி இல்லைன்னா பெரியம்மா வரும் ம்மா. எப்படியும் உங்கம்மாவை விட நாங்க பெரியவங்களாத்தான் இருப்போம். அதனால என் அக்காவையும் என்னையும் பெரியம்மான்னே கூப்பிடு” 
சாருமதியின் கன்னத்தை லேசாக தட்டிச் சொல்லியபடியே மீதி நகைகளை எடுத்துக்கொண்டு சென்றார்.
 அவர் அறையை விட்டுச் சென்றதும், தங்க வளையல்கள் அடுக்கிய தன்னிரு கைகளையும் உயர்த்தி பார்த்த சாருமதி,”என்னால முடியல… என் தகுதிக்கு மீறி இதையெல்லாம் சுமக்க என்னால முடியல ப்பா”  தோழிகளிடம் சொல்லியவாறே கண்கலங்கி நின்றவளை,
சட்டென்று தோள் சாய்த்துக்கொண்ட ரேணுகா,”அசடு…நீ தகுதின்னு எதை நினைக்கிற சாரு? பணத்தையா?”
“அந்த பணம் ஒருத்தரோட தகுதியை நிர்ணயிக்காதுன்னு  உனக்கேத் நல்லாத் தெரியும். அப்படி இருக்கும் போது உனக்கே இந்த இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் வரலாமா டா?”
 மெல்லியக் குரலில் ரேணு கண்டிக்க, சாருவின் கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீர் வெளியே வந்து கன்னங்களில் உருண்டோடியது.
“ஆமா… நீ தோள்ல போட்டு அவளை நல்லா தாலாட்டு, அவ இன்னும் கொஞ்சம் தத்துவமா கொட்டட்டும்” என்ற ஹேமா
“வாடி இங்க…” என்றபடியே ரேணுவின் தோளில் தலைசாய்ந்திருந்த சாருமதியின் கன்னக்கதுப்புகளை தன் இரு விரல்களால் அழுந்தப்பற்றி இழுத்து அங்குமிங்கும் ஆட்டியபடியே,
“மவளே! இதுக்கு மேல ஏதாவது லூசுத்தனமா தத்துபித்துன்னு உளருன… புதுப்பொண்ணுன்னு கூட  பார்க்காமல் நல்லா சப்பு… சப்புன்னு அறைஞ்சிடுவேன்”  என்றாள் கண்களை உருட்டியபடி.
ஆனால் பேச்சுக்கு நேர்மாறாக கன்னத்திலிருந்த கைப்பெருவிரல்களோ சாருமதியின் விழிநீரை துடைத்துக் கொண்டிருந்தது.
நல்ல நட்பு என்பது கூட ஒரு வரம் தானே. அந்த நட்பு, தன் தோழியின் மனக்குழப்பம் உணர்ந்து அவளின் மனதில் வீணான எண்ணங்களை வரவிடாமல் கலகலப்பாக வைத்துக் கொள்ள முயற்சி செய்துகொண்டிருந்தது.
ஒரு ஏழுமணி போல ஹாலிலேயே போடப்பட்டிருந்த அலங்கார நாற்காலியில் சாருமதியை உட்காரவைத்து மாலை அணிவித்து, நலுங்கு வைத்து இன்னபிற சடங்குகளை முடித்த கிருஷ்ணாவின் அத்தைமார்கள்,
ஹால் முழுவதும் போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்த உறவுக்கூட்டத்தினரோடு உட்கார்ந்து நடக்கும் சடங்குகளை பார்த்துக்கொண்டிருந்த தங்கள் அண்ணன் மகனை அழைத்து,
அவனுக்கும் மாலை அணிவித்து சாருமதிக்கு அவனை நலுங்குவைக்கச் சொல்ல, அணிந்திருந்த ப்ளூ கலர் முழுக்கை சட்டையின் கைப்பகுதியை சற்றே மேல்நோக்கி தள்ளி விட்டுக்கொண்டவன்
வலது கையில் சந்தனத்தை எடுத்து சற்றே அழுத்தமாக சாருமதியின் இருகன்னங்களிலும் தடவ, அழுத்தமாக தன் கன்னங்களில் பதிந்த கிருஷ்ணாவின் தொடுகையில் உறைந்து போனது பெண். 
அடுத்து தன் அத்தை சொன்னது போல சாருமதியின் நெற்றியில் சந்தனம் வைத்து அதன் மீது கீற்றாக குங்குமம் வைக்க, அவன் முகம் பார்க்க முடியாமல் கண்மூடி நின்றது பெண். 
இப்போது கிருஷ்ணாவுக்கு சந்தனம் வைத்துவிடுமாறு சாருமதியைச் சொல்ல, ஆடிப்போனவள் பக்கத்தில் நின்ற ஹேமாவைப் பார்க்க,”உன் ஃப்ரெண்ட் சொன்னா தான் எம்மருமகனுக்கு சந்தனம் வைப்பியா, என்ன?”
கேட்டவாறே சாருமதியின் கையைப்பிடித்து சந்தனத்தில் குழைத்து தன் அண்ணன் மகனின் கன்னங்களில் தடவிய வைதேகி, கிருஷ்ணாவின் நெற்றியிலும் அவள் விரல் கொண்டு  சந்தனம் வைத்து அதன் மேல் குங்குமமும் வைத்துவிட்டார். 
அவர் இழுத்த இழுப்பிற்கெல்லாம் தன் கையை கொடுத்துக் கொண்டு நின்றவள், இப்போதும் அவன் முகம் பார்க்க மறுக்க
சாருமதியின் செயல்களை வெட்கமென நினைத்து உறவுகள் அதை கிண்டலடித்துச் சிரிக்க, கிருஷ்ணாவுக்கு மட்டும் அவள் தன்முகம் பார்க்க மறுப்பது தெள்ளத்தெளிவாக புரிந்தது.
அவளின் செயலில் மனம் தொட்டாற்சிணுங்கியாய் சுருங்கினாலும்,’கண்டிப்பாக என் அன்பு அவளுக்குள்ளும் ஒரு மாற்றத்தை விரைவில் கொண்டுவரும்’ என்ற நம்பிக்கையில்,
நிச்சயத்தை உறுதிபண்ணும் விதமாக சாருமதியின் கைகளில் போடச்சொல்லி தன் அத்தை கொடுத்த ஒரு ஜோடி வைரவளையல்களை கையில் வாங்கியவன்,
பாவையவள் வளைகரத்துக்காக தனது வலக்கரத்தை நீட்ட, அவளோ ‘குடுக்கவா? வேண்டாமா?’ என்று ஒற்றையா? இரட்டையா? போடுபவளைப் போல லேசாக கைகளை உயர்த்துவதும் பிறகு சட்டென்று கீழே போட்டுக்கொள்ளுவதுமாக இருந்தாள்.
இதில் சற்றே பொறுமையிழந்த கிருஷ்ணா, யாரைப் பற்றியும், எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவள் கைகளை அதிரடியாகப்பற்றி வளையல்களை போட்டுவிட, இளைஞர்களுக்கு மத்தியிலிருந்து விசில்சத்தம் பறந்தது. 
அதற்கு நேர்மாறாக, இவ்வளவு நேரமும் காளையவன் கண்பார்க்க மறுத்தவள் இப்போது அவனை லேசாக முறைத்துப் பார்த்தாள்.
அவ்வளவு தான்… குஷியாகிப் போனான் கிருஷ்ணா.  ஒருபார்வைக்கே ஏங்கிப் போயிருந்தவன் அவளின் முறைப்பில் ஏதோ முக்திபெற்றவனைப் போல பாவனை காட்ட, இவளுக்கு தான் ஏதோ போலானது. 
 தங்கள் பக்கமிருந்து மாப்பிள்ளைக்கு போடுவதற்காக ‘சாருமதி’ என்று தமிழில் பெயர் பதிக்கப்பட்ட மோதிரம் ஒன்றை ரகுராம் தன் அக்காவின் கையில் கொடுத்து கிருஷ்ணாவுக்கு போடச்சொல்ல,
‘இதென்னடா! மதுரைக்கு வந்த சோதனை!’ என்பது போல பார்த்துக்கொண்டு நின்றவள் முன், எந்தவித அலட்டலுமின்றி மோதிரத்தை போட்டுக் கொள்ளும் விதமாக தனது வலது கையை நீட்டியபடி நின்றான் கிருஷ்ணா.
“போட்டுவிடு…” சாருமதியின் காதில் ‌ஹேமா கிசுகிசுக்க, தன் வலது கையின் முதல் மூன்று விரல்களுக்குள் மோதிரத்தை வைத்துக்கொண்டு லாவகமாக அவன் விரல்களுக்குள் நுழைத்துவிடப் பார்க்க,
“இது போங்காட்டம் சிஸ்டர்! எங்க மாப்பிள்ளை எவ்வளவு அழகா உங்களுக்கு போட்டுவிட்டாரு” என்று அர்ச்சனாவின் கணவன் முதலில் ஆரம்பித்தான்.
“தீண்டாமை ஒரு பாவச்செயல்…
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்…” என்று ராகம் பாடியது வேறொரு இளவட்டம். 
இது எதையும் கணக்கில் கொள்ளாமல் தன் முயற்சியில் சாருமதி வென்றுவிட, 
சாருமதியின் கைகளிலிருந்து தன் விரல்களுக்கு இடம்பெயர்ந்திருந்த மோதிரத்தை சற்றே கையை உயர்த்தி பார்த்தபடியே, அதில் எழுதியிருந்த சாருமதியை மெதுவாக ஒவ்வொரு எழுத்தாக வாசித்த கிருஷ்ணா, வெக்கமே இல்லாமல் அந்த மோதிரத்திற்கு ஒரு முத்தம் வைத்தான். 
ஹஹஹ… அவனின் ஒற்றைச் செயலில் இளவட்டங்கள் மத்தியில், கைதட்டலோடு விசில் சத்தமும் தூள்கிளப்ப, 
பெரியவர்களோ முகத்தில் விரிந்த புன்சிரிப்போடு இந்த கிருஷ்ணாவின் லீலையை கண்டும்காணாதது போல இருந்து கொள்ள,
பெண்ணவளோ தன்னையே அவன் முத்தமிட்டது போல உச்சிமுதல் உள்ளங்கால்வரை சிலிர்த்துப் போனாள். இப்போது அழையாத விருந்தாளியாக நாணம் வந்து அவளில் ஒட்டிக்கொள்ள, 
அவளோ அருகில் நின்ற ரேணுவையும் ஹேமாவையையும் அட்டையென ஒட்டிக்கொண்டாள்.
அதன்பிறகு ஃபோட்டோ, சாப்பாடு என்று எல்லாம் முடித்து அறைக்கு திரும்ப வரும்போது இரவு மணி பத்தாகிவிட்டது.
மறுநாள் காலையிலேயே திருமணம் என்பதால் பெண்ணோடு வந்தவர்கள் எல்லோரும் இங்கேயே தங்குவதாக ஏற்ப்பாடாகியது. 
பண்ணையாரின் தங்கைகள் அனைவருக்கும் அறையை ஒதுக்கி கொடுத்து அந்த வேலையை நிறைவாகவே செய்து முடித்தனர். 
தோழிகள் மூவரும் ஓர் அறையில் இருக்க, கல்யாணி அம்மா தன்னுடைய மற்ற இரு பெண்களுடன் வேறொரு அறையில் தங்கிக் கொண்டார்.
கிருஷ்ணாவோ தனா, திவாகர், அஸ்வின், ரகுவோடு தனதறையை பகிர்ந்து கொண்டான்.
அனைவரின் அறைகளிலும் ஆரவாரம் சீக்கிரம் அடங்கிவிட, மணப்பெண் அறையில் மட்டும் ஆரவாரம் அடங்க நீண்ட நேரமாகியது.
ஆமாம்… அப்படி ஒரு நீண்ட அறிவுரையை தங்கள் தோழிக்கு சொல்லிவிட்டே தூங்கியிருந்தார்கள் ஹேமாவும் ரேணுவும்.
அதில் ரொம்ப முக்கியமானது “இன்னைக்கு ஸ்டேஜ்ல போய் மண்ணாந்தை முழிச்சிட்டு நின்னமாதிரி நாளைக்கும் நிக்கக் கூடாதாம். அவங்க மாம்ஸ்க்கு ஏத்த ஜோடியா நல்லா புன்னகைமுகமா நிக்கணுமாம்”
“அதுவுமில்லாமல்  அவன் கண்களிலிருந்த ஆணவம், அகங்காரம் எல்லாம் போய் இப்போ சாருமதிக்கான காதல் மட்டும் தான் அதுல பொங்கிவழியுதாம்”
“அதனால கோபத்தை எல்லாம்  தூக்கி தூர போட்டுட்டு, கிருஷ்ணாவோட அன்பை அலட்சியம் செய்யாமல் அவன்கூட வாழுறவழியைப் பார்க்கணுமாம்”
தன் தோழிகளின் வார்த்தைகளை நினைத்து பார்த்தவளுக்கு தன் வாழ்க்கை மீதான அவர்களின் அக்கறை புரிய, 
‘தன்னை வெறுப்போடும், அலட்சியத்தோடும் பார்த்த அதே கண்களால் தன்னை காதலால் கசிந்துருகி பார்க்கமுடியுமா?’
‘முடியுமென்று நிரூபிக்கிறானே!’
‘சரி… அவனால் முடியும். ஆனால் என்னால் அவன் காதலை ஏற்றுக்கொள்ள முடியுமா?’ 
ஏதேதோ சிந்தனைகள் அவள் சிந்தையைக் குழப்ப,
விருப்புக்கும் வெறுப்புக்குமிடையே தள்ளாடி தவித்தது சாருமதியின் மனது. 
மறுநாள் காலை குறித்த சுபநேரத்தில் சர்வ அலங்காரபூஷிதையாக ஏற்கனவே மணவறையிலமர்ந்து ஐயர் சொல்லியபடி திருமணச் சடங்கை செய்து கொண்டிருந்த கிருஷ்ணாவின் இடப்புறம் கொண்டு அமர்த்தினார்கள் சாருமதியை. 
வீட்டிற்கு முன்னால் கிடந்த அந்த பரந்த மைதானத்தில் பந்தல் போட்டு அலங்கார மணவறை அமைத்து அதில் தான் நடந்துகொண்டிருந்தது திருமணம். 
தங்கள் ஐயா வீட்டு திருமணத்திற்கு ஊரே திரண்டு வந்திருக்க பண்ணையாரின் சொந்தங்கள், பந்தங்கள், நட்புகள் என்று அந்த இடமே அத்தனை ஆரவாரமாக இருந்தது.
சற்றுநேரத்தில் தன்னில் சரிபாதியாகப் போகிறவள் தன்னருகே வந்து அமர வரவேற்பாக அவளைப் பார்த்து லேசாக சிரித்தான் கிருஷ்ணா. 
கொஞ்சம் இளகிப்போயிருந்த மனதாலா? இல்லை அந்த கல்யாண பரபரப்பு தந்த உணர்வாலா? ஏதோ ஒன்று அவனுக்கு பதில் சிரிப்பை மலரவைத்தது சாருமதியின் இதழ்களில்.
பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றுவந்த அந்த வைரமுகப்பிட்ட தங்கத்தினால் ஆன திருமாங்கல்யத்தை பண்ணையார் மூர்த்தி தன்கையினால் எடுத்து மகன் கையில் கொடுக்க 
கெட்டிமேளம் முழங்க, மந்திரங்கள் உச்சஸ்தாயியில் சொல்லப்பட, தலையில் ஆசிர்வாதமாக தூவப்பட்ட அட்சதையோடு திருமாங்கல்யத்தை பூட்ட சாருமதியின் சஙகு கழுத்தருகே தன்கைகளைக் கொண்டு சென்ற கிருஷ்ணா,
 லேசாக தலை கவிழ்திருந்த தன் மணவாட்டியின் முகம் நோக்கியபடி ஒரு வினாடி அப்படியே தன் கைகளை வைத்திருந்தவன்,”சாரு…” என்று மெதுவாக அவள் காதருகே அழைக்க,
 அந்த மந்திரக்குரலுக்கு கட்டுப்பட்டவள் போல நிமிர்ந்து அவன் கண்ணோடு கண்பார்த்து நின்றது அந்த பெண்மை. 
 அடுத்த வினாடியே அவன் கைத்தாலி அவள் கழுத்தில் ஏற, திருமணம் என்னும் பந்தத்தில் இனிதே இணைந்தார்கள் இருவரும்…

Advertisement