Advertisement

சாருமதி.
அத்தியாயம் 17.
நான்கு தலைமுறைகள் கண்ட அந்த மாளிகை, கூடியவிரைவில் ஐந்தாவது தலைமுறையும் கண்டுவிடுவேன் என்ற மகிழ்ச்சியில் அந்த வீட்டு இளவலின் திருமணத்திற்காக வாழை மரத்தோரணங்களாலும், வண்ண வண்ண விளக்குகளாலும் தன்னை அலங்கரித்துக் கொண்டு கம்பீரமாக நின்றது.
வீட்டினுள் அந்த பெரிய ஹாலில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் உட்கார்ந்திருந்த சொந்தபந்தங்கள் தங்களுக்குள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
  பட்டு வேட்டி, சட்டை சகிதம் ஹாலை அங்குமிங்கும் தன் நடையில் அளந்தவாறே அவ்வப்போது தன் கைக்கடிகாரத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்த பண்ணையார்,”வேதா…” என்றழைக்க
வந்திருந்த உறவினர்களிடம் முகம்மலர முகமன் கூறிக்கொண்டிருந்த வேதவல்லி, உடுத்தியிருந்த  பட்டுப்புடவை சரசரக்க கணவனின் அருகில்,”என்னங்க?” என்றபடி வந்து நின்றார். 
“வைதேகிட்ட பொண்ண அழச்சிட்டு ஆறு மணிக்குள்ள நம்ம வீட்டுக்கு வந்துடணும்னு சொல்லிவிட்டியா? இல்லியா?” என்றவர் தன் இடதுகையை மடக்கி கைகடிகாரத்தில் மறுபடியும் மணியை பார்த்தவாறே, 
“இப்பவே மணி அஞ்சரை ஆகப்போகுது, இன்னும் இவங்களைக் காணலையே?” என்றார் கொஞ்சம் டென்ஷனாக.
“அதெல்லாம் உங்க பெரிய தங்கச்சி வைதேகிட்ட மட்டுமில்லங்க சின்னவ தேவகிட்டயும் தனியா சொல்லித்தான் விட்டேன். அவங்க கரெக்டா வந்துடுவாங்க…  நீங்க சும்மா டென்ஷனாகாம கொஞ்சநேரம் உட்கார்ந்து எழும்புங்க” என்ற வேதவல்லி
“என்னவோ, இரண்டு தங்கச்சியும் லண்டனுக்குப் போய் பொண்ணழைக்கப் போன மாதிரிதான்… இதோ, வீட்டு வாசல்ல நின்னு கூப்பிட்டா இரண்டு தெரு தள்ளியிருக்கிற சாருமதி வீட்ல இருந்து சத்தம் குடுக்கப் போறாங்க இதுக்கு போய் என்னா அக்கப்போருடா சாமி” 
வேதவல்லி கேலியாக அங்கலாய்த்து முடிக்கவும், வீட்டு வாசலில் கார் வந்து நிற்கவும் சரியாக இருக்க, உடலில் உற்சாகம் வந்து ஒட்டிக்கொண்டவராய்,”வா…” என்று மனைவியை உடனழைத்துக் கொண்டு வாசலை நோக்கி நகர்ந்தார் பண்ணையார்.
வீட்டுமுன் வந்து நின்ற காரிலிருந்து பண்ணையார் மூர்த்தியின் தங்கைகளுடன் தன் தோழிகள் ஹேமா, ரேணுகா மற்றும் தங்கைகள் புடைசூழ அழகே உருவாக இறங்கி நின்றாள் சாருமதி. 
அந்த காருக்கு பின்னால் வந்த திவாகரின் காரிலிருந்து ரகுராம், அஸ்வின், கல்யாணி இறங்கி நிற்க, காரை ஓட்டி வந்த திவாகரும், தன்காரை கிருஷ்ணா வீட்டு ட்ரைவர் பொன்னையன் வசம் ஒப்படைத்துவிட்டு இவர்களோடு இணைந்து கொண்டான்.
மணமகள் வந்ததும் ஆலம்சுற்றி வீட்டுக்குள் அழைத்துக் கொள்ள விதவிதமான ஆரத்திதட்டுகளை தயார்செய்து வைத்திருந்த தன் உறவுப்பெண்களுக்கு மத்தியில்,
 அவர்களின் கேலிகிண்டலுக்கு ஆளாகியபடியே தனாவோடுவும் சமீபத்தில் திருமணமாகியிருந்த அர்ச்சனாவின் கணவனோடும் வெளியே நின்று கொண்டிருந்த கிருஷ்ணா,
அஸ்வினையும், திவாகரையும் பார்த்ததும் கைகாட்ட, அவர்களிருவரும் பதிலுக்கு கையசைத்தபடியே அவனோடு வந்து சேர்ந்து கொண்டார்கள்.
காரிலிருந்து இறங்கும் போதே சாருமதியின் கண்களில் கிருஷ்ணா விழுந்து விட, கூடவே தன் நண்பர்களைக் கண்டதும் பளிச்சென்று புன்னகைமுகமாக மாறிப்போனவனைக் கண்டும் காணாதது போல லேசாக தலைகுனிந்து நின்றவளுக்கு, 
சிறு வெள்ளிகுடத்தில் பூரணகும்பம் போல தயார் செய்து வைத்து அதைக்கொண்டு முதலில் ஆரத்தி சுற்றிய அர்ச்சனா, அந்த குடத்தின் வாயிலிருந்த தேங்காயையும் மாவிலையும் அகற்றிவிட்டு சாருமதியின் தலைக்கு மேல் குடத்தை தலைகீழாக குலுக்கியபடி கவிழ்க்க
 அப்போதுதான் இதழ்விரிக்கத் தொடங்கியிருந்த மல்லிகை மொட்டுகள் குடத்தினுளிருந்து அருவியாய் சாருமதியின் தலையில் கொட்டத்தொடங்கியது. 
அந்த பூ மழையைக் கண்டதும் அங்கு நின்றவர்கள்,”ஹே…” என்று மெலிதாக உற்சாகக்குரலை எழுப்ப, அதேநேரத்தில் தனாவின் கையசைவில் மைக்செட் இளைஞன் ஒலிபெருக்கியில் பாடலை அதிரவிட்டிருக்க, அது
“வந்தாள் மஹாலட்சுமி
என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே
அடியேனின் குடிவாழ
குடித்தனம் புக
வந்தாள் மஹாலட்சுமியே…” 
என்று உச்சஸ்தாயியில் பாடிக்கொண்டிருந்தது…
தன் தலையில், எதிர்பார்க்காத நேரத்தில் கொட்டப்பட்ட பூவோடு இந்த பாடலும் சேர்ந்து சொல்லமுடியாத ஒரு உணர்வுபிடிக்குள் சாருமதியைத் தள்ள, கிருஷ்ணாவின் முகத்தை லேசாக நிமிர்ந்து பார்த்தது பெண்.
ஆனால் அவனோ அந்நேரம், தனாவிடம்,”டேய்… எல்லாம் உன் ஏற்பாடு தான?” என்ற விசாரணையில் இறங்கியிருந்தான்.
“ம்ம்… பாட்டு மட்டும் தான் என் ஐடியா மச்சான்…” என்ற தனா ,
“எல்லாம் உம்மேல சாருவுக்கு ஒரு ஃபீலிங்ஸ் வரணும்ங்குற நல்லெண்ணத்தில் தான் மச்சி” என்று கண்சிமிட்டியபடிச் சொல்ல 
“அவளுக்கு ஃபீலிங்ஸ்… அதுவும் எம்மேல! ஹா… வந்துட்டாலும்…’ மனதுக்குள் நொடித்துக்கொண்டவனின் நினைவுகள்,
இன்றிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்னால், ஒரு நாள் மாலைப்பொழுதில் கல்யாணி அம்மா தன் மகன் ரகுவோடு தங்களின் வீட்டுக்கு வந்து,”சாரு  கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டா” என்று தன் அப்பாவிடம் தகவல் சொன்ன நாளில் போய் நின்றது.
அவர்கள் வந்த நேரம் கிருஷ்ணாவும் வீட்டிலிருக்க, கேட்ட தகவலில் கிருஷ்ணாவின் மனது,”ஹப்பாடா… ஒருவழியா எம்மேல அம்மணியோட கடைக்கண்பார்வை விழுந்திடிச்சி!” என்று ஆனந்த கூத்தாடியது.
ஆமாம்… அன்று பண்ணையார் மருத்துவமனையில் தன்னை வந்து சந்தித்து விட்டு போனபிறகும் அவருடைய கலங்கியக் குரலும்,  முகத்தில் தெரிந்த வேதனையுமே சாருமதியின் மனதை ஆக்ரமித்துக் கொள்ள,
 ஹாஸ்பிடலிலிருந்து வீட்டுக்கு திரும்பி வந்ததும் முதல்வேலையாக,”கிருஷ்ணாவோடான திருமணத்திற்கு தனக்கு சம்மதம்” என்று அம்மாவிடம் சொல்லி அவருக்கு ஆனந்த அதிர்ச்சியைக் கொடுத்தவள், 
 தம்பிக்கும் ஃபோன் செய்து விஷயத்தைச் சொல்லி,”உடனே கிளம்பி வா!” என்று சொல்ல, மகிழ்ந்து போன ரகுவும் மறுநாளே வந்து நின்றிருந்தான்.
சாருமதியின் சம்மதம் அனைவரிடமும் ஒரு உற்சாகத்தை உடனடியாக கொண்டு வர, 
கல்யாணம், மாப்பிள்ளை வீட்டில் வைத்து நடத்துவதெனவும், கல்யாணத்துக்கு முதல்நாள் இரவு நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டு, கல்யாணவேலைகள் படுமும்முரமாக நடந்து கொண்டிருந்தது.
தாங்கள் பெண்கேட்டு போனபோது மறுத்தவள் இப்போது தானே கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லவும் தலைகால் புரியாத மகிழ்ச்சியில் சுற்றித்திரிந்த கிருஷ்ணா,
 சாருமதியை தான் மருத்துவமனையில் போய் பார்த்து பேசிய விபரங்களைப் பற்றி அம்மாவிடம், அப்பா பேசிக்கொண்டிருந்ததை  ஒருநாள் யதேச்சையாக கேட்க நேரிட, நந்தையாய் சுருண்டு போனது அவனது மனது.
 ‘சாரு என்னை புரிந்து கொண்டதால் தான் இந்த திருமணம் என்று நினைத்திருந்தேனே! அப்படி இல்லையா? என் அப்பாவின் வார்த்தைகளுக்காகத் தான் இந்த திருமணமா?’  
உள்ளுக்குள் நொறுங்கி போனாலும், இரண்டு மூன்று நாட்களிலேயே,’போர்த்திட்டு படுத்தா என்ன?  இல்லை படுத்துட்டு போர்த்துனா தான் என்ன?’ என்ற மனநிலைக்கு வந்திருந்த கிருஷ்ணா,
‘இப்போ அவளுக்கு என்னை, என் காதலைப் புரியாட்டா போகுது… கல்யாணத்துக்கு அப்புறம் நான் அவளுக்கு புரியவச்சிட்டு போறேன்’ என்ற எண்ணத்தில் சந்தோஷமாகவே தன்னுடைய திருமண ஏற்பாடுகளில் தன்னை இணைத்துக்கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறான்…
எல்லோரும் ஆரத்தி எடுத்து முடிக்க, கடைசியில் வேதவல்லியின் தங்கை மரகதவல்லி, மஞ்சள் குங்குமம் கலந்த நீரில் வெற்றிலை மேல் சூடத்தை வைத்து சாருமதிக்கு ஆலம் சுற்றி பொட்டிட, 
அங்கே நின்றிருந்த அவரின் மகள் விதுலா,”ம்மா… அப்டியே அண்ணாவுக்கும் ஒரு பொட்டு வச்சிவிடுங்க” என்று சிபாரிசுக்கு வந்தாள்.
“இன்னைக்கு எம்மருமகத் தான் லட்டு மாதிரி பாக்கவே அவ்வளவு அழகா இருக்கா. அதனால அவளுக்கு தான் திருஷ்டி… பொட்டு… எல்லாம்”
“உன் அண்ணன் என்னைக்கும் போல இன்னைக்கும் அழுக்குபையனாத் தான் இருக்கான். சோ அவனுக்கு நோ திருஷ்டி… நோ… பொட்டு…” 
ஆண்மையின் கம்பீரத்தோடு தன் அக்கா மகன் நின்ற திசையைப் பார்த்து கிண்டலாகச் சொல்லி சிரித்தவர், சாருமதியின் தலையை வாஞ்சையாகத் தடவியபடியே,
“வேணும்னா நாளைக்கு எங்கவீட்டு மஹாலட்சுமி கூட உங்கண்ணாவுக்கு கல்யாணம் ஆனபிறகு போனா போகுதுன்னு அவனுக்கும் திருஷ்டி சுத்தி பொட்டுவச்சி விடுறேன்” என்று வாய்கொள்ளா சிரிப்போடு சொல்ல
“சித்தி… என்னை இப்டி புகழ்ழ்…ந்து பேசணும்னு எத்தனை நாள் ஆசை உங்களுக்கு?” நின்ற இடத்திலிருந்தே இரைந்து கேட்டவன்.
“ஆனாலும் கொஞ்சம் ஓவராத்தான் புகழ்ந்துட்டீங்க சித்தி… புல்லரிச்சிடிச்சி பாருங்க…” கையை சற்றே நீட்டிக்காட்டி சொன்னவனின் பாவனையில் “கொல்லென்று” உறவுக்கூட்டம் சிரிக்க, சாருமதியின் இதழ்கள் கூட லேசான புன்னகையில் விரியத்தான் செய்தது.
திருமண விழாவின் ஆரம்பமே களைகட்ட, தன் தங்கை ஆரத்தி எடுத்து முடிக்கவும் சாருமதியின் கையைப்பிடித்து,”வா… சாரு!” என்றபடியே வீட்டினுள் அழைத்துச் சென்றார் வேதவல்லி. 
வீட்டினுள் நுழைந்ததும் அங்கு புன்னகை முகமாக நின்ற பண்ணையார், அவர் அருகில் நின்று கொண்டிருந்த அவருடைய தங்கைகளின் கணவன்மார்கள் மற்றும் பெரியவர்கள் என்று அனைவருக்கும் பொதுவாக சாருமதி வணக்கம் வைக்க,
உண்மையான அன்போடு பண்ணையார் அவளின் வணக்கத்தை ஏற்றுக்கொண்டு,”வாம்மா…” என்று வரவேற்றாரானால் அவரின் தங்கையின் கணவர்கள் இருவரும் வேறுவழியில்லாமல் புன்னகைத்து வைத்தனர்.
ஆமாம்… தங்களின் அண்ணனின் முடிவில் வைதேகிக்கும் தேவகிக்கும் மாற்றுக்கருத்தில்லாமல் இருக்க அவர்களின் கணவன்மார்களுக்கோ சாருமதியை கிருஷ்ணாவிற்கு பெண்ணெடுப்பதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை.
“நம்ம தகுதிக்கு தகுந்தால பொண்ணெடுக்குறதை விட்டுட்டு ஊர் உலகத்துல பொண்ணே இல்லாத மாதிரி இந்த பொண்ணப்போய் கிருஷ்ணாவுக்கு கட்டிவைக்கப் போறாரே உங்க அண்ணன்! அவருக்கு அறிவே இல்லையாடி?” 
இப்படிக்கேட்டு தங்கள் மனைவிமார்களிடம் குதித்தவர்களுக்கு, தங்களின் கருத்தை மைத்துனரிடம் சொல்லத்தான் தைரியம் வரவில்லை. 
அவர்களின் மனைவிமார்களும் தங்கள் கணவர்களின் ஆதங்கத்தை கண்டுகொள்ளாமல், எல்லாம் தங்கள் அண்ணன் பார்த்து கொள்வார் என்ற நம்பிக்கையில் அமைதியாக இருக்க, 
அந்த அண்ணனும் தன் தங்கைகளின் நம்பிக்கையை பொய்யாக்காமல் அழகாகவே  சூழ்நிலையை கையாண்டார்.
ஆமாம்… திருமணத்திற்கு அழைக்கவென்று தங்கைகளின் வீட்டிற்கு வந்து, மகனின் திருமணத்திற்கு புதுட்ரெஸ், ஜ்வெல்ஸ் வாங்கவென்று தாராளமாக பணம் வைத்து தங்கைகளின் கைகளில் கொடுத்தவர்,
“மாப்ள… நடக்கப்போறது நம்மவீட்டு கல்யாணம். அதுல சாருமதியையோ இல்லை அவ சொந்தபந்தங்களையோ யாரும் குறை சொல்லுறது என்னையே குறை சொல்லுற மாதிரி.”
 “அதனால அப்படி எதுவும் நடக்காமல் கவனிச்சு, இந்த கல்யாணத்தை நல்லபடியா நடத்தி தரவேண்டியது உங்க பொறுப்பு”
 தனித்தனியாக வீட்டு மாப்பிள்ளை இருவரின் கைகளையும் பிடித்தபடி கேட்டு, அவர்களிருவரும் தங்கள் துவேஷத்தை பெண் வீட்டார் மீது காட்டமுடியாமல் கைகளை கட்டிப்போட்டு விட்டார்.
ஆம்… கைகளைக் கட்டித்தான் போட்டுவிட்டார். எதைவிடவும் அவர்களுக்கு பண்ணையார் மூர்த்தி வீட்டு மாப்பிள்ளைகள் என்ற அடையாளம் தேவையானதாக இருக்க அதன்பிறகு அவர்கள் தங்கள் மைத்துனரின்  முடிவை விமர்சிக்கத் துணியவே இல்லை.
இவர்களிருவரைப் போலவே  தன் மகனின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு மனம் முழுவதும் எரிச்சலோடு ஆனால் அமைதியாக அந்த ஹாலில் ஒரு ஜீவன் இருக்கத்தான் செய்தது.
ஆம்… அவர் வேதவல்லியின் அம்மா பரிமளவல்லி தான். அன்று சாருமதியைக் குறைசொல்லி மருமகனிடம் வாங்கிக் கட்டிக்கொண்டு போனவர் தான்.
மறுபடியும் இன்றுதான் பேரனின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காகத் மகளின் வீட்டுக்கு வந்திருக்கிறார். 
அவருக்கும் தன் செல்லப்பேரனுக்கு சாருமதியை மணமுடிப்பதில் விருப்பமேயில்லை.
“ம்மா… இது உங்க பேரனோட முடிவு தான்” அப்படிச் சொன்னாலாவது அவருடைய அங்கலாய்ப்பை குறைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் வேதவல்லி சொல்லியிருக்க
“அவன் சின்னபையன்… அவனுக்கென்ன தெரியும்? நீங்க எடுத்து சொல்லணும், அதைவிட்டுட்டு அவன் ஆடச்சொன்ன கூத்துக்கெல்லாம் ஆடுவீங்களா?” என்று அதற்கும் இவர்களையே குறைசொல்லியிருந்தார் அந்த அம்மா.
அவர் என்ன சொல்லியும் கல்யாணவேலை அதன்பாட்டுக்கு நடக்க, புலம்ப ஆரம்பித்திருந்தவரிடம் திருமணத்திற்கு கிளம்புவதற்கு முன் அவருடைய மகன்,
“ம்மா… அங்க வந்து தேவையில்லாமல் எதைப் பத்தியும் உளத்தக்கூடாது. அப்படி நீங்க பேசி, அத்தான் ஏதாவது உங்களைச் சொன்னா எனக்கு கஷ்டமாயிடும்.
அப்புறம் எனக்கு அந்த இடத்தில மனசுணக்கம் இல்லாமல் நிக்குறது கஷ்டம்.” 

Advertisement