Advertisement

இன்றுதான் தேங்காய் பறித்திருப்பார்கள் போலும்…
இரண்டு மூன்று இடத்தில் பறித்திருந்த தேங்காய்களை மலைபோல் குவித்து வைத்திருந்தார்கள்.
அவள் பார்வைவீச்சில் கிருஷ்ணா விழவில்லை. ஆனால் அவன் வண்டி விழ, அதன் பக்கத்தில் போய் நின்று கொண்டாள்.
சிறிது நேரத்தில் அவள் நின்றிருந்த திசைக்கு எதிர் திசையிலிருந்து வேட்டியை மடித்து கட்டியபடி வந்துகொண்டிருந்த கிருஷ்ணாவின் கண்களில் சாருமதி விழ,
அவளை அங்கே எதிர்பாராத கிருஷ்ணாவின் மனதில் சாரலடித்தாலும், இருக்குமிடம் புரிந்து தங்களைச் சுற்றிப் பார்த்தான்.
ஆங்காங்கே வேலை செய்துகொண்டிருந்த அத்தனை  கண்களும் தங்களை ஆர்வமுடன் பார்ப்பதைக் கண்டதும்,”இப்போ நீ எதுக்கு இங்க வந்த?” என்றான் பற்களை கடித்தபடி 
‘பார்றா… இஞ்சிமொறப்பான் பல்லைக் கடிக்கிறதை …
அவன் மாறிட்டான்… மாறிட்டான்னு எல்லாரும் சொன்னாங்க… ஆனால் என்ன ஆனாலும் பிறவிக்குணம் மட்டும் மாறாதுன்னு இவன் நிரூபிக்கிறான்’ மனதிற்குள் பேசிக்கொண்டவள்
‘இவன் எப்படி இருந்தால் நமக்கென்ன? நீ வந்த வேலையை பாத்துக்கிட்டு போய்கிட்டே இரு சாரு!’என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு,
“காயத்ரி எல்லாம் சொன்னா. நீயும் தனாவுமாச் சேர்ந்து என் தங்கச்சியை சேவ் பண்ணுனதுக்கு ரொம்ப, ரொம்ப நன்றி கிருஷ்ணா!” என்றவள் தன் கைகளை குவித்து அவனை வணங்கியபடியே, தான் வந்த வேலை முடிந்தது என்னும் விதமாக திரும்பி நடக்க,
அப்போதும் விட்டானில்லை அந்த லூஸூப்பையன்…
“எது பேசுறதுன்னாலும் இனிமேல் தோப்புக்கு வராத… வீட்டுக்கு வா… ” என்றவனின் பேச்சைக் கேட்க சாருமதி அங்கே நின்றிருக்கவில்லை.
அவள் போனபிறகு தான்,’தன்னை தேடிவந்தவளிடம் கொஞ்சம் தன்மையாக பேசியிருக்கலாமே!’ என்ற எண்ணம் தோன்ற தனாவிடம் புலம்பித் தீர்த்துவிட்டான்.
மறுநாள் காயத்ரியை லீவ் போட்டுவிட்டு வீட்டிலிருக்கச் சொன்ன சாருமதி மருத்துவமனையிலிருந்து மத்தியானம் வந்து,”தென்காசி வரைக்கும் போய்ட்டு வருவோம் வா…” என்றழைக்க
“ஏதும் வேலையாக்கா?”
“ம்ம்… உனக்கொரு ஃபோன் வாங்கிட்டு வரலாம் வா”
‘அவளுமே தன் அக்காவிடம் பட்டன் ஃபோன் ஒன்று வாங்கி கேட்கவேண்டும்’ என்ற முடிவிலிருந்ததால் சொன்ன உடனே கிளம்பினாள்.
இருவரும் அம்மாவிடம் சொல்லிவிட்டு தங்கள் ஊரிலிருந்து மணிமுத்தாறு செல்வதற்காக மினிபஸ்ஸில் ஏறி உட்கார்ந்தார்கள். 
அப்போது அவர்களுக்கு முன் சீட்டிலிருந்த வயதான பாட்டி திரும்பி சாருமதியைப் பார்த்து,”ஏம்மா! நீ நம்ம சங்கரனோட மூத்த பொண்ணு தானே” என்று கேட்க
தன் தந்தையின் பெயரை சொல்லி,”நீ அவர் மகள் தானே” என்று கேட்கவும் உற்சாகமான சாருமதி,”ஆமாம்… பாட்டி” என்க 
“ஏம்மா! எந்த சீமை மகராசா வந்து உன்னை கொத்திகிட்டு போவான்னு நினைச்சு, நீ நம்ம பண்ணையார் மொவனை வேண்டான்னு சொன்ன?” என்று கேட்டு சாருமதியை அதிர
வைத்தவர்,
“நீ டாக்குடரா வேலப்பாத்தா, வெவசாயம் பாக்குற பிள்ளையை கண்ணாலம் கட்டமாட்டேன்னு சொல்லுவியோ? வெவசாயம்னா உங்களுக்கு அவ்வளவு இளக்காரமாப் போச்சா?” 
“ஈரேழு பதினாலு லோகத்துல தேடினாலும் இந்த மாதிரி மாப்பிள்ளை உனக்கு கிடச்சிருவானா என்ன?” என்று வரிந்து கட்டிக்கொண்டு கிருஷ்ணாவுக்காக பரிந்து கொண்டுவர
“ஐயோ!” என்றாகிப் போனது சாருமதியின் நிலைமை. நல்லகாலம் பேருந்தில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. இருந்த நபர்களும் இவளை குறுகுறுவென்று பார்க்க, பொதுவாக ஒருசிரிப்பை சிரித்து வைத்தாள்.
ஆமாம்… இப்போதெல்லாம் அப்படித்தான்…. 
இவள் கிருஷ்ணாவை மறுத்த விஷயம் அரசல்புரசலாக வெளியே தெரியவும், ஆளாளுக்கு புத்திமதி சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் சாருமதிக்கு. 
வீட்டிலோ, அம்மாவிற்கும் இந்த விஷயத்தில் சாருமதியின் மீது பயங்கர வருத்தமே. ஆனால் தலைக்குமேல் வளர்ந்துவிட்ட பிள்ளையை எந்த விஷயத்திலும் கட்டாயப்படுத்த விரும்பாததால் ஏதும் சொல்லாதிருந்தார், அவ்வளவே. 
தம்பிக்கும் இந்த விஷயத்தில் கொஞ்சம் வருத்தம் என்பது அவன் பேச்சிலிருந்தே இவளுக்குப் புரியத்தான் செய்கிறது.
இவ்வளவு ஏன்? தற்போது ஆசிரியையாக வேலை பார்க்கும் தேன்மொழி கூட ஒரு விடுமுறை நாளில் தோழியைப் பார்க்க வந்துவிட்டாள்.
வந்தவள் சாருமதியின் திருமணவிஷயத்தை “உண்மையா?” என்று அவளிடமே விசாரித்து விட்டு,
“நானும் அப்பப்போ இங்க வரும் போது நேரடியா பாக்குறேன் தானே. உண்மையிலேயே கிருஷ்ணா முன்னமாதிரி இல்ல தான் புள்ள. பயப்படாமல் அவனை கல்யாணம் பண்ணிக்கோ” என்றே தன் முடிவை சொல்லிவிட்டு சென்றிருந்தாள்.
ஏன்? இப்போது இரண்டே நாளில் அவன் அபிமானியாகிப் போன காயத்தி கூட,”கிருஷ்ணாவே நம்ம அத்தானா வந்தா எவ்ளோ நல்லாருக்கும்! அவரையே நீ கல்யாணம் பண்ணிக்கோ சாரு க்கா” என்று அந்த பாட்டியின் பேச்சில், இதோ பக்கத்திலிருந்து சொல்ல ஆரம்பித்துவிட்டாள். 
அடுத்தவர்கள் இவளுக்கு சொல்வதென்ன? இவளே இப்போது ஏழெட்டு மாதங்களாக அவனின் மாற்றங்களை பார்த்துக்கொண்டுதானே இருக்கிறாள்.
அவளுக்கும் புரியத்தான் செய்கிறது அவனது மாற்றங்கள். ஆனாலும் அதையும் தாண்டி ஏதோ ஒன்று அவனிடம் தன்மனதை நெருங்கவிடாமல் செய்கிறது என்பதுதான் நிஜம். 
தென்காசிக்கு தங்கையோடு வந்தவள், சாம்சங் ஷோரூமுக்கு அவளை அழைத்துச் சென்று காயத்ரிக்கு பிடித்ததாக ஒரு ஃபோனை செலக்ட் செய்யச்சொல்ல
“அக்கா! எனக்கு ஆன்ட்ராய்டு வேண்டாம், சிம்பிளா பட்டன் ஃபோன் ஒன்னு வாங்கிகுடு போதும்” என்று சாருமதியின் காதுகளில் கிசுகிசுத்த காயத்ரியை ஆச்சர்யமாகத் தான் பார்த்தனர் கடை ஊழியர்கள்.
தங்கையின் மறுப்பை கண்டுகொள்ளாமல் தானே ஒன்றை தெரிவுசெய்து வாங்கிக்கொண்டு, அங்கு கோயில் கொண்டிருந்த இறைவன் அருள்மிகு காசிவிஸ்வநாதரையும், இறைவி உலகம்மனையும் தரிசித்துவிட்டு வீடுவந்து சேர்ந்தார்கள். 
புதிய ஃபோனிற்கு சிம்கார்டு போட்டு காயத்ரியின் கையில் கொடுத்து,”இதைப் பார்த்து வீணா பயப்படவேணாம் காயூ! இதை முறையா யூஸ் பண்ணா அதைமாதிரி நமக்கு ஹெல்ப் பண்ணுற இன்ஸ்ட்ருமெண்ட் கிடையவே கிடையாது” என்றவள்
” உன்னோட நம்பரை அனாவசியமா யாருக்கும் ஷேர் பண்ணாத… ஹாங்… அப்படியே காவலன் ஆப் பையும் டவுண்லோட் பண்ணிவச்சிக்கோ” என்றும் சொல்லிக்கொடுத்தாள். 
அக்காவின் வார்த்தைகளை மண்டையில் ஏற்றிக் கொண்டவள் தனக்கு தேவையான எண்களை பதிந்து கொள்ள காண்டாக்ட் லிஸ்ட்டை ஓப்பன் செய்ய, அங்கே சாருமதி தன்னுடைய நம்பரையும் கிருஷ்ணாவின் நம்பரையும் ஏற்கனவே பதிவு செய்திருந்தாள்.
பார்த்தவள்,”அக்கா…” என்று ஆர்வத்தோடு அலறியபடியே, ஃபோனின் திரையை சாருமதியை நோக்கி காட்டி,”எப்படி?” 
என்று விழிகளாலேயே அபிநயித்துக் கேட்க,
“அதெல்லாம்… இயற்கை உரம் தயாரிப்பு கற்றுக்கொள்ள வேண்டுமா? இல்லை கொள்ளுமுதல் செய்ய வேண்டுமா? தொடர்பு கொள்ளுங்கள்னு, சுவருக்கு சுவர் எழுதிபோட்டுருக்கே” 
“அதனால?”
“அடிக்கடி வாசிச்சதுல மனசுல பதிஞ்சு போச்சு”
“அவ்வளவு தானா?”
“அவ்வளவே தான்” 
“எங்கப்பா சாமி… இதத்தான் முழு பூசணிக்காயை சோத்துல மறைக்குறதுங்குறதோ!” 
“என்னது?”
“ஒன்னுமில்லியே… நான் ஒன்னுமே சொல்லலையே…” அழகாகச் சிரித்தாள் காயத்ரி.
தங்கையின் சிரிப்பில் மனதைத் தொலைத்த சாருமதி,
“இந்த சிரிப்பு என்றைக்கும் என் தங்கை வாழ்வில் நிலைத்திருக்க வேண்டும்” என்று கடவுளிடம் அவசர பிரார்த்தனை ஒன்றை வைக்கவும் தவறவில்லை.
 ரகுவிற்கும் ஃபோனில் விஷயத்தை சொல்லி தங்கையிடம் அவனை பேசும்படி சொல்லியிருந்தாள் சாருமதி.
அவனும் காயத்ரியிடம் அனுசரணையாகவும், அக்கறையாகவும் பேச, இன்னமும் தைரியமாக உணர்ந்த காயத்ரி தன் தவறுகளிலிருந்து விட்டுவிடுதலையாகி சுதந்திரப் பறவையாக கல்லூரிக்கு சென்று வந்து கொண்டிருந்தாள். 
**************
மேலும் மாதமொன்று எந்த சலசலப்புமின்றி கடந்திருந்தது.
அன்று மருத்துவமனையில் வழக்கம்போல தன் பணிகளை முடித்திருந்த சாருமதி, வாஷ்பேஷனில் தன் 
கைகளை சோப்பால் கழுவி, தூயவெள்ளை நிற டவலில் துடைத்துக்கொண்டிருக்கையில் வாசலில் நிழலாட, நிமிர்ந்து பார்த்தாள்.
அங்கு பண்ணையார் மூர்த்தியைக் காணவும், விறுவிறுவென்று அவரிடம் சென்று வணக்கம் ஒன்றை வைத்தவள்,
“வாங்க ஐயா… உள்ள வாங்க…” என்று அழைத்து வந்தவள், தான் உட்காரும் அந்த மருத்துவருக்கான செயரை தன்கையிலிருந்த வெள்ளை டவலால் துடைத்து,”உக்காருங்க ஐயா” என்று அந்த செயரை நோக்கி தன் கையை நீட்டினாள். 
தங்கள் வீட்டுக்கு வந்துபோன பிறகு இன்று தான் பண்ணையாரை நேருக்கு நேராக சந்திக்கிறாள் சாருமதி. ஆதலால் லேசான தயக்கம் அவள் முகத்தில் நிலவை மறைக்கும் மழைமேகமாக வந்து போனது.
பண்ணையாரோ அவள் கை நீட்டிய இருக்கையை மறுத்து, அவளுடைய நாற்காலிக்கு எதிரில் கிடக்கும் நாற்காலியில் உட்கார்ந்தவாறே,”நீயும் உட்காரும்மா…” என்று சொல்ல 
“இல்லீங்க ய்யா… நான் நிக்குறேன்” என்றவாரே அவருடைய முகத்தை தன்பார்வையாலே அளக்க,
ஏனோ அந்த முகத்தில் சொல்லொண்ணா வேதனை புதைந்து கிடந்தது போலத் தோன்றியது சாருமதிக்கு.
உள்ளம் பதைபதைக்க,”பிரச்சினை ஒன்னுமில்லீங்களே ய்யா” அவசரமாகக் கேட்டாள் சாருமதி.
“ஹ்ம்ம்… பிரச்சினை என்னம்மா வந்திடப்போகுது எனக்கு?” லேசாகச் சிரித்தவர், 
“ஆனால், ஒரு சின்னப்பொண்ணோட நன்றிக்கடனை  தாங்கமுடியாமல் தான் எனக்கு அடிக்கடி மூச்சு முட்டுது”
“ஐயா…”
“ம்ம்…அந்த சின்னப் பொண்ணை, உன்னோட சுயநலத்துக்காக அஞ்சுவருஷம் கட்டிப்போட்டுறிக்கியேடா ன்னு எம்மனசாட்சி என்னை தினம் தினம் கூறுபோடுது!”
“ஐய்ய்யா…”
“அதனாலத்தான், நான் ஒரு முடிவோடு இன்னைக்கு வந்துருக்கேன்” என்றவர் அதிர்ந்து போய் தன்னையே பார்த்து நின்ற சாருமதியைப் பார்த்து
“நம்ம ஒப்பந்தத்திலிருந்து உன்னை நான் விடுவிக்கிறேன் மா. இன்னைல இருந்து நீ எங்கிட்ட குடுத்த வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டவ இல்லம்மா” 
“நான் கொடுக்குற சொற்ப்ப சம்பளத்துக்கு நீ உன்னோட திறமையை இந்த பட்டிக்காட்டுல வீணடிக்கணுங்குற கட்டாயம்  இனி உனக்கு கிடையாது.”
“உன் இஷ்டப்படி எங்க வேணாலும் போய் வேலைப் பாத்துக்கலாம்” என்று சொல்ல,
அதிர்ந்து போய் நின்றாள் சாருமதி…

Advertisement