Advertisement

சாருமதி.
அத்தியாயம் 16.
கிருஷ்ணாவின் வீட்டு ரோஜாதோட்டத்தில் பூக்களோடு பூக்களாக நின்று கொண்டிருந்தாள் சாருமதி
காலை இளஞ்சூரியனின் பொன்னிற கதிரொளிபட்டு, அவள் மேனி தழுவியிருந்த தங்கநிற மெல்லிய பட்டுப்புடவை தகதகக்க, 
வானத்து தேவதை ஒன்று மலர்களைக் கண்டு மயங்கி கீழிறங்கி வந்து நின்றது போலிருந்தது அவள் தோற்றம்.
“மார்கழிப் பூவே…
மார்கழிப் பூவே…
உன் மடி மீது 
ஓரிடம் வேண்டும்…” என்று
மெதுவாக முணுமுணுத்தபடியே, ரோஜாக்களின் இதழ்களிலிருந்த பனித்துளியை தன் கைவிரல் கொண்டு மென்மையாக தடவிக்கொண்டிருந்தவளின் அல்லி விழிகளை ஆண்மை ததும்பும் இருகரங்கள் மூட, 
சட்டென்று அந்த கரங்களை உரிமையோடு பற்றிக்கொண்டவள்,”கிருஷ்ணா…” என்றாள் ஆவலாக.
“ம்ம்… உங்கிருஷ்ணாவேத் தான். பரவாயில்லையே…  திரும்பி பாக்காமலே கண்டுபிடிச்சிட்டியே! அந்த அளவுக்கு மாமனோட டச்சிங்ஸ் எல்லாம் மனசுல பதிஞ்சு போயிடிச்சா செல்லம்?” 
புன்னகையோடு சொன்னவன், அவளை பின்னிருந்து லேசாக அணைத்தபடி அவள் கூந்தல் காட்டில் முகம்புதைத்து அங்கு பூத்திருந்த மல்லிகையின் மணம் பிடிக்க
“ஹ்ம்ம்… நெனப்புத்தான்…” நொடித்துக் கொண்டவள்,
அவனோடு இழைந்தபடியே,”இந்த அரண்மனை நந்தவனத்துக்குள்ள வேற யாராலயும் சாதாரணமாக நுழைஞ்சிட முடியுமா என்ன?” என்று கேட்க
“ஹஹ… நக்கலு…” என்று சிரித்து சமாளித்தபடியே, அவள் கூந்தல் காட்டிலிருந்து மெதுவாக கீழிறங்கி  தோள்களில் முகம்  புதைத்து முத்தமொன்று வைத்தான்.
அவன் செய்கையில் லேசாக நெளிந்தவாறே, “நக்கலுமில்லை… விக்கலுமில்லை. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, எனக்கே இங்க வர நீ பெர்மிஷன் குடுத்திருப்பியா? சொல்லு கிருஷ்ணா!”
“ஹேய்… இதென்ன? மாமன்மேல இப்படி அபாண்டமா பழியத்தூக்கி போடுற?”  கள்ளச்சிரிப்போடு அப்பாவியாகச் சொன்னவனின் கைகள் இப்போது அவளின் வெற்றிடையில் கோலமிட முயல, அவன் கைகளுக்கு அணைபோட்டபடியே
“உண்மையைத் தான் சொன்னேன் யுவர் ஆனர்…” என்றாள் பிடிவாதமானக் குரலில்
“அதெல்லாம் லாங் லாங் எகோ,  ஒன்ஸ்அப்பான் அ டைம்… அதையே திரும்பத் திரும்ப சொல்லி மாமனை மூட் அவுட் ஆக்காதீங்க மைலார்ட்”
அவள் காது மடலில் தன் இதழுரச கிசுகிசுத்தவனின்  கைகள், தன் தடைகளை விலக்கி வெற்றிகரமாக அவள் வெற்றிடையில் தடம் பதித்து பெண்ணவளை தன்னோடு  சேர்த்தணைத்தது.
“நான் அப்படித்தான் சொல்லுவேன்… எனக்கு தோணும் போதெல்லாம் சொல்லுவேன்…ஏன்? நீ குடுகுடு கிழவனான பிறகு கூட சொல்லுவேன். என்னை யாராலும் தடுக்க முடியாது”  வீராப்பு பேசினாள் சாருமதி.
“கிழவனான பிறகு பேசுறதை அப்போ பாத்துக்கலாம் செல்லம். முதல்ல, இப்போ உன்னால பேசமுடியுதா பாரு!” சொல்லியபடியே, சாருமதியை தன்பக்கமாகத் திருப்பியவன், அவள் கன்னமிரண்டையும் தன்னிரு உள்ளங்கையில் தாங்கி அந்த பட்டிதழ்களில் அழுத்தமாய்… மிக அழுத்தமாய் ஒரு நீண்ட… முத்தம் வைக்க..
நீண்ட போராட்டத்திற்கு பிறகு தன் உதடுகளை அவனிடமிருந்து விடுவித்து, கீழுதட்டை பிடித்து அவனிடம் காட்டியபடியே,”என் உதட்டை என்ன பண்ணி வச்சிருக்க கிருஷ்ணா?” என்று அதட்டும் குரலில் கேட்க
அந்த உதடுகளை தன் ஒற்றை விரல் கொண்டு மென்மையாக தடவியவன்”அதெல்லாம் சும்மா… மாமன் காதல் தடம் பதிச்சிருக்கேன் செல்லம்” போதையேறியக் குரலில் சொல்லியவன், மறுபடியும் உதட்டை நோக்கி குனிய
“பதிப்படா… பதிப்ப… நேற்று முழுவதும் சாரு… சாருன்னு
புலம்பிகிட்டு இருந்தவன, தனியா விட்டுட்டுப் போக மனசில்லாமல், கூட ஒருநாள் லீவ் போட்டு உங்கூட, உன்ரூம்லயே தங்குனேன் பாரு, அதுக்கு பரிசா நீ என் உதட்டையும் கடிச்சிவச்சிட்டு, காதல் வசனம் வேற பேசுறியா? உன்ன…” என்றபடியே கிருஷ்ணாவின் முதுகில் நாலைந்து அடிகளைப் போட்ட தனா,
“எரும… எரும… காட்டெரும… இதுக்கு மேல உங்கூட இருந்தேன்னா எங்கற்புக்கே கேரண்டியில்லை, நான் போறேன் டா…” என்றபடியே கட்டிலை விட்டு வேகமாக கீழிறங்க,
நண்பனின் அடியில் கனவுலகிருந்து கலைந்த கிருஷ்ணா,
‘ஷ்ஷ்… சொதப்பிட்டனா…, இவன் இத வச்சே இனி ஓட்டுவானே… சமாளிப்போம்’ என்று சுதாரித்துக்கொண்டு
தனாவின் கையை பிடித்து இழுத்தபடியே
“டேய்… ரொம்பத் தான் ஸீனைப் போடாத… நேற்று சாரு என்னை பாக்க வந்தது… என்னவோ நாள் முழுக்க அவ நினப்பாவே இருந்தது, அதான்… கனவு…இப்டி எல்லாம்…” சொல்ல முடியாத வெட்கத்தில் கிருஷ்ணாவின் முகம் சிவக்க
“யப்பா…சாமி! வெக்கப்பட்டு தொலைக்காத டா. என்னால கண்கொண்டு பாக்கமுடியலை” என்று முகம் சுளித்த தனா,
“அந்த புள்ள நேர்ல வரும்போது விறைப்பா இருந்துட்டு, கனவுல வரும்போது மட்டும் உதட்டை கடிச்சு வைக்கிறது. இது ஒன்னும் நல்லாயில்லை டா” என்று முறைக்க
“ம்ம்… சாரு நேற்று உன்னை பார்க்க வந்திருக்கும் போது, நீ இன்னும் கொஞ்சம் நல்லா பேசியிருந்திருக்கலாம் கிருஷ்ணா!” அவன் மனமும் தனாவின் துணை கிடைத்த தைரியத்தில், கிருஷ்ணாவிடம் முறுக்கிக் கொண்டது.
‘ஆமா… இப்போ நான் வச்சிகிட்டேயா வஞ்சம் பண்ணுறேன்? வரவர அவ இல்லாத நேரத்தில அவளைத் தேடுறதும், அவளைக் கண்டா காணாத மாதிரி போறதுமா, என் டிசைனே மாறிப்போச்சே!’ அலுத்துக் கொண்டவனுக்கு
  “நடந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாதே” என்று காயத்ரியிடம் சொன்ன பிறகும், அவள் தனது தவறை மறைக்க நினைக்காமல் சாருமதியிடம் சொல்லியிருக்கிறாள் என்பதே, காயத்ரி மீது ஒரு  நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது கிருஷ்ணாவுக்கு.
நேற்று முன்தினம் வீட்டு வாசலில் காயத்ரியை கொண்டு இறக்கிவிடவும், வந்து நின்ற கல்யாணியிடம், “காயத்ரியை திருநெல்வேலி பஸ் ஸ்டாண்டுல வச்சு பாத்தேன் மா. அதான் கூட்டிட்டு வந்தேன்” என்று சாதாரணமாகச் சொன்னவன்,
“நான் கூட்டிட்டு வரலாம்ல?” என்று கூடுதலாக கேட்டு, கல்யாணி அம்மாவின் தலையசைப்பையும் பெற்றுவிட்டே 
சென்றிருந்தான்.
வீட்டுக்குள் நுழைந்த காயத்ரியிடம்,”டீ போட்டு வச்சிருக்கேன் குடி காயூ…” என்றபடியே மறுபடியும் கடைக்குள் நுழைந்து கொண்டார் கல்யாணி.
வீட்டினுள் வந்து,  இருந்த ஒற்றையறையில் நுழைந்து, அங்கிருந்த சிறிய கட்டில் விழுந்தவள் இதுவரையில் அடக்கி வைத்திருந்த அழுகையை முழுதாக அழுது தீர்த்தாள். 
பின்னர் எழும்பி முகம் கழுவி அம்மா சொன்னபடி டீயை ஊற்றி குடித்தவளுக்கு, இன்று எத்தனை பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறோம் என்பது நன்றாகவேப் புரிந்தது.
கூடவே,”இந்த உலகத்துல சும்மா கிடைக்கிற பொருள் எதுவுமே கிடையாது . எல்லாத்துக்கும் கண்டிப்பா ஒரு விலையிருக்கும். அதனால யாருகிட்ட இருந்தும் எந்த பொருளும் இனாமா வாங்காத!” என்று அடிக்கடி சாருமதி சொல்லும் வார்த்தைகளின் அர்த்தமும் புரிந்தது.
‘தன் உடன்பிறந்தவர்கள் கல்வியின் துணைகொண்டு தங்களின் வறுமையை வெல்ல நினைக்க, நான் இன்னொருவரின் முதுகில் சவாரி செய்து அதிலிருந்து மீண்டுவர நினைத்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?’ என்பது இப்போது புரிந்தது.
‘நான் ஒரு கணக்குப் போட… அவன் வேறோரு கணக்குப் போட்டு பழகியிருக்கிறான். அதற்கு இரண்டுபேரும் காதெலுனும் சாயம்வேறு பூசியிருந்திருக்கிறோம். ச்சீ…’ 
நடந்த நிகழ்விலிருந்து காயத்ரியின்  அகக்கண் அகன்று திறந்திருக்க, தன்னுடைய நடத்தையை சுயபரிசோதனை செய்து பார்த்தவளுக்கு, தன்னையேப் பிடிக்கவில்லை. 
‘யார் மடி கிடைக்கும் வெடித்துச் சிதற!’ என்று காத்திருந்தவளுக்கு, மருத்துவமனையிலிருந்து வந்த சாருமதி, இவள் முகம் பார்த்து,
“என்னாச்சு காயூ! ஏன் ஒருமாதிரி இருக்கிற?” என்று கேட்ட ஒற்றை கேள்வி போதுமாயிருந்தது, நடந்தது  அத்தனையையும் ஒப்பிப்பதற்கு.
தமக்கையை கட்டிக்கொண்டு “ஓவென்று” அழுதவள், அனைத்தையும் ஒன்றுவிடாமல் கொட்டித் தீர்த்துவிட, கேட்டிருந்த சாருமதியின் இதயம் தாறுமாறாக அடித்தது.
‘ஒருவேளை கிருஷ்ணாவும் தனாவும் சரியான நேரத்துக்கு அங்கே போகவில்லை என்றால் தன் தங்கையின் நிலை என்னவாகியிருக்கும்?’ யோசித்து பார்க்கவே பிடிக்கவில்லை அவளுக்கு.
‘தன் கைக்குள் இருக்கும் தங்கை பத்திரமாக இருக்கிறாள்’ என்னும் நினைவே ஆறுதலைத்தர, காயத்ரியின் முதுகைத் தடவிக் கொடுத்தபடியே,
“ஷ்ஷ்… காயூ! வேண்டாம்… அழாத… இதோட இந்த விஷயத்தை விட்டுரு… நீ செய்தது தப்புன்னு உனக்கு புரிஞ்சிடிச்சில்ல… இனி ஜென்மத்துக்கும் அந்த தப்பை நீ செய்யமாட்டங்குற நம்பிக்கை எனக்கிருக்கு” என்று ஆறுதலாகப் பேச 
‘விஷயத்தை கேட்டவுடன் வாய் ஓயாது திட்டுவாள், தன்னை மட்டம் தட்டுவாள், ஏன்? சமயத்திற்கு தன்னை கைநீட்டி அடிக்கக் கூட செய்வாள்’ என்று எதிர்பார்த்தே அனைத்தையும் சொன்னவளுக்கு, அக்காவின் ஆறுதல்மொழி இன்னும் கொஞ்சம் கூடுதலாக கழிவிரக்கத்தில் கரையவைத்தது.
“அம்மாவுக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாங்க. நீ அழுதே அவங்களுக்கு காமிச்சு குடுத்துடாத” சாருமதியின்  லேசான கண்டிப்புக்குரல் ஒருவழியாக காயத்ரியை சமாதானப்படுத்த,
“அவன் யார்? என்ன? என்ற விஷயத்தைக் கேட்க்கும் போது கிடைத்த பதிலில் நிலைகுலைந்து போனாள் பெரியவள்.
அவளுக்கு இப்போது நொடியில் எல்லாம் பிடிபட்டது. ‘இத்தனை வருடங்களாகவா ஒருவன் பழிவெறியோடு காத்திருப்பான்? கடவுளே! இன்னும் காயத்ரிக்கு மூன்று மாத படிப்பிருக்கிறதே!’
‘இவன் இத்தோடு ஒதுங்கி போவானா? இல்லை இன்னும் ஏதாவது பிரச்சினைகளை என் தங்கைக்கு கொடுப்பானா?’ யோசித்தவளுக்கு  தலை விண்ணென்று தெறித்தது.
தான் வேலைக்குப் போகும் போது அந்த ராகேஷால் தனக்கு ஏற்பட்ட பிரச்சினையை காயத்ரியிடம் சொன்னவள்,”அதனால் கூட அவன் உன்னை டார்கெட் செய்திருக்கலாம்” என்ற விஷயத்தையும் சொல்லி
 “ஒருவேளை அவனால் உனக்கு தொந்தரவுகளேதும் இனியும் இருந்தால், பயப்படாமல் எங்ககிட்ட சொல்லணும், நாம எல்லாருமாக சேர்ந்து அதை ஃபேஸ் பண்ணிக்கலாம்” என்ற தைரியத்தையும் தங்கைக்கு கொடுத்திருந்தாள்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் காயத்ரி கல்லூரிக்கு போகாமல் வீட்டிலிருக்க, மருத்துவருக்கேது நாளும் கிழமையும்? எப்போதும் போல ஹாஸ்பிடலுக்கு கிளம்பியிருந்தாள் சாருமதி.
மதியம் வரை ஹாஸ்பிடலில் வேலைகள் அவளை பம்பரமாகச் சுழற்ற, மதிய இடைவேளையில் சாப்பிட்டு முடித்தவளுக்கு,
 ‘அப்படியே கிருஷ்ணாவைப் போய் பார்த்து, காயத்ரியை காப்பாற்றியதற்கு ஒரு நன்றியை தெரிவித்துவிட்டு வந்துவிடலாம்’ எனத்தோன்றவும்
டாக்டர் நிர்மலாவிடம்,”தான் வெளியே போவதாகச் சொல்லி விட்டு, அன்று, “அவன் தோப்பில் தான் இருப்பேனென்று” சொல்லியதை ஞாபகம் வைத்து உள்ளூரிலேயே இருந்த பண்ணையாரின் தோப்பிற்கு வந்து சேர்ந்திருந்தாள்.
சாதாரண மக்கள் தெருவில் நடந்தாலே ஆதிமுதல் அந்தம் வரை விசாரித்துவிடும் கிராமமக்கள் ‘டாக்டர்’ சாருமதி தெருவிலிறங்கி நடந்தால் விட்டுவிடுவார்களா என்ன? 
மதிய நேரமென்பதால் எதிர்ப்பட்ட ஒன்றிரண்டு பேர் சாருமதி போகுமிடத்தை விசாரிக்க,”பண்ணையார் தோப்புக்கு” என்று முதலில் வெள்ளந்தியாகச் சொன்னவள், 
அவர்களின் பார்வை மாற்றத்தில் சுதாரித்துக்கொண்டு அதன் பிறகு கேட்டவர்களுக்கு பட்டும் படாமலும் பதில் சொல்லி தப்பித்து வந்திருந்தாள். 
ஏனென்றால் பண்ணையார், மகனுக்காக சாருமதியை பெண்கேட்டதும், அதற்கு அவள் மறுத்து விட்டதும் காற்றுவாக்கில் ஊருக்குள் பரவியிருந்தது. 
அப்படி இருக்கும் போது இவள் பண்ணையார் தோப்பிற்கு போகிறேன் என்று சொன்னால் கேட்பவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கத்தானே செய்யும்!
தோப்பிற்குள் வந்தவள் கண்களை நாலாபுறமும் சுழலவிட ஆங்காங்கே ஆட்கள் நின்று வேலைபார்த்து கொண்டிருந்தார்கள்.

Advertisement