Advertisement

நேற்று நடந்த நிகழ்வுகளிலிருந்து வெளியே வந்தவன், எழுந்து தரையை நோக்கி தாழ்ந்திருந்த ஒரு கிளையை பிடித்து உலுக்க, சாரல் மழையில் நனைந்திருந்த மரம் தன் மீதிருந்த நீரை பன்னீராய் தெளித்தது கிருஷ்ணாவின் மீது. 
தன் முகம் மலர்த்தி அதை பெற்றுக்கொண்டவனிடம் புத்துணர்ச்சி சற்றே மீண்டிருக்க, காலத்தின் கைகளில் தன் காதலை ஒப்படைத்து,
இதற்கு மேல் தானாக தன் காதலை கைக்கொள்ள எந்த முயற்சியும் மேற்கொள்ளப் போவதில்லை என்ற முடிவோடு, வந்தவழியே திரும்பலானான் கிருஷ்ணா.
************
“அப்புறம் மச்சான்! அன்னைக்கு என்னவோ நீ கைதட்டுனா ஆயிரம் பொண்ணுங்க வரிசையில் வந்து நிக்கும்னு சொன்னியாமே? அதுல ஒன்னை கல்யாணம் செய்து அம்மாவுக்கு ஒரு மருமகளை கொண்டுவர்றது!”
கிட்டத்தட்ட சாருவை பெண் கேட்டு சென்ற நான்கு
 மாதங்களுக்கு பிறகு தனா ஊருக்கு வந்திருக்க நடந்தவை அனைத்தையும் அவனிடம் ஒன்றுவிடாமல் ஒப்பித்திருந்தார் வேதவல்லி. அதனாலேயே இந்த கேலி தனாவிடம்.
“அடேய்… மித்ர துரோகி… நம்ம ஃப்ரெண்ட்டோட காதல் அந்தரத்துல ஊசலாடுதே! ஏதாவது செய்து அவன்   காதலை சேர்த்து வைப்போம்னு இல்லாமல்”
“அன்னைக்கு ஏதோ ஒரு வேகத்துல ரைமிங்கா நான்
சொன்ன வார்த்தையை பிடிச்சிகிட்டு எனக்கு வேற பொண்ணு கூட கல்யாணமே செய்துவச்சிடுவ போலயே”
கிருஷ்ணாவின் அங்கலாய்ப்பில் அட்டகாசமாகச் சிரித்தான் தனா. இருவரும் திருநெல்வேலி யின் புகழ் பெற்ற ஹோட்டல் ஒன்றில் அமர்ந்திருந்தார்கள்.
 இன்னும் மாலைநேர பரபரப்பு துவங்காததால் அங்கொன்றும் இங்கொன்றுமாக நபர்கள் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.
மாதந்தோறும் பண்ணையாரின் அசையா சொத்துக்களை பார்வையிட்டு அதன் வாடகைகளை வசூல் செய்யும் கேசவனின் வேலையை, இன்று தான் செய்வதாக சொல்லி, லீவுக்கு வந்திருந்த தனாவோடு திருநெல்வேலி வந்திருந்தான் கிருஷ்ணா.
ஒரு மூன்றரை மணி போல வந்த வேலை முடிய, சிம்பிளாக டிஃபன் ஏதாவது சாப்பிட்டு விட்டு போகலாம் என்று வந்து உட்கார்ந்திருக்கிறார்கள்
“வேற ப்ளான் ஏதாவது வச்சிருக்கியா மச்சான் சாருவை சமாதானம் பண்ணுறதுக்கு?” தன் முன்னே இருந்த தட்டிலிருந்த சப்பாத்தியை பிய்த்து சாப்பிட்டபடியே கேட்டான் தனா. 
“ஏன்? நான் நல்லாயிருக்குறது உனக்கு பொறுக்கலையா?”
“என்ன மச்சான்! இப்படி பொறுப்பில்லாமல் பேசுற! இப்படியே கிணத்துல போட்ட கல்லாட்டும் நீ இருந்தா, எனக்கு எப்போ தான் ரூட் கிளியராகும்?” 
“என்னடா சொல்லுற?!”
“இல்ல… உன்னை மச்சான்னு கூப்பிட்டு… கூப்பிட்டு எனக்கு போரடிச்சிடிச்சி”
“அதுக்கு…”
“சகலைன்னு கூப்பிடலாம்னு முடிவெடுத்துட்டேன்”
“இதப்பார்றா…இதெப்போ?  என்று உற்சாக மிகுதியில் லேசாக கத்தியவன்,”யாரு?” என்று கேட்டு,
“மவனே! கௌரின்னு மட்டும் சொன்ன, உன் மண்டையை நானே உடைச்சிடுவேன்” என்றான் கறாராக…
“ச்ச… ச்ச…என்ன மச்சி! அது பச்சப்புள்ளடா…” 
“ம்ம்… அது…” என்றவன்
“காயத்ரி ஓகே சொல்லிட்டாளா?” என்றான்.
“எங்க… இப்போ வரைக்கும் ஒன்சைட் தான் மச்சி”
“ஹஹஹ… அதானேப் பார்த்தேன். லவ்ல உனக்கு சீனியர் நான் இருக்க, இன்னைக்கு வந்த பச்சா, உனக்கெல்லாம் க்ரீன் சிக்னல் கிடைச்சா, அப்புறம் எங்காதலுக்கென்ன மதிப்பு.”
“அடப்போடா… முறைச்சிகிட்டு திரியிற பொண்ணை ஆஃப் பண்ண தெரியலை. இதுல பெரிய காதல் மன்னன் ரேன்ஜ்க்கு வசனம் பேசவந்துட்டான்…”
“ம்ம்… எல்லாம் என் நேரம் தான் சார்…”  ஒருவருக்கொருவர் வம்பிழுத்து பேசியபடியே சாப்பிட்டு முடித்து, கைகழுவ வாஷ்ரூமுக்குள் நுழைந்தார்கள். 
கையோடு சேர்த்து முகத்தையும் கழுவி கர்சீஃப் ல் துடைத்து கொண்டிருந்தவர்களின் காதில் விழுந்த,
“டேய் மாப்ள… அதோ அந்த ஃபேமிலி ரூம்குள்ள கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு ஜோடி போச்சு பாத்தல்ல”  என்ற ரகசியக் குரல், அவர்களை அப்படியே நிற்க வைத்தது. 
பேசிக்கொண்டிருப்பவர்கள் வாஷ்ரூம் க்கு வெளியே நிற்பார்கள் போலும், ரகசிய பேச்சென்றாலும் தெளிவாகவே கேட்டது இருவருக்கும்.
“ம்ம்… அதுல அந்த பொண்ணு செம ஃபிகருடா மச்சான்”
“உனக்கும் எனக்குமே அது தெரியும் போது, கூடவந்தவனுக்கு தெரியாதா? அதான் ஜூஸ்ல மயக்கமருந்தை கலக்க சொல்லிட்டான் போல” 
“என்னடா சொல்லுற?” வெளியே நின்றவனோடு சேர்ந்து உள்ளே நின்ற இருவரும் பதற, ஆனால் மற்றவனோ எந்த பதட்டமுமின்றி தொடர்ந்தான்.
“ம்ம்… பயபுள்ள ரொம்ப நாள் ட்ரை பண்ணிருப்பான் போல. கதைக்காகலன்ன உடனே கலக்க சொல்லிட்டான். அதுவும் அடையாளம் தெரியுறதுக்காக க்ரேப் ஜூஸ்ல”
“இங்க மேலதான் ரூம் புக் பண்ணியிருக்கானாம். வேலை செய்யுறதுக்காக எனக்கு கத்தையா பணம் கொடுத்தான். அதோட அவனுக்கப்புறமா அந்த ஃபிகரை…” என்று விகாரமாக சிரித்த சிரிப்பு உள்ளே நின்றவர்களுக்கு ஒரு அருவருப்பை கொடுக்க,
“மச்சி… எனக்கும் உண்டுல்ல”
“உனக்கில்லாமலா…” ஏதோ தொகுதிப்பங்கீடு பிரிப்பது போல பேசிக் கொண்டிருந்தவர்களின் பேச்சில் ஏதோ ஒரு பெண்ணிற்கு ஆபத்து என்றவகையில் புரிய
சட்டென்று முடிவெடுத்து கொண்ட நண்பர்கள் வாஷ்ரூமிலிருந்து வெளியே வர, அந்த ரூமுக்குள்ளே யாருமில்லை என்று நினைத்து அங்கே நின்று கிசுகிசுத்துக் கொண்டிருந்த அந்த ஹோட்டல் பணியாளர்கள் இருவரும் இவர்களை எதிர்பாராமல் கண்டதும் திருடனுக்கு தேள் கொட்டியது போல முழித்தனர். 
அந்த முழியே பேசிக்கொண்டிருந்தது இவர்கள் தான் என்பதை உறுதிசெய்ய யாருடைய கவனத்தையும் கவராமல் சரேலென்று இருவரையும் வாஷ்ரூமிற்குள் இழுத்துக் கொண்டார்கள் இருவரும்.
உள்ளே இழுத்த இழுப்போடு கன்னத்திலும் ஒரு அறையை கொடுத்து விசாரிக்க, விழுந்த அறையின் வீரியமோ என்னவோ முரண்டு பிடிக்காமல், 
“நான் இல்லை சார் அவன் தான் செய்தது” என்று மருந்து கலக்கியவனை ஒருவன் கைகாட்ட, செய்தவனோ மறுபேச்சின்றி அறையைக் காட்டினான்.
தங்களோடு அவனை அழைத்துக் கொண்டு வந்து அவனையே கதவை திறக்கச் சொல்லி அவன் பின்னோடு அறையில் நுழைய,
அலங்கரிக்கப்பட்ட டேபிளுக்கு முன், அறையின் வாசலை பார்த்தமுகமாக ஆணும், அவனுக்கு எதிரில் இவர்களுக்கு முதுகு காட்டியபடி ஓரு பெண்ணும் உட்கார்ந்திருந்தனர். 
அந்த ஆணைப் பார்த்ததும் தெரிந்தமுகமாகத் தோன்ற, தன் நினைவடுக்கைத் தூளாவினான் கிருஷ்ணா. மனக்கண்ணில் கலங்கலாகத் தெரிந்த முகம் திடீரென்று பிரகாகமாக, ‘இவன்…இவன்… மதுரையில் காயத்ரியோடு பேசிக்கொண்டு நின்றவனல்லவா?’
சட்டென்று ஏதோ பொறிதட்ட, அப்போ இங்க இருக்கிற பொண்ணு…. ஏதோ தோன்ற,”காயத்ரி…” அழுத்தமாக அழைத்தான் கிருஷ்ணா.
அவ்வளவு தான்… சட்டென்று துள்ளியபடி திரும்பினாள் காயத்ரி… அவன் சாருவின் தங்கை காயத்ரி…
‘இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறது இந்த பெண்?’ ஆயாசமாக வந்தது கிருஷ்ணாவுக்கு.
 ‘பூமியே தன் கால்களுக்கு கீழே நழுவியது போலிருந்தது’ தனாவிற்கு.
தனாவையும், கிருஷ்ணாவையும் இங்கே எதிர்பார்க்காத காயத்ரியின் கண்களில்,’இவர்கள் மூலம் தன்விஷயம் வீட்டுக்கு தெரிந்து விடுமோ?’ என்ற பயம்  முதலில் தெரிந்தது. 
அதன்பிறகு அந்த கண்களில்,’எப்படி என்றாலும் ஒருநாள் நாங்கள் காதலிப்பது வீட்டுக்கு தெரியத்தானே வேண்டும். அது இவர்கள் மூலம் நடந்து விட்டு போகட்டுமே!’ என்ற அலட்சியம் வந்து உட்கார்ந்து கொண்டது.
அந்த ராகேஷின் மனமோ,’இவ்வளவு நாள் காத்திருப்பிற்குப்  பிறகு இன்று காரியம் கைகூடி விடும் என்று நினைத்தால் கரடி மாதிரி இரண்டுபேர் வந்து நிற்கிறானுங்களே?’ என்று புலம்பியது.
அங்கிருந்த ஒவ்வொருவரின் மனமும் வெவ்வேறு அலைவரிசையிலிருக்க,”காயத்ரி! இங்க என்ன பண்ணுற?” சற்றே உரிமையாக அதட்டினான் கிருஷ்ணா.
ராகேஷ் முன் தன்னை கிருஷ்ணா அதட்டியது பிடிக்காமல்,
“கிருஷ்ணா! நீங்க எங்க ஊரு பண்ணையார் மகனா இருக்கலாம். ஏன்? எங்க சாருமதியை விரும்பி கல்யாணம் பண்ண கேட்டவங்களாக் கூட இருக்கலாம்” 
“அதுக்காக என்னை கட்டிக்கப் போறவர் முன்னாடியே என்னை அதட்டுற உரிமையை யார் உங்களுக்கு தந்தது?” திமிராகக் கேட்டாள் காயத்ரி
காயத்ரியின் மடத்தனத்தில் சிரிப்பு வர, லேசாகச் சிரித்த கிருஷ்ணா,”என்ன? இவன் உன்னை கல்யா…ணம் பண்ணப்போறானா? ஹஹஹ… நல்ல ஜோக் காயத்ரி” என்று சிரித்தபடியே ராகேஷைப் பார்த்து,
“ஏங்க…காயத்ரியை நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா?” என்றான் நக்கலாக
‘இவன் நம் விஷயத்தை தெரிந்து கேட்க்கிறானா?  இல்லை சொந்த ஊர்க்காரியை காதலனுடன் கண்டதும் உரிமையாக அதட்டுகிறானா?’ இது எதையும் கண்டுபிடிக்க முடியாத ராகேஷ் தலையை “ஆமாம்” என்று ஆட்டிவைக்க,
“ஓஹ்… கட்டிக்கப் போற பொண்ணுக்கு தான் ஜூஸ்ல மயக்கமருந்தெல்லாம் போட்டு… ஹோட்டல்ல ரூமெல்லாம் புக் பண்ணுவாங்களா? இது எந்த ஊரு பழக்கம் மாப்பிள்ளை?” கிருஷ்ணாவின் குரலில் இப்போது ஹைடெசிபலில் அனல்பறந்தது.
கிருஷ்ணாவின் பேச்சின் சாராம்சம் புரிந்ததும் சட்டென்று எழும்பிய காயத்ரி வெலவெலத்துப் போய் நிற்க
‘இவன் விஷயம் தெரிந்து தான் வந்திருக்கிறான்’ என்பது ராகேஷூக்கு இப்போது தெள்ளத்தெளிவாக புரிந்து போக,”காயூ… இவன் சொல்லுறது எல்லாம் பொய்… நம்பாத…” என்றான் பலகீனமான குரலில்.
“ஆமாம் காயூ… நாங்கெல்லாம் பொய் சொல்லுறவங்க…சார் தான் அரிசந்திரனுக்கு அண்ணன்… அதனால சாரை அந்த கிரேப் ஜுஸை மட்டும் குடிக்க சொல்லு…”
“நாங்களும் அவரை அரிச்சந்திரனுக்கு அண்ணன் தான் னு சொல்லிடுறோம்…எங்க… கொஞ்சம் அவரைக் குடிக்க சொல்லுமா…”
குரலில் கிண்டல் இருந்தாலும் “இப்போது நீ அதை குடித்தே ஆகவேண்டும்” என்ற கட்டளை ராகேஷூக்கு அதிலிருக்க, 
‘அந்த ஜுஸ் இருந்தால் தானே நான் அதை குடிக்க வேண்டும்’ என்ற எண்ணத்தோடு வேகமாக கைகளை ஓங்கி அதை தட்டிவிட முயன்றான் ராகேஷ்.
அதற்கு முன் அதை தன் கைபற்றிய தனா, ஓங்கி அவன் கன்னத்தில் ஒன்று விட்டு, ஜூஸ் கிளாஸை அவன் வாயருகே புகட்டுவது போல கொண்டு போய்‌,”குடிடா…” என்று அதட்ட…
“இல்ல… வேண்டாம்…அதுல மயக்கமருந்து கலந்திருக்கு…” கடைசியில் பூனைக்குட்டி அவன் வாயிலிருந்து வந்தேவிட்டது!
அவனின் பதிலில் கைகால்கள் நடுங்கி மயக்கமே வரும்போல இருந்தது காயத்ரிக்கு
‘அதனால் தான், வந்த நேரத்திலிருந்து அதைக்குடி… அதைக்குடி என்று அடிக்கடி கெஞ்சிக் கொண்டிருந்தானா?
அதை அவன் சொன்ன நேரத்திற்கு குடித்திருந்தால் இந்நேரம் தன்கதி என்னவாகியிருக்கும்? 
யோசிக்க கூட முடியாத அளவிற்கு மூளை மரத்துப்போக அங்கிருந்த நாற்காலியில் அயர்ந்து போய் அமர்ந்தாள் காயத்ரி.
புரிய வேண்டியவளுக்கு எல்லாம் நன்றாக புரிந்து விடவும்,
கிருஷ்ணாவும் தனாவும் அந்த ராகேஷை நையப்புடைத்து
அவன் வாயில் மறுக்க மறுக்க அந்த கிரேப் ஜுஸை ஊற்றி “முடிந்தால் இப்படியே வீட்டுக்கு போ… இல்லை இங்கயே நாள் முழுவதும் அசிங்கப்பட்டு கிட…” என்று விட்டு 
காயத்ரியைக் கையோடு அழைத்துக்கொண்டு தங்கள் காருக்கு வந்திருந்தார்கள். காரின் பின் கதவைத் திறந்து காயத்ரி யை உட்கார சொன்ன கிருஷ்ணா அவள் உட்கார்ந்ததும் கதவை மூடியபடியே,
“இவனை முதல் தடவை மதுரையில் வைத்து பார்க்கும் போதே ஆள் சரியில்லை இவன் கூட பேச்சு வச்சிக்காதே காயத்ரி ன்னு எனக்கு சொன்னதாக நியாபகம். அப்படித்தானே காயத்ரி!”
“மொததடவை பார்க்கும் போதே அவன் சரியில்லை ன்னு என்னால ஜட்ஜ் பண்ணமுடிஞ்சிருக்கு. ஆனால் இத்தனை நாள் பழக்கத்தில  ஒருதடவைக் கூடவா இவன் சரியில்லை ன்னு உன்னால உணர முடியலை காயத்ரி?”  கேட்டவன் ட்ரைவர் சீட்டில் சென்று அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்ய
ஓராயிரம் அறைகள் கன்னத்தில் விழுந்தது போலிருந்தது காயத்ரி க்கு..
‘ஆமாம்…ஏதோ நுண்ணிய உணர்வுகளெல்லாம் பெண்களுக்கு உண்டாமே? அவை ஏன் எனக்கு இல்லை? இல்லையென்றால் எது என் நுண்ணிய உணர்வுகளையெல்லாம் திரை போட்டு மறைத்தது?”
புதிதாக எழுந்த கேள்வி அவளுள் பேயாட்டம் ஆட, தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் கார் சென்று கொண்டிருக்கும் போது,”கிருஷ்ணா! கொஞ்சம் வண்டியை ஓரமா நிறுத்தலாமா?” மெதுவாக கேட்டாள் 
காரை ஓரமாக நிறுத்தியவன்,”எதுக்கு காரை நிறுத்த சொன்ன காயத்ரி”என்று கேட்டவாறே திரும்ப
அவளோ கார் கதவை திறந்து கொண்டு கீழே இறங்கினாள்.
“ஹேய்… என்ன பண்ணப்போற?” கிருஷ்ணா பதற
தனாவோ அவளோடே இறங்கி, அவளோடே நின்று கொண்டான் பாடிகார்ட் போல
அவன் எதற்காக இப்படி நிற்கிறான் என்பதை யூகித்தவளுக்கு இதழ்கள் லேசான புன்னகையில் நெளிய,”அதெல்லாம் உள்ள குதிக்கமாட்டோம்” என்று முணுமுணுத்தவாரே
தன் பர்ஸ்ஸிருந்து அந்த ராகேஷ் வாங்கி தந்திருந்த விலையுயர்ந்த ஃபோனை எடுத்தவள், அதன் சிம்கார்டை கழற்றி இரண்டாக உடைத்து, ஃபோனை தரையில் வைத்து கல்லால் சுக்கலாக நொறுக்கி தாமிரபரணி ஆற்றுக்குள் போட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் மறுபடியும் காரில் ஏறி அமர்ந்தாள்.
அவளின் செயல் ஏதோ ஒரு வகையில் மனதிற்கு திருப்தி அளிக்க,”இங்கே நடந்தது எதுவும் யாருக்கும் தெரியவேண்டியதில்லை. அதனால் யாருக்கும் சொல்லாதே” என்று சொல்லியே அவள் வீட்டருகே இறக்கி விட்டு சென்றிருந்தான் கிருஷ்ணா.
ஆனால்….
 

Advertisement